புதியதோர் உலகம் செய்வோம்
கா. அப்பாத்துரையார்
மூலநூற்குறிப்பு
நுற்பெயர் : புதியதோர் உலகம் செய்வோம் (அப்பாத்துரையம் - 4)
ஆசிரியர் : கா.அப்பாதுரையார்
தொகுப்பாசிரியர் : முனைவர் கல்பனா சேக்கிழார்
பதிப்பாளர் : கோ. இளவழகன்
முதல்பதிப்பு : 2017
பக்கம் : 24+352 = 376
விலை : 470/-
பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம், எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 600 017, தொ.பே.: 24339030, செல்: 9444410654
மின்னஞ்சல் : [email protected]
தாள் : 16.0 கி. மேப்லித்தோ, அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11.5 புள்ளி, பக்கம் : 312
கட்டமைப்பு : இயல்பு படிகள் : 500
நூலாக்கம் : கோ. சித்திரா
அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.
நுழைவுரை
தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர்.
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம்.
தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும்.
தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம்.
தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.
அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன.
இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும்.
தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள்
கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை
யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர்
திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன்,
திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர்.
இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய ‘கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும்’சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி.
நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
“ஆக்கத்தை எனக்கிந் நாட்டார்
அளித்திட்ட அறிவை யெல்லாம்
தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே
செலவிடக் கடமைப் பட்டேன்.”
- பாவேந்தர்
கோ. இளவழகன்
தொகுப்புரை
மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்!
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின.
“அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார்.
சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன.
- தனித்தமிழ் இயக்கத் தோற்றம்
- நீதிக் கட்சி தொடக்கம்
- நாட்டு விடுதலை உணர்ச்சி
- தமிழின உரிமை எழுச்சி
- பகுத்தறிவு விழிப்புணர்ச்சி
- இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்
- புதிய கல்வி முறைப் பயிற்சி
- புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம்
இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன.
“தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது!
அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்!
பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக,
- உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல்.
- தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல்.
- தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல்.
- தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல்.
- திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல்.
- நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல்.
இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது.
பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது.
உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன.
1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு
2. வரலாறு
3. ஆய்வுகள்
4. மொழிபெயர்ப்பு
5. இளையோர் கதைகள்
6. பொது நிலை
பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும்.
இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின்
உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன.
** -கல்பனா சேக்கிழார்**
நூலாசிரியர் விவரம்
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
இயற்பெயர் : நல்ல சிவம்
பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989
பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி
பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)
உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர்
மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு
வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா
தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி
பள்ளிக் கல்வி : நாகர்கோவில்
கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம், இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி ‘விசாரத்’, எல்.டி.
கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)
நூல்கள் : 120 (ஆங்கிலம், 5)
இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை.
பணி :
- 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.
- 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர்.
- பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.
- 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி
- 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர்.
- 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்
அறிஞர் தொடர்பு:
- தொடக்கத்தில் காந்திய சிந்தனை.
- 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு
விருதுகள்:
- மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது,
- 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் ’சான்றோர் பட்டம்’, ‘தமிழன்பர்’ பட்டம்.
- 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ’கலைமாமணி’.
- 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய ’திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம்.
- மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய ’பேரவைச் செம்மல்’ விருது.
- 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.
- 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார்.
- இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது.
பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:
- அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005.
- பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007.
பதிப்பாளர் விவரம்
கோ. இளவழகன்
பிறந்த நாள் : 3.7.1948
பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625,தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு
இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல்
ஆற்றியுள்ள பொதுப்பணிகள்
1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர்.
பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் ’ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர்.
உரத்தநாட்டில் ’தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர்.
பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ’உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர்.
தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும்,
19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர்.
பொதுநிலை
தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர்.
தொகுப்பாசிரியர் விவரம்
முனைவர் கல்பனா சேக்கிழார்
பிறந்த நாள் : 5.6.1972
பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர்
இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
ஆற்றியுள்ள கல்விப்பணிகள்
- அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி.
- திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு.
- புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.
- பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.
- பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார்.
- 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
- மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.
- இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார்.
- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார்.
நூலாக்கத்திற்கு உதவியோர்
தொகுப்பாசிரியர்:
- முனைவர் கல்பனா சேக்கிழார்
கணினி செய்தோர்:
- திருமதி கோ. சித்திரா
- திரு ஆனந்தன்
- திருமதி செல்வி
- திருமதி வ. மலர்
- திருமதி சு. கீதா
- திருமிகு ஜா. செயசீலி
நூல் வடிவமைப்பு:
- திருமதி கோ. சித்திரா
மேலட்டை வடிவமைப்பு:
- செல்வன் பா. அரி (ஹரிஷ்)
திருத்தத்திற்கு உதவியோர்:
- பெரும்புலவர் பனசை அருணா,
- திரு. க. கருப்பையா,
- புலவர் மு. இராசவேலு
- திரு. நாக. சொக்கலிங்கம்
- செல்வி பு. கலைச்செல்வி
- முனைவர் அரு. அபிராமி
- முனைவர் அ. கோகிலா
- முனைவர் மா. வசந்தகுமாரி
- முனைவர் ஜா. கிரிசா
- திருமதி சுபா இராணி
- திரு. இளங்கோவன்
நூலாக்கத்திற்கு உதவியோர்:
- திரு இரா. பரமேசுவரன்,
- திரு தனசேகரன்,
- திரு கு. மருது
- திரு வி. மதிமாறன்
அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு:
- வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14.
அப்பாத்துரையார் எனும் அறிவாட்சி அடங்கியதே!
தப்பாய்த் தவறாய்த் தமக்காய்ப்
படிக்கும் தரகரிடை
உப்பாய் உணவாய் உடம்பாய்த்
தமிழை உயிர்த்திருந்து,
‘முப்பால் ஒளி’யாய் முகிழ்த்து
’மணிவிளக்’ காய்எரிந்த
அப்பாத் துரையார் எனும்அறி
வாட்சி அடங்கியதே!
ஒப்பாய்த் தமிழ்கற்(று) உரைவிற்(று)
உயிர்வாழ உடல்களிடை
மப்பாய்த் திரண்டு மழையாய்ப்
பொழிந்து தமிழ்வளர்த்துக்
கொப்பாய்க் கிளையாய் மலராய்க்
கனியாய்க் குலம்புரந்த
அப்பாத் துரையார் எனும்தமிழ்
மூச்சிங் கொடுங்கியதே!
செப்போ இரும்போ மரமோ
மணலோ எதுதரினும்
எப்போ திருந்தமிழ் மாறி
உயிர்வாழ் இழிஞரிடை
முப்போ திலுந்தமிழ் ஆய்ந்தே
களைத்த மொழிப்புலவர்
அப்பாத் துரையார் எனும்மூ
தறிவும் அயர்ந்ததுவே!
ஒருமொழிப் புலமை உறற்கே
வாணாள் ஒழியுமெனில்,
இருமொழியன்று, பன் மூன்று
மொழிகள் இருந்தகழ்ந்தே
திருமொழி எனநந் தீந்தமிழ்த்
தாயைத் தெரிந்துயர்த்திக்
கருவிழி போலும் கருதிய
கண்ணும் கவிழ்ந்ததுவே!
குமரிஆரல்வாய் குமிழ்த்தமுத்
தம்மைக்குக் காசிநாதர்
திமிரிப் பயந்தஅப் பாத்துரை
என்னும் திருவளர்ந்து
நிமிர்த்துத் தமிழ்மொழி நீணில
மெங்கும் நிலைப்படுத்தும்
அமரிற் படுத்திங் கயர்ந்ததே
ஆரினி ஆந்துணையே!
செந்தமிழ் ஆங்கிலம் இந்தி
பிரெஞ்சு செருமனுடன்
வந்தச மற்கிரு தம்ருசி
யம்சப்பான் என்றயல்சார்
முந்துபன் மூன்று மொழிபயின்
றேபன் மொழிப்புலமை
வெந்துநீ றானதே, தாய்ப்புலம்
விம்ம வெறுமையுற்றே!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார், கனிச்சாறு (பக். 158-59)
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் முத்துக்கள் 10
தமிழகத்தின் பிரபல மொழியியல் வல்லுநர்களில் ஒருவரான பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
1. குமரி மாவட்டத்தின் ஆரல்வாய்மொழி என்ற ஊரில் பிறந்தார் (1907). இவரது இயற்பெயர், நல்லசிவம், சொந்த ஊரில் ஆரம்பக்கல்வி கற்றார். திருவனந்தபுரம் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்திலும் திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியத்திலும் முதுகலைப்பட்டம் பெற்றார்.
2. சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் எல்.டி. பட்டம் பெற்றா. தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் மொழிகளைத் திறம்படக் கற்றார். மேலும் ஆப்பிரிக்க மொழி உள்ளிட்ட 18 மொழிகளை அறிந்திருந்தார்.
3. திருநெல்வேலி மற்றும் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் இந்தி ஆசிரியராகப் பணி யாற்றினார். பின்னர் காரைக்குடியை அடுத்த அமராவதிப் புதூர் குருகுலப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது அங்கு மாணவராக இருந்த கவிஞர் கண்ணதாசன் இவரிடம் கல்வி பயின்றார்.
4. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்த இவர், திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், இலிபரேட்டர், விடுதலை, லோகோபகாரி, தாருல் இஸ்லாம்
குமரன், தென்றல் உள்ளிட்ட பல இதழ்களில் எழுதி வந்தார்.
5. சிறுகதைகள், இலக்கியத் திறனாய்வு நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், நாடகம், பொது அறிவு நூல், அகராதி, உரைநூல், குழந்தை இலக்கிய நூல் என பல்வேறு களங்களிலும் தனி முத்திரைப் பதித்தார். இந்தியாவின் மொழிச்சிக்கல்’ என்ற நூலைப் படைத்தார். சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் அகராதித் தயாரிப்பில் 1959 முதல் 1965 வரை அதன் ஆசிரியராகச் செயல்பட்டார்.
6. தமிழ் இலக்கியம், தமிழக வரலாறு குறித்த ஆராய்ச்சி களில் கண்டறிந்தவற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆராய்ச்சி நூல்களாக எழுதினார். இவற்றில் குமுரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு’ மற்றும் தென்னாட்டுப் போர்க்களங்கள்’ ஆகிய நூல்கள் சிறந்த படைப்புகளாகப் போற்றப்பட்டன.
7. ‘சரித்திரம் பேசகிறது’ சென்னை வரலாறு’, கொங்குத் தமிழக வரலாறு’, ‘திராவிடப் பண்பு’, ‘திராவிட நாகரிகம்’ உள்ளிட்ட வரலாற்று நூல்கள், ‘கிருஷ்ண தேவராயர்’, ‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்’, ‘சங்க காலப் புலவர் வரலாறு’ உள்ளிட்ட வாழ்க்கை வரலாற்று நூல்களையும் படைத்தார்.
8. அலெக்சாண்டர், சந்திரகுப்தர், சாணக்கியர் உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், 6 தொகுதிகளாக வெளிவந்த திருக்குறள் மணி விளக்க உரை உள்ளிட்ட இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை. திருக்குறளுக்கு விரிவுரையும் விளக்க உரையும் பல ஆயிரம் பக்கங்களில் வழங்கியுள்ளார்.
9. ‘உலக இலக்கியங்கள்’ என்ற தனது நூலில் பாரசீகம், உருது, பிரெஞ்சு, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளின் இலக்கியங்களை ஆராய்ந்து பல அரிய செய்திகளை வழங்கியுள்ளார். உலகின் ஆதி மொழி தமிழ் என்றம், உலகின் முன்னோடி இனம் தமிழ் இனம் என்று அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து தனது கருத்தை வெளியிட்டார்.
10. அறிவுச் சுரங்கம், தென்மொழித தேர்ந்தவர், சிறந்த சிந்தனையாளர், சிறந்த சொற்பொழிவாளர், கனிந்து முதிர்ந்து பழுத்த பேரறிவாளர் என்றெல்லாம் போற்றப்பட்ட பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை 1989ஆம் ஆண்டு 82ஆவது வயதில் மறைந்தார்.
புதியதோர் உலகம் செய்வோம்
முதற் பதிப்பு - 1962
இந்நூல் 2001 இல் தேன்மொழி பதிப்பகம், சென்னை - 88.
வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது.
தமிழகமும் திராவிடமும்
தமிழகத்தில் தமிழர் தாய்மொழி தமிழ், நாட்டு மொழியும் தமிழ். தாய்மொழியென்ற முறையில் அது கல்வியில் இடம் பெற வேண்டும். நாட்டு மொழி என்ற வகையில் அது அரசியலில் முழு இடம் பெற வேண்டும். தமிழரசு அமைந்து உலக அரசுகள் மாநாடுகளில் தமிழகம் சரி நிகர் இடம் பெற்றால் தமிழ் உலக மொழிகளுள் ஒன்றாய் அம் மாநாடுகளிலும் இடம் பெற வேண்டும்.
மேற்சொல்லப்பட்ட இக்கோரிக்கைகளை நாம் தமிழர் சார்பில் தமிழுக்குக் குறிக்கிறோமாயினும் உண்மையில் அது எல்லாத் தாய் மொழிகளுக்கும் நாட்டு மொழிகளுக்கும் உரிய கோரிக்கையேயாகும். இதனை வற்புறுத்துவதில் வேறு எம்மொழிக் குரியவருக்கும் எந்நாட்டினருக்கும் தடை இருக்கமுடியாது. ஏனென்றால் அம்மொழியினரும் அந்நாட்டினரும் இதுபோல் தம் தாய் மொழிக்கு உரிமை கோருபவர் அல்லது கோர வேண்டியவரேயாவர். தத்தம் தாய்மொழியையும் நாட்டு மொழியையும் பேண எண்ணாதவரே தமிழர் பண்பாடறியாமல் இதனை எதிர்க்கக்கூடும்.
‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற கிளர்ச்சி எழுந்தவகை இது. ‘எலிவளை எலிகளுக்கே’ என இதை நையாண்டி செய்தவர் உண்டாயினும் அவர்களை அல்லது அக்கூக்குரலை இன்று தமிழகத்தில் காண முடியாது. தமிழகத்துக்குப் புறம்பேயுள்ள பரந்த இந்திய மாநிலத்தில்தான் காணக்கூடும்.
ஆனால் தமிழ்நாடு தமிழருக்கே என்ற உரிமை மறுக்கப் படவில்லையானாலும் நிறைவேறவில்லையே! அதற்கு தமிழர் திராவிட நாடு திராவிடருக்கே என்று கூறுவானேன்! திராவிடம் என்ற சொல் பிறமொழிச் சொல்லாயிற்றே. திராவிடம் என்ற சொல்லிலிருந்தே தமிழ் வந்தது என்றுகூடப் பிறர் கூறுகின்றனரே. தமிழகத்துக்குப் புறம்பே ‘யாம் திராவிடர்’ எனக்கூற எவர் முன் வருகின்றனர் என்று கேள்விகள் சிலபோது சிலவிடங்களில் கேட்கப்பட்டு வருகின்றன. கேட்பவர் நல் தமிழர், தமிழர் நண்பர். தமிழார்வத்தில் குறையாதவராதலால் அதுபற்றிய சில நட்புமுறை விளக்கம் தர விரும்புகிறோம்.
தமிழர் தாய்மொழி என்ற ஒரு பொருளிலேயே இன்று தமிழ் என்ற சொல் வழங்குகிறது. ஆனால் தமிழ் பிற மொழிகளைப் போல் ஒரு தாய்மொழிமட்டுமன்று. அது ஒரு இன மொழியும்கூட இவ்வகையில் அது அவ்வினத்தவருக்குரிய பிற தாய் மொழிகளுக்கும் அவற்றின் நாட்டியக்கங்களுக்கும் முன்னோடியும் முன்னணியும் ஆகும். இது மட்டுமன்று அது எல்லா இனங்களையும் போன்ற ஒரு இனத்தின் முன்னோடி மொழிமட்டுமன்று. தனிப்பட்ட பண்பாடும் வரலாற்றில் தனிப்பட்ட இடமும் நோக்கமும் கொண்ட ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தின் தாழ்த்தப்பட்ட மொழிகளின் முன்னணி எதிர்ப்பரங்கமாகும்.
திராவிடம் என்ற சொல் இங்ஙனம் இனம் குறிப்பது காரண மாகவே தமிழ் என்ற சொல்லினும் நிறைந்த. விரிவுடைய பொரு ளை இன்று தருகிறது. இதே பொருளில் தமிழ் என்ற சொல் முன் வழங்கியதுண்டு. திராவிடர் அனைவரும் தம் தாய்மொழி தமிழ் எனக் கொண்டிருந்த காலம் உண்டு. அன்று தெலுங்கர் தாய் மொழியும் கன்னடியர் தாய்மொழியும் மலையாளிகள் தாய் மொழியும் திருநெல்வேலித் தமிழ், தஞ்சைத் தமிழ், கோயமுத்தூர்த் தமிழ் என்ற நிலையிலேயே இருந்தன.
வடமொழியாளரால் ‘திராவிடம்’ என்ற சொல் பொதுவாகத் தென்னாட்டையும் தென்னாட்டு மொழியையும் ‘தமிழ்’ என்ற சொல் தமிழகப் பரப்புக் குறுகிய பிற்காலத்தில் சிறப்பாகத் தமிழையும் பொதுவாக எல்லா மொழிகளையும் குறிக்க வழங்கிற்று. திராவிட வேதம், திராவிட மாபாடியம் என்ற இடங்களில் அது தமிழையே குறித்தது. எனவே திராவிடத்திலிருந்து தமிழ் வந்ததோ தமிழிலிருந்து திராவிடம் வந்ததோ இரண்டும் தொடர்புடைய சொற்கள், இரண்டின் கருத்தும் தொடர்புடையவை என்பதில் ஐயமில்லை. இரண்டு சொற்களையும் பொதுப்பொருளில் தென்னிந்தியா முழுவதையும் சிறப்புப் பொருளில் வடவேங்கடம் தென்குமரியையும் குறிக்க வழங்கலாம். ஆனாலும் உலக வழக் கினாலும் பரிபாஷையிலும் அறிஞர், மாணவர் வழக்கிலும் திராவிடம் பொதுப்பொருளிலும் தமிழ் சிறப்புப் பொருளிலும் வழங்குகிறது.
நல்ல திராவிடர் நல்ல தமிழர். ஆனால் அவர்கள் நல்ல தமிழர் மட்டுமல்லர். பிற திராவிட மொழியாளரையும் நல்ல திராவிட மொழியாளராக்குபவர். பிற இன மொழியாளருக்கும் கூட அவர்கள் நல்ல வழிகாட்டிகளாவர்.
சொல்லைப்பற்றிய பூசலளவில், திராவிடம் என்ற சொல் சென்ற ஆயிரம் ஆண்டுகளுக்குள்ளாகத்தான் வழங்குகிறது தமிழ் தொன்று தொட்டு வழங்குவது. வட மொழியாளரும் முதலில் தமிழகம். த்ரமிளம், த்ரமிடம், த்ரவிடம், த்ராவிடம் என்ற பல படிகளாக இச்சொல்லை வழங்கிய பின்பே திராவிடம் என்ற சொல் வழங்கினர். தொடக்கத்தில் இது தமிழின் பெயரேயாயினும் மொழிப் பிரிவினையாகாத பழந்தமிழ் அதாவது தென்னாடு முழுவதும் வழங்கிய தமிழைத்தான் அது குறித்ததென்பது மறக்கத் தகாத ஒன்று. தமிழ் நீங்கலான மற்றத் திராவிட இன மொழிகளில் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னால் இலக்கியமோ மொழிப் பெயரோ இல்லாத காரணம் இதுதான்.
இவ்வுண்மையைத் தென்னாட்டவராகிய பழந்தமிழர் அறிந்து உலகப் பொதுமக்கள் அறியும் வரை பழந்தமிழ் என்று வழங்க வேண்டிய இடத்தில் திராவிடம் என்ற சொல் வழங்குவதில் தமிழருக்கு என்ன தடங்கல் இருக்க முடியும்? தமிழ்மொழி வாழ்க! திராவிட இனமொழி வெல்க!
பொன்னி பொங்கல் மலர் 1950
தமிழகத்தின் அரசியல் விழிப்பு!
அரசியல் விழிப்பு என்பது எல்லா நாட்டிலும் நடுத்தர வகுப்பின் வாழ்க்கை ஆர்வங்களையும் பொறுத்தது. நடுத்தர வகுப்பின் தனி உரிமை, தனி வாய்ப்பு இது பொதுமக்களில் பெரும்பாலானவர்களுக்கு உழைப்பு என்னும் உழுவல் செல்வம் உண்டு; அதனை வளர்க்க இரு சாதனங்கள் வேண்டும். ஒன்று உழைப்பாற்றலை வளர்க்கும் உணவு, உடை, உறைவிடம் ஆகிய வசதிகள். இம்மூன்றிலும் உடை, உறைவிடம் முதலியவை ஏனைய கல்வி வசதிகளும் உடலை மட்டுமன்றி உளத்தையும் அறிவையும் வளர்க்கும் இவ்வாய்ப்புக்கள் உழைப்பாளி இனத்துக்குப் போதிய அளவில் கிடையாததால், அவர்கள் கல்வி மொழியறிவு, அறிவுத் துறைகள், கலைகள் ஆகிய வாய்ப்புக்களில் போதிய பங்கு கொள்ள முடியாமல் போகிறது. உயர்தர வகுப்பாகிய முதலாளி இனமோ இவ்வளவு வசதிகளிலிருந்தும் உழைப்பு என்னும் இயற்கைச் செல்வத்தைப் பழித்த காரணத்தாலும், சுரண்டல் மூலம் மனித நாகரீகத்துக்கு முட்டுக்கட்டை போடும் காரணத்தாலும், மனித குலத்தின் அழகுப் பொம்மைகளாக, ஒய்யாரமான நோய் வீக்கங்களாக விளங்குகின்றனர். நடுத்தர வகுப்பு உழைப்பினத்திலிருந்து தோன்றிய உயர் வகுப்பின் தீமையுள் சிக்காதிருக்கும் காரணத்தாலேயே மனிதரின் நாகரீகம் வளர்க்கும் பண்ணையாய் இயங்கு கிறது. உழைப்பினம் வேர், முதலாளியினம் வளர்ச்சி குன்றிப் போனபட்ட பகுதி, நடுத்தர வகுப்பே இலை, தழை, பூ, காயாக மர உருவத்தில் காட்சியளிப்பது.
உலகில் முதல் முதல் நடுத்தர வகுப்புத் தோன்றிய இனம் திராவிட அதாவது முற்பெரும் தமிழினம்; முதல் முதல் வீடும், தெருவும், நாடும் குடியும், மொழியும் கலையும், இலக்கியமும் ஆட்சிப் பிரிவுகளும் சட்டங்களும் வகுத்த நாடு தமிழ்நாடு கடல் வாணிகமும் கடற்படை யாட்சியும்; திட்டமிட்ட நாடு நகர வளமும், நாட்டாட்சியும்; முத்தமிழிலக்கியங்களும் நெசவுத் தொழிலும் முதல் ஆலைத் தொழிலாகிய சர்க்கரைத் தொழிலும் தமிழகம் உலகுக்களித்த நன்கொடைகள். ஆனால் தமிழகத்தைச் சூழ்ந்த தமிழின நாகரீகங்கள் எல்லாம் சிறப்பாக வட இந்தியா முழுதும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஓயாத அயலார் படையெடுப்புகளுக்கும் நாகரிகத்திற்கு பிற்பட்ட அயற் பண்புகளின் சீரழிவுகளுக்கும் ஆட்பட்டதனால், தமிழகத்தின் வளர்ச்சி வளர, தடைபட்டு இருந்து வந்திருக்கிறது - இருந்தே வருகிறது. இந்நிலையைத் தமிழர்தான் தடுத்து, இந்தியாவைச் சிறப்பாகவும் உலகைப் பொதுவாகவும் பிடித்தாட்டி வரும் நாகரிகமற்ற அயற் பண்புப் பீடைகளை ஒழிக்க முன் வரவேண்டும்.
நடுத்தர வகுப்பின் நடுநீதியிற் பிறந்த தமிழகம் இதற்கு எப்போதும் ஆயத்தமாகத்தான் இருக்கிறது. இதற்கான படைக்கலங்கள் அதனிடம் ஏராளமாக உள்ளன. தமிழ்மொழி, தமிழின மொழிகள், உலக மொழிகள் ஆகியவற்றின் ஆராய்ச்சி சங்க இலக்கியம், சிலப்பதிகாரம்; உலகக் கலை, இலக்கிய ஆராய்ச்சி; தமிழ் மொழியுடன் இணைந்த உலக அறிவியல் நுண்ணாராய்ச்சி, திருவள்ளுவர் கண்ணோக்குடன் துளைத் தாயப்பட்ட நிறை குடியாட்சி (ஜனநாயக) முறை ஆகியவைகள் இத்தகை படைக் கலங்கள் கட்டும் சாலைகளாகும்.
இந்திய மாநில விழிப்பில் தமிழகமும் வங்கமும், ஓரளவு மராட்டிரரும் பாஞ்சாலமும் தொடர்பு கொண்டு வழி காட்டின. பின்னாட்களில் தமிழகத் தொடர்பு குறைந்து டெல்லி தலைநகராய், உத்திரபிரதேசமும் பாஞ்சாலமும் பீகாரும் குஜராத்தும் மார்வாரும் முன்வந்த பின்தான் தமிழக நன்மருந்தமுதமின்றி இந்திய மாநில வாழ்வு சீர்கேடடைந்து சின்னாபின்னமாயிற்று என்பதை அரசியல் ஆய்வாளர் கவனிக்க மறுக்கின்றனர். அதுமட்டுமன்று - காந்தியடிகளின் சத்தியா கிரகத்துக்கு தென்ஆப்பிரிக்காவில் உயிர் தந்தவர்கள் தமிழர். அவ்வுயிரை அழித்தவர்கள் வடவர்கள் தலைவர் பெருந்தகை போஸின் விடுதலைப் படையை ஆக்கி வெற்றி தந்தவர் தமிழர். அவ்வெற்றியை அழித்தவர் வடவர். காந்தியடிகளின் குறிக்கோளை சரியாகவோ தவறாகவோ, பின்பற்றிக் குடிசைத் தொழிலை மட்டும் வளர்த்துக் குடிகெட்டவர் தமிழர். ஆலை வளர்த்து ஆளவந்தவர்கள் வடவர்களும் அவர்களுக்குத் தாளமிடும் கோமான்களும் கொள்ளையர்களும் ஆவர். இன்னும் எந்நாட்டினும் உள்ளூரத் தமிழ்ப்பற்று, தமிழ்ப்பண்பு, நடுத்தர வகுப்பின் அல்லல் பட்டாற்றாதழுத கண்ணீர்! ஆகியவற்றின் காரணமாகப் பொது மக்களிடையே, வாய்விடா ஏழைத் தொழிலாளி இனத்திடையே பிறமொழியறிய முடியாத, தாய்மொழிக்கும் தாய்ப் பாலுக்கும் கூட வகையில்லா மக்கள் கொந்தளிப்புக்கிடையே எந்நாட்டிலும் இல்லாத விழிப்புணர்ச்சி யிருக்கிறது.
ஆனால் வறுமை இருக்குமிடம் தகாத் தன்னலப் போட்டி யும், பொதுநலமறந்த தன்னல வேட்டைகளும் இருப்பது இயல் பாயினும், வறுமை ஒழிய முதற்படியாக இவற்றை அகற்ற மக்கள் தலைவர்கள் பாடுபட வேண்டும். தங்கள் போட்டிகளை அவர்கள் ஒதுக்கி வைத்துவிட்டு இதற்கு முன்வர வேண்டும். தன்னலம், குழு நலம் கடந்த, ஆனால் அவற்றுக்கு உதவுகிற கட்சிநலம்; கட்சிநலம் கடந்த இயக்க நலம்; இயக்க நலம் கடந்த இனநலம், நாட்டு நலன்; இனநாட்டு நலன்கள் கடந்த மனித இனப்பற்று ஆகியவைதான் சிறுமைப்பட்ட தமிழகத்துக்குச் செம்மாப்பு அளிக்க முடியும்.
தமிழகத் தலைவர்கள், கட்சிகள், குழுக்கள், வகுப்புகள் தம் வேற்றுமைகளை மறக்க வேண்டியதில்லை. நாட்டு நலத்தின் அடிப்படையில் அவற்றை வகுத்து எல்லா கட்சித் தலைவர்களும் ஒரே அடிப்படையில் கலந்து ஒரு நாட்டுத் திட்டத்தை வகுக்க முடியுமானால், இன்னும் தமிழகம் பண்பாகிய பேழையிலுள்ள மனித இன நலன்களை உலகிற்கு உதவமுடியும். அதற்கு மக்கள் எழும்படி, கட்சிகளும் தலைவர்களும் எழுவார்களா?
திராவிடன் பொங்கல் மலர் 1952
தமிழ் வளர்ச்சியும் தமிழரின் இயக்கமும்
தமிழ், தமிழர், தமிழினம் என்ற குரல்கள் தமிழ் நாட்டி லெழுந்து முப்பது, நாற்பது ஆண்டுகள் ஆகின்றன. இவற்றுள் முதல் குரலும் முதன்மையான குரலும் தமிழ்க் குரலே. ஆனால் இக்குரல் முதல் முதலாக எழுந்தது ‘தமிழ் நாட்’டிலன்று; அதாவது இன்று நாம் ’தமிழ்நாடு’ என்று குறிப்பிடும் ‘குணகடல், குமரி, குடகம், வேங்கடம்’ எனும் நான்கெல்லையுட்பட்ட இந்தியத் துணைக்கண்டப் பகுதியாகிய தமிழ் நாட்டிலன்று! துணைக்கண்டத்திலிருந்து கடற்காலினால் பிரிக்கப்பட்ட பழந்தமிழ்த் தாயகத்தின் பகுதியான இலங்கை அல்லது ஈழநாட்டு யாழ்ப்பாணத் தமிழரிடையேதான் அக்குரல் எழுந்தது. அது மலேயா, பர்மா, தென் ஆப்பிரிக்கத் தமிழகம், மோரீசு, விஜி, ஜமெய்க்கா, கயானா முதலிய தமிழுலகைப் பகுதியெங்கும் பரவிப் பெரும்பான்மைத் தமிழர் வாழும் தமிழ் நாட்டிலும் புத்துணர்ச்சியூட்டிற்று. கடல் கடந்தத் தமிழகம் தந்த இத்தமிழியக்கத்துக்குத் தமிழ்நாடே தலைமை வகித்து வழிகாட்ட வேண்டுமென்று தமிழுலகம் எதிர்பார்ப்பது இயல் பேயன்றோ? இவ்விருப்பம் இன்று நிறைவேறி வருகிறது என்பதில் தடையில்லை. தமிழ்க்குரலால் எழுப்பப் பெற்ற தமிழியக்கம் தமிழ் நாட்டில் இன்று தமிழரியக்கமாய், எழுப்பப்பெற்ற தமிழியக்கம் தமிழ் நாட்டில் இன்று தமிழரியக்கமாய், தமிழின (திராவிட) இயக்கமாய் வளர்ந்து வருகிறது.
தமிழர் குரல் தமிழியக்கமாக, அதாவது மொழியியக்கமாக நிலைபெற்றால் போதும் என்று விரும்புபவர் உண்டு. அது தமிழரியக்கமாக, அதாவது அரசியலியக்கமாக அமைந்து விட்டால் போதும் என்று கருதுபவர்களும் உண்டு. ஆயினும் அது படிப்படியாக (தேசீய) இயக்கமாகவும், இன நாகரிக இயக்கமாகவும், இனக்கலை இயக்கமாகவும் வளர்ந்து கொண்டு வருகிறது. இவ்வளர்ச்சியைக் காரணகாரியத் தொடர்புடன் மரபுவழியில் நின்று உணராதவர், தமிழ்நாட்டையோ தமிழ்ப் பண்பையோ உணர முடியாது. இவற்றை உணராமல் தமிழ் வளர்ச்சிக்கு வழி காண்பதும் அரிது.
தமிழியக்கத்துக்கு யாழ்ப்பாணம் தலைமை வகிக்கும்வரை அது மொழியியக்கமாயிருக்க முடிந்தது. ஆனால் இலங்கையிலேயே உள்ள தமிழ்த் தொழிலாளர் உரிமை, பிற கடல்கடந்த தமிழகத் தொழிலாளர் உரிமை ஆகியவற்றுக்கான தொண்டாற்றி, அவர்களை உயர்வுபடுத்த வேண்டுமானால் தமிழியக்கம் தமிழரியக்கமாய்த் தீரவேண்டும். தமிழ்நாடு அரசியல் உரிமை பெற்றாக வேண்டும். ஆகவே தமிழ்நாட்டில் தமிழியக்கம் தமிழரியக்கமாக வளரவேண்டியதாயிற்று. ஆனால் நெடுங்காலம் அது தமிழரியக்கமாகவும் நின்றுவிட முடிய வில்லை. தமிழகம் இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதி. அதனுடன் அரசியலில் அது இணைக்கப்பட்டு உள்ளது. துணைக்கண்டம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வரும் அயற்பண்பு வடநாட்டை முற்றிலும் அடிமைப்படுத்தித் தென்னாடெங்கணும் பரவி, அதன் பண்பாட்டை மாற்றி யமைத்துத் தமிழகத்தையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. தமிழர் வாழ்வும் பண்பும் பொருளாதார நிலையும் மட்டுமன்றி, அவர்கள் மொழியும் இதனால் பெரிதும் பாதிக்கப் படவே செய்கிறது. எடுத்துக்காட்டாக, இலங்கையிலும் தமிழ் மொழியோடு சிங்களம் என்ற மற்றொரு மொழி இருக்கிறது. தமிழர் அங்கும் பெரும்பான்மையினர் அல்லர். ஆயினும் தமிழ் அங்கு சிங்களத்துடன் சரிசமமாக நாட்டு மொழியாய், கல்வி மொழியாய் இயங்குகிறது. தமிழர்மீது சிங்களத்தை அங்கே யாரும் திணிக்க முற்படவில்லை. சமய, நாகரீகத்துறைகளில் சிங்களவர் பாலி மொழியை சுமத்தவேண்டுமென்று நேரிடை யாகவோ மறை முகமாகவோ முயலவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் அரசியல் மொழியாக இந்தியும், நாகரீக சமய மொழியாக வடமொழியும் நேரடியாகத் திணிக்கவும் படுகின்றன. மறைமுகமாகப் பிரசார பீரங்கிகளின் உதவியால் பரப்பவும் படுகின்றன. எனவே தமிழ்நாட்டில் தமிழியக்கம் வெறும் மொழியியக்கமாகவோ வெறும் அரசியல் இயக்கமாகவோ இருந்தால் தமிழ்கூடப் பாதுகாக்கப்பட முடியாது. தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் பாதுகாக்கப்பட முடியாதென்று கூறவேண்டுவதில்லை.
இதுமட்டுமன்று, தமிழ்நாட்டில் பிறமொழி கற்றும் தமிழ்ப் புலமையைப் பழியாது அதனை மேற்கொண்டு தமிழுக்கு உழைக்க முன்வந்த தமிழ்ப் பெரியார்கள் தமிழர் என்ற காரணத்தினாலும், தமிழுக்கு முதலிடம் தந்து உழைப்பவர் என்ற காரணத்தினாலும்; ’கூலித் தமிழ’ரின் இன வளர்ச்சியில் கருத்துக் கொண்டு, அவர்கள் தாய்மொழியாகிய தமிழை உயர்த்துவதன் மூலம் அவர்களை உயர்த்த முயன்றவர்கள் என்ற காரணத்தினாலும், அப்பெரியார்களைத் தமிழ்ச் செல்வர் ஒதுக்கித் தள்ளிவந்தனர், வருகின்றனர். இதேபோன்று இன்று உழைக்க முன் வருபவர்கள் அரசியலாரால் ஒதுக்கப்படுவது போலவே, மடாதிபதிகளாலும் செல்வர்களாலும் வேம்பென ஒதுக்கித் தள்ளப்படுகின்றனர். ஆனால் யாழ்ப்பாணத் தமிழ்ச் செல்வரும் பிற கடல் கடந்த நாட்டுத் தமிழ்ச் செல்வரும் அவர்களில் பலருக்கு ஆதரவு தந்து, தாயகமாகிய தமிழ்நாட்டில் தமிழ்ப் பண்பின் மரபும் ஊற்றும் வற்றாமல் பாதுகாத்து வந்தனர். தமிழ்நாட்டுச் செல்வரின் செயலுக்கும் அயல்நாட்டுத் தமிழ்ச் செல்வரின் செயலுக்கும் உள்ள இவ்வேறுபாட்டின் காரணம் என்ன? இது செல்வரின் பண்பு அல்லது முதலாளித்துவத்தின் பண்பு என்று முற்றிலுங் கூறிவிட முடியாது என்பது தெளிவு. இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் நடைபெற்று வந்துள்ள ஆரிய திராவிடப் பண்பாட்டுப் போராட்டத்தில் இன்று தமிழ்நாடு முன்னணிப் போர்க்களமாய் அமைந்துள்ளது. வடநாட்டை விழுங்கிவிட்ட பின்பே தென்னாட்டுக்கும், தமிழகஞ் சார்ந்த தமிழின நாடுகளை ஓரளவு தன்னிழற்கீழ்க் கொண்டு வந்த பின்பே தமிழ் நாட்டுக்கும் அப்போர் பரவியிருப்பதுபோல, தமிழ்நாடு கடந்த பின்பே அது யாழ்ப்பாணத்தையும் கடல் கடந்த பிற தமிழகங்களையும் முழுவதும் தாக்க முற்பட முடியும். இந்நிலை வரும்வரை யாழ்ப்பாணத்துத் தமிழ்ச் செல்வரும் கடல் கடந்த தமிழ்ச் செல்வரும் ஓரளவுக்கேனும் செல்வராகவும் அதே சமயம் தமிழராகவும் இயங்க முடியும். ஆனால் தமிழ்நாட்டுச் செல்வர் இன்று அங்ஙனம் இயங்க முடியாது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மற்றத் தமிழின நாட்டுச் செல்வர், ஆட்சியாளர், அரசர்கள் ஆகியவர்களைப் போல, அவர்கள் தமிழ் மரபழித்து அயற்பண்பாகிய ஆரியப் பண்பைச் சார்ந்தன்றிச் செல்வர் ஆகவோ, செல்வராயிருக்கவோ, செல்வம் பெருக்கவோ வழியேற்படாது. ஆகவே, தமிழ்நாட்டுச் செல்வரும் மடாதிபதிகளும் சமயத் தலைவர்களும் இன்று தமிழ்ப் பண்பையோ தமிழ் மரபையோ ஆதரிக்க அஞ்சி, அயற்பண்பு களுக்கு முழுவதும் அடிமைப்பட்டிருப்பதும் மேன்மேலும் அடிமைப்பட்டு வருவதும் அவர்கள் குற்றமன்று. தமிழ்நாட்டின் குற்றமுமன்று, தமிழ்நாடு துணைக்கண்டத்தின் ஆட்சியுடனும் பண்பாட்டுடனும் இணைத்திருக்கும் வரை தமிழகத்தில் இந்த நிலைமாறாது.
தமிழியக்கம், தமிழரியக்கம் ஆகிய இரண்டும் தமிழின இயக்கமாய், எதிர்கால மொழிவாழ்வை முன்னிட்டுப் பிரசார இயக்க அளவில் கடல்கடந்து தமிழுலகை நோக்கியும்; எதிர்கால நாகரீக, பொருளாதார, பண்பாட்டு வாழ்வை முன்னிட்டு நிலங்கடந்து தமிழின நாடுகளை நோக்கியும் முன்னேறிவருகிறது. தமிழ்மொழி பரப்புக்கும் தமிழினப் பரப்புக்கும் இடையேயுள்ள பொது நிலமாய்; முன்பு தமிழராயிருந்து ஆரியப் பண்பாட்டின் தாக்குதலால் தமிழரிடமிருந்து விலகியும், அதே சமயம் ஆரியராய் விடவும் முடியாமல், தமிழரைத் தாக்கப் பயன்படும் ஆரிய அடிமைக் கண்காணி நாடுகளாய் மட்டும் இயங்கும் தமிழின நாடுகளுக்கும் கடல்கடந்த முழுத்தமிழ் வாழ்வுடைய நாடுகளுக்கும் இடைப்பட்ட நிலைமையுடையதாய்; தன்னகத்தே ஆரிய அடி வருடிகளான ஆண்மையற்றத் தமிழரையும், அவர்களுக்கு அஞ்சி அடங்கிக்கிடக்கும் பொது மக்களாகிய அடிமைத் தமிழரையும், ஆரியத்தையும் ஆரிய அடிவருடிகளான ஆண்மைத் தமிழரையும் எதிர்த்துப் பொது மக்களை உயர்த்தப்பாடுபடும் தனித் தமிழர் அல்லது திராவிட இயக்கத் தமிழரையும் தன்னகங் கொண்ட தமிழ்நாடு தமிழியத்துக்கும் தமிழின இயக்கத்துக்கும் உரிய பாலமாய், தமிழரியக்கத்தின் நிலைக்களமாய் அமைந்தது இயல்பே.
ஆரிய மொழியாதிக்கமும், பொருளாதார ஆதிக்கமும், கல்வியாதிக்கமும் நீங்க அதன் அரசியல் ஆதிக்கமும் நீங்க வேண்டும். அப்போதுதான் தமிழ் உண்மையிலேயே முதலிடம் வகிக்கும். அப்போதுதான் தமிழராட்சியும் தமிழ்நாட்டாட்சியும் கல்வியாட்சியும் தமிழராட்சியாக, அதாவது தமிழ்ப் புலவர் ஆட்சியாகத் திகழும். தமிழரிடையே அன்று பிறமொழி படிப்பவர், உலக அறிவைத் தமிழில் தரவே படிப்பர். அன்று பிறமொழி படிப்பவர். உலக அறிவைத் தமிழில் தரவே படிப்பர் ஆகவே தமிழ்ப் புலவர் உலக அறிவுடையவராகவும் விஞ்ஞானிகளாகவும் விளங்குவர். பிறமொழி பயிலமாட்டாத தொழிலாளர். ஏழைகள் அன்று தமிழிலேயே எளிதாகவும் குறைந்த காலத்திலும் விஞ்ஞானம் கற்பர் தனித் தமிழராகிய இத்தொழிலாளத் தமிழர் விஞ்ஞானத்தில் தம் தமிழ் மரபிலேயே சொல்லாக்குவர். அவர்கள் விஞ்ஞான அறிவும் பள்ளிப் படிப்பாய், வாயாடும் அறிவாய் இராமல், அறிவைத் தாண்டிச் செயலுக்குப் பயன்படும் விஞ்ஞானமாயிருக்கும் தமிழர் தமிழின மொழிகளைக் கற்று மொழியாராய்ச் சியிலும், ஒருசில அயல் மொழிகளுக்கு அனைவரும் கட்டுப்படாமல், விரும்பிய உலக மொழிகளைக் கற்று அந்நாட்டுப் பண்பாட்டுத் தொடர்பிலும் முன்னேறுவர் என்பதில் தடையில்லை.
திராவிடன் பொங்கல் மலர் 1953
ஆசியாவின் வீரஜோதி
தென் ஆசியா முழுவதும் புகழொளி பரப்பிய தென்னாட்டுப் பேரரசுகள் பல உலகின் பேரரசுகளுக்குள்ளே இத்தென்னாட்டுப் பேரரசுகளுக்குத் தனிப் பெருமையும், தனிச் சிறப்பும் உண்டு. ஆயினும் பல வகைகளிலும் தென்னாட்டுப் பேரரசுகளிடையே கூடத் தலைசிறந்த, பீடும் புகழும் உடையது சோழப் பேரரசுதான் என்று கூறலாம்.
சோழ அரசரின் ஒரு மண்டலாதிபதி இலங்கையையும் அதன் மாகடல் தீவுகளையும் ஆண்டான். ஒரு மண்டலாதிபதி விந்தியத்துக்கு வடக்கே இமயம் வரை ஆண்டான் மற்றொரு மண்டலாதிபதி சுமத்ராவிலுள்ள பாலம்பாங் தலைநகரிலிருந்து கொண்டு கடாரம், அதாவது தென்கிழக்காசியா முழுவதையும் ஆண்டான்.
கடலுலகும் நிலவுலகும் ஆண்ட இந்தச் சோழப் பரம்ப ரைக்கு ஈடாக உலகில் எந்தப் பேரரசப் பரம்பரையும் கூற முடியாது. வீரத்திலும், ஆட்சித் திறமையிலும், அரசியல் மதி நுட்பத்திலும், கலையார்வத்திலும் சோழர் மரபில் தொடர்ச்சி யாக வந்த பெரும் புகழரசர்களைப் போன்ற ஒரு கூட்டணியை நாம் எந்த நாட்டு வரலாற்றிலும் காண்பதற்கில்லை. அராபிக் கதைகளிலும், இஸ்லாமிய வரலாற்றிலும், இந்துஸ்தானத்தின் பேரரசர்கள் என்று குறிக்கப்படுகிறவர்கள் இந்தச் சோழ அரசர்களேயாவர். அந்நாளில் அவர்களுடன் சரிசமமாக நின்று ஒப்பந்தம் செய்துகொள்ளும் பெருமை உலகிலேயே ஒரு பேரரசுக்குத் தான் இருந்தது. அதுவே சீனப் பேரரசு, உலகின் செல்வம் முழுவதையும், புகழ் முழுவதையும் அந்நாளில் இந்த இரண்டு பேரரசுகளுமே பங்கிட்டுக் கொண்டன.
பெருஞ்சோதரரிடையே தலைசிறந்தவர் யார் என்று ஒரு கேள்வி கேட்டால், வரலாற்றாசிரியர்கள் எளிதில் விடை கூற முடியாது. ஒருவர் இராசராசனே சிறந்தவன் என்று கூறலாம். இன்னொருவர் இராசேந்திரனே என்பர். வேறு சிலர் குலோத்துங் கனே என்று கூற முனைவர். ஏனென்றால் ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையில் தனிச் சிறப்புடையவராகவே
இருந்தனர். சோழப் பேரரசுக்கு அடிகோலியவன் இராசராசன். அவன் வகுத்த ஆட்சி முறையே இன்றளவும் தென்னாட்டின் அடிப்படை ஆட்சி முறையாய் இருக்கிறது. பேரரசின் புகழை உச்ச எல்லைக்குக் கொண்டு சென்றவன் இராசேந்திரன். அந்தக் கோட்டை சரியாமல் காத்து, அதனைச் சூழ்ந்து வாரியடித்த சூறாவளிப் புயல்களை அடக்கி, ஒளி உண்டவன் குலோத்துங்கன்.
குலோத்துங்கன் வாழ்வில் இருபகுதி உண்டு; ஒன்று சோழப்பேரரசு அவன் கைக்குள் வருமுன் உள்ள இளமைப்பகுதி. மற்றது அவன் பேரரசனானபின் உள்ள பகுதி. இவற்றுள் வரலாற்றில் இடம் பெற்றபகுதி, இராசராசனுடனும் இராசேந்திரனுடனும் அவனுக்குச் சரிசமப்புகழ் தந்தபகுதி, பிற் பகுதியேயாகும். முற்பகுதி வரலாற்றால் முழுதும் விளக்கப்பட வில்லை. இது இயல்பே. ஏனெனில் அது வரலாறு கடந்த பெருமை உடையது. அது வரலாறாக எழுதப்பட்டால், அது வரலாறாயிராது. தென்னாட்டின் தலைசிறந்த வீரகாவிய மாய்விடும்.
குலோத்துங்கன் தந்தை வழியில் கீழச் சாளுக்கியர் குடியில் வந்தவன். தாய் வழியில் சோழமரபுக்கு உரியவன். அவன் தாய் தஞ்சைப் பெருஞ்சோழனான இராசராசனின் மகளான குந்தவை தந்தையோ வீரபுலிகேசியின் வழியில் வந்த விசயாதித்தியன் கீழைச் சாளுக்கியர் அந்நாளில் வேங்கிநாட்டை ஆண்டுவந்தனர். வேங்கி நாடு என்பது கோதாவரி, கிருஷ்ணா தீரமாகிய இன்றைய ஆந்திர மாநிலப்பகுதி. குலோத்துங்கன் வேங்கி நாட்டுச் சிங்காசனம் ஏறுமுன், அவனுக்குப் போட்டியாக அவன் சிற்றப்பன் மகனான இரண்டாம் விசயாதித்தியன் எழுந்தான். இருவர் பூசல்களுக்கிடையே மேலைச் சாளுக்கியப் பேரரசனான விக்கிரமாதித்தியன் நாட்டையே கைக்கொண்டான்.
அப்போது சோழப் பேரரசை ஆண்டவர்கள் இராசேந்திரன் புதல்வர்கள். விக்கிரமாதித்தியனுடன் போரிட்டு ஒருவன் மாண்டான். இரண்டாவது புதல்வனாகிய இரண்டாம் இராசேந்திரன் விக்கிரமாதித்தனை முறியடித்து, கீழச் சாளுக்கிய அரசைக் கைக் கொண்டான். ஆனால் அவன் அதில் குலோத்துங்கனை முடிசூட்ட வில்லை. விசயாதித்தனையே முடிசூட்டினான். ஆயினும் வீரனான குலோத்துங்கனை அவன் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆகவே தன் மகள் இராசசுந்தரியை அவனுக்கு மணம் செய்து கொடுத்தான். அத்துடன் கீழைச் சாளுக்கியருக்கு வடதிசையில் இருந்த கீழச்சங்க அரசரை வென்று, அந்த அரசை அவனுக்கு அளித்தான்.
குலோத்துங்கன் இப்போதும் வயதில் இளைஞனாகவே இருந்தான். கீழச்சங்க நாட்டிலும் அவனுக்கு எதிர்ப்பு இருந்தது. கீழச்சங்கரும் சோழருடன் மண உறவு கொண்டவர்களாகவே இருந்தனர். உறவினருடனே சின்னஞ்சிறு சிற்றரசுகளுக்காகப் போரிடுவதை அவன் விரும்பவில்லை. அவன் அவா மிகவும் பெரிதாயிருந்தது. ஒன்று சோழப் பேரரசராக வேண்டும். அல்லது தன் வாள் வலிமையால் சோழப் பேரரசு போன்ற ஒரு பேரரசைத் தானாக நிறுவவேண்டும். சோழப் பேரரசனாவது அப்போது எளிதாகத் தோன்றவில்லை. ஆகவே பிந்திய திட்டத்தை மனத்துட் கொண்டான். தன் இளம் புதல்வி இராசசுந்தரியை அவன் கீழச்சங்க இளவரசனுக்கே மணஞ்செய்து, அவனுக்கே அரசாட்சியைக் கொடுத்தான். அதன்பின் ஒரு சிறுபடையுடன் அவன் புதுப்புலங்கள் வெல்லப் புறப்பட்டான்.
கீழச்சங்கர் ஆண்டபகுதிக்கு வட கலிங்கநாடு என்று பெயர். அது அசோகன் காலத்தில் ஒரு பெரிய பேரரசாயிருந்தது. விக்கிர மாதித்தியன் படையெடுப்பினால், எல்லைப் புறத்திலிருந்த சக்கரக் கோட்டத்தைக் கீழச்சங்கர் இழந்துவிட்டனர். தன் சிறுபடை கொண்டு குலோத்துங்கன் அதன்மீது படையெடுத்தான். பண்டைக் காலத்திலிருந்தே வெல்லமுடியாத கோட்டைகளுள் ஒன்று என்ற பெயரை அது பெற்றிருந்தது. அது காடு சூழ்ந்த, ஒப்பற்ற யானைப் படையும் கோட்டைப் பொறிகளும் உடையதாயிருந்தது. ஒரு சில நாட்களுக்குள் குலோத்துங்கன் அதைத் தூள் தூளாக்கினான். அந்த இடத்தில் தன் புதிய ஆட்சியை நிறுவினான்.
சக்கரக் கோட்டம் ‘பஸ்தர்’ நாட்டின் எல்லையிலிருந்தது. பஸ்தர் நாட்டினர் தம் எல்லைக் கோட்டையை இடிக்க ஒரு ஒருப்படவில்லை. மலைநாட்டு வீரர்களாகிய அவர்கள் அடிக்கடி அவன் கோட்டையின் வெளியிடங்களில் வந்து சூறையாடித் தொல்லை கொடுத்தனர். ஆகவே, குலோத்துங்கன் மீண்டும் போர்க் கோலம் பூண்டான். மகாநதி கடந்து சென்று அந்த நாட்டில் வலதுசாரி இடதுசாரியாகச் சுற்றித் தன் வீரத்தின் புகழை நிலை நாட்டினான். அவன் சிறிய ஆட்சி விரிவுற்றது. மகாநதி முதல் கங்கைவரை அவன் காலடியின்கீழ் கிடந்தது.
சோழப் பேரரசுக்கு இப்போதும் குலோதுங்கன் அரசு ஒப்பானதல்ல. ஆனால் அவன் வீரம் கண்டு அவன் உறவினரான கீழச்சாளுக்கிய, சோழ அரசரும், விக்கிரமாதித்தனும் புழுக்க மடைந்தனர். அவர்கள் அனைவரும் ஒருங்குகூடி அவனை வீழ்த்த எண்ணினர். இக்கருத்துடன் சோழப் பேரரசனான வீரராசேந்திரன் தன் மகளை விக்கிரமாதித்தனுக்கு மணம் செய்து கொடுத்தான்.
சோழப் பேரரசுக்கு இப்போது வடக்கே புது வலுந் தோன்றி விட்டது. ஆனால் இப்போதும் கிழக்கே கடாரத்திலுள்ள ஒரு பாதியில் சோழர் கைவரிசை மிகவும் வலுக் குறைந்ததாகவே இருந்தது. அங்கே எப்போதும் சோழர் மண்டலாதிபதிகளாக இருந்த இளவரசர் குடியில் போட்டி பூசல்கள் மிகுதியாயிருந்தன. குலோத்துங்கன் இவற்றைப் பயன்படுத்தி, சோழப் பேரரசிலேயே கீழ்பாதியைக் கைக்கொள்ள முனைந்தான்.
பஸ்தர் மக்கள் குரங்குப்போர் முறையில் கைதேர்ந்தவர்கள்,
கீழச்சங்கர் கடலில் கலஞ் செலுத்துவதில் வல்லவர்கள். இந்த இரண்டு நாடுகளிலும் உள்ள வீரர்களைக் குலோத்துங்கன் திரட்டினான். ஒரு சிறிய கப்பற் படையும், அதனுடன் கடல்கடந்து செல்லும் ஒரு நிலப் படையும் உருவாயின. ஆவலுடன் அவன் கடாரத்தின் மீது படையெடுத்தான். ஒன்றிரண்டு ஆண்டு களுக்குள் கடாரம் வீழ்ந்தது. அவன் கடாரத்தின் பேரரசனானான்.
சோழப் பேரரசுக்கெதிராகத் தன் வலுவைப் பெருக்க அவன், இன்னொரு பேரரசின் உதவியை நாடினான். அவன் சீனப் பேரரசருடன் வாணிக ஒப்பந்தம் செய்து கொண்டு கடாரத்திலே வேரூன்றினான். அவன் ஆட்சியில் கடாரத்தின் செல்வமும், புகழும் தமிழகத்தின் செல்வத்துடனும் புகழுடனும் போட்டி யிட்டன.
இச்சமயத்தில் வீரராசேந்திரன் இறந்தான் அவனது சிறுவன் பெயரளவில் அரசனானான். ஆனால் உண்மையில் அவன் பெயரை வைத்துக் கொண்டு மேலைச் சாளுக்கிய அரசனான விக்ரமாதித்தியன் சோழ அரசியலில் தலையிட்டான். சேரநாட்டு மக்கள் இதற்கெதிராகக் கிளர்ச்சி செய்தனர். சிறுவனான அரசனைச் சோழர் குடிபெருமக்களே கொன்றொழித்து விட்டு, குலோத்துங்கனையே சோழப் பேரரசனாகும்படி அழைப்பு விடுத்தனர்.
தன் வாள் வலியினாலே ஒரு பேரரசனாக விளங்கிய குலோத்துங்கனது ஆட்சியில் இப்போது ஒற்றுமை நிலவிற்று. சீனப் பேரரசனுடன் அவன் மீண்டும் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டான். அத்துடன் அவனை மகிழ்விக்கும் எண்ணத்துடன் நாகப்பட்டினத்தில் இராசராசன் காலத்தில் கட்டப்பட்ட புத்தர் கோயிலுக்கு மானியங்கள் அளித்தான். விக்கிரமாதித்தனுடனும் அவன் சமரசம் செய்துகொண்டு அமைதியை நிலைநாட்டினான்.
குலோத்துங்க சோழன் நிலைநாட்டிய அமைதி, போருக்கு இளைத்த கோழையின் அமைதியல்ல. இளமையிலே ஒரு நெப்போலியனாயிருந்து முழுவயதில் அரசியல் மதியறிஞனான ஒரு அரசன் விரும்புவது அமைதியையேயாகும். சோழப் பேரரசுக்கு உலகில் ஏற்பட்ட புதிய படித்தரம் இதைக் காட்டுகிறது.
கங்கைக் கரையை ஆண்ட கன்னோசி அரசன் அவனுக்குத் திறை செலுத்தினான்.
சயாம் நாட்டை ஆண்ட காம்போக அரசன் தன் மகனுக்குக் குலோத்துங்கன் என்று பெயரிட்டு அவனுக்குத் திறை அனுப்பினான்.
தமிழக வாணிபம் குலோத்துங்கன் காலத்தில் உலகெங்கும் பரந்து தழைத்தது. உள்நாட்டில் வாணிபத்தை வளர்ப்பதற் காகவே அவன் ஆங்காங்கே சிற்றரசர் ஆட்சியிலிருந்த கங்கங்களை எல்லாம் ஒழித்தான். இதனால் அவன் ‘சுங்கம் தகர்த்த சோழன்’ என்று அழைக்கப்பட்டான். மாநில முழுவதும் நிலங்களையும் பயிர் வளங்களையும் அளவையிட அவன் ஒரு தனி அரங்கத் துறையை உண்டு பண்ணினான். 1086-ல் நடைபெற்ற இந்த அளவையே இன்றளவும் நில அளவையின் அடிப்படை யாக இருக்கிறது. இச்செயலால் அவன் ‘நீணில மளந்த சோழன்’ என்றும், ‘உலகளர்ந்த பெருமாள்’ என்றும் புகழப்பட்டான்.
ஆறாண்டு வளர்ச்சியின்பின் சரிந்து போக இருந்த சோழப் பேரரசை குலோத்துங்கன் மீண்டும் நூறாண்டு நிலைபெற வைத்தான்.
‘முரசொலி’ பொங்கல் மலர் - 1955
தென்னாட்டில் ஒரு பொதுவுடைமைப் பூங்கா
தென்னகம் ஒரு புதிய பொது உடைமைப் பூங்காவாக மலர இருக்கிறது. மலர வேண்டும் திருவள்ளுவர் அதற்கான வித்தூன்றி யுள்ளார். சங்க இலக்கியங்கள் அதற்கான உரம் திரட்டி வைத்துள்ளன. நம் கவிஞர் அதைக் கனவு கண்டுள்ளார்.
அதைப் பூங்காவாக ஆக்கும் பொறுப்புடையவர்கள் யார்? ஆர்வ அவாவுடையவர்கள் யார்? ஆற்றலுடையவர்கள், பண்புடையவர்கள் யார்?
பொதுவுடைமை என்கின்ற பெயரை ஒரு தனி உடைமை யாக்கித் தமக்குத் தாமே அப்பெயரைச் சூட்டிக்கொண்டு ஆரிய அழுகல் முதலாளித்துவ அடிப்படையிலமைந்த அகில இந்தியக் கம்பூனிஸ்டுக் கட்சியினரா? பொதுவறமே புகன்ற வள்ளுவர் வழிவந்து, தமிழியக்கமும் தமிழின இயக்கமும் தன்மான இயக்கமும் நடத்தி, அவற்றின் மரபில் திராவிடநாடு கோரும் திராவிட இயக்கத்தினரா? மார்க்சியத்தைக் கனபாடமும் சபிபாடமும் பண்ணி மார்க்சியத்துக்கு உரை எழுதி, விளக்க எதிர்விளக்கச் சட்டங்களுண்டுபண்ணி, மார்க்சிய வழக்கறிஞராக விளங்கும் மார்க்சிய பண்டிதர்களா? மார்க்சிய சிந்தனை மரபிலே இயங்கி, புதிய மார்க்ஸ்களைத் தோற்றுவித்து மார்க்சியத்துக்கும் வள்ளுவருக்கும் மாண்பளிக்க இருக்கும் மாநில இயக்கத்தவரா?
இதைக் காலம் காட்டும்.
திராவிட இயக்கத்தின் பொதுவுடைமைக் குறிக்கோள், கோட்பாடு, திட்டம் ஆகியவற்றின் சில உருவரைக் கோடுகளாகக் கீழ்வருவனவற்றைக் கூறலாம்.
புதிய சமுதாய அமைப்பு
முழுநிறைக் குடியாட்சியும், முழுநிறை சமதருமமும், முழு நிறை பொதுவுடைமையும், அவற்றையே குறிக்கோளாகவும் அடிப்படையாகவும் நடைமுறைக் கொள்கையாகவும் கொண்ட ஒரு சமுதாயத்திலேயே அமைய முடியும். அத்தகைய ஒரு சமுதாயத்தின் அடிப்படையிலேயே திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட நாட்டை அமைக்க எண்ணுகிறது. சாதியை, சாதி உயர்வு தாழ்வை உடைய சமுதாயத்தின் மீதோ, சாதி உயர்வு தாழ்வுக் கோட்பாட்டையே நீதியாகக் கொண்ட சமுதாயத்தின் மீதோ, உழைப்பும் ஊதியமும் - அதாவது கடமையும் உரிமையும் எல்லோருக்கும் சரிசமமாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோள் இல்லாத சமுதாயத்தின்மீதோ திராவிட நாடு எழுப்பினால் திராவிடருக்கு எப்பயனும் இல்லை. திராவிட நாட்டுப் பிரிவினையும், திராவிட நாடென்ற தனிநாடும், தனியுரிமையும் கேட்பதற்குரிய அடிப்படைக் காரணங்களிலேயே இது முக்கியமான ஒரு காரணம்.
ஆனால் சாதியை, சாதி உயர்வு தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே இந்தியாவில் சமுதாயம் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வடிப் படையிலே நீதியும், மதச்சார்பான சுமிருதிகளும், அரசியல் சார்பான சட்டங்களும் இன்றளவும் அமைந்துள்ளன. இதுமட்டுமல்ல; அடிப்படை மனித உரிமை என்று கூறப்படும் மனித நீதியும் மனித உணர்ச்சியும்கூட இந்தியாவின் சூழலில் சாதி அடிப்படையிலேயே அமைந்துள்ளது. இதற்கு ஒரு உதாரணம் கூறலாம். உயர் சாதியினன் ஒருவன் தாழ்ந்த சாதியினன் என்று கூறி ஒரு உரிமை பெற்றால், அது பெருந்தன்மையாக மட்டுமே தோன்றும். தாழ்ந்த சாதியான உயர்ந்த சாதியினன் என்று கூறி அது பெற்றால், அவன் பொய்யனாகவும், ஏமாற்றுக்காரனாகவும் சமுதாயத்தில் தூற்றப்படுவதுடன், அடிக்கடி தோல், சதை, எலும்பில் அதன் தரம் பொறிக்கப்படவும், வழக்கு மன்றங்களில் தண்டிக்கப்படவும் ஆகிய மூவகைத் தண்டனைகளுக்கு ஆளாவான்.
உண்மைக் குடியாட்சியையும் உண்மைச் சமதர்மத்தையும் உண்மைப் பொதுவுடைமையையும் அமைப்பதற்கு ஒரு பீடிகையாகவே திராவிட இயக்கம் இந்திய அரசியல் சட்டத்தையும், அதற்காதாரமான ஆரிய ஒழுக்க முறையையும், அவற்றை இன்னும் மக்கள் உள்ளங்களிலே உழுது விதைத்துவரும் வேத புராண இதிகாசங்களையும், சமஸ்கிருத மொழி ஆதிக்கத்தையும் அதைக் காக்க உதவும் கம்பராமாயணம், பெரிய புராணம் முதலியவற்றையும், சாதி வருணாசிரமங்களை ஆதரிக்குமளவில் பிற இலக்கியங்களின் செல்வாக்கையும் எதிர்த்துப் போரிட்டு வருகிறது.
இதற்கெதிராக, ஆரிய அடிப்படையில் ஆரியத் தலைவர் களின் பிடியில் உள்ள கம்யூனிஸ்டு இவற்றை மறைமுகமாகவும் நேர்முகமாகவும் ஆதரித்து வருகிறது.
புதிய பொருளாதார அமைப்பு
திராவிட இயக்கம் ஆரியரை எதிர்க்கவில்லை; ஆரியத்தையே எதிர்க்கிறது. இது சொல்லணி உரையல்ல என்பதை ஆரியத்தை ஏற்கும் திராவிடரை அது எதிர்க்கத் தயங்காததாலும், ஆரியத்தைக் கைவிட எண்ணும் திராவிடரைப் போலவே அத்தகைய ஆரியரையும் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்வதாலும் காணலாம்.
முதலாளித்துவம், முதலாளிகள் என்ற வகையிலும் திராவிட இயக்கம் இதே மனப்பான்மையைக் காட்ட எண்ணுகிறது. அது முதலாளிகளை எதிர்க்க எண்ணவில்லை; முதலாளித்துவத்தையே எதிர்க்க எண்ணுகிறது. ஆனால் முதலாளிகளை எதிர்ப்பதே முதலாளித்துவத்தை எதிர்ப்ப தென்றும், முதலாளித்துவ அரசியலை எதிர்ப்பதே பொது வுடைமை அரசியலை அமைப்பதென்றும் இந்தியக் கம்யூனிஸ்டுகள் மட்டுமின்றி, ஏனைய கம்யூனிஸ்டுகள்கூட எண்ணி விடுகின்றனர்.
ஆரியத்தை எதிர்த்தொழிப்பதிலும் சரி, முதலாளித்துவத்தை எதிர்த்தொழிப்பதிலும் சரி, திராவிட முன்னேற்றக் கழகம் கைக்கொண்டுள்ள கருவிகள் இரண்டே இரண்டுதான். ஒன்று அறிவுக் கருவி, மற்றொன்று அன்புக் கருவி, அறிவுக் கருவி மூலம், அது உழைப்பு. ஊதியம் இரண்டும் ஒத்திருக்க வேண்டும் என்ற கருத்தையும், அவை ஒத்திராமல் வேறுபடுமானால், அதனால் உழைப்பாளிகளுக்கு ஏற்படும் தீங்கு என்ன, ஊதியம் பெறுபவருக்கு ஏற்படும் தீங்கு என்ன, இருவருக்கும் தாயகமான இனத்துக்கு ஏற்படும் தீங்கு என்ன - என்ற விளக்கங்களை அது பரப்பும். திருவள்ளுவர் குறளின் பண்பும் இதுவகையில் தமிழருக்குச் சிறந்த உதவியளிக்கும். ஆனால் வேத புராண சுமிருதிகளும், இவற்றின் நம்பிக்கையும் சிலவற்றைக் கெடுக்கும்.
முதலாளித்துவத் தொழிலாளர் நடத்தும் உரிமைப் போராட்டங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் போரை அறப்போராக்கி, ஒருபுறம் தொழிலாளரிடம் கட்சிக் கொள்கை கடந்த ஒற்றுமையையும், மற்றொருபுறம் முதலாளிகள் மனமாற்றத்தையும் உண்டு பண்ணப் பாடுபடும். போராட்டக் காலத்தின் வெற்றியால் பெற்ற வெற்றியுடன் பிரச்சார வெற்றியாலும் தொழிலாளர்களுக்குக் கிடைத்த பலனை, அவர்கள் வாழ்க்கையை வளமாக்க உதவும் ஆக்கத் திட்டங்களாக்கத் திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபடும். இதில் அது தன் அறிவுப்படையை ஈடுபடுத்தும்.
போரின் வெற்றி, உண்ணும் உணவு போன்றது. அமைதிக் கால வாழ்விலேயே அது செரிமானமாகி, உழைப்பாளர் உழைப்பாற்றலை ஒருபுறமும், போராட்ட ஆற்றலை மறுபுறமும் வளர்க்க வேண்டும். இரண்டாவது நடவடிக்கையில்லாத போராட்டம், செரிமான ஆற்றலற்ற உணவுபோலச் சமுதாயத்தில் நோயும் பிளவும் உண்டுபண்ணும். இன்றைய உலகத் தொழிலாளர் இயக்கங்கள் யாவும் இந்நிலையிலேயே உள்ளன.
முதலாளி தொழிலாளி போராட்டம், கொள்கை குறிக்கோள் போராட்டம்; மனிதருக்கு மனிதர் நடத்தும் போராட்டம். அதன் வெற்றி, தொழிலாளர் நலனை மட்டும் குறிக்கோளாகக் கொண்டதல்ல. முதலாளிகளாகச் செயலாற்றும் மனிதரை உட்படுத்திய சமுதாய நலன் குறித்தேயாகும். தொழிலாளரும் முதலாளிகளும் இதனை நன்கு உணரும்படிச் செய்து பண்புடைய அறப்போராட்டம் நடத்துவதின் மூலம், திராவிட இயக்கம் தொழிலாளர் வாழ்விலும் பொருளியல் வாழ்விலும் சமுதாய வாழ்விலும் ஒருங்கே புத்தொளியை உண்டுபண்ண முடியும்.
புதிய அறிவியல் துறை
இன்றைய அறிவியல்கள், வரலாறு, சமுதாய இயல், பொருளியல், கலைகள் போன்ற வாழ்வியல் துறைகளும் சரி, இயல்நூல்களும் தொழில் துறைகளும் சரி, முதலாளித்துவத்துடன் வளர்ந்த வளர்ச்சிகள் கீழை நாட்டின் அறிவியலில் மிகுதி. வளர்ச்சியடையாததன் காரணமே அது ஆரியம்-அதாவது அழுகல் முதலாளித்துவத்துடன் கட்டப்பட்டிருந்ததுதான். ஆரியம் அவ்வறிவை மந்திரவாதம், செப்படி வித்தை, கடவுள் மாயங்களுக்கே பயன்படுத்திற்று. மேனாட்டு அறிவியல் இதனைவிட உயர்தர முதலாளித்துவத்துடன் வளர்ந்ததனால், ஒருபடி உயர்வு அடைந்துள்ளது. ஆனால், அதுவும் மூன்று குறைகளை உடையது. அழிவு - ஆதாயம் இந்த இரண்டையும் குறிக்கோளாகக் கொண்டே அது அறிவியலை வளர்த்துப் போற்றுகிறது. நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பயன்படுவது போல அது ஆக்கத்துக்குப் பயன்படினும் அழிவே அதன் முக்கியக் குறிக்கோள். இரண்டாவது ஆதாயக் குறிக்கோள் இதை நன்கு விளக்கும். ஒருவர் ஆதாயம், மற்றவர் நட்டம், அதாவது போட்டி; ஒருவர் அல்லது ஒருசிலர் ஆதாயம், பலர்நட்டம் அதாவது சுரண்டல் என்ற அழிவு அடிப்படையிலே தான் அது சிந்திக்கிறது. ஒருவருக்கு ஆதாயம் மற்றவர்க்கும் ஆதாயம். (அதாவது தீயுடன் சேர்ந்த தீ போல, காதல் போல) இருபுறமும் ஆதாயம் என்பதோ, எல்லார்க்கும் ஆதாயம் - தனிமனிதனுக்கும் ஆதாயம் என்பதோ இன்றைய முதலாளித்துவ அறிவியலின் சிந்தனைக்கு எட்டாத ஒன்று.
தவிர, அறிவியலின் அறிவையும் சமுதாய அறிவையும் சேர்த்தால், சமுதாய அறிவு முதலாளியின் மனதை மாற்றி அவன் ஒத்துழைப்பு பெற்றே முதலாளித்துவத்தை அழிப்பதாக மாற முடியும். திராவிட முன்னேற்றக் கழகம் இத்துறையில் அறிவுப் படையை உண்டுபண்ணுவதுடன் அதனை அதில் ஈடுபடுத்திப் புதிய திராவிட நாட்டுச் சிற்பிகளை மட்டுமல்ல, புதிய சமுதாயச் சிற்பிகளை, புதிய உலகச் சிற்பிகளை உண்டுபண்ணப் பாடுபடும்.
புரட்சிகரமான சட்ட திட்டங்கள்
முதலாளித்துவ அடிப்படையான சட்டங்கள், திட்டங்கள் மட்டுமல்ல; நிலையங்கள், அறிவு மரபுகள், சிந்தனை மரபுகள் பல. புதிய பண்பாராய்ச்சித் துறை (யூகு³தூரிரிhகுஆ) அமைந் தாலல்லாமல் இவற்றின் வேரை கல்லி, புதிய சட்ட திட்டம், நிலையங்கள், அறிவு மரபுடன் அமைக்க முடியாது. உதாரணத்துக்கு நாணயத்தை எடுத்துக்கொள்ளலாம். முதலாளித்துவ அறிஞர், முதலாளித்துவ நலன் கருதித்தான் நாணயம் படைத்தனர். நாணயம் என்பது பொருளல்ல, சமுதாய மதிப்பு என்ற தத்துவத்தை அவர்கள் பயன்படுத்தினர். அதுபோல மார்க்ஸிய தத்துவத்தைப் புதியதாகப் பயன்படுத்தி, திராவிட அறிஞர் இன்றியமையாத் தேவைகளுக்கு வேறு நாணய வகை, நடுத்தர தேவைகளுக்கு உயர்தர தேவைகளுக்கு வேறு நாணயங்கள் ஏற்படுத்தி, சமதர்ம அரசியல்களாலும் எளிதில் கனவு காண முடியாத சமதர்ம நிலையை உண்டுபண்ணிவிட முடியும்.
முதலாளித்துவம் தன் நன்மைக்காகத் திருட்டு, கொலையா வற்றுக்கும் தண்டனைச் சட்டம் விதித்துள்ளது. மனிதன் அடிப்படைத் தேவைக்கு உட்பட்ட எல்லையில் கொடுக்கல் வாங்கலை சட்டப்படி செல்லாததாக்கல் - தேவைக்கு மேற்பட்டவற்றின் திருட்டு வகையில் சட்டப் பாதுகாப்பை இல்லாததாக்கல் - முதலிய புதிய கருத்துக்களையேனும் சிறிய அளவில் தெளிவாராய்ச்சி செய்ய அறிவுப் பண்புடையார் மாதிரி அரசுகள் நடத்திக் காட்டலாம்.
திராவிட இயக்கம் இத்தகைய சிந்தனைகளைத் தொடங்கி விட்டது. மேலை உலகுக்கு மார்க்ஸ் எப்படி புத்தொளி ஆயினரோ, கீழை உலகுக்கும் திராவிடம் அத்தகைய புத்தொளி படைத்து, திராவிட பூங்காவையே வருங்காலப் பொதுவுடைமை உலகின் நாற்றுப் பண்ணையாக ஆக்கப் பாடுபடும்.
முரசொலி பொங்கல் மலர் - 1956
பண்டைத் தமிழர் ஒப்பனைக் கலை
மேலை நாட்டினரிடையே, பெண்டிர் இதழுக்கும் நகங்களுக்கும் செவ்வண்ணம் பூசுவதையும், முகத்துக்கும் நறுந்துகள் இடுவதையும், முகத்துக்கு மென்கழுநீர் வண்ணச்சாயம் தோய்ப்பதையும் பலர் பார்த்திருப்பர். மேனியை மென்மையாக்கி வெண் பளிங்கு நிறம் தர வாசவெந்நீர், பனிநீர்க் குளிப்பு வகைகள் உண்டு என்பதையும் சிலர் கவனித்திருப்பர்.
புகையிலை, தேயிலை, காப்பி ஆகிய கெட்ட பழக்கங்களைப் போலவே, இந்த நல்ல அல்லது கேடற்ற நாகரிகப் பழக்கங்களும் கீழ் திசையிலிருந்து சென்றவை என்பதைப் பலர் அறிவர். ஏனெனில் குளிப்பு வகைகள் இன்றும் துருக்கிய முழுக்கு (Turkish bath) சப்பானிய முழுக்கு (Japanese bath) என்று வழங்குகின்றன. சவர்க்காரங்கள் கூட ஒரு காலத்தில் பெரும்பாலும் துருக்கிய சவர்க்காரம் (Turkish Soap) என்று விளம்பரப்படுத்தப்பட்டதுண்டு.
அழகுக்கலையின் பகுதியாகிய உடல் தேய்ப்புக்குரிய ஆங்கிலச் சொல் (Shampoo) துருக்கியச் சொல்லே.
ஆரியர் வருகைக்குள் இந்தியாவெங்கும் இக்கலைகள் பரவியிருந்தன. சமஸ்கிருதம் பிறக்குமுன் புத்த சமண இலக்கியங் களிலும், தொடக்கக்கால சமஸ்கிருத இலக்கியத்திலும் இக்கலைகள் அழியாதிருந்தன என்பதற்கான குறிப்புக்கள் காணப்படுகின்றன. இந்தியாவில் பலகலைகளை அழித்த ஆரிய நாகரிகம் இதையும் இங்கே தடந்தெரியாமலாக்கி வெளி நாடுகளிலிருந்து வந்தபின் மீண்டும் ஏற்பதில்தான் முந்திக்கொள்கிறது.
பண்டைத் தமிழரிடையே கலை இயல்கள் தழைத்திருந்தன என்பதற்குக் கவிதையில்கூடச் சங்ககாலத் தமிழர் காட்டிய பகுத்தறிவு சான்றுபகரும். என்ன கலைகள், எத்தனை கலைகள் இருந்தன என்பதை ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் ஆராய்ச்சியாளர் காண முனைவது பயன்தரும். ஆனால் அந்த ஆராய்ச்சியை அவ்வத்துறையில் இந்நாளையக் கலையறி வுடையோர் செய்தலே முழுநிறை பயன்தரும்.
தமிழ்க்கலைகள் அழிந்ததற்குப் பெரிதளவு காரணம் கலை வளர்ப்பதற்கென்றே அமைந்த சங்கங்களையும், அதனையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டிருந்த பாணர், விறலியர் வகுப்பினரையும் ஆதரிப்பதையும் மதிப்பதையும் விடுத்துத் தமிழ் மன்னரும் தமிழகச் செல்வரும் தமிழ் மக்களும் படிப்படியாக ஆரியப்போலி அறிஞரையும், போலி இலக்கிய மொழியாகிய சமஸ்கிருதத்தையும், போலிமதமாகிய ஆரியமதத்தையும் ஆதரித்து நாட்டுப் பகைவர்களாகச் சென்ற இரண்டாயிரம் ஆண்டு வாழ்ந்து வந்திருப்பதுதான் தமிழக வாழ்வில் உச்சமதிப்பிலிருந்த பாணர், விறலியர் இன்று தமிழர் வாழ்விலிருந்து ஒதுங்கிக் கோயிலின் மீளா அடிமைகளான இசை வேளாளர்குடி ஆகியுள்ளனர்.
தமிழரிடையே வழங்கிய அறுபத்து நான்கு கலைகளைப் பற்றிச் சிலப்பதிகாரமும் பெருங்கதையும் பெருமைப்படப் பேசுகின்றன.
“பண்ணுங்கிளையும் பழித்ததீஞ்சொல்
எண்ணெண்கலையோர் இருபெருவீதி”
என்று சிலப்பதிகார ஊர்காண்காதை அறுபத்துநான்கு கலை வளர்த்த வகுப்பினர் இருந்த வீதி குறிக்கிறது.
“யாழ்முதலாக அறுபத்தொடு நான்கு
ஏரிளமகளிர்”
என்று அக்கலைபயில் நங்கையரைப் பெருங்கதை குறிக்கின்றது.
கலைகள் பலவற்றின் பெயர்களைத் தரும் இன்னொரு பகுதி மணிமேகலை ஊரலர் காதையில் காணப்படுகிறது.
“வேத்தியல், பொதுவியல் என்று இரு திறத்துக்
கூத்தும், பாட்டும், தூக்கும், துணிவும்
பண்ணியாழ்க் கரணமும், பாடைப் பாடலும்,
தண்ணுமைக் கருவியும், தாழ்தீங் குழலும்,
கந்துகக்கருத்தும், மடை நூற்செய்தியும்,
சுந்தரச் சுண்ணமும், தூநீராடலும்,
பாயற்பள்ளியும், பருவத்தொழுக்கமும்,
காயக்காணமும், கண்ணியதுணர்த்தலும்,
கட்டுரைவகையும், கரந்துறைகணக்கும்,
வட்டிசைச் செய்தியும், மலர் ஆய்ந்து தொடுத்தலும்,
கோலங்கோடலும், கோவையின் சேர்ப்பும்,
காலக்கணிதமும், கலைகளின் துணிவும்,
நாடகமகளிர்க்கு நன்களம்வகுத்த
ஓவியச் செந்நூல், உரை நூல்கிடக்கையும்
கற்றுத்துறைபோகிய பொற்றொடி நங்கை”
இதில் இருபத்தாறு கலைகளே கூறப்படுகின்றன. ஆனால் இப்பட்டியல் உயர்குடி நங்கையர்க்குச் சிறப்பாக உரிய கலைகள் மட்டுமே. இதில் அறிவு இயல்கள் (Sciences) ஒன்றிரண்டே உள்ளன. கலைகளே (Art) மிகுதி. இது இயல்பே. இவற்றுள் சுந்தரச் சுண்ணமுதல் பாயற்பள்ளிவரை மூன்றும், வட்டிசைச் செய்திமுதல் கோவையின் சேர்ப்பு வரை நான்கும் ஆகிய ஏழும் ஒப்பனைக் கலையின் பலபகுதிகள் ஆகும்.
வட்டிசைச் செய்தி என்பது சாந்து அணிதல், கோலங் கோடல் பொது ஒப்பனை, கோவையின் சேர்ப்பு அணிகல ஒப்பனை, பாயற்பள்ளி படுக்கையறை ஒப்பனை சுந்தரச் சுண்ணம் முகத்தூள் (Face Powder) மேனித்தூள் (Body Powder) ஆகியவை. பின்னது இன்றும் வழக்கத்திலுள்ளதே. தூநீராடல், மணத்தூள் கலந்த நறுநீரில் குளித்தல், மலர் ஆய்ந்து தொடுத்தல் பூ ஒப்பனை.
கண்ணுக்கு மையிடுதல், சந்தனம் குங்குமம் இரண்டினாலும் ‘தொய்யில்’ என்ற சித்திரம் வரைதல், கைக்கும் கால்களுக்கும் மட்டுமன்றி, உதட்டுக்கும் நாக்குக்கும் கன்னத்துக்கும் நெற்றிக்கும் கை நகங்களுக்கும் அயத்தகம் அல்லது செம்பஞ்சுக் குழம்பால் சாயம் தீட்டுதல், நறுநெய்க் குறிப்பு, பெண்டிர் கூந்தலுலர்த்த அகிற்புகையிடல் ஆகியவை தமிழர் ஒப்பனைத் திறத்தின் பகுதிகள்.
நறுநீரில் தமிழர் ஆடவரும் பெண்டிரும் மூன்று தடவை குளித்தனர். மூன்று தடவையும் மூன்றுவகைப் பொடி கரைந்த நீரில் ஆடினர். முதல்பொடியில் துவர்ப்பொருள் அதாவது உடலைக் கெட்டியாக்கி மயிர்சுருக்கும் பொருள்கள் வழங்கப்பட்டது. இரண்டாவது விரைப்பொடி மணம் தந்தது. மூன்றாவது ஓமாலி கைப் பொடி மென்மையும் பளபளப்பும் தொய்வும் அளித்தது.
மாதவி இவற்றை வழங்கியதாகச் சிலப்பதிகாரம் கடலாடு காதை கூறுவது காணலாம்.
பத்துத்துவரினும் ஐந்துவிரையினும்
முப்பத்திருவகை ஓமாலிகையினும்
ஊறின நன்னீர் உரைத்த நெய்வாசம்
நாறிடும் கூந்தல் நலம்பெறஆட்டி
புகையில் புலர்த்திய பூமென்கூந்தல்.
புனுகு (புழுகு) நாளம் (கஸ்தூரி) முதலியனவும் தேனும் மயிர்வளர்வதற்கும் குரல் கனிவுறுவதற்கும் வழங்கப்பட்டன.
அடியார்க்கு நல்லார் இசை நாடகத்துறையில் பழைய தமிழ் நூல்கள் இருந்ததற்குச் சான்றுபகர்ந்து இறந்துபட்ட அந்நூல்களின் சூத்திரங் களைத் தருவது போலவே ஒப்பனைக் கலையிலும் தமிழில் முன் இருந்து இன்று ஆரியர் வரவுக்குப்பின் அழிந்துபட்ட நூல்களி லிருந்து சூத்திரங்கள் தருகிறார்.
பத்துத் துவருக்குச் சூத்திரம்
பூவந்தி திரிபலை புணர்கருங்காலி
நாவலொடு நாற்பான் மரமே.
ஐந்துவிரைக்குச் சூத்திரம்
கோட்டம் துருக்கம் தகரம் அகில் ஆரம்
ஒட்டிய ஐந்தும்விரை.
முப்பத்திரண்டு ஓமாலிகைக்குச் சூத்திரம்
இலவங்கம், பச்சிலை, கச்சோலம், ஏலம்
குலவிய நாகணம், கோட்டம், நிலவிய
நாகம், மதாவரிசி, தக்கோலம், நன்னாரி
வேகமில் வெண்கோட்டம், மேவுசூர் - போகாத
கத்தூரி, வேரி, இலாமிச்சம், கண்டில் வெண்ணெய்
ஒத்தகருநெல்லி, உயர்தான்றி - துத்தமொடு
வண்ணக்கச்சோலம், அரேணுகம், மாஞ்சியுடன்
எண்ணும்சயிலேகம், இன்புழுகு - கண்ணுநறும்
புன்னைநறுந்தாது, புலியுகிர், பூஞ்சரளம்,
பின்னுதமாலம், பெருவருளம் - பன்னும்
பதுமுகம், நுண்ணேலம், பைங்கொடுவேரி
கதிர் நகையாய் ஓமாலிகை.
இம்மூன்றையும் வேறுவகையாக நச்சினார்க்கினியர் தம் சிந்தாமணியுரையில் குறிக்கிறார். தமிழ் நாட்டில் இக்கலையின் வளத்தையும் பல்வகைப் பெருக்கத்தையுமே இது குறிக்கிறது.
நெய்ப்பசைபோக அந்நாளில் சந்தனத்துடன் வெள்ளிலோத் திரப் பூவின் உலர்த்திய பொடி கலந்து அரைத்து வழங்கினர். இதுவே நாளடைவில் மேனிச் சவர்க்காரம் (Toilet Soap) ஆக வளர்ச்சியுற்றது. துணிச் சவர்க்காரம் (Washing Soap) வண்ணான் காரத்திலிருந்து வளர்ச்சி பெற்ற தனிக்கலை ஆகும்.
கி. பி. 16ம் நூற்றாண்டுவரை உலகுக்கெல்லாம் மணப் பொருளும், வண்ணப்பொருளும், இனிய தின்பண்டங்களும், பட்டு, மயிர், பருத்தி ஆடைவகைகளும், முத்துப்பொன்னணி பணியும் ஏற்றுமதி செய்து உலகின் பொருட்களஞ்சியமாக விளங்கியது தமிழகம். சங்க இலக்கியம் மட்டுமன்றி வரலாறுகளும் இதைத் தெரிவிக்கின்றன. இவ்வகையில் வடநாடு வறுமை கொண்டது என்பதை அர்த்த சாஸ்திரம் எழுதிய சந்திரகுப்தன் அமைச்சரான தென்னாட்டு ஆரியர் குறித்துள்ளார்.
தமிழகத்தின் ஆட்சி வறுமை, கலைவறுமை, மொழி வறுமை, பொருள் வறுமை ஆகிய எல்லாவற்றுக்கும் தமிழர் அடிமை மனப்பான்மை, தன்னலப்போட்டி ஆகியவையும் இவற்றைப் பயன்படுத்திய அறிவற்ற நாகரிகமாகிய ஆரியமும் சிறிது அறிவுடன் இயங்கி வந்துள்ள மேலை நாகரிகமும் காரணமாகும்.
மீண்டும் தமிழர் மேம்பட நமக்கு வேண்டிய சரக்குகள் இரண்டே இரண்டுதான் - தமிழர் அடிமைத்தனமும் ஆரிய மோகமும் ஒழிய வேண்டும். தன்னம்பிக்கை வளரவேண்டும். அத்துடன் இழிந்த அடிமைத்தனத்தின் சின்னமான இனப்பற்றற்ற தன்னலப் போட்டி பொறாமைகள் ஒழிய வேண்டும். இனப்பற்றும் ஒத்துழைப்பும் வளரவேண்டும்.
வாழ்க தமிழ், தமிழினம்
வளர்க தமிழ்ப் பண்பு.
மன்றம் பொங்கல் மலர் 1956
ஓருலகில் தமிழன்
நாகரிகமற்ற மனிதன் தனி வாழ்வு வாழ்ந்தான். குறுகிய தன்னலம், சூழ்ச்சி அவன் பண்பாய் இருந்தது. அவன் வாழ்வு குடுவை வாழ்வு. இந்நிலையிலிருந்து குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு அவனை மீட்டது. குடி, ஊர், நாடு, நகர், பட்டினம், உலகம் என அவன் வாழ்வு விரிவடைந்தது. அவன் அறிவும் விரிவ டைந்தது. பண்பும் உயர்வடைந்தது. அவன் பறவை வாழ்வு வாழத் தொடங்கினான். ஒருவகை நோக்கி வளரத் தலைப்பட்டான் வளர்ந்து வருகிறான்.
குடிவாழ்வில் தற்பண்பு உண்டு. பரவை வாழ்வில் ஒப்புரவு உண்டு. முன்னது பண்பாடு. பின்னது நாகரிகம். இரண்டும் சேர்ந்ததே பண்பாடுடைய நாகரிகம் அல்லது உயிர் நாகரிகம். ஒருவகை நோக்கி மனிதனை வளர்ப்பது அதுவே. நாகரிக மில்லாத தற்பண்பு வாழ்வு குடுவை வாழ்வாகும். தற்பண்பில்லாத நாகரிக வாழ்வு மிதவை வாழ்வாகும். அது உயிரற்ற நாகரிகம். நாகரிகம் வளர்க்காது. ஒருவகை நோக்கி வளராது.
குடும்ப வாழ்வில் தமிழன் வளர்த்த இல்லறம் போன்ற சிறந்த அறம் வேறெங்கும் கிடையாது. அவன் வகுத்த மக்களாட்சிக்கு அவன் கொடுத்த ‘குடியாட்சி’ என்ற பெயர் இதற்குச் சான்று. இதற்குரிய மேலை நாட்டுச் சொல்லும் (Democracy) சமஸ்கிருதச் சொல்லும் (ஜனநாயகம்) இதே வேர்ப்பொருள் சுட்டாதது குறிப்பிடத்தக்கது. அவன் ஊர், நாடு வகுத்தான். குடியாட்சியின் பகுதிகளுக்கு அவன் கொடுத்த பெயர்கள் இதை விளக்கும். அவை ஊராண்மை, நாட்டாண்மை என்பன. நாடு கடந்து அவன் நகர் கண்டான். அது நாட்டுக்கு ஒற்றுமை தந்தது. நாட்டு நாகரிகம் வளர்த்தது. நாகரிகம் என்ற பெயர் இதனைக் குறிக்கும். இத்துடன் அவன் அமையவில்லை. வெளிநாட்டுப் பரவைத் தொடர்பு தரும் துறைமுக நகர வாழ்வு அவன் உலக நோக்கை வளர்த்தது. துறைமுக நகரத்துக்குப் பட்டினம் என்ற பெயர் இன்றளவும் தமிழ் ஒன்றில்தான் உண்டு. மயிலைப் பட்டினத்தில் வாழ்ந்த ஒரு திருவள்ளுவர்தான் சாவா முழுமுதல் உலக நோக்கைத் தமிழனுக்கும் தமிழன் மூலம் உலகுக்கும் பண்டு அளித்தார். அணிமைக் காலத்தில் கூடுதற்பற்று முற்றத் துறந்தும் தாய்ப்பற்றும் உலகப் பற்றும் துறவாத பட்டினத் தடிகள் நாகைப்பட்டினத்திலேயே வாழ்ந்து உலக அறம் கண்டார்.
தமிழ் வாழ்வு தமிழகம் கடந்து தென்னாட்டிலும், தென்னாடு கடந்து இந்தியாவிலும், இந்தியா கடந்து உலகிலும் வரலாறு காணாக் காலத்திலேயே பரந்ததுண்டு. இதற்குச் சான்றுகள் பல காட்டலாம். பட்டினம் என்ற சொல், கடற்கரைத் துறைமுக நகரத்தின் பெயர்களாகத் தமிழகத்தில் மட்டுமன்றி, இந்தியா முழுவதும் இருப்பதே இதற்கு ஒரு விளக்கம் ஆகும். கீழ் கடற் கரையில் குலசேகரன் பட்டினம், காயல் பட்டினம், நாகப் பட்டினம், சென்னைப் பட்டினம், சதுரங்கப் பட்டினம் ஆகியவை தமிழகத்தில் உள்ளன. மசூலிப்பட்டினம், விசாகபட்டினம் ஆந்திரத்தில் உள்ளன. கங்கைக் கரையில் பாட்னா உண்மையில் பட்டினமே. மேல் கடற்கரையில் சோமநாதபுரத்தின் பழம் பெயர் பட்டினம் என்றே காணப்படுகிறது.
பண்டைத் தமிழர் உலகளாவிய கடல் வாணிகக் களமாக நிலவிய பல துறைமுகப் பட்டினங்களில் காவிரிப் பூம்பட்டினம் ஒன்று இன்றைய பாண்டிச்சேரி அல்லது புதுச்சேரி பண்டு பொதுவு அல்லது எயிற்பட்டினம் என்று வழங்கிற்று. இன்றைய மகாபலிபுரம் அல்லது மாமல்லபுரம் மல்லைப்பட்டினம் என இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் விளங்கிற்று. வஞ்சி, முசிறி என்ற மேல்கரைப் பட்டினங்களிலும் காவிரிபூம்பட்டினத்திலும் எயிற் பட்டினத்திலும் கிரேக்க ரோமர் குடியிருப்புக்கள் இருந்து தமிழர் வாழ்வின் பொங்கலுடன் பொங்கின. நாகையில் சோழப் பேரரசர் ஆட்சிக் காலம் வரை சீனர் குடியிருப்புக்கள் இருந்தன. கடாரம் அல்லது மலாய் நாட்டுப் பேரரசாண்ட பேரரசரும் சீனப் பேரரசரும் அதில் புத்த கோயில்கள் எழுப்பி அவற்றுக்கு மானியம் விட்டிருந்தனர். அக்கோயிலிலுள்ள புத்தர் பொற்சிலை உலகப்புகழ் பெற்றது. தமிழ்ப் பட்டயங்களிலும் இலக்கியங் களிலும் குறிக்கப்பட்டுள்ளது. இன்று இலண்டன் மாநகர்க் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் இலெய்டன் பட்டயங்கள் இதற்குச் சான்று பகர்கின்றன.
தமிழர் விழாவில் தழைக்கும் பண்புகள்
பொங்கல் தமிழ் விழா, தமிழர் விழா, போலிப் பழமைக்கு ஆட்பட்ட தமிழன் குடுவை வாழ்வை விட்டுப் பரவை வாழ்வின் உலக நோக்கைக் கொள்ளத் தூண்டுதலளிக்க வேண்டும் விழா அது. அதே சமயம் அது போலிப் புதுமையில் மிதந்தாடும் மிதவல் வாழ்க்கையைத் தமிழன் தமிழகத்தின் வேர்ப்பண்புணர்ந்து, தமிழ், தமிழர், தமிழினம், தமிழ்ப் பண்பு அடிப்படையாக ஓருலகில் இடம்பெறத் தூண்ட வேண்டும் விழாவும் அதுவே.
உலகின் மிகப் பழமையான இயற்கை விழாக்களுள் பொங்கல் விழா ஒன்று. அது உழவர் விழா. உழவின் எல்லாப் படி வளர்ச்சிகளையும் அது காட்டுகிறது. நெற்பயிர் தமிழர் நாகரிகத்துக்கும் சீன நாகரிகத்துக்கும் அடிப்படை. அரிசிப் பொங்கல் இதைக் குறிக்கிறது. கரும்பு சீனத்துக்கும் தமிழகத்துக்கும் தனியுரிமையுடைய வேளாண்மைச் செல்வம் கரும்பிலிருந்து சருக்கரை ஆக்கிய முதலினம் தமிழினமே. தமிழன் கண்ட சருக்கரை, இன்று உலகெங்கும் தமிழ்ப் பெயருடனேயே வழங்கி எல்லா இனத்தவர் நாவுக்கும் இனிப்பூட்டுகிறது. சருக்கரைப் பொங்கல் இதைச் சுட்டுவது.
மேய்ச்சல் நில வாழ்வு அல்லது முல்லை நில வாழ்வில் மனிதன் எடுத்துப் பழக்கிய முதல் விலங்குகள் ஆடும் மாடுமே. இதுபோலப் புல் வெளிப்பாலை, மணற்பாலை, முட்புதர்ப்பாலை ஆகியவற்றில் மனிதன் எடுத்துப் பழக்கிய விலங்குகளே குதிரை, ஒட்டகை முதலியன. மலையாளக்கரை, பர்மா, இலங்கை, மலாயா போன்ற குறிஞ்சியும் முல்லையும் கலந்த நாடுகளில் மனிதன் பழக்கிய விலங்கே யானை. இவற்றுள் ஆட்டையும், குதிரையையும் பழக்கியவர் வடமேற்காசியப் புல்வெளியில் பண்டுவாழ்ந்த ஆரியர்களே. குதிரையும் ஒட்டகையும் பழக்கியவர் அராபியர். மாடு அல்லது ஆவினத்தைப் பழக்கியவரும் யானையைப் பழக்கியவரும். இந்தியாவில் வாழ்ந்த தமிழினத்தவர்களே. எகிப்தியர் போன்ற பண்டை நாகரிக மக்கள் வழங்கிய பசு இன்றைய வெளியுலகப் பசுவன்று. தமிழினப் பசுவே என்பதை இந்தியப் பசுக்களுக்கு மட்டுமே உரிய சிறப்புப் பண்பான கூன் அல்லது திமில் எடுத்துக் காட்டுகிறது.
பால் பொங்கல் தமிழன் ஆவின் செல்வத்தை வளர்த்து முன்னேறிய முன்னேற்றப் படியைக் காட்டுகிறது.
பழங்களுக்குத் தமிழில் கனி என்றும் பழம் என்றும் இரண்டு பெயர்கள் உண்டு. பழத்தைத் தெலுங்கர் ‘பண்டு’ என்பர். கனி இயற்கை மனிதனுக்குத் தருவது. பழம், மனிதன் பழக்கி ஆக்குவது. முன்னதற்குக் கொட்டை இருக்கும். சுவை சிறியதாயிருக்கும். எட்டாக்கொம்பில் வளரும். பலவற்றில் முள் மிகுதி இருக்கும். மனிதன் அவற்றைப் பழக்கிப் பயன்படுத்தினான். கொட்டை நீக்கினான் அல்லது சிறுகவைத்தான். சுவை பெருக்கினான். கொம்பின் உயரம் குறைத்தான். முள் நீக்கினான் அல்லது குறைத்தான். இவ்வகையில் மேலையுலகம் படைத்த பழங்கள் ஆரஞ்சும், ஆப்பிளும், தமிழன் படைத்த பழங்கள் மா, கதலி, பலா. இவற்றை யே அவன் முப்பழம் என்றான். மூன்றுக்கும் இயற்கை தந்த இயற்கைக் குணங்களும் உண்டு. தமிழன் கொடுத்த தீந்தமிழ்ப் பண்பும் உண்டு. கதலியில் அவன் ஓட்டை நீக்கினான். காட்டுக் கதலி அல்லது கல்வாழை இதைச் சுட்டிக் காட்டுகிறது. பலாவில் முள் நீக்கினான். சுவையூட்டினான். மலைப்பலா வென்றும் இமைப்பலாவென்றும் ஈரப்பலாவென்றும் வழங்கும் இயற்கைப் பலாக்கள் இதைக் குறித்துக் காட்டுகின்றன. மாவில் கொட்டை சிறுத்துச் சுவை பெருக்கப் பெற்ற மாவே தேமா. ஏனையது புளிமா காட்டிலந்தையில் மாவின் சுவையேற்றி இடைக்காலத்தில் தமிழன் ஆக்கிய கனியே முந்திரி. இது இன்றும் தென் தமிழகத்தில் ‘கொல்லா மா’ என்று குறிக்கப்படுகிறது. மலை நாட்டில் அதற்கு வழங்கிய ‘காசுக் கொட்டை’ என்ற அதன் பெயரே அதன் இன்றைய ஆங்கிலப் பெயர் (cashunut) ஆயிற்று.
தமிழகம் உட்பட இன்று உலகம் வழங்கும் மா, பலா, கதலி வேறு. தமிழன் வளர்த்த பண்புடை முப்பழம் வேறு. தான் வளர்த்துப் பழக்கிப் பேணியவற்றையே தமிழன் தேமா, தேம்பலா, தேங்கதலி என அழைத்தான். இந்த அடை தமிழலக்கியத்தில் வேறெப்பழத்துக்கும் கிடையாது.
தமிழன் தொழிலில் முன்னேறியபோது உற்றுக் கவனித்துப் பயன்படுத்திய பொருள்களில் ஒன்று தேன். கனிச்சாற்றுடன் போட்டியிடும் அதன் இனிமையை அவன் கண்டு வியந்தான். கனிச்சாறு கெடும். தேன் கெடாது. தேனிலூறிய கனியும் உப்பில் ஊறிய காய்போல் கெடுவதில்லை. புளிக்காடியிலும் இப்பண்பு உண்டு. தமிழன் இவற்றின் பண்பைக் கனிகளுக்கு ஊட்டி, பழங் களுக்கு ஊட்டித் தேம்பழங்கள் உண்டு பண்ணினான். வெட்டி வைத்தாலும், ஈ எறும்பு மொய்த்தாலும் கெடாத பழங்கள் அவை. இவற்றையே தமிழன் தேமா,தேங்கதலி, தேம்பலா என்றான். இன்னும் இவை தமிழகத்தில் உண்டு. ஆனால் தமிழ்ப் பண்பின் உயர்வேபோல தமிழனும் முற்றிலும் அறியாது. உலகமும் ஒரு சிறிதும் காணாமல், அது தமிழகத்தில் மட்டும் காட்டுப் பயிராக மேற்குமலைத் தொடருக்கு அருகாமையில், குமரி முனையின் அருகில் குமுறிக் கிடக்கின்றன. அவற்றில் பண்பறிந்து மீட்டும் உலகுக்களிக்கப் புத்தார்வத் தமிழர் இனித்தான் முன்வரவேண்டும்!
தமிழர் இன்று தமிழகத்தில் மட்டுமன்றி, தென்னுல கெங்கும் பரந்துள்ளனர். அவர்கள் இன்று ஆள்பவராக இல்லை. ஆனால் இன்னும் ஆக்குபவராக, பயிர் வளம், தொழில் வளம், வாணிக வளம் வளர்ப்பவராகவே உள்ளனர். தென்னுலகிலிருந்து கீழுலகிலிருந்து மீட்டும் ‘சமனொளி’ பரப்பும் கடப்பாடுடையவர் அவர்களே. உலக நடுவிடமான இலங்கையின் உச்சிமலைக்குத் தமிழர் ‘சமனொளி’ என்று இதனாலேயே பெயர் கொடுத்தனர் என்னலாம்.
சாயா முழு நிறை ஓருலகைத் தமிழன் வகுக்க, அதில் தனக்கும் ஒரு இடம் பெறத் தமிழன் அவாவும் அவாவித் திட்டமிடும் புத்தாண்டு நாளாக இலங்குக பொங்கல் புதுநாள்! வள்ளுவர் வாழ்வு மீண்டும் வளம்பெற வேண்டும் நாளாக மலர்க புது வாழ்வு.
தென்றல் பொங்கல் மலர் 1956
தமிழர் குடியாட்சி பண்பு
குடியரசு - குடியாட்சி - குடியாட்சிமுறை! இந்த மூன்று வடிவங்களில் நாம் குடியாட்சிப் பண்பைக் காணலாம்.
குடியரசு என்பது மன்னன் இல்லாத ஆட்சிக்குப் பெயர். இதன் எதிர் பதமே முடியரசு. ஆனால் மன்னன் இல்லாத ஆட்சி யெல்லாம் குடியாட்சியாக மாட்டா. குடியரசு என்று மட்டுமே அவற்றைக் கூறுகிறோம். ஏனென்றால் குடியரசில் மன்னன் மரபுரிமை இல்லாத ஒருவர் ஆட்சியுரிமையை முற்றிலும் கைப்பற்றி ஆளலாம். இதை வல்லாளர் ஆட்சி அல்லது சர்வாதிகார ஆட்சி என்கிறோம். தவிர உரிமை சிலரிடமோ, ஒரு வகுப்பாரிடமோ, உயர்ந்தவரிடமோ, குருமாரிடமோ, செல்வரிடமோ தங்கியிருந்தால், அக் குடியரசுகளை நாம் சிலராட்சி, வகுப்பாட்சி, உயர் வகுப்பாட்சி, குருமாராட்சி, செல்வராட்சி என்கிறோம். ஆளப்படும் மக்களிடம் ஆட்சியுரிமை இல்லாத இந்த ஆட்சிகளை எல்லாம் - முடியரசு, குடியரசு வகைகளையெல்லாம் நாம் ஒரே சொல்லில் வல்லாட்சி அல்லது எதேச்சாதிகாரம் என்கிறோம். ஆட்சியுரிமை மேலிருந்து கீழோ, ஆட்சியாளரிடமிருந்து ஆளப்படும் மக்களிடம் வரும் ஆட்சியெல்லாம் வல்லாட்சியே. ஆட்சியுரிமை கீழிலிருந்து மேலே, ஆளப்படும் மக்களிடமிருந்து ஆள்பவரிடம் சென்றால் மட்டுமே அவ்வாட்சியை நாம் குடியாட்சி என்று கூறமுடியும்.
நிறை குடியாட்சி அல்லது மக்கள் ஆட்சியில் ஆள்பவர், ஆளப்படுபவர் என்ற வேற்றுமை கிடையாது. எல்லாரும் ஆள்பவர்கள், எல்லாரும் எல்லாரையும் ஆளும் ஆட்சிதான் நிறை குடியாட்சி, அதில் எல்லாரும் மன்னர், எல்லாரும் மக்கள்.
நிறைகுடியாட்சி ஒரு குறிக்கோள் மட்டுமே. நடைமுறையில் உலகில் அதுயெங்கும் கிடையாது. ஆனால் அந்தக்குறிக்கோளை உடன்கொண்ட குடியரசுகளைத் தான் நாம் இன்று குடியாட்சி என்று அழைக்கிறோம்.
ஆட்சி எல்லை மிகப்பெரியதாய் இருந்தால், எல்லாரும்
எல்லாரையும் ஆளுவது என்பது முடியாத காரியம். பண்டைக் காலத் தமிழர் ஊராட்சியிலும் கிரேக்க நாட்டில் அதேன்ஸ் நகர ஆட்சியிலும் எல்லாரையும் எல்லாரும் ஆளும் முறை நடை முறையிலிருந்தது. தமிழர் ஊர்களும் அதேன்ஸ் நகரமும் இது காரணமாகவே நடுவே அகல் வெளியிட்டுக் கட்டப்பட்டது. சந்தையென்றும் வெளியென்றும் எண்ணப்படும் ஆங்கிலச் சொல் (Forum) அதேனியரின் இவ்வகல்வெளியின் பெயரே தமிழர் இதனை ஊர்ப்பொது, பொதியில், அம்பலம் என்ற சொற்களால் அழைத்தனர்.
தொல்காப்பியர் காலத்துக்கு முன் - பல்லாயிர ஆண்டு கட்குமுன்- மலைச்சாரலில் சிலபல ஆண்டுகளுக் கொருமுறை பொதிகை மலைச் சாரலில் ஒரு தமிழ்த் தேசீயப் பொதுவிடத்தில் கூடினர். அந்த மலை அதனாலேயே ‘பொதியில்’ என்றும் தமிழ் மலை என்றும் இன்று வரை வழங்கலாயிற்று. அதுவே தமிழ்த் தெய்வம் வாழும் தெய்வமலை, வடமலை, வெள்ளிமலை, பொன் மலை, வெள்ளியம்பலம் என்று பலவாறாகக் கூறப்பட்டது. அவ்விடத்தில் கூடிய தமிழ்ச்சங்கத்தின் நிலையிருக்கையே தென் மதுரையிலும் அலைவாயிலும் கடைசியில் மதுரையிலும் கூடிற்று. மதுரையும் இதனால் வெள்ளியம்பலம் எனப்பட்டது.
தமிழரைப்போலவே கிரேக்கரும் ஒரு தேசியப் பொது விடத்தில் கூடினர். அந்த இடமே தேசீய விழா, தேசீயப் பந்த யங்களின் களமான ஒலும்பஸ் இவ்விடத்தில் முதலில் கூடிய ஆண்டு (கி. மு. 8-ம் நூற்றாண்டு) முதலே கிரேக்கர் தம் ஆண்டு ஊழி கணித்தனர். கிரேக்க நாகரிகம் போற்றும் மேனாட்டினர் இன்றும் உலகப் பொதுப் போட்டிப் பந்தயங்களை ஒலிம்பிக் பந்தயங்கள் என்றே நடத்துகின்றனர்.
எல்லாரும் எல்லாரையும் ஆளும் தொல் குடியாட்சி முறை யில் தமிழரும் கிரேக்கரும் முதலில் முறை வைத்தே ஆண்டனர். ஆனால் கட்சி பெருகியபின், சிலருக்கு அவர்கள் வாழ்நாளில் முறைவருவதில்லை. எனவே சீட்டுக் குலுக்கிப்போடும் முறை வந்தது. இதிலும் தகுதியுடையவர் சீட்டுப்பெறா நிலை ஏற்பட்டது. இதன் பின்னரே தகுதித் தேர்வாகத் தேர்தல் முறை வழக்குக்கு வந்தது. தமிழர் இதனைக் குடவோலை என்றனர். ஏனெனில் ஒவ்வொரு சீட்டும் ஒரு ஓலை. அது தேர்தல் பெட்டியாகிய குடத்தில் இடப்பட்டது. கிரேக்கர் ஓட்டுத்துண்டை வழங்கினர். ஆட்சித் தேர்வாகத் தொடங்கிய இதேமுறை பின்னாட்களில் பெருந்தீர்ப்புகளுக்கும் அரசியல் கண்டனங்களுக்கும் பயன்படுத்தப் பட்டது.
கிரேக்கரிடையே அதேன்ஸ் நகரவெளியின் நடுமையமே நகர்த்தெய்வமான அதேனாவின் கோயிலாயிற்று.
தமிழரிடையே அம்பலத்திலிருந்தே தமிழர் குடியாட்சியின் சமய, சமுதாய, அரசியல் கூறுகள் தொடங்கின. பண்டு ஊரம் பலத்தில் ஆட்சி செய்த குழுவினர் அம்பலக்காரர் என்றும், அதன் உட்குழுவினர் அல்லது வாரியத்தார் அகம்படியர் அல்லது வாரியர் என்றும் அழைக்கப்பட்டனர். இம்மூன்று பெயர்களும் இன்று சாதிப்பெயர்களாய் நிலவுகின்றன. அம்பலத்தில் வழக்காடுபவர் பெயராகிய மன்றாடி என்பதும் இன்று சாதிப்பெயராய் நிலவுகிறது.
வீரருக்கு சிறந்த இடத்திலோ, அம்பலத்தைச் சுற்றிலுமோ அல்லது ஊர்த்தலைவனானால், சிறப்பாகப் புகழ்மிக்கவனானால் அம்பலங்களிலோ கல் எழுப்பப்பட்டது. அதனருகே தலைவன் குடியின் மரபுச் சின்னமான மரமும் குடிச்சின்னமான கொடியும் நிறுவப்பட்டன. அந்த இடம் கோயில் என்றும் மரம் கோமரம் என்னும் கொடியென்றும் அழைக்கப்பட்டன.
தமிழர் அரண்மனையும் கோயிலும் இன்றளவும் கோயில் என்றும் அம்பலம் என்றும் அழைக்கப்படுகின்றன.
அம்பலத்தில் பேசுபவருக்கென நாற்கால் பந்தலிடப்பட்ட பின் அது மன்றம் எனப்பட்டது. கூடுபவருக்கும் நீண்ட பந்தல்கள் இடப்பட்டபின் அதுவே கூடம் எனப்பட்டது. இவையனைத்துமே பிற்கால கோயில்களாயின. மன்றம் இருந்த இடம் மண்ட பமாகவும் கூடங்கள் இருந்த இடம் திருச்சுற்றுக்களாகவும் மாறின.
அம்பலத்தில் சிறுவர் கல்வி கற்பிக்கும் இடம் பள்ளி எனப்பட்டது. அறச்சாலை அறப்பள்ளியாயிற்று. நாடகமாடும் கொட்டகையின் அடிப்புறம் அரங்கு என்றும் மேற்புறம் மாடம் என்றும் பெயர்பெற்றன. இவையே கோயில் கோபுரங்களாகப் பின்னாளில் வளர்ந்தன. புத்த சமணத் தொழுகையிடங்களும் முஸ்லிம் தொழு கையிடங்களும் இன்று ‘பள்ளி’ என்ற இப்பழங்கோயிற் பகுதியின் பெயராலேயே வழங்குகின்றன. கூடம், மாடம் ஆகிய சொற்களிலும் கோவின் இடமாகிய கோபுரமும் இம்மரபுகளைக் காட்டுகின்றன.
உட்கோயில் கோயில் என்றும் சிற்றம்பலம் என்றும் கூறப்பட்டன. புறக்கோயில் பேரம்பலம் என்னப்பட்டது. பழமை வாய்ந்த உட்கோயில் என்ற முறையிலேயே சிற்றம்பலம் என்ற பெயர் மருவிச் சிதம்பரத்தின் பெயராயிற்று.
பழய குடியாட்சியின் எல்லை விரிய விரிய, எல்லாரும் கூடும் வழக்கம் கைவிடப்பட்டது. பேராட்கள் அல்லது தலைவர்கள் மட்டும் கூடினர்; பின்பேராட்கள் தேர்ந்தெடுக்கப் படும் நம்காலத் தேர்தல்முறை தொடங்கிற்று. தேர்ந்தெடுத்த பேராட்கள் மூலமான குடியாட்சி பொறுப்பாட்சி எனப்படுகிறது. இக்குடியாட்சிப் பண்பு இப்போது குடியரசுகளிடம் மட்டுமன்றி, எல்லா கட்சி வகைகளிலுமே பரவி வருகிறது.
பிரிட்டன் இன்று குடியரசன்று, முடியரசே. ஆனால் குடியாட்சிப் பண்புக்கும் பொறுப்பாட்சிக்கும் அது தாயகமாகக் கருதப்படுகிறது. அரசர் தனியுரிமை எதிர்த்து மக்கள் குடியுரிமைக்குப் போராடியே இக்குடியாட்சிப் பண்பை மேற்கொண்டுள்ளனர்.
பிரான்சில் முடியாட்சியை எதிர்த்து அரசனை ஒழித்துக் குடியரசுடன் கூடிய குடியாட்சி நடத்துகின்றனர்.
அமெரிக்கா அயல்நாடகிய பிரிட்டனின் ஆட்சியில் இருந்தது. பிரிட்டனை எதிர்த்துப் போரிட்டு விடுதலைப்பெற்று, அவ்விடுதலையின் மீதே குடியாட்சி அமைத்தனர்.
நாடு, ஆட்சி, உரிமை - இவை குடியாட்சியின் மூன்று படிகளென்பதை இம்மூன்று நாடுகளும் காட்டுகின்றன.
தமிழருக்கு இன்றும் நாடும் இல்லை. ஆட்சியும் இல்லை. உரிமையும் இல்லை. ஆகவே முன்பு நாம் கிரேக்கரை ஒத்த நிறைகுடியாட்சி உடையவர்களாயிருந்தாலும் இன்று நமக்குக் குடியாட்சியும் இல்லை. ஆட்சியும் இல்லை, நாடேயில்லை.
பிரிட்டனும் இந்தியாவும் நாடுகளாய் இருந்த சமயங்களில் மற்ற நாடுகளுடன் நிலப்படை கடற்படையெடுத்து ஆண்டவர்கள் நாம். அவர்கள் ஆள நாம் உரிமையற்றிருக்கும் நிலை குரங்குகள் ஆள மனிதர் மரமேறிக் குந்திக் கொண்டிருக்கும் நிலையேயாகும்.
இந்த நிலைபெற, பண்டைக் குடியாட்சியின் புதுப்பிறப்பு, புதுமலர்ச்சி உண்டுபண்ண, தமிழர் தமக்கு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மேநாட்டு நாகரிகம் அளித்த குடியுரிமையை நன்கு பயன்படுத்த வேண்டும்.
மன்றம் பொங்கல் மலர் 1957
ஒளவையார்?
தமிழுக்குப் பெருஞ் சிறப்பளிக்கும் புலவர்களில் உயர்தனிச் சிறப்பிடம் பெறும் புலவர் ஒளவையார். ஆனால் அவர் உயர் தனிச் சிறப்பும் இன்று உணரப்படவில்லை. அவரைப் பற்றிய உண்மைகளும் அறிஞராலும் கலைஞராலும் பலவகைப் புராணப் புளுகுடன் கட்டுக் கதைகள் மூலம் முற்றிலும் கருத்திரையிடப்பட்டு இன்னும் மறைக்கப்பட்டே திரிக்கப்பட்டே வருகின்றன.
பொய்மையை எதிர்க்கும் புலவர்கள் பலர்கூட அப்பொய்மையையே ஆராய்வதனால் மெய்மை எளிதில் மக்கள் கண்முன் படுவதில்லை. ஜெமினியின் திரைப்படமும், கலைஞர்
டி. கே. சண்முகம் குழுவினரின் நாடகமும் மிகப் பேரளவில் பொய்மைகளையே பரப்ப உதவியுள்ளன. செல்வாக்குப் பெற்று விட்ட அந்தப் பொய்ப் பிரச்சாரங்களின் முன் தமிழகத்தில் செல்வாக்கற்ற தமிழ்ப் புலவர் உரைகளோ அறிஞர் விளக்கங்களோ இன்றைய அயலாட்சிச் சூழலில் துவக்கம் பெறுவதில்லை.
ஒளவையாரைப் பற்றிய பொய்மைச் செய்திகளுக் கெதிராகக் கீழ் வரும் மெய்மைகள் எங்கும் வருங்காலத் தமிழ்த் தலைவர்களாலும் ஆட்சியாளராலும் பரப்பப்பட வேண்டியவை.
1. ஒளவையார் என்ற புகழ்ப் பெயருடன் தமிழகத்தில் வாழ்ந்த புலவர்கள் ஒருவர் இருவரல்ல. குறைந்தது மூவர் - ஐவர் இருத்தல் கூடும். ஐவரும் புகழ் சான்ற பெருங் கவிஞர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், ஐவரினும் சிறந்தவர், தமிழுக்குச் சிறப்பளிக்கும் ‘தமிழ் அன்னை’ கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் சங்க காலத்தில் வாழ்ந்த ஒளவையே இவருக்குப் பின் சோழர் காலத்தில் ‘அசதிக் கோவை’ முதலியன பாடிய ஒளவையும் அதன் பின் ‘விநாயகர் அகவல்’ போன்ற பக்திப் பாடல் பாடிய ஓர் ஒளவையும் அதன் பின் ‘ஒளவைக் குறள்’ என்ற சமய அறிவுத் துறை ஏடு இயற்றிய ஒளவையும், எல்லாருக்கும் பின் 14 அல்லது 15-ம் நூற்றாண்டுகளில் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், உலக நீதி, மூதுரை முதலிய சிறுவர் சிறுமியர் நீதி நூல்கள் பாடிய ஒளவையும் வாழ்ந்திருக்க வேண்டும்.
விநாயகர் அகவல் பாடிய ஒளவையின் பக்தியையும், நீதி நூல் பாடியவர்க்குரியதாயிருக்கக் கூடிய ’முதுமை’யையும், இவர்களுக்கு ஆயிர ஆண்டு முற்பட்ட பைந்தமிழன்னையாகிய முதல் ஒளவையாருக்கும் ஏற்றிவிட்டனர். இடைக்காலப் பசப்புக் கதைகாரர் திரைப்படமும் நாடகமும் குருட்டுத்தனமாகவும் புரட்டுத்தனமாகவும் பொய்ப் பிரச்சாரம் செய்யும் புனைசுருட்டுக்கள் இவையே!
2. சங்க கால ஒளவையார் அதியமான் நெடுமான் அஞ்சியின் அவைப்புலவர். அவனால் அருநெல்லிக் கனியளிக்கப்பட்டவர் என்பதும், அவன் காலம் கடந்து அவன் பிள்ளை காலத்திலும் வாழ்ந்தவர் என்பதும் உண்மை. ஆனால் அவர் பாடிய காலத்தில் கிழவியல்ல; இளநங்கை அவள் இடைக்காலப் போலித் துறவியல்ல; வாழ்க்கை வெறுத்தவரல்ல; அரசியலும் கலையும் நாடி அவர் மணமில்லாமலே இருந்த அறிஞர் மட்டுமே. வெறுப்புத் துறவறத்தையோ பக்தியையோ அவர் பாடலில் காண முடியாது. அவர் வாழ்ந்த காலம் பகுத்தறிவுக் காலம்.
ஒளவையார் அழகிய தோற்றமுடையவர். ஆடிபாடி அரசரை மகிழ்விப்பதுடன் ஆன்ற அறிவுரையும் கூறுபவர். மன்னர் அவரை அஞ்சினர். மதித்தனர். மக்கள் அவரைப் பாராட்டினர். ஆனால் அது அறிவுக்காகவும் கலைக்காகவுமே பக்திக்காக, போலித் துறவுக்காக அன்று.
அவர் ஊன் உண்டார். மது உண்டார். அவர் பாட்டுக்கள் இவற்றைக் காட்டுகின்றன. அது அவர் கால அரசவை வாழ்க்கை வள்ளுவர் போன்ற அறவோர் இரண்டும் கடிந்தாலும், அரசியல், சமுதாய வாழ்வில் இன்று போல் அன்றும் அவை உச்ச உயர் தளங்களில் நிலவின.
3. ஒளவையார் வாழ்ந்த காலம் சங்க காலத்தின் இறுதியே யாகும். அவர் காலத்திலேயே நமக்குத் தெரியவரும் மிகப் பெரும்பாலான சங்கப் புலவர் வாழ்ந்தனர். ஆனால் பல சங்கப் பாடல்கள் இயற்றிய ஆசிரியர் மட்டுமன்றி, சிலப்பதிகார, மணிமேகலை ஆசிரியர்களும் அவருக்கு மிகவும் முற்பட்டவர்கள் ஆவார்கள். ஆனால் திருவள்ளுவர் ஒளவையாருக்கு மட்டுமன்றிச் சங்க காலத்துக்கே மிக மிக முற்பட்டவர். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முற்பட்டவர் என்று கருத இடமுண்டு. ஆகவே ஒளவையார் திருவள்ளுவர் உடன் பிறந்தார் என்ற அண்டப்புளுகுக் கதைக்கு அணுவளவேனும் ஆதாரம் கிடையாது.
4. ஒளவையார் காலம் முதல் அண்மைக் காலம் வரை ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒளவையார் என்ற பெயருடனேயே பல தலை சிறந்த பெண்பாற் புகழ்ப் புலவர் வாழ்ந்துள்ளனர். வேறு பெண்பாற் பெரும் புலவர்களும் அவ்வக் காலங்களில் வேறு எம்மொழியிலும் இல்லா அளவிலும், உயர்படியிலும் தமிழில் பாடியதுண்டு. இவர்களுள் வடதிசையில் மராத்தி மொழியில் பக்திக் கவிதைப் பெண்பாற் கவிஞரான மீரா பாய்க்கு முன்னோடியாகத் தமிழில் வைணவ ஆழ்வார்களில் நாச்சியாரும் சைவத்திருத்தொண்டரில் காரைக்கால் நங்கையும் தமிழில் பல பெரு நூல்கள் இயற்றியுள்ளனர். 15-16ம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் தமிழில் மட்டுமன்றித் தெலுங்கிலும், சமஸ்கிருதத்திலும் வல்ல பல பெண்பாற் கவிஞர்கள் இருந்து பல மொழிகளிலும் காவியங்கள் இயற்றியுள்ளனர்.
ஆனால் இந்த வண்தமிழ் மரபுக்கு மூலம் சங்க காலப் பெருவாழ்வே. இக்காலத்தில் ஒளவையாரை ஒத்த பெண்பாற் புலவர்கள் அவருக்கு முன்பே மிகமிகப் பலர். அவருள் வெள்ளி வீதியார் என்ற - மதுரை நகரிலிருந்த பெண்பாற் புலவரை ஒளவையாரே பாடியுள்ளார். சேர அரசனைப் பாடி அவனையே மணந்து அரசியான காக்கை பாடினியார் நச்செள்ளையார் முதல் மலைவாணர் குடிமங்கையாகிய பேய் மகள் இளவெயினி வரை பல சமுதாயப்படிகளிலும் முப்பதுக்கு மேற்பட்ட தலைசிறந்த பெண் பாற் புலவர்கள் பாடல்கள் சங்க இலக்கியத்தில் ‘எட்டுத் தொகை’ என்ற ஒரு தொகையையே நமக்குத் தந்திருக்கின்றன.
ஆகவே ஒளவையார் தமிழின் ஒரே தமிழ்ப் பெண்பாற் புலவருமல்லர். முதல் தமிழ்ப் பெரும் பெண்பாற் கவிஞருமல்லர். அவருக்கு முன்னும் பின்னும் எண்ணற்ற தலை சிறந்த கவிஞர் இருந்தனர். அவர் அப் பெருந்தமிழ் மரபின் பொற்காலத்திற்கு ஒரு தலை சிறந்த பிரதிநிதி மட்டுமேயாவர். அவர் பெரும்புகழ் தமிழகத்தின் பெரும்புகழ் - அவர் காலமாகிய சங்க காலத்தின் பெரும் புகழ் - ஏனெனில் அவர் காலத்தில் தமிழில் இருந்த பெண்பாற் புலவர்களுக்கு ஈடான ஆண்பாற்புலவர்கள் தொகையையும் சிறப்பையும் கூட நாம் வேறு மொழியிலும் காண முடியாது.
திருவள்ளுவருக்கும் ஒளவையாருக்கும் ஒரே தமிழ் மொழிப் புலவர் என்பது தவிர வேறு எத்தகைய தொடர்பும் கிடையாது. ஆயினும் திருவள்ளுவர் காலத்துக்கும் ஒளவையார் காலத்துக்கும் இடையேயுள்ள ஆயிர இரண்டாயிரக்கணக்கான ஆண்டுகளில் ஒளவையார் போன்ற நீடித்த பெண்பாற் புலவர் மரபு தொடர்ந்து இடையறாதிருத்தல் கூடும் என்று எண்ண இடமுண்டு. ஏனெனில் ஆரியர் வருகைக்கு முன் ஆண்கள் பெண்கள் இருபாலாரும் நிறை கல்வி கற்றிருந்தனர். சங்க காலத்தில் ஆண்பாற் புலவர்கள் மட்டுமன்றிப் பெண்பாற் புலவர்கள்கூட எல்லா வகுப்பிலும் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் நகரங்களிலும் இருந்தது. நமக்குக் கிடைத்துள்ள ஏடுகளின் மூலமே தெரிய வருகிறது. அத்துடன் புத்தருக்கு முற்பட்ட வடதிசை உபநிடதங்கள் மூலம் வேத காலத்துக்கு முற்பட்ட தமிழின முனிவர்கள் சித்தர்களில் பலர் பெண்பால் ஆசிரியர்களே என்று அறிகிறோம்.
வள்ளுவர் காலப் பெண்பாற் புலவர்கள் மிகப் பலர் இருந்திருக்கக் கூடும். பெண்பாலருக்கு அவர் தந்த மதிப்பு யாவரும் தரவில்லை. ஆனால் வள்ளுவர் காலத் தமிழ் நூல் எதுவும் நமக்கு வந்து எட்டவில்லை. கடைச் சங்கம் மட்டுமன்றி மூன்று சங்கங்களுமே திருவள்ளுவருக்கு நெடுநாள் பிற்பட்டனவாக இருத்தல் கூடும். உண்மையில் தலைச் சங்கந் தோற்றுவித்த முதல் உறுப்பினர் இறையனார் அல்லது கடவுள் திருவள்ளுவராகவே இருத்தல் கூடும். ஆனால் வள்ளுவர் காலத்தமிழ் மரபு அழியத் தொடங்கிய காலத்தின் இறுதிப் பிரதிநிதியாகவே ஒளவையார் கொள்ளத் தக்கவர்.
ஒளவையாருக்கு - முதல் ஒளவையாருக்குப் பிற்பட்டும் தலைசிறந்த பெண்பாற் புலவர்கள் தமிழகத்தில் இருந்தாலும் தமிழ் உயிர் மரபும் தமிழ் ஒளவையாரும் ஒளவையாருடன் முடிந்து விட்டது என்னலாம். ஏனெனில் பின்வந்த பெண்பாற் புலவர்கள் தனிப்புலவர்கள் - முந்தியவர்களைப் போலத் தம் காலப் பெண்பால் கல்வி மரபின் பிரதிநிதிகள் அல்லர். அவர்கள் தனிமரங்கள் - தோப்புகளின் தலை சிறந்த நெடுமரங்கள் அல்லர்.
தமிழகம் திருவள்ளுவர் மரபையும் ஒளவையார் மரபையும் இனித்தான் புதுப்பித்தல் வேண்டும். அதற்கு முதற்படி இவர் பற்றி மெய்மைகள் பரப்பி அவர்கள் பற்றிய மாயப் பொய்மைப்
பிரச்சாரங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி தருவதேயாகும். ஜெமினி திரைப் பட மரபையும் டி. கே. எஸ். நாடக மரபையும் கூடத்தமிழர் மறக்கத்தக்க. சீரிய திரைப்பட, நாடக வள்ளுவர் மரபுடன், எண்ண மரபுகளும் ஏற்படல் வேண்டும்.
தென்றல் பொங்கல் மலர் 1957
திராவிட இலக்கியம்
திராவிட மொழிகளில் இலக்கியமுடைய மொழிகள் நான்கு. அவை தமிழ், கன்னடம், மலையாளம் என்பன. பண்பட்ட மொழியாகிய துளுவையும் சேர்த்துப் பெருமொழிகள் ஐந்து எனப்படும். தென்னகத்திலும் விந்தம் சூழ்ந்தும் கிடக்கும் பல பண்பான மொழிகளைச் சேர்த்து நல்லாயர் கால்டுவெல் திராவிட மொழிகள் 13 எனத் தொகைப்படுத்தினார். இப்போது மேலையாராச்சியாளர் அவை 1க்கும் மேற்பட்டன என்று கூறுகின்றனர்.
எப்படியும் இருபதுக்குக் குறைந்த திராவிட மொழிகளுக் கெதிராக, இந்தோ - ஐரோப்பிய இனம் என்று அறிஞரால் அழைக்கப்படும் ஆரிய இனமொழிகள் உலகில் எண்பதுக்கு மேற்பட்டவை உண்டு. ஆயினும் 2க்கு 4 ஆக இயலும். இலக்கியப் பழமையுடைய திராவிட மொழிகளின் எண்ணிக்கைக்கு எதிராக, கிட்டத்தட்ட நூறளவான ஆரிய இன மொழிகளிடையே இலக்கியப் புலமையுடைய மொழிகள் மூன்றுதான் உண்டு. அவையே லத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் ஆகியவை.
திராவிட இலக்கிய மொழிகள் நான்கும் இன்னும் உயிருடைய பேச்சு மொழிகள். அவற்றின் இலக்கிய மொழிகள் இன்னும் வளர்ந்து வருகின்றன. ஆனால் ஆரிய இலக்கிய மொழிகள் மூன்றுமே பேச்சிழந்து உயிரற்ற மொழிகளாய் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்விட்டன. அவற்றின் இலக்கியங்கள் உயிரும் உள வளர்ச்சியும் கற்று அதுபோலவே ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆய்விட்டன.
பண்டைய ஆரிய மொழிகள் இறந்துபட்டாலும், அவற்றின் வழிவந்த இந்தி போன்ற ஆரியக்கிளை மொழிகள் இன்றுவளரத் தொடங்கியுள்ளன. அதேபோல ஆரியக்கிளை மொழிகளான ஆங்கிலம் முதலிய மேலை மொழிகள் பேரளவில் அண்மைக் காலங்களில் வளர்ந்தும் உள்ளன. ஆயினும் ஆரியப் பேரினத்தின் மூல வளத்தைக் காட்டும் இலக்கியமாக, பண்டிருந்து இன்றுவரை இன வரலாற்றிலக்கியமாகக் கூறத்தக்க இலக்கியம் எதுவுமே இல்லை. திராவிடருக்கு அத்தகைய இலக்கியங்கள் ஒன்றல்ல, நான்கு உண்டு. தமிழிலக்கியம், கன்னட இலக்கியம், தெலுங்கிலக்கியம், மலையாள இலக்கியம் ஆகிய நான்கு இலக்கியங்களுமே நான்கு பேராறுகளாக, திராவிட இனத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டு வளத்தையும் வளர்ச்சியையும் எளி நிழற்படுத்திக்காட்டும் இயல்புடையவை. இவை தவிர, ஆரியர் வருமுன்பே திராவிடர் அடைந்திருந்த உலகளாவிய பெருவளத்தையும் வளர்ச்சியையும் படம் பிடித்துக்காட்டும் திராவிட இனத்தனிப் பேரிலக்கியமும் ஒன்று உண்டு.
இதுவே தேவார திருவாசகங்களுக்கு முற்பட்ட பழந்தமிழ்ப் பேரிலக்கியம். தமிழகமே 19ம் நூற்றாண்டிறுதி வரை இதனைப் பற்றி மிகுதி அறியாமல் இருந்ததென்பதைத் தமிழ்த்துறை அறிஞர் அறிவர். இதில் வியப்பில்லை. மலையாளிகள், தெலுங்கர், கன்னடியருடன் ஒப்புத் தமிழகம் தம் இலக்கியம் என்று அதுவரை பேணி வந்தது கி. பி. 7ம் நூற்றாண்டு முதல் வளர்ந்த தேவார திருவாசக திருநாலாயிரங்களுடன் தொடங்கிய தமிழிலக்கியத்தையே.
உண்மையில் ‘தமிழ்’ மொழிக்கு இலக்கியம் என்று கூறத் தக்கது தேவார திருவாசகம் முதல் திருவருட்பா கடந்து நம்மிடம் வந்துள்ள இடைக்கால, இக்கால இலக்கியமே. இந்தப் பகுதியைத் தமிழ் இலக்கியமாகக் கொண்டே டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் அவர்கள் காலம்வரை தமிழர் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தனர். தமிழறிஞர் பழந்தமிழிலக்கியம் என்று பெருமையுடன் பாராட்டிய இலக்கியம் இதுவன்றிவேறன்று. தமிழ் சிறந்த மொழி, உலகின் மிகப்பழமை பெருமை மிக்க மொழி என்று டாக்டர் கால்டுவெல், டாக்டர் போப் முதலானவர்கள் வானலாவப் பறந்ததற்குக் காரணமான தமிழ் இலக்கியமும் இதுவே.
அளவில் இந்தத் தமிழிலக்கியமே கன்னடம், மலையாளம், தெலுங்கு முதலான ஏனைய தென்னக மொழிகளுடன் சம்மதிப்புக் கொள்ளத்தக்கது. அவற்றுடன் போட்டியிடத்தக்க பெருமைகூட உடையது. இது மட்டுமோ இந்தப் பகுதியைத் தம் தேசிய இலக்கியமாக வைத்துக் கொண்டே தமிழர் தென்னகத்தின் பழைய மொழிகளுடனும் மட்டுமன்றி, மேலையுலகத்தில் புதிய ஐரோப்பிய மொழிகளுடனும் தம்மை ஒப்பிட்டுப் பெருமையடையலாம். சமஸ்கிருதத்துடனும் கிரேக்க லத்தீன்களுடனும் போட்டியிட்டுக் கூட இத்தமிழ் இலக்கியம் தலைகுனிய வேண்டுவதில்லை.
கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, நாச்சியார், மணிவாசகர், சேக்கிழார், தாயுமானவர், வள்ளலார் முதலிய எண்ணற்ற பெருங் கவிஞர்களை ஈன்ற இலக்கியம் இது. ஷேக்ஸ்பியர், காளிதாசன், ஹோமர், தாகூர் போன்ற உலகக் கவிஞர்களுடன் ஒப்பிடத்தக்க பெருமையை இந்தத் தேசிய இலக்கியத்துக்கு அளிக்க இக்கவி ஒருவரே போதியவர்.
வள்ளுவனையும், இளங்கோவையும், நக்கீரரையும், தொல் காப்பியரையும், கபிலரையும் தமிழ்க் கவிஞர் கணக்கில் சேர்க்காமலே உலக மொழிகளிடையே தமிழ் தலை நிமிர்ந்து நிற்கமுடியும். இந்திய மொழிகளிடையே அந்நிலையில் அது பழமைமிக்க உச்சநிலைத் தேசிய மொழியாகவே இயங்கும்.
தமிழ் மட்டுமல்ல இந்திய மொழிகளிலேயே மிகப் பெரிய கவிஞர் கம்பர் என்று டி. கே. சி. போன்றோர் பலர் கருதியதில் தவறில்லை. இந்திய மொழிகளிடையே பழந்தமிழன் நிலை சமஸ்கிருதத்தின் நிலையுடன் ஒத்தது. இந்தியாவில் பழைய ஆரிய இலட்சியமொழி சமஸ்கிருதம். அதனோடொப்ப ஆனால் அதனினும் பழமையும் பெருமையும் விளங்கியதான பழைய திராவிட இலக்கியமொழி பழந்தமிழ்.
வருங்காலத் தென்னகத்தில் தென்னகமக்கள் தொல்காப்பியம், முப்பால், சங்க இலக்கியம் ஆகிய பழந்தமிழ் இலக்கியத் தொகுதியைத் தமிழர்க்குரிய இலக்கியம் என்று விட்டுவிடுவது பேதமைமிக்க செயலாகவே கருதப்படத்தக்கது. ஏனெனில் கடைச் சங்க இலக்கியத்திலேயே புலவர்கள் இன்றைய தமிழகத்திலுள்ள புலவர்கள் மட்டுமல்ல - ஈழம், மலையாளம், கன்னடம், ஆந்திரம் ஆகிய எல்லாப்பரப்புகளிலுமுள்ள புலவர்களும் உள்ளனர். ஒவ்வொரு நாட்டுக்கும் மொழிக்கும் உரிய தேசிய கவிஞர்களை, கம்பனின் மூதாதையை, எழுத்துக்களின் முன்னோனை, கம்பனின் மூலமுதல்வனை, திக்கனின் மரபுக் கொடித் தலைவனை கம்பனிடம் காணலாம். பாடப் பட்டவர்களுள்ளும் எல்லா மொழியில் முதல்வரும் உண்டு.
தமிழில் கி. பி. 7-ம் நூற்றாண்டுவரை உள்ள இலக்கியத்தைத் திhவிடத்தேசிய இலக்கியம் பெற்றும்; கி. பி. 7-முதல் 12-ம் நூற்றாண்டு வரை உள்ள இலக்கியத்தை இந்தியா அல்லது கீழ் திசைப் பொதுப் பேரிலக்கியம் என்றும்; 12-ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட இலக்கியமே தாய் மொழிக்காக இலக்கியம் என்றும் கூறியதாகும். திராவிடப் பேரிலக்கியம் உலகில் தமிழினத்தவர் பெயர் நாட்டுப் பேரிலக்கியமாகும். இரண்டாண்டு காலப் பேரிலக்கியம் இந்தியாவில் நாகரிகம் பரப்பிய பேரிலக்கி யமாகவும், மூன்றாம்கால இலக்கியமே தாழ்மொழிக்குப் பெருமை தரப்போதிய பேரிலக்கியமாகவும் அமைந்துள்ளன எனலாம்.
முரசொலி பொங்கல் மலர் 1957
பொங்கு தமிழின் பொங்கல் விழா
முப்பாலும் முப்பழமும் முத்தமிழும் பொங்க
முத்தமிட முந்துகின்ற முத்தமுறுவல்சேர்
செம்பவள ஒண்துவர்வாய்ச் செல்வங்களை ஏந்தி,
செங்கரும்பும் வெண்கரும்பும் சேரத்திளைப்பவென,
சேயிழை நங்கையரும் செம்மலரும் கூடி
கொந்தணவு சந்தனமும் கொஞ்சுநறுமலரும்
சந்தமுறு குங்குமமும் தவழுறும் தோளினராய்,
கலைநிறை உள்ளமொடு களைநிலவும் முகத்தினராய்,
மஞ்சளும் இஞ்சியும் மலர்தரும் செந்நெலும்
ஏலம், கிராம்பு, சாதிக்காய், சாதிபத்திரி,
நிறைநாழியது நிரம்பிக்குலை வாழைஇலைபொழிய
முக்கனியும் பாகும் முதிர்தேனும் வாயூற,
நாடு செழிக்க நலம் மழைபொழிய
ஆறு குதித்தாட அருவிநீர் பாய்ந்தோட
அருங்கழனி நெருங்குகதிர் மணிகள் அசைந்தாட
உழவும் தொழிலும் ஓங்குவாணிகமும்
விழைவில்பெருகி விழாவெடுத்து விண்ணேற,
கங்கை கொண்டு வாளிமயம் தருக்கடக்கிஈழம்
கடாரம் யவனம் காம்போகம் நிறைகொண்ட
ஏடார்ந்த வாழ்வின்றும் பீடார் தரப்பொங்க,
நல்லண்ணா நல்லதம்பி நல்லதங்கை நான்மரபு
நாளும் திளைத்து நாற்றிசையும் புகழ்பரப்ப
ஆடுவிழாப் பாடுவிழா திராவிடத் திருவிழாவாய்
வாடா இனத்தின் வளம் கொழிக்கமுந்நீர்
முத்திசைச்சூழ முழங்குக விடுதலையே!
‘பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!’
‘பொங்கலோ பொங்கல்!’
‘பால் பொங்குக, பொங்குக பால்!’
’முப்பாலும் முப்பழமும் முத்தமிழும் பொங்க, முத்தமிட முந்துகின்ற மூத்த முறுவல் சேர், செம்பவள ஒண்துவர் வாய்ச் செல்வங்களை ஏந்தி, செங்கரும்பும் வெண் கரும்பும் சேரத்தளைப்ப வெனச் சேயிழை நங்கையரும் செம்மலரு கூடி, மஞ்சளும் இஞ்சியும் மலர் தரும் செந்நெலும், ஏலம், கிராம்பு, சாதிக்காய், சாதிபத்திரி, கொந்தணவு சந்தனமும் கொஞ்சு நறுமலரும் நிறை நாழியது நிரம்பிக் குலை வாழை இலை பொழிய, முக்கனியும் பாகும் முதிர் தேனும் வாயூற, கலை நிறை உள்ளமொடு களை நிலவு முகத்தினராய், ஆடுவிழாப் பாடுவிழாத் திராவிட திருவிழாவாய் நாடு செழிக்க, மழை பொழிய நல்லண்ணா நல்லதம்பி நல்லதங்கை நான் மரபு, நாளும் திளைத்து நாற்றிசையும் புகழ் பரப்ப, ஆறு குதித்தாட அருவி நீர் பாய்ந்தோட, ஆடு கழனி அடர்மணிகள் அலைந்தாட வாடா இனத்தின் வளம் கொழிக்கும் முந்நீர், முத் திசைச்சூழ முழங்குக விடுதலையே!
‘தமிழே தமிழர் ஆட்சிமொழி!’
‘தமிழ் நாடு தமிழருக்கே!’
‘திராவிட நாடு திராவிடருக்கே!’
மங்காத பண்புடைய பொங்கல் விழாவில், தமிழகமெங்கும் பொங்கித் தென்னகமதிரத் தமிழர் கொண்டாடும் விழா, பொங்கல் விழா.
பொங்கல் விழாவுடன் ஒத்த அறிவார்ந்த, கலையார்ந்த, பண்பார்ந்த இன விழாக்கள் பல பண்டைத் தமிழரிடையே நிலவியிருந்தன. அவற்றுள் ஒன்றே தமிழரிடம் இன்னும் தளர்வின்றி நடைபெறுகிறது - அதுதான் பொங்கல் விழா, தமிழ் விழா, தமிழின விழா. உழவும் தொழிலும் ஓங்கிய வாணிகமும், கங்கை கொண்டு வாளிமயம் தருக்கடக்கி, ஈழம், கடாரம், யவனம், காம்போகம் திறைகொண்ட ஏடார்ந்த வாழ்வு பீடார்ந்த குழல் பொங்க, திராவிட இன விழா!
இதனுடன் ஒப்பான, இதன் பழமையுடன் ஒத்த பழமையு டைய மற்றொரு விழா, திருவோண விழா. இது மலையாள நாட்டில் நடைபெறுகிறது. அந்நாட்டவர் இனவிழா, தேசிய விழா அது. சிறுவர் சிறுமியர், இளைஞர் நங்கையர் புத்தாடையுடுத்தி, பூம்பந்தரிடையே பொன்னூசல் ஆடும் விழா இது! இன்று நான்காகப் பிரிந்து தமிழகம், கேரளம், கருநாடகம், ஆந்திரம் எனச் சிதறுற்று வாழும் தென்னகம் ஒன்றாக, இன்று சாதி சமயச் சழக்கு டன் மறுகும் தென்னக வாழ்வு. ஒரே இன வாழ்வாகக் கொண்டு திராவிடத்தை ஒரே குடைக்கீழ் ஆண்ட பண்டைத் திராவிடச் சக்கரவர்த்தியான ‘மாவலிவாணன்’ ஆண்ட நல்லாட்சியின் நினைவாகவே அவ்விழாக் கொண்டாடப் படுகிறது.
இவ்விரு விழாக்களின் தனிச் சிறப்பு வாய்ந்த பெருமைகளில் சில பலவற்றை நாம் கிறிஸ்துமஸ் பண்டிகை, ஈதுப் பெருவிழா ஆகிய ஏனை உலக விழாக்களில் காணலாம். தமிழின நாகரிக ஒளி, உலகெங்கும் மனித நாகரிகமாகப் பரவிச் சுடர் வீசியமைக்கு இது ஒரு சான்று. வட பெருமண்டலங்களில் பனி மூடி இலை தழைகள் யாவும் தம்முள் தாம் அடங்கிய காலத்திலும் வாடா மலர் தேடி, வளமான பசுங்கிளை மரம் தேடி, இன்பக் குடை மரம் வைத்துக் குடும்பத்தில், ஊரில் உடன் பிறப்புரிமையுடன் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகை, பண்பில் தமிழ்விழாவுடன் ஒத்த உடன்பிறப்புப் பண்புடைய விழாவே.
பண்டு உழவர் விழாவாக உலகில் கொண்டாப்பட்டு, இன்று தொழிலாளர் விழாவாகப் புது உரம் பெற்று நடக்கும் மேவிழா, மண உரிமை மைத்துன விழாவாகக் கொண்டாடப் படும் ஏப்ரில் விழா ஆகியவையும் தமிழ் விழாவுடன் ஒத்த பண்புடையவைதாம்.
உலகெங்கும் பண்புக் கிளைவிட்டு, அதே சமயம் உலகிலும் சரி, தமிழகத்திலும் சரி, முற்றிலும் சரியாக உணரப்படாத இப் பண்புடை விழாக்களுக்கு மீண்டும் பண்பூட்டி தமிழினத்தில் மட்டுமன்றிச் சூழினங்களிலும், உலகிலும் புது மலர்ச்சியூட்ட வேண்டிய விழாத் தமிழ் விழாவே. அதன் பண்பு மரபுகளில் சிறிது கருத்து ஊடாட விடுவோம்.
‘பொங்கும் மங்களம்
எங்கும் தங்குக!’
ஏதோ மணியடித்தால் போன்ற மெல்லெதுகை, இனிய சொற்களாக மட்டுமே இவை இன்று கருதப்படுகின்றன. அவற்றின் பொருள் தமிழுக்கே சிறப்புரிமையுடைய, ஆனால் உயிர் மரபு காணாத நிலையில், உலக மொழிகள் பலவற்றிலும் அப்பண்புத் தொடர்புடைய தொடர்ச்சிகளே இவை.
‘மங்களம்’ என்பது மங்காவளம். அதன் மற்றொரு வடிவாகிய ‘மங்கலம்’ என்பது ‘நாம் மங்கமாட்டோம்!’ என்று உறுதி கூறுகிறது. வாடாமலர், நித்திய மல்லிகையின் பண்பை அது நினைவூட்டுகிறது - ஆம், மொழிகளிடையே, பண்பு நிறைந்த தொன் மொழிகளிடையே கூட, தமிழ் ஒரு வாடாமலர், நித்திய மல்லிகை. சமஸ்கிருதத்துக்கும் கிரேக்க இலத்தின் மொழி களுக்கும், எகிப்திய சால்டிய, சுமேரிய ஏலமிய, சிந்துவெளி வாழ்வுகளுக்கும் முன் பிறந்து, அவை எலாம் மங்கி மறுகி, வாடி வதங்கி, தம் வாழ்வும் தம் பிள்ளை வாழ்வும், பிள்ளை பிள்ளை வாழ்வும் மறக்கப்பட்ட பின்னரும் வாழ்கிறது.இன்னும் புதுவாழ்வு அவாவி நிற்கிறது. மீண்டும் ஒரு புத்துலகைப் படைக்கவல்ல பண்பார்ந்த திராவிட இயக்கம் என்னும் தட்டில் திராவிட முன்னேற்றக் கழகமென்னும் பனிநீர்ச் செம்பேந்தி, புதுத் தமிழ்ப் புத்தமிழ்த்தேனாறும் புதுக்கலை மலர்கள் தாவ எழுங் கால்களுடன் மனித இனத்தைப் புன்முறுவலுடன் நோக்கி நிற்கின்றது!
‘பொங்குதல்’ உலக இனங்களில் தமிழினம்மட்டுமே கண்ட வளமார் கனவுக்கு - வாழ்க்கைத் தத்துவத்துக்கு - கலை இலக்குக்கு ஒரு சான்றாக விளங்கும் சொல். பொங்குதல் நிறைவுமட்டுமல்ல, நிறைந்து வழிவதுமட்டுமல்ல. இதை நாம் பொதுவாகக் கவனிப்பதில்லை. வெளியிருந்து ஊற்றி நிறைந்து வழிவதையும் நாம் உவம உருவில் பொங்கி வழிவதாகக் கூறலாமானாலும், பொங்குதல் என்ற சொல் ‘சோறு பொங்குதல்’, ‘தேறல் பொங்குதல்’ (தோசை மாப்பொங்குதல்) ஆகிய இரண்டு இயைபியல் நிகழ்ச்சிகளுக்கே (Chemical action) தனிப்பட வழங்கப்படுவது. இவற்றுள் தேறல் பொங்குதல் இயற்கைப் பொங்குதல், உயிர்ப் பொங்கல் (Natural and Organic Efferviscence) - இது குளிர் நிலையிலேயே நிகழ்வது. ஆனால் சோறு பொங்குதல் செயற்கைப் பொங்கல், வெய்த்தின் செயலால் நிகழ்வது. இயற்கையின் செயலாக அமையும் ‘அமைதல்’ என்பது இவ்வாறு ‘ஆக்கி அமையும்’, அதாவது ‘ஆக்கி அமைக்கப்படும்’. சமயத்தில், ‘சமை’யல் ஆகிறது. இயற்கையின் ’அமைதல் பொங்கலைக் குறிக்க தமிழர் ஒரு ’சமைதல் பொங்கலை’ உருவகப் படுத்திக் கொண்டாடினராதல் வேண்டும்.
பொங்கல் விழாவும் கிறிஸ்துபண்டிகையும் கிட்டத்தட்ட ஒரே பருவத்தில், ஒரு பதினைந்து நாளே இடைவிட்டு நிகழ்வதை நாம் நினைவு கூர்தல் வேண்டும். தமிழகத்திலும் இது முன்பனி பின்பனிப் பருவத்தின் நடு நாள். ‘தையும் மாசியும் வையகத் துறங்கு’ என்ற நீதிநூலுரை இதை நமக்கு நினைவூட்டுகிறது. மேலை நாடுகளிலும் இது உறை பனிப்பருவத்தின் (Winter) தொடக்கக் காலமே. உலகம் பனித்துயில் கொள்ளும் காலத்திலே, ஒரு விழாக்களும் துயில் புது வாழ்வுக்குரிய காலம், இன வாழ்வின் மாளா உயிர் புதுத்துடிப்புடன் கருவிலெழுங்காலம் என்பதைக் குறிக்கவே இவ்வுயிர் விழாக்களை அறிவார்ந்த தமிழினமும், அதன் பண்பளாவிய பிற இனமும் கொண்டாடுகின்றன என்னலாம். இரு மரபுகளின் உயர் சின்னங்களும் இதைக் குறிக்கின்றன.
ஆனால் பொங்கற் சின்னம் தமிழருக்கு மட்டுமே உரிய தனிச் சிறப்பு.
செயற்கைச் சமயலில் இயற்கைப் பொங்கலுக்குரிய பொருள்கள். பண்புகளெல்லாவற்றையும் ஊட்டினர் தமிழர்.
இயற்கையில் பொங்கும் பண்பு - உயிர் நுரையுடன் உயிரணுக்கள் வளமாக்கிப் பொங்கும் தேறல் பண்பு - உடைய பொருள்கள் எவை?
பால் - ஆன் பால் மட்டுமல்ல, அரிசிப்பால்.
தேன் - தேறலின் பண்புடையது.
வெல்லம் - சருக்கரை. அதற்குரிய கருப்பஞ்சாறு. அச்சாறு தரும் கரும்பு.
பாலின் பொங்கல் வளமாகிய நெய்.
பொலிவு தரும் மஞ்சள்.
மணமும் சுவையும் தரும் இஞ்சி.
பொங்கல் நறுமணத்துடன் அடையும் ஒளி மணம் - கருப்பூரம் - புகைமணம் - நறும்புகைகள்.
இவற்றின் கலப்பாய் வரும் பலவகை இனிமை இன் கூட்டு - பல வகை மண இன் கூட்டு - பல வகை உடல்நல, உளநல இன்கூட்டு - பலவகை அழகின் இனிய கூட்டு எல்லாம் ஒரு சேரக் கண்டு, அதைத் தாம் விழையும் இன வாழ்வின் விழாவில் - மலர்விக்க அவாவினர் தமிழர்.
இயற்கைப் பொங்கல் ஊற்றி பொங்கி வழிதலல்ல, உள் நின்று அகமலர்ச்சியாக, உயிர் மலர்ச்சியாகப் பொங்கி வழிவதாகும்.
மங்காது, என்றும் வாடாது, உயிர் மரபறாது வாழும், வாழ வேண்டுகிற வாழ்வு தமிழ் வாழ்வு. அதில் இஞ்சி மணம் ஏறலாம். ‘இந்தி வாடை ஏறி, ’சமஸ்கிருதத்தின் உயிரற்ற பண்பு கலந்து விடப்படாது’.
அது சமஸ்கிருத வாணரின் ஆரியத்தின் சொத்தை மரபு கலந்து ஊழ்ந்துவிடக் கூடாது. தமிழ்ப் பண்பும் அதனுடன் ஒத்த இஞ்சியினத்தவராகிய பண்பார்ந்த அயலவர் மரபினர் தரும் எச்சரிக்கையை பெற்று - உயிர்தரவல்ல, ஆனால் பொங்காத கிரேக்க உரோம, எகிப்திய சாலடிய, ஆங்கில, ஐரோப்பிய அமெரிக்க உருசிய மரபுகளில் நலங்கொண்டு அலம் விண்டு - ஊழி கடந்து, ஊழி நிலவி, ஊர் கடந்து, ஊழி உலகுக்குப் புந்தி வாழ்வுகள் அளிக்க வேண்டும்.
இயற்கையில் உயிர்ப் பொங்கல் மரபுகள் கண்டது போலவே, இயற்கையளாவிய மனித வாழ்வின் இன வாழ்வில், இயலில், கலையில் இலக்கியத்தில், சமுதாய ஆட்சி மரபுகளில், தேசிய வாழ்வுகளில் உயிர்ப் பொங்கல் மரபுகள் கண்டு தானுண்டு உலகுக்கும் அளிக்க வேண்டும்.
‘நாடென்ப நாடா வளத்தன’
என்ற வள்ளுவர் மொழி பொங்கல் மொழி. பொங்கல் மரபினை மனித இனக் கனவு கடந்த தமிழ்க் கனவையும் கடந்தது. இந்த வள்ளுவக் கனவு. ஏனெனில் நாம் இயற்கையில் பெரும் பொங்கல், காணும் பொங்கலே. இது கடந்து, காணா பொங்கலையே வாழ்வில் அவாவினர் தமிழர். ஆனால் இது அவர்கள் நாடிய பொங்கல் மட்டுமே. ஆனால் வள்ளுவரோ ‘நாடாப் பொங்கல்’ ‘நாடா வளம்’ நாடுகிறார். ’காணா’ததைக் காண கனவுகாண். அத்துடன் நில்லாதே. நேற்றுக் கனவு காணாததை இன்றும், இன்று கனவு காணாததை நாளையும் கனவு காண் என்கிறார். கனவில்கூட என்றும் புதுமை, என்றும் புதிதாக வளர்ந்து பொங்கும் புது வளம், புது வளர்ச்சி, புதுப்பொங்கல் கனவுகள் வளம் பெறவேண்டும். அப்புத்தவா ஊட்டி வளர்ந்து, புது உயிர்த் துடிப்புகள் இயங்கும் பொங்கல் நாடே நாடு, மற்றதெல்லாம் மங்கல் நாடு, ஆரிய நாடு என்கிறார் வள்ளுவர்.
‘வட்டத் தொட்டிவாணர்’ காலஞ் சென்ற டி. கே. சிதம்பர நாதனார் தமிழர் ‘அப்பளம்’ என்று கூறும் மலையாள நாட்டாரின் ‘பப்படத்தை’ மலையாளிகள் அல்லது பண்டைத் தமிழின மரபினர் கண்டுபிடித்த மற்றொரு ‘பொங்கல் மலர்ச்சியின்’ சின்னம் என்று கூறி இனிது விளக்குவர். எந்தக் கூலத்தை அல்லது தானியத்தை அல்லது அவற்றின் தரபை வறுத்தாலும் அவை பொரியுமேயன்றி மலரமாட்டா… அரிசி, சோள மாவு ஆகியவற்றின் தன்மைகூட இதுவே. ஆனால் உமியுடன் கூடிய நெல், சோளம் ஆகியவற்றை வறுத்தால், ‘மலர்ந்து பொரியும்’. இந்த மலர்ந்த பொரியில் சுவையும் உண்டு, ஊட்டச் சத்துக்களும் கெடுவதில்லை என்று கண்டனர். தமிழர் அதே சமயம் இவற்றிலும் உயிரூட்டச் சத்துடைய பயறு வகைகள் மலர்வதில்லை. எனவே நெல்லும், பயறு வகையும் கலந்து, தக்க இனயியல் சரக்குகள் சேர்த்து, ஒன்றின் மலர்ச்சியும் மற்றதன் உயிரூட்டமும் இயைந்த ஒரு பொருளைப் பண்டை மலையாளிகள், தமிழினத்தவர் கண்டுபிடித்தனர் - அதுவே பப்படம்.
பப்படம் செய்யும் ஒரு தனி வகுப்பினர், இன்னும் மலையாள நாட்டில் இருக்கின்றனர். அவர்களுக்கு இணையாகச் சுவையுடன் ஏனையோர் அவர்களிடமிருந்து கற்றும் செய்ய முடிவதில்லை.
இவர்கள் தென் கன்னட மாவட்டத்திலிருந்து எங்கும் சென்றவர்களே,
இன்று புதிதாக எங்கும் பரவி வரும் உணவு விடுதிகள் ‘உடுப்பி’ மரபின என்பதையும், மகாபாரத காலத்திலிருந்தே, இப்பகுதியினர்தான் சமையல், சூதாட்டம், குதிரை ஏற்றம் ஆகிய கலைகளில் உலகின் கரைபோன விற்பனராயிருந்தனர் என்பதையும் நினைவு கூர்தல் வேண்டும். பப்படத்துக்கும் மலையாளிகளின் கலைத் திறத்துக்கும் வட்டத் தொட்டிவாணர் கண்ட புது விளக்கம், தமிழர் பொங்கற் கலைக்கும் கருத்துக்கும்கூட உரியதேயாகும்.
நிறைதல், வழிதல், உண்ணின்று உயிர்மரபில் செழிவுற்று வளம் பெற்று நிறைந்து வழிதல், உயிர் மரபில் பிறந்து உயிர் மரபில் வாழ்வாக வளர்தல், தங்கி நிலையாக வளர்தல், மென்மேலும் நில்லாமல் விரைந்து ஒன்று பத்து நூறாக, பதினாயிரம் கோடி நூறு கோடியாகப் பெருகிக் கொண்டே செல்லுதல், புதுமை பழமை யாகிப் புதுப்புதுப் புதுமை நாடுதல் - இதனை பொருளையும் இயற்கையில் கண்டு, செயற்கையில் உருவாக்கி, கருத்துலகிலும் அதன் இணை பண்பு கண்ட பண்டைத் தமிழரின் பெருமையையும் அறியும் பெருமை, காணும் பெருமைகூட ஆரியத்தால் மட்டும் இன்றைய தமிழகத்துக்கோ அதனுடன் மறுகும் உலகுக்கோ இல்லை. இவற்றை அறியவும் காணவும் மட்டுமல்ல, அறிந்து புது மரபாக்கிப் புது வளம், புதுப் பொங்கல் காணவும் உலகுக்குக் காட்டி மீண்டும் உலகு வளர்க்கும் தாயினமாகவும் தமிழர், தமிழினத்தவர், அவர்கள் பழமரபுடன் வாழ்ந்து புது மரபுடனும் ஊடாடும் தென்கிழக்காசிய மக்கள் கிளர்ந்தெழுவார்களாக!
முப்பால் பொங்குக!
முத்தமிழ் முழங்குக!
முப்பழம் பொலிக!
மூவாத் தமிழினம், திராவிட இன வாழ்வு பொங்கல் வளமுடன் மலர்ச்சியுறுக!
தென்றல் பொங்கல் மலர் 1958
மொழிப் போராட்டம்
தாயின் மடியிலிருந்து குழந்தைகள் தந்தையின் தோளுக்குத் தாவும். ’அங்கிருந்து திரும்பவும் தாயின் மடியில் நழுவும். குழந்தை யைப் பெற்ற தாய் தந்தையர் இது காரணமாகவே அடிக்கடி விலகியிருக்க முடிவதில்லை. இயல்பாக அப்படியிருக்கவும் அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் இயல்பான சந்திப்புக்கு - சந்திப்பு அவாவுக்கு குழந்தை ஒரு இனிய சாக்கு ஆகிறது. அதன் பாசத்தில் அவர்கள் பாசம் - வாழ்வுப் பயிர் வளர்கிறது.
மொழி நமக்குத் தாயின் மடி; நாடு நமக்குத் தந்தையின் தோள். இரண்டு வாழ்வும் ஒன்றாய் இருந்தால்தான், நாட்டின் குழந்தைகளாகிய மக்களின் தேசிய வாழ்வு இனிதாய் இயங்கும். குழந்தையைப் பெற்ற பின் பிரிய நேரும் தாய் தந்தையர் வாழ்வு போல, மொழிவாழ்வும் நாட்டு வாழ்வும் அரசியல் காரணமாக முரண்பட்டிருந்தால், மக்கள் சில சமயம் தாயற்ற - சில சமயம் தந்தையற்ற - பல சமயம் தாயும் தந்தையுமற்ற துணையில்லாப் பிறவிகளாகத் துவள நேரும். இந்நிலையடைந்த மக்கள் உலகில் உண்டு. 19-ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டிலுள்ள அல்சாஸ் மாகாண மக்கள் இந்நிலையில் ஏங்குற்றனர்.
1871-ம் ஆண்டில் பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் நடந்த நீடித்த போராட்டம் முடிவுற்றது. போரில் ஜெர்மனி வென்றது. பிரான்சு தோற்றது. போர் முடிவில் வெற்றிபெற்றவரின் ஈட்டி முனைமீது செய்யப்பட்ட ஒப்பந்தப்படி, பிரான்சு அல்சாஸ் மாகாணத்தை ஜெர்மனிக்கு விட்டுக் கொடுக்க வேண்டி வந்தது. அல்சாஸ் மக்கள் தம் தாய்மொழி வாழ்வை மட்டும் துணைக்கொண்டு, தாயுடன் தந்தை வீட்டிலிருந்து வெளியேற்றப் பட்டு, அடிமையாக விற்கப்பட்டவர் நிலையில், தந்தையர் நாடாகிய பிரான்சிலிருந்து பிரிந்து, ஆதிக்க அயலாரான ஜெர்மனியர் காலடியில் விழவேண்டி வந்தது.
அல்சாஸில் ஜெர்மனியர் முதல் முதல் எடுத்துக் கொண்ட அரசியல் நடவடிக்கை தாய்மொழியின் கழுத்தில் வாளைப் பொருத்துவதே! பள்ளி, கல்லூரிகளில் பிரஞ்சு மொழி போதனை உடனே நிற்க வேண்டும்; ஆட்சி மொழியான ஜெர்மன் மொழியே கற்பிக்கப்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தனர். ஊர்தி நிலையங்கள், தந்தி அஞ்சல் படிவங்கள், வாணிப விளம்பரப் பலகைகள் யாவும் பிரஞ்சு மொழியில் மாற்றும்படி கண்டிப்பான உத்தரவுகள் பிறந்தன. அல்சாஸ் மக்களில் எதிர்த்தவர் பதவியிழந்தனர். முணுமுணுத்தவர் வாழ்விழந்தனர். அல்சாஸ் வீரர் இருந்த இடங்களில் ஜெர்மானியர் அல்லது சமய சஞ்சீவிகளான அல் சாஸியர் ஒட்டிக்கொண்டனர்.
மாணவர் வாழ்வில் - அண்மையில் நம்முடைய நாட்டில் இந்தி மெல்லப் புகுவதுபோல ஜெர்மன் மொழிபுகத் தொடங்கியிருந்தது. ஆனால் மெல்ல நகர்ந்த உறுதி திடுமென வீறிட்டுக் கொண்டு பாய்ந்தது. ஆசிரியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நாள் வரை தவணை தரப்பட்டது. அதற்குள் போதனையை ஜெர்மன் மொழியாக மேற்கொண்டு விடவேண்டும். அல்லது ஆசிரியத் தொழிலுக்கே முழுக்குப் போட்டு விட்டுப் புதிய ஜெர்மன் ஆட்சிக்கு வழிவிட வேண்டும் - என்ற கட்டாய நிலை ஏற்பட்டது. ஆசிரியர் ஹாமெலுக்கு இத்தகைய இடுக்கிப் பொறித் தேர்வுக்குக்கூட வழியில்லை. ஏனெனில் அவர் பிரஞ்சு மொழி ஆசிரியர் அவருக்கு விலகுவதைத் தவிர வேறு வழியில்லை. அவர் தம் பாடம், தம் வகுப்பு, தம் பள்ளி ஆகியவற்றிடமிருந்து விடை பெறும் நாளை எதிர்நோக்கியி ருந்தனர்.
லூயி பிராஸ்ஸார்ட் படிப்பில் மந்தமான சிறுவன் - எல்லா வகுப்புகளையும் போலவே பிரஞ்சு வகுப்புகளையும் அவன் வெறுத்தவன். பிரஞ்சுப் பாடம் காலையில் முதல் பாடமாய் இருந்தது. அவன் பெரும்பாலும் அதற்கு நேரம் தாழ்ந்தே சென்று வந்தான். அதைப் போலவே அன்றும் வரம்பு மீறிக் காலம் தாழ்ந்து விட்டது. அவன் பரபரப்புடன் பள்ளியின் மதில் வெளிதாண்டி வகுப்பறையை நோக்கி வந்து கொண்டிருந்தான். பள்ளி வாழ்வில் தனக்கு எப்போதும் இருந்து வந்த நெருக்கடியில் தன் நாட்டுக்கு வந்திருந்த நெருக்கடியை அவன் மறந்திருந்தான். ஆனால் அந்த நெருக்கடி வழியிலேயே முன் நின்று காட்சியளித்தது.
ஆம்; திரு. ஹாமெல் அப்போதுதான் வகுப்பை நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆனால் அவர் உடுத்தியிருந்த ஆடை அவனைத் திடுக்கிடச் செய்தது. பள்ளியின் ஆண்டு விழா நாளில் கூட அவர் அவ்வளவு உயரிய ஆடை உடுத்தியதில்லை. அத்தகைய சிறப்பான உடையுடன் அவர் காணப்பட்டார். நேரமாகி விட்டபோதிலும் அவர் நடந்து வந்தார். அவர் நடையில் ஒரு கம்பீர அமைதியும் சோகமும் கலந்திருந்தது.
அவர் தோற்றம் அவன் உள்ளத்தைக் கலக்கிற்று. ஆம், அன்று அவரது ஆசிரியப் பணியின் கடைசி நாள். அன்றும் பிந்தி வந்ததற்காக அவன் மனம் அவனையே சுட்டது. மனமார வருந்தி மன்னிப்பு கேட்க அவன் வாய் அசைந்தது. ஆனால் அவர் அவனை அன்புடன் அழைத்தார். “நீ வந்தது கண்டு மகிழ்கிறேன் லூயி! எங்கே இன்று உன்னைக் காணாமல் போய் விடுவேனோ என்று ஏங்கினேன். இன்று எல்லோருக்கும் முன்பே நான் வந்திருக்கிறேன். மாணவர்கள் எல்லோரும் வந்து விட்டார்கள். உன்னை எதிர்பார்த்தே வாயிலில் நின்றேன். எல்லா மாணவர்களையும் இன்று என் கண் குளிரக் கண்டு பிரியா விடைபெற்றுச் செல்லவே நான் விரும்புகிறேன்!” என்றார்.
லூயியின் கண்களில் ஒரு கணம் நீர் நிறைந்தது. இவ்வாறு விழுந்த ஒரு சொட்டு அவன் பொத்தானற்ற சட்டையில் விழுந்தது. அவனால் பேச முடியவில்லை. அவன் குரலும் கம்மிற்று. ஆனால் பேச்சு அப்போது தேவைப் படவில்லை. அவன் கண்ணீரே பேசி விட்டது. அவன் பிடரி மீது கையை வைத்துத் தட்டிக் கொடுத்த வண்ணம் ஆசிரியர் அறைக் கதவைக் கடந்தார்.
வகுப்பில் இருக்கைகள் இடங்கொள்ளவில்லை. எல்லா மாணவர்களும் வந்திருந்தனர். ஆனால் வகுப்பில் இன்று மாணவர்கள் மட்டும் இல்லை; பெற்றோர்கள், கைக்குழவியை, ஏந்திய தாய்மார், கோவிலில் மணி அடிக்கும் ஓதுவார் முதல் ஏழை எளியார் யாவரும் சுவருடன் சுவராக நாற்புறமும் வரிசை வரிசையாகக் குழுமியிருந்தனர். அவர்களைப் பார்க்க அது பள்ளி வகுப்பாகக் காட்சியளிக்கவில்லை. கோயிலாகக் காட்சி தந்தது. அவர்களும் ஆடாமல் அசையாமல் நின்றது காண, அவர்கள் சுவரில் தீட்டிய சித்திரங்களோ அல்லது சுற்றிச் செதுக்கப்பட்ட சிலைகளோ எனத் தோன்றினர்.
எல்லையற்ற மோனம் ஆசிரியரை வரவேற்றது.
மாணவர் இருக்கைகளில் அமர்ந்தவுடன் மக்களும் நிலமீதே அமர்ந்தனர்.
ஆசிரியர் ஹாமெல் கண்களை மூடிக்கொண்டு ஒன்றும் பேசாது ஒரு கணம் நின்றார். ஆனால் அவர் கையில் விவிலிய நூல் இல்லை; பிரஞ்சுப் பாடப் புத்தகம் இருந்தது. பாடம் எடுக்கப் போவதைப் போல அதைத் திறந்தார். ஆனால் திறந்தவுடன் மூடினார். கடைசியாக அப்புத்தகத்தை திறந்து கடைசியாக மூட விரும்புவதுபோல அது காட்சி அளித்தது. பாட விளக்கமாகவும் அவர் எதுவும் பேசவில்லை; அவர் பேச்சு ஒரு கோயில் வழிபாடு போல இருந்தது.
"மாணவ மாணவி அன்பர்களே! உங்களிடமிருந்து - உங்கள் ஒவ்வொருவருடனுமிருந்து நான் பிரியா விடைபெற்றுக் கொள்ளும் நாள் இது! அந்த வருத்தம் எனக்குப் பெரிதுதான். ஆனால் என் வருத்தம் பெரிதல்ல. இதோ உங்கள் தாய் தந்தையர் - என் தாய் மொழிக்கும், என் தாய்நாட்டுக்கும் உரிய இவர்கள் - இதோ இன்று மாணவராக வந்திருந்து இந்நிலையில் பங்கு கொள்கின்றனர். அவர்களும் நீங்களும் நானும் நம் தந்தையர் நாட்டை விட்டுப் பிரிந்து சில நாளாகின்றன. தந்தை நீங்கியது முதல் உடனிருந்து நம் நல்வாழ்வுக்கு உழைக்கும் தாய்போல நம் தாய்மொழி மட்டும் நம்முடனிருந்தது. இப்போது தாயும் நம்மை விட்டு நீங்குகிறாள். அந்தத் துயரம்கூடப் பெரிதன்று; நான் இப்போது உங்களை விட்டுப் பிரியும் துயரம்!
“என் உயிர் இப்போது என்னை விட்டுப் பிரிந்தால்கூட நான் இச்சமயம் இதற்குமேல் துயரப்படமாட்டேன். ஏனெனில் உயிரினும் பெரிது தந்தையர் நாடு! தந்தையர் நாட்டின் உயிர் மூச்சுத் தாய்மொழி - நாட்டு மொழி! குழந்தைகள் போலிருக்கும் நமக்கு இன்று துயர் பெரிதுதான். ஆனால் இன்று நான் நம் துயரின் முழு அளவும் அறியமாட்டோம். துயரப் புயல் இப்போதுதான் வீசத் தொடங்கியிருக்கிறது. குழந்தை வளர வளரத்தான், தாய் அணைப்பும் தந்தை ஆதரவும் இல்லாத் துயரை எண்ணி எண்ணி வருந்தும்! நம் முன்னோர்கள் - நம் உயிர் மரபினர் - இந்த நம் துயரத்தின் தீயில் பொசுங்கி மடிய இருக்கின்றனர். மீண்டும் உயிர் பெறும் வாழ்வுப் போராட்டத் துக்குத் தேவையான மன உறுதியும் உடல் வலிமையும் அவர்களுக்குக் குன்றாமல் - குறையாமல் ஏற்படட்டும்!” என்றார்.
கோயிலில்கூட தம் விளையாட்டை மறவாத சின்னஞ் சிறுவர்கள் அன்றைக்குத்தான் முதல் முதலாக என்னவென்றறிய முடியாத ஒரு மோன வழிபாட்டில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் மீண்டும் தொடர்ந்தார்:
"நம் தாய் நாடு புகழ் மிக்கது. பண்பாட்டுக்கும் நாகரிகத்துக்கும் உலகெங்கும் பேர் போனது. ஆனால் அப்புகழுக்கு உயிராயிருந்தது நம் மொழி - அம்மொழிப் பண்பு! அது நம் முன்னோர் நமக்கு விட்டுச் சென்ற கருவூலம். உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதென்று காட்டிய மொழி நம்மொழி! சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முத்திறப் பண்புகளுடைய உலக மொழிகளிலெல்லாம் தலையாய மொழி அது. அதன் இலக்கியப் பெருமையினின்றும் இன்று நாம் பிரிக்கப்படுகிறோம். ரஸீன் நம் கண்களில் வருவித்த வீறு - மோலியர் நம் கண்களில் தருவித்த புன்னகை ஒளி - ரூசோவின் ஆர்வக் கனிவு - வால்தேரின் அறிவார்ந்த முழக்கம் - தூமா திறந்து காட்டிய மாய உலகம் - சோலா தந்த பரபரப்பு - ஹ்யூகோவின் அழகுமிழ் காட்சிகள் - உள்ளத்தை உருக்கும் ஓவியங்கள்! ஆம்; இவை இனி நம் கண்முன் நடமாடக் கூடாது. உள்ளத்துக்குள் ஒடுங்கி நாடி நரம்புகளுக்குள் தான் தெறித்தோட வேண்டும்.
“ஆனால் எனக்கு நம்பிக்கை உண்டு. வருங்கால பிரான்சு அல்சாஸை மறந்து விடாது; வருங்கால அல்சாஸ் உங்களை மறந்துவிடாது! நீங்களும் - தாய் மடியிலிருந்தபோது அறிந்த தாய்ச் சொல் அருமையைவிட இனி அதிகமாக அறிவீர்கள். நம் தாய் மொழியின் மேன்மையை! என்னையும் மறக்கமாட்டீர்கள் என்ற உறுதி எனக்கு உண்டு. இதுவே என் கடைசியான அன்பு வேண்டுகோள் - மனமார்ந்த என் வாழ்த்து!”
ஆசிரியரின் உருவம் லூயியின் கண்களில் - மாணவ மாண வியர், பெற்றோர் கண்களில் - ஒரே செம்மை பசுமை கலந்த மங்கலொளியாகத் தான் தெரிந்தது! கண்ணீர் அவரை அவ்வாறே தோன்றிடச் செய்தது.
அவர் கரும்பலகை அருகே சென்றார்.
அவர் என்ன எழுதப்போகிறாரோ என்று யாவரும் பேச்சு மூச்சின்றிப் பார்த்திருந்தனர்.
‘விவேலா பிரான்சு!’ - வாழ்க தாய்நாடு!
‘விவேலா பிரான்சே!’ - வாழ்க தாய்மொழி!
இந்த இரண்டு வாசகங்கள் கரும் பலகை முழுவதையும் நிறைத்தன. அவற்றை எல்லோரும் நோக்கியிருந்தனர். அச்சமயம் ஆசிரியர் சரேலென்று வெளியேறி விட்டார். மாணவர், பெற்றோர் கண்ணீருடன் தம் கண்ணீரைக் கலக்கவிட அவர் விரும்பவில்லை.
ஆசிரியர் ஹாமெலைப்பற்றி அதன்பின் நாங்கள் வேறெதுவும் கேட்கவில்லை - அவர் உரிமையிழவாத வேறு நாடு சென்றிருக்கலாம் - அல்லது வேறு தொழில் செய்ய முற்பட்டிருக் கலாம்! அவரைப் பற்றி லூயியும் மக்களும் கேள்விப்பட்டது அவர் மறைவு ஒன்றையே! அன்று விடைபெற்றுச் சென்ற அவர் பணியிழந்ததற்காக வாடவில்லை; வருத்தப்படவில்லை; ஆவியிழந்து வாழ்ந்து அந்த ஆவியைப் பின்பற்றியே உடலை விட்டு ஓடினார்.
அந்தக் காட்சி மந்த மதியினனாகிய லூயி பிராஸ்ஸார்ட் வாழ்வை மாற்றிற்று.
அவன் பிரஞ்சு மொழிப் பற்றாளனானான். அதன் இலக்கியப் பேரொளிகளுள் ஒருவனானான். அல்சாஸில் தாய் மொழியின் விளக்கு அணையாமல் தன் வாழ்நாளில் பெரும் பகுதியில் காத்து வளர்த்து, தன் அறுபதாவது ஆண்டு நிறைவில் - நாற்பத்தேழு ஆண்டு அடிமை ஆட்சிக்குப் பின் - மீண்டும் அல்சாஸ் விடுதலை பெற்று பிரெஞ்சு மொழி வீறுடன் ஆட்சிக்கு வரும் நாள்வரை வாழ்ந்தான் அவன் அறுபதாம் ஆண்டு விழா நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சியாக, கலை விதையையும், விடுதலை விதையையும் தன் இள உள்ளத்தில் மாளா உருவில் பதித்த அப்பேராசிரியர் ஒரு நாளைய வாழ்வுக் காட்சியை அழியாச் சித்திரமாக்கிக் காட்டினான்.
நாம் தாயகத்துக்கு - தமிழகத்துக்கு, இத்தகைய ஹாமெல்கள், லூயிகள் ஆயிரமாயிரமாக - நூறாயிரம் நூறாயிரமாகத் தேவை! அறிவார்ந்த ஜெர்மன் வல்லூறைப் பின்பற்றி அறிவும் பண்புமற்ற இந்திக் கழுகு வட்ட மிடும் இந்த வேளையில் நம் பள்ளி, கல்லூரிகள் இத்தகைய ஆசிரியரை - மாணவரை - குளமான கண்களுடன் நாற்பத்தேழு ஆண்டுகள் போராடி அயல் மொழியை ஓட்டிய பெற்றோரைத் திரட்டுமாக!
வாழ்க தமிழ்!
வீழ்க ஆதிக்க அயல் மொழி ஆட்சி!
முரசொலி பொங்கல் மலர் 1958
உலகின் கட்டுரை இலக்கியம்
ஓடை, ஆறு, அருவி, நீர்வீழ்ச்சி; ஊற்று, கிணறு, குளம், ஏரி ஆகிய யாவும் நீரின் பல நிலைகள் - ஓடு நிலைகளும் தேக்க நிலைகளும் ஆகும். அதுபோலவே பாடல், காவியம், நாடகம்; கதை, அகலக் கதை (நாவல்), மணிக்கதை (சிறுகதை) கட்டுரை ஆகியவை இலக்கிய வகைகள் - செய்யுளிலக்கிய வகைகளும் உரைநடை இலக்கிய வகைகளும் ஆகும்.
இலக்கிய வகை ஒவ்வொன்றிற்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஆனால் எல்லா வகைகளின் சிறப்புக்களையும் சரிசம அளவில் கொண்டமைந்த துறை கட்டுரையே என்னலாம்.
பாடல் உணர்ச்சியைத் தட்டி எழுப்பும். கதை கவர்ச்சியூட்டும். மணிக்கதை கருத்துப் பிணிக்கும், சிந்தனையைத் தட்டி எழுப்பும். அகலக் கதையும் நாடகமும் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும். காவியம் இன வாழ்வைச் சித்தரிக்கும். ஆனால் இவற்றுக்கெல்லாமே தனித்தனிக் கட்டுக்கோப்பான வடிவம் உண்டு. இரு கரையுடைய ஆறு, ஓடை, சுற்று எல்லையுடைய கிணறு, குளம், ஏரி, மேல் கீழ் எல்லையுடைய கருவி, நீர்வீழ்ச்சி ஆகியவற்றை இவற்றுக்கு உவமையாகக் கூறலாம். கட்டுரையோ இலக்கியத்துக்குரிய பொதுக் கட்டுக்கோப்பன்றி, வேறு கட்டுக் கோப்பற்றது; அருவிபோன்ற நீரோட்டம், ஆறுபோன்ற ஆழ்திட்டுக்களை உடைய கடலையுமே அதற்கு உவமையாகக் கூறலாம். பாடலின் உணர்ச்சியை உரைநடைக்கும், உரை நடையின் தெளிவைப் பாடலுக்கும்; கதையின் கவர்ச்சியை அகலக் கதைக்கும் காவியத்துக்கும், காவியம் அகலக் கதை ஆகியவற்றின் சமூக இனப் படப்பிடிப்பைக் கதைக்கும், நாடகத்தின் விருவிருப்பை இவை யாவற்றுக்கும், இவையாவற்றின் அமைதியை அவற்றுக்கும்; செய்யுளின் கட்டுக்கோப்பை உரை நடைக்கும், உரைநடையின் தங்கு தடையற்ற ஓட்டத்தைச் செய்யுளுக்கும் பரிமாறிக் கொண்டால் ஏற்படும் முழு இலக்கியப் பண்பை நாம் கட்டுரை ஒன்றிலேயே காணலாம்.
கடலில் ஒரு கடல்போல, இலக்கியக் கலையின் அகல மளாவிய மைய அகலக் கலை இலக்கியம் என்று கட்டுரையைக் கூறலாம். அது மேற்கொள்ளாப் பொருள் இல்லை. ஏற்றுக் கொள்ளாத வடிவம் இல்லை. பாடல்கள் தோற்கும் பாடலாக ஒலிக்கும் கட்டுரை உண்டு. கதைகளை விட அழகாகக் கதை கூறுகிற கதைகளை இணைத்துக் கதைக் கோவையாக நெளியும் கட்டுரைகளைக் காணலாம். கலைகள் நாணவைக்கும் கலைக் கட்டுரை அறிவு நூல்களைத் தலைகுனிய வைக்கும் அறிவுக் கட்டுரை (கூசநயவளைந) ஆகியவை இலக்கிய எல்லைக்கோடு தாண்டி நடமாடுவதுகூட உண்டு.
கட்டுரையிலக்கியத்தின் இந்த எல்லா மாயங்களையும் உலக மொழிகளில் நாம் இன்றுகூட காணமுடியாது. ஏனெனில் அதன் முழு வளமும் செழுமையும் உடைய மொழி ஒன்றுதான் - அதுவே பிரஞ்சு மொழி. பிரஞ்சு மொழிக்கு அடுத்தது ஆங்கிலமும், மூன்றாம் படியில் (அறிவுக் கட்டுரை என்ற துறையில் சிறப்பாக) ஜெர்மன் மொழியும், கிட்டத் தட்ட கடைசிப் படியில் (ஆராய்ச்சிக் கட்டுரை என்ற ஒரு துறையிலேயே சிறப்பாகத்) தமிழ் உலகக் கட்டுரை இலக்கியத்தில் இடம் பெறுவன ஆகும். மராத்தி மொழியில் காகாகலேல்காரும் இந்தி மொழியில் ‘உக்ரஜி’ போன்ற ஒரு சிலரும் இதனை உயிர்த்துடிப்புடன் கையாண்டுள்ளனர்.
அகலக் கதை மேலைநாட்டில் பிறந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் சீனாவும் சப்பானும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதைத் திறம்பட மேற்கொண்டு வளர்த்துள்ளன. மணிக்கதை, நாடகத்துறைகளில்கூட மலையாளம், சீனம், சப்பான், சமஸ்கிருத மொழிகள் மிகப் பழம்பெரும் பெருமை உடையன. ஆனால் கட்டுரை இலக்கியம் 17, 18-ம் நூற்றாண்டுகளில் மேலைநாட்டில் பிறந்தது மட்டுமல்ல, அவ்வெல்லைகடந்து இன்னும் வளரவில்லை. அதுமட்டுமோ? மேலை மொழிகளில்கூட அந்த இரண்டு நூற்றாண்டுகளில் அது அடைந்த உச்ச உயர்வு மற்ற மேலை மொழிகளிலே, மற்ற நூற்றாண்டுகளில் தொடரவில்லை.
இதற்குக் காரணம் என்ன?
கட்டுரை இலக்கியத்துக்குத் தமிழகத்தில், வருங்காலத்தில் வளம் இருக்குமா? வரவேற்பு இருக்குமா?
பண்டைத் தமிழகத்தில் இன்றைய உலகத்தின் இலக்கிய வகைகளில் மிகப் பலவற்றைக் காணமுடியாது. ஆனால் இன்றைய உலகம் அறியாத பல வகைகள் சங்க இலக்கியத்திலேயே உண்டு. பிற எத்தனையோ வகைகள்- உலகம் பொருள் மரபு அறியக் கூடாமல் இழந்துவிட்ட ‘தோல்’, ‘விருந்து’ ‘நூல்’, ‘தொன்மை’; ‘அங்கதம்’, ‘செவியறிவுறூஉ’ முதலிய பல வகைகள் நிலவின என்று தொல்காப்பியத்தால் அறிகிறோம். சித்தர், பாரதி பாடல்கள், உலா, அம்மானை, ஆற்றுப்படை, கலம்பகம், பிள்ளைத்தமிழ் முதலிய எண்ணற்ற வகைகள் இம்மரபில் பின்னாளிலும் புதிது புதிதாகத் தோன்றி வளர்ந்துள்ளன. ‘கவிஞன்’ கற்பனையூற்றின் குமிழிகளாக எழுந்து மலர்ந்த இவ்வகைகளை இடைக்கால, பிற்கால இலக்கணப் புலவர்கள் சங்கை நெரித்து அழித்துவிட்டபின் பாரதி புதிது தோற்றுவித்த படிவங்களே அவர் செய்த புரட்சி ஆகும்.
தமிழுக்கு உரைநடை, இலக்கிய உரைநடை புதிதல்ல - மிக மிகப் பழமையானது. இறையனார் அகப்பொருளுரையும், பரிமேலழகர் திருக்குறளுரையும் இயற்றியவர்கள் பிரஞ்சு நாட்டிலிருந்து வந்தவர்களோ என்று நாம் கருதுமளவில் அவை நீடித்த, நம் கைக்கு வந்தெட்டாத, உரை நடைப்பயிற்சியின் வண்ணங்களாகத் தோற்றுகின்றன. ஆயினும் இலக்கிய உரைநடை வேறு உரைநடை இலக்கியம் வேறு. மேற்கூறிய இரு ஏடுகளும் உரைநூல்கள், உரை நடை இலக்கியமல்ல. உரைநடை இலக்கியம் எதுவும் இன்று நமக்கு வந்தெட்டாத நிலையில், உரைநடை இலக்கியத்தின் பிறப்பிடம் மேலைநாடு, அதிலும் பிரான்சு என்றுதான் நாம் கூறவேண்டிய நிலையிலிருக்கிறோம். கட்டுரை இலக்கியத்தில் பிரான்சின் தனி நிலை இன்னும் பெரிதாகவே உள்ளது.
இந்நிலைக்குக் காரணம் ஒன்றே ஒன்றுதான். கட்டுரை இலக்கியம் உண்மையில் கவிதையும் அல்ல உரைநடையும் அல்ல. அது உரைநடையில் எழுதப்படும் கவிதை - செய்யுளுதவியின்றி ஒரு கவிஞன் இயற்றும் உரை நடைக் கவிதை அது.
அகவல் மிக எளிய யாப்பு என்று பலர் கருதுவதுண்டு. ஆனால் உண்மையில் அதுபோல உண்மைக் கவிஞனுக்கு அருஞ் செயலானது வேறில்லை. சங்க காலத்தில்கூட இளங்கோ, சாத்தானார் போன்ற சிலரே அதனைத் திறம்படக் கையாண்டுள்ளனர். அது போல, பார்ப்பதற்கு இயல்பானதாக, எளிமையானதாகத் தோற்றும் கட்டுரையைவிட முதல்தர எழுத்தாளனுக்குக்கூடக் கடுமையானது வேறு ஒன்றுமில்லை. இயல்பான கட்டுரையின் எளிமை உண்மையில் நடனமாதின் இயல்பான நெளிவு போன்றதே.
நல்ல கட்டுரை இலக்கியம் பிறப்பதற்கு இரண்டு சூழ்நிலைகள் வேண்டும். ஒன்று கலைஞன் இனவாழ்வுடன் முற்றிலும் இணைந்து - அதன் மையமாக இயங்கவேண்டும். மற்றொன்று அவன் இனவாழ்வின் சுழலில் சுழலாமல் ஒதுங்கி அமர்ந்து, அதன் வாழ்வு தாழ்வுகளை இன ஒளியில் படம் பிடிக்கவேண்டும். இந்தச் சூழ்நிலை 18-ம் நூற்றாண்டில் பிரான்சிலும் இங்கிலாந்திலும் நிலவிய கலைக்கழங்களிலும் (Clubs) ஜெர்மனியின் பல்கலைக் கழகங்களிலும், பண்டைத் தமிழகத்தின் அவைக் குழாங்களிலும், உபநிடத கால ஆராய்ச்சிக்கூடங்களிலும் (உபநிஷத் - ஆய்வுக் கழகம்) இருந்தன. இளங்கோவின் ஒப்பற்ற இலக்கியம், கடோபநிடதம் போன்ற அழகிய அறிவுக்கட்டுரை இலக்கியம், மாந்தெய்ன், லாம்போன்ற கட்டுரை மன்னரின் உரைநடைக் கலை முத்துக்கள், லட்விக் போன்ற ஜெர்மனியின் அழகுநடை வரலாற்றாசிரியர், தற்கால அணிமைக் காலத்து டால்ஸ்டாய், ரோமேன்ரோலந்து ஆகியோரின் கட்டுரை ஏடுகள் - இவை இத்தகைய சூழலில் அமைந்தவை.
தமிழில் கட்டுரை இலக்கியத்துக்குரிய நல்ல சூழல் இன்று ஏற்பட்டு வருகிறது. ஏனெனில் அது புதிய இலக்கியத்துறை யானாலும் புதிய மரபு அல்ல. சங்க இலக்கியப் பாடல்கள் பல செய்யுள் வடிவில் அமைந்த அழகிய கட்டுரைகளே. அவற்றின் கடுங்கட்டுக்கோப்பே கலைஞனுக்கும் படிப்பவனுக்கும் உள்ள தூரத்தைப் பெருக்கியுள்ளது. சித்தர் பாடல்கள் உண்மையில் பாடல் வடிவக் கட்டுரைகளே. மிக மிக அழகிய கதை கட்டுரைகளை அவற்றில் காணலாம். முதுமொழிக் காஞ்சி திருக்குறட் கருத்தை வடித்தெடுத்து ஒரு மாயக்கலைஞன் வார்த்த கவிதை வடிவக் கட்டுரையே. பாரதியார் பாடல்கள் கவிதைத்துறையில் மட்டும்தான் புரட்சியாகப் பலரால் கொள்ளப்படுகின்றன. காலமும் சூழலும் உணர்ச்சியும் சித்தர்களைப் போலவே அவரைப் பாடகனாகச் செய்துவிட்டன. உண்மையில் அவர் பாடல்கள் கட்டுரைகளுக்குத் தலைப்பாக அமையத்தக்க பாடல் வடிவத் தலைப்புக்களே. தமிழன் குருதியில் கட்டுரை மரபு தொல்காப்பிய காலத்திலிருந்து இன்றுவரை பாலாற்று நீர்போல் அடிப்பரப்பில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை இது காட்டும்.
தம் கருத்துக்களைத் தங்குதடையின்றிக்கூற, இலக்கண
இலக்கியச் சுவையன்றி வேறு கட்டுப்பாடின்றிக் கலைஞன் தனக்குப் பிடித்த கட்டுக்கோப்பைத் தானே அமைத்துக்கொள்ள வாய்ப்பளிக்கும் இலக்கிய வரை கட்டுரை ஒன்றே தமிழக இளைஞர்கள் - சிறப்பாகக் கலைக்கழகங்கள் மூலம் மக்கள் வாழ்வின் உணர்ச்சிகளில் ஊடாடுபவர் - இலக்கியத் துறையின் வகை பேதங்களை உணர்ந்து கையாண்டால், மாந்தேய்னின் கட்டுரைக் கவிதை, சால்ஸ்லாமின் இசைக் கட்டுரை, அடிசனின் சமுதாயக் கட்டுரை, ரோமேன்ரோலந்தின் வாழ்க்கை கட்டுரைகள் ஆகியவை தமிழகத்தில் மிளிர்வது எளிது. தமிழகம் ஒரு புதிய பிரான்சாக, பிரான்சிலும் நீடித்த கலைவாழ்வு ஊற்றுடைய உயிர்க்கலைக்கூடமாக திகழ வழி உண்டு.
கலைஞன் - மனித இனம் இவை இரண்டுக்கும் இடையே கலைக் கழகமன்றி வேறு எதுவும் குறிப்பிடாத நிலையைத் தமிழகம் வளர்க்க வேண்டும். தென்றல், முரசொலி, கலைமகள் போன்ற கலைப்பத்திரிகைகளை இவ்விலக்கியத்துக்கு வழிவகுக்கும் வாயில்களாக இயங்குவன என்னலாம். இத்தகைய பத்திரிகைகளும் கலைக்கழகங்களும் தமிழகத்தில் பெருகுதல் வேண்டும்.
தென்றல் பொங்கல் மலர் 1959
தமிழ்த் தாய் சமஸ்கிருதம் சேய்!
தமிழ், திராவிட மொழிகளின் தாய் மட்டுமன்று; சமஸ்கிருதத்தின் தாயைப் பெற்ற தாயும் அதுவே! உலக மொழிகளின் மூல முதல் தாயும் தமிழ்தான் என்பதை உலகம் அறியும் நாள் தொலைவில் இல்லை. உலக ஆராய்ச்சியாளர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், பெரும்பாலும் ஆராய்ச்சியாளர் விருப்பத்துக்கு விரும்பாவிட்டாலும், பெரும்பாலும் ஆராய்ச்சியாளர் விருப்பத்துக்கு எதிராகவே, ஆராய்ச்சி அத்திசையில் சென்று கொண்டிருக்கிறது.
சமஸ்கிருதம் தமிழுக்கு ஒப்பான ஒரு பழமை - பெருமை வாய்ந்த மொழி என்று இன்னும் பல தமிழர்கள் நம்பிக் கொண்டுதானிருக்கின்றார்கள். வெளியுலகிலோ பாமரர்களைப் பொறுத் தவரை பலரும் சமஸ்கிருதமே இந்தியத் துணைக் கண்டத்தின் மிகப் பழமை வாய்ந்த மொழி என்று தவறாக எண்ணி விடுகின்றனர். வருங்காலத் தமிழகத்தின் வாழ்விலோ, தென்னக வாழ்விலோ, உலக நாகரிக வளர்ச்சியிலோ அக்கறை கொண்டவர்கள். இதன் உண்மையைக் கண்டறிவதும், அவ்வழி மக்களைத் திருத்தி ஆட் கொள்வதும் அவசியம். இல்லா விட்டால், வேர் என்று தளிரைக் கருதி, மரத்தைத் தலை கீழாக நட்டுவைத்து நீர் வார்த்தவன் நிலையையே தமிழகமும், தென்னகமும், நாளடைவில் மனித உலகமும், நாகரிகமும் அடைய நேரும்.
முதலாவது ‘ஆரியம்’ என்ற சொல்லே சமஸ்கிருதச்சொல் அல்ல. ஆரிய இன மொழிகளுக்குரிய சொல்லும் அல்ல. அது திராவிடச் சொல்; தமிழ்ச் சொல். இது தமிழருக்குத் தெரியாமல் பேணப்பட்டு வருகிறது. ஆரிய இனப் பற்றுடைய ஆராய்ச்சி யாளரும் அவ்வினப் பற்றுடைய உலக ஆட்சி வகுப்பினரும் தமிழனுக்குத் தன்னாட்சியில்லாத நிலையைப் பயன்படுத்தி, அதைக் கண்டும் காணாததுபோல் இருந்து வருகின்றனர்.
பால்ட்டிக் கடல் முதல் வங்கக்குடாக் கடல்வரை அறுபதுக்கு மேற்பட்ட மொழிகள் - சமஸ்கிருதம் போன்ற வழங்கா மொழிகள் - கிரேக்க, இலத்தீன் போன்ற வழக்கிறந்த மொழிகள் உட்பட ஆரியப் பேரினக் குழுவின் மொழிகளாக வகுக்கப்பட்டுள்ளன. இவையாவும் ஒரே மூல முதல் இனம் சார்ந்தவை என்று 18-ம் நூற்றாண்டில் மேலையறிஞரே கண்டு ணர்ந்தனர். அதற்கு அவர்கள் கொடுத்த பெயரே ஆரிய இனம் என்பது. சமஸ்கிருதத்தில் அவ் வினத்தவர் தம்மை ‘ஆரியர்’ என்றும், பாரசீக மொழியில் ‘ஈராணி’ என்றும் வழங்கியதை ஒட்டியே இப்பெயர் எழுந்தது. ஆனால் மற்ற நூற்றுக்கணக்கான ஆரிய இன மொழிகளில் இப்பெயரோ, சொல்லோ, சொல்லினுடைய நிழலோகூடக் கிடையாது. இதனால் முழு இனத்தின் பெயர், அல்லது மூல மொழிப் பெயர் குறிக்க, ‘ஆரியம்’ என்ற சொல்லைவிட, ‘உர் ஆரியம்’ (மூல ஆரியம்) - ‘இந்து - ஜெர்மானியம்’ ‘இந்து-ஐரோப்பியம்’ ஆகிய சொற்கள் படிப்படியாகத் திருந்திய அறிவு வழக்கியலாக வளர்ந்து வருகின்றன.
ஆரியர் மூலத் தாயகம் வால்கா, யூரல் ஆறுகள் ஓடும் ஆசிய ஐரோப்பிய நடு நிலம் என்று சிலரும், பால்ட்டிக் கடற்கரை என்று சிலரும், வடமா கடற்கரை (Arctic Region) என்று சிலரும் கூறுகின்றனர். எப்படியானாலும் அவர்கள் தென்கிளை (கிரேக்க, இலத்தீன் மொழிகள்), மேல்கிளை (வடமேற்கு ஐரோப்பா), கீழ் கிளை (இந்திய துணைக்கண்டம், பாரசீகம்) என முக்கிளைகளாகப் பிரிவுற்றபின், கீழ் கிளையின் மூலத் தாயகமாக நடு ஆசியாவுக்கு வந்த பின்னரே ‘ஆரியம்’ என்ற பெயரை அவர்கள் தம் பெயராகக் கொண்டுவிட்டனர் என்பது தெளிவு.
இந்தப் பெயர் அவர்கட்கு எப்படி வந்தது? அதன் பொருள் என்ன? அது என்ன மொழிச் சொல்?
நடு ஆசியப் பகுதியிலுள்ள மலை இன்றும் ‘இந்துக்கோசு’ மலை என்று பெயர் பெற்றிருக்கிறது. இந்தத் தொடரினை அடுத்தே ‘கயிலாசம்’ என்ற மலைத் தொடரும் உள்ளது. இது இன்று உருசியப் பெரும் பரப்பில் ஒரு பகுதி. மௌரியர் காலத்திலும் இன்றும் அவை ‘ஆரியம்’, ‘ஆரிய கோசியம்’ என்ற மாகாணங்களாகவே உள்ளன. ஆசியர் வருமுன் இப்பகுதியும், சீனம் முதல் எகிப்துவரையில் உள்ள பகுதிகளும் இன்று
போலவற்றின பாலைவனமாக இல்லை. வளமும் செல்வமும் நாகரிகமும் மிக்க பகுதிகளாகவே இருந்தன. அதன் வழியாகச் சீனம் எகிப்து ஆகிய நாடுகளுக்கிடையேயுள்ள உலக வாணிபப் பாதை சென்றது. அப்பாதையின் மையமாக இருந்த ‘ஆரிய’ நாடு அதனால் வளமும் நாகரிகமும் மிக்கதாயிருந்தது.
இவ்வளவும் கி. மு. 2000-க்கு முன் உள்ள நிலைகள். ஆரியர் அந்நாளிலிருந்து கி. பி. 1200- வரை பல அலைகளாக வந்து மோதி, அந்நடுவுலக நாகரிகத்தின் தடமுழுதும் அழித்தனர். அதே சமயம் அவர்கள் அழித்த நாகரிக மக்களுடன் கலந்து அவர்கள் நாகரிகத்தைத் தாம் மேற்கொண்ட நாகரிகம் பெற்றும் வந்தனர். இவ்வாறு நாகரிகம் பெற்றவர்களே இந்திய ஆரியர், பாரசீக ஆரியர், கிரேக்கர், உரோமர். ஆனால் நாகரிகம் பெற்ற பழைய அலைகளையே நாகரிகமற்ற புதிய முரட்டு அலைகள் அழித்து வந்தன. கி. பி. 12-ம் நூற்றாண்டின் பின் பேரரசர் தீமூர் காலத்தில் இந்த அலைகள் ஓய்ந்த பின்னர், அழிந்த உலக வாணிகப் பாதை ஒரு சிறிது மீண்டும் உயிர் பெற்றது. ஆனால் ரஷ்யாவின் இன்றைய பொதுவுடைமை ஆட்சியில்கூட, இப்பகுதி மக்கள் 4000 ஆண்டுகளுக்கு முன் நாகரிக உலகில் பெற்றிருந்த வளத்தையும் இடத்தையும் இன்னும் பெறவில்லை.
ஆரிய இனம், இந்த ‘ஆரிய’ நாட்டு நாகரிகத்தை அழித்தாலும், அங்கு நீண்ட காலம் தங்கி அந்நாகரிக மக்களுடன் கலந்து, நாகரிகம் பெற்று, தம் புதிய நாகரிகத்தையே ‘ஆரிய’ நாகரிகம் என்று பெருமையுடன் கூறத் தொடங்கினர். அவ்வாறு கூறத் தொடங்கிய பின்தான், அவர்கள் பாரசீகத்திற்கும் இந்தியாவுக்கும் பிரிவுற்று வந்தனர். ஆரிய இனத்துக்கு ‘ஆரிய’ இனம் என்ற பெயர் வந்த வரலாறு இதுவே.
‘ஆரிய’ இனத்துக்கு ‘அரிய’ இனம் என்ற பெயர் தந்தது ஆரிய நாடு. ஆனால் அந்நாட்டுக்கு அப்பெயர் எப்படி வந்தது?
தென்னகத்திலுள்ள நான்கு இலக்கியப் புகழ் வாய்ந்த மொழிகளை மட்டுமே நாம் இன்று திராவிட மொழிகள் என்று கூறுகிறோம். ஆனால் மற்ற பண்படாத் திராவிட மொழிகளையும் சேர்த்தே அறிஞர் கால்டுவெல் ‘திராவிட இன மொழிக் குழு’ என்று விளக்கினார். ‘இப்பண்படா’ மொழிகள் உண்மையில் பண்படா மொழிகள் அல்ல. ஆரியர் நாகரிகமடையும் முன்னே ஆரியர் அழிமதிகளால் அவர்கள் வாழ்வு அழிவுற்றது போலவே, அவர்கள் நாகரிகமும் பண்பாடும் இலக்கியமும் அழிவுற்று உயிரையிழந்தன.
திராவிடம் என்ற பெயரை உண்மையில் தென்னகத்திலும் இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள மொழிகளுக்கு மட்டுமே இன்று வழங்கினாலும் திராவிட நாகரிக எல்லை நம் அமெரிக்காவிலிருந்து, சீனா, சப்பான், மலாய், கிழக்கிந்தியத் தீவுகள் வரை பரவிய ஒரு பெருந்திராவிடப் பேரின எல்லையைச் சுட்டிக் காட்டுவதாகும். இதற்குள் திராவிட இனம், சிந்துவெளி நாகரிக இனம், சீன சப்பானிய இனம், தென்கிழக்காசிய இனம், நடு நிலக் கடலக இனம், அமெரிக்கச் சிவப்பிந்திய இனம் - ஆகியவை யாவும் பரந்து விரிந்துபட்ட கிளைப் பேரினங்களாக வாழ்ந்தன. இப்பெருந் திராவிட நாகரிக உலகத்தின் ஒரு பகுதியேதான் பழங்கால ‘ஆரிய’ நாடு.
திராவிடர் உலகில் முதன் முதல் உழவும், தொழிலும் கடல் வாழ்வும், வாணிகமும் கலையும் வளர்த்துப் பரப்பியவர்கள், திராவிடரில் ஒரு பெரும் தென்கிளை மீனவர் இனம். மற்றொரு பெரும் வடகிளை வேளாளர் இனம், மேலும் சிறு கிளைகள் உண்டு. மீனவர் இனம் சிந்து ஆற்றங்கரையிலிருந்து தாமிரவருணி யாற்றங்கரை வரை - கராச்சி முதல் தூத்துக்குடி வரையில் வாழ்ந்தது. வேளாளர் இனம் இமயமலையைச் சுற்றிலும் வாழ்ந்தது. மீனவரிடமிருந்தே வேளாளர் உழவும் தொழிலும் கற்று நாகரிக மடைந்தனர் என்பதைத் திருத்தந்தை ஹீராஸ் ‘ஆதி திராவிட நடுநிலக் கடலக நாகரிகம்’ என்ற தம் பெரிய ஆராய்ச்சி ஏட்டில் விளக்கியுள்ளார்.
தென்னகத்திலுள்ள திராவிட இனம் திராவிட நாகரிக உலகின் மையத்திலிருந்ததால், தம் நாகரிகத்தில் சொக்கியிருந்த தன்றி அதில் செருக்கடையவில்லை. ஏனெனில் அவர்களைச் சூழ அவர்களை ஏறத்தாழ ஒத்த நாகரிகங்களே நிலவின. ஆனால் ஆரிய நாட்டின் நிலை இதுவல்ல. அவர்களுக்கு வடக்கே காட்டு மிராண்டிகள் நாடோடிகளாக உலவினார்கள். இதனாலேயே அவர்கள் தம் இனத்தைப் பெருமையுடன் ‘ஆரியரினம்’ என்று அழைத்துக் கொண்டனர். அப்பெயர் தமிழில் ‘ஏர்ர்’ (கலப்பை, அழகு, கலை), ஆர் (நிறைவு), ஆல், சால் (பண்பு), சீர் (வளம், ஆக்கம்) திரை, திரு (அலை தரும் செல்வம்) ஆகியவற்றுடன் தொடர்புடையது. பண்டைத் திராவிடரின் பல கிளை இனங்கள் தம்மைச் சான்றோர், ஆன்றோர், சாலியர், சீரியர், திரையர், திருவிடர் என்று கூறியது போல ஆரியர் என்றும் கூறி வந்தனர். தமிழகத்திலேயே திருநெல்வேலி மாவட்டத்துக் குற்றாலத்தை அடுத்த பகுதி ‘ஆரி’ குடியினர் ஆண்ட ‘ஆரிய’ நாடு என்று அழைக்கப்பட்டதைக் குற்றாலக் குறவஞ்சியும், அதன் விளக்க உரையும் நமக்குத் தெரிவிக்கின்றன. ஆரூழ் (நண்பர் மு. கருணாநிதி பிறந்த திருவாரூர்), ஆரியூழ், ஆலூர் (அன்னை இராமமிர்த்தத்தம்மையார் பிறந்த மூ - ஆலூர், தோழர் பொன்னம்பலனார் பிறந்த பூ - ஆலூர்) முதலிய பல ஊர்ப் பெயர்கள் அவ்வின மரபில் வந்த குடியின் சின்னங்கள் ஆகும்.
ஆர் என்பதற்கும் ஏர் என்பதற்கும் உள்ள பொருள் தொடர் பை ‘ஆரா’ (ara) கலப்பை ஆரின் (arian) - (உழு) என்ற இலத்தீன் மொழிச் சொற்கள் ஐயத்துக்கிடமின்றி வலியுறுத்திக் காட்டுகின்றன. ஏனென்றால் இங்கே தமிழ் ‘ஏர்’ என்ற சொல்லும், தமிழில் இன்று இல்லாத அதன் வினைவடிவமும் சமஸ்கிருதத்தில் காணப்படா மலே ஆரிய இனப் பண்டைய மொழிகளில் ஒன்றாகிய இலத்தீனத்திலும் இடம் பெற்றுள்ளன. இலத்தீன் மொழிக்கு உரிய உரோமர் பெருந்திராவிட இனத்தின் (திருத்தந்தை ஹீராஸ் குறிப்பிட்ட ஆதிதிராவிட - நடு நிலக் கடலக இனத்தின்) கிளையான எட்ரஸ் கானருடைய நாகரிகத்தின் மீதும் மொழியின் மீதுமே நாகரிகமும் மொழியும் அமைத்தனர். உண்மையில் உரோமர்களே ஆரியர்களல்ல; எட்ரஸ்கான இனத்தின் அரசகுடியினர் என்பதை இன்றைய பழம் பொருள் ஆராய்ச்சி காட்டியுள்ளது. எட்ரஸ்கானர் வழங்கிய மாண்ட பெருந் திராவிட மொழிவழியாக இலத்தீன் ‘ஏர்’ என்ற சொல்லையும், மாண்ட பெருந் திராவிட இனத்தவரான ‘ஆரிய’ நாட்டினரிடமிருந்து இந்திய ஆரியர் ‘ஆரியம்’ என்ற சொல்லையும் நம் ஆராய்ச்சியுலகும் உணரும்படி ஆரியர் மூலமே அளித்துள்ள அருமை கண்டு வியந்து பாராட்டுதற்குரிய ஓர் இயற்கையின் திருவிளையாடல் என்னலாம்.
இரண்டாவதாக, கடல் வழி உலக முழுவதும் பரவிய திராவிட நாகரிகம் ஆசிய ஐரோப்பிய உள் நாட்டில் நடு ஆசிரியா கடந்து பரவவில்லை. ஆசிரியர் முதல் தாயகம் பால்ட்டிக் கடற்கரை அல்லது வடமா கடற்கரையேயாகும். மூல ஆரியர் மனித உலகின் மூல முதலினமான திராவிட இனத்திலிருந்து பிரிந்து, காடுகளில் திரிந்து, வட கடல் சார்ந்த இனமேயாகும். பிறப்பிலுள்ள இத் தொடர்பு, வடமா கடல் வழி திராவிடர் கடல் போக்குவரவுத் தொடர்பு மூலம் பின்னும் வளர்ந்தது. பல மூல திராவிட மொழிச் சொற்கள், சொற் படிவங்கள், கருத்துக்கள், கருத்துப் படிவங்கள், மனித நாகரிகம் முதிராக் காலத்துக்குரிய சில அடிப்படைப் பண்புகளாக மூல ஆரிய இனத்திலேயே காணப்படுவது இதனாலேயாகும்.
ஆரிய நாகரிகத்துக்கும் திராவிட நாகரிகத்துக்கும் இடையே யுள்ள பெரும் பிளவுக்கு - மலை மடுவுக்குள்ள தொலைவுக்குக் காரணம் அவர்கள் மூல முதல் தாயகமல்ல; நடு ஆசியத் தாயகமுமல்ல; இரண்டுக்கும் இடைப்பட்ட ஆசிய உள்நாட்டு வாழ்வின் ஆயிரக்கணக்கான ஆண்டு களேயாகும். அந்நாட்கள் தான் அவர்கள் திராவிட நாகரிகத்துடனும் நாகரிக உலகுடனும் கடல் வழி தொடர்பு, நிலவழித் தொடர்பு இரண்டுமில்லாமல் காட்டு மிரண்டி நிலையில் திரிந்த காலமேயாகும்.
ஆரியர் முதல் முதல் திராவிட நாகரிக எல்லை வந்து போராடிக் கலந்து நாகரிகப்பட்ட காலம் ஆசிய நாட்டு வாழ்வுக் காலமே அம்முதல் போராட்டத்தின் சின்னங்களைச் சீன நாட்டின் கன்பூசியஸ் நெறி, பார்சிகனின் சரதுஷ்டிரர் நெறி ஆகியவற்றுடன் இந்திய ஆரிய வேதங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் காணலாம். முதல் நெறி ஆரியம் சாராத தூய திராவிட நெறி. இரண்டாவது நெறி ஆரியத்தை இந்தியாவுக்கு அடித்துத் துரத்தி, ஒரு திருந்திய திராவிட ஆரியத்தைப் பாரசீகத்தில் நிலைநாட்டிய பேரறிஞனின் நெறி. மூன்றாவது இந்தியாவில் திராவிடத்தை முறியடிக் காமலே வளர்த்துப் பிசைந்து மாயவலை வீசிவிட்ட நெறி ஆகும். ஆனால் இங்கும் புத்தரும் மகாவீரரும் திராவிடப் பண்பாட்டின் சின்னங்களாக, கன்பூசியசையும், சரதுஷ்டிரரையும் போலவே ‘போலி’ ஆரியத்தை எதிர்த்த திருந்திய திராவிட வீரர் ஆவர்.
ஆரியரின் இரண்டாம் தாயகமான ஆரிய நாட்டை விட்டு நீங்கிச் சிந்துவெளித் திராவிட நாகரிகத்தை அழித்த ஆரியர் அங்கே மூன்றாவது தாயகம் அமைத்து, அதை ஆரிய பூமி, புண்ணிய பூமி, பிரமதேசம் என்று அழைத்தனர். இக்காலத்தின் புண்ணிய ஆறு சிந்து, புண்ணிய நகரம் இன்று ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானத்தில் இருக்கும் தட்ச சிலை. இக்கால ஆரியக் கலப்பினத்தவரான புதிய சிந்து ஆரியர், கங்கை ஆற்றங்கரையில் வாழ்ந்த திராவிடரையும் ஆரியரையும் மிலேச்சர், தீண்டப்படாத ஆரியர், திருந்தா மொழியினர் என்று திட்டியுள்ளனர்.
கி. மு. 2ம் நூற்றாண்டில் ஆரியர் கங்கை நாட்டிலும் பரவினர். ஆனால் இங்கே திராவிட நாகரிகத்தையும், மொழியையும் முற்றிலும் அழித்துவிடவில்லை. அது ஆந்திரப் பேரரசர் இமயம் வரை ஆண்டகாலம். கங்கைப் பேரரசர், ஆந்திரப் பேரரசர், குப்தப் பேரரசர் ஆகியோர் உதவியுடன் அவர்கள் கங்கைப் பகுதியை மூன்றாம் ஆரியத் தாயகமாகவும், கங்கை ஆற்றையே புண்ணிய ஆறாகவும், காசியையே புண்ணிய நகரமாகவும், சமஸ்கிருதத்தையே திராவிட - ஆரிய கலப்பு மொழியாகிய புதிய இலக்கிய மொழியாகவும் கொண்டனழ். சிந்து ஆற்று நாகரிகம் இப்போது மிலேச்ச ஆரியமாயிற்று. கங்கை நாட்டு ஆரிய திராவிடக் கலப்பு நாகரிகமும் மொழியும் புதிய ஆரிய நாகரிகமாகவும், உலவின.
கி. பி. 8-ம் நூற்றாண்டிலிருந்து ஆரியத்துக்குக் கிட்டத்தட்ட நான்காம் தாயகம் என்று கிடைத்தது. இந்தியத் துணைக் கண்டத்தையே ஆட்டிப் படைக்க அவர்களுக்கு உதவிய தாயகம் இதுவே. இது பாலாற்றங்கரையிலுள்ள காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்ட தமிழகமே! போலி ஆரியத்தை எதிர்த்த திருந்திய ஆரியமான புத்த சமண நெறிகளை ஒழிக்க, போலி ஆரியருக்குப் பல்லவ பாண்டியர் துணை முதலிலும், பின்னால் சோழர் உதவியும் கிடைத்து சங்க இலக்கிய வாழ்வு இதற்குள் தமிழகத்தில் தடம்புரண்டு விட்டதால், சங்க ஏடுகளின் இலக்கியப் பண்பையும் அறிவையும் வடதிசை ஆரிய திராவிடர் கலப்பு மொழியிலும் நாகரிகத்திலும் பூசி, ஆரிய நாகரிகத்திற்கும் புதிய சமஸ்கிருத மொழிக்கும் அறிவு உயர்ந்து கவிழ்க்கும் வகையே கவர்ந்து ஏய்க்க வல்ல புறப்பண்பும் தோற்றமும் அளிக்க இது உதவிற்று.
வடதிசைத் தாய் மொழிகளில் பழைய வட இந்திய மூல திராவிட மொழிகளின் பண்புகளை இன்னும் காணலாம். அவற் றைக் கசக்கி மேலும் ஆரிய மயமாக்க இன்று சமஸ்கிருதம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்தத் தாய் மொழிகளை விடச் சமஸ்கிருத இலக்கியம் தமிழுடன் நெருங்கிய தொடர் புடையது. ஏனெனில் மாண்ட அழிக்கப்பட்ட பழந்திராவிட இலக்கியங்களையும் தமிழ்ச் சங்க இலக்கியத்தையும் மொழி பெயர்த்தும், அவற்றின் சொற்களை ஆரியச் சொற்களுடன் கலந்தும் தம் சூழலுக்கும் அறிவுக்கும் பண்பாட்டுக்கும் ஏற்ற நிலையில் அவற்றைக் குழப்பியும் புரட்டியுமே சமஸ்கிருத மொழியும் இலக்கியமும் வளர்க்கப்பட்டன.
வட திசைத் தாய்மொழிகள் யாவும் திராவிடக் கலப்புற்ற பண்படா ஆரியக் கலவை மொழிகளே. சமஸ்கிருதம் அப்பண்படா மொழிகளில் ஒரு பண்படா மொழி - புத்த சமணர் வழங்கிய பாளி, பிராகிருத மொழிகள் உண்மையில் திராவிடச் சொற்களையும் கருத்துக்களையும் கலந்து அவர்கள் வளர்த்த மொழிகளே. ஆனால் கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின் போலி ஆரியர் அதில் மேலும் தமிழிலக்கியப் பண்பேற்றிப் புதிதாக ஆக்கிய புதிய திருந்திய மொழியே (சமஸ்கிருதம் - திருந்திய) சமஸ்கிருதம் ஆகும். பாண்டிய பல்லவ சோழர் காலத் தமிழ் ஏடுகள் பலகூட மொழி பெயர்க்கப்பட்டு அண்மைவரை சமஸ்கிருதவாணரால் மூல நூல்களாகப் பரப்பப்பட்டு வந்தன; வருகின்றன.
தமிழ் இவ்வாறு தென்னகத்தின் மூல நாகரிக மொழி, உலக மூலமுதல் நாகரிக மொழி மட்டுமல்ல; சமஸ்கிருதத்துக்கும் அதற்கு மூலத்தாய் மொழிகளான பழைய பாலி, பாகத மொழிகளுக்கும் இலக்கியங்களுக்கும் மூலத்தாய் மொழி - மூலத்தாய் இலக்கியம் ஆகும்.
முரசொலி பொங்கல் மலர் 1959
தமிழகத்தின் வருங்கால அறிவு நூல் வளர்ச்சி
இமய உச்சியில் யார் முதலில் சென்று கொடி நாட்டுவது என்று முத்தமிழ் அரசர் போட்டியிட்டதாகச் சங்கத்து ஏடுகள் முழங்குகின்றன. ஆனால் இது பழங்கதையாக, பலர் நம்பாத பழங்கதையாகிவிட்டது. அணிமைக் காலத்தில் மேனாட்டிலோ யார் முதலில் வட தென் துருவங்களில் சென்று தம் கொடியை முந்தி நாட்டுவது என்ற வகையில் மேலை அரசுகளிடையே போட்டி இருந்தது. இமய முகட்டில்கூட ஓரளவு அப்போட்டி இருந்து வந்துள்ளது. ஆனால் உலகப்போட்டி இப்போது இந்த எல்லைகளையெல்லாம் பொம்மை எல்லையாக்கிவிட்டன. யார் முதலில் திங்கள்மீது கொடி நாட்டுவது, செவ்வாய், கதிரவனை யார் முதலில் சென்று ஆளுவது என்ற போட்டி தற்கால மேலைத் தேசங்களிடையே எழுந்து விட்டன.
இந்தப் போட்டியில் கீழ் திசையும் நம் தமிழகமும் கொண்ட பங்கெல்லாம் பெரிதும் போட்டிச் செய்தியை எந்தப் பத்திரிகை முதலில் போடுவது, யார் முதலில் வாசிப்பது என்பதாகவே இருக்கிறது. மிகப் பெரும்பாலோர் இந்த அளவில்கூட அதில் அக்கரை கொள்ளாமல், அத்திசையிலே பாராமல், ‘சூரிய கிரகணம்’, ‘சந்திர கிரகணம்’, தினசரி ராசிபலன், - இராகு குளிகை காலம் ஆகியவற்றிலேயே கிடந்து உழல்வதாக இருக்கின்றன.
‘மனித உலகொரு மனித உலகாக என்று தமிழகம் நிலவுமோ, நிலவும் காலம்தான் வருமோ?’ என்று வருங்கால அறிவியல் உலகம் பற்றிக் கனவு காண்பவர் கவலைப்படும் நிலையே நாம் பெற்றிருக்கிறோம் என்பதில் ஐயமில்லை.
நம் நிலைமை கவலைக்குரியதுதான். ஆனால் நம்பிக்கை முழுவதும் கெட்டுவிட்ட நிலையை நம்மவர் எட்டிவிடவில்லை. போதிய விழிப்புடன் கடு முயற்சிகள் செய்தால், நம்பிக்கைக்கு இன்னும் இடமில்லாமலில்லை. ஆனால் நம்பிக்கைக்கே அடிப்படை கவலையில்தான் இருக்கிறது. நம்நிலை கவலைக் கிடமானது என்பதை நாம் நன்கு உணர்ந்து கொண்டால்தான், நம்மைச் சுற்றிய மாய இருள் எவ்வளவு செறிவுடையதென்பதை நாம் நன்கு அளந்திருந்தால்தான், அதனை நீக்கும் கதிரொளி நம்மிடையே எழும் என்ற நம்பிக்கைக்கு வழி ஏற்படும்.
நம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது ஆகிய தென்னாட்டுத் திராவிட மொழிகளைத் தவிர மற்றக் கீழ்த்திசைத் தாய் மொழிகள் கிட்டத்தட்டயாவுமே அணிமைவரை மக்கள் பேசுவதற்குரிய பண்படா மொழிகளாக இருந்து வந்துள்ளனவே யன்றி இலக்கிய மொழிகளாகவோ, அறிவு மொழிகளாகவோ, ஆட்சி மொழிகளாகவோ இருந்ததில்லை. இந்நிலை சில காலமாகத் தென்னாட்டு மொழிகளையும் இன்று தமிழையும் பீடித்து வருகிறது. மேலை ஆங்கில மொழிகள் மூலம் நம் மொழிகள் அடைந்துவிடும் மேலீடாக சிறு விழிப்பைச் சமஸ்கிருத ஆதிக்கம் என்ற மாயப் பழமை இருள் முற்றிலும் மறைத்து அழித்துவிடுமோ என்ற பேரிடம் வளர்ந்து வருகிறது.
தமிழராகப் பிறந்துள்ள சிலர் தாம் குடிமரபால் பிராமணர் என்ற காரணத்தாலோ, மதத்தாலோ இந்து என்ற காரணத்தாலோ சமஸ்கிருதத்துக்கே தம் இதயத்திலும் அறிவுத்தளத்திலும் நேரிடையாகவோ மறைமுகமாகவோ முதலிடம் தருவதைத் தம் பிறவிக் கடமையாகவே மேற் கொண்டு விடுகின்றனர். தமிழ் சமஸ் கிருதத்தைவிடப் பழமையும் பெருமையும் உடைய மொழி என்பதை அவர்கள் தெரியாமலோ, தெரிந்தும் ஒப்புக் கொள்ளாமலோ, ஒப்புக்கொண்டும் செயலில் அதற்கு நேரிடையான போக்கில் முனைபவராகவோ உள்ளனர்.
சமஸ்கிருதம் வெறும் மொழிப்பற்றாக மட்டும் நிலவவில்லை. மொழிப்பற்று என்ற முறையில்கூட அது கீழ்த்திசையிலும் தமிழகத்திலும் தாய்மொழி வாழ்வுகளையும் கீழ்திசைத் தேசிய வாழ்வுகளையும் அழித்துவிடப் போதியது. ஆனால் அது சாதி வருணாசிரம தருமங்களில் ஊன்றிய பற்றாக, புராண இதிகாசங்களையே வரலாறுகளைவிட உண்மையான மெய் வரலாறுகளாகக் கொள்ளும் மனப்பான்மையாக, மூட நம்பிக்கைகளையும் குருட்டுப் பழக்கங்களையும் தாம் நம்புவதுடன் நில்லாது. தாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும் பிறர் நம்பும் சூழ்நிலை பெறுவதில் ஆர்வமாக வளர்ந்து வருகிறது.
விலைக்கு வாங்கமுடியாத பொருள், வலியுறுத்திப் பெற முடியாத பொருள், அது கொண்டே அதைத் தாண்டினா லல்லது, பிறிதொன்றினால் தாண்டமுடியாத பொருள் ஆர்வமே. உழைப்பாளர் உழைப்பை விலைக்கு வாங்கலாம். அறிவாளி அறிவைக் கூலி கொடுத்து வாங்கிவிடலாம். முதலாளி மார்களுக்கு ஆதாயத்தினைக் காட்டி இயக்கலாம். ஆனால் ஆர்வம், அவா அவ்வளவு எளிதல்ல. அது உண்ணின்றெழுவது; உண்ணின்றெழுப்பப்படுவது. தீயைப்போல அளவிறந்த பேராற்றல் உடையது. ஆனால் அளந்து பயன்படுத்த வேண்டியது.
தற்காலத் தமிழகத்தின் பெருங்குறை - ஆதாய அர்வம், அடிமை ஆர்வம் தவிர, தமிழ் ஆர்வம் எதுவும் தமிழ் இனத்தில் மிக அரிதாகிவிட்டது.
மக்கள் அறிவும் ஆர்வமும் அறிவியலில் செல்லாதிருப்ப துடன் மட்டுமல்ல, அதற்கு எதிர்த்திசையில் செல்லும்படி தூண்ட இம்மனப்பான்மைகள் காரணமாகின்றன. படித்துப் பட்டம் பெற்ற மாணவர்கூட அதை வெறும் பிழைப்புக்குரிய தொரு நடிப்பாகக் கொண்டு, வாழ்க்கைப்பண்பையும் மனமார்ந்த நம்பிக்கையையும் வாழ்க்கை நோக்கத்தையும் முழுவதும் கோயில், குளம், பழமை, குருட்டு நம்பிக்கை, வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் தமக்கு இவ்வுலகில் தம் பிற்பட்ட கல்லா சமுதாயத்தில் புகழும், மேலுலகில் நிலையான புண்ணியமும் தேடுவதிலேயே செலவிடுகின்றனர்.
இந்த இருண்ட சூழ்நிலைக்குக் காரணம் சில பழைய வைதிகப் பழம் புரோகிதர்கள் என்றால்கூட நிலைமை கவலைக்கிட மானதேயாகும். ஏனென்றால் அரசாங்கம், அறிஞர், கலைஞர் ஆகிய எல்லாரையும் விடப் பாமர மக்களிடம் நெருங்கிய தொடர்பும் அசைக்கமுடியாத செல்வாக்கும் உடையவர்கள் இவர்களே. ஆனால் உண்மையில் அரசியல் நிலையங்கள், வானொலி நிலையம், பத்திரிகைகள், நாட்டின் பல கல்வி நிலையங்கள் யாவுமே பொதுவாகக் கீழ்திசையெங்கும் சிறப்பாகத் தமிழகத்தில், ஆலயம் தொழும் புரோகிதர், புரோகிதத் தொழில் செய்யாத புரோகிதர், மேனாட்டு நாகரிகப் போர்வை போர்த்த புரோகிதர் என்று கூறத்தக்கவர்களிடமே இருப்பதைக் காணும்போது அறிவு நூல்கள் தோன்றுவதற்கான நம் தமிழகச் சூழல் மிகச் செறிந்த இருட்சூழல் என்றுதான் கூறவேண்டும்.
ஏனெனில் அந்தப் பல்வகைப் புரோகிதர்கள் மாற்றத்தை விரும்பாத பிற்போக்கு எண்ணம் கொண்டவர்கள். தமிழ்ச் சமுதாயம் அறிவியலில் முன்னேறிவிட்டால் தங்கள் பதவிகள் பறிபோகும் என்ற பதட்டம் கொண்டவர்கள். ஆகவேதான், அந்தப் புகழ்மிக்க சமுதாயத்தைப் புழுதிமேடாக்கும் திருப்பணியில் ஈடுபடுகிறார்கள்.
இந்த இருட் சூழல் இருளார்ந்த சூழல் என்பதை நம் மக்களும் நம் மக்கட் பிரதிநிதிகள் என்று கூறப்படும் ஆட்சி யாளரும், தலைவர்களும் நிலையங்களும் கொண்டுவிட்டால், அதை நீக்கும் ஒளி தொலை தூரத்தில் இல்லை. ஏனெனில் தமிழராகிய நம் நிலை உண்மையில் வைரப் பாளத்தைக் கையில் வைத்துக் கொண்டே பல கண்ணாடிக் கற்களையும் செயற்கை வைரங்களையுமே, நல் வைரமென்று கருதிப் பெருவிலை கொடுத்து வாங்கி அவற்றை வைப்பதற்குரிய பெட்டிக்கு மெருகிட்டு பளபளப்பூட்டத்தன் கையிலிருக்கும் வைரப்பாளத்தைத் தீட்டு கருவியாகப் பயன் படுத்துபவன் நிலையேயாகும். உண்மையில் அறிவியல் வளர்ச்சி வகையில் நம் தமிழ்மொழி வைரப்பாளத்தை ஒத்த வாய்ப்புடையது. அதன் அருமை தெரிபவர் அருகிவிட்டமையும் அதைத் தீட்டுவாரில்லாமையும் தான் அதன் இன்றைய பெருங் குறைபாடுகள். அதை நோக்க வருங்காலத்தில் கீழைமொழிகள் பலவும் அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தும் சமஸ்கிருதமும் பல்வேறு வகைப்பட்ட உடைந்த வளையல் துண்டுகள், கண்ணாடிச் சில்லுகள் போன்றவை. மேல் திசைமொழிகள்கூட தற்காலிகப் பகட்டுடைய செயற்கை வைரங்கள் மட்டுமே என்று கூறத்தக்கவை.
மேலை இலக்கியங்கள், மொழியுடன், அவற்றிற்கு உயிர்ப் பூட்டியுள்ள பண்டைய மாண்ட பெருமொழிகள், அவற்றின் இலக்கியங்கள் ஆகியவற்றை விடச் சங்கங் கன்னட தமிழும் சங்க இலக்கியமும் வருங்கால அறிவியல் வளர்ச்சிக்கு இயல்பாக வழி வகுக்கும் உயிர்ப் பண்புகள் மிக்கவை. ஆனால் இவற்றில் கருத்துச் செலுத்தக்கூடக் கீழையுலகின் சமஸ்கிருத ஆர்வம் ஒருபுறமும், முழு உலகின் மேலை நாகரிக ஆர்வமும் தடைகளாக உள்ளன. வருங்காலத் தமிழகத்தின் அறிவு நூல் வளர்ச்சியில் கருத்துடையவர்கள் மட்டுமன்றி, வருங்கால உலகின் அறிவு நூல் வளம் பற்றிக் குறை காண்பவர்கள்கூட இவ்விரு மயக்கமும் தாண்டி இக்கூறுகளில் கருத்துச் செலுத்தக் கடவர்.
முதலாவதாக, உலகம் தட்டையானது - கடல்கள் ஏழு. உலகங்கள் மூன்று அல்லது ஈரேழு உண்டு - பாம்புக்குக் கண்கள் தாம் செவி - சிங்கக் குரலைக் கண்டு யானைக் கூட்டம் வெருண் டோடும் - சருகாரம் என்ற பறவை வெயிலை உண்டு வாழும் - அன்னம் பால் கலந்த நீரில் பாலையுண்டு தண்ணீரை நீக்கி வைத்து விடும். இவைபோன்ற எண்ணற்ற கருத்துக்களை நம்பிக்கையாக அல்ல. பொது அறிவாக, விஞ்ஞான நுட்பங்களாக இன்றைய உலகின் எல்லா மொழி இலக்கியங்களிலும் பின்னாளைய தமிழிலக்கியத்திலும்கூடக் காணலாம். சங்க இலக்கியத்திலோ தொல்காப்பியத்திலோ திருக்குறளிலோ இவற்றைச் சல்லடை போட்டரித்தாலும் காண முடியாது. சில சமயம் நம்பிக்கை மரபுகள் குறிக்கப்பட்ட இடங்களில்கூட சமயமொழி மரபாக அன்றி ஆசிரியர் அறிந்து பரப்ப விரும்பும் மெய்ம்மையாக, அறிந்து நம்பிக் கூறும் உண்மையாக எங்கும் தரப்படவில்லை.
இதுமட்டுமன்றி, மேலை இலக்கியத்தில் மிக அன்மை காலத்தில் கூட டெனிசன், வெல்ஸ் முதலிய ஒரு சில கலைஞரிடமே காணத் தக்க நிலையில் உள்ள அறிவார்ந்த இலக்கியக் கருத்துக்களை அறிவியல் நூலாராய்ச்சிப் பண்புடைய அணி மரபுகள் - சங்க இலக்கியங்களில் பக்கந்தோறும் பாத்தோறும் காணாலம். கருதத் தழகும் சொல்லழகும் கருதி இடைக்காலத்திலும் இக்காலத்திலும் நாம் வழங்கும் அடை மொழிகளை எண்ணிக்கொண்டு பார்ப்பதாலேயே கிட்டத்தட்ட அறிவியல் நூற்கள் எழுதுகின்ற எழுத்தர் பாணியில் பொது சிறப்புத் திரிபுப் பண்புகள் வேறுபடுத்திக் காட்டுகின்ற சங்க ஏட்டு அடைமொழிகளின் திட்டத்தை நாம் அடிக்கடி கவனிப்பதில்லை.
சங்க இலக்கியமும் சங்கத் தமிழும் ஒரு பால் இருக்க இவற்றின் துணை உடைய தனித்தமிழுக்கே அறிவு நூலுக்கு அடிப்படையான சொல்வள ஆக்க வாய்ப்பு எல்லையற்ற அளவில் உண்டு. மக்கள் மாவட்டம் தோறும் பேசும் தமிழ், செடி கொடிகள், விலங்கு பறவைகளுக்குப் பிற மொழிச் சூழல்கள் கடந்த நாட்டுப்புற மலைப்புறவாளர் வழங்கும் பெயர்கள்; சமஸ்கிருத ஆங்கிலச் சூழல்களால் தன் வயமிழக்காத தளத்திலுள்ள தொழிலாளர்கள், உழவர்கள் ஆகியோர் வழங்கும் கருவியின் பெயர்கள், மீன் முதலிய உயிரினப் பெயர்கள், வாழ்க்கைச் சூழற்சொற்கள்; அடித்தளத்தில் உள்ள சிற்றூர்ப்புறப்பெண்டிர் வழக்குச் சொற்கள் இவையும் சங்க இலக்கியத்தருகே அங்கம் வகிக்கத்தக்க தனித்தமிழ் பண்பார்ந்த அறிவுக்கருவூலங்கள் ஆகும்.
பிற திராவிட மொழிகள், திராவிடச் சூழலில் வளர்ந்த தென் கிழக்காசிய மொழிகள் கீழ்திசைத் தாய்மொழிகள், வேத மொழி, சமஸ்கிருதம், பாளி, பாகதங்கள் போன்ற பழய மாண்ட வழக்கு மொழிகள் ஆகியவையும் வழக்கிறந்து ஆனால் வழக்குச் சொற்களுடன் தொடர்பு விடாத தமிழ்ச் சொற்களைக் கண்டு எய்த வழிகாட்டிகளாக உதவக்கூடும். மேலை மொழிகள்கூட இதற்கு விலக்கல்ல.
கடைசியாக, தமிழில் உள்ள சித்த மருத்துவ ஏடுகள், பழய வானியல் மரபில் பின்னாட்களில் கெட்டு உயிர்ப் பிழந்துபோன சோதிட ஏடுகள், இசை நாடக நூல்கள், சித்தாந்த வேதாந்த ஏடுகள், உரையாசிரியர் வழக்குகள், கல்நாட்டுப் பட்டய வழக்குகள், மொழி ஒப்பீடு மூலம் கிடைக்கும் உலகளாவிய தமிழ்ப் பண்புக் கூறுகள் ஆகியவையும் பயன்படுத்தற்குரியன.
இவ்வழி மரபுச் செல்வந்திரட்டி இதனை அடிப்படைத் துறைச் சொற்களாக, அடிப்படை அறிவாகக் கொண்டு, மேலை அறிவு நூலென்னும் மதிலெழுப்பி இவற்றுடன் இணைத்து, இவற்றின் மூலம் தமிழகத்து வருங்கால அறிவு நூலைத் தமிழர் வளர்க்கக் கூடுமானால், வருங்கால உலகில் அறிவு நூல் வளர்ச்சியை வளப்படுத்தும் வகையில் தமிழர் அதில் பேரிடம் வகிக்கப் போதல் ஒரு தலை என்னலாம்.
இச்சூழலில் கையிலுள்ள வைரப்பாளம் அதை வைப்பதற்குரிய பெட்டியில், பளபளப்பூட்டப்பட்ட பெட்டியில் தான் வைக்கப்பெறும். செயற்கை வைரங்களும், கண்ணாடிக் கற்களும் கழிபொருள் மேட்டிலே எறியப்படும். எறியும்போது அத்தகு மொழிகள் நம்முடைய மொழியின் அறிவியல் வளர்ச்சிக்கான முறையில் தீட்டுக்கற்களாகப் பயன் படுத்தப்பட்டதாகவே இருக்கும்.
அதைப் பின்பற்றத் தமிழர், தமிழுலகம் முன்வர வழி ஏற்படுமா? அவ்வழி முயல்பவர் முயற்சிக்குரிய உரிமையையாவது குறைந்த அளவு ஒரு தேர்வு முறையாக அளிக்க தமிழ் மக்களும் ஆட்சியும் முன்வர இயலுமா?
முரசொலி பொங்கல் மலர் 1960
புதியதோர் கல்வித் திட்டம் வேண்டும்!
தேசீயத் திட்டங்களில் மிக அடிப்படையான திட்டம் கல்வித் திட்டமே. ஏனெனில், மற்ற எல்லாத் திட்டங்களையும் உருவாக்கி, பேணி, வளர்த்து, பயன்படுத்தும் கூறும், அவற்றை தேசிய வாழ்வாக்கும் கூறும் அதுவே. இன்றைய ஓருலகக் கனவாளர்களுக்கும் அது நாடுகடந்த மனித இன வளம் பெருக்கும் ஒப்புயர்வற்ற கருவி ஆகும்.
ஏடக இயக்கம், கலை இயக்கங்கள், ஆட்சிமுறை, ஆட்சித் திட்டங்கள் அனைத்தும் தேசீய ஆர்வமும் தேசீய, சமுதாய, சமய ஒழுக்கப் பண்புகளும் நல்ல கல்வித் திட்ட அடிப்படையையே எதிர் நோக்கியுள்ளன. உலகம் எங்கிலும் இன்னல்களைக் குறைத்து இட களைந்து வாய்ப்பு நலம் பெருக்கவும் ஒத்திசைவுடைய உலகக் கல்வித் திட்டத்தைப் போன்ற உகந்த சாதனம் வேறு கிடையாது.
காலத்துக்குக் காலம் அடிப்படைக் குறிக்கோளின் மாறுபாடுகளாலும், காலத்துக்குரிய, ஆட்சி சமய, சமுதாயச் சூழல் மாறுதல்களாலும், தேவை மாற்றங்களாலும் கல்வித் திட்டத்திலும் புதிய முறைகள் தேவைப்படுகின்றன. அதே சமயம் உயிர் வளர்ச்சியில் புதுமையற்ற பழமைத் தேக்கம் எவ்வளவு இன்னாததோ அதே அளவு முன்பின் தொடர்பற்ற கட்டற்ற புதுமையும் இடர்ப் பாடுடையது. இதற்கேற்ப கல்வித் திட்டங்களிலும் பழைய அனுபவத்தின் பயனையும் செயல் நடையிலுள்ள அமைப்பின் நிலத்தளத்தையும் கூடியமட்டும் விடாமல் புதிய கட்டமைப்பு எழுப்புதல் இன்றியமையாதது.
இன்றைய நம் தேசக் கல்வித் திட்டத்தைப் பல கோணங்களி லிருந்தும் பல வகையாகக் குறை கூறாதவர் கிடையாது. அதே சமயம் நம் தேசக் கல்வித் திட்டம் என்பது மிகப் பேரளவில் உலகக் கல்வித் திட்டத்தின் ஒரு பின்னோடி நிழலேயாதலால், அதனின்று தனித்தியங்குவதன்று. அத்துடன் உலகக் கல்வித் திட்டங்களின் குறைகள்மீதே அது புதுக் குறைகளையும் ஏற்றுவதால், இருவகை யிலும் அது சீர்திருத்தம் பெறுவது இன்றியமையாதது. மேலை உலகின் தற்சார்பு மறையிலேயே அதுவும் அமைந்தாலல்லாமல், அது ஓருலக நாகரிகத்தில் முரண் பாடற்ற ஒத்திசைவு நிலைமை உடையதாக மாட்டாது.
நடைமுறைத் திட்டத்தை முழுவதும் மாற்றியமைக்கும் புரட்சிகரமான திட்டம் செயல் முறையில் இடர்ப்பாடுடையது. மாணவர் வாழ்வில் திட்டத்தில் ஏற்படும் திடீர் மாறுதல்கள் கோளாறுகளையே பெருக்கும். படிப்படியான மாறுதல்கள்கூடப் புதிய புதிய சூழல்கள், கருத்து மாறுபாடுகளால் இதே வகையான கோளாறுகளை சிறப்பாக நம் நாட்டில் உண்டுபண்ணியுள்ளன.
ஆகவே, நடைமுறைத் திட்டங்களை ஒரு புறம் சிறிது சிறிதாக மாற்றுவதும், புதிய தனி அமைப்புகளைச் சிறிய தேர்வுப் பண்ணைகளாகவளர்த்து அப்புதிய அனுபவத்தின் மீது மாறிவரும் நடை முறைத் திட்டங்களுடன் அவற்றை இணைப்பதுமே தேசிய உலகக் கல்வித் தளங்களுக்குப் பயன்தரும் முறைமையாகும்.
நம் தேசக் கல்வித் திட்டம் ஆங்கிலம் போன்ற ஓர் உலக மொழித் தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தோன்றிற்று. அதில் திட்டவாணர் எவரும் எதிர்பார்த்திராத சில பெருநலங்களும், அதே சமயம் சில சிக்கல்களும் ஏற்பட்டுள்ளன. மேலை நாகரிகமும் அறிவியல் கல்வியும் பகுத்தறிவும் வளர இவ்வாங்கிலக்கல்வி பெருங் காரணமாயிருந்து வந்துள்ளது.
சாதிகளையும், மூட நம்பிக்கைகளையும் இது ஒழிக்க வில்லையாயினும், நாகரிகத்திலும் சமுதாயத்திலும் அவையே அடிப்படையாயிருந்த நிலையை மாற்றி, அவற்றை நீக்கும் இயக்கங்களையும் கருத்துக்களையும், துணைச் சாதனங்களையும் வளர்த்துள்ளது. சாதிக்கொரு கல்வி, சாதி சமயத்துக்கு ஒரு வகுப்பிடம், இனத்திற்கொரு பணித்துறை என்ற அவல நிலை பிரிட்டிஷ் ஆட்சிக் கால ஆங்கிலக் கல்வியாலேயே ஒழிந்தது.
சமஸ்கிருதத்தின் வளரா இரும்புப் பிடியிலிருந்து தாய்மொழி வாழ்வுகளை விடுவித்து, பல தாய்மொழிகளுக்கு உயிர் வாழ்வும் வளமும் கொடுத்தது ஆங்கிலம்தான்.
ஆனால், அதே சமயம் வளர்ந்து வரும் தேசிய மொழிகளின் தேவை பொன்னான ஆங்கிலக் கல்வியையும் ஒரு பொன் விலங்காக்கியுள்ளது. வறண்ட விடுதலையாசையால் பொன்னை விட்டு விடுவதா; அல்லது பொன்னாசையால் இந்த இனிய அடிமை நிலையை அரவணைத்து மகிழ்வதா என்ற இரண்டக இக்கட்டுக்கு அது நம்மை ஆளாக்கியுள்ளது.
நாட்டுமொழிகள் முதல் மொழிகளாக, நாட்டின் ஆட்சி மொழிகளாக வேண்டுமென்ற குரல் வெற்றியடைந்து வருகிறது. ஆனால் ஆங்கில மொழியின் உயிர்த் தேவை இதனால் குறையவில்லை. ஏனெனில் ஆங்கிலம் தாய்மொழிகளைப் பெற்றெடுத்த தாயாக மட்டுமல்ல; பேணி வளர்க்கும் செவிலி யாகவும், கல்வியூட்டும் ஆசானாகவும், உற்றுழி உதவும் துணையுதவித் தோழியாகவும் இன்று விளங்குகிறது.
ஆங்கிலம் இவ்வாறு தாய் மொழி வளர உதவிகள் பல செய்து, இன்னும் உதவி வந்தாலும், தாய் மொழிகள் கல்வியில் இடம் பெற்ற வளரும் முன்பே, அதனுடன் தொடர்பற்ற வேறு காரணங்களால், ஆங்கிலக் கல்வியின் தரம் சீர்கேடடைந்து விட்டது.
நம் தேசக் கல்வித் திட்டத்தில் இன்று இரண்டு பெருந் தேவைகள் உண்டு. ஒன்று அது நாட்டுமொழி அடிப்படை யிலமைந்த தேசியக் கல்வி முறையாக அமையவேண்டும். அப்போது தான் அத்திட்டம் உலகக் கல்வி அமைப்புகளுடன் ஒத்திசைந்து ஒன்றுபட முடியும். அதே சமயம் ஆங்கிலக் கல்வியின் தரம் குறைவதற்கு மாறாக, மேம்பட்டு வளர்ந்தோங்க வேண்டும்.
மேலே நாம் குறிப்பிட்ட இரு திற அமைப்பு மட்டும் தான் இந்த இரண்டு நோக்கங்களையும் ஒருங்கே நிறைவேற்ற முடியும். நடைமுறைக் கல்வித் திட்டத்தில் சிறிது சிறிதாக ஆங்கிலத்தின் இடத்தை நாட்டுமொழிகளே பெறும் காரணத்தால், தேசியக் கல்வித் திட்டம் முழுநிறைவு பெற்று வரும் அதே சமயம் புதிய தேர்வியக்கமாக தனிக்கல்வி நிலையங்களில் தேசியத் திட்டத்துக் கும் நடைமுறைக் கல்விக்கும் பாதகமில்லாமல் முழு நிறை ஆங்கிலக் கல்வி வளர முடியும். இந்த இரண்டாம் துறையில் ஆங்கிலக் கல்வியில் இன்று இருந்துவரும் குறைகள் அகற்றப்பட வழி உண்டு.
உச்சதளங்களிலும் உயிர்த்தளங்களிலும் ஆங்கிலத்தையே தாய்மொழியாகக் கொண்டவர்களும், மற்றத் தளங்களில் இருமொழிப் புலவர்களும் தக்க தனி ஆங்கிலப் போதனை முறைத் தேர்ச்சியுடன் அமர்த்தப்படலாம். தேசியத் திட்டத்தின் கல்விப்படிகளுடன் அவற்றின் விரிவகற்சியாக இத்திட்டத்தின் படிகள் அமைக்கப்பட்டு, தேசத்தின் தேசங்கடந்த சேவைகளில் இத்துறையில் தேர்ந்தவர்கள் பயன் படுத்தப்படலாம். சமுதாய, இலக்கிய, கலை இயக்கங்களுக்கும் இது நலங்கள் தரும்.
இரண்டாம் துறைக்குரிய இன்னொரு நற்பயன் கல்வித் துறையில் அடிப்படை மாறுதல்கள் செய்யாமல், இதனைக் கட்டுப்பாடற்ற கல்வி மாதிரிப் பள்ளிகளாக்கி, செயல் தேர்வு முறை பண்ணைகளாக அனுபவ வெற்றி கண்டபின் விரிவு படுத்தித் தேசியத் திட்டத்துடன் இணைக்க வழி காணலாம்.
இத்துறைக்கு உலக அடிப்படையில் மூன்றாவது ஒரு பெரும் பயனும் உண்டு. இன்று ஆங்கிலத்துக்கு பயன்படும் அதே கல்வி முறையை, இந்திய மாநிலத்தின் பிற மொழிகளுக்கும் உலகின் பிற மொழிகளுக்கும் உரிய பயிற்சி நிலையங்களாக்கி, தேச தேசத் தொடர்பு, மொழிக்கு மொழித் தொடர்புகளை உலகெங்கும் நேரடியாக வளர்க்க வழி காணலாம்.
அயல் மொழி எதுவும் தலையிடாமல் தேசியத்திட்டத்தை அமைக்க இந்த இரண்டாம் துறை பயன்படுவதால், தேசியத் திட்டம் முழுநிறை தேசியத் திட்டமாக, நடைமுறைக் கல்வியில் எத்தகைய பெருமாறுபாடும் இல்லாத முறையிலேயே, புரட்சி யற்ற புரட்சியாக அமைந்துவிடும். அத்துடன் நம் தேசத்தில் இன்றிருக்கும் மொழிச் சிக்கல்களும், இவ்வுலகில் பல இடங்களிலும் நாடுகளிலும் ஏற்பட்டுள்ள மொழிச் சிக்கல்களும் அவற்றின் பயனான இன, அரசியல் சமுதாயச் சீரழிவுகளும் நீங்கிவிடும்.
நாட்டு மொழியா, ஆங்கிலமா, இந்தியா என்ற இந்தியாவின் சிக்கல் மட்டுமன்றி; சிங்களமா, ஆங்கிலமா, தமிழா என்ற இலங்கைச் சிக்கலும்; மலாய் மொழியா, சீனமா, தமிழா, ஆங்கிலமா என்ற மலாய் நாட்டுச் சிக்கலும்; சோவியத்து ஒன்றியம், அமெரிக்க ஒன்றியம், பிரிட்டிஷ் பொது அரசு ஆகியவற்றின் நிலைகளும்கூட இத்தேசிய - உலக இணையமைப்புத் திட்டத்தால் சீர் அமைவு பெறமுடியும்.
இந்தியாவும் உலகும் இது பற்றிச் சிந்திக்கத் தமிழகத் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகள் ஆவன செய்யுமா?
குழப்பமில்லா கல்வித் திட்டம் ஒன்றை வகுக்க ஆன்றோர் துணிவார்களா?
உலகை நாம் என்றும் வேறாக நின்று பின்பற்றித்தானாக வேண்டுமா? உலக வாழ்வில் நாம் பங்கு கொண்டு ஒருகால், ஒரு தடவையேனும் வழி காட்டக்கூடாதா?
முரசொலி பொங்கல் மலர் 1961
இனமொழி கற்பீர், இனப் பண்பில் நிற்பீர்!
குடும்பமே சுயமரியாதை! - என்று கூறக்கூடிய வகையைச் சேர்ந்தது பன்மொழிப் புலவர் அப்பாதுரையார் அவர்களுடைய இல்லமாகும். தமிழில் மட்டுமன்றி, வடமொழியிலும் இன்னும் பல மொழிகளிலும் துறைபோய, செந்தாப் புலவர் ஆவார்கள், அவர்கள். இத்தனை காலமாக தமிழுலகுக்கு வழங்கியிருக்கும் கிட்டத்தட்ட நூறு நூல்களும், சிறந்த ஆராய்ச்சிக் களஞ்சியங்களாகும்.
அப்பேர்ப்பட்ட தமிழ் வல்லார், தள்ளாத வயதிலும் அறிவியக்கத்தின் பால் காட்டிவரும். அன்பும் அக்கரையும் எந்நாளும் நம் போன்றவர்களால் மறக்க முடியாது. அரசினரால் ஓடஓட விரட்டப்பட்டு தடியடிக்கும் ஆளான தகைமைசால் பெரியவர், அவர்!
அவர்களது துணைவியார் அலமேலு அம்மா எம். சி. அவர்களைப் பற்றி, நாம் என்ன எழுதுவது? இந்தி எதிர்ப்புப் போரில் அவர்கள் ஈடுபட்டு, பெறவேண்டிய மரியாதையைப் பெரியார் தராத போதும் மனந்தளராது. தொண்டருக்குத் தொண்டராய், துய்மையான மனதோடு, கழகத் தோழர்கள் ‘அம்மா’ என்றழைக்கும் அளவுக்கு இதயத்தில் இடம் பெற்றவர்கள்!
இந்த இரு உருவங்களையும் தமிழ் கூறு நல்லுலகம்; மறக்காது; என்றும் போற்றும்.
இந்த தாய்மொழி எழுத்துக்களையெல்லாம் இந்தி எழுத்துக்களாக்க டில்லிபீடம் துடிக்கின்ற நேரம், இது. இச்சமயம், ‘அறப்போர்’, தமிழ் தவிர்த்த ஏனைய மும்மொழிகளின் பாடங்களையும் வெளியிட முடிவு செய்தது.
இதற்கு ஆசிரியராகயிருந்து உதவுமாறு ’அப்பா’வைக் கேட்டோம்! அப்பெரியார், வாழ்த்தி, முன்வந்துள்ளார்கள்! அவர் உதவியை நாடும் நாமும் - மறக்க இயலாது என்றும். அடுத்த இதழ் முதல், பாடங்கள் தொடரும்.
அதற்கு முன்னுரையாக அவர்கள் எழுதியுள்ள இந்த ஆராய்ச்சி, யாவரும் உணர வேண்டியதொன்றாகும்.
- அறப்போர் இதழ் ஆசிரியர் வெளியிட்ட குறிப்பு
இந்திய மாநிலத்தில் நூற்றுக்கணக்கான மொழிகள் உண்டு - அவற்றில் பதின்மூன்றுக்கு மேற்பட்டவை தமிழ்ப் பேரினம், திராவிடம் என்று வகுக்கப்பட்டுள்ளன. மீந்தவை ஆரிய இனம் சார்ந்தவை ‘இந்தோ-ஆரியம்’ என்று அவை அழைக்கப் படுகின்றன.
இந்திய மாநிலத்தில் முக்கியமான மொழிகள் 14 என்று வகுக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் 4 (துளுவையும் சேர்த்தால் 5) திராவிட மொழிகள். மீந்த 10 மொழிகள் ஆரியம் அல்லது இந்தோ - ஆரிய மொழிகள் ஆகும்.
இந்திய ஏகாதிபத்திய ஆட்சியில் இரண்டு இன மொழிகள்
இருந்தும், திராவிட மொழிகள் ஆரியராலும் ஆட்சியாளராலும் எதற்கும் பொருட்படுத்தப்படுவதில்லை.
சமயப் பெயரால், சமரசப் பெயரால், தாய் மொழிகள் மீது நெடுங்காலமாய்ச் சுமத்தப்பட்ட மொழி சமஸ்கிருதம் செத்த ஆரிய மொழி.
முஸ்லீம் வடவராட்சி காலத்தில் சுமத்தப்பட்ட மொழி உருது, இஸ்லாமிய ஆரிய மொழி.
வெள்ளை அயலாட்சிக் காலத்தில் ஆட்சி மொழியாகவும் இன்று உலக மொழியாகவும் அமைந்திருப்பது ஆங்கிலம், மேலை ஆரிய இன மொழிகளில் ஒன்று.
சுயராச்சிய ஆட்சியில் புதிது புகுத்தப்படும் மொழியில் ஒரு இந்தோ- ஆரிய மொழிதான் - இந்தி!
இந்திய ஆட்சி நீடிக்கும் வரை திராவிட மொழிகளுக்கு திராவிடர்தம் இடம் கடின இடம்தான் ஆட்சியாளர் நாக்குக் கூசாமல் திராவிடர் தங்கள் தாய் மொழியுடன் மூன்று ஆரிய மொழி கட்டாயம் படிக்க வேண்டு மென்கிறார்கள்.
இவ்வுலகத்துக்காக ஆங்கில ஆரியம்.
உன் சுய ஆட்சிக்காக இந்தி ஆரியம்.
இவ்வுலகத்துக்காக, உன் மதத்துக்காக செத்த சமஸ்கிருதம் ஆரியம்.
பன்மொழிகள் படிக்க விரும்புபவர்கூட இன்று பல ஆரிய மொழிகளைத்தான் படிக்க வேண்டுமென்ற நிலை இருக்கிறது.
உலகாண்ட இனம் இன்று உலகத்தால் ஆளப்படும், படிப்படியாகத் தானாக அறியும்படி விடப்படும் இனமாக்கப் பட்டு வருகிறது.
தென்னகம், திராவிடர் இந்நிலையில் இன உணர்வு கொண்டால் போதாது. ஒருவரை ஒருவர் அறிந்து, ஓரினமாகத் தலைதூக்கித் தாமே தம்மை ஆள்பவராதல் இன்றியமையாதது. தம் தாய் மொழியுடன் வேறு மொழி படித்தாலும், படியா விட்டாலும், அண்டை, அயலிலுள்ள தம் இன மொழிகளைக் கற்கவேண்டும்.
முக்கிய திராவிட மொழி நான்கினையும் தமிழருக்கு அறிமுகம் செய்து வைக்கும் வேலையை ‘அறப்போர்’ ஏற்றுக்கொண்டு கதை தொடங்கிவைக்கிறது.
இனம் பொய்யல்ல;
இனமொழி மெய்!
ஆரிய இனம் உண்டு.
இது பொய்யன்று.
இந்திய ஆரியம் மட்டுந்தான் இதை முன்னால் அறிந்திருந்தனர்.
மேலை ஆராய்ச்சி இன மொழிகண்டு, இதை வலியுறுத்தி யுள்ளது.
இன்று நூற்றுக்கு மேற்பட்ட மொழி பேசும் ஆரியநாடுகள் அனைத்தும் ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பு கி. மு. 2000க்கு முன், ஒரே ஆரிய மொழி பேசிய, ஒரே ஆரிய இனத்தின் வழி வந்தார்கள்தான்.
ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ரஷ்யமொழி, இத்தாலி, ஸ்பானிஷ், இலத்தீன், கிரேக்கம், பாரசிகம், சமஸ்கிருதம், இந்தி, வங்காளி, குசராத்தி, மராத்தி, பிகாரி, உருது, பஞ்சாபி, சிந்தி - இவை போன்ற மொழிகள் யாவும் ஒரே மூல உலக ஆரிய மொழியின் கிளைகளே.
இது போலவேதான் -
திராவிட இனமும் ஒரே இனம்.
இது திராவிடர் நெடுநாள் உணர்ந்த செய்தி மட்டுமன்று. திராவிட நாட்டு வரலாறு கூறும் செய்திமட்டுமன்று.
மேலை ஆராய்ச்சி இங்கும் இனமொழி கண்டு, அதை வலியுறுத்தி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய நான்கு முக்கிய மொழியிலும், (அவற்றுடன் துளுவும்) மட்டுமன்று, இந்திய மாநிலத்தில் விந்தியத்தையடுத்தும், கடந்தும் உள்ள வேறு மொழிகளும் திராவிட மொழிகளே.
இந்த 13க்கு மேற்பட்ட மொழியிலும் ஒரே மூல திராவிட மொழியிலிருந்து கிளைத்த மொழிகள்தான். ஒரு குடும்பம்தான் என்பதை நல்லாயர் கால்டுவெல் பெருமகனார் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் உலகறிய மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.
வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை;- அவை
பேருக் கொருநிற மாகும்.
சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ்
சாந்து நிறமொரு குட்டி.
பாம்பு நிறமொரு குட்டி, - வெள்ளைப்
பாம்பு நிறமொரு குட்டி,
எந்த நிறமிருந் தாலும் - அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம் சிறி தென்றும் - இஃது
ஏற்ற மென்றும் சொல்லாமோ?
நான்கு அல்லது ஐந்து மொழிகளையும் நீங்கள் சிறிது படியுங்கள். அவை உண்மையில் ஒரு மொழியே என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு அயல் மொழியை நீங்கள் படிக்க ஆண்டுகள் பல வேண்டி வரலாம். ஆனால் அந்த ஐந்தையும் ஓராண்டுக்குள் நீங்கள் படித்துப் பேசவும் எழுதவும் தேர்ச்சிப் பெற்றுவிடலாம்.
அறப்போர் தரும் பாடங்கள் உங்களை இந்த முயற்சியில் தூண்டி இனப் பிரிவினையிலும் வாழ்விலும் உங்களை வருங்கால இனப் பெருமை நோக்கி மிதக்க விட்டுவிடும் என்பது உறுதி.
மொழி பிரிந்த கதை
ஒரு மொழி - பழந்தமிழ் அல்லது முத்தமிழ் அல்லது திராவிடம் எப்படி, இப்போது ஐந்து மொழியாய், பல மொழிகள் ஆகப் பிரிந்தது?
ஐந்து மொழிகளும் ஐந்து பரந்த மாநிலங்களில் இன்று பேசப்படுகின்றன.
ஒரு மாநிலத்துக்குள்ளேயே மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபாடுகள் இன்னும் உண்டு. ஆனால் இலக்கியத் தமிழ், இலக்கிய மலையாளம், இலக்கியத் தெலுங்கு, இலக்கியக் கன்னடம் ஆகியவை ஒன்றா யிருப்பதினால் பேச்சு மொழிகள் வேறுபாட்டை நோக்காமல் இவற்றை ஒவ்வொரு தனி மொழிகளாகமட்டும் கொள்ளுகிறோம்.
ஐந்து மொழிகளும் ஒரே இலக்கியம் உடையதாய், ஒரே எழுத்து வடிவம் உடையதாயிருந்த காலம் உண்டு. அப்போதுகூட இன்றிருக்கிற மாவட்ட இடவேறுபாடு மாநிலங்களில் இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இலக்கியம் ஒன்றானதால், ஐந்து மாநிலத்து மொழியும் ஒரே பெயருடன் ‘தமிழ்’ என்றே அழைக்கப்பட்டது என்று அறிகிறோம்.
சங்க இலக்கியங்கள், தேவாரத் திருவாசகங்கள், ஆழ்வார்களின் நாலாயிரப் பிரபந்தங்கள் எழுதப்பட்ட காலத்தில் தென்னாடு முழுவதும் ஒரு மொழிதான் இருந்தது. அது போல வடநாடு முழுவதும் எழுத்து இலக்கிய வடிவில் ஒரு மொழிதான் இருந்தது. இந்திய மாநிலத்தில் இருந்த இந்த இரண்டு மொழிகள் தமிழ், சமஸ்கிருதம் ஆகியவை மட்டுமே.
இந்த இரண்டு மொழியிலும் தென்மொழி வடமொழி என்று அன்று அழைக்கப்பட்டதின் காரணம் இதுவே. இன்று தென்மொழி தென்மொழிகள் ஆகிவிட்டது. வடமொழி வட மொழிகள் ஆகிவிட்டது.
வடநாட்டில் இன்றுவரை எல்லா மொழிக்கும் கிட்டத்தட்ட ஒரே எழுத்துமுறைதான். ஆனால் தென்னகத்தில் 5 திராவிட மொழிகளில் நான்குக்கும் நால்வேறு எழுத்து முறைகள் உள்ளன.
தெலுங்கில் இன்று நாம் எழுதும் எழுத்துமுறை கி. பி. 12-ம் நூற்றாண்டிலிருந்துதான் இலக்கிய வழக்காயிருக்கிறது. அந்நூற்றாண்டில் வாழ்ந்த நன்னயன் என்ற தெலுங்கு கவிஞர்தான் அம்முறையை ஆக்கினான் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் நன்னயன் அதை இன்றைய வடிவில் திருந்துவதற்கு மட்டுமே காரணமாயிருந்ததாக வேண்டும்.
பழைய தெலுங்கு எழுத்து உண்மையில் இன்றைய கன்னட எழுத்துத்தான். ஆனால் அதில் தமிழுக்குச் சிறப்பெழுத்தாகக் கருதப்படும் ற, ழ இரண்டும் இருந்தன. நன்னயன் காலத்தில் ‘ழ’ கைவிடப்பட்டது. ‘ற’ நம் காலத்திலேயே ஆரியப் பற்றாளரான புதிய எழுத்தாளர்களால் கைவிடப்பட்டு வருகிறது.
பழைய தெலுங்கெழுத்தாகிய இந்தக் கன்னட எழுத்து
கி. பி. 9 ஆம் நூற்றாண்டிலிருந்துதான் வழக்கிற்கு வந்துள்ளது.
ஒரு மொழியாயிருந்த திராவிடம் இரண்டாகப் பிரிவுற்ற காலம் கி.பி. 9-ம் நூற்றாண்டு என்பதை இந்நிலை காட்டுகிறது. திருவேங்கடம் அல்லது திருப்பதிக்கு வடக்கே வடதிராவிடமும் தெற்கே தென்திராவிடமுமாகத் திராவிடம் பிரிந்த இந்த நிலையை 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமாரிப்பட்டர் சுட்டிக்காட்டுகிறார். அவர் இரண்டு பாதியில் பேசப்படும் மொழியை இரு பெயர் கொண்ட ஒரு மொழியாக ‘திராவிட - ஆந்திர பாஷா’ என்று குறிப்பிடுகிறார்.
கி. பி. 7 ஆம் நூற்றாண்டில் பிரியத் தொடங்கி, கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் பிரிந்துவிட்ட கிளைமொழி ஆந்திர மொழி என்ற பெயருடன் நிலவினாலும், அது உண்மையில் ஆந்திரமும் கரு நாடகமும் இணைந்த வட திராவிடமேயாகும். கி. பி. 9 ஆம் நூற்றாண்டு வரையுள்ள மூல திராவிட இலக்கியம் முழுதும் தமிழ் இலக்கியமாய் இன்று விளங்குவதுபோல கி. பி. 9 ஆம் நூற்றாண்டுக்கும், 12 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட வட திராவிட இலக்கியம் இன்று கன்னட இலக்கியமாக விளங்குகிறது.
வடதிராவிடத்தில் கன்னடத்திலிருந்து வேறாகத் தெலுங்கு பிரிந்தது. 12 ஆம் நூற்றாண்டிலேயேயாகும். கன்னடத்திலிருந்து வேறாகத் துளுவும், துளுவிலிருந்து வேறாகக் குடகும் இவற்றின் வேறாகக் குளாம், படகம், நுதுவம் ஆகியவையும் நம் நாட்களிலே பிரியத் தொடங்கியுள்ளன.
தென் திராவிடமாகிய இடைக்காலத் தமிழும் நீடித்து ஒரு மொழியாயில்லை. கி. பி. 9-ம் நூற்றாண்டிலிருந்து மலையாளம் மெல்லப் பிரியத் தொடங்கிற்று. கி. பி. 12ஆம் நூற்றாண்டில் இலக்கியம்கூடத் தனியாகத் தொடங்கிற்று. ஆனால் தனி எழுத்து முறையும் வளமான இலக்கியம் கி. பி. 19-லிருந்து தொடங்கி,
கி.பி. 18-ஆம் நூற்றாண்டில்தான் முழுவடிவம் பெற்றது. மலையாளம் என்ற மொழிப்பெயர் 19 ஆம் நூற்றாண்டில்தான் முழுவடிவம் பெற்றது. மலையாளம் என்ற மொழிப்பெயர் 19-ம் நூற்றாண்டி லேயே தனித்து வழங்கத் தொடங்கியுள்ளது.
தென்னகத் திராவிட மொழிகள் அனைத்தும் கி. மு. 3-ஆம் நூற்றாண்டிலிருந்து கி. பி. 9ஆம் நூற்றாண்டுவரை ஒரே மொழியாய் ‘தமிழ்’ என்ற பெயருடன் நிலவின என்பதை இவ்வரலாறு காட்டும்.
கி. மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு முன் வட இந்தியாவில் இமயம் வரை தமிழ் ஒரே மொழியாகவே பரவியிருக்கவேண்டும். தமிழ் மூவேந்தர் இமயத்தில் கொடி பொறிக்கப் போட்டியிட்ட காலம் இதுவே. புத்த சமணர்கள் கி. மு. 6-ம் நூற்றாண்டிலிருந்து வளர்ந்து பரவியதனாலேயே, வட இந்தியத் திராவிட மொழிகள் மலைப் பகுதிக்குள் நெருக்கித்தள்ளப்பட்டுத் தென் இந்தியத் திராவிட மொழித் தொடர்பிலிருந்து விரிந்தன.
ஆரியர் இந்தியா வருமுன் இந்தியா முழுவதும் தமிழ் ஒரே மொழியாகப்பரவியிருந்தது. ஆரியர் இந்தியாவினுள் புகுந்த காலம் கி. மு. 2500க்கும் இடைப்பட்ட ஆயிரம் ஆண்டுகளாகும்.
கி. மு. 2500க்கு முன் நாகரிக உலகில் ஆரியரோ ஆரிய மொழிகளோ கிடையாது. கி. மு. 2500க்குப் பின்னரே அவர்கள் நாகரிக மனித உலகுக்குள் புகுந்தனர். தென் ஆசியா, நடுநிலக் கடல் சார்ந்த 9 மலை ஆசிய, வட ஆப்பிரிக்க, தென் ஐரோப்பியப் பரப்புகளிலும் மேற்கு ஐரோப்பிய பரப்புகளிலும், வட அமெரிக் காவிலும், கிழக்காசியாவிலும் கடல் வழி பரந்து ஒரே இன உலகமாக, ஒரே மொழி உலகமாக விளங்கியவர்கள் தமிழ் இனத்தவர்.
தமிழ் - திராவிட இனத்தின் இந்த உலகச் சுவடுகள் ஆராய்ச்சி யாளர் பலரால் காட்டப்பட்டுள்ளன என்றாலும், அறிஞர் இன்றளவும் பெரும்பாலும் ஆரியர் இனத்தவராகவே இருப்பதால் இத்துறை ஆராய்ச்சி வளர்க்கப்பெறாமலே இருக்கிறது.
ஐந்து மொழிகளையும் பற்றிய வரலாறு கண்ட நீங்கள், மொழிகளையும் படிக்கத் தொடங்கிவிட்டால், உலகில் திராவிட இனத்தின் சின்னங்களை வருங்காலத்தில் பொறித்து மூவேந்தர் மரபுகாக்கும் வேலையில் நீங்கள் நிமிர்ந்து காலடி எடுத்து வைத்தவர்கள் ஆவீர்கள்.
உங்கள் மொழிப்பாடங்களை “அறப்போர்” இனி இதழ் தோறும் தரும்.
அறப்போர் பொங்கல்மலர் 1961
புதியதோர் உலகம் செய்வோம்!
புதியதோர் உலகம் செய்வோம்!
பொங்கல் புதுநாளில் தமிழராவோர் அனைவரும் எடுத்துக் கொள்ளவேண்டிய சூளுரை இது!
பொங்கலையடுத்து மங்கலத் தேர்தல் வருகிறது. பொங்கலன்று கரும்பொடித்து வாய்க்களிக்கும் கைகள் மங்கலத் தேர்தலன்று வருங்காலத் தமிழினத்தின் வாழ்வுக்கான கரும்பாகத் தேர்தல் சீட்டில் எழுஞாயிற்றுக் குறிக்குத் தம் கை வண்ணம் தீட்டட்டும். பொங்கலன்று மதலையரை வாரியெடுத்து முத்த மளிக்கும்படி கலகலக்கும் கைகள், முத்தெடுக்க அலை கடலில் மூழ்கும் இனத்தவர் வாழ்வின் பொங்கல் நாடித் தேர்தலன்று தேர்தல் சாவடி சென்று அவ்வேட்பாளர்கட்கு வெற்றிச் சீட்டு அளிப்பார்களாக.
தமிழகத்தின் ஆட்சி அணிமை வருங்காலத்திலேயே தமிழுக்கும் தமிழினத்திற்கும் உலகில் தனிப்பேரிடமளிக்கும் ஆட்சியாக மிளிருமாக!
இப்பீடுமிக்க செயலில் ஈடுபடும்பொழுது, மனம் வள்ளுவர் கண்ட நாடா வளந்தரும் கனவு காணுமாக கனவிற்கண்ட அந்த நாடே நனவாக வேண்டுமென்று முத்தமிழன்னையை இறைஞ்சு மாக!
‘நாடாவளம்!’
முத்தமிழ் மரபில் வந்த முப்பால் முதல்வரின் ஆசையைப் பாருங்கள்!
மனிதர் நாடும் வளமே பெரிது. மிகப்பெரிது. மன்னர் இளங்கொட்டன் போன்றவர்களுக்கும் கூட, தாம் நாடும் வளம் கிட்டிவிடுவதில்லை. நாடும் வளத்தில் பத்தில் ஒரு பங்கு, நூறில், ஆயிரத்தில் ஒருதிங்கு கூடக் கிடைப்பது அரிதினும் அரிது.
ஆனால் வள்ளுவரோ ‘நாடா வளம்’ தரும் நாடு வேண்டும் என்கிறார்.
இப்படி வேண்டுபவர் கம்பரல்ல, வள்ளுவர் கம்பர் போன்ற உலகியல் கவிஞரின் வானளாவிய கற்பனை என்று அவர் வேண்டுதலைப் புன்முறுவலுடன் கேட்டு மகிழ்ந்தமைய முடியாது. அவர் தெய்வக் கவிஞர், வாய்மொழிக் கலைஞர்.
எண்ணியார் எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்
என்று கூறியவர் அவர்.
‘விரும்பியவர் திறமையுடையவரானால், விரும்பியபடியே எல்லாம் பெறுவார்’ என்று துணிந்தவர்கள். அத்துணிவுடன் தான் அவர் கூறினார்.
‘நாடுஎன்ப நாடா வளத்தன, நாடல்ல
நாடா வளந்தரும் நாடு’
என்று,
நாடா வளந்தரும் நாடு என்பது அவர் ஆசை அல்ல, துணிவு. நாடு வளந்தரும் நாடு ஒரு நாடே அல்ல என்று அவர் அடித்துரைக்கிறார்.
உழவன் வயிறாரப் பெண்டு பிள்ளைகளுடன் உண்ண வேண்டு மென்று விரும்புகின்றான். மலைபோலச் செந்நெல்லும் சிறு சம்பாவும் அம்பாரமாகக் குவிந்திருக்கும் காட்சியைக் கனாக் காண்கிறான். செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும் தட்டிலாப் பழந்தமிழ்ப் பண்பார்ந்த வாழ்வு வாழத் துடிக்கிறான்.
உழைப்பாளி தன் உழைப்பின் பயன் முழுவதும் தனதாகக் காண விழைகிறான். ஓய்வு நேரங்களில் உழைப்பின் பயனால் வாழ்வின் இன்பம் பெருக்கக் கனவு காண்கிறான்.
தாய் முத்தந்தரும் தன் குழந்தை முத்துக் குவியல்களில் திளைத்தாட வேண்டும் என்று இனிய கற்பனைக் காட்சி காண்கி றாள்.
தந்தை தன் மதலை கலை மன்னனாக வேண்டுமென்று துடிப்பார்வம் கொள்கிறான்.
கங்கை கொண்ட தமிழன், கடாரம் கண்ட தமிழன், யவனர் கள் வியக்கும் கலைத்தொழில் வாணிகம் செய்த தமிழன் புகழ் மீண்டும் வரா என்று நாம் விழைகிறோம். அப்புகழ் தாண்டி வருங்காலத் தமிழகம் மீண்டும் உலகு வளர்க்காதா என்று இன ஆர்வலர் கனவு காண்கின்றனர்.
கங்கைக்கும், காவிரிக்கும் கால்வாய் காண, இரும்பை உருக்கி எஃகுலைக்கண் தமிழகத்தில் பெருக்கச்செய்ய கவிபாரதி கனாக் கண்டு எழுச்சியுற்றார். மூன்றாவது திட்டத்திலில்லாவிட்டாலும் முப்பத்து, மூன்றாவது திட்டத்திலாவது தூத்துக்குடித் துறைமுக விரிவு, தூத்துக்குடி பம்பாய் ஊர்திப்பாதை, சேது மாக்கடல் திட்டம் ஆகியவை நிறைவேறாதா என்று கவலை கொள்கிறான் அரசியலார்வம் கொண்ட தமிழன்.
நாம் நாடும் வளங்கள் இவை!
அராபிக் கதைகள் வாசிக்கும் தமிழன் அலாவுதீனுக்குக் கிடைத்தது போன்ற ஒரு கைவிரல் மோதிரம் நமக்கு கிடைத்தால் இம்மெனுமுன் இவற்றையெல்லாம் நனவாகப் பெற்று விடலாம். வேறு வழியில்லை என்று நினைக்கக்கூடும்.
ஆனால் அலாவுதீன் கை மோதிரமல்ல, அவன் குத்து விளக்குக்கூட- கதையில் வரும் சிந்தாமணி, அமுதசுரபி, கற்பகத்தரு, காமதேனு ஆகியவைகள் கூட நாடியவற்றைத் தான் தரும்.
கற்பனைப் போலிகளில் இறங்காத நம் வள்ளுவர் இவை போலிக் கற்பனைகள், அவ்வளங்கள் கூட போதாதவை மிகச் சிறியவை என்கிறார். அவற்றைத் தாண்டி நாடாவளம் வேண்டும் என்கிறார். அவற்றை நீ வேண்டிப் பெறு என்று கட்டளை யிடுகிறார்.
இது எப்படி முடியும்!
வள்ளுவர் கருத்தைப் புறநானூற்றுப் புலவர் ஒருவர் சுட்டிக் காட்டுகிறார்.
“அரசே!”
“வான்மழை பெய்ய வேண்டுமென்று பொதுமக்கள் எதிர் பார்ப்பர்”.
“பெய்யுமிடங்களில் அது பெய்துவிட்டுப் போகட்டும்”.
“அது பெய்வதனால் உனக்கு ஒரு சிறப்பும் வராது”.
“மழை பெய்யாத இடங்கள் உண்டு”.
“மக்கள் அங்கு வான்மழை நாடமாட்டார்கள், ஆனால் அங்கே உள்ள மழை பொழியட்டும்”.
“நீ மலைகளிடையே நீர்த்தேக்கி அணைக்கட்டி, அவ்வளத்தை அம்மேட்டு நிலங்களுக்குக் கொண்டுவந்து நீர்வளம் அளிப்பாயாக”.
“வான் மழையின் புகழ் உனக்குக் கிட்டும்”.
நாடாவளம் கூறிய வள்ளுவர் கருத்தின் வழி விளக்கம் இதுவே.
“தற்காலத் தமிழனே!”
“நீ ஆட்சியாளனானால் உன் ஆட்சி கொண்டு வந்தால், நீ கனவு காண்”.
“கனவு கண்டதைத் திட்டமிடு”.
“கனவு காணாதவர், காணத் துணியாதவர் உண்டு அவர்கள் சார்பிலும் நீ கனவு காண்”.
“திட்டமிட்டாதவர், திட்டமிடத் துணியாதவர் உண்டு. அவர்கள் சார்பிலும் திட்டமிடு”.
“திட்டத்தை நிறைவேற்ற முடியாதவர் உண்டு. அவர்களுக்கும் சேர்த்து நிறைவேற்று”.
“மக்கள் நாடும் வளம் மட்டுமல்ல, நாடா வளமும் பெறட்டும்!”
வள்ளுவர் மரபில் இன ஆட்சி கோரி நிற்பவர்களுக்குத் தான் புறநானூற்றுப் புலவர், வள்ளுவர் இதை கூறுகிறார் என்பது உண்மையே ஆனால் பாதி உண்மை மட்டும்தான்.
அவர் எல்லாத் தமிழருக்குமே கூறுகிறார். தமிழின் ஆட்சி நாடும் தமிழனுக்கு மட்டுமல்ல, நாடா தமிழனுக்கும் கூறுகிறார்.
நாடவளம் தர நாடுபவருக்கு உன் சீட்டை அளி.
நாடும் தமிழர் நாடிச் செய்வதையே நாடித் தமிழனும் செய்க.
“நெல்லுக்கிறைத்த நீர்
வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசி
யுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல்
அவர் பொருட்டு
எல்லார்க்கு பெய்யும் மழை”
நாடும் தமிழர் சீட்டு நாடாத நாடாதவர்களும் நலம் பெற விழைபவர்களும் இன ஆர்வலராகவே இருக்கமுடியும். வேறு நல்ல நாடாமல் இனவழி நின்று செயல் செய்யின், நாடாவளம் நாடாதவர்க்கும் வந்துவிடுவது உறுதி.
விழு ஞாயிற்றில் வருவது அறிந்து வரு ஞாயிற்றின் வண்ண முணர்ந்து, நாடா வளம் பெருக நானிலம்!
அறப்போர் பொங்கல் மலர் 1962
வள்ளுவர் கண்ட குடியாட்சி முறை
குடியாட்சி, குடியரசு என்ற சொற்கள் இன்று அரசனில்லாத ஆட்சியைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது! சிறப்பாக குடிமரபாக வரும் ஆட்சியை குடியாட்சி என்றும், அது இல்லாத ஆட்சியையே குடியாட்சி குடியரசு என்றும் இன்று நாம் கொள்கிறோம்.
ஆனால் பிரிட்டனில் இன்று நடைபெறும் ஆட்சி குடியாட்சி என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். குடிமரபான மன்னர் உடைய குடியாட்சியாகவே அது நிலவுகிறது.
திருவள்ளுவர் கண்ட ஆட்சி குடியாட்சி என்பதிலும் ஐய மேற்பட வழியில்லை. ஆனால் அது பிரிட்டனைப்போன்ற அரசனைக் கொண்ட ஆட்சியையே குறிக்கும். இவ்வகையில் குடியரசு என்ற தொடரில் இன்றும் ‘அரசு’ என்ற சொல்லும், ‘குடியரசு’ ‘குடியாட்சி’ என்ற இரண்டு தொடர்களிலுமே குடிமரபைக் குறித்த ‘குடி’ என்ற சொல்லும் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
வள்ளுவர் கண்ட குடியாட்சி எத்தகையது. பிரிட்டனில் நடைபெறும் குடியாட்சியுடன் அதற்குரிய ஒற்றுமை வேற்றுமைகள் என்ன என்று காண்போம்.
வள்ளுவரின் பொருட்பால் எதுபற்றிக் கூற எழுந்தது? ஒருசாரார் அது பொருள் அல்லது பணம் பற்றிக் கூற வந்ததென்பர் நாலடியார் காலத்திலேயே இப்பொருள் இருந்ததென்னலாம். பொருளால் அறமும் இன்பமும் கூடுவதாதலால் நடுவணதாகிய அதுவே மூன்றில் சிறந்ததென்று நாலடிப் பாடல் இதனைக் காட்டுகிறது. இன்னும் பலர் இக்கருத்தைக் கொண்டுள்ளனர். சமஸ் கிருதத்தில் சாணக்கியரின் ‘அர்த்த சாஸ்திரம்’ இக்கருத்து நிலவிய காலத்தில் எழுந்தது. அவர் பணம் ஈட்டுதலையே அரசியலின் முதற்கடமையாக அந்நூலில் குறித்துள்ளார்.
பொருட்பால் ‘அரசியல்’ கூறுவது என்பர் மற்றொரு சாரார். பொருள்பற்றி அதாவது பணம்பற்றி வள்ளுவர் மிகுதி பேசவில்லை. ‘பொருள் செயல்வகை’ என்ற அதிகாரம் ஒன்றுதான் அதுகூறும். சமஸ்கிருதத்தில் பர்த்ருஹரியின் நீதி சதகம் இயற்றப்பட்ட காலத்தில் இக்கருத்துப் பரவியிருத்தல் வேண்டும். அர்த்தம் (பணம்) என்ற சொல்லினிடமாக நீதி (அரசியல்) என்ற சொல்லை அவர் பயன்படுத்தியது இதனை எடுத்துக்காட்டும்.
இருபொருளுமே வள்ளுவர் பொருட்பாலுக்கு முற்றிலும்
போதாதவை. ‘படைகுடி கூழமைச்சு நட்பரண்’ என்ற ஆறு அரசியல் உறுப்புக்களையே வள்ளுவர் கூறுகிறார். சமஸ்கிருத ஏடுகளைப் போல் அரசனை உறுப்புக்களில் வேறாக்காமல் உறுப்புடைய முதலாக்குகிறார். அத்துடன் அமையவில்லை. குடியியல் என்ற ஒரு இயல் இணைத்துள்ளார். தவிர கல்வி பண்புடைமை முதலிய அதிகாரங்கள் உண்மையில் சமஸ்கிருத முறைப்படி அரசியலுக்குப் புறம்பானது உரையாசிரியர்கள் இதற்குக் கூறும் விளக்கங்கள் பொருத்திக் காட்டுவனவே தவிர பொருந்துவனவல்ல.
வள்ளுவர் பொருட்பால், அரசியலைக் குறுகிய பொருளில் கூறுவதன்று. அறத்தோடு கூடிய அரசியல், மக்கள் இன்பத்தைக் குறிக்கோளாகக் கொண்ட அரசியல் கூறுவது. ஆகவே தான் அது அரசியல் (Polities) மட்டுமன்றி அதைக் குறிக்கோள் வழி இயக்கும் அரசனைப்பற்றியும் (Slalesmanship) அதனால் பயன்பெறும் குடிமக்களைப் பற்றியும், குடியாட்சியில் அவர்கள் தகுதிபற்றியும், அரசியலின் அடிப்படையான சமுதாய இயல் (Sociology) பற்றியும் இவற்றின் தொடர்புகள் பற்றியும் கூறியுள்ளார்.
வள்ளுவர் குடியாட்சி வடவர்கண்ட முடியாட்சி அரசியலு மல்ல, மேலையுலகம் கண்ட குடியாட்சி (Democracy) யும் அதனை முழு அளவில் குறிக்காது! அது இரண்டும் கடந்த ஒன்று. சமதருமம் பொதுஉடைமை ஆகிய இக்காலப் புதுக்குறிக் கோள்களையும் உட்கொண்டது. இவற்றையும் தாண்டித் தற்கால நலப்பண்பாட்சியின் (Welfare State) குறிக்கோளை உட்கொண்டது. அது மட்டுமன்று. வடவுலகோ, மேலை யுலகோ சமதரும உலகோ காணாத அடிப்படை அறிவுத் தத்துவங்களை அது உள்ளடக்கியது என்பதை உலகம் இனி காண இருக்கிறது.
குடியாட்சி பற்றி எழுதிய உலகப் பேரறிஞர் இருவர். இவர்களில் கிரேக்க அறிஞர் பிளேட்டோ கண்ட ‘குடியரசு’ உண்மையில் வல்லார் வல்லாட்சியே! ஆனால் சிறியோரை அடக்கி ஆளும் பெரியோர்களை எவ்வாறு கண்டுணர்வது, அவர்களை ஆட்சியில் அமர்த்திக் கட்டுப்படுத்துவது யார்? எப்படிக் கட்டுப்படுத்துவது என்ற கேள்விகளை அவரே கேட்கிறார். ‘கடவுள் செயலால் நேரவேண்டியது இது’ என்று கூறி அமைகிறார்.
இரண்டாவது அறிஞர் ரூசோ. சமுதாய மக்கள் ஒப்பந்தப்படி வந்தவர்கள் ஆட்சியாளர்கள். அவர்கள் மக்கள் நலத்தை மதிக்காவிட்டால் புரட்சி செய்யும் உரிமை மக்களுக்கு உண்டு என்று கூறியமைகிறார். ஆட்சியாளரை யார் எவ்வாறு தேர்வது, தகுதியற்ற ஆட்சியாளர்களைப் புரட்சியால் ஒழிக்க மக்கள் ஒன்றுபடுவது எப்படி, எவ்வாறு புரட்சி செய்வது என்று அவர் கூறாமல் விட்டு விட்டார்.
அறிஞர் கருத்தை விடுத்து, நடைமுறையை ஏற்றுக் கொண்டால், வரலாற்றில் குடியாட்சி வகைகளை ஏறத்தாழ இருவகைக்குள் அடக்கலாம்.
கிரேக்க குடியாட்சியில் மக்கள் கூடி மன்ற மூலம் ஆட்சியைத் தாமே இயக்கினர். ஆனால் இது கும்பலாட்சியே தவிர வேறன்று. நடைமுறையில் மாறிமாறிக் கொள்ளையரையே இது ஆளவிட்டது. இறுதியில் அலெக்ஸாண்டரின் முடியாட்சியில் இக்குடியாட்சிகள் சென்று அழிவுற்றன.
மேலையுலகக் குடியாட்சியில் தேர்தல்முறை ஒரு புது முறையில் பயன்படுத்தப்படுகிறது. பண்டைக்கால மொழி யுரிமைகள் ஆட்சியாளர் சட்டங்களை ஆதரிக்கவும் எதிர்க்கவும் மட்டுமே பயன்பட்டன. ஆட்சியாளரை (பேராட்களை)த் தேர்ந்தெடுக்க பெரும்பாலும் பயன் பட்டதில்லை. ஆயினும் பல நாடுகளில் அரசனைத் தேர்ந்தெடுக்கவும் கீழையுலகில் குறிப்பிட்ட சில குழுக்களின் பேராட்களைத் தேர்ந்தெடுக்கவும் பயன்பட்டதுண்டு. ஆனால் மொழியுரிமை இங்கே பெரும் பான்மைக்கே உரிமை தந்தது என்பது தெளிவு. இது தலைசிறந்த தேர்வு முறையாகாது. ஏனெனில் பல்லோர் ஆட்சிக்கும் வல்லோர் ஆட்சிக்கும் வேறுபாடு பெரிதும் கிடையாது. பல்லோரும் வல்லோரும் நல்லோராயிருந்தால் இருவழியிலும் நல்லாட்சி உண்டு. அல்லது இரண்டும் தீங்காகவோ அறிஞர் கருதியபடி ‘கடவுள் கருணை’ எதிர்பார்த்த முறையாகவோ மட்டுமே இருக்க முடியும்.
வள்ளுவர் குடியாட்சி முறை பிரிட்டனில் குடியாட்சி முறைக்குப் பெரிதும் ஒப்புமை உடையது என்று மேலே கண்டோம். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சி முறையில் தெளிவாகக் காணப்படாத ஒரு கூறு அதில் உண்டு; அரசியலை வள்ளுவர் அறத்தின் அடிப்படையில் அமைத்தார். இந்த ‘அறம்’ மதவாதிகளோ சமஸ்கிருதவாணரோ கருதும் ‘கற்பனை’ அறம் அன்று. அது உண்மையில் சமுதாய இயலை அடிப்படையாகக் கொண்டது.
‘குடியியல்’ காட்டும் பண்பு இதுவே.
வள்ளுவர் அரசன் ‘கோ’ அல்லது ‘கோன்’ அதாவது குடித் தலைவன்! அவனே வலிமையால் வளம் பெருக்கிய வேந்தன். அதாவது முடியரசன். அவனே மன்னன் (மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தலைவனானவன்). பெயரளவில் ஆட்சியுரிமை முழுதும் அவனிடமே நின்றன. இன்றைய அரசியல் மொழியில் அவன் செயலாட்சித் துறைத் தலைவன். (Head of Executive) வெறும் அமைச்சனும் கூட அவனை அணுகாது அகலாத அஞ்சியே நடக்க வேண்டும். அரசனின் வல்லாட்சிக் கூறாக வள்ளுவர் இதனைச் சந்திக்கிறார்.
ஆட்சியாளனைத் தேர்வது யார், எப்படி, இதற்கு வள்ளுவர் விடை எளிது. இயல்பான குடித்தலைவன், திறமை யினால் உயர்ந்தவன், மக்கள் விருப்பத்தால் வலுவடைந்தவனே அவன்.
அரசன் வல்லாட்சியாளனானாலும் மனம் போன ஆட்சியாளனல்ல. செவிகைப்ப இடித்துக் கூறும் கடமையை வள்ளுவர் அமைச்சருக்கு அளித்துள்ளார். அமைச்சரைத் தூக்கிடவோ தள்ளவோ அரசனுக்கு ஆற்றலுண்டு. ஆயினும் இடித்துரைக்கும் உரிமையை அமைச்சனுக்கும், இடித்துரைப் பவரை விரும்பி ஏற்றாளும் கடமையை அரசனுக்கும் வள்ளுவர் வகுத்துள்ளார்.
அரசியலில் குடியாட்சியில் கூட உரிமைகளும் கடமைகளும் வெற்றறவுரையாக அறிவுரையாகக் கூறப்பட்டால் பயனில்லை. அவற்றின் நிறைவேற்றத்துக்கு (Final Sanction) வழிவகை வேண் டும்.
பிளேட்டோவும் ரூசோவும் சென்று முட்டிக்கொண்ட கூறு இதுவே.
தேர்தல் முறையும் புரட்சி முறையும் மேலை அரசியலார் கண்ட இதற்குரிய விடைகள். ஆனால் தேர்தல் முறை திருவுளச் சீட்டு முறையை விடச் சிறந்ததன்று. அழித்தழித்தாக்கினால் நாளடைவில் நலம் விளையும், மக்கள் பொறுப்புணர்ந்து நல்லாட்சி அமைத்துக்கொள்வர் என்று மேலைக் குடியாட்சி கருதுகிறது.
ஆனால் குடியாட்சி என்றும் அழித்தழித்தாக்கிடும் ஆட்சியே என்று உலகம் கண்டு வருகிறது. குடியாட்சி முறையை எந்த நேரத்திலும் செல்வர், திறனுடையோர், வல்லார் கைப்பற்றி மக்களை அடக்கியோ வசப்படுத்தியோ ஏய்த்து விடமுடியும்.
புரட்சியும் ஒரு அரும்பெரு முறையன்று. பழைய பேயை அரும்பாடுபட்டு ஒழித்தபின் பழைய பேயினும் புதியபேய் கொடிதெனக் கண்டால் மக்கள் யாது செய்வது?
புரட்சியும் அழித்தொழித் தாக்கும் முறையன்றி ஒரு சிறந்த ஆக்கமுறை ஆகாது.
இவ்வுண்மைகளைக் கண்டவர் வள்ளுவர். வல்லோர், பல்லோர், தேர்தல், புரட்சி ஆகியவற்றை அவரும் கருத்தில் கொண்டிருந்தார்.
“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்”
என்ற வள்ளுவர் புரட்சி தத்துவம் தேர்தல் முறை கடந்த புரட்சி முறைபற்றிய அவர் எண்ணத்தை நிழலிட்டுக் காட்டும். ஆனால் குடியாட்சி கெட்ட இடத்தில் அதன் அழிவுக்குரிய இயல்பான நிலைகளாகவே இவற்றை அவர் குறித்தார். குடியாட்சியின் ஆக்க ஒழுங்குமுறை இவையல்ல.
இன்றைய நம் குடியாட்சிக்கு நோக்கமில்லை. ஆனால் வள்ளுவர் குடியாட்சிக்கு சமதருமவாதிகள், பொதுவுடை மைவாதிகள், நல ஆட்சிவாதிகள், ஒத்த ஒரு நோக்கம் உண்டு. அந்நோக்கம் மக்கள் இன்பம், இன்பப் பெருக்கம் மேன்மேலும் இன்ப ஆர்வம் பெருக்கிய பொங்கல்வள வளர்ச்சி ஆகியவையே யாகும்.
வள்ளுவர் குடியாட்சியில் ஆட்சி நடைமுறைக்கும், அழித்தாக்கும் சீர்திருத்தத்துக்கும் உரிய நிலவர (Permanant Sanction) ஒழுங்கு முறைகள் உண்டு. ஏனெனில் இக்கால ஆட்சி முறைகளைப் போல் வள்ளுவர் ஆட்சிமுறை மேலிருந்து கீழே உரிமைகள் வரப்பெற்ற ஆட்சி (Downward course of Rights and Regulations) அன்று. அது குடும்பம் சமுதாயம் அரசு எனக் கீழிலிருந்து மேல் நோக்கிச் செல்லும் ஆட்சிமுறை (Upward course of Rights and Regulations) ஆகும். நம் கால அரசியல் மொழியில் கூறுவதானால் வள்ளுவர் அரசியல் சமுதாய இயல்பின்மீது எழுப்பப்பெற்றது. நம் கால அரசியல் சமுதாயத்தின் அடிப்படையாக வளர்ந்து வருவது.
வள்ளுவர் அரசியல் தனிமனித உரிமை, தனிமனித நலங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. தற்கால குடியாட்சிச் சட்டங்கள் இன்னும் அம்முறையில் அமைக்கப்பட வில்லை. தவிரப் பல்லோர் தெரிந்தெடுக்கும் சில்லோர் நலங்களே செயல்முறையில் முனைப்பாக வளர்தல் இயற்கை! இதை மாற்றக் குடியாட்சியில் எந்த வகை துறையும் இல்லை. ஆனால் வள்ளுவர் ஆட்சி முறையில் இதற்குப் பல காப்புறுதிகள் உண்டு.
முதலாவது வள்ளுவர் அரசே உண்மைக் குடியரசு. ஏனெனில் அரசன் குடிமரபில் வந்து மக்கள் ஆதரவும் பெற்றவன். இது மட்டுமன்று. அவன் குடிமக்களிடையே பண்டைய ஆட்சி வகுப்பாகிய நாட்டில், நாடு என்பது தொடர்புடைய குடிகளே - அதாவது நாடு முழுவதும் கொள்வினை கொடுப்பினையால் பிணைக்கப்பட்ட ஒரு பெருங் குடும்பம். அரசன் ஒரு பெருங் குடும்பத்தலைவனே. குடிப்பாசமும் குருதிப்பாசமும் இனப்பாசமும் அவன் புகழ் விருப்புடன் போட்டியிடுகின்றன. அவன் தன்னலத்தை இவை தடை செய்கின்றன.
இரண்டாவது அறம் ஆட்சிமுறைமை; இன்பம் ஆட்சி நோக்கம். மேலை அரசியலிலோ வடவர் அரசியலிலோ இதன் நிழற்கோட்டைக் கூடக் காணமுடியாது.
இறுதியாக அரசன் அமைச்சர்களை முழுதும் தன்மனம்போல ஆக்கியழித்துவிட முடியாது. அமைச்சர்களை அவன் பெரியார் ‘அவை’ அல்லது ஐம்பெருங்குழு எண்பேராயங்களிலிருந்தே தேர்ந்தெடுக்கிறான். அமைச்சனை அரசன் ஒறுக்க முடியும். ஆனால் பெரியார் அவையின் ஆதரவின்றி அவன் அடுத்த அமைச்சனைத் தேர்ந்தெடுக்க முடியாது. ஆளவும் முடியாது. ஆட்சியில் பெயரளவில் அரசனுக்குள்ள செயலுரிமை இந்தப் பெரியார் ஆதரவின் வலுவன்றி வேறல்ல.
அரசன் அமைச்சனை அமர்த்தலாம், நீக்கலாம், தண்டிக்கலாம். ஆனால் பெரியார் அவையிலிருந்தே தேர்ந்தெடுக்க வேண்டும். அந்தப் பெரியாரையோ அவன் அமர்த்த முடியாது. ஆக்க முடியாது. அமைக்க முடியாது.
பெரியாரைத் தேர்ந்தெடுப்பவர்கள் சான்றோர்கள்.
சான்றோர்களைத் தேர்ந்து கூறுபவர்கள் பண்பாளர்.
பண்பாளர்களை வகுத்துரைப்பவர்கள் நற்குடி மக்கள், குடிமையின் பெருமையும் நலனும் உடையவர்கள்.
குடிப்பெருமையைச் சமுதாயம் மட்டுமல்ல, இனமே வகுத்த மைக்கிறது. ஏனெனில் அது குடிமரபாக சமுதாயத்தின் வழிவழித் தேர்வு.
குடிப்பெருமையின் அடிப்படை கற்பு, களவு, வீரம், மானம் ஆகிய தமிழ் ஒழுக்கப் பண்புகள் ஆகும்.
வள்ளுவரின் குடியியல் இங்ஙனம் உலகில் எந்த நீதி நூலிலும், அரசியல் நூலிலும் கூறாத அடிப்படைக் குடியாட்சிப் பண்புகளின் பெருவிளக்கம்.
குடிமை, பண்புடைமை, சான்றாண்மை ஆகியவற்றை மற்ற நீதிநூல்கள் கூறும் திட்ப நுட்ப வரையறைகளற்ற பசப்புரை களாகவே எவரும் கருதி வருகின்றனர். வள்ளுவர் நூலின் தனிப் பெருஞ் சிறப்புகளில் பல இவற்றில் விளக்கி யுள்ளவை ஆகும்.
வள்ளுவர் பொருள், குடிமை, சமுதாயம் ஆகியவற்றின்மீது அமைந்த அரசியற்கட்டமைப்பு ஆகும். அதில் அரசன் ஒரு தலைமுறைக்குரிய ஒரு தனி மனித அல்லன், தலைமுறை தலை முறையாக நின்றதில் வளர்ந்துவரும் பண்பாட்டின் சின்னமாக இயங்குபவன் அவன். அப்பண்புகளே அவனைக் கட்டுப்படுத்தி வளர்ந்து உருவாக்குவன.
இத்தகைய முழுநிறை குடியாட்சி ஒன்றினால் மட்டுமே ‘நாடாவளத்தன’ ஆகிய நாடு அமைய முடியும். அது ஒரு நாட்டைக் கெடுத்து ஒரு நாடு இன்று பெரும் வளம் அன்று, உலக அடிப்படையில் அமைந்த வள்ளுவர் முப்பால் நாட்டு வளத்தையும் உலக வளத்தின் ஊற்றாக வேண்டுவது ஆகும்.
வள்ளுவரின் அரசியல் குறிக்கோள், அவரது இன்பக் குறிக்கோள். வாழ்க்கைக் குறிக்கோள், கடவுட் குறிக்கோள் ஆகியவற்றைப் போலவே மேலையுலகும் கீழையுலகும் உயர்காட்சிகள். உண்மையில், உலகம் காணா உயர்பண்பியல் வாழ்வினை ஒட்டியிருந்த சங்ககாலத் தமிழர்களின் கனவுகள் கூட வள்ளுவர் குறிக்கோளின் காலடியைச் சென்றெட்டிய தில்லை. நாமோ மேலை கீழையுலகமோ அதைக் கருத முடியாததில் வியப்பில்லை.
தமிழ் வழிகண்டு உலகம் சிறக்க
வள்ளுவ வழிகண்டு தமிழ் சிறக்க
வள்ளுவ வழியை உலகுகாணும் நாள்வரின், உலகத்துக்குக் கடவுளைக் காட்டிய கடவுளாக வள்ளுவர் விளங்கத்தக்கவர் ஆவர்.
மன்றம் ஆண்டுமலர் 1962.
பொங்கு மாவளம்
பொங்குக வாழ்வு!
பொலிக செல்வங்கள்!
புதுவளம் பெறுக பொன்னார் தமிழகம்!
இமயத்தில் புகழின் எல்லை கண்ட தமிழன் இன்று அதே இமயத்திலேயே கயமையின் எல்லை கண்டுள்ள சீன அரசின் கொட்டமடக்கி, பாரதப் பெரு நிலத்துக்கு மீண்டும் புதுவாழ்வளிப்பானாக!
வள்ளுவன் புகழைத் தமிழினம் வையகமெல்லாம் வாரி வழங்கி உலகுக்குப் புதுவழி காட்டுக!
பொங்கல் விழா! வாழ்வில் பொங்குமா வளம் அவாவும் திருநாள், அவாவி அது காண வழிவகுக்கும் தமிழினத்தின் பெரு நாள்!
செந்நெல் விழா, செங்கரும்பு விழா, செந்தமிழ் விழா அது!
முக்கனி விழா, மூவேந்தர் ஆண்ட திருநாட்டு விழா, முத்தமிழ் விழா!
முப்பால் விழா! வள்ளுவன் விழா! வள்ளுவன் கண்ட அற விழா, பொருள் விழா, இன்ப விழா! மூன்றும் உள்ளடக்கிய வீட்டு விழா! வீட்டின் விரிவாகிய நாட்டு விழா! நாட்டின் விரிவாகிய இனவீட்டின் விழா, மனித இனவிழா, மனிதக் குடும்பத்தின் மாண்பாராயும் விழா!
வள்ளுவன் கருத்தில் கனாக்கண்ட நாடா வளங்கண்ட நாட்டை உளங்கண்டு நாடும் விழா! அதற்கான திட்டம் தீட்ட வள்ளுவன் ஏடு பயிலும் கன்னித் தமிழன் மனித இனத்துக்கு அறைகூவலிட்டழைக்கும் விழா!
நாடு!
வளம் நாடு!
நாடிய வளம்பெறு!
மேலும் நாடு!
நாடமுடியும்மட்டும் நாடு!
நாடிய வளமெல்லாம் பொய்யாக, நாடா வளம் தருவது
ஏதாவது
உண்டா?
ஆம்!
உண்டு!
அதுதான் வள்ளுவன் கனவுகண்ட நாடு!
இத்தகைய நாடு எங்கே இருக்கிறது?
அதைப் பெறுவது எப்படி?
இதற்குரிய வழிதான் பொங்கல் விழாக் காட்டும் வழி, பொங்கு மாமறையாம் முப்பாலோடு விளக்கும் முப்பால் வழி ஆகும்.
அவாவுவது அறம், பொங்குமாவளம் அவாவுவதுதான் அறம்! இல்லறத்தான், உழவும் உழைப்பும் உழுவலன்பும் ஒருங்கிணைந்த மேழிச் செல்வத்தை அறவாழியாகக் கொண்டு அரசோச்சும் அற முதல்வன் அவாவழிச் செயல், செயல் வழி அவா இது!
அவாவை நிறைவேற்றிப் பொருளாக்க அரசு வழிகாணும் நிலை,அரசு வழிகாண அதற்கு விழியளிக்கும் அறிவு, அரசு விழி மலர அதற்கு மழையாயுதவும் அருள் ஆகியவற்றின் கூட்டு வளமே பொருள்!
நல்லவாவும் நல்வளமும் இருந்தால் போதுமா? அதைத் தாங்கும் ஆற்றல், வளத்தை வாழ்வின் இன்பமாக்கும் திறம் வேண்டாமா? மேழிச் செல்வத்தரசன் அவா ஆழிச் செல்வத்தரசன் அவ்வவாக்கடந்த வளம் மேவுவிக்க, அவற்றால் இறவா இன்பமளிக்கும் அரசு ஒன்று உண்டு. அதுவே பெண்மை அரசு! அது துன்பத்தில் இன்பம் காண்பது, துன்பத்தையே இன்பமாக்க வல்லது! கல்லைக் கனியாக்கி, கனியை இனிக்கும் வைரமாக்கும் மாயக்காரன் போல, அது துன்பத்தை இன்பமாக்கி, இன்பத்தைப் பேரின்பமாக்கி விடுகிறது!
அது மனிதக் கனி தந்து மனிதக் கனியை மனிதக் கனி உள் விளைவிக்கும் விதத்திலடங்கிவிடுகிறது!
மேழி அரசு, ஆழி அரசு, வாழ்வின் அரசு ஆகிய முப்பாலரசுகளும் வாழ்கவென முப்பால் முதல்வன் பெயராகிய வள்ளுவன் பெயரால் வாழ்த்தி, முப்பால் பொங்கல், முத்தமிழ்ப் பொங்கல், நிலநீர்வான் என்ற மூவுலகப் பொங்கல் காணும் நாளே பொங்கல் நாள்!
நிலம் பொங்குக வீரம்! அவ்வீரத்தின் சின்னமாகச் சோழன் புலிக்கொடி உயர்த்தினான்.
கடல் பொங்குக செல்வம்! அச்செல்வத்தின் சின்னமாகப் பாண்டியன் மீன் கொடி உயர்த்தினான்.
வான் பொங்குக ஆற்றல்! அந்த ஆற்றலின் சின்னமாகச் சேரன் விற்கொடி உயர்த்தினான்.
முத்தமிழ் பொங்குக முப்பால்!
முப்பால் பொங்குக மூவாத வாழ்வின் இன்பம்!
முத்தமிழுண்டு முப்பால் பருகித் தமிழகமும் உலகும் வள்ளுவர் கண்ட வளமெலாம் பெற்று வாழ்க!
திராவிடன் பொங்கல் மலர் 1963
வருங்கால உலகம் பற்றி வள்ளுவன் கண்டகனவு
நிகழ்காலம் என்னும் தூரிகை கொண்டு, சென்ற கால அனுபவமென்னும் வண்ணந் தோய்த்து மனித இனம் காலத்திரையில் வரைய இருக்கும், வரைந்து வரும் ஓவியமே வருங்கால உலகம். ஆனால், காலம் செல்லுந்தோறும் வருங்காலம் நிகழ்காலம் ஆகிக் கொண்டு வருகிறது. நிகழ் காலமும் சென்ற காலமாகி அதனுடன் ஒன்றுபட்டு அதைப் பெருக்கிக் கொண்டே வருகிறது.
மனித இனம் ஒவ்வொரு கணமும் நிகழ்காலமென்னும் பழைய தூரிகையை எறிந்துவிட்டு, அடுத்த கணமாகிய புதிய தூரிகையைக் கைக்கொள்கிறது. ஆனால், ஒவ்வொரு கணமும் பழைய வண்ணத்துடன் புது வண்ணமும் தோய்ந்து கொண்டே செல்கிறது.
பழமையின் பெருமை இது.
வருங்கால உலகமாகிய படத்தைக் கலைஞன் சிறுகச் சிறுகத் தீட்டி; சில சமயம் அழித்தழித்துப் புதிதாக வரைகிறான். சில சமயம் பழைய வண்ணத்துக்குப் புது மெருகூட்டி, பழமையும் புதுமையும் குழைத்துப் பழய உருவுக்குப் புத்துயிரும், பழைய உயிருக்குப் புதிய ஆற்றலும் மாறிமாறி வழங்கிக் கொண்டேதான் வருகிறான். இவ்வாறு அவன் வரைந்து வரும் படத்தைத்தான் நாம் மனித இன நாகரிகம் என்று கூறுகிறோம்.
புதுமையின் அருமை இது.
மனித இன நாகரிகம் என்று ஒரே படம். ஆனால் அதில் கால்விரல் நகத்தினையே கொண்டு அதையே முழுப் படமாகக் கொண்டு, பல படங்களாகக் கருதியவன் உண்டு. அழகு காணாத பெரும்பாலான நடைமுறை வாழ்வினர் இவர்களே. அண்ணாந்து பார்த்து பாதப் படிம அழகு காண்போர் சிலர். குதிங்காலழகு காண்போரும் சிலர். இவர்களே உலகின் பொதுவான அறிஞர், கலைஞர்கள், மனித இன நாகரிகத்தின் ஒரு நிகழ்கால கூறே கண்டு, அதையும் பலவாக, பல வடிவங்களாகக் கொண்டவர்களே மிகப் பலர் ஆவர்.
ஒருமையின் மாயம் இது.
படம் வரையும் கலைஞன் ஒருவனே என்று கூறிய உலகப் பெரியார் ஒரு சிலர் உண்டு. இவர்களே அருளாளர், கடவுட் பற்றாளர். கலைஞன் ஒருவனே என்பதை இவர்கள் பறைசாற்றினர். ஆனால், படங்கள் பல, படங்கள் வரையப்பட்ட திரைகளும் பல என்று அவர்கள் கருதியதனால், கலைஞன் ஒருவன் என்பதையோ, அவன் கலை எத்தகையது என்பதையோ மக்கள் உளங்கொள நம்பவைக்க அவர்களால் முடியவில்லை.
கலைஞன் ஒருவவே. அது மட்டுமல்ல அவன் கலைப் படைப்புக்கு இடமான திரையும் ஒன்றே என்று கூறியவர் இன்னும் சிலரே. இவர்களே பண்டைத் தமிழ்ப் பெரியார். இவர்கள் ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்று பாடினர். கலைஞன் ஒருவனே என்பதற்கு விளக்கமாக, திரை ஒன்றே என்று இவர்கள் கூறியதனால், கலைஞன் ஒருமையில் சிறிது நம்பிக்கை பிறந்தது. இதனையே தமிழ்ப் பண்பு என்று கொண்டனர் தமிழ் மக்கள்.
கலை ஒருமையையோ கலைஞன் ஒருமையையோ பாடியதன்றி, வெறும் கண்கொள்ளக் காணவில்லை. மனம்கொள்ள உணரவில்லை. வாழ்வில் பின்பற்றவில்லை.
தமிழ்ப் பெரியாருள் ஒரே ஒருவர் பாட்டை மூன்று வரியாகப் பாடினார்.
படம் ஒன்று. மனித வாழ்வு,
மனித இன நாடகம் ஒன்று,
திரை ஒன்று. உலகம் ஒன்று. இயற்கை ஒன்று.
கலைஞன் ஒருவனே. மனித இன வாழ்வின் திட்டம், உலகக் குறிக்கோள் ஒன்றே. புதுப்புதுத் தூரிகை மாறினாலும், பழைய வண்ணத்துடன் புது வண்ணம் கலந்து புதுப்புது பெருகு ஊட்டப் பார்த்தாலும், இவையெல்லாம், ஒரு கலைஞனின் ஒரு கலைத் திட்டத்தின் அடிப்படையில் அமைந்த, அமைந்துவரும், அமைய இருக்கும் படிப்படியான முன்னேற்றமே என்று அவர் பறை சாற்றினார்.
ஆம்.
படம் ஒன்று.
படம் வரைவதற்குரிய திரை ஒன்று.
திட்டமிட்டுப் படம் வரையும் கலைஞனும் ஒருவனே.
வள்ளுவர் கண்ட முப்பொருள் உண்மை இது.
படம் மனித வாழ்க்கை, வருங்கால உலகம்; மனித இன நாகரிகத்தின் குறிக்கோளான இன்பம். கலைஞனின் உயிரும் குறிக்கோளும் இதுதான். ஏனெனில் அக்குறிக்கோளுருவாகவே அவன் விளங்குகிறான்.
திரை மனித வாழ்க்கை நடத்துவதற்குரிய ஆதாரம். இன்பத்தை அடையும் சாதனங்களின் தொகுதி, பொருள் இதுவே இயற்கை என்னும் திரை மீது, சமுதாய அமைப்பென்னும் சட்டமிட்டு; அரசியல் என்னும் வரம்பு கோலி, சமுதாயமுறை ஆட்சி முறை என்னும் புறக்கோலமிட்டு, படத்துக்காகக் கலைஞன் வகுத்து வைத்த பின்னணி ஆதாரமாகும்.
படத்துக்கு வண்ணமும் உருவமும் தர, கலைஞன் உள்ளத்திலுள்ள கருத்தில் உருவங்களுக்குப் புறவடிவம் தர, அவன் வகுத்துக் கொண்டுள்ள பல வண்ணப் படிவங்களான வண்ணமைகள், தனி மனிதன், கடமைகள் உரிமைகளாகிய ஒளி நிழற் கூறுகளை ஒருங்கமைத்துக் காட்ட அவன் மேற் கொண்டுள்ள நெறிமுறை ஆகிய தூரிகை இவையே அறம். குடும்ப வாழ்வு என்னும் இல்லற மாயும், சமுதாயத் தொண்டு என்னும் துறவறமாகவும், இவற்றுக்குதவும் அன்பு என்னும் சகலப் பண்பு, அருள் என்னும் உயர் பண்பு ஆகியவை அவற்றின் நெறிகளாகவும் அமைகின்றன.
அறம், பொருள், இன்பம் என்னும் இம்மூக்கூறுகளும் ஒருங்கே இணைந்த முழுப் படமே மனித இன நாகரிகம் என்னும் வீடு.
ஓருலகம் - ஓருலக வாழ்வு, - ஓருலக இன்பம் பற்றி இன்றைய உலகப் பெரியார்கள் பேசுகின்றனர், எழுதுகின்றனர், திட்டமிடு கின்றனர்.
உலக நீதிமன்றம், ஜெனிவா உலக நாடுகள் நங்கம், ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகியவை இவ்வடிப்படையில் எழுந்துள்ளன.
படம் பல, திலை பல, கலைஞர் பலர் என்று செப்பும் உலகத்திலே, வள்ளுவர் வழிவந்த இந்த ஒருவகைப் பண்பு அழகுக் கனவாகத்தான் இன்னும் நிலவ முடிகிறது. பல ஆயிர ஆண்டுகளுக்கு முன் கனவைத் திட்டமிட்டு உலகெலாம் பரப்பிய முப்பால் வேத முதல்வனை அறியாமல் அக்கனவு முழு நிறைவு பெற முடியுமா?
ஐக்கிய நாடுகளுடன் அவையும் அதனை அறியட்டும் மேலோரும் அறிய வள்ளுவமும் அது கூறும் முப்பாலும் உலகறியத் தமிழர் பரப்புவரா?
அக்காலம் வரும். விரைந்து வரும் என்று நம்பலாம்.
அக்காலம் விரைந்து வரத் தமிழர் முயல்வாராக!
முரசொலி பொங்கல் மலர் 1963
இலக்கியத்தில் வீரம்!
வீரத்துக்கு விளைநிலம், வீர வாழ்வுக்கு இலக்கியம் தமிழகம்! பாடிய பாட்டையெல்லாம் அகம் என்றும், புறமென்றும், காதல் சார்ந்ததென்றும், வீரம் சார்ந்ததென்றும் பகுத்துக்கண்ட திருநாடு நம் தமிழ்நாடு! ஆனால், இந்தப் பகுப்பில்கூட, வீரமே மேம்பட்டு நின்றதென்னலாம். ஏனெனில் தமிழரின் காதல், வீரத்தில் மலர்ந்த ஒரு மலராகவே காட்சியளிக்கிறது.
இது மட்டுமோ?
அறநெறிபற்றிப் பாடப்பட்ட இலக்கியத்திலும் உலகத் திலேயே எம்மொழியிலும் சிறந்த மொழி தமிழ்மொழி என்று கீழ்திசை அறிஞரும் மேல்திசையறிஞரும் வேறுபாடின்றிப் போற்றிப் புகழ்கின்றனர். ஆயின் இந்தத் தனிச் சிறப்புக்குரிய காரணம்கூட, அந்த அறநெறிகள் வீரத்திலிருந்து விளைந்த விழுமிய பண்புகள் என்பதே!
தமிழிலக்கியத்திலே ஒப்பற்ற காதல் காப்பியமாகத் தொடங்கிய சிலம்பு இறுதியில் உலகிலேயே ஒப்புயர்வற்ற வீர காப்பியமாக மிளிர்வது காண்கிறோம். கண்ணகியின் வீரக் கற்பில் தளிர்த்த அரும்பாகிய மணிமேகலை வாழ்க்கையும் வீரக் காதலாகத் தழைத்து, வீரச் சமுதாய அறமாக, வீர அருளறமாகத் தமிழிலக்கிய வானில் மின்னுகின்றது.
காதல் பாடவந்த ஓர் ஆங்கிலக் கவி தன் காதலியிடமே வீரப் பண்பு பாடிவிடுகிறான். ‘அண்பே, உன் காதலை மிஞ்சி என் உள்ளத்தில் இடம்பெறுவது ஒன்றே ஒன்றுதான், ஒரே ஒரு காதலி தான்!’ என்று அவன் நகையாடுகிறான். காதலி உள்ளம் சீறி எழுகிறது. அவன் அச்சீற்றம் தணிக்கிறான்.
“போர்க்களத்தில் எதிரியின் முதல் வீரவாள்தான் உன்னை மிஞ்சி என் உள்ளத்தில் இடம் பெற்ற காதலி. அந்த வாளை என் வாள் தழுவிப் போரிடும்போது, நான் உன்னையும் மறந்துவிடு கிறேன். உலகத்தையும் மறந்து விடுகிறேன். அந்தக் காதலியிடம் நீ என்னை ஒப்படைத்து விடும் நாள் வரும்வரை, நான் உன் காதலில் திளைத்து விளையாடுவேன்” என்றான் வீரக் கவிதைக் காதலன்.
தமிழ்க் காதல் இலக்கியமும் இதில் குறைந்ததன்று. ‘வேந்தே! கடவுளை வணங்கும்போதுதான் உன் தலை சிறிது சாயும். கற்புக்கரசியாகிய அரசியின் காலடி ஒன்றில்தான் அது சாய்ந்து கிடக்கும். வேறு எங்கும் எப்போதும் அது சாயா முடி, வணங்கா முடி’ எனப் புறநானூற்றுப் புலவர்கள் அரசன் காதலையும் பக்தியையும் அவன் வீரத்தாலேயே சிறப்பித்தனர்.
தமிழ் ஒழுக்க ஏடுகளிலேகூட வீரமே அடிப்படைப் பண்பாய்த் திகழ்கிறது என்றால் தவறில்லை. கீழ்வரும் நீதி வெண்பா இதனைக் காட்டும்:-
உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
மற்றவரைக் கண்டால் பணிவரோ - கல்தூண்
பிளந்திடுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்!
இப்பாட்டைப் பாடிய புலவர் அவர் காலத்துப் பாண்டியரின் சாவேர்ப்படை (சாவேற்புப்படை), சோழரின் வேளைக்காரப்படை (சாவு வேளைக்காகவே காத்திருக்கும் படை) ஆகியவற்றை நேரில் கண்டு, அவர்களை மனத்தில் நினைத்துக்கொண்டே இவ்வெண்பாவைப் பாடியிருக்க வேண்டும் என்னலாம். மன்னர் உயிரைத் தம் உயிர்
கொடுத்தும் காக்கவும், மன்னர் உயிர் விடுமுன் தாம் உயிர்விடவும் உறுதி பூண்ட வீரர்களின் படை அது. சாவும் அதன் வீரர்களைக் கண்டு அஞ்சும். தாங்கமுடியாத பாரம் ஏற்ற கல்தூண் அதனால் வளையாது, முறியவே செய்யும். அதுபோல, தம்மினும் பெரும் படையும் பெருத்த படைக்கலங்களும் தம்மைத் தாக்க நேர்ந்தால், அவர்கள் கொன்று குவித்து மாள்வரேயல்லாமல், பணிந்திர மாட்டார்கள் என்று ஒழுக்கம் பாடவந்த கவிஞர் இவ்வாறு வீரம் பாடுகிறார்.
சாவேற்புப் படையும் வேளைக்காரப் படையும் கண்ட தமிழினத்தோடொத்த வீர இனங்களின் விளைநிலம் இந்தத் துணைக்கண்டம் என்றறியாமல் அதன் வாழ்வின்மீது வலிந்து தலையிட்டுள்ளார் இன்று சீன ஏகாதிபத்திய வெறியர்கள்! தம் உள்ளத்தில் ஏகாதிபத்திய ஆசை அடங்காது படபடத்து வெடிக்க, தம் நேர்மையையும் பண்பையும் தம் விலையற்ற வாக்குறுதிகளையும் காற்றில் வெடித்துப் புகைத்துப் பறக்கவிட்டு, பின்னிருந்து பதுங்கிப் பாயும் நயவஞ்சக நரிகள்போலப் போர்த் தயாரிப்பற்ற இந்தியாவின் சமாதான காலக் காவல் வீரர்மீது பாய்ந்துள்ளனர், அறமுறையும் வீரப் பண்புமற்ற கோழைப் பேராசைக்காரர்களான சீனர்கள்.
ஆண்டுக்கணக்காகத் திட்டமிட்டு நயவஞ்சகமாகப் பாய்ந்த சீன அதிர்வேட்டில், முன்னெச்சரிக்கையற்ற இந்திய வீரர், திட்டமும் ஆயுத பலமும் வாய்ப்பு வளங்களும் அற்ற நிலையிலும் தாம் சாவேற்புப் படை வீரர், வேளைக்காரப் படை வீரர் மரபினர் என்பதைக் காட்டி, வீரத்துடன் எதிர்த்து நின்று தொடக்கக் களபலி கொடுத்தனர். அம்முதற் களப்பலியில் பங்கு கொள்ளும் பெருமை வீர சிதம்பனாரின் வீறார்ந்த தொண்டின் நிலைக்களமான தூத்துக்குடி - பாஞ்சாலங்குறிச்சி வீரர் விடுதலைக்கொடி உயர்த்திய நிலத்துக்குக் கிடைத்துள்ளது.
முதல் உலகப் போரில் தமிழர் பிற இந்திய வீரருடன் உலகெலாம் சென்று நாட்டிய வீரப்புகழை இப்போது மீண்டும் தம் முன்னோர் தமிழ்க்கொடி ஏற்றிய இமயத்தில் காட்டி வருகின்றனர்.
இமயத்தில் மூவேந்தரும் முத்தமிழ்க் கொடி ஏற்றிய செய்தி தமிழக வரலாறு அறிந்தது மட்டுமல்ல. தமிழிலக்கியம் கண்டது. முதற்கண் நெடியோன் என்ற நிலந்தரு திருவிற்பாண்டியன் மீனக் கொடியை இமயத்தில் பொறித்தான். அவனுக்குப் பின் சோழன் கரிகாற்பெருவளத்தான் இமயத்தின் உச்சியிலே கொடி பொறித்தான். மூன்றாவதாகச் சோழன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தன் வீர வெற்றிகளை இமயம்வரை கொண்டு சென்று அதன் உச்சிமீது சேரரின் விற்கொடி பொறிப்பித்தான்.
இவ்வீரச் செயல்களைப் புறநானூறும் அகநானூறும் பத்துப் பாட்டும் பதிற்றுப்பத்தும் பிற சங்க இலக்கியங்கள் மட்டுமன்று, கலிங்கத்துப்பரணியும் முரசொலி முழக்கமென எடுத்துப் பாடுகின்றன.
சேரன் செங்குட்டுவன் ஆந்திரப் பேரரசருடன் கங்கை கடந்துசென்று இமயமலையடிவாரத்திலுள்ள குவிலாலுவம் என்னும் தீர்த்தத்தருகே கனக விசயர்களை முறியடித்து, அவர்கள் தலைமேலேயே கண்ணகிக்குச் சிலை கொண்டுவந்த செய்தியைச் சிலம்பு பாடுகின்றது.
ஒரிசாவாண்ட பேரரசன் படைகளை வென்ற சோழர் படைத்தலைவன் கருணாகரத் தொண்டைமானையும் அவ்வெற்றிக்குரிய சோழன் குலோத்துங்கனையும் பாடுகிறது கலிங்கத்துப்பரணி ஆயிரம் யானைகளை எதிர்த்துநின்று கொன்ற மாவீரனைப் பாடுவது பரணி என்பது தமிழ் மரபு.
சேர சோழ பாண்டியர் மூவருமே பெருங்கடற்படை வைத்திருந்தனர். தென்னகத்தை மட்டுமன்றி இந்துமாகடல் முழுவதையுமே அவர்கள் ஆண்டனர். கல்வெட்டுக்களும் செப்புப் பட்டயங்களும் உரைநடை வரலாறாகவும் கவிதை யாகவும் இவற்றின் புகழ்பாடுகின்றன. சோழன் இராசேந்திரன் இமயம்வரை வென்றதுடன் அமையாது, இலங்கை முதல் இந்தோசீனா வரையுள்ள தென்கிழக்காசியா முழுதும் வென்றாண்டான். இதுவும் சோழர் மெய்க்கீர்த்திகளால் பாடப்பட்டுள்ளது.
தேசிங்கு ஆற்றிய வீரப்போர், இராமநாதபுரத்து மறவர் ஆற்றிய அரிய பெரிய போர்கள், மதுரை நாயகர் போர்கள், பாஞ்சாலங்குறிச்சிப் போர் ஆகியவை தமிழரின் நாட்டுப்பாடல் இலக்கியங்களாக நிலவுகின்றன.
தமிழர் ஆற்றிய இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பாடுவதற்கென்றே மக்கட் கவிஞர் பாரதி தம் நாளில் தமிழகத்தில் தோன்றி, வீரத்தையும் கவிதையையும் ஒரே தளமாகப் பிணைத்தான்.
தமிழக இலக்கியம் கண்ட இந்த வீரப் பெரும் போர்ப் புகழ் ஒருபுறமிக்க, இலக்கியத்தில் படம்பிடித்துத் தரப்படும் வீரக் காட்சிகள் இவற்றிலும் அருமை வாய்ந்தவை.
தகடூர் யாத்திரை என்ற தமிழர் வீரப் பெருங்காப்பியத்தி லிருந்து நமக்கு ஒன்றிரண்டு பாடல்களே கிடைத்துள்ளன. ஆனால் போர்க்களத்தை நேரில் சென்று பார்த்த இரு புலவர்கள் அப்பாடல்களிலேயே போரையும் அதன் பல கட்டங்களையும் அதன் படைத்தலைவர்களையும் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றனர். இரண்டாயிர ஆண்டுகட்கு முன் நடைபெற்ற ஒரு பெரும் போரின் திரைப்படச் சுருள்களாக அவை இன்று விளங்குகின்றன.
பதிற்றுப்பத்தில் எட்டுப் பத்துக்கள்தான் நமக்குக் கிடைத் துள்ளன. அதில் எண்ணற்ற கடற்போர்கள், களப்போர்கள், முற்றுகைகள் ஆகியவற்றின் காட்சிகள் நிறைந்துள்ளன. இதனைப் பாடிய புலவர்களுக்குச் சேர அரசர் கொட்டிக்கொடுத்த பரிசில் செல்வங்கள் - இன்றைய அமெரிக்காவையும் பிரிட்டனையும் விலை கொடுத்து வாங்கப் போதியவை.
தந்தை, தமயன், கணவன் யாவரும் போரில் மாள, மீந்த தன் பத்து வயதுச் சிறுவனுக்கு வாள் கொடுத்துப் போருக்கு அனுப்பும் தாய்; முதுகில் புண்பட்டான் தன் மகன் எனக்கேட்டு, அப்படியானால் அவனுக்கப்பால் கொடுத்த மார்பை அறுப்பேனென்று களஞ்சென்று பிணங்கள் புரட்டி, மார்பில் புண்பட்டது கண்டு மகிழ்ந்த வீர அன்னை; பிள்ளையை பெறுதல் என் கடன், சான்றோனாக்குதல் தந்தை கடன், வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர் கடன், போர் செய்து வெற்றிப் புகழுடன் மீள்தல் அல்லது மாள்தல் மகன் கடன் என்று கூறிய வீரத்தாய்: மகன் ஒரு புலி, தன் வயிறு புலி கிடந்த வயிறு என்று பெருமிதத்துடன் பேசிய வீர அணங்கு - இத்தகைய அரிய வீரக் காட்சிகள் தருவது புறானூறு. இரு பெரு மன்னர் போரிட்டு இரு படையும் இரு அரசரும் அழிய மக்கள் கலங்கிய காட்சி; இரு பெரு மன்னர் போரிட்டு ஒருவன் வெற்றி கண்டும், தோற்றவன் தற்செயலாக முதுகில் புண்பட்டதற்கு வடக்கிருக்க, புலவரும் வீரரும் அவனுடன் வடக்கிருந்த காட்சி ஆகியவையும் புறநானூற்றுப் பெருங்கலை ஏடு தருவனவே.
சோழன் செங்கணானிடம் தோற்றுச் சிறையிலே மான மிழந்து வாழ ஒருப்படாது மாள முற்பட்ட சேரன் கணைக்கால் இரும்பொறையின் அருநிலை பாடுவது களவழி நாற்பது.
தமிழர் வீர இலக்கியத்துக்கு முத்தாய்ப்பு தமிழில் இயற்றப்பட்டுள்ள உலகப் பொதுமறையான திருக்குறளின் படைச்செருக்கு அதிகாரத்தின் பத்துப் பாட்டுக்கள். இறந்த வீரர்க்குக் கல் நாட்டும் பழக்கம் சிறப்பிக்கிறது முதற் பாட்டு. முயல் எய்து கொன்ற வேடனை விட, யானையை எதிர்த்து முயற்சியில் முழு வெற்றி காணாத வீரன் வீரம் பெரிதென்னும் உயர் கருத்து ஒரு பாட்டில் காட்டப்பட்டுள்ளது. போரிடையே வேலை யானைமீது எறிந்து கொன்றபின், வேல் யானை உடலினுள் சிக்கியதால் என் செய்வதென்று சிறிது யோசித்து, தன் மார்பில் தைத்து ஊடுருவிய வேலைப் பறித்து, புதுப்படைக் கருவி கண்ட மகிழ்வுடன் நகைத்துப் போருக்குக் கிளம்பும் வீரர்தம் காட்சியை இரண்டே அடியில் ஒரு பாட்டு அடக்கி நமக்குக் காட்டுகிறது.
தமிழர் வீரம் பெரிது. அதனைப் படம் பிடித்துக் காட்டி வீரர்க்கும் வீரக் கவிஞர்க்கும் சிறப்பளிக்கிறது தமிழர் இலக்கியம்.
இமயம் கண்ட தமிழ் வீரம் வெளிப்பட மீண்டுமோர் வாய்ப்பு கிட்டியுள்ளது. ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னாலே யிருந்த வீரம் இன்னும் மங்கிவிடவில்லை, மாண்டு விடவில்லை என்பதை உலகிற்கு வெளிப்படுத்துவோம் - வாகை சூடுவோம்.
திராவிடநாடு பொங்கல்மலர் - 1963
ஆரியமும் தீந்தமிழும்
அண்மையில் ஆப்கனிஸ்தானத்திலிருந்து இந்தியாவுக்கு வருகை தந்த அரசியல் பிரதிநிதிகள் ஆப்கனிஸ்தானத்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள பழந்தொடர்புச் சின்னம் பற்றி ஒரு புதுமை வாய்ந்த செய்தி தெரிவித்துள்ளார்கள். இதை நம் பத்திரிகைகள் நமக்குத் தெரிவித்துள்ளன.
ஆப்கனிஸ்தான் எல்லையிலுள்ள ஒருவகைப் பழங்குடியினர் தமிழ் போன்ற ஒரு மொழியைப் பேசுகிறார்களாம்! கேட்பதற்கு ஒரு தமிழன் பேசினால் தமிழரல்லாத ஒருவருக்கு எப்படி இருக்குமோ அப்படியே அம்மொழி இருக்கிறதாம்!
பத்திரிகைச் செய்தி இவ்வளவே!
அம்மொழியைப்பற்றிய வேறு தகவல்களும் அறிந்து அதனையும் தமிழ் அல்லது தமிழின மொழிகளையும் ஒப்பிட்டு அறிஞர் மேலும் விவரங்கள் தெரிவித்தால்தான் அம்மொழி பற்றி நாம் எதுவும் தெரிந்து கொள்ள முடியும்.
இது இனி வருங்காலம் வழங்க வேண்டிய செய்தி.
ஆனால் அதற்கிடையே தமிழினத்துக்கும் அத்தொலை நாட்டுக்கும் இடையே உள்ள சில தொடர்புகளைப்பற்றி இத் தமிழ்ப் பொங்கற் பருவத்தில் விளக்கம் தருவது பொருத்தமா யிருக்கும்.
தமிழ் என்ற சொல் திராவிடம் என்ற சொல்லிலிருந்து சிதைந்து வந்த திரிபு என்று சமஸ்கிருதவாணர் முன்னால் கூறிக் கொள்வதுண்டு. அதற்கேற்ப இன்று ஆராய்ச்சி அறிஞர் தமிழ் மொழியை மட்டுமன்றி, அதனுடன் தொடர்புடைய வேறு மொழிகளையும் சேர்த்துத் தமிழ் மொழி இனத்தைக் குறிக்க இச்சொல்லை வழங்கினாலும், சமஸ்கிருத மொழியில் அது தமிழ் மொழியைக் குறிக்கவே பெரிதும் வழங்கிவந்துள்ளது.
தமிழ், திராவிடம் என்ற சொற்கள் தொடர்புடைய சொற்கள் என்பதில் ஐயமில்லை. ஒன்றிலிருந்து ஒன்று வந்திருக்கக்கூடும் என்று கருதுவதும் ஒலி நூல் முறைப்படி வருவதன்று. ஆனால் தமிழ் என்ற சொல் 2000 ஆண்டு காலத்துக்கு முன்பிருந்தே வழங்கி வருகிறது. தொல்காப்பியத் திலேயே அச்சொல் வழங்குகிறது. ஆனால் திராவிடம் என்ற சொல் வழக்கோ மிகவும் பிற்காலத்தது. ஆகவே இரு சொற்களில் ஒன்று மற்றொன்றிலிருந்து வந்தது என்றால், திராவிடம் என்பதிலிருந்து தமிழ் வந்திருக்க முடியாது; தமிழ் என்பதிலிருந்து திராவிடம் வந்திருக்க முடியும்.
சமஸ்கிருதத்தில் தமிழைக் குறிக்கத் திராவிடம் என்ற சொல்லுக்கு முற்பட்டே திராமிளம், திரமிணம் என்ற வடிவங்கள் காணப்படுகின்றன. ஆகவே ‘தமிழ்’ என்ற மொழிப்பெயர்ச் சொல்தான் வடவர் வழக்கில் தமிள- த்ரமிள - த்ராமிள - த்ராவிட என்ற படிகளாகச் சிதைந்து மாறியிருக்க வேண்டும் என்பது இப்போது உறுதியாகத் தெரிகிறது.
தமிழ் மொழியின் பெயர் தமிழ்ச் சொல்தான். இனிமை யுடைய மொழி என்ற பொருளுடன் தமிழர்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகட்கு முன் தம் மொழியை அழைத்துள்ளனர்.
‘தமிழ்’ என்ற சொல் சமஸ்கிருதச் சொல் என்று சமஸ்கிருத வாணர் கருதினார்கள். அது தவறென்று தெரிந்துவிட்டது. ஆனால் ‘ஆரியம்’ ஆரியர், என்று சமஸ்கிருதத்துக்கு உரிய இனத்துக்கு எப்படி பெயர் வந்தது? இந்தக் கேள்வியை இப்போது தமிழர் எழுப்ப இடம் ஏற்பட்டுள்ளது. அதுவும் தமிழ்ச் சொல்தான் என்று கருதுவதற்குரிய சான்றுகள் உள்ளன.
சமஸ்கிருதவாணர் சமஸ்கிருத மொழியையும் அதன் பழம் பதிப்புக்களாகிய வேத மொழியையும், ஆரியம் என்று குறிப்பிட்டனர். அம்மொழிக்குரியவர்களாக அவர்கள் பிராமணர், கூத்திரியர், வைசியர் ஆகிய பூணூலிடும் உரிமையுடைய மூவரினத்தவரை மட்டும் ஆரியர் என்றும் குறித்தனர்.
இந்தியாவிலுள்ள சமஸ்கிருதவாணர் தங்களை ஆரியர் என்று குறிப்பிட்டது போலவே, பண்டைப் பாரசிக நாட்டிலுள்ளவர்களும் பழம் பாரசிக மொழியாளர்களும் தங்கை ஈரானியர் என்று கூறிக்கொண்டனர். ‘ஆரிய’ என்ற சொல்லும் ‘ஈரானிய’ என்ற சொல்லும் தொடர்புடைய சொற்கள் என்று மேலை அறிஞர் கருதுகின்றனர்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு முதலிய மொழிகள் ஒரே இன மொழிகள் என்று ஆய்ந்து முடிவு செய்து, அதனைக் குறிக்க முதலில் தமிழினம் என்ற பெயரையும் பின்னர் திராவிட இனம் என்ற பெயரையும் கொடுத்தவர்கள் ஐரோப்பிய அறிஞர்களே. அதுபோலவே சமஸ்கிருதம் வடஇந்தியாவிலுள்ள தாய் மொழிகளும், பாரசிக மொழியும், ஐரோப்பாவில் இலத்தினம் கிரேக்கம் முதலிய பண்டை மொழிகள் உட்பட ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் ரஷ்யன் முதலிய பெரும்பாலான ஐரோப்பிய மொழிகளும் ஒரே இனம் சார்ந்தவை என்பதையும் அம்மேலை அறிஞரே ஆராய்ந்து கண்டு முடிவு செய்துள்ளனர். இப்பேரினத்துக்கு அவர்கள் முதலில் ஆரிய இனம் என்றும், பின்னால் மூல ஆரிய இனம் (Ur Aryan) என்றும், இறுதியாக இந்தோ - ஐரோப்பிய இனம் என்றும் பெயரிட்டழைத்தார்கள்.
இந்தோ - ஐரோப்பிய இனத்தாருக்கு இப்போது ஆரிய இனம் என்ற பெயரை ஐரோப்பிய அறிஞர் வழங்குவதில்லை. இந்தோ - ஐரோப்பிய இனத்தின் கீழ்திசைக்கிளை அல்லது ஆசியக் கிளைக்கு மட்டும்தான் அப்பெயர் பொருந்தும் என்றும்; முழுப் பேரினத்தைக் குறிக்க அது பொருத்தமற்றதென்றும் அவர்கள் கருதுகின்றார்கள்.
இதற்குக் காரணம்காட்டல் எளிது. பேரினத்தைச் சேர்ந்த மொழிகளில் மிகப் பெரும்பாலானவை ஐரோப்பாவிலேயே உள்ளன. ஆரிய அல்லது ஈரானிய என்ற சொல் அவர்கள் மொழியில் வழங்காத சொல் ஆகும். அதுமட்டுமல்ல, மொழியின் பல அடிப்படைச் சொற்களும் (சமஸ்கிருதம் - பிதா, மாதா தாய் தந்தை; ஆங்கிலம் பாதர் - மதர்; சமஸ்கிருதம் த்வார் - காவு; ஆங்கிலம் டோர்) தெய்வப் பெயர்களும் (சமஸ்கிருதம் - த்யௌஸ்பிதர் - இலத்தினம் - ஜூபிடர் சமஸ்கிருதம் வருண - இலத்தீன் யூசுனஸ்) எல்லா மொழிகளுக்கும் பொதுவாகவே உள்ளன. ஆயினும் இந்தியாவிலும் பாரசிகத்திலும் உள்ள இந்தோ - ஐரோப்பிய இனத்தவர் மட்டுமே தமக்கென வேதங்கள் (சமஸ்கிருதத்தின் வேதம் பாரசிகரின் அவெஸ்தா) தொகுத்துள்ளனர். இக்காரணங்களால் மேலைக் கிளையிலிருந்து வேறுபட்டத் தனிப்பொது தன்மைகள் கொண்ட கீழையினத்தை மட்டும் அவர்கள் ஆரியர் என்ற சொல்லால் குறித்தார்கள்.
‘ஆரிய’ என்ற சொல்லுக்குப் பொருள் என்ன என்று மட்டும் கேட்டதில்லை. கேட்டவர்களுக்கும் முதலில் எளிதாகச் சமஸ்கிருதத்திலும் பண்டைப் பாரசிக மொழியும் அதற்குக் கூறப்பட்ட பொருள் விடை அளிக்கப்போதியதாகவே இருந்தது. தமிழர் ‘தமிழ்’ என்ற சொல்லுக்கு ‘இனிமை’ என்ற பொருள் சுட்டி வழங்கியிருப்பது போன்று சமஸ்கிருதம் பண்டைப் பாரசிகம் ஆகிய இரு மொழிகளிலுமே ஆரிய - ஈரானீய என்ற சொற்களுக்கு மேலானவன் (தமிழ் சான்றோன், ஆன்றோன்) என்ற பொருள் விளக்கம் கூறினர்.
மேலை ஆராய்ச்சியாளர் கீழை ஆராய்ச்சியாளர் ஆகிய இருசாராரிலும் பெரும்பாலோர் இதற்குமேல் செல்லவில்லை. ஆயினும் ஒரு சிலர் மேற்சென்று ‘மேலானவர்’ என்ற பொருளுக்கு மூலமாக ‘உழவர்’ என்ற பொருள் உண்டு என்று கூறினர்.
இலத்தீன மொழியில் ‘ஆரா’ என்றால் கலப்பை அல்லது ஏர் என்று பொருள். ஆரியன் என்றும் வினைச்சொல் உழுதல் என்று பொருள்படும். ஆகவே உழவர் என்ற சொல்லில் ஆரியன் என்ற சொல் முதலில் விளங்கி, உழவறிந்த உயர் நாகரிகத்தில் வாழ்ந்தவர் தம்மை உழுமினத்தவர் அல்லது மேலானவர் என்று கூறிக் கொண்டதாக விளக்கம் தந்தனர்.
இவ்விளக்கம் பொருத்தமானது என்று ஒத்துக்கொள்ளத் தக்கதே. தமிழில் வேளாண்மை, வேளாளர் என்ற சொற்கள் இதே வகையில் உழவர் என்ற பொருளும் விருந்திடுவோர், வீரர், அரசர், கடவுளை வழிபடுவோர் என்று படிப்படியான உயர் பொருள்கள் பெறுவதைக் காண்கிறோம்.
இலத்தீனில் ஆரா என்ற சொல் போல, சமஸ்கிருதத்திலும் ‘ஆராம்’ என்ற சொல் கலைப்பையைக் குறிக்கின்றது.
ஆனால் பொருத்தம் இத்துடன் நின்றுவிடுகிறது. ஆழ்ந்து நோக்கினால் இதில் சில சிக்கல்கள் தென்படுகின்றன. பண்டைய சமஸ்கிருதவாணர் மடங்களிலும், சமஸ்கிருதச் சார்பான ஏடுகள் எல்லாமே நோக்கினால், ஒரு செய்தி மிகத் தெளிவாகத் தெரியவரும். உழவரை உயர்வாகக் கருதும் பண்பு தமிழினத்திலும் உலகின் பல்வேறு இனங்களிலும் அடிவேரோடிய பண்பு ஆகும். ஆனால் சமஸ்கிருத வாணரும் அவர்கள் வழிவந்த வைதிகரும் இன்றுவரை உழவையும் வாணிபத்தையும் கடைப்பட்ட தொழிலாகக் கருதுபவரேயாவர். தமிழில்கூடப் பிற்கால நூல்கள் ‘வேளாளர்’ என்ற மதிப்புக்குரிய புத்தமிழ்ச் சொல்லைச் சூத்திரர், அடிமைகள், தாசிதாச வகுப்பினர் என்ற பொருளில் வழங்கியதைக் காண்கிறோம்.
ஆரியர் என்ற சொல் மேலானவர் என்ற பொருள் மட்டுமின்றி, உழவர் என்றும் பொருள் கொள்ளும் என்று ஏற்றுக் கொண்டால், அதற்கு மூலமான கலப்பை என்ற சொல் (சமஸ்கிருதம் ஆரசம் - இலத்தீன் - ஆரா) உண்மையில் தமிழின் ‘ஏர்’ என்ற சொல்லின் திரிபு என்றே கூறத்தகும். ஏனெனில் கலப்பை என்ற இச்சொல் இந்தோ ஐரோப்பிய மொழிகளில் தென் இனங்களின் தொடர்பு மிக்க தென் கிளைகளில் மட்டுமே உள்ளன; இந்தோ - ஐரோப்பியர் நாடோடிகளாக ஆடுமாடு மேய்த்துக் கொண்ட நிலையிலேயே தென்னுலகுக்கு வந்தனர் என்பதும், தெற்கு ஐரோப்பா, தென்ஆசியாப் பகுதிகளுக்கு வந்து நெடுங்காலத்துக்குப் பின்னரே உழவும், வீடும், குடியும், ஊரும், நாடும் உடையவராயினர் என்பதும் வரலாறறிந்த செய்தி ஆகும்.
தமிழில் ஏர் என்ற சொல் கலப்பையையும் அழகையும் கலையையும் குறிக்கும் சால் உழுபடை வரை குறிக்கும். இந்த இரண்டின் திரிபுகளாக ஆர் - ஆல் என்ற பகுதிகளும் ஆன்றோர், சான்றோர் என்ற சொற்களும் தமிழில் பெருவழக்காகும். ஆனால் இவை மேலோர் என்று வழங்கினரேயன்றி இனம் குறித்ததில்லை.
ஆரி எனத் தமிழகத்திலேயே குற்றாலத்தருகில் ஒருநாடு உண்டு - அது குறவர் நாடு. தலைவன் ஆரி என்றும், நாடு ஆரியநாடு என்றும் மக்கள் ஆரியர் என்றும் குற்றாலக் குறவஞ்சியில் கூறப்படுகிறது.
குறவர் மலை நாட்டில் உழவு பெரிதும் நடைபெற முடியாது. ஆகவேதான் அம்மலையிடையே உழுநிலங்களையும் கொண்டிருந்த குற்றாலப்பகுதி மக்கள் தங்கள் நாட்டை ஆரியநாடு என்று பெருமையாகக் கூறிக்கொண்டனர்.
கன்னட நாட்டில் இது போலவே குடகு எல்லையில் மற்றொரு திராவிட இனப் பகுதியினர் தம் நாட்டை ஆரிய நாடு என்று பெருமையுடன் கூறிக் கொண்டனர்.
தமிழர் வாழும் இடங்களில் பல குற்றாலங்கள், பாபநாசங்கள், பல மதுரைகள், திருநெல்வேலிகள் உண்டு என்பதைப் பலரும் அறிவர். நிலங்கடந்தும் கடல் கடந்தும், தமிழர் வாழும் இடங்களிலும் இதுபோல பல மதுரைகள், மலையங்கள், பாண்டிகள், பாஞ்சாலங்கள் உண்டு. இது போலவே பண்டைய நாட்களில் தமிழின நாகரிகம் பரவிய பல இடங்களிலும்- சிறப்பாக மலைப் பாங்கான நாடுகள் பல ஆரிய நாடுகள் இருந்தன.
இத்தகைய ஒரு ஆரிய நாடு சென்ற இரண்டாயிர ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தான எல்லையில் இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் பிரதிநிதிகள் கூறிய செய்தி இதை நமக்கு நினைவுக்குக் கொண்டு வருகிறது.
இந்த ‘ஆரிய நாடு’ இன்று ஆப்கானிஸ்தானத்துக்கு வடக்கே ருஷ்யப் பெரும்பரப்பில் சோவியத் ருஷ்யாவின் ஒரு பகுதியாக உள்ளது. இதன் அருகே ‘ஆரியக் கோசு’ என்னும் இன்னொரு பகுதி உள்ளது. ஆரியக் கோசு என்றால் சின்ன ஆரியம் என்பதுதான் பொருள். கொச்சி என்ற கேரளத்து நாட்டில் இந்தோ சீனாவிலுள்ள கொச்சின் சீனாவிலும் தமிழில் கோசு என்ற கனி வகையின் பேரிலும் நாம் இதே சொல்லைக் காணலாம். மலையாளத்தில் கொச்சு என்றால் சிறிது என்று பொருள் ஆகும்.
ஆரியா அரசோசியா என்ற இந்த இரண்டு பகுதிகளும் அசோகப் பேரரசன் ஆண்ட பேரரசில் அடங்கிய இரண்டு மாகாணங்களாயிருந்தன. அசோகன் பாட்டனான சந்திரகுப்தன் காலத்தில் சந்திரகுப்தன் செலியூக்கஸ் என்ற கிரேக்க அரசன் மகளைத் திருமணம் செய்து கொண்டபொழுது செலியூக்கஸ் என்ற கிரேக்க அரசன் தன் மகளுக்குச் சீதனமாக ஆரியா, அரசோசியா என்ற இந்த இரு நாடுகளைச் சந்திரகுப்தனுக்கு அளித்தான்.
செலியூக்கஸ் கிரேக்கப் பேரரசன் அலெக்சாண்டரின் படைத் தலைவனாயிருந்து அவன் இறந்ததன் பின் அவன் பேரர சாட்சியின் கீழ் பகுதி கைக்கொண்டு ஆண்டவன் ஆவான். அலெக்சாண்டர் இந்தியாவுக்குள் நுழையுமுன்பே ஆரிய அரசோசாசியா என்ற இந்தப் பகுதிகளை வென்று, அதைத் தன் பேரரசின் பகுதியாக செலியூக்கஸுக்கு விட்டுச் சென்றான்.
அலெக்சாண்டர் கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். அவன் காலத்துக்கு முன் ஆரியாவும் அரசோசியாவும் பாரசிகப் பேரரசர் ஆட்சியின் கீழ் இருந்தன.
சிந்து ஆற்றுவெளியின் பெரும்பகுதி என்று பாலைவனமாகியுள்ளது. பலுச்சிஸ்தானமும் அப்படியே. ஆப்கானிஸ்தான், நடு ஆசியா (ஆரியா அரசோசியாப் பகுதிகள்) பாரசிகம் அல்லது ஈரான் முதலிய பகுதிகளிலும் இன்று மழை மிகவும் குறைந்த அரைகுறைப் பாலைவனங்களே. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இவை போதிய மழையும். இன்று வற்றிப் போய்விட்ட வளமான பல பேராறுகளும் உயர்ந்த நாகரிக வளமிக்க மக்கள் இனப்பற்றும் நிறைந்த பகுதியாய் விளங்கின என்பதை வரலாறு நமக்குத் தெரிவிக்கிறது.
ஆரியர் என்று கூறப்படும் இந்தோ ஐரோப்பிய இனத்தவர் இந்தியாவுக்குள் வந்த காலம் கி. மு. 2000க்கும் கி. மு. 1000க்கும் இடைப்பட்டகாலம் ஆகும். அப்போது இப்பகுதியில் சரஸ்வதி, காபூல் முதலிய பல ஆறுகள் வளமாக ஓடியதையும் இங்குள்ள மக்கள் கோட்டை கொத்தளங்கள், உயர்நீதி பயிர்த்தொழில், வாணிபம் ஆகியவற்றுடன் வாழ்ந்ததாக இருக்குவேதம் குறித்துள்ளது.
ஆரியர் வருவதற்கு முன்பே கி. மு. 4000க்கும் கி. மு. 2500க்கும் இடைப்பட்ட காலங்களில் இப்பகுதியில் சிந்துவெளி நாகரிகமும், அதற்கும் முற்பட்டு கி. மு. 300க்கு முற்பட்டு பலூச்சிஸ்தானத்தில் வேறு பல புல்வெளி நாகரிகங்களும், இவற்றுக்கும் மேற்கே கி. மு. 3000க்கு முற்பட்ட உலகப்புகழ் பெற்ற ஏலமிய சுமேரிய நாகரிகங்களும் வாழ்ந்திருந்தன என்று கூறுகிறோம்.
வளமான இப்பகுதி வளங்கெடத் தொடங்கியது. இந்தோ ஐரோப்பியர் வருகைக்குப் பின் பின்னரே என்றும், நாகரிகமிக்க இப்பகுதியில் சிந்துவெளி நாகரிகம் போன்ற பல மிகப் பழமை வாய்ந்த நாகரிகங்களின் அழிவுக்கும் அவர்கள் வருகையே காரணம் என்றும் அறிகிறோம்.
கி.மு. 2000ல் வாழ்ந்த எகிப்திய அரசன் சேமோயாஸ்திரிஸ் என்பவன். அவன் காலத்திற்கு முன் ஒரு ஆசியா வழியாக எகிப்தியர் சீன நாட்டுடன் வாணிகம் செய்துவந்தனர். இந்தோ ஐரோப்பியர் வருகையால் கி.மு. 2000லிருந்து ஒரு ஆசிய வழி அமைதியான நாகரிக ஆட்சியற்ற வழியாய்ப் போய்விட்ட தாலேயே, அவன் சீனாவுக்குத் தமிழக வழியாகவும் மலேயா வழியாகவும் கடல் வழியில் வாணிகத்தைத் திருப்பினான் என்றும் அதற்காகவே சூயசிஸ் கால்வாய் வெட்டினான் என்றும் எகிப்தியர் வரலாறு கூறுகிறது.
ஆரியர்கள் நடு ஆசியா வந்த காலம் கி.மு. 200க்குச் சற்று முன்பின்னான காலம் என்பதை இது காட்டுகிறது. ஆரிய நாட்டில் அவர்கள் தங்கி அந்நாட்டு நாகரிக மக்களுடன் கலந்த பின்பே தம்மை அவர்கள் ‘ஆரியர்’ என்று கூறிக்கொண்டனர் என்று நாம் உய்த்துணரலாகும்.
இந்தோ ஐரோப்பிய இனத்தவர் தென் ஆசியாவிலும் தென் ஐரோப்பாவிலும் புகுமுன் இப்பகுதிகளில் நிலவிய பழங்குடி நாகரிகங்கள் யாவுமே கடல் வாணிக வாழ்விலும் உழவு நாகரிகத்திலும் மேம்பட்டவர்களாய் இருந்தனர். ஆனால் மலைப்பகுதி அடுத்து வாழ்ந்தவர்களுக்கு உழவே உயிர்த் தொழிலாய் இருந்தது. இப்பகுதியில் வாழ்ந்த ஆரிய நாட்டினர் தமிழினத்தவர்களாயிருந்திருக்க வேண்டும், தம்மை உழவரென்று பெருமிதத்துடன் கூறிக்கொண்டதனாலே, உழவர் நாடு, மேலானவர் நாடு என்ற பொருளில் இவர்கள் தம் நாட்டை ஆரிய நாடு என்று அழைத்திருக்க வேண்டும். அவர்களுடன் கலந்து வாழ்ந்த இந்தோ ஐரோப்பியரும் தம்மை ஆரியர் என்றே கூறிக்கொண்டு, அப்பெயருடனே’ பாரசிகத்துக்கும் இந்தியாவுக்கும் வந்திருத்தல் வேண்டும்.
ஆரிய நாட்டினர் தமிழினத்தவராகவே இருந்திருக்க வேண்டும் என்பதற்கு பாரசிக, இந்திய ஆரியரின் வரலாறு ஒரு சான்று ஆகும்.
இந்திய நாகரிகம் ஆரிய திராவிடக் கலப்பு நாகரிகம் என்பதை நாம் அறிவோம். இந்தக் கலப்பின் ஒவ்வொரு படியிலும் ஆரியச் சார்பான ஒரு பண்பாடும் திராவிடச் சார்பாளர் ஒரு பண்பாடும் போட்டியிடுவது காண்கிறோம். ஒவ்வொரு படியிலும் பல தெய்வ வழிபாடு, மதுபானம், கொலை வேள்வி, சாதி வருண முறை, சடங்காசாரம், பழைய குருட்டு நம்பிக்கைகள் ஆகியவற்றை ஆரியச் சார்பாளர் ஆதரிப்பதையும், மற்றொரு பக்கம் திராவிடக் காப்பாளர் இவற்றை எதிர்ப்பதையும் காண்கிறோம். இந்தத் திராவிட எதிர்ப்பணியின் கருத்துக்களை நமக்கு ஒரே மொத்தமாகத் திருக்குறள் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்தியாவில் இந்தத் திராவிட எதிர்ப்பின் ஒரு படியை கி.மு. 6-ம் நூற்றாண்டில் புத்த சமணசமய எதிர்ப்பாகக் காண்கிறோம். இதே திராவிடக் கொள்கை அடிப்படையில் ஆரியர் இந்தியாவுக்கு வருமுன் நடு ஆசியாவிலேயே சரதுட்டிரர் சமயமாகிய ஈரானிய அல்லது பார்சி சமயம் எதிர்ப்பது காண்கிறோம். சரதுட்டிரர் காலம் கி.மு. 2000க்கும் கி.மு. 1200-க்கும் இடைப்பட்டதாகும். திராவிடக் கோட்பாடு அல்லது திருவள்ளுவர் கோட்பாட்டின் மிகப் பல கூறுகளைப் புத்த சமண சமயங்களைப் போலவே இப்பார்ஸி சமயமும் கொண்டு ஆசியச்சார்பான ஆரியத்தை எதிர்ப்பது காண்கிறோம்.
ஆரியம் என்று நாம் கூறும் நாகரிகத்தைத் திருவள்ளுவர் ஒரு நாகரிகமாக அல்லது கொள்கையாக எதிர்க்கவில்லை. தீய பண்புகளாகவே எதிர்க்கிறார். ஆனால் அதை இன்னும் முனைப்பாகப் புத்தரும் சமண முதல்வரான மகாவீரரும் கி.மு. ஏழாம் நூற்றாண்டில் எதிர்க்கின்றனர். கி.மு. 1500க்கு முன் அதையே அவர்களிலும் தீவிரமாக ஜரதுஷ்டிரர் எதிர்ப்பது காண்கிறோம். அது மட்டுமல்ல முதல் எதிர்ப்பில் இரு சாராரும் தம்மை ஆரியர் என்றே கூறிக் கொண்டாலும் எதிர்ப்புக் கொள்கையுடன் நிற்காமல் இன்னும் ஆழ்ந்து செல்கிறது. ஜரதுஷ்டிரரும் பார்சியரும் ஆரியரும் ஒரு கடவுளை வழிபட்டனர். தவிர, ஜரதுஷ்டிரர் தம் ஒரு கடவுளையும் அவர் சார்பான நல்தெய்வங்களையும் அசுரர் என்றும், எதிரிகளின் தெய்வங்களை பேய்கள்’ என்ற பொருளையுடைய ‘தேவ’ என்ற சொல்லால் அழைத்தனர். இந்திய ஆரியரோ தம் நல்தெய்வங் களைத் தேவர் என்றும், எதிரிகளின் தெய்வங்களை ‘அசுரர்’ என்றும் அழைத்தனர்.
நடு ஆசியாவிலும் ஆரிய நாட்டில் ஆரிய நாட்டவரான தமிழினத்தாரும் வந்தேறிகளான இந்து ஐரோப்பியரும் கலந்தே ஆரியராயினர். ஆனால் இனங்கள் கலந்த பின்னரும் இன நாகரிகப் பண்பாடுகளில் வேற்றுமை நீடித்து உக்கிரமாயின. தமிழினப் பண்பாடு அதாவது ஆரிய நாட்டுப் பண்பாட்டை ஆதரித்தவர் களே ஜரதுஷ்டிரர் தலைமையில் போராடிய பார்சி சமயத்தவரின் முன்னோர் ஆவர். வந்தேறிகளான ஐரோப்பிய இனச் சார்பான பண்பாட்டை வற்புறுத்தியவர்களே இந்தியாவுக்கு வந்த ஆரியரின் முன்னோர் ஆவர். இந்தப் போராட்டத்தில் பார்சிகள் வெற்றி பெற்றதனாலே இந்திய ஆரியரின் முன்னோர் நடு ஆசியாவை விட்டு இந்தியாவுக்கு ஓடிவர வேண்டியதாயிற்று.
இந்தியாவிலும் பிரமதேசம் என்று அழைக்கப்படும் பாஞ்சாலத்திலுள்ள திராவிடர்களுடனும் கங்கை வெளியிலுள்ள திராவிடர்களுடனும் போராடி அவர்களுடன் கலந்த பின்னரே படிப்படியாக இருக்கு என்ற ஒரு வேதம் மூன்று நான்காகி வேதாகமங்கள், ஆரியங்கள், உபநிடதங்கள், பாரத இராமாயணங்கள் ஆகியவைகளும் சமஸ்கிருத மொழியும் இலக்கியமும் உருவாக்கப்பட்டன.
தென்னாட்டு மக்களும் தமிழரும் கண்ட ஆரிய நாகரிகம் உண்மையில் மூல இந்தோ ஐரோப்பிய இனத்தவரின் நாகரிகமல்ல. நடு ஆசியாவிலிருந்தோ அங்குலம் அங்குலமாகத் திராவிடருடன் போராடியும் கலந்தும் எதிர்த்தும் ஏற்றும் வரவரத் திராவிடமயமாக உருவாகி வளர்த்த புதிய இந்திய ஆரிய நாகரிகத்துடன்தான் - அதாவது திராவிட ஆரியக்கலப்பு நாகரிகத்துடன்தான் தமிழரும் தென்னவரும் உறவாடினர்.
இந்தியாவில் ஆரிய மொழி, ஆரிய நாகரிகம் என்பவற்றிற்கும் திராவிட தமிழ் மொழி நாகரிகம் என்பவற்றிற்கும் உள்ள வேறுபாடு இரண்டு இனங்களின் வேறுபாடு அல்ல. அவை உண்மையில் ஆரியப் பண்பு பின்பற்றிய அதாவது சாதி வருணபேதம் மூடநம்பிக்கை ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்ட ஒரு திராவிட ஆரியக்கலப்பின மொழி - நாகரிகம் ஆகியவற்றுக்கும் உள்ள வேறுபாடேயாகும்.
இரண்டு நாகரிகங்களிலும் அடிப்படைக்கூறும் பொதுமைக் கூறும் ஒருமைப்பாட்டுக்குரிய பண்பும் திராவிட மொழி, திராவிட நாகரிகமேயாகும்.
வடஇந்திய மக்களும் தலைவர்களும் அரசியலாரும் இதை உணர்ந்து கொண்டுவிட்டால் இந்தியாவின் ஒருமைப்பாடு அசைக்க முடியாத ஒரு கற்கோட்டை ஆகிவிடும். அதைக்காக்க பிரச்சாரங்களோ, சட்டமுறைகளோ தேவைப்படமாட்டா தவிர, இந்திய நாகரிகம் வேதபுராண இதிகாசங்களை மூலமாக ஏற்றுக் கொள்ளும் நாள்வரை, சாதிவருண இனவேறுபாட்டு பண்புகள் உள்ளூரக் கனிந்துக்கொண்டேயிருந்து நாட்டு மக்களின்
ஒற்றுமையைக் குலைக்கவே செய்யும். இந்திய நாகரிகம் திருவள்ளுவர் மரபிலும் சங்க இலக்கிய மரபிலும் வந்த ஒன்று என்ற எண்ணம் தேசமக்களிடையே தோன்றுமானால், நாட்டு மக்கள் ஒருமைப்பாட்டுக்கும் முற்போக்குக்கும் அதைவிடச் சிறந்த சாதனம் வேறு தேவைப்படாது.
‘ஆரியம்’ என்ற சொல்லே தமிழ்ச்சொல், மூல ஆரிய நாடு தமிழரும் தமிழினமும் வாழ்ந்து தமிழ்ப்பண்பு வளர்த்த ஒரு பழம்பெரு நாடு என்ற கருத்து இந்தியாவில் பரவுந்தோறும் இந்திய நாகரிகத்தில் ஒளியும் பெயரும் ஏறவழியுண்டு.
திராவிடம் பொங்கல் மலர் 1964
உலகமொழிச் சிக்கல்!
தமிழகத்தின் மொழிப் பிரச்சினை இந்திய அரசியல் பிரச்சினைகளுடன் பின்னிக் கலந்து மிகவும் சிக்கலாகியுள்ளது. ஆனால், அரசியல் பிரச்சனைகளுடன் சேராத நிலையில்கூட, அதன் சிக்கல் குறைந்துவிடாது. ஏனெனில் மற்ற நாடுகளின் மொழிப் பிரச்சினைகளுக்கோ, நாட்டுப் பிரச்சினைகளுக்கோ இல்லாத ஒரு தனித்தன்மை அதற்கு உண்டு. தமிழரின் மொழிப் பிரச்சினையை வெளியுலகத்தார் சரியாக அறிந்து கொள்ளாததில் வியப்பில்லை. ஏனெனில் தமிழரிடையேகூட அது உள்ளார்ந்த உணர்ச்சியுருவிலேயே நிகழ்கிறது. அதனைக் கூறாய்வு செய்து அதன் தன்மையைக் கணித்துணர்பவர் மிகச் சிலரே.
தமிழக மொழிப்பிரச்சினை இன்று தமிழகத்துக்கு மட்டுமேயுரிய பிரச்சினையாகத் தோன்றலாம். ஆனால், அதுவே நாளைய இந்தியாவின் மொழிப் பிரச்சினையாகவும், நாளை மறுநாளைய உலகின் மொழிப் பிரச்சினையாகவும் ஆகத்தக்கது - ஆகத் தொடங்கியுள்ளது. ஏனெனில், அதன் வேர்கள் தமிழக மொழி வரலாற்றிலும் தமிழினப் பரப்பாகிய தென்னக மொழி வரலாற்றிலும் மட்டுமன்றி, இந்தியாவின் மொழி வரலாற்றிலும், உலகின் மொழி வரலாற்றிலுமே நெடுந்தொலை ஊடுருவிச் சென்று பரவியுள்ளவை ஆகும்.
இப்பிரச்சினையின் தன்மையை நாம் ஓர் உருவகத்தால் விளக்கலாம்.
சிறு குழந்தைகளை நம் தாய்மார் ‘இரண்டு கண்ணன் அதோ வருகிறான். விரைவில் சாப்பிட்டுவிடு’ என்று அச்சுறுத்துவதைக் கேட்டிருக்கிறோம். குழந்தை எப்படியோ ‘இரண்டு கண்ணன் அச்சத்துக்கு உரியவன்’ என்று நினைத்து நடுங்கும்.
உலகப் பெரும்போர் முடிவில் ஒரு சுற்றுலாவாணன் பிரான்சு நாட்டுச் சிற்றூர் சென்றிருந்தான். ஊர் எல்லையில் ஒரு சின்னஞ்சிறு குழந்தை அவனைக் கண்டதும், ‘ஐயையோ! முழு மனுசன் வந்துட்டானே!’ என்று அலறிப் புடைத்துக் கொண்டு ஓடிற்று. அதன் அலறல் சுற்றுலாவாணனுக்கு மலைப்பைத் தந்தது. ஊருக்குள் சென்ற பின்தான் அதன் கோரப்பொருள் அவனுக்கு முழு உருவில் தெரியவந்தது.
அந்த ஊரில் போரின் கொடுமை உக்கிரதாண்டவமாடிற்று. காலிழந்தவர், கையிழந்தவர், கண்ணிழந்தவர், மூக்கிழந்தவரென இழந்தவர் வரிசையிலேயே எல்லாரும் காணப்பட்டனர். உறுப்பிழக்காதவராக எவரையுமே காணவில்லை.
உறுப்பிழந்த உருவத்தைக் கண்டால் குழந்தைகள் அச்சங் கொள்ளுதல் இயல்பு. ஆனால் மேற்குறிப்பிட்ட பிரபஞ்சக் குழந்தை உறுப்பிழந்த உருவங்களையே கண்டு பழகியிருந்தது. உறுப்பிழந்த உருவம்தான் அதற்கு மனித உருவாய்த் தோன்றிற்று. ஆகவேதான் முதன் முதலாக உறுப்பிழக்காத ஒரு முழு மனிதனைக் கண்ட போது அது பேயைக் கண்ட மாதிரி விழுந்தடித்துக் கொண்டு ஓட நேர்ந்தது.
உலகத்திலும் சரி, இந்தியாவிலும் சரி - மொழிகளின் நிலை இன்று பொதுவாக இந்தப் போர்க்கால பிரான்சின் நிலையை ஒத்ததாயுள்ளது. தமிழகத்தின் நிலையோ மேற்குறிப்பிட்ட சுற்றுலாவாணன் நிலையை ஒத்தது.
மனிதனின் உறுப்புக்கள் வெறுந் தோற்றத்துக்குரிய உடலுறுப்புக்கள் மட்டுமல்ல. ஒவ்வோர் உறுப்பும் மனிதன் வாழ்விலேயே ஒரு பகுதி, அவனது உலகிலேயே ஒரு பகுதி இயங்குவது ஆகும். எனவே கண் இல்லாதவனுக்குப் பார்வையில்லாதது மட்டுமன்று குறை. அவனது உலகிலே ஒளியே கிடையாது. நிறம் கிடையாது. அழகு கிடையாது. மலரும் இலையும் அவனுக்கு ஒன்றுதான். பகலும் இரவும் அவனுக்கு வேறல்ல. இதுபோலவே காது இல்லாதவனுக்கு ஓசை என்பதே இன்னதென்று தெரியாது. அவன் உலகில் மொழி கிடையாது. இசை கிடையாது. உடலுறுப்புகளுக்கும் வாழுலகுக்கும் இடையேயுள்ள இதே தொடர்பு மொழியிலும் மொழியுலகிலும் உண்டு. ஏனெனில் உடலின் உறுப்புக்கள் போன்று, மொழிக்கும் பலபண்புத்திறங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று குறைந்தால்கூட, அக்குறைபாடு மொழியின் வாழ்விலும் மொழிக்குரிய, இனவாழ்விலும் மட்டுமன்றி, மற்றமொழிகளின் வாழ்விலும் மனிதப்பேரின வாழ்வாகிய உலக வாழ்விலும் பெருத்த ஊறுபாடு உளதாக்கிவிடும்.
எல்லா மொழிகளுக்கும் இயல்பான, எல்லா மொழிகளிலும் இயல்பாக இருக்க வேண்டிய பண்புத்திறங்களை நாம் ஒன்பதாக வகுக்கலாம். அவை தாய்மொழித் தன்மை அல்லது பேச்சுவழக்குடைமை, கலைத்தன்மை அல்லது இலக்கிய வழக்குடைமை, இயல் வழக்கு அல்லது அறிவழக்குடைமை, அரசியல் வழக்கு அதாவது ஆட்சிமொழியாய் இயங்கும் தன்மை, தெய்வவழக்கு அதாவது சமயவழக்குடைமை, தேசீயத்தன்மை, இனத்தன்மை, சமுதாயத்தன்மை, பொது மொழித்தன்மை அதாவது பிறமொழி தொடர்புரிமை என்பன.
உலகில் இன்று ஏழாயிர மொழிகளுக்குமேல் நிலவுகின்றன என்று மொழி நூலார் கணித்துள்ளனர். தாய்மொழித் தன்மை அல்லது பேச்சுவழக்கு இவை எல்லாவற்றுக்கும் உரிய பொதுப் பண்பேயாகும். ஆயினும் மொழியின் இந்த அடிப்படை உரிமையை இழந்துவிட்ட மொழிகள் இல்லாமலில்லை. உலகில் பேச்சு வழக்கிழந்து மாண்டு மறக்கப்பட்டு மறைந்த மொழிகளும் ஆயிரக் கணக்காகவே இருக்க வேண்டும் என்று கூறலாம். அவற்றுள் நூற்றுக்கணக்கானவைதான் இலக்கிய வடிவிலோ வரலாறு புதைபொருள் மூலமாகவோ நமக்குத் தெரிய வருகின்றன.
தமிழ், தமிழின மொழிகள், சீனம், சப்பன் ஆகியவை நீங்க லாக உலகில் ஆயிர ஆண்டுகளுக்கு மேல் பேச்சு வழக்கிலிருந்த மொழிகள் எவையுமில்லை. ஆகவே பேச்சு வழக்குரிமை மொழிகளின் உயிர்நிலைப் பண்புத்திறமானாலும், எப்படியோ பல மொழிகள் அதை இழந்துவிட்டன, பல இன்னும் இழக்கக்கூடும் என்பதை கவனித்தல் வேண்டும்.
உலக மொழிகள் ஆயிரக் கணக்கானவையாயிருந்தாலும், எழுத்து அமைதியும், இலக்கிய இலக்கணமுடைய மொழிகள் நூற்றுக்குக் குறைவானவையேயாகும். அவற்றுள்ளும் ஆயிர ஆண்டளவு இலக்கிய முடையன - நாம் மேலே குறிப்பிட்ட தமிழ், சீனம், சப்பான் ஆகிய மூன்றின மொழிகளே. தற்கால மேலே ஐரோப்பிய மொழிகளும் சிங்கள முதலிய தென்கிழக் காசிய மொழிகளும் கிட்டத்தட்ட ஆயிர ஆண்டளவை எட்டி வருகின்றன. இந்தியாவில் தமிழின மொழிகள் தவிர, மற்ற மொழிகள் ஓரிரு நூற்றாண்டளவும் வேறு சில இன்னும் குறைவாகவுமே இலக்கிய வழக்கு எட்டி வருகின்றன. தமிழ், சீனம் ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே உலகில் இரண்டா யிரத்துக்கு மேற்பட்ட நீடித்த இலக்கிய வாழ்வுடையவையாய் இயல்கின்றன. அத்துடன் மேலையுலகில் இலத்தீன், கிரேக்க மொழி ஆதிக்கத்தாலும் கீழையுலகில் சமஸ்கிருதம் முதலிய மொழிகளின் ஆதிக்கத்தாலும் பொதுவாக எல்லாத் தாய்மொழிகளிலும் நெடுங்காலமாக இலக்கிய வழக்குரிமையும் இயல் வழக்குகளும் அல்லது அறிவு வழக்குரிமையும் தடைப்பட்டு வந்துள்ளன. இன்றுகூட இந்த ஆதிக்கம் காரணமாக உலகத் தாய்மொழிகளின் இயல்பான வளர்ச்சிவேகம் தடைப்பட்டே இயங்குகிறது. தமிழகம், சீனம், சப்பான் ஆகிய மூன்று பரப்புக்களில் மட்டும்தான் தாய் மொழியே இலக்கியத்துக்கும் அறிவுத்துறைக்கும் தகுதியுடையது என்ற நிலைதொன்று தொட்டு இருந்து வருகிறது.
எல்லா மொழிகளிலும் இந்நிலையில் இக்காலத்தில் வளர்ந்து வருகிறது என்பது மகிழ்வுக்குரிய செய்தி. ஆனால் தமிழகமே இதில் உலகத்துக்கு முன்மாதிரியாய் இயங்கி வந்துள்ளது என்பது பொதுவாகக் கவனிக்கப்படாத செய்தி ஆகும்.
தாய்மொழியே ஆட்சி மொழியாகவும் அமைவது இயல்பு என்பதை இன்று எல்லாரும் முக்கிமுனகிக் கொண்டாவது ஒப்புக் கொள்வர். கல்வித் துறையில் அதுவே பாடமொழியாக வேண்டும் என்பதும் ஒப்புக் கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இந்தப் பண்புகளை உலகில் பரப்பிய, பரப்பி வரும் மொழி தாய்மொழியே என்பதைப் பலரும் கவனிப்பதில்லை. ஏனெனில் கி.பி. 14-ம் நூற்றாண்டு வரையில் இங்கிலாந்தில் ஆங்கிலம் ஆட்சி மொழியாகவோ பாட மொழியாகவோ அமையவில்லை. தவிர ஐரோப்பா முழுவதும் இலத்தீனும் ஆசியாவில் சமஸ்கிருதமும் தவிர மொழிகளின் மீது இத்துறைகளில் இன்னும் அழுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.
உலகவரலாற்றில் நான் மேலே குறிப்பிட்ட மூன்று இனங் களில்தான் தொன்றுதொட்டுத் தாய்மொழி ஆட்சி மொழியாய் உரிமைபெற்று நிலவுகின்றது.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்குமுன் ஆட்சிமொழியாய் இயங்கிய தாய்மொழிகள் தென்னாட்டு மொழிகள் மட்டுமே.
தெய்வவழக்கு அல்லது சமய வழக்குரிமை என்பது பண்புத்திற வகையில் தமிழுக்குக் கிடைத்தபேறு. உலகில் வேறு எந்த மொழிக்கும் அதில் பத்தில் ஒரு பங்கு கூடக் கிடைக்க வில்லை. ஒன்று துணிந்து கூறலாம் - தமிழகத்துச் சமயங்கள் யாவும் தமிழையே தம் சமயவழக்கு மொழியாகக் கொண்டுள்ளன. தவிர, தமிழகத்துக்கு வந்த புதிய சமயங்களுக்குக்கூடத் தமிழில் பேரளவான இலக்கியம் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவின் தேசியச் சமயங்களாயிருந்த புத்தம், சமணம் ஆகிய நெறிகளின் இலக்கியத்தில் மிகப் பெரும்பகுதியும் மிகச் சிறந்த பகுதியும் தமிழில்தான் உள்ளன. மொத்தத்தில் உலகில் மற்றெல்லா மொழிகளிலும் உள்ள சமய இலக்கியம் முழுதும் திரட்டினால்கூட, அறிவிலோ, பண்பிலோ அது தமிழர் சமய இலக்கியத்தின் முன் பெரிதும் தலைகுனிய வேண்டிவரும். தெய்வமொழிகள் என்று எவ்வெவற்றையோ சில காலம் சிலர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் கடவுள் தமிழ் ஒன்றைத்தான் தொன்மொழி என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல வேண்டும். தமிழிலக்கியத்தை உணர்ந்த உலக மொழியறிவாளர் அனைவரிடையேயும் இதுபற்றி கருத்து வேற்றுமை கிடையாது.
மொழியின் பண்புத்திறங்களுள் நாம் மேலே ஆறாவதாகக் குறித்த கூறு உண்மையில் அதற்கு முன்னுள்ள ஐந்து கூறுகளின் முழு நிறைவே ஆகும். தன் இலக்கியமும் தன் அறிவுத் துறையும் தன் ஆட்சியும் தன் சமயவழக்கும் தாய் மொழியாகவே கொண்ட உலகின் முதல் தேசிய மொழியும் தமிழே - முழுநிறைவான தேசியமொழி இன்றுகூட அது ஒன்றே. தமிழ் மூவரசர் என்ற தமிழ் வழக்கு உலகில் எங்கும் எக்காலத்திலும் இதுவரை இல்லாத ஒன்று. தமிழ், தமிழர், தமிழகம் என மொழியில் இனமும் நாடும் ஒரே பெயர் பெற்ற இனமும் உலகில் பிறிது கிடையாது. அரங்கேற்றம் தமிழகத்தின் தனிப்பண்பு. கவியரங்கம் தமிழகமும் அரபு நாடும் மட்டுமே அறிந்தவை. சங்கம் தமிழகமும் சீன, சப்பான் இனங்களும் மட்டும் அறிந்தவை. மொழிக்குத் திசையும் எல்லையும் வகுத்து, சொற்களை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என வகுத்த வகுப்பு முறை இன்றுவரை எம்மொழியிலும் கிடையாது. இயல், இசை, நாடகமென்ற முத்தமிழ் வகுப்பு முறையும் இன்றைய அகில இந்திய கலைக்கூடம் (Indian Academi) கண்டெடுத்துக் கொள்ளும் வரை உலகில் எங்கும் இல்லாத ஒன்று.
உலகில் அடிப்படை மொழி இயக்கம் (Basic Language Movement) ஏற்படுமுன்னரே தமிழில் தனித்தமிழ் இயக்கம் ஏற்பட்டு, உலகில் அப்பண்பின் கலைகளைத் தாண்டிவிட்டது. இந்தியாவில் உபநிடதங்கள் ஏற்படுவதற்குச் சங்க இலக்கியமே வழிவகுத்தது. சமஸ்கிருதத்தில் பரதநாட்டிய சாத்திரமும், அலங்கார சாத்திரமும், பிறவும் ஏற்படவழி வகுத்தது தமிழே. இந்தியாவில் பக்தி என்ற சொல் அறியப்படுவதற்கு ஆயிர ஆண்டுகட்கு முன்பே பக்தி இயக்கம் வளர்த்ததும், இந்து மதத்தை ஓர் அறிவு மதமாக்கிய ஆசாரியர்களை ஈன்றளித்ததும் தமிழகமே.
இந்தியத் தேசீய நாட்டாண்மைக் கழகம் (Indian National Congress) உருவானது தமிழகத்தில்தான். விவேகானந்தரை உலக அறிஞராக்கியதும் தாகூரை உலகக் கவிஞராக்கியதும், காந்தியடிகளை உலகப் பெரியாராக்கியதும் தமிழகம்தான். இந்தியாவில் இந்தி எதிர்ப்பை உருவாக்கி அப்புயலின் கருவாய் இன்றும் இயல்வது தமிழகமே.
உலகுக்குத் தேசீய இயக்கங்களையும், சமய இயக்கங் களையும், உலக இயக்கங்களையும் கலை இயக்கங்களையும், நாட்டிய பண்புகளையும் அலையலையாக உருவாக்கி அனுப்பும் உலக மூலத்தனமாகத் தமிழகம் விளங்கி வந்துள்ளது என்பதை இந்தியத் தலைவர்களும் உலக மக்களும் அறிந்தாலன்றித் தமிழகத்தின் புதிர்களுக்கு ஒரு விடிவு ஏற்படுவது இயலாது என்னலாம்.
தமிழ்ப் புலவர் நெடுங்காலமாகவே தமிழைக் கன்னித் தாய்மொழி என்றும் சாவா மூவாக்கன்னி இளமை மொழி என்றும் பாடி வந்ததுண்டு. கன்னித்தாய் வழிபாடு உலகில் எங்குமே முற்காலங்களில் பரவியிருந்தது. ஆனால் அதை மொழியுருவாகக் கண்ட நாடு தமிழகம் ஒன்றுதான். அத்துடன் இக்கன்னித் தாய்மை அல்லது சாவா மூவா இளமைத் தன்மை தமிழகத்தைப் பொறுத்த மட்டில் வெறும் கவிதைக் கற்பனையன்று. உலகில் எல்லா நாடுகளிலும், மொழிகளிலும் இனங்களிலும் நடைமுறைப்படுத்தி வெற்றி காணத்தக்க ஒரு திட்டமாகவே தமிழர் உருவாக்கி, தமிழ் மொழியில் அதை முக்காலே மூன்று வீசம், முக்கால் வீசம் அளவுக்கு நிறைவேற்றியும் சென்றுள்ளனர்.
மீந்த கால்வீசம் நிறைவேறுவதற்குத் தடையாக இந்திக் கட்டாய நுழைவு வந்துள்ளதே என்றுதான் தமிழ்ப்புலவர் அடிக்கடி சீறுகின்றனர். இந்த உலக வரலாற்றுண்மையை உணர்பவர் அந்தச் சீற்றம் கண்டு சீறமாட்டார்கள். அது தெய்வீக சீற்றமென்று கண்டு அதை வணங்கி வழிபடுவார்கள்.
தமிழின் சாவா மூவா இளமை, கன்னித்தாய்த் தன்மை
தெய்வீகமாக வந்தமைந்ததன்று, தச்செயலான பண்புமன்று. தேசீயத் தன்மை, இனத்தன்மை, சமுதாயத் தன்மை, பொதுமொழித் தன்மை அதாவது பிறமொழித் தொடர்புறவு உரிமை ஆகிய பண்புத் திறங்களைப் பேணி வளர்ப்பதனாலே அம்மூவாக் கன்னியிளமை நயம் உருவாகத் தக்கது, வளரத்தக்கது ஆகும்.
மொழியின் வாழ்வில் மொழியினத்தின் பரப்பு முழுவதும் அதன் எல்லா வகுப்பினரும் எல்லவகைப்பட்ட தொழிற் குழுவினரும் பண்புக் குழுவினரும் ஒருங்கே பங்குகொள்ள வேண்டும். அதுபோல மொழியின் பேச்சு வழக்கிலிருந்து இலக்கிய வழக்கு நெடுந்தூரம் வேறுபட்டுவிடாமலும், இலக்கிய வழக்கிலிருந்து பேச்சுவழக்கு நெடுந்தொலைவு விலகிவிடாமலும் பாதுகாத்தல் வேண்டும். தமிழிலக்கணம், சிறப்பாகத் தொல்காப்பியம் உலக மொழிகளில் வேறு எம்மொழியிலக் கணத்துக்கும் இல்லாத இந்த நோக்கத்தோடு உருவாக்கப் பட்டுள்ளது என்பதை உலகம் இன்னும் கண்டு கொள்ளவில்லை என்றே கூறலாம். இந்த நோக்கமே மொழியின் சமுதாயப் பண்பு. தமிழில் சங்க இலக்கியம் மட்டுமன்றித் தலபுராணங்களும், திருவாசகமும், உலாபரணி முதலிய பிற்காலத்தனவாகப் புலவர் பலரால் கருதப்படும் பிரபந்தங்களும் தமிழின் இந்த அடிப்படைச் சமுதாயத் தேசிய நோக்கம் கொண்டனவாகும். தமிழகத்தின் எல்லா ஊர்களும், நகர்களும், எல்லா மாவட்டங்களும், வகுப்புக்களும், தொழில்களும் தமிழிலக்கியத்தில் பெற்றுள்ள சரிசமப் பிரதிநிதித்துவம் போல ஒன்றை மேலை நாட்டு வாழ்வுகளில்கூட நாம் இன்றும் காணமுடியாது என்பது ஊன்றிக் காணத்தக்கச் செய்தி ஆகும்.
மொழிக்கும் மொழி பேசும் இனத்துக்கும் இடையே நூற்றாண்டு கடந்து நூற்றாண்டாக இனவாழ்வுக்கால முழுதும் உள்ள இடையறா நீடித்த தொடர்பே இனப்பண்பு ஆகும். தமிழில் முழு அளவில் இப்பண்பு தனித்தமிழ் மரபினாலும் தனித்தமிழ் இயக்கத்தாலும் பேணப்பட்டு வருகிறது. தமழுக்கு அடுத்தபடியாக உலகில் இப்பண்பு பேணப்பட்டுள்ள மொழிகள் சீனம், செர்மன், ருசிய மொழிகளே.
தமிழ், சீன முதலிய ஒரு சில மொழிகளில்தான் மொழியும் மொழியினமும் இணைபிரியாமல் ஆயிரக்கணக்கான ஆண்டு நீடித்து மொழியின் பண்பு இனத்திலிருந்தும் இனத்தின் பண்பு மொழியிலிருந்தும் பின்னி ஒன்றுபட்டு இனத்தேசியமாக வளர்கின்றன. தனித்தமிழ் இப்பண்பை இன்றும் செறிவாக்கு கின்றது. ஏனெனில் தமிழ் மொழிக்கும் தமிழினத்துக்கும் உள்ள நீடித்த உறவு தமிழ்ச் சொற்களுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் தனித்தமிழ்ச் சொற்கள் காரணமாகவே கிடைக்கின்றது. தமிழ்மொழி, தமிழிலக்கியம் ஆகியவற்றை இடையறாப் பொங்கல் வளத்துக்கும் உயிராற்றல் குன்றாத வளமான வளர்ச்சிக்கும் இப்பண்பே உதவுகிறது.
இந்தப் பண்பைப் பிற மொழிகளும் வளர்த்தால் அவையும் உலகில் நிலையாக நீடித்து வளர இடமுண்டு. ஆனால் இன்றும் இப்பண்பைக் கண்டுணரவில்லை.
மொழியின் பண்புத் திறங்களில் கடைசியானது, ஆனால் முக்கியத்துவத்தில் மற்றவற்றினும் ஒரு சிறிதும் குறையாதது பொதுமொழிப் பண்பு அல்லது பிறமொழித் தொடர்புரிமைத் தன்மை ஆகும்.
உலகில் நாம் வங்கக்கடல், அரபிக்கடல், செங்கடல் முதலிய பல கடல்களில் பெயர்களைக் கூறுகிறோம். ஆனால் இவை கரை பற்றிய வேறுபாடுகளேயன்றிக் கடல் நீர் பற்றிய வேறுபாடுகளல்ல. கரை வேறுபாடு, ஆழவேறுபாடு உப்புத் தன்மையில் வேறுபாடு, நீரோட்ட அழுத்த வேறுபாடுகள் ஆகியவை கடல்களிடையே இருந்தாலும், அடிப்படையில் உலகில் கடல் ஒன்றே. அது போலவே உலகில் தமிழ், தெலுங்கு, வங்காளம், ஆங்கிலம் முதலிய பல மொழிகள் இருந்தாலும், இவற்றிடையே நாடு, இனம், பண்பு, சொல் தொகுதி ஆகியவற்றில் வேறுபாடுகள், இருந்தாலும், இவை கால இடச் சூழல் வேறுபாடுகளே தவிர வேறல்ல. உண்மையில் அடிப்படை நிலையில் மனித இனத்தின் மொழி ஒன்றே.
மொழியின் பண்புத்திறங்களுள் தற்கால மேலையுலக அறிஞர்கள் கூட ஒரு சிறிதும் அறிந்து கொள்ளாத பண்புத்திறம் மொழியின் பொது மொழித் தன்மையேயாகும். ஒவ்வொரு மொழியும் ஒரு மொழியினத்தைக் கொழுக் கொம்பாகக் கொண் டே படர்வதானாலும், அது அந்த மொழியினத்துக்கு மட்டுமே உரியதன்று, மனித இன முழுமைக்குமேயுரியது. குளத்தில் பல மீன்கள் வாழ்ந்தாலும் ஒவ்வொரு மீனுக்கும் குள முழுதும் உரியது. உலகில் பல மனிதர் இருந்தாலும் ஒவ்வொருவருக்குமே உலக முழுமையும் உரியது. ஒரு வட்டத்தின் கற்றுவரையில் கோடிக்கணக்கான புள்ளிகள் இருந்தாலும் ஒவ்வொரு புள்ளிக்கும் விட்டத்தின் மையமே மையமாகும். இந்நிலையிலேயே உலகின் ஒவ்வொரு மொழிக்கும் உலகத்தின் எல்லா மொழியினங்களுடனும் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் உரிமை உண்டு. ஆனால் உலகில் நெடுங்காலமாகப் ‘பொது மொழிகள்’ என்ற பெயரால் சில பல போலி ஆதிக்க மொழிகளின் மற்ற மொழிகளின் அடிப்படை உரிமையாகிய இப்பொதுமொழி உரிமையை இடை யில் வந்து நின்று தடுக்கின்றன. முதலாளித்துவ வாணிக உலகில் வாங்குவோருக்கும் (Consumers) விற்பவர்க்கும் (Producers) இடையே போலி வாங்குவோர் போலிவிற்போராகத் தரகு இடையிட்டு தரகர் என ஏற்படுவதைக் கண்டித்த ஒரே உலக அறிஞராய்க் காந்தியடிகள் விளங்கினார். ஆனால் மொழித் துறையில் இதே இடையிட்டுத் தரகுப் பண்பை எதிர்க்க ஒரு மொழியறிஞர் இதுகாறும் உலகில் தோன்றாதது வருந்துதற்குரிய செய்தியேயாகும்.
முரசொலி பொங்கல் மலர் 1964
இமய எல்லை
வாழ்க்கை, வாழ்வதற்கே என்று கருதி வாழ்ந்தவர்கள் பண்டைத் தமிழர்கள். ஆனால், அவர்கள் இன்பம் மட்டுமே குறிக்கொண்டு, சோம்பி வாழவில்லை; பொருள் ஈட்டுவதிலும் சலியாது உழைத்தனர். திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவதில் அவர்கள் என்றும் தயங்கியவர்கள் அல்லர். அதேசமயம் இன்பத் தையும், பொருளையும் அவர்கள் தகாத வழியில் பெற விரும்ப வில்லை. அறவழி நின்று ஈட்டினர், அறவழி நின்று இன்பம் துய்த்தனர். வாழ்ந்தால் புகழுடன் வாழவேண்டும் என்று கருதினர். மானம் காத்து, தன் மதிப்புக்கு இழுக்கு வந்தால் சாதலையே விரும்பினர். உயிரை வெல்லமாகக் கருதிக் கோழைகளாக வாழ்ந்தவர்களல்லர் தமிழர்.
உலகின் வீர இனங்களிலே, வீர இனமாகத் திகழ்ந்தவர் தமிழர். இந்தியாவிலே இரசபுத்திரரின் வீர காதைகளைப் படிக்கி றோம்; மராட்டியரின் வீர வரலாற்றில் நாம் ஈடுபடுகிறோம்; அவற்றின் மூல இலக்கணத்தை நாம் புறநானூற்றில் காணலாம். பதிற்றுப் பத்தில், சேர அரசர்களின் போர்க் காவியங்கள் திரைப் படச் சுருள்போல் பத்துப் பத்தாக, நம் கண்முன் அடுக்கடுக்காக ஓடுகின்றன. களவழி நாற்பதில், போரிலேயே திளைத்த சோழப் பெருமன்னன் செங்கணானின் செங்குருதிப் போராட்டங்களில் திளைக்கிறோம். கலிங்கத்துப் பரணியின் தமிழரின் வீரம் கோதா வரி ஆறு தாண்டி, மகாநதியின் இரு கரைகளிலும் போர்முரசு கொட்டிய செய்தி அறிகிறோம்.
ஆனால், தமிழர் வீரத்தின் சிற்றெல்லைதான் காவிரியும், கோதாவரியும், அதன் பேரெல்லை இமயமாகவே காட்சி யளிக்கிறது.
தமிழகத்தின் தென் எல்லை குமரி. ஆனால், குமரியில் எந்தத் தமிழரசரும் சென்று தமிழக்கொடி நாட்டியதில்லை. தமிழகத்தின் வட எல்லை வேங்கடம். அங்கும் எவரும் தமிழ்க்கொடி நாட்ட எண்ணியதில்லை. கலிங்கம் வென்றாண்ட சோழர்கள், கலிங்கத்தில் தாங்கள் கொடி கட்டியதாக விருது கூறவில்லை. இலங்கையை வென்று ஆண்ட பாண்டியரோ, சோழரோ இலங்கையில் தமிழ்க் கொடி நாட்டியதாகவும் பெருமை கூறிடக்காணோம். ஆனால், இமயத்தில் தமிழ்க்கொடி நாட்டியது பற்றியே சங்ககால அரசர்கள் விருது கூறிக் கொள்கின்றனர் - அதுபற்றியே புலவர் பாடினர். அச்செயல் செய்த அரசனை மட்டுமன்றி, அவன் வழிவழிவந்த அவன் மரபினர்களையும், அச்செயலை நினைவூட்டி நினைவூட்டிச் சலியாது பாடியுள்ளனர்.
பாண்டியன், இமயத்தில் தன் கயல்கொடி நாட்டினான். அவனுடன் போட்டியிட்டுச் சோழன் அதே இமயத்தில் சென்று, தன் புலிக்கொடி பொறித்தான். இருவருடனும் மலைத்துநின்ற சேரன் தானும் அதே இடத்தில் சென்று தன் விற்கொடியை ஏற்றிவைத்து மீண்டான்.
குமரிமுனையில், தமிழர்களுக்கு இல்லா அக்கறை, வேங்கடத்தில், கோதாவரியில் இல்லாத இந்த அக்கறை, இமய எல்லையில் மட்டும் வருவானேன்?
இந்தக் கேள்வியை நம் வரலாற்றாசிரியர்கள் கேட்கவில்லை. அதனால்தான் தமிழரின் இந்த உரத்த புகழ்க்குரல் வெறும் கவிதைப் புனைந்துரையாய் இருக்கக் கூடுமோ என்று ஐயுற்று, அதுபற்றித் தம் வரலாற்றாராய்ச்சிக் கூரொளியை இந்திய வாழ்வின்மீது செலுத்தாமலே சென்றுள்ளனர்.
சேரன் செங்குட்டுவன், வடதிசைப் படையெடுப்பைப் பற்றிச் சிலப்பதிகாரம் கூறுகிறது. தன் தாயின் நீராட்டுக்காக ஒரு தடவையும், கண்ணகி சிலைக்காக மற்றொரு தடவையும் அவன் வடதிசை படையெடுத்ததாக அது கூறுகிறது. இது காவியக் கண்கொண்டு பார்த்துக் கவிஞன் கூறும் காரணமேயன்றி, வரலாற்றுக் காரணம் ஆகமாட்டாது. ஏனெனில், இதே காப்பியம், கரிகாலன் வடதிசைப் படையெடுப்பைப் பற்றியும் கூறுகிறது. வடதிசை மன்னரிடமிருந்து, பட்டி மண்டபமும், முத்துப்பந்தரும் கொணர்ந்ததாக மட்டுமே கவிஞர் அங்குக் குறிக்கிறார். எத்தகைய வரலாற்றுக் காரணமும் இதற்குக் கவிஞரால் தரப்படவில்லை.
இதுபோலவே, சோழர் வரலாற்றில் இராசேந்திரனுடைய கல்வெட்டுக்கள் மூலம், அவன் இரண்டாண்டுகளில் இந்தியா முழுவதும் திக்குவிசயம் செய்து இமயம்வரை தன் புகழை பரப்பிய தையும், அடுத்த இரண்டாண்டுகளில், அதுபோலவே கீழ்க்கடலில் கலம் செலுத்தி, பர்மா, மலாயா, சுமத்ரா, சாவா, செலீபிஸ், போர்னியோ எங்கும் சென்று வெற்றி விருது நாட்டியதையும் கூறுகிறது. மலாசியாவெங்கும், இந்தோனேசியா வெங்கும் இதன் சின்னங்கள் உள்ளன. காவியத்தைப் போலவே கல்வெட்டுகளும் வெற்றி பாடுகின்றன-போர்க் காரணம் குறிப்பிடவில்லை.
தொல்காப்பியக் காலப் பாண்டியன், இப்போது சுமத்ரா தீவில் இருப்பதாகக் கூறப்படும் சாலியூரைத் தலைமையிடமாகக் கொண்டு, அந்நாட்டில் தன் வெற்றிச் சின்னமாகக் கடல்நீர் தன் அடியலம்ப நின்று விழாவாற்றிய செய்தியும் சங்கப் பாடல்களில் கூறப்படுகிறது. இங்கும் வரலாற்றுக் காரணங்கள் கூறப்படவில்லை.
சோழன் இராசேந்திரனின் கீழ்க்கடல் போருக்குக் காரணம், தமிழகத்துக்கும் மலாயாவுக்கும் அந்நாளில் உலகக் கடல் வாணிகத் துறையில் ஏற்பட்ட போட்டியே என்று வரலாற்றா சிரியர் டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார் கூறியுள்ளார். ஆயிர ஆண்டுகளுக்கு முன் தமிழகமும், மலாயாவும் உலகின் பெரும் கடலாட்சி இனங்களாக இருந்த நிலைமையை இது நமக்குப் படம்பிடித்துக் காட்டு கிறது.
சேரன் கடலில், பிறகலம் செல்லாதவாறுபோல் என்று சேரரின் கடலாட்சி பற்றிச் சங்க காலப் பாடல்கள் பேசுகின்றன.
இதுபோன்ற ஒரு வரலாற்றுச் சூழ்நிலையே சங்க காலத்தில் தமிழரை இமய எல்லையை நாடச் செய்திருந்தன என்பதை அக்கால உலக வரலாறு நமக்குக் காட்டும்.
சேரன் செங்குட்டுவன் காலத்தில் வடதிசையில் அசோகனது மோரிய ஆட்சி கவிழ்ந்து, பல சின்னஞ்சிறு அரசுகள் ஒற்றுமையற்று நிலவின. இதனைப் பயன்படுத்திக் குசாணர், ஊணர் போன்ற நாகரிகமற்ற முரட்டு இனத்தவர், மேற்கிலிருந்து இந்தியாவைப் படையெடுத்தன. அவர்களில் ஒருவனான கனிஷ்கன் (சிலப்பதிகாரக் கனகன்) நடு ஆசியா, பஞ்சாப் ஆகிய பகுதிகளிலெல்லாம் புகுந்து தன் ஆட்சியை நிலைநாட்டினான். கங்கைக்கரை மீதும் அவன் தன் ஆட்சியைப் பரப்ப முனைந்து வந்தான்.
தென்னகத்தின் வடகோடியில் ஆண்ட அரசர்கள், ஆந்திர மரபினரான சதகர்ணிகள், (சிலம்பின் நூற்றுவர்கன்னர்) தாங்கள் வசப்படுத்தி ஆளவும், அதனுள் கனிஷ்கன் முன்னேறாமல் தடுக்க வும் விரும்பினர். இந்தத் தேசியப் பாதுகாப்பு முயற்சியில், பன்னூறாண்டு போரிட்டு அலைக்கழிவுற்ற வடதிசைப் படைகளுக்கும் ஆந்திரப் படைகளுக்கும் உதவவே, செங்குட்டுவன் வடதிசைப் படையெடுப்புக்கள் நடைபெற்றன.
செங்குட்டுவன் வெற்றியின் பயனை, நாம் இந்திய வரலாற்றில் காண்கிறோம்.
இராசேந்திரன் வடதிசைப் படையெடுப்புக்கும் இதுபோன்ற ஒரு வரலாற்றுச் சூழ்நிலையே காரணம்.
இராசேந்திரன் நாளிலும், வடதிசையில் எத்தகைய வலிமை யான அரசும் கிடையாது. கஜினியில் ஆண்ட மாமுது என்ற அரசன் காசி, கயா வரையில் தடுப்பாரில்லாமல் பதினெட்டுத் தடவை படையெடுத்து இந்தியா முழுவதையும் சூறையாடினான். செங்குட்டுவன் நாளில், ஆந்திரர் தேசிய மானம் காக்க முனைந்தது போல, இப்போது வங்காளத்தை ஆண்ட மரபினரும் தம் முழு வலிமையையும் திரட்டி மாமுதை எதிர்க்க முற்பட்டனர். ஆனால், இப்போதும் வடதிசைப் படைகள் அலைக்கழிவுற்று, வலிவிழந்து நின்றன. இராசேந்திரன், அவசர அவசரமாகத் தென்திசைப் படைகளுடன் வடதிசை சென்றுப் போரிட்டதன் காரணம் இதுவே.
இராசேந்திரன் வெற்றியின் பயனையும் நாம் இந்திய வரலாற் றில் காண்கிறோம். மாமுதின் படையெடுப்புகள் மதுரை (வடமதுரைப் போரோடு முற்றிலும் ஓய்ந்தன. அதுமட்டுமன்று, அவன் மரபும் அவனுடன் ஒழிந்து, நூற்றாண்டுக் காலம், இந்தியாவின் வடமேற்கு எல்லையில் எவரும் காலடி எடுத்து வைக்க முடியாத நிலையேற்பட்டது.
இராசேந்திரனுடன் சென்ற - கன்னட நாட்டுச் சேனைத் தலைவன் வங்காளத்திலேயே தன் குடி, படைகளுடன் தங்கி பின்னாட்களில் ‘சேன’ அரச மரபுக்கு முன்னோனானான். கன்னட மரபினரின் தடங்களை இன்றும் வங்காளத்தில் காண்கிறோம்.
இமய எல்லையின் முக்கியத்துவத்தை நமக்குக் காட்ட, இவ்வாறு இந்தியாவின் இரண்டாயிர ஆண்டுக்கால வரலாறு, ஒரு கைகாட்டியாய் உதவுகிறது.
தமிழ்ச் சங்ககாலம் என்பது உலகில் மூன்று பேரரசுகள் இந்திய நாகரிகத்துக்குப் பேரிடர் தரும் நிலையில் வளர்ந்துவந்த காலம் ஆகும். மேற்றிசையில் ரோமப் பேரரசு ஆசியா வரையிலும், பார்த்திபப் பேரரசு சிந்து ஆறு வரையிலும் வந்து இந்தியாவை நெருக்கிற்று. கீழ்த்திசையிலோ ‘ஹான’ மரபினரின்கீழ் சீனா இன்றைய செஞ்சீனாவைப் போலக் கீழை ஆசியா முழுவதும் விழுங்கி இமயத்தில் கொட்டமடிக்கத் தொடங்கி இருந்தது.
இது செங்குட்டுவனுக்கு முற்பட்ட காலமாகும்.
வடதிசையில் அப்போதும், வலிமையற்ற சிற்றரசரின்றி வேறு எவருமில்லை.
தமிழரசர் மூவரும் இந்தியாவின்மீது, சீனன் கை அணுக வொட்டாமல் காக்கவோ, ஒருவரை ஒருவர் தாக்குவதை விட்டு விட்டு, அதே சமயம் புகழுக்காக ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டு இமயத்தில் சென்று புலி, கயல், வில் பொறிக்க முற்பட்டனர்.
தமிழர் இமயப்போரில், எதிரி சீனனே என்பதைக் கரிகாலன் வரலாறு நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.
இமயமலையை அணுகிய கரிகாலன் அதன் நெற்றியில் புலிக்கொடி பொறித்தான். ஆனால் அப்போதும் இமயத்தின் இறுமாப்புத் தீரவில்லையாம்! அதன் திமிர் அடங்கும்படி கரிகாலன் தன் செண்டால் இமயத்தை அடித்து, அது பம்பரம்போல் சுற்றிவரச் செய்தானாம்! அப்படிச் சுற்றி வந்தபோது, முன்பு நெற்றியிலிட்ட அதே புலிப்பொறிப்பை, அதன் பிடரியில் - அதாவது இமயத்தின் பின்புறமும் இட்டானாம்!
புராணக் கதைபோல், இக்கதை காட்சியளிக்கிறது என்பதில் ஐயமில்லை.
ஆனால் இதைப் பாடியவர்கள் ஒட்டக்கூத்தர் போன்ற கற்பனைக் கவிச்சக்கரவர்த்திகள்.
பாடியவர்கள் காலமோ, இச்செயல் நடந்து, ஆயிரஆண்டு களுக்குப்பின்.
ஆயிர ஆண்டு சோழ மரபினர் சொல்லிவந்த கதை, பரம்பரை பரம்பரையாகச் சொல்லிவந்த விருதுகள், கல்வெட்டுக்கள் ஆகியவற்றின் ஆதாரங்கொண்டு அவர்கள் பாடினர்.
வரலாற்றுக் கண்கொண்டு பார்த்தால், இமயத்தில் தமிழர் தமிழ்க்கொடி பொறித்ததும் கீழ்க்கோடியில் பிலிப்பைன் தீவுவரை சென்று கடலாட்சி எல்லை குறித்ததும், சீனர் கொடுமைகளிலிருந்து இந்திய நாகரிகத்தைப் பாதுகாக்கவே ஆகும். அந்நாளைய இந்திய நாகரிகத்திற்குத் தமிழர் வகுத்த வட எல்லை இமயம் - கீழ் எல்லை, இந்தோனேஷியாவின் வட கோடியிலுள்ள பிலிப்பைன் தீவு!
காஞ்சி 10.4.66
இந்திர விழாவும் தமிழர் வாழ்வும்
தமிழிலக்கியத்தில் தமிழரின் தனிப்பெருந் தேசியக் காப்பியங்களாக மதிக்கப்படுபவை சிலப்பதிகாரமும் மணிமேகலையுமே. இரண்டிலுமே இந்திரவிழா தமிழர் தேசிய விழாவாக, தமிழரசரும் குடிமக்களும் ஒருங்கே கொண்டாடிய விழாவாகப் போற்றப்படுகிறது.
தமிழரால் அந்நாட்களில் திருவோண விழாவும் பிற்காலத்தில் மார்கழி நீராடல் என வழங்கப்பட்டதை நீராடலும் இதுபோலவே தேசியப் பெரு வழக்காயிருந்தன.
இந்திர விழாவும் தைந்நீராடலும் பொங்கலும் ஒரே தமிழ்த் தேசிய விழாவின் பல வடிவுகள் தாமோ என்று எண்ண இடமுண்டு. ஏனெனில் பொங்கலின் அடுத்த நாட்கள் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் அல்லது சிறுவீட்டுப் பொங்கல் எனத் தமிழகத்தில் வழங்கப்படுவது போலவே, இந்தியாவெங்கும் அதற்கு முந்திய நாள் போகிப் பொங்கல் என்று கொண்டாடப் படுகிறது. போகி என்பது இந்திரன் பெயரேயாகும்.
பொங்கல் விழா தமிழரின் புதுமையான தேசிய விழா மட்டுமன்று உலகளவெனப் பரந்த தமிழ்ப்பண்பு வாய்ந்த உலக விழாக்களில் ஒன்று என்றுகூடக் கூறலாம். ஏனென்றால் ஓணவிழாவுடனும், சமய விழாக்களாகக் கொண்டாடப்படும் கிறித்துமசு, ஈது ஆகியவற்றுடனும், தொழிலாளர் விழாவாகக் கொண்டாடப்படும் மே விழாவுடனும் இதற்கு எத்தனையோ அடிப்படைத் தொடர்புகள் இருக்கின்றன.
இவையாவும் பெண்கள், சிறுவர் சிறுமியர் ஈடுபட்ட விழாக்களாக, குடும்ப, சமுதாய விழாக்களாக, மன்னர் குடிமக்கள் இருசாராரும் கொண்டாடி வந்துள்ள தேசிய விழாக்களாக மக்கள் இன்ப விழாவாக, உழவர் தொழிலாளர் விழாவாகத் திகழ்கின்றன. மழை விழாப் பண்பும், ‘சாவா வாழ்வு’ அதாவது நீடின்பம் அவாவிய விழாப் பண்பும் இவற்றில் உள்ளூர ஊடாடுகின்றன.
பொங்கல் விழாவைச் ‘சங்கராந்தி’ என்று கூறிச் சமய விழாவாக்க முயல்பவர் உண்டு. ஆனால் ஆண்டில் இரண்டு சங்கராந்திகள் உண்டு. ஆடி சங்கராந்திக்கு இச்சிறப்பை யாரும் அளிப்பதில்லை. பொங்கலில் கதிரவன் வடக்கே செல்லும் பயணத் தொடக்கம் என்பதுதான் அதன் புண்ணியத் தன்மைக்குக் காரணம் என்று கூறுபவர் உண்டு. இதுவும் போலிவாதமேயாகும். ஏனெனில் வடக்குக்கு ஏன் புனிதத்தன்மை வந்தது என்பதை இவர்கள் கூற முடியாது.
கதிரவன் தென் கோடிக்குச் செல்லும் காரணத்தாலேயே, தமிழகத்துக்கும் தமிழுலகத்துக்கும் வடகிழக்குப் பருவக்காற்று மழையும், திரும்ப வடக்கே திரும்புவதனாலேயே தென்மேற்குப் பருவக்காற்று மழையும் பெய்கின்றன.
பொங்கலும் ஓணமும் இந்த இரண்டு மழைக்காலங் களுக்குரிய விழாக்களேயாகும். முதலாவது இந்திர விழா இரண்டாவது இந்திரனைப் போலவே தென்னகமாண்ட வேந்தன் மாவலி விழா என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்திரன் விழா சங்க இலக்கியங்கள் குறிப்பது. தொல்காப்பியர் இந்திரனை வேந்தன் என்ற பெயரால் மருதநிலத்துக்குரிய துணைத் தெய்வமாகக் குறிக்கிறார். திருவள்ளுவரும் இந்திரனைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
இந்திரன் மழைத் தெய்வம். திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்தை அடுத்து வான் சிறப்பை பாடுகிறார். மழையைக் கடவுட்டண்மைக்கு அடுத்தபடியாகத் தெய்வத் தன்மையுடன் தமிழர் போற்றினர் என்பதையே இது காட்டுகிறது.
இருக்கு வேதகால ஆரியர் இந்திரனையும் வருணனையும் வேறு பல இயற்கைத் தெய்வங்களுடன் வழிபட்டனர். தொல்காப்பிய காலத்திலும் திருவள்ளுவர் காலத்திலும் இந்த இருக்குவேத தெய்வங்களைத் தமிழர் ஏற்று வழிபட்டனர் என்று பல தமிழ்ப் புலவரும், பல தமிழறிஞரும் பேசியும் எழுதியும் வருகின்றனர்.
இது உலகளாவிய ஆராய்ச்சிப் போக்குக்குச் சிறிதும் ஒவ்வாததாகும்.
முதலாவதாக, தொல்காப்பியம் இந்திரனையும் வருணனையும் மட்டுமன்றி, மாயோனையும் சேயோனையும் திணைத் தெய்வங்களாகக் குறிக்கிறது. மாயோனும் சேயோனும் (திருமாலும் முருகனும்) இருக்குவேத தெய்வங்கள் அல்லர் என்பது எவரும் அறிந்த உண்மை. ஆரியரால் அவை இருக்குவேத காலத்துக்குப் பலபல நூற்றாண்டுகட்குப் பின்பே ஏற்கப்பட்டவை.
இதுமட்டுமன்று.
இந்திரன் தொல்காப்பியத்தில் ‘வேந்தன்’ என்றே குறிப்பிடப் படுகிறான். புராணகால ஆரியரால் அவன் வானவர் அரசன் என்றே பாராட்டப்படுகிறான். வேத காலத்தில் அவன் அவ்வாறு வானவர் அரசனாகக் கருதப்படவில்லை.
தொல்காப்பியர் இந்திரனை மருத நிலத்துக்கு அதாவது நாட்டுக்கு அரசதெய்வம் என்றார். வருணனை நெய்தல் நிலத்துக்கு, கடலுக்குத் தெய்வம் என்றார். புராணங்களும் வருணனைக் கடல் தெய்வம் என்றே கூறின. ஆனால் வேதங்கள் இந்திரனை மழைத் தெய்வம் என்று கூறவில்லை. வருணனையே மழைத் தெய்வம் என்றன.
இந்திரனைப் போலவே வானவ அரசனாகப் போற்றப் பட்ட கிரேக்க ரோம தெய்வங்கள் (கிரேக்க தெய்வம் ஜியூஸ்பிதர், ரோம தெய்வம் ஜோவ் அல்லது ஜூபிடர்) உண்டு. ஆனால் இந்திரன் என்ற பெயருடைய ஒரு தெய்வம் இந்திய ஆரியரிடம் மட்டுமே உண்டு - ஆரிய இனத்தவரிடையே உலகில் வேறு எங்கும் கிடையாது!
இந்திரன் என்ற சொல்லோ, தெய்வமோ ஆரியத் தெய்வ மல்ல, இந்தியாவில் தமிழகத்தவரிடமிருந்து ஆரிய இனத்தவர் மேற்கொண்ட தெய்வமே என்பதை இது காட்டுகிறது.
இருக்குவேத ஆரியரே இந்திரனைத் தங்கள் தெய்வமாகக் குறிக்கவில்லை. பாஞ்சாலர்களின் தெய்வமாகவே குறிக்கின்றனர். பாஞ்சாலர்கள் உனக்குத் தரும் பலியைவிட மிகுதியான பலி தருகிறோம். எங்கள் தெய்வமாகி, பாஞ்சாலர்களை வெல்ல எங்களுக்கு உதவி செய்வான்’ என்று அவர்கள் இந்திரனை வேண்டு கிறார்கள்.
பாஞ்சாலர்கள் ஆரியரல்லாதவர், இந்திரனும் ஆரியரல்லாதவர் தெய்வம் என்பதை இது காட்டுகிறது.
இந்திரனைப் போலவே வருணனும் இருக்கு வேத ஆரியரால் ‘அசுரன்’, அசுரர்களின் தெய்வம் என்றே குறிக்கப்படு கிறான்.
பண்டைப் பாரசீக நாட்டவர் தெய்வங்களையே ‘அசுரன்’ என்றுதான் குறிப்பிட்டனர். ஆரியரல்லாதவர்களுடன் அவர்கள் மிகுதி கலந்ததினாலேயே, அவர்கள் கதிரவனைத் தெய்வமாகக் கொண்டனர். கதிரவனே அவர்களிடம் பெருந்தெய்வமாக பின் ஒரு தனிக் கடவுளே கதிரவனுருவினராக அவர்களால் வணங்கப்பட்டனர்.
பார்சிகள் இன்னும் அவ்வாறே வணங்குகின்றனர்.
வருணன் என்ற இந்தியப் பெயர் அதாவது திராவிட மொழிப் பெயர் கிரேக்க - ரோமரின் யூரானஸ் என்ற தெய்வத்துடன் சொல் ஒப்புமை உடையது என்பது காணலாம். யூரான்ஸ் கிரேக்க (ரோமரால் ஆரியத் தெய்வங்கள் வருமுன் ஆண்ட ஆரியரல்லாத தெய்வங்களின் அரசன்(Father Titan) என்றே கொள்ளப்பட்டான்.
தொல்காப்பியர் காலத்தினும் திருவள்ளுவர் காலம் முற்பட்டது. தொல்காப்பியர் காலத்திலே வருணன் அரசத் தெய்வமாகவும், கடல் தெய்வமாகவும், இந்திரன் மழைத் தெய்வமாகவும் கொள்ளப்பட்டான். ஆனால் திருவள்ளுவர் காலத்தில் இந்திரனே மழைத் தெய்வமாகவும், அரசத் தெய்வமாகவும், கடல் தெய்வமாகவும் ஒரே முழுப் பண்பாகக் கொள்ளப்பட்டான்.
பிற்காலத்தில் கடல் என்று பொருள் கொண்ட வாரிதிருவள்ளுவரால் புதுவருவாய் தரும் மழையைக் குறிக்க வழங்கப்பட்டுள்ளது. வாரி, வருணன் இரண்டும் ஒரு பகுதியுடைய ஒரு பொருட் சொற்களே.
புகார்ச் சோழர் கொண்டாடி வந்த இந்திரவிழா, அவர்தம் முன்னோன் ஒருவனின் பிறந்த நாள் கொண்டாட்டமான பெரு மங்கலமேயாகும். இவன் இந்திரனென்னும் பெயரினன், புகார்ச் சோழனின் பெருமைக்கும் புகழுக்கும் காரணமாகச் சீரும் சிறப்புடன் விளங்கிய செம்பியனாவான். இவன் தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன் தந்தையாகவும் இருக்கலாம்.
இந்திர விழாவினைப் பற்றி இப்படிக் கருத்துத் தெரிவிப்பாரும் உளர்.
அது எவ்வாறாயினும் ஆகுக.
இக்கருத்து பற்றிய ஆராய்ச்சிகளில் இப்போது நாம் இறங்கத் தேவையில்லை!
திருவள்ளுவர் கண்ட தெய்வம் எது என்பதே பிரச்சினை.
கடல் - மேகம் - மழை என்ற முழு வடிவும் ஒரே வடிவமாகக் கொண்ட மழைத் தெய்வம் திருவள்ளுவர் கால இந்திரன் - அவனே கடவுளின் இயற்கை உருப்படிவமாகவும், சமுதாய நாடு மொழித் துறைகளில் அரசத் தெய்வமாகவும் கொள்ளப்பட்ட தனால், அவனே திருவள்ளுவர் காலத் தமிழரின் முப்பால் தெய்வம், முழுவாழ்க்கைத் தெய்வமாகப் போற்றப்பட்டான்.
மழை அமிர்தம் சாகாவளம் உடையது. மழையாலேயே உலகம் உயிர்த் தொடர்பும் மலர் பசியும் ஆறாது நீடிக்கிறது.
மழையின் இந்த அமுதப் பண்பை - சாவா மூவா இனிமைப் பண்பை- பொங்கல் விழாவின் குலவை, ஏழை விழாவின் கோலாட்ட மகிழ்ச்சி, கிறித்துமசு விழாவின் என்றும் பசுமை மாறாக் கிறித்துமசு மரம் மே விழாவின் பல்வண்ணச் சாயம் தீட்டப்பட்ட சும்பம் (May Pole) ஆகியவை இன்னும் உலகளாவ எடுத்துக் காட்டுகின்றன.
சமநீதி பொங்கல் மலர் 1967
கன்னித் தாய்மொழி!
பல்வேறு மொழிகளுக்குத் தாயாகியும் கூட, கரும்புத் தமிழ் கன்னித் தன்மை கழியாமல் இருக்கும் வியப்பு.
“கன்னடமும் களிதெலுங்கும்
கவின் மலையாளமும் துளுவும்
உன்னுதிரத் துதித்தெழுந்தே
ஒன்றுபல வாயிடினும்
ஆரியம்போல் உலகவழக்கு
அழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே”
கவிஞர் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை கூறும் ‘சீரிளமைத் திறம்’ அவராகக் கூறும் புதுக் கற்பனைக் கருத்தன்று. சாவா மொழி, மூவா மொழி, கன்னித் தாய்மொழி என்று கவிஞர் தமிழ் மொழியை வருணிப்பது நீண்ட கால மரபேயாகும்.
ஆனால் மற்ற கவிஞர்கள் கூறிவந்திட்ட கற்பனை மரபுகட்கும், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை கூற்றுக்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு; தமிழ் கன்னித் தாய்மொழி என்பதை அவர் சான்றுகாட்டி மெய்ப்பிக்கிறார்.
ஆரியம் பல மொழிகளை ஈன்றது.
சமஸ்கிருதம், பானிபாகதம், சாபிரம்சங்கள் தற்கால வட இந்திய மொழிகள் என பிள்ளைகளையும், கொள்ளுப் பேரப் பிள்ளைகளையும் ஈன்று ஒரு பரம்பரையையே வளர்த்துள்ளது.
ஆயினும் அதன் கொள்ளுப் பேரப்பிள்ளைகளான இந்தி, தங்கபளி, குசராத்தி முதலிய இளம் பிள்ளைகள்தான் இன்று வாழ்கின்றன.
ஆரியம், தான் இறந்ததுடன் பிள்ளையாகிய சமஸ்கிருதம் இறக்க, அதன் பிள்ளை பிள்ளைகளாக இரு தலைமுறையுடன் இறக்க, இறந்த ஒரு பரம்பரை ஆகிவிட்டது.
ஆனால், தமிழ் ஆரியம்போலப் பல பிள்ளைகள் - கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற பிள்ளைகளை ஈன்று, ஆரியம் போலவே ஒரு பரம்பரைக்குத் தாயாகிவிட்டது. ஆயினும் பிள்ளைகளும் வாழ்கின்றன; தாயும் வாழ்கிறாள் - பிள்ளைகளும் இளமையுடன் திகழ்கின்றன; தாயும் இளமையுடன் திகழ்கின்றாள்.
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை வரலாற்றுச் சான்று காட்டித் தமிழ் மொழியைக் கன்னித் தாய்மொழி என்று கூறுகிறார்.
கழிந்த இரண்டாயிரமாண்டுகளுக்குள்ளாகவே ஆரிய பரம்பரையில் வேத ஆரியம், சமஸ்கிருதம், பானி பாகதம், சாபிரம்சம் என்ற நான்கு தலைமுறைகள் கடந்து, இன்று ஐந்தாம் தலைமுறை வாழ்கிறது. இதனால் இந்தியாவில் ஆரிய மொழிகளின் தலைமுறை வாழ்வு ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலில்லை என்பது காணலாம்.
திராவிடப் பரம்பரை இந்த வகையில் புதுமை வாய்ந்தது. தமிழின் பிள்ளைகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு ஆகியவைகள் ஆயிரம் கண்டு இலக்கிய வாழ்வே பெற்றுவிட்டன - இரண்டாயிரம் ஆண்டுகட்குக் குறையாத மொழிவாழ்வு அவற்றுக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் அவை இன்னும் வாழ்கின்றன - என்றும் தமிழ்போல் வாழும் என்றும் உறுதியாகக் கூற இடமுண்டு.
ஆகவே, தமிழின் பிள்ளைகள் கூட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து இன்னும் இளமை மாறாமலே இருக்கின்றன. பிள்ளைகளே ஆயிரக்கணக்கான ஆண்டு வாழும் சாவா மூவாக் கன்னிகள் ஆவர்.
தமிழ், இந்தச் சாவா மூவாக் கன்னி மொழிகளின் தாய், இரண்டாயிர வயதுடைய குழந்தைகளைப் பெற்ற பின்னும், அந்தக் குழந்தைகளைப் போலவே கன்னித் தாயாய் இன்னும் புத்திளமையுடன் வாழ்கிறது.
ஆசிரியர் சுந்தரனாரின் ‘சீரிளமை’ கற்பனையானாலும், கற்பனை மரபில்லாத கற்பனை; வரலாற்றறிவை அடிப்படை யாகக் கொண்ட கற்பனை என்று காண்கிறோம்.
இது மட்டுமன்று.
ஆரிய மொழிகளைவிடப் பழமை வாய்ந்த மொழிகள் உலகில் உண்டு. எகிப்திய, சுமேரிய மொழிகள் அவை. இவை ஆரிய மொழிகளைவிட நீண்ட பழமை மட்டுமுடையவையல்ல - நீண்ட வாணாளும் உடையவை! ஏனென்றால் அவை மூவாயிர நாலாயிர ஆண்டுகள் உலகில் நாகரிகத்திற் சிறந்த மொழிகளாய் நிலவின.
இந்த நீண்ட வாழ்வுடைய தொல்பழம் மொழிகளும் மாண்டு, அவை வாழ்ந்த இடத்தில் பல தலைமுறை மொழியுடன் வாழ்ந்து வாழ்ந்து மாண்டுவிட்டன.
பழைய ஆரியம் மாண்டபின், பல தலைமுறையுடன் பின் வந்து மாண்டது போலவே, இவற்றின் வகையிலும் அவை தம் நீண்ட வாழ்நாள் முடிந்து மாண்டபின் எத்தனையோ ‘பொடிப் பொடித்’ தலைமுறைகள் வாழ்ந்து மாண்டு வந்துள்ளன.
தமிழ், இந்தியாவிலே மட்டுமன்று - உலகிலேயே ஒரு வியக்கத்தக்க அரும்பேறான மொழி.
இன்று உலகில் வாழும் மொழிகளில் தமிழுடன் ஓரளவு ஒத்த நீள் வாழ்வு மொழிகள் இரண்டுதான் - சீனமும், சப்பானும் மட்டுமேயாகும். ஆனால் இவைகூடப் பழமையில் குறைந்தவை; இளமையில், தளராப் புதுமையில் தமிழுடன் ஈடு உடையவை யல்ல!
நெடுங்காலம் பிற மொழி ஆதிக்கத்தில் உழன்ற தமிழர்கள் ‘கன்னித் தாய்மொழி’ என்று பாடியதுடன் நின்றார்கள் - அது உண்மையிலேயே கன்னித் தாய்மொழி, கடவுள்போல் என்றுமுள்ள தெய்வமொழி என்பதைக் காணத் தவறிவிட்டனர்.
பேராசிரியர் சுந்தரனார் இதனைப் புதிது நினைவூட்டி புதிய ஆராய்ச்சி நோக்குடன் அதனை வலியுறுத்தியுள்ளார்.
வருங்காலம் இன்னும் ஒருபடி மேற்செல்லக்கூடும்; மேற்செல்லும்!
பேராசிரியர் சுந்தரனாரே இதற்கு வழிகாட்டியுள்ளார். ஏனெனில், அவர் தாம் எழுதியது கவிதையானாலும், தமிழ் கன்னித் தாய்மொழி என்று வாளா பாடாமல் அதை மெய்ப்பித்துக் காட்ட ஆராய்ச்சியில் புகுந்துள்ளார்.
அதே ஆராய்ச்சிப் பண்பு இன்னும் ஒருபடி செல்லத் தக்கது!
தமிழ் சாவா மூவா மொழி என்பதை வரலாறு மெய்ப்பிக்கும், ஆனால் மற்ற மொழிகள் மாள, அது மட்டும் ஏன் மாளாமல் நின்று நிலையாக வாழும் தன்மை பெற்றிருக்கிறது என்பதை வரலாறு காட்ட முடியாது.
அதை மொழியியலே காட்ட வேண்டும்.
சாவா மூவா மொழியாகத் தமிழ் அமைந்தது தெய்வ வரத்தால் அன்று; தற்செயலாக வந்தமைந்த ஒரு யோக சாதனமன்று. சாவா மூவாத் தன்மையைக் கண்டு, அதை அவர்கள் தங்கள் மொழியில், இலக்கியத்தில், வாழ்வில், பண்பாட்டில் தோய வைத்துள்ளனர்.
இதற்குத்தான் தமிழ்ப் பண்பு என்று பெயர்.
இதனைப் பேணும் எந்த மொழியும், இனமும், நாகரிகமும் மாளாது.
தமிழர் பேணிய இந்தப் பண்பைத் தமிழர் ஆய்ந்து காண வேண்டும். கண்டால், அது தமிழர்க்கு மட்டுமன்று; உலகம் முழுவதற்குமே ஒரு சாவா வரம் தரும் சஞ்சீவியாய்ப் பயன்படும்.
தமிழ் மொழியின் இந்தப் பண்பு, தமிழை ஒட்டி வளரும்
மலையாளம், கன்னடம், களிதெலுங்கு ஆகிய மொழிகளின் குருதிமரபாக அமைந்திருப்பதால்தான். அவை இரண்டாயிரம் ஆண்டு மொழி வாழ்வும், ஆயிர ஆண்டு இலக்கிய வாழ்வும் கண்டும், இன்னும் புத்தம்புது மொழிகளுடன் போட்டியிடும் இளமையுடையவையாய்த் திகழ்கின்றன.
இந்தத் தமிழ்ப் பண்பை ஆரிய மொழிகள் பின்பற்றினால், அவையும் சாகாப் பரம்பரையாக வளர்க்க எண்ணுகிறார்கள்.
காலம் இதைத் தவறு என்று காட்டும்.
சமநீதி பொங்கல் மலர் 1968
காலத்துக்கேற்ற தமிழிலக்கணம்
தமிழ்மொழி இந்திய மொழிகளிலே, உலக மொழிகளிலே, நடு நாயகமானமொழி, அது என்றும் இளமைப்புது நலத்துடன் வளர்ந்து வந்துள்ள, வளர்ந்து வருகிற மொழி மட்டுமன்று; இன்னும் புதுநலத்துடன் வளரவிருக்கிற, வளர வேண்டிய மொழி; உலக மொழிகளை, நாகரிகத்தை எதிர்பாரா அளவில் ஊக்கி வளர்க்க இருக்கும் மொழி.
இந்தப் பெரும் பொறுப்பைத் தமிழ்மொழி நிறைவேற்ற வேண்டுமானால், தமிழர்க்கும் அதில் பங்கு இருத்தல் வேண்டும். தமிழ்ப்புலவர், தமிழ்ப் பொதுமக்கள், தமிழ்ச்செல்வர், தமிழ் மாணவ, இளைஞர் இளநங்கையர், தமிழகத் தலைவர்கள், தமிழக அரசு ஆகிய எல்லாத் திறத்திலும் ஊக்க முயற்சியும், ஒத்துழைப்பும் இருத்தல் வேண்டும்.
இவ்வகையில் என்ன என்ன செய்ய வேண்டும்?
முதலாவதாக, தமிழின் பெருமையை நாம், அல்லது நம்மில் பலர், நெடுங்காலமாகப் பேசி வந்திருக்கிறோம். ஆனால் இந்தப் பேச்சு நம் தாய் மொழிப்பற்றாக மட்டும் இருந்தால் பயனில்லை, நம் தமிழுணர்ச்சியாக, வெறியாக இருந்தால் கூடப்பயன் இல்லை. அதன் உண்மையான பெருமையை நாம் உள்ளவாறு ஆராய்ந்து உணர்தல்வேண்டும். அதை எல்லாத் தமிழர்களிடமும் பரப்ப வேண்டும். தமிழகத்துக்கு வெளியில் உள்ள அறிஞர் பெருமக்கள், தலைவர்கள், பொதுமக்கள் உணரும்படி பரப்பூக்க முயற்சிகள் பரப்பூக்க நிறுவனங்கள் அமைத்தல் வேண்டும்.
தமிழின் உள்ளார்ந்த பெருமையை இன்று உலகம் உணரத் தொடங்கியுள்ளது என்பதில் ஐயமில்லை. ஆனால் அதன் உண்மைப் பெருமையில் நூறில் ஒரு பங்குகூட உலகம் இன்று அறியவில்லை. தமிழரோ, ஆயிரத்தில் ஒரு பங்குகூட இன்னும் உணர்ந்து கொண்டதாகக் கருத இடமில்லை. உணர்ச்சியும் வெறியும் இன்னும் அறிவுடன் தொடர்பற்றதாய், செயல் திசையில் கனவுகூடக் காணும் நிலை இல்லாததாய் இருப்பதே இதற்குச்சான்று ஆகும்.
தமிழன் பெருமைகளில் ஒன்று. அது மற்ற மொழிகள் இலக்கியம் காணுமுன்பே இலக்கணமும், மற்ற மொழிகள் கலைகாணு முன்பே இயல் (விஞ்ஞானம்) ஆய்வும் கண்டுவிட்டது என்பதே; இதுமட்டுமன்று; மேலையுலகில் இருபதாம் நூற்றாண்டின் புதிய மொழி ஆய்வுகளை ஊக்குமளவில், பல திசைகளில் அவற்றைக் கடந்து மேற்செல்லும் அளவில், தமிழர் ஆயிர இரண்டாயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பே மொழியாய்வுத் துறையில் முன்னேறியிருந்தனர் என்பதே!
இதனை நாம்-தமிழராகிய நாம்-பிற நாட்டார், மேல் நாட்டாராய்ச்சியின் உதவியில்லாமல் உணர முடியாது, கனவில் சென்றெட்டக்கூட முடியாது.
தமிழிலக்கணத்தின் பெருமை இது. இதை உணர்ந்தால் மட்டும், இதை உலகம் உணரும்படி செய்தால் மட்டும் வருங்காலத் தமிழகத்துக்கு, வருங்கால இந்தியாவுக்கு, வருங்கால உலகுக்கு வழி காட்டும் பெரும் பொறுப்பைத் தமிழன் தாங்கிவிட முடியாது. ஏனெனில் இது தமிழின் பெருமை, பழந்தமிழின் பெருமை - இன்றைய தமிழகத்தின் தமிழரின், தமிழக அரசின் கடமையில் இது ஒரு கடுகளவு கூட ஆய்விடாது.
யானை மரபில் பூனையாக இன்றைய தமிழர் வாழ்கிறோம். சங்கத் தமிழின் மரபில், இளங்கோ மரபில், சாத்தனார் மரபில், தொல்காப்பியன் மரபில், வள்ளுவன் மரபில் நாம் வந்தவர்கள் என்பதில் ஒரு சிறிதளவேனும் வாய்மை இருக்குமானால், நாம் தமிழின் பெருமையை ஆராய்வதுடன் நில்லாமல், குறைபாடுகளையும் ஆராயவேண்டும்.
இன்றைய தமிழகம் மட்டுமின்றி, இந்தியா - ஆசியா - கீழ்திசை முழுவதுமே இயலாய்வுத்துறையில் (விஞ்ஞானத்தில்) பிற்பட்டு விட்டோம், பிந்துற்றே கிடக்கிறோம் என்பதை யாவரும் அறிவர். ஆனால் இலக்கணமே விஞ்ஞானங்களின் தாய்; அதில் முன்னேறாவிட்டால், நாம் விஞ்ஞானத்தில் முன்னேற முடியாது. நம் முன்னோர் பெருமைகளை உலக மக்களுக்குக் காட்ட நம்மிடம் மிஞ்சியுள்ளது மொழி ஒன்றுதான். அதன் இலக்கிய இலக்கணம் தான். அதைக்கூட நாம் உணர்ந்து காலத்துக்கேற்ற நிலையில் முன்னேற்ற முடியவில்லையானால், நாம் வேறு எதில்தான் முன்னேற்றம் கண்டுவிட முடியும்!
நம் இலக்கணங்கள் பலவுமே, யாவுமே பெருமை யுடையவைதாம். நம் தொல்காப்பியரும் அரிய கருவூலம்தான், நம் நன்னூலும் தொன்னூலும் நம் அகப்பொருளும் யாப்பருங்காலக் காரிகையும் தண்டியலங்காரமும் எல்லாம் அரிய ஏடுகள்தாம். இது மட்டுமன்று. இவற்றில் நம் வளர்ச்சியை, ஓயா இடையறா வளர்ச்சியைக்கூட காண்கிறோம். இப்பெருமைகள், இவ் வளர்ச்சிகள் வேறு எந்த உலக மொழியின் முன்னும் நம்மைத் தலைகுனிய வைத்துவிடத் தக்கவையல்ல, தலைநிமிரச் செய்பவையே என்பதில் ஐயமில்லை.
ஆனால் -
நம் வளர்ச்சியில் நீள அகல வளர்ச்சியுண்டு. பழமையில் நின்றுவிடாது பொது முன்னேற்றங் காணும் புதுமை நோக்கிய வளர்ச்சிகூட உண்டு. ஆனால் உயர்ச்சியில், ஆழத்தில், நுட்பத்தில் வளர்ச்சி இருப்பதாகக்கூற முடியாது. நம் தொல்காப்பியத்திலும் இல்லாத செறிவும் கட்டுக்கோப்பும் நன்னூலில் உண்டு. தொல் காப்பியத்திலும் விரிவான அகப்புறப் பொருளிலக்கணங்களை, யாப்பமைதி முறைகளை, இடைக் காலத்தார் 18-ம் நூற்றாண்டு வரை கண்டு விரிவாய்ச் செய்துள்ளனர். தொல்காப்பியம் தாண்டிய அகற்சியும் புதுமையும் நன்னூல் தாண்டிய அகற்சியும் புதுமையும் உரையாசிரியர்களிடையே உண்டு. ஆயினும் தொல்காப்பியம் அறிவுலகின் இமயம், நன்னூல் அதன் விந்தியம், மற்ற இலக்கண நூல்கள் குன்றுகள், உரையாசிரியர்களோ பாறைகள் - இப்படித் தேய்ந்து வந்துள்ளவையே தமிழிலக்கண ஆசிரியர்களின் போக்கு!
இந்த நிலைகள் மாறவேண்டுமானால், நாம் பண்டைய இலக்கண ஆராய்ச்சிகளிலும், இக்காலப் பிற மொழிகளின் இலக்கண தப்பீட்டாராய்ச்சிகளிலும் மொழி நூல் (Philology), மொழியியல் (Linguisties) ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு, மூவகை ஆராய்ச்சிகளுக்கு வகை செய்தல் வேண்டும்.
முதலாவது நம் இலக்கண நூலின் பெருமைகளை ஆராய்ந்து, அது சென்ற ஈராயிர மூவாயிர ஆண்டுகளில் நீள அகலப் புதுமைகளில் வளர்ந்த வகைகளையும், உயர்ச்சி வகைகளில் தேய்ந்து தேய்ந்து வந்த வகையையும் வரலாறாகக் காண்டல் வேண்டும்.
இரண்டாவதாக, உலகமொழிகளில் இலக்கணங் களினுடனும், இலக்கண முறை வரலாறுகளுடனும் தமிழ்மொழி இலக்கணத்தையும் இலக்கண அறிவு வளர்ச்சி தளர்ச்சி வரலாற்றையும் ஒப்பிட்டாய்ந்து, தமிழ் இலக்கணத்தின் தனிச் சிறப்புப் பண்புயர்வுடன், தனிச் சிறப்புப் பண்புக் கேடுகள் வகுத்துக் காணல் வேண்டும்.
மூன்றாவதாக, தொல்காப்பியத்தின் தனிப்பெருஞ் சிறப்புகளுடன், சமஸ்கிருதத்தில் பிராதிசாக்கியங்கள், பாணினீயம் அணியலங்காரத்துறை விரிவு ஆகியவற்றின் தனிப்பெரும் சிறப்புகளும், இன்றைய மேலை மொழிகளின் இலக்கண, மொழிநூல், மொழியியல் சிறப்புக்களும் ஒருங்கமைய, காலத்துக்கேற்ற தமிழ்ப் பேரிலக்கணம் அமைக்க வேண்டும்.
இருபதாம் நூற்றாண்டின் தொல்காப்பியமாக அது அமைய முடியுமானால், ஒப்புயர்வற்ற அவரது இனிய, எளிய, நுண்ணிய மார்ந்த நுழைபுலத்திறம் வாய்ந்த சூத்திர நடையில் அது யாக்கப் பெற முடியுமானால், தமிழகம் இந்நூற்றாண்டிலும் வருங்கால உலகிற்குப் புது வழி காட்டமுடியும் என்பது ஒருதலை. ஆனால் அது உரைநடையில் அமைந்தால்கூட, மேலை நாடுகளுக்கு ஒப்பாகக் கீழை நாட்டைக் கொண்டு வரத்தக்க ஆசியாவின் முதல் முயற்சியாக அது அமையும் என்று உறுதியாகக் கூறலாம்.
தமிழ் இலக்கணம் பல வகைகளில் உலகின் எல்லா இலக்கணங்களையும்-சமஸ்கிருத இலக்கணத்தைக்கூடத் தாண்டி வளர்ந்துள்ளதாயினும், இன்றைய உலகில் பிற்பட்டுவிட்ட தென்பதில் ஐயமில்லை. ஏனெனில் எல்லாக் கீழை மொழி இலக்கணங்களையும் போலவே தமிழ் இலக்கணமும் விரிவுரை இலக்கணமாக (Descriptive Grammars) அமைந்துள்ளதேயன்றித் தொடர்புறவு இலக்கணமாக (Word Compounds) அமையவில்லை. குருட்டுத்தனமாக மரபு பின்பற்றும் இலக்கணமாக அமைந்ததே யன்றி, மரபுக்கு விளக்கம் நாடும் மொழிக்கு, இலக்கணமாக அமையவில்லை.
மக்களும் புலவோர்களும் அரசும் இவ்விலக்கணத்துறை முயற்சியை வெற்றிகரமாக்கினால், அவ்வெற்றியின் எதிரொலிய திர்வுகள் நம் விஞ்ஞானம், தொழில், செல்வ வளம் ஆகியவற்றிலும் அலைபாயாமலிராது என்று கட்டாயமாகக் கூறலாம்.
கூட்டுச் சொல் தொகுதிகள், அதாவது தொகை நிலைகள் சமஸ்கிருதம்; சமரசம்; ஆங்கிலம் (றுடிசன ஊடிஅயீடிரனேள) உலக மொழி களெங்கும் வளர்ந்து வருகிற ஒரு பண்பு, சமஸ்கிருதம் இதற்கென விரிவான இலக்கணம் வகுத்துள்ளது. பழந்தமிழ் இலக்கணங்கள், சிறப்பாக உரையாசிரியர்கள் இதற்கு இலக்கணம் வகுத்துள்ளா ராயினும், இப்பண்பு தமிழில் படரால மரமாக வளர்ந்துவரினும், இன்னும் தமிழ் இலக்கணம் இதனை நன்கு ஆராயவில்லை.
தமிழ், யாப்பு இலக்கண வரம்புகள் தாண்டி எத்தனையோ காத தொலைவு வளர்ந்து வருகிறது. தேவார கால முதல் வளர்ந்த விருத்தங்கட்கோ, பாரதியால் புது வளர்ச்சி பெற்ற பிற இசை நாடக யாப்புகளுக்கோ இலக்கணம் அமைக்க யாரும் இன்னும் முன்வரவில்லை. அண்மையில் ஒரு தமிழ்ப் புலவர். இதுபற்றி ஒரு புதிய இலக்கணமே வகுத்து ஓர் ஆங்கில அறிஞரின் சீரிய கருத்துரை விளக்கங்களே பெற்றிருந்தும், அது கவனிப்பாரற்றுக் கிடக்கிறது.
குற்றியலுகரம், இகரம், ஐகாரம், ஒளகாரம், மகரம், ஆய்தம் ஆகியவையும் உயிரளபெடை, ஒற்றளபெடையும் தமிழிலக்கணச் சிறப்புக் கூறுகள். ஆனால் இப்பண்புகள் தமிழ் மொழியுடன் அமைந்து நிற்பவையல்ல, உலக மொழிகளிலெல்லாம் படர்ந்து வருபவை. தமிழர் இவற்றின் உலக முக்கியத்துவம், தமிழ் முக்கி யத்துவம் ஆகியவற்றை இன்னும் கருதிக் காணவில்லை.
ஒற்றுமிகுதல் பற்றி இன்று தமிழ்ப் பத்திரிகைகளில் குழப்பக் குளறுபடிகள் நடைபெறுகின்றன. புலவர்களிடையே கூட ஆங்காங்கே கருத்து வேறுபாடுகள் இல்லாமல் இல்லை. இதுபற்றி அண்மைக்காலப் புலவர் ஒருவர் ஒரு தனி இலக்கணம் வகுத்தும், தமிழகம் அதில் புறக்கணிப்பே காட்டி வருகிறது.
பள்ளிக்கூடங்களுக்காகப் பேராசிரியர் முனைவர் மு. வரதராசனாரும், முனைவர் ஞா. வேதநேயப் பாவாணரும் எழுதிய இலக்கணங்கள் இக்குறைகளில் சிலவற்றை நீக்குகின்றன. ஆனால் அவை பள்ளிக்கூட இலக்கணங்களாகக் கருதப்பட்டு வருவதால், புலவருலகின் கவனத்தைக் கவரவில்லை. அவர்கள் புலமை ஏதோ ஆங்கிலப் புதுமையாகக் கருதப்படுவதனால் தமிழ் மரபில் இன்னும் இடம் பெறாமல் விடப்பட்டுள்ளது.
தொல்காப்பியர் காலத் தமிழரின் குருதி நம் நரம்புகளில் ஓடுவதுபோல, அவர்களின் அறிவும் நம் மூளையிலும் நரம்பு மண்டலத்திலும் ஓடத் தொடங்குமானால், நாம் நியூயார்க்குடனும், மாஸ்கோவுடனும், பாரிசுடனும் கட்டாயம் சரிசமப் போட்டியிடும் நிலை நமக்கு வந்துவிடும். அத்திசை நோக்கி மண்டியிடும் கீழையுலகின் அவலநிலை அதன்பின் நெடுநாள் இருக்கமாட்டாது.
முரசொலி பொங்கல் மலர் 1970
கற்பகத்தைச் சேர்ந்தார்க்கு…
விரும்பியதையெல்லாம் விரும்பியபடி பெற வேண்டும் என்றுதான் மனிதன் கனவு கண்டு வந்திருக்கிறான். அந்தக் கனவின் சின்னங்களாக, உருவகங்களாகவே கேட்டதையெல்லாம் கனிகளாகத் தந்துவிடும் வானுலக மரமாகிய கற்பகம், விரும்பியதையெல்லாம் பாலாகக் கொடுக்கும் வானுலகப் பசுவாகிய காமதேனு, தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் வான்மணியாகிய சிந்தாமணி, எந்த நோயையும் உடனே குணப்படுத்தி மூவா வாழ்வளிக்கும் வான்மருந்தாகிய சஞ்சீவி, சாவை வெல்லும் அமுதம், எடுக்க எடுக்கக் குறையாது உணவளிக்கும் அமுதசுரபி முதலானவை விளங்குகின்றன.
ஐயாயிரம் ஆண்டுகளாகத் தமிழன்னை தன் காலக்கருவினுள் இத்தகைய கனவுத் திட்டங்களாகவே தமிழிலக்கியத்தை, அதன் மலர்ச்சியாகிய தமிழிலக்கியத்தை, அவற்றின் மலர்ச்சிகளாகிய திராவிட இயக்கத்தை, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தவங்கிடந்து பேணி வந்திருக்கிறாள்.
நம் தமிழ் இன்று உலக அரங்கேறத் தொடங்கிவிட்டது. நம் தமிழகத்தின் படிநிலையும் இன்று முன் என்றும் இருந்ததைவிட உயர்ந்து வருகின்றது. தமிழகம் நீண்ட நாள் கண்ட ஒரு உலகக் கோட்பாடு, ஒரு கடவுட் கோட்பாடு. ஒருவனொருத்தி காதல் மணமாகிய கற்புக் கோட்பாடு, சாதி மத வருண வகுப்புப் பேதங்கள் அற்ற சமுதாயக் கோட்பாடு, ஆண்டானடிமையற்ற, முதலாளி தொழிலாளியற்ற, செல்வர் ஏழையற்ற சமுதருமக் கோட்பாடு ஆகியவற்றை இந்தியாவும் உலகும் பல்வேறு வடிவங் களில் கனவு காணத் தொடங்கிவிட்டன.
நம் தமிழகம் கேட்பவற்றைக் கேட்குமுன் கொடுக்கத் துடிக்கும் ஒரு தமிழியக்கக் காண்முனையை, நம் கனவுகள் தாண்டி வேகமாக நனவுத் திட்டங்களிடம் ஒரு நாயகனை நம் முதல்வராக, பண்டாரகர், உலகப் பெருங் கவிஞர், தமிழவேள், கலைஞர் மு. கருணாநிதி உருவில் பெற்றுவிட்டது! ஆயினும் இச்சமயத்தில் தான் நம் கனவு காணும் திறத்திற்கு, நம் விருப்பங்களை விழுப்பங்களாக்கும் நம் துணிவிற்கு, விரும்பியதை வழுவாமல் கூறும் நாத்திறத்திற்கு ஒரு சோதனை ஏற்பட்டிருக்கிறது என்று கூறலாம்.
ஆளுபவர் திண்ணியராக, அவர்கள் ஆட்சித்திறம் திண்ணியதாக இருந்துவிட்டால் மட்டும் போதா. ஒரு கை தட்டினால் ஒலி ஏற்படாது. இருகை தட்டினால்தான் ஒலி ஏற்படும். ஆளப்படுபவரும் திண்ணியராக, அவர்கள் விருப்பங்களும் குறிக்கோள்களும் திண்ணியவையாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஆளுபவர்களின் எண்ணங்களுக்கு, செயல்களுக்கு, திட்டங்களுக்குச் சரியான ஆதரவும் ஊக்கமும் ஆற்றலும் ஏற்படும்.
இது மட்டுமன்று, ஆளுபவருக்கும் ஆளப்படும் பொது மக்களுக்குமிடையே இரு வகுப்புகள் இருக்கின்றன. ஒன்று ஆட்சித் துறையை நிர்வகிக்கும் ஆட்சி வகுப்பு. இது சுயாட்சிக் காலத்திலிருந்து அயல்மொழி படித்து அயலாட்சிக் கொள்கைகளுக்கேற்ப நடந்து அப்பண்பாட்டில் வளர்ந்தது. இன்னொன்று, அந்த அயலாட்சி வகுப்பையும் அவர்களது அயல்மொழித் தகுதியையும் பண்பாட்டையும் பயிற்றுவித்து உருவாக்கிய கல்விமுறை - பள்ளிகளுக்கு பல்கலைக்கழகங்கள்.
சுதந்தரம் ஏற்பட்டபின்பும், பல நல்ல தேசியக் கட்சிகள், முற்போக்குக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னும்கூட இவ்விரண்டு வகுப்புகளும் கிட்டத்தட்ட அப்படியேதான் இருக்கின்றன. நம் சமுதாயத்திலுள்ள சுயாட்சிக் கால அடிமைப் போக்குகளையும் பிற்போக்குத் தலைமைகளையும் ஆதரித்து வலுப்படுத்துவ திலேயே இவ்விரண்டன் சக்திகளும் பெரிதும் ஈடுபட்டிருக் கின்றன.
அண்மைக் காலத்தில் அரசியல் வேறுபாடுகளைப் பயன்படுத்தி மாணவர்களைத் தமிழுக்கெதிராகத் திருப்பிவிட இவை பயன்பட்டு வந்துள்ளன. தமிழ்ப் பாடத் திட்டம் தமிழ் மந்திரங்கள் ஆகிய சிறு முற்போக்குகளுக்குக்கூட இவர்கள் கையிலுள்ள பத்திரிகைகள் எவ்வளவு பூடகமான கதை கட்டுரை சமய புராணப் பிரசார இயக்கங்கள் நடத்தின, நடத்தி வருகின்றன என்பதைத் தேசிய முற்போக்குவாதிகள் கண்டும் அசட்டையாய் இருந்து வருகிறார்கள்.
அரசியல் கட்சியைவிட மக்கள் உள்ளத்தின கட்சியும் மாணவ உள்ளத்தின் கட்சியுமே தொலைநோக்கில் நாட்டின் வருங்கால வளத்துக்கு முக்கியமானது ஆகும்.
நல்லாட்சியைப் பெற்றும், அதன் முழுப்பயனை நாம் இழந்து விடாதிருக்க வேண்டுமானால், ஆளுபவர் ஆளப்படுபவர் ஆகியோருக்கிடையில் இருந்துவரும், வளர்ந்துவரும் பிற்போக்குச் சக்திகளை முறியடிக்க தேசியக் கட்சிகள், முற்போக்குக் கட்சிகள் யாவும் தம் இடைவேற்றுமைகளை மறந்து செயற்படுதல் வேண்டும்.
இன்றைய வருங்கால தேச நிலவரம் இதற்கு ஒரு எச்சரிக்கைச் சம்பவம் ஆகும்.
நாற்பது ஆண்டுகளுக்குமுன் தொலை நோக்கான தலைவர்கள் சமுதாயத்துறையிலும் மொழித்துறையிலும் உழைத்திருந்தால், இன்று இப்பிரச்சனை இவ்வாறு வளர்ந் திருக்காது.
இவ்வகையில் தமிழ் மக்களுக்குப் பொதுவாக, தமிழியக்கத்திற்கு, திராவிட இயக்கத்திற்கு திராவிட கழக, திராவிட முன்னேற்றக் கழகங்களுக்கு, மாணவர் இயக்கங்களுக்கு, தமிழாசிரியர்களுக்குச் சிறப்பாகப் பெரும் பொறுப்புண்டு.
முரசொலி பொங்கல் மலர் 1972
தமிழ் இன விழா
கரும்பு தின்ன விரும்பு!
மஞ்சள் பூசி மகிழ்!
இஞ்சியில் கொஞ்சும் நலம்!
பொங்கல் விழா தமிழ் விழா. தமிழர் விழா, தமிழின விழா. தமிழ் என்றால் இனிமை, இதனைக் கரும்பும், சர்க்கரைப் பொங்கலும் குறிக்கும்.
தமிழன், வாழ்வைக் கண்டுபிடித்து, அதை ஒரு நூலியல் (விஞ்ஞானம்) ஆக, கலை ஆகு வளர்த்தவன். வாழ்வின் மறை திறவு காதல் எனக் கண்டு, அதனை அகம் ஆக்கி, அதன் அகம் புறம் ஆகிய பண்புகளையும் நூலாக, கலையாக, இலக்கியமாக வளர்த்தவன். அவன் வாழ்வில் பொலிவு, வளர்ச்சி அவாவினான். பொலிவு கண்டான், பொலிவு கண்டு வளர்த்தான். அப்பொலிவைக் குறிப்பது சுட்டிக்காட்டி விளக்குவது மஞ்சள்!
தமிழினம் வாழும் இனம் வாழ்ந்த இவைகளின் வரன்முறை வாழ்மரபாக, வாழும் இனங்களின் வருங்கால மரபு விதையாக, வாழ இருக்கும் இனங்களின் வேர் முதலாக, என்றும் நின்று வாழும் சாவா இனம், மூவா இனம். சாவா வாழ்வை, மூவா இளமையை நோக்கி மனித இனவாழ்வை வளர்க்கும் வழி கண்டவன் தமிழன், அதையே வாழ்வின் வாழ்விடை நலிவகற்றும் அருமருந்தாகக் கண்டு போற்றியவன்! இச்சாவா வாழ்வின் மூவா இளமையாகிய அருமருந்துப் பண்பினைச் சுட்டி உணர்த்துவதே இஞ்சி!
பொங்கல் விழாவைக் கரும்பு விழா என்றும் கூறலாம், மஞ்சள் விழா என்றும் கூறலாம், இஞ்சி விழா என்றும் கூறலாம்.
கரும்பு நாவுக்கினிமை.
மஞ்சள் கண்ணுக்கினிமை.
இஞ்சி நெஞ்சுக்கு இனிமையான உரம் தருவது.
இன்று தமிழர் சில பலர் பொங்கல் விழாவை விழாக்கள் பலவற்றின் ஒன்றாகக் கருதுகின்றனர். கருதி விழாக்களில் ஒன்றாக அதனைக் கொண்டாட விழைகின்றனர். ஆனால், தமிழ் மரபறிந்த, தமிழ்ப் பண்புணர்ந்த தமிழர்களுக்கு அது தமிழ் விழா, தமிழின விழா, தமிழ்த் தேசிய விழா, தமிழ்ப் பண்பு விழா - அது தமிழனின் ஒரே விழா, மனித இனத்தின் எல்லாப் பண்பார்ந்த விழாக்களையும் தன் கிளைவேர்களாகக் கொண்ட, தமிழரின் எல்லா விழாக்களையும் தன் கிளைகளாகக் கொண்ட தலைமை விழா ஆகும்.
ஓண விழா, கிறித்துமஸ், ஈத், மே விழா, சீனப் புத்தாண்டு விழா ஆகிய நாகரிக உலகின் பண்டை விழாக்கள் அனைத்திலுமே நாம் பொங்கல் விழாவின் பண்புகளைக் காணலாம். இவ்விழாக்களிலெல்லாம் சாவா, மூவா வாழ்வைக் குறித்த ‘என்றும் பசுமை மரம்’, ‘வண்ணக் கொடி மரம்’, ‘பூவாடை’, ‘சமுதாய ஆடல் பாடல்’ ஆகியவை இடம் பெறுகின்றன. இவ்விழாக்கள் எல்லாமே மக்கள் விழாக்கள் - புரோகிதத்துக்கு இடமில்லாத குடும்ப, சமுதாய, இன விழாக்கள் என்பது கூர்ந்து காணத்தக்க செய்தியாகும். தமிழர் விழாக்களிலும் விழா, புதுமை (செட்டி நாட்டில் விழா என்பதற்கான பெயர்) மணம், பண்டிகை என்ற பெயர்களிலேயே நாம் இப் பொங்கல் விழாப் பண்பைக் காணலாம். உண்மையில் திரு மணத்தை நாம் குடும்ப வாழ்வின் பொங்கல் விழா என்றும், பிறந்த நாள் விழாவைக் குடும்ப வாழ்வின் பொங்கற் புதுமை விழா என்றும், பூப்பு விழாவைப் பெண்மையின் பொங்கல் விழா என்றும் கூறி விடலாம்.
விழா என்றாலே விழைவு, பொங்கல்,
புதுமை என்றாலே புதுவளம், பொங்கல்,
மணம் என்றாலே புதுவாழ்வு, பொங்கல்,
பண்டிகை என்றாலே பண்ணினிமை, பொங்கல்.
பொங்கலைத் தமிழன் பொங்கற் பண்பறிந்து, பொங்கும் உள்ளத்துடன் கொண்டாடுவானாயின், அவன் செல்வ வாழ்வு, கலை வாழ்வு, மொழி வாழ்வு, நாட்டு வாழ்வு, பண்பாடு எல்லாமே புதுப்பொலிவுறும் என்பது உறுதி.
வாழ்வானது மாயம்!
இது தமிழர் பழம்பாடல் மரபில் வந்த ஒரு பண்!
இக்காலத் தமிழரும் இடையிருட்காலத் தமிழரும் மாயம் என்றால் மாயை என்று மடமைப் பொருள் கொண்டு இதை அழுகைப் பாடல், அவலப் பாடல் ஆக்கியுள்ளார்கள்.
ஆனால், மாயம் என்பதன் பழம்பொருள், தமிழ்ப் பொருள் வியப்பும், மருட்சியும் தரும் புதுமைச்சுவை என்பதே.
பாலோடு சர்க்கரையும், கற்கண்டும், தேனும், ஏலமும் பிற மணப் பொருள்களும் புத்தரிசியுடன் பருப்பும் கலந்து பூவாடை உடுத்தி, மஞ்சட்பூசி, தெவிட்டாது இருக்க, செரிமானமூட்ட இஞ்சி மணங்கமழ வைத்த புதுமைப் பொங்கல் மயக்கமே மாயம்!
பழமைச் சாக்கடையில் உருளச் செய்யும் மயக்கமன்று, தமிழர் பொங்கல் மயக்கம் அது கனவின் மயக்கம், புதுமைக் கனவு மயக்கம், விழா தோறும் தமிழர் புத்தினிமை, புதுப்பொலிவு, புத்துரம் பெற்று வாழ்க்கையில் முன்னேறி, மனித இன நாகரிக மென்னும் புதுப்புது மாளிகைகள் கட்டினர்.
அவர்கட்குப் புத்தினிமை தந்தது கரும்பு!
புதுப்பொலிவு தந்தது மஞ்சள்!
புத்துரமளித்தது இஞ்சி!
புறநானூற்றுப் பாடலொன்று அதிகமானின் முன்னோர்கள் கரும்பை வானவர் நாட்டினின்று தமிழகம் கொண்டு வந்ததாகப் பாடுகின்றனர். இன்றைய ஆராய்ச்சியாளர் சிலர் இதனை ஆதாரமாகக் கொண்டு, கரும்பு தமிழகத்துக்குச் சீன நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டதாகலாம் என்று உய்த்துரைக்கின்றனர்.
வானவர் என்று சீனர் தங்களைக் கூறிக் கொண்டது உண்மையே.
காட்டுக் கரும்பும் - காட்டு நெல்லும் சீன நாட்டில் மிகுதி என்பதும் உண்மையே.
நாகரிக மனிதன் காட்டுக் குதிரையை, ஆட்டை, மாட்டைப் பழக்கி நாட்டு விலங்குகளாக்கியது போலவே, காட்டு நெல்லையும், காட்டுக் கரும்பையும் பண்படுத்தியே நெற்பயிர், கரும்புப் பயிர் ஆக்கினான் என்பதும் உண்மையே.
இன்றும் உலக முழுவதிலும் உள்ள எல்லா மொழிகளும் நெல்லை அரிசி (ஆங்கில மொழி - ரைசு) என்றும், கரும்பு வெல்லத்தைச் சக்கரை (ஆங்கிலம் - சுகர்) என்றுமே வழங்குகின்றன என்பதும் உண்மையே.
ஆனால், வானவர் நாடு என்பது சீனரை மட்டும் குறித்த வழக்கன்று. பண்டைச் சேரரும், பண்டைப் பர்மியரும், பண்டைத் திபெத்தியரும் தம்மை வானவர் என்றே கூறிக் கொண்டனர்.
இவர்களனைவரும் மலை நாடுகளில் வாழ்ந்தவர், அனைவரும் தொடர்புடைய ஒரே நாகரிக இனத்தவர்.
அதிகமானே சேரமரபினன் தான்!
வெறும் தட்டையாய் வளர்ந்த காட்டுக் கரும்பைக் கொணர்ந்து, பண்படுத்தி, இனிய நாட்டுக் கரும்பாக்கியதுடன் நில்லாது அதன் சாற்றினை அடுவித்துச் சர்க்கரையாக்கி, கற்கண்டாக்கி உலகெங்கும் பரப்பியவன் தமிழனே என்பதைச் சர்க்கரை, கற்கண்டு என்ற இரு பொருள்களுக்கும் இன்றும் உலகின் எல்லா மொழிகளிலும் அச்சொற்கள் அல்லது அவற்றின் ஒலித் திரிபுகளே பெயர்களாய் அமைந்ததிலிருந்து அறியலாம்.
ஆங்கிலத்தில் சர்க்கரையின் மூவடிவங்களைக் குறிக்க மூன்று சொற்கள் (சுகர், ஜாகரி, சாக்கரின்) உள்ளன. மூன்றுக்கும் சீனவர்ச் சொல் காணப்படவில்லை. சர்க்கரை என்ற சமஸ்கிருதச் சொல்லே தரப்படுகிறது. ஆனால் சமஸ்கிருதத்திலுள்ள நகரம் உலக மொழிகள் எதிலும் இல்லை. தமிழ்ச் சொல்லே மூலம் என்பது இதனால் உறுதிப்படுகிறது.
கரும்பைப் போலவே மஞ்சளும், இஞ்சியும், ஏலமும், இலவங்கமும் போன்ற பிற பல குணமணப் பொருள்களும் தமிழனாலேயே உலகெங்கும் கொண்டு பரப்பப்பட்டவை ஆகும்.
‘இஞ்சி வேர்’ என்ற தமிழ் வழக்கிலிருந்தே சமஸ்கிருதத்தில் ‘ஜிஞ்ஜிபேர’ என்ற சொல்லும் அப்பொருளைக் குறிக்கும் எல்லா உலக மொழிகளின் சொற்களும் (ஆங்கிலம் ஜிஞ்ஜர்) எழுந்து இன்றும் வழங்குகின்றன.
இலவங்கம் என்ற மணப்பொருள் இன்றும் தென் கிழக்காசி யாவிலுள்ள இலவங்கத் தீவில் மட்டுமே விளைகிறது. மற்ற மணச்சுவைப் பொருள்களும் பொரும்பான்மையாக மலையாளக் கரை முதல் இலவங்கத் தீவு வரையிலுள்ள தென்கிழக்காசியப் பகுதிகளிலேயே விளைவாக்கப்படுகின்றன.
இவற்றை உலகெங்கும் தமிழ் வணிகர் நேரடியாகவும், தமிழினத்துடன் ஊடாடிய அராபியர், மலேசியர், இந்தோனேசியர் முதலிய பிற இனத்தவர் மூலமாகவும் கொண்டு பரப்பி, உலக நாகரிகத்தின் அகத்தைப் போலவே புறத்தையும் வளர்த்தனர்.
இந்தியா முழுவதும் அதற்கப்பாலும் மஞ்சள் நிறமே மங்கல நிறமாகக் கொள்ளப்படுகிறது. பெண்கள் வாழ்வின் சின்னமாக அணியும் குங்குமம் மஞ்சளின் திரிபேயாகும். குங்குமமும், குங்குமம் என்ற சொல்லும் பொட்டு (சமஸ்கிருதம் - திலகம்) இடும் நாகரிகமும் இந்தியா முழுவதும் பரவியுள்ளது.
புறத்தே பரவிய இப்பொங்கற் பண்புகள், அகத்தே பரவிய பலவற்றுக்கும் ஒரு புறச்சான்றேயாகும்.
திருமணம் என்பதற்குக் கிட்டத்தட்ட உலகின் எல்லா மொழிகளிலும் உள்ள சொற்களும் தமிழிலிருந்துதான் வந்தன என்று கருத இடமுண்டு. ஏனெனில் உலக ஆரிய மொழிகளில் திருமணம், கணவர் மனைவி, மாமன், மைத்துனன், மாமி, மைத்துனி முதலிய வற்றுக்கு இன்றும் ஆசியப் பொதுச் சொல் எதுவும் கிடையாது. ஊர், நாடு, தெரு என்பவற்றுக்குக் கூட அத்தகு பொதுச் சொற்கள் கிடையா. இது மட்டுமோ? தொலைதூர ஆங்கிலம் போன்ற மொழிகளில் திருமணத்திற்கு இன்று வழங்கும் (மாரேஜ், வெட்டிங் போன்ற) சொற்கள் கூட மரு(மணம்), வேட்டம் (தெலுங்கு - பெள்ளி, மலையாளம் -வேளி) ஆகிய சொற்களின் ஒலியும் பொருளும் பண்பும் உடையதாகவே திகழ்கின்றன என்பது கூர்ந்தாராயத்தக்கது.
தொல்காப்பியம் கூறும் அகப்பொருள் செய்திகள், திருவள்ளுவர் கூறும் அரசியல் செய்திகள் ஆகிய இலக்கணங் களுக்குரிய இலக்கியக் கூறுகளை நாம் இன்றும் ஆங்கிலேயர், செர்மானியர் ஆகியோர் வாழ்விலும் பண்பிலும் காணலாம்.
இன்று உலக மக்களில் பாதிப்பேர் புத்த சமயத்தினர்.
புத்த சமயத்தினை உலகெங்கும் பரப்ப, அசோகன் உதவிய அளவைவிடத் தமிழன் உதவிய அளவு சிறிதன்று, பெரிது. ஏனெனில், அசோகன் பரப்ப முயன்ற புத்த சமயம் பழய தென்கலை (ஹீனயான) புத்தம். ஆனால் இன்று கிழக்காசியா எங்கும் பரவிய புத்தம், தமிழகத்தில் புதிதாக வளர்ந்த வடகலை (மகாயான) புத்தம். அருகனின் பழய நெறி கூடத் தமிழக மூலமாகவே இலங்கை, பர்மா, இந்து, சீனா ஆகிய இடங்களில் பரவிற்று.
இன்றைய இசுலாமிய உலகில் ஒரு பெரும் பகுதியினர் மலேசிய இந்தோனேசியப் பகுதிகளில் வாழ்பவரே. அங்கெல்லாம் இசுலாத்தைக் கொண்டு பரப்பியவர்கள் தமிழர்களே.
இன்றைய உலக சமயங்கள் எல்லாமே உலக ஆரிய இனச் சூழலுக்கு வெளியேயிருந்து பிறந்தவை. அது மட்டுமன்று, எல்லாச் சமயங்களிலுமே தமிழ், தமிழன், தமிழினப் பொங்கல் பண்புகளின் கைவண்ணம் காணலாம்.
உலக வரலாற்றைத் தமிழறிஞர் ஊன்றிக் கவனித்தால், உலக அறிஞர் தமிழின வரலாற்றில் ஊன்றிக் கருத்துச் செலுத்தினால், இன்றைய உலக நாகரிக முழுவதும் தமிழ் நாகரிக மலர்ச்சியே, இன்றைய சமய, கலை, நூல், (விஞ்ஞான) வாழ்வு முழுவதும் தமிழ்ப் பொங்கல் மரபாகிய கதிரொளியின் விரிமலர்ச்சிப் பரப்பே என்று காணலாம்.
கரும்பு - அதன் வேர்ப் பண்பு, அகப்பண்பு.
மஞ்சள் - அதன் உடற்பண்பு, புறப்பண்பு.
இஞ்சி - அதன் உயிர்ப்பண்பு, மாளா மூவாப்பண்பு.
இஞ்சி - என்ற சொல், தமிழில் கோட்டை என்ற பொருளும் உடையது.
இஞ்சி பண்பு, தமிழரின் ஆற்றற் பண்பு.
கரும்புப் பண்பைத் தமிழன் பிற போலி இனப்பண்புக் கலப்பால் கூட இழந்துவிடவில்லை. அதுவே அவன் மொழி.
ஆனால், மஞ்சட் பண்பு, மொழி மரபுப் பண்பு, இஞ்சிப் பண்பு சமய மரபுப் பண்பு. இந்த இரண்டையும் அவன் இழந்து நிற்கிறான்.
அவன் ஆட்சி, ஆளும் வர்க்கம் இன்னும் தமிழ் ஆற்றல் பெற முடியாமல் பகைப் பண்புகளால் அலைக்கழிக்கப்படும் நிலையே இருந்து வருகிறது. ஆட்சி நிறுவனங்கள் தமிழ்ப் பண்பற்றவையாகவே இன்னும் நிலவுகின்றன. தமிழைத் தமிழாக ஒலிக்காத நிறுவனங்கள் ஆட்சி நிறுவனங்களாக உள்ளன.
தமிழர் கோயில்கள் இன்னும் தமிழ்க் கோயில் களாயில்லை.
மஞ்சட் பண்பும், இஞ்சிப் பண்பும் தமிழரின் தனித் தமிழ் ஆட்சிப் பண்பையும், தமிழரின் தனித் தமிழ்ச் சமயப் பண்பையும் குறிக்கும்.
தமிழர் கிளர்ந்தெழுந்து தமிழாட்சிக்கு வலிமை தருவார்களாக!
தமிழ்க் கடவுளைப் பெற மொழியாளர் சிறைக் கோட்டங்களிலிருந்து விடுவிப்பார்களாக!
கரும்பு நீடுக!
மஞ்சள் பொலிக!
இஞ்சி விஞ்சக!
முரசொலி பொங்கல் மலர் 1973
சோழன் மெய்க்கீர்த்தி
உலகப் பேரரசுகளிடையே தமிழகப் பேரரசுகளுக்குப் பொதுவாக - சோழப் பெரும் பேரரசுக்குச் சிறப்பாக உரிய பல தனிப் பண்புகள் உண்டு.
உலக அரசுகள் - பேரரசுகளில் மிகப் பலவும், கரையாட்சி அரசுகள்- கரைப் பேரரசுகளே!
அலெக்சாண்டரின் கிரேக்கப் பேரரசு - ஜூலியஸ் சீசரால் நிறுவப்பட்ட உரோமப் பேரரசு - நெப்போலியனின் பிரெஞ்சுப் பேரரசு - செர்மானியப் பேரரசு - ஆகிய புகழ் பெற்ற ஐரோப்பியப் பேரரசுகள் யாவும், நிலப் பேரரசுகளாகவே அமைந்தன!
இதுபோலவே, இந்தியாவிலே அசோகன் முதல் அக்பர், அவரங்கசீப் வரையுள்ள புகழ்வாய்ந்த இந்தியப் பேரரசுகள் அனைத்துமே நிலப் பேரரசுகள்தாம் - கடற் பேரரசுகளாக இயங்கவில்லை! தென்னகத்தில், பாமினி - விசயநகரப் பேரரசுகள் கூட இப்பொது விதிக்கு விலக்கல்ல!
சீனப் பேரரசுகளும், கடற் பேரரசுகளாகச் சிறப்புற்றதில்லை!
சமக்கிருத இலக்கியத்தில் - சமணர் இலக்கியத்தில் ‘பேரரசர்’ (சக்கரவர்த்தி) என்பவருக்கு ஓர் இலக்கணம் கூறப்பட்டுள்ளது; ‘அவர் பேரரசின் பரப்பு இரு திசையிலும் கடற்கரைவரை, அளாவி இருக்க வேண்டும்’ என்பதே அது!
கி. பி. நான்காவது - ஐந்தாவது நூற்றாண்டுகளில், இந்தியா வில் ஆண்ட புகழ்மிக்க குப்த பேரரசர்களுக்கு இந்த இலக்கணம் பொருந்தும் என்பதை மாக்கவிஞன் காளிதாசன், ‘கடலிலிருந்து கடல்வரை ஆண்ட பேரரசர்’ (ஆசமுத்ரக்ஷிதீசா:) என்று அவர்களைப் பாராட்டியதன் மூலம் நினைவூட்டியுள்ளான்!
ஆனால், இவர் கூறும் கடற்கரையிலிருந்து - கடற்கரைவரை நில மாண்டனரேயன்றி, கடலாளவில்லை; கடல் கடந்த நிலம் ஆளவில்லை!
கடலரசுகளும், கடற் பேரரசுகளும், உலகில் கடலோடி இனங்களிடையேதான் தோன்றியுள்ளன!
நம் காலப் பிரிட்டிஷ் பேரரசும், டச்சுப் பேரரசும் போர்ச்சுகீசியப் பேரரசும் கடற் பேரரசுகளாகவே சிறந்துள்ளன!
பண்டையுலகில் - மேல் திசையில், வெனிசிய வாணிகப் பேரரசு, கார்தேஜ் - பினிஷியப் பேரரசுகள், கிரீசில் அதேனிய வாணிகப் பேரரசு ஆகியவையும், கீழ்த் திசையில் - தென்கிழக் காசியாவில் கம்போடிய - சாம் மலேசிய - இந்தோனேசியப் பேரரசுகளும், தமிழகத்துப் பேரரசுகளுமே உலகில் கடலரசு மரபையும், கடற் பேரரசு மரபையும் தொடர்ந்து பேணி வந்துள்ளவை ஆகும்!
சமக்கிருத வாணரையும் - சமணர்களையும் போலவே தமிழரும், நிலப்பேரரசின் மலர்ச்சிக் கொழுந்தாக இரு கடலளாவிய பேரரசு நிலையைப் பெரிதுபடப் பாராட்டி யுள்ளனர்.
சங்க காலத்திலிருந்து நம் காலம்வரை, பேரரசுகளின் இந்த வளர்ச்சிப் படியைத் தமிழ்ப் பேரரசர், ‘இரு கடல் விழா’ என்ற ஒரு தனி விழா நடத்தியே சிறப்பித்தனர்!
சேரப் பேரரசன் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் சேரப் பேரரசு, மேல் கடலும் கீழ் கடலும் அளாவியபோது - முதல் முதலாக இந்த இரு கடல் விழாவை இரு கடல் நீரிலும் ஒரே நாளில் ஒரே இடத்திலிருந்து திருமுழுக்காடிக் கொண்டாடி னான்!
இதே இரு கடல் விழாவினை, ஆயிரம் ஆண்டுகள் கழித்துச் சோழப் பேரரசரும், விசய நகரப் பேரரசரும் கொண்டாடினர்!
ஆனால், தமிழர் இரு கடலளாவிய நிலப் பேரரசன் நிற்கவில்லை; முப்புறக் கடலும் அளாவிய பேரரசுகளே எண்ணற்றவை; ஆனால், இந்த நிலப் பேரரசு அல்லது அகப்பேரரசு, எல்லை கடந்து - இமயமளாவிய நிலப்பெரும் பேரரசினையும், மாக்கடல்கள் கடந்த உலகளாவிய கடற்பெரும் பேரரசினையும், தமிழர், சங்க காலத்திலிருந்தே கனவு கண்டனர் - நனவாக்கவும் முற்பட்டனர்!
மூவரசரும் - சேரரும் பாண்டியரும் சோழரும் இமயத்தில் தங்கள் முத்தமிழ்க் கொடியையும் பொறித்த மரபு, தமிழரின் நிலப் பேரரசு எல்லைக் கனவுக்கு - ஓரளவு நனவுக்கும் - சின்னம் ஆகும்; ஆனால், இதில் சோழருக்குத் தன்னந்தனிச் சிறப்புகள் பல உண்டு!
கரிகால சோழன், இமயத்தில் முத்தமிழரசர் கொடியையுமே பொறித்தான்!
இது மட்டுமன்று, இமயத்தின் இந்திய எல்லையில் - தென் பக்க உச்சியில் - கொடி பொறித்ததுடன் அமையாமல், அந்த இமயமலை கடந்து- அதன் வடபக்கத்தில், திபெத் பக்க எல்லையிலும் சென்று அவற்றைப் பொறித்தான்!
“செண்டால் மேருவை அடித்து - அதன் உச்சியைத் திருகிப் பிடரியிலேயே தமிழ்க் கொடிகள் பொறித்தான் கரிகாலன்” என்று பண்டைத் தமிழ்க் காவியங்கள், இச்செயலைப் பாடுகின்றன!
தமிழரின் மற்றொரு நிலப்பேரரசின் எல்லைக் கனவை, இராமாயணக் கதை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. ‘இலங்கையை வென்றாள வேண்டும்’ என்ற தமிழரசர் கனவு ஆர்வமே இராமனின் இலங்கை வெற்றிக் கதையாக உருவெடுத் ததோ - என்று கருத இடமுண்டு; ஏனெனில், இந்த இராமன் மரபு தமிழகத்தில் வெறும் கதை மரபு அன்று - தமிழக வரலாற்றில் அழியாது பொறிக்கப்பட்ட ஒரு மரபுச் சின்னம் ஆகும்.
சங்க காலத்திலிருந்தே இலங்கை வென்ற பாண்டிய - சோழ அரசர்கள், தம்மைக் ‘கலியுகராமன்’ என்று பெருமையுடன் விருது சூட்டிக் குறித்துக் கொண்டனர்!
“இலங்கைக் கனவு அல்லது இராமன் கனவை நனவாக்கியதிலும், சோழருக்கு முதலிடம் உண்டு” என்னலாம்; ஏனெனில், ‘கரிகாலன் இலங்கையை வென்று - சிறைப்பட்ட பன்னீராயிரம் வீரர்களையும் காவிரிக்குக் கரை கட்டுவதில் ஈடுபடுத்தினான்’ என்று இலங்கை வரலாற்றேடாகிய ‘மகாவம்சம்’ கூறுகிறது!
சோழப் பேரரசர் காலத்தில், இமயக் கனவு, வேறு எந்தக் காலத்திலும் நிறைவேறாத அளவுக்கு நனவாக நிறைவேறிற்று!
சோழப் பெரும் பேரரசன் இராசராசன் ஆட்சியிலே - அவன் பெற்றெடுத்த அரிமான் குருளையாகிய இராசேந்திரன் இரண்டாண்டுகளில் இமயம்வரை படையெடுத்துச் சென்று வெற்றி வாகையுடன் மீண்டான்!
இமயக் கனவிலும் புகழ் வாய்ந்தது - கடாரக் கனவு; இதுவும் சோழர் காலத்திலேயே முழுவதும் நனவாகப் புகழ்க்கொடி எழுப்பிற்று!
உலகின் கடற் பேரினங்களில் - கடல் வாணிகப் பேரினங்களில், தமிழ்ப் பேரினத்தவராகிய திராவிடர் மைய இடம் வகிப்பவர்கள், முதலானவர்களும் - முதன்மையானவர் களும் ஆவர்!
மொகஞ்சதாரோ நாகரிகக் காலத்திலே தமிழினத்தவர் எங்கெங்கும் வாணிகம் பரப்பி இருந்தனர்!
சங்க காலத்திலேயே சேரர், தம் கடலில், பிறர் கலம் செல்லாத அளவுக்குக் கடலாட்சி செய்தனர். சோழரும், ‘வளி தொழிலாண்டு’ நடுக்கடலிலேயே கலம் செலுத்தினர்!
பாண்டியரும் சோழரும், தென் கிழக்காசியாவெங்கும் பேரரசாண்டனர்!
தமிழகப் பேரரசின் இந்த இமயப் பெரும் புகழ் மரபினுள்ளே. இமயத்தின்மேல் இமயமாக எவரெஸ்டு பெரும் புகழ் மரபு நாட்டியவர்கள், சோழர்களே! தமிழகப் பேரரசுகளிடையே சோழப் பேரரசை மட்டுமே நாம், ‘சோழப் பேரரசு’ என்று அழைப்பது இதனாலேயே ஆகும்!
இராமாயண இலங்கைக் கனவு - இமயக் கனவு - கடாரக் கனவு ஆகிய மூன்று தமிழர் கனவு மரபுகளையும் உச்ச அளவிலே நனவாக்கி, உலக வரலாற்றிலேயே ஒரு பெருஞ் சாதனையைப் பொறித்துவிட்ட பெருமை, சோழப் பெரும் சேரரசர்க்கே உரியது!
முதலாம் இராசராசன் காலத்தில் (பத்தாம் நூற்றாண்டில்) தொடங்கி- மூன்றாம் இராசேந்திரன் காலம் வரையில் (13-ம் நூற்றாண்டு), கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகளாகச் சோழப் பெரும் பேரரசர், இந்துமாக்கடல் என்றும் காணாத ஒரு பெரும் கடல் நிலப்பரப்பில், ஒரு கொடியின் கீழ் வல்லரசாகச் செங்கோல் செலுத்தினர்!
“உரோமப் பேரரசு ஒன்று நீங்கலாக, உலகில் எந்தப் பேரரசும், இவ்வளவு நீண்ட காலம் தொடர்ந்து பேரரசாட்சி செலுத்தியதில்லை என்னல் தரும்”.
பேரரசுகளிலே பேரரசர் ஒருவர் இருவர் பெருவீரராக இருப்பதுதான் உலகெங்கும் இயல்பு!
வீரமிக்க படைத் தலைவர்கள் சிலரைப் படைத்துக் கொண்ட பேரரசுகள், திறமைமிக்க மக்கள் தலைவர்கள் சிலரைப் படைத்துக் கொண்ட பேரரசுகள் உண்டு!
சோழப் பெரும் பேரரசு இந்த மூன்றிலுமே உலக வரலாற்றிலே பெரும் சாதனை செய்த பேரரசு ஆகும்!
ஒருவர் இருவர் தவிர, சோழப் பெரும் பேரரசர் ஒவ்வொருவருமே ஓர் அலெக்சாண்டராக - சீசராக - நெப்போலியனாக விளங்கினர் என்று சோழர் வரலாறு நமக்குக் காட்டுகிறது!
இது மட்டுமன்று; கலிங்கத்துப் போர் வெற்றி கொண்ட வண்டையர்கோன் கருணாகரத் தொண்டைமான் போன்ற எண் ணற்ற வீரப்படைத்தலைவர்களையும் நாம் சோழர் வரலாற்றில் காண்கிறோம்.
போர்வீரர் மட்டுமன்று; ‘அமைதி வீரர்’ என்று கூறத்தக்க எண்ணற்ற கவிப் பேரரசர் - கலைப் பேரரசர் - ஆட்சித்துறைப் பணிகளில் பேராற்றலுடன் செயலாற்றிய மக்கட் பெருந் தலைவர்கள் பட்டியல், உலகின் வேறு எந்தப் பேரரசையும்விடச் சோழப் பேரரசின் வரலாற்றிலே தனிப் பெருஞ்சிறப்புறுவது காணலாம்!
புவிச் சக்கரவர்த்தியான முதலாம் குலோத்துங்கனுடன் சரிசமமாக வீற்றிருந்த - கவிச் சக்கரவர்த்தியான விளங்கிய மாக் கவிஞன் - கலிங்கத்துப் பரணி பாடிய சயங்கொண்டார், அப்பெரும் பேரரசன் முதல்வனென்று கூறத்தக்க பேரரசன் முதலாம் இராசராசன், தன் ஆட்சிக்காலக் கல்வெட்டுகளி ளெல்லாம் முகவுரையாக அரசனின் அந்தந்த ஆண்டு வரையுள்ள வெற்றிகள் - சாதனைகளின் பட்டியலையே புலவர்கள்மூலம் ’மெய்ப் புகழ்ப் பாட்டாக்கிப் பொறிக்கச் செய்தான்; எல்லா அரசரும் இதனைப் பின்பற்றினர்; ஒவ்வொர் அரசன் மெய்க்கீர்த்திகளும், ஒரு தனிவாசகத்தை முதன்மையாகக் கொண்டு - அதனையே அவ்வரசனுக்குரிய முத்திரை வாசகமாக ஆக்கின!
கோயில்களும் - கல்வெட்டுகளும் வேறு எந்த நாட்டையும் விடச் சோழ நாட்டிலேயே மிகுதி; அதே சமயம், சோழர் கோவில்களும், கல்வெட்டுகளும், சோழநாட்டில் மட்டுமன்று - சோழர் ஆண்ட தமிழகப் பரப்பு முழுவதும் - அது தாண்டி உலகெங்கணும் கம்போடியா, ஜாவா, பிலிப்பைன் தீவுகள்வரை எங்கும் காணலாம்- காணப்பட்டு வருகின்றன!
கீர்த்தி விரும்பும் அரச மரபுகளிடையே, மெய்க்கீர்த்தியே விரும்பும் சோழ மரபு, ஒப்புயர்வற்ற அருமை பெருமை உடையதாகும். ஏனெனில், கீர்த்தியைப் புலவரைக் கொண்டு எவரும் எழுதிவிடலாம். அது புலவர் திறமைகாட்டும் கீர்த்தியாக மட்டுமே இருக்கும்.
வரலாற்றுக் கீர்த்தியாகிய மெய்க்கீர்த்தியைக் கல்வெட்டில் பதிக்க வேண்டுமானால், ஆட்சியிலும், நாடளாவிய நில அள வாய்வு ஏடு வகுக்கப்பட்டதனை வரலாறு காட்டுகிறது; அதைச் செய்து முடித்த நில அளவாய்வுத் துறையின் தலைமை அதிகாரி, ‘உலகளந்த பெருமாள்’ என்று விருதுபெற்று - உலக வரலாற்றிலேயே தன்புகழ் பொறித்துள்ளான்!
சங்க காலத்தில், தமிழரசர் பொதுவாக - சேர அரசர் சிறப்பாக - கடற்கொள்ளைக்காரர்களை அடக்கி, உலகக் கடல் வாணிபம் வளர்த்தனர்!
அதே பெருமையை இன்னும் விரிவாக, உலகக் கடல் வாணிக நெறிகளுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ஆற்றியவர்கள், சோழப் பெரும் பேரரசர்கள் ஆவர்!
இன்றைய உலகின் கடற்படை மரபு வரலாறு பணி முதல்வர் பயிற்சி மரபு (Civil Services or Administrative Services) வரலாறு ஆட்சி மரபு வரலாறு ஆகியவற்றில், ‘சோழப் பெரும் பேரரசின் பங்கு பெரிது’ என்பதை, டாக்டர் கிருட்டிணசாமி போன்ற தமிழக வரலாற்றாசிரியர் மட்டுமல்லர் ஜாதுநாத் சர்க்கார் போன்ற மராட்டிய மாநில வரலாற்றாசிரியர்களும் சுட்டிக் காட்டுகின்றனர்!
வாழ்க - சோழர் பெருமரபு
வளர்க - சோழர் சாதனை மரபு
மெய்க்கீர்த்தி மரபு!
கழகக்குரல் ஆண்டுமலர் 1975
இந்தியை நாம் ஏன் எதிர்க்கிறோம்?
இந்தியாவின் பொது மொழியாக இயங்கும் தகுதியுடையது தமிழ்; ஆனால் தமிழ், மற்ற மொழியினர் உணர்ச்சிகளை மதித்து - பொதுமொழிப் பிரச்சினையைப் பொதுவாக முடிவு செய்ய வேண்டிய ஒன்றாகவே கருதுகிறது. இதுவே தமிழர் - தமிழ்ப் பண்பு!
ஆனால், தமிழின் தகுதியை இன்னொரு மொழி வந்து ஏற்றுத் தமிழர் வாழ்வை - இந்தியர் வாழ்வை நிலை குலைப்பது என்பதைத் தமிழர் எதிர்த்தாக வேண்டும் - முதற்கண் எதிர்த்தாக வேண்டும்!
உலகில் ஆங்கிலம் முதலிய மேலை ஆதிக்க மொழி களையும் - வருங்கால ஓருலக இயக்க வழியில் - இதுபோலவே தமிழர் எதிர்க்க வேண்டியவரேயாவர்!
ஏனெனில், மனித இனத்தின் உரிமை மொழி - உலகின் பகுத்தறிவு மொழி தமிழ்!
அணிமையில் 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு இயக்கம் இந்தியா முழுவதும் பரந்து கொதித்தெழுந்த இயக்கம் ஆகும். ஆனால் அதன் மையம் - அதன் வேர்விட்ட அடிநிலப் பரப்பு. தமிழகமாகவே இயங்கிற்று. ஏனெனில், இந்தியாவுக்கு அது முதல் இந்தி எதிர்ப்பு இயக்கமானாலும், தமிழகத்துக்கு அது மூன்றாவது இந்தி எதிர்ப்பு இயக்கம் ஆகும்!
மூன்றாவது இந்தி எதிர்ப்பு இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலே நடைபெற்றாலும், புகழெய்திய பெரியார் இராசாசி அவர்களின் சுதந்திராக் கட்சியும் - பிற பல கட்சிகளின் இளைஞர் இயக்கங்களும் சேர்ந்து நடத்திய இயக்கமாகவே அது இயன்றது!
இரண்டாவது இந்தி எதிர்ப்பு இயக்கம், 1946-47-ஆம் ஆண்டுகளில், திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவதற்கு முன்னிருந்த திராவிடர் கழகம் ஒன்றினால் மட்டுமே - பெரும் புகழ்த் தந்த பெரியார் ஆணையின்கீழ் - வான்புகழ் அறிஞர் அண்ணாவைத் தளபதியாகக் கொண்டு நடைபெற்றதாகும்.
இவ்விரண்டுக்கும் முற்பட்ட முதல் இந்தி எதிர்ப்பு இயக்கம், 1938-39ஆம் ஆண்டுகளில், திராவிட முன்னேற்றக் கழகமும் - திராவிடர் கழகமும் தோற்றுவதற்கும் முற்பட்டே தமிழர் இயக்கம் அல்லது தன்மான இயக்கச் சார்பில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் தலைமையிலும் - தமிழியக்கம் அல்லது தமிழ்ப் புலவர் உலகின் சார்பில் தமிழ்த் தந்தை ஆசிரியர் மறைமலையடிகளார், தமிழ்ப் புலவரேறு நாவலர் சோமசுந்தர பாரதியார், தமிழ்ப் புலவர் திரு. வி. கலியாணசுந்தரனார் ஆகியோர் துணைத் தலைமையிலும் நடைபெற்றது ஆகும்.
திராவிட முன்னேற்றக் கழகம் இவ்வாண்டில் (1974-ல்)தான் தன் இளமை விழாவை - அதாவது, வெள்ளி விழாவை - நடத்தி யுள்ளது; ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆணிவேரான இந்தி எதிர்ப்பு இயக்கம் மூன்று பத்தாண்டுகள் கழிந்து நான்காம் பத்தாண்டின் பகுதி தாண்டிவிட்டது; இக்காலத்துக்குள் அது, 1938-ல் ஒரு பிறப்பு; 1948-ல் ஒரு புதுப் பிறப்பு; 1965-ல் ஒரு பெரும் பிறப்பு - என, மூன்று பிறப்புக்களை - மூன்று மலர்ச்சி அலைகளைக் கண்டுள்ளது!
இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் மூன்றாவது அலையே இந்தியா முழுவதும் பரவிய முதல் தேசிய அலையாயினும், இரண்டாவது அலையே அதன் நாற்றங்காற் பண்ணையாகவும், முதல் அலையே அதன் முளை விதைக் கூடையாகவும் அமைந்தன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது!
இது மட்டுமன்று; தமிழகத்தின் முதல் இயக்க அலை, தமிழ்ப் புலவரும் - தமிழாசிரியர்களும் - தமிழ் மாணவ, மாணவியரும் மட்டுமே பெரிதும் ஈடுபட்ட இயக்கமாகத் தொடங்கிற்று!
திராவிடர் கழகக் காலத்திய இரண்டாம் அலையோ - தமிழகத்தின் தேசிய அலையாய், தமிழகப் பொது மக்களின் உள்ளத்தில் கிளர்ந்தெழுந்த தமிழ் விடுதலை வேட்கை அலையாய் வீசிற்று!
ஆனால், திராவிட முன்னேற்றக் கழகக் காலத்து மூன்றாம் அலையோ - தமிழர்கள் உள்ளக் கடலின் அடியாழம் தொட்டுத் தமிழகத்தின் தேசியப் புயலாக மட்டுமன்றி, இந்தியா முழுவதும் பரந்ததொரு மாபெரும் தேசியப் பேரெழுச்சியாக அமைந்தது!
இந்தி எதிர்ப்புக் கொடியை 1938-ல் முதல்முதலில் ஏற்றிவைத் தவர்களின் மரபில் வந்த திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமன்றி, இந்தியை முதலில் கொண்டுவந்து புகுந்திய இராசாசி போன்றவர் களின் மன மாற்றத்தின் விளைவாக, முன்பு இந்தியை ஆதரித்த பல கட்சிகளும் ஒருங்கிணைந்த இயக்கமாக, 1965-ல் நடந்த மூன்றாம் போராட்ட அலை விளங்கியுள்ளது என்பதை நாம் நினைத்துப் பார்த்தல் வேண்டும்.
இந்திய நாட்டாண்மைக் கழகம் (Congress) 1885-ல் பிறந்தாலும் 1907வரை கரு நிலையிலேயே இருந்து, 1924-ல் இளமை நிலையையும், 1930-ல் கட்டிளமையையும், 1947-ல் இந்தியாவின் விடுதலையாகிய பயன் நிறைவை அதாவது புதுப் பிறப்பையும் அடைந்தது என்பதை நாம் அறிவோம்!
இது இந்தியாவின் புற விடுதலை - புறத் தேசியத்தின் கதை!
இந்தி எதிர்ப்பு இயக்கம்தான் இந்தியாவின் அகத்தேசியம் ஆகும்; இந்த அகத்தேசியத்தின் கதை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது; இதை நாம் முந்திய புறத்தேசியத்துடன் ஒப்பிட்டுக் காண்பது பயனுடையது ஆகும்!
இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் நாம் இதுவரை கண்டுள்ள மூன்று அலைகளுமே உண்மையில் அம்மாபேரியக்கத்தின் கருநிலைக் கால அலைகளே ஆகும்.
மேலே, இந்தியாவின் புறத் தேசியத்தில் நாம் கண்ட இரண்டாவது ஊழியாகிய இளமை ஊழி - மூன்றாவது ஊழியாகிய கட்டிளமை ஊழி - நான்காவது ஊழியாகிய புதுப்பிறப்பு ஊழி அல்லது நிறைபயன் ஊழி ஆகிய பேரூழிகளை நாம் இந்தியாவின் அகத்தேசிய இயக்கமாகிய இந்தி எதிர்ப்பு இயக்கத்தில், இனி மேல்தான் பேரளவில் காண வேண்டும் - காண இருக்கிறோம்!
இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் கருநிலைக் காலத்திலே நாம் தமிழகத்தில் இதுவரை கண்டுள்ள வளர்ச்சி அலைப் படிகளை யெல்லாம் அதன் இந்தியாவின் வருங்கால இந்தி எதிர்ப்பு இயக்கத்திலே இனிமேல்தான் படிப்படியாக வளரக் காண வேண்டும் - படிப்படியாக வளர்த்துக் காண வேண்டும்!
தமிழகத்தில் மூன்றாவது அலையே இந்தியாவின் முதல் அலையாய் அமைந்ததனால், நாம் தமிழகத்தில் முதல் அலையில் கண்ட நிலையையே மூன்றாவது அலையில் இந்தியா முழுதும் காண்கிறோம்; ஏனெனில் அப்பேரியக்கம், தமிழகத்தில் மட்டுமே மக்கள் இயக்கமாக - இந்தியா முழுவதும் அறிஞர், மாணவ மாணவியர் இயக்கமாக மட்டுமே இயங்கிற்று!
இனி வரும் நான்காவது - ஐந்தாவது அலைகளிலேயே இளமை ஊழி - கட்டிளமை ஊழி - நிறைபயன் ஊழிகளிலேயே அது படிப்படியாக இந்தியா முழுவதுமே - இந்தியாவின் ஒவ் வொரு மொழி மாநிலங்களிலுமே மக்கள் இயக்கமாக - மக்கள் உள்ளக் கடலில் ஆழ்தடம் தொட்ட இயக்கமாக வளர்தல் வேண்டும் - வளர இருக்கிறது!
இந்தியாவின் இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் தமிழகமும், இந்தியாவின் எல்லாக் கட்சிகளின் போராட்டங்களின் திராவிட முன்னேற்றக் கழகமும் கொண்ட - கொள்ளவிருக்கும் பங்கு, முதன் முதலில் தொடங்கி வைத்த பொறுப்பு மட்டுமன்று; மாநிலங்களுடன் மாநிலமாக - தலை மாநிலமாக இயங்கும் பொறுப்பு மட்டும் கூட அன்று; ஏற்கனவே திக்கும் திசையுமற்றுப் புயலாக - சூறாவளியாக இயங்கத் தொடங்கிவிட்ட அந்த இயக்கத்துக்கு உள்ளார்ந்த அகத் தலைமை - அறிவுத் தலைமை தாங்கி, அதற்கு உருவும் திசையும் - நோக்கமும் நெறியும் அளித்து, ஒழங்குறுத்தித் திட்டப்படுத்தும் பொறுப்பும் தமிழகத்துக்கும் - திராவிட இயக்கத்துக்குமே உரியதாகும்!
‘இந்தியா ஏன் இந்தியை எதிhக்க வேண்டும்’ என்று நாம், அகல் இந்தியாவுக்கு வலியுறுத்த வேண்டுமானால், முதலிலே, ‘தமிழகம் ஏன் இந்தியை எதிர்த்தது’ என்பதைத் தெளிவுறக் காண வேண்டும்!
ஏனெனில், தேசிய இயக்கங்கள், குருதி மரபில் இயல்பாக வந்த உணர்ச்சிப் புயல்களாக மட்டுமே இயல்பாக இயங்க முடியும்; அவை நிறைபயன் தர வேண்டுமானால் - திசையும் நெறியும், உருவும் திருவும் உடைய இயக்கங்களாக வளரவேண்டுமானால் - அவை அறிவியக் கங்களாகவும், அறிவுப் பண்பின் திட்டத் திறமுடைய இயக்கங்களாகவும் அமைதல் வேண்டும்!
தமிழகத்தின் அயலாட்சிக் காலம் - அதாவது 16ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலம் - தமிழகத்துக்கு மட்டுமோ, இந்தியாவுக்கு மட்டுமோ அயலாட்சிக் காலமாக அமையவில்லை! ஆசியா, ஆப்பிரிக்கா முழுமைக்கும் - உலகின் பெரும் பகுதியிலும் உள்ள பிற்பட்ட நாடுகள் பலவற்றுக்குமே அயலாட்சிக் காலமாகத்தான் அமைந்து இருந்து வந்துள்ளது!
அயலாட்சிக் காலத்தில் தமிழகத்திலும் - இந்தியாவிலும், பெரும்பாலும் ஆங்கில மொழியே ஆட்சி மொழியாக மட்டுமன்றிக் கல்வி மொழியாகவும், அறிவு - கலை - நாகரிக மொழியாகவும் நிலவியிருந்தது; இது பொதுவாக எல்லா நாடுகளிலும், நாட்டு மக்கள் வாழ்விலும் மொழியிலும் அடிமை நிலைமை-வறுமை நிலையை வளர்ப்பதாக அமைந்திருந்த தனாலும், தமிழகத்துக்கே-தமிழுக்கே-மற்ற எல்லா நாடுகளையும், மொழிகளையும் விடத் தீங்கு தருவதாய் இருந்தது!
தமிழகத்தின் இத்தனித்தன்மையை நாம் நன்கு ஆய்ந்து காண்டல் வேண்டும்.
ஆங்கிலம் முதலிய மேலை ஆதிக்க மொழிகளின் ஆட்சியாலேயே உலகிலும், இந்தியாவிலும் மிகப் பல மொழிகள் புதிதாக இலக்கிய ஆட்சியும் - அறிவாட்சியும் பெற்றன!
பல உலக மொழிகள், தமக்கென எழுத்தின்றி ஆங்கில எழுத்தையே மேற்கொண்டுள்ளன!
நல்ல எழுத்து முறை அமையாத நிலையிலும், பல மொழிகள், தம் முன்னைய எழுத்து முறையைக் கைவிட்டு, ஆங்கில எழுத்தையே பயன்படுத்துகின்றன!
இந்தியாவில் வடபாலுள்ள இந்தி முதலிய மொழிகளின் நிலை இன்னும் சற்று மேம்பட்டது; அவை, அயலாட்சிக் காலத்திலேயே இலக்கியவளம் பெற்றன; ஆனால், தமக்கென எழுத்தில்லாவிட்டாலும், அயலாட்சிக்குமுன் நிலவிய பழைய ஆட்சி மொழிகளான பாரசிகம், சமக்கிருதம் ஆகிய மொழிகளின் எழுத்துக்களை மேற்கொண்டு, அவற்றின் இலக்கிய ஆட்சி மூலமே இலக்கிய வளம் பேணியும் வந்துள்ளன!
இம்மொழிகளுக்கு, கி. பி. 16-ஆம் நூற்றாண்டுக்கு முன் இலக்கிய வாழ்வு இருந்ததில்லை!
தென்னகத்தில், கன்னடம் - தெலுங்கு - மலையாளம் ஆகிய மொழிகளின் நிலை, இன்னும் ஒருபடி மேம்பட்டது ஆகும். இம்மொழிகளுக்குத் தமக்கென எழுத்து இலக்கியம் உண்டு; ஆனால், அயலாட்சிக்கு முற்பட்ட மொழி ஆதிக்க நாட்களிலே அவை எழுத்து முறையிலும் - இலக்கியத்திலும் சமஸ்கிருதத்தை ஓரளவே பின்பற்றி, தம் தனி நிலை கெடாமல் வாழ்ந்து வந்துள்ளன!
தமிழ் மொழியின் நிலை, இந்த எல்லா மொழிகளையும் விட ஆதிக்க மொழிகளைவிடத் தனிச் சிறப்புடையதாகும்.
தமிழுக்குத் தொன்றுதொட்டே தமக்கென எழுத்தும் - இலக்கமும்- இலக்கியமும் உண்டு.
மொழி ஆதிக்கத்தாலும், அயலாட்சியாலும் பிற மொழிகளுக்கு ஏற்பட்ட தாக்குகளை - தாழ்வுகளை அதுவும் ஏற்றாலும், அயலாட்சிக்கு முற்பட்ட மொழி ஆதிக்கத்துக்கு முற்பட்ட காலத்திலிருந்தே அது பெற்றிருந்த தன்னாட்சிப் பண்புகள் அதற்கு. தாழ்வு நிலையிலும் ஒரு தனித்தன்மை கொடுத்தே வந்துள்ளது.
அயலாட்சி மொழிகளாகிய ஆங்கிலம், பிரெஞ்சு முதலியவற்றுக்கும், அம்மொழிகளுக்கும் - ஆசிய மொழிகளுக்கும் முற்பட்ட பண்பாட்சி இலக்கிய ஆட்சி மொழிகளான இலத்தீன் கிரேக்கம் பாரசிகம் அரபு - சமக்கிருதம் ஆகியவற்றுக்கும் முற்பட்ட பழம் பண்பாட்டு மொழி தமிழ்!
அயலாட்சிகள் வருவதற்கு முன்பிருந்தே - அந்த அயல் மொழிகள் பிறப்பதற்கு முன்பிருந்தே, உலகத்தின் முதல் தாய் மொழியாய் - முதல் இலக்கிய மொழியாய் - முதல் சமய மொழி அல்லது தெய்வமொழி அல்லது மந்திர மொழியாய் - முதல் அரசியல் அதாவது ஆட்சி மொழியாய் - முதல் அறிவு மொழி அல்லது விஞ்ஞான மொழியாய் - முதல் முதல் கல்லூரி, பல்கலைக் கழகங்கள் கண்ட முதல் கல்வி மொழியாய் - உலகின் முதல் உயர்தனிச் செம்மொழியாக மட்டுமன்றி, உலகின்வாழ் மொழிகளிடையே ஓர் உயர் தனிச் செம்மொழியாய் நிலவி வந்துள்ள மொழி தமிழ்!
இலத்தீனமும் - சமக்கிருதமும், உலகின் பண்பாதிக்க மொழிகளாய் இருந்த காலத்திலும் - அதற்கு முன்பும், அந்த மொழிகளைவிட வளமுடைய இலக்கிய மொழியாய் இருந்ததனால்தான், தமிழ், சமக்கிருத மொழியை எதிர்த்து நிற்க வேண்டி வந்தது; ஏனெனில், சமக்கிருதம் உலகில் பெற்ற உயர்வு. தமிழினிடமிருந்து அது தட்டிப் பறித்த உயர்வே ஆகும்!
தமிழகம், இந்தியை எதிர்ப்பதன் காரணமும் இதுவே!
தமிழர், சமக்கிருதம் போல் - இந்தி போல் ஆதிக்கம் விரும்பாத காரணத்தினாலேயே, இந்தியாவில் தமிழ், சமக்கிருதத்தின் இடத்தையோ- இந்தியின் இடத்தையோ பெறாமல் இருக்கிறது!
தமிழர் முழுத் தன்னாட்சி பெறும் காலத்தில், இதுபோல அவர்கள் ஆங்கிலத்தையும் எதிர்க்காமல் இருக்க முடியாது; ஏனெனில், தமிழ்மொழி ஆங்கிலம் போல் ஆதிக்க மொழியாய் இல்லாத காரணத்தாலேயே, உலகில் அது, ஆங்கிலம் பெற்றுள்ள இடத்தைப் பெறாமல் இருக்கிறது!
இந்தி எதிர்ப்பில் தமிழகம் தனி முதன்மை பெற்றதாய் இலங்குவதன் காரணங்கள் இவையே!
வடதிசை வாணர் சிலர் நாக்கில் நரம்பின்றிக் கூறுவது போல், இது, ஆங்கிலப் பாடத்தால் ஏற்பட்ட நிலையன்று!
இன்று இந்தியை எதிர்ப்பவர்கள், நேற்று சமக்கிருதத்தை எதிர்ப்பவர்களே - நாளை, ஆங்கிலத்தையும் எதிர்ப்பவர்களே ஆவர்!
தமிழர் இந்தியை எதிர்ப்பதற்குரிய இந்த விளக்கங்கள், ‘இந்தியா முழுவதிலும் இந்தி எதிர்ப்புப் பரவுவதற்கு எப்படி வழி வகுக்கக்கூடும்’ என்று கேள்வி எழலாம்!
ஆயிர - பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள், நீண்ட நெடுநாள் வரலாறு உடைய தேசம் இந்தியா - பாரதம்; அதில், கடைசிச் சில நூற்றாண்டுகள் மொழி வாழ்வு - இலக்கிய வாழ்வு உடையனவே மற்ற இந்திய மொழிகள்!
இடைக்காலத்தில், அதுவும் மொழி வாழ்வு இல்லாமல் - இலக்கிய வாழ்வு மட்டுமே உடைய மொழி சமக்கிருதம்; ஆனால், அசோகனுக்கு முற்பட்ட தொல்பழங்காலத்திலிருந்து இன்று வரை, இந்தியாவின் ஆயிர - பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நீண்ட நெடுநீள் வரலாறு முழுவதையும் தன் மொழி வரலாறு - இலக்கிய வரலாறாகக் கொண்ட இந்தியாவின் மொழி தமிழ் ஒன்றே!
இந்தியாவின் தாய் மொழிகள் பலவும், இந்தியாவின் அடிமைக்கால வாழ்வை மட்டுமே படம்பிடித்துக் காட்டுவன!
சமக்கிருதம் பண்டை மொழி என்று கூறப்பட்டாலும், உண்மையில் மக்கள் வாழ்வில் தோயாமல் அணிமைக்காலம் அல்லது இடைக்காலம் மட்டுமே படம்பிடித்துக் காட்டுவது - அதுவும் நிலையியல் (Static Picture) படமாக மட்டுமே காட்டுவது ஆகும்.
ஆனால், தமிழ் மொழி மட்டுமே இந்தியாவின் மொத்தப் பண்பாட்டை அதாவது, புத்த - சமண காலப் பண்பாட்டுக்கு முன்னிருந்து இன்றுவரை, இந்த மக்கள் வாழ்வின் சமய மாறுதல்கள் எல்லாவற்றையும் - பண்பாட்டு மாறுதல்கள் எல்லாவற்றையும் நிழற்படுத்திக் காட்டும் ஓர் இயங்கியல் படமாக (Moving or dynamic or living growing picture) இந்திய மக்களுக்கு- உலகத்துக்குக் காட்டுவதாயுள்ளது!
இது மட்டுமோ? இந்தியாவில் எல்லாருக்கும் தாய் மொழிகள் உண்டு; ஆயினும், தம்மை உயர் சாதியினர் என்று கூறிக்கொள்ளும் ஆதிக்க வகுப்பார், பிறவி முதலாளிகளுக்குத் தம் தாய் மொழி எதுவானாலும், தம் உயர்வுக்குரிய இன மொழியாகச் சமக்கிருதம் விளங்குகிறது!
இதுபோலவே, பிற்பட்டவராகவும் - தாழ்த்தப்பட்ட வராகவும் உள்ள இந்தியாவின் பலகோடி மக்களுக்கு -அவர்கள் தாய்மொழி எதுவானாலும்- அவர்கள், தொல்பழம் பெருமையை நிலைநாட்டுவதற்கும், சமத்துவ - சகோதரத்துவ - சுதந்தர உரிமைகளை வளர்த்துக் கொள்வதற்கும், தமக்குரிய நாகரிகப் பண்பாட்டு மொழி - இன மொழி என்று பேணுவதற்கும் உரிய ஒரே மொழியாகத் தமிழ் விளங்குகிறது!
கழகக்குரல் பொங்கல் மலர் 1975
இந்திய ஒருமைப்பாடும் திராவிட இயக்கமும்
இந்தியாவின் விடுதலைப் போராட்டக் காலத்திலிருந்தே தேசியத் தலைவர்கள் பலரும் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி வந்துள்ளனர்.
தேசியத் தலைவர்களுள் ஒருவராகிய டாக்டர் திருமதி அன்னிபெசண்ட் அம்மையார், இந்திய மரபின் அடிப்படை யிலேயே, ‘இந்தியா ஒரு தேசம்’ என்ற ஆய்வேட்டின் மூலம் அதை நிறுவ முன்வந்தார்!
ஆனால், வரலாற்று மரபின் அடிப்படையில் மட்டுமன்றி, சமய - சமுதாய - கலை இலக்கியப் பண்பாட்டு மரபிலும் அத்தேசிய ஒருமைப்பாட்டுக் கோட்டையை அரண் செய்து, அதை வானளாவக் கட்டியெழுப்பும் இயக்கமாகத் திராவிட இயக்கம் என்றும் விளங்கி வந்துள்ளது - இன்றும் விளங்கி வருகிறது - என்றென்றும் விளங்கி வருவது ஆகும்!
இந்தியத் தேசிய ஒருமைப்பாடு, பழம் பெருமைக்குரியது மட்டுமன்று- வருங்காலப் பெருமையாகவும் மிளிர வேண்டும் என்பதில் தனிப்பெரும் அக்கறை கொண்டவையே தமிழியக்கமும் - அப்பண்ணையில் நாற்றுவிட்டு, இந்தியாவுக்கும் வழி காட்டி வரும் திராவிட இயக்கமும் அவற்றிந் சார்பில் புதிய தமிழகம் படைத்துப் புதிய இந்தியாவுக்கும் அடிகோலி வரும் தமிழக அரசும் ஆகும்.
திராவிட இயக்கம் இன்று தமிழகத்தில் மட்டுமே முழு வளர்ச்சியுற்று, மக்கள் உள்ளமும் வாழ்வும் ஆண்டு வருகிறது; இதனால், அது தமிழ் மொழியை- தமிழரை - தமிழகத்தை மட்டுமே குறியாகக் கொண்ட இயக்கம் என்று கருதுவது சரியன்று!
வான்புகழ் அறிஞர் அண்ணாவால் ஆக்கப்பட்டு, டாக்டர் முதல்வர் கலைஞர் - டாக்டர் நாவலர் ஆகியோர் உட்படத் திராவிட இயக்கத் தலைவர்கள் பலராலும் அடி நாளிலிருந்தே நடிக்கப்பட்டு வந்துள்ள ‘சிவாஜி’ (‘சந்திரமோகன்’) நாடகம் இதைக் குறித்துக் காட்டுகிறது.
சத்திரபதி சிவாஜி, மராத்திய வீரர் மட்டுமல்லர் - முழுநிறை
இந்தியத் தேசியத்தைக் கனாக் கண்டு - அதை நனவாக்க அடிகோலிய அனைத்திந்திய வீரர் அவர் என்பதைத் தமிழகமும் - இந்தியாவும் உணர எடுத்துக் காட்டிய இயக்கம் திராவிடப் பேரியக்கமே என்பதை எவரும் எளிதில் மறந்துவிட முடியாது.
சிவாஜி மரபு பற்றிய மக்கட் பாடல்கள், எம்மொழியையும்
விடத் தமிழிலேயே மிகுதி என்பதும் இங்கே குறிப்பிட வேண்டிய ஒரு செய்தியாகும்!
இந்தியாவின் பெரும்பகுதியும், அயலவர் படை யெடுப்புக்கும் - அயலாட்சிக் கொந்தளிப்புகளுக்கும் ஆட்பட்டு - நிலைகுலைந்து - பண்பு குலைந்து வந்த காலத்தில், அப்போக்குக்கு ஒரு கால அணையிட்டு, ஒரு மராத்திய அரசையன்று - மராத்தி நாடு, கன்னட தெலுங்கு நாடுகள், தமிழகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பேரரசை மட்டுமன்று - ஒரு புதிய இந்தியத் தேசியத்தை திட்டமிட்டு அடிகோலியவர் சிவாஜி!
மராத்திய வரலாற்றாசிரியர்கள் இதை மட்டுமன்றி, மராத்தியப் பேரரசுக்கு வழிகாட்டியாய் இலங்கிய விசயநகரப் பேரரசு - அதற்கு வழிகாட்டியாய் அமைந்த சோழப் பேரரசு - ஆகியவற்றின் தொடர்புகளையும் நமக்கு விளக்கிக் காட்டியுள்ளனர்.
வரலாற்று ஆராய்ச்சித் துறையில் மட்டும் புதையுண்டு கிடக்கும் இந்தப் பேருண்மையை அரசியல் வாழ்வில் முதல் முதல் கண்ட பெருமகனார் வான்புகழ் அறிஞர் அண்ணா ஆவார்; அதை முதன் முதலாகத் தேசியக் கட்டமைப்பில் பயன்படுத்திய இயக்கம் அறிஞர் அண்ணாவையும் - அவர் சிவாஜி நாடகத்தில் பங்கேற்று முன்னோடும் பிள்ளையாய் வளர்ந்துள்ள டாக்டர் கலைஞரையும் தலைவர்களாகக் கொண்ட திராவிட இயக்கமே யாகும்.
‘இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டுக்கு மொழி தடையன்று’ என்பதை இந்திய விடுதலை இயக்கம் அரை நூற்றாண்டுக்கு முன்பே உணர்ந்திருந்தது என்பதை, மொழிவாரியான தொடக்கக்காலக் காங்கிரசு அமைப்பே காட்டும்.
அவ்வொருமைப்பாட்டுக்கு மதம் தடையன்று என்பதையும்
தொடக்கக்கால விடுதலை இயக்க வரலாறு காட்டுகிறது. ஆனால், இவற்றைத் தெள்ளத் தெளியக் கண்டு மறந்துவிடாமல் தொடர்ந்து செயலாற்றி வந்துள்ள இயக்கம், திராவிட இயக்கமே!
இது மட்டுமன்று; இந்தியாவின் பதினான்கு மொழிகளும்
பதினான்கு தேசிய மொழிகள் என்பதையும், இப்பன்முகத் தேசியம் அதன் குறைபாடன்று - அதன் தனிப்பெரும் வீறு என்பதையும், இந்தியத் தேசியம் மொழி - சமயச் சார்பற்ற ஓர் எதிர்மறைத் தேசியம் அன்று - நிறமற்ற தேசியம் அன்று - அது, மொழி, சமயங்களின் - தேசிய இலக்கியப் பேராறுகளின் பன்முக வளங்களால் பீடுற்ற ஓர் ஆக்கத் தேசியம் - கூட்டமைப்புப் பல்வண்ணத் தேசியம் என்பதையும் முதன் முதலாகக் கண்ட இயக்கம் -அந்த இலக்கு நோக்கி வளர்ந்து வரும் இயக்கம்-திராவிட இயக்கமேயாகும்.
திராவிட இயக்கம் குறிக்கொண்டுள்ள தேசியம் வெறும் அரசியல் தேசியமன்று - அரசியல் விடுதலையுடன் அமைந்து நிற்கும் தேசியமன்று- அது, சமுதாய - பொருளியல் - பண்பாட்டு விடுதலை - சரிசம வளர்ச்சி ஆகிய எல்லாம் அளாவிய ஒரு புது வாழ்வுப் பொங்குமா வளம் நோக்கிய தேசியம் ஆகும்.
இந்திய ஒருமைப் பாட்டுக்கும் - புத்தாக்க வளர்ச்சிக்கும் பெருந்தடையாய் இயன்று வந்துள்ள பண்புகள், மொழியன்று - சமயமன்று; சாதி வேறுபாட்டு அடிப்படையில் - உயர்வு தாழ்வு அடிப்படையில் அமைந்த- விஞ்ஞான வளர்ச்சிக்கு எதிரிடையாய் அமைந்த சாதி சமய மூட நம்பிக்கைகள், மூடப் பழக்க வழக்கங்களே ஆகும்.
இவற்றைக் கண்டு உணர்ந்த - இவற்றுக்கு எதிராகப் போராடி வருகின்ற - வகுப்பு வேறுபாடற்ற - ஆண்டான் அடிமை முறையற்ற ஒரு புதிய சமுதாயத் தேசியம் கட்டமைக்கப் பாடுபடுகிற இந்தியாவின் ஒரு பேரியக்கம் திராவிடப் பேரியக்கமே ஆகும்!
“திராவிட இயக்கத்தின் மூல முதல்வர் - மூதாதை - சேப்பாக்க முனிவர்” என்று தென்னகமெங்கும் புகழ் நாட்டியவர் டாக்டர் சி. நடேசனார் ஆவர்!
மாநகராட்சி உறுப்பினர் பதவிக்குமேல் என்றும் நாடாத அப்பெரியாருக்காக நடைபெற்ற மாநகராட்சித் தேர்தல் கூட்ட மொன்றை அந்நாளில் சென்னையில் காந்தியடிகள் காண நேர்ந்தது; இந்தியாவில் வேறெங்கும் எளிதில் காணக் கிடையாத காட்சி ஒன்றை மகாத்மா காந்தி அப்போது கண்டார்!
‘பிராமணரல்லாதார் கட்சி’ என்று அன்று கூறப்பட்ட ஒரு கட்சியின் சார்பில் நடந்த சிறு தேர்தல் ஒன்றுக்கான அக்கூட்டத்தில், நாமமிட்டவர்கள் - தாழ்வடம் அணிந்தவர்கள்-வைதிகர்கள் - தாழ்த்தப்பட்டவர்கள் - சரிகைத் தலைப்பாகைகள்-கோவணாண்டிகள்-முசல்மான்கள்-கிறித்தவர்கள் ஆகிய எல்லா வகுப்பினரும் எல்லா திறந்தவரும் மைல் கணக்காகச் சென்றதைக் கண்ட விடுதலைத் தந்தையார், அதனை வியந்து பாராட்டினார் - இந்தியாவில் ஒரு சிறிய இந்தியாவாகிய இந்த ஊர்வலம், அம்மகான் கனவு கண்ட இந்தியாவின் ஒரு முத்தொளிச் சுடராக அமைந்தது!
சத்திரபதி சிவாஜி, புதிய இந்தியத் தேசியத்துக்குத் தமிழகத்தையே ஒரு கலங்கரை விளக்கமாகக் கண்டதுபோல, மகாத்மா காந்தியடிகளும், தாம் கனாக்கண்ட சுயராஜ்யத்துக்குத் தமிழ் - தமிழக - தமிழ்ப் பண்பையே கலங்கரை விளக்கமாகக் கண்டார்!
உண்மையான சுயராஜ்யத்தை - ராம ராஜ்யத்தை - தெய்வீகப் பேரரசை அவர், உபநிடதங்களிலும், பகவத் கீதையிலும் கண்டது போலவே, விவிலியத் திருமுறையில் - திருக்குரான் என்னும் அருமறையில் - கபீர்தாசரின் கீதங்களில் நாடியது போலவே, தமிழரின் உலகத் திருமறையாம் திருக்குறளிலும், ஆழ்வார்கள் - நாயன்மார்கள் பாசுரங்களிலும் கண்டார்!
மதுவிலக்கிலும், தாழ்த்தப்பட்டவர் - பிற்பட்டவர் முன்னேற்றம், கிராம முன்னேற்றம் ஆகிய பல்வேறு துறைகளிலும் காந்திய மரபை இன்றும் விடாது பின்பற்றுவது தமிழக அரசே என்பதை, இந்தியாவெங்கும் மனமாரப் புகழ்கிறது!
காந்திய மரபு வழுவாது - காந்திய நெறி வளர்க்கும் இயக்கம், தென்னகக் காந்தியாம் வான்புகழ் அறிஞர் டாக்டர் அண்ணா வழிவந்த இயக்கமாம் திராவிட இயக்கமேயாகும். இது, தற்செயலாக நடைபெறும் ஒரு புது மரபன்று - தமிழகமும் திராவிட இயக்கமும்; காந்தியடிகள் போற்றிய திருக்குறள் மரபு வழிவந்த நாடு - திருவள்ளுவ மரபில் வந்த இயக்கம் என்பதனாலேயே ஆகும்.
இந்தியாவில் மட்டுமன்று - உலகிலேயே, இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னிருந்தே தமிழ் மொழியில் காந்திய மரபு, திருவள்ளுவ மரபாக - சங்க இலக்கிய மரபாக - ஆழ்வார்கள், நாயன்மார்கள் மரபாகத் தொன்றுதொட்டே மலர்ந்துவரும் மரபாகும்!
கழகக்குரல் 4-1-1976
நான் கண்ட தமிழ் மேதைகள்!
(சென்னை மணவழகர் மன்றச் சார்பில், தோழர் கூ.இர.
இராசாமணி எல்.ஈ.ஈ. தலைமையில் நடைபெற்ற மறைமலையடிகள், திரு.வி.க. ஆகியோரின் நினைவுநாள் விழாவில் பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் எம்.ஏ.எல்.டி. அவர்கள் பேசியதாவது:)
ஆண்டுதோறும் இம்மன்றத்தில் பேசும் வாய்ப்பைப் பெறும்பயன் முன்பு அறிஞர் அண்ணா அவர்களைப்பற்றிப் பேசினேன். இன்று மறைமலையடிகள், தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாண சுந்தரனார் ஆகிய பெருமக்களைப் பற்றிப் பேசும் வாய்ப்புப் பெற்றமை குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
சென்ற ஊழியைப்பற்றி - வரலாற்றுக் காலத்தைப் பற்றித் தெளிவாக நாம் அறிந்துகொள்ள வேண்டுமாயின், அவ்வூழியில் வாழ்ந்த பெருமக்களை நினைவு கூர்தல் வேண்டும்.
அவ்வண்ணம் நடைபெற்ற ஊழியின் சிறப்பை நாம் முழுதும் உணர வேண்டுமாயின், தவத்திரு மறைமலையடிகள், தமிழ்த் தென்றல் திரு. வி. க. ஆகியோரைப் பற்றி முதலில் நாம் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும்.
இற்றை நாளில் மலர்ந்திருக்கும் - மலர்ந்து வரும் தமிழ் உணர்ச்சிக்கு- தமிழ் ஆர்வத்துக்கு வித்தூன்றிய தனித்தமிழ் வீரர்கள் தவத்திரு மறைமலையடிகளும், தமிழ்த்தென்றல்
திரு. வி. க. அவர்களும் ஆவார்கள்.
அவர்கள், தமிழின் வளர்ச்சியிலும் தனித்தன்மையை நிலை நாட்டுவதிலும், காப்பதிலும், உடலும் - உயிரும்போல் இரண்டறக் கலந்து பணியாற்றியவர்கள்.
இவ்விரு பெரும் ’தமிழ் மேதை’களும் தோன்றியபோது தமிழ்ச் சமுதாயம் என்றுமில்லாத அளவுக்குத் தாய்மொழியை மறந்திருந்தது. ஏனெனில், அப்போதிருந்த மக்களின் ஆர்வம்,
1907-ல் தமிழ் நாட்டில் துவக்கப்பட்ட தமிழ்நாட்டுத் தேசியக் காங்கிரசு ‘அகில இந்தியா’ என்ற கொள்கையால் ஈர்க்கப்பட்டது. மற்றும் ஒரு சிலர் என்ற அகில உலக அமைப்பை அன்னிபெசண்டு அம்மையாரின் தலைமையில் நிறுவி, மக்களின் கருத்தை ‘அகில உலகம்’ என்ற கொள்கையால் ஈர்த்தனர்.
இவ்விதம், ‘அகில இந்தியா’, ‘அகில உலகம்’ என்ற கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அக்காலத் தமிழர்கள், தமிழ் மொழியையும், தமிழ் நாட்டையும் மறந்தனர். இவ்வித ஒரு மயக்க நிலை, 1905, 1920 ஆகிய ஆண்டுகளிடை தமிழ் மக்களை மிகவும் ஆட்கொண்டது. இக்காலத்தில்தான் தவத்திரு மறைமலை யடிகளும், திரு. வி. க. அவர்களும் மக்களிடையே தாய்மொழி உணர்ச்சியை - பற்றினை ஏற்படுத்தப் பாடுபட்டனர்.
இவ்விருவரும் ஒரு மலை போன்று அக்காலத்தில் விளங்கினர்; மலையின் அடிபாகம் போன்ற திரு.வி.க.வும், மலையுச்சியைப் போன்று அடிகளாரும் விளங்கினர் எனக்கூறின் அஃது மிகையன்று.
இவர்கள் ஒழுகிய ’தனித் தமிழ்க் கொள்கையில் ஆசிரியராக அடிகளாரும், அவரது மாணவராக திரு.வி.க. அவர்களும் விளங்கினர்.
மறைமலையடிகள் தமிழாராய்ச்சி நூல்கள், இலக்கிய நூல்கள், ‘அம்பிகாபதி’ என்ற நாடகம் போன்ற நூல்களை இன்றமிழில் இயற்றித் தமிழ்த் தொண்டாற்றியவர்; பாமர மக்கள் படித்து இன்புறும் அளவுக்குத் தமிழிலக்கியங்கள் தோன்றுதல் வேண்டும்’ என எண்ணியவர் அடிகளார் ஆவார்கள்!
அவ்வண்ணமே திரு.வி.க. அவர்களும், எல்லாத் தலையாய பொருள்களைப் பற்றியும், மதங்களைப் பற்றியும், துறைகளைப் பற்றியும் தனித் தமிழில் எழுதியவர் - பேசி வெற்றி கண்டவர் - ‘தமிழால் முடியும்’ என்ற நிலையை ஏற்படுத்தியவர்.
தமிழ்ப் புலவர்கள் பேசுவது தமிழ் மக்களுக்குப் புரியும் - பாமர மக்களும் உணர்ந்துகொள்வர்; ஏனெனில், மற்றைய மொழிகளான தெலுங்கு, கர்நாடகம், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் பேச்சு நடைக்கும் - இலக்கிய நடைக்கும் ஆச்சரியப்படத்தக்க வேறுபாடு உள்ளது.
தூய தெலுங்கிலோ அல்லது ஆங்கிலத்திலோ அம்மொழியைச் சேர்ந்த புலவர்கள் பேசினால், அந்நாட்டுப் பாமர, பொதுமக்கள் அதைப் புரிந்துகொள்ள முடியாது; ஏனெனில், அந்நாடுகளில் இடத்திற்கு இடம் பேச்சு நடைமிகுந்த அளவு மாறுபடுகிறது.
ஆனால் அவ்வளவு மாறுபாடும் - வேறுபாடும் தமிழ் மொழியில் இல்லை; அதனால்தான் சொல்கிறேன் - ‘புலவர்களின் தமிழ் நடையை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும்’ என்று!
இதை மறுப்பவர்கள் எவராயினும் அவர்கள், குறிப்பிட்ட ஒருவரை வேண்டாம் என்று சொல்வதற்குப்பதில், அவருடைய நடை புரியாதது என்று சொல்லி அவரைத் தட்டிக்கழிக்கப் பேசுகிறார்கள் - என என்னால் நிரூபிக்க முடியும்.
எப்படியெனில், திரு. வி. க. அவர்களின் தனித்தமிழ் நடையை அக்காலத் தொழிலாளர் உலகமும், பொதுமக்களும் எவ்வாறு புரிந்து கொண்டு - அவர் சொல்லிய கருத்தைத் தெரிந்துகொண்டு செயலாற்றியதோ, அவ்வண்ணமே முன்பைவிட இப்பொழுது தமிழறிவு ஓரளவு அதிகம் பெற்றுள்ள தமிழ்மக்கள், புலவர் நடையைப் புரிந்துகொள்ள இயலும் என்று யான் நிறுவுகின்றேன். மக்கள் அந்த அளவுக்குத் தமிழ்ப் புலமை அடைவதற்கு - மக்கள் தம் தாய்மொழிப் புலமையை அறிந்து அதற்கொப்ப இலக்கிய நடையினைக் கொண்டுள்ள எழுத்தோவியங்கள் தேவை.
இன்றைய உலகில், இரஷ்ய நாட்டில் வாழும் சாதாரண வண்டி ஓட்டும் வேலைசெய்யும் தொழிலாளி, அம்மொழியில் இயற்றப்பட்ட டால்ஸ்டாய் அவர்களின் இலக்கிய நடையைப் புரிந்து கொள்கிறான்; படித்து இன்புறுகிறான்.
இத்தகு நிலை தமிழகத்தில் ஏற்பட வேண்டுமென்று கனவு கண்டு அப்போதே தொழிலாளர்களிடையே செந்தமிழில் - தூய தமிழில் பேசிவைத்தார் திரு. வி. க. அவர்கள்; நவசக்தி, தேசபக்தன் போன்ற தமிழ் இதழ்களைத் தனித் தமிழில் நடத்தி வாகை சூடியவர்; அவர் நடத்திவந்த அத்தகு தொண்டுகளை நாம் பரக்க ஆற்றி வந்தால் விரைவில் இலக்கிய நடையை எல்லாத் தமிழ் மக்களும் புரிந்து கொள்ள முடியும்!
தமிழ்நாட்டில் காங்கிரசு ஏற்படுவதற்குக் காரணமாயிருந் தார்கள் பெரியார் ஈ. வெ. ரா. இராசகோபாலாச்சாரியார், திரு.வி.க. ஆகிய மூவர் ஆவர்.
இவர்களில் திரு. வி. க. அவர்கள், காந்தீயத்தையும் நாட்டு விடுதலை உணர்வையும் மக்களுக்கு உணர்த்தத் தனித்தமிழில் நூல்களும், இதழ்களும் வெளியிட்டுக் காங்கிரசைப் பரப்பிய வீரர்; ஆயினும், அவர் காங்கிரசில் இருந்துகொண்டே அதைத் தூய்மைப்படுத்த முயன்றார்; ஆனால் அவர் அதில் வெற்றிபெற இயலவில்லை.
அதேபோன்று அவர், மார்க்சியத்தைத் தழுவியபோதும் அவர் அத்துடன் கடவுட் கொள்கையையும் இணைத்துக் கொண்டார்.
இவ்வகையில், திரு. வி. க. அவர்கள், தாம் ஈடுபாடுகொண்ட துறைகளில் பணியாற்றியதோடு நில்லாமல், தமிழ்ப்பற்றினைத் தனியாகக் கருதி வளர்த்து, எந்த நேரத்திலும் அதை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து வந்தார்.
இத்தகு பெரியார்களின் நினைவுநாளில் நாம் தமிழ் இலக்கியத் தொன்மையைப் பற்றியும், தமிழ் நாகரிகத்தைப் பற்றியும் தமிழிலக்கியச் சிறப்பைப்பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
மறைமலையடிகள் இருந்தபோது வடமொழி இலக்கியம் காலத்தால் பழையதா அல்லது தமிழிலக்கியம் தொன்மை யானதா என்ற கேள்விக்கு உறுதியாகப் பதில் சொல்லக் கூடியவர்கள் அடிகளாரைத்தவிர ஒருவருமில்லை; ஆயின், தற்போது அந்நிலை இல்லை; ‘தமிழிலக்கியங்கள், வடமொழி இலக்கியங்களை விடத் தொன்மையானது’ என்று உறுதிபடுத்தப் பட்டுவிட்டது.
வடமொழியில் தோன்றிய மகாபாரதம், இராமாயணம் போன்றவைகள் இலக்கியங்கள் அல்ல; அவைகள் பல்வேறு காலங்களில் நடந்த நிகழ்ச்சிக் குறிப்புக்கள் ஆகும். இதை நாம் சொல்லவில்லை-அவர்களே சொல்கிறார்கள்.
சமஸ்கிருத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள்; அஃதாவது; தீர்வானம் - வேதங்கள் - சாஸ்திரம் - ஸ்மிருதிகள், சாகித்தியம், இலக்கியம் என்பனவாகும்; ஆகவே பாரதமும் இராமாயணமும் வேதங்களாகவும் மதத்துறை நூல்களாகவும் மாறிவிடுகின்றன.
அப்படிப் பார்த்தால், வடமொழியில் காளிதாசர் காலத்தில் தான் முதல் இலக்கியம் ஏற்பட்டதாகக் கூறமுடியும்.
அவ்வகையில் கி.பி. நான்காம் நூற்றாண்டில் வடமொழி யில் முதன்முதலாக இலக்கியம் தோன்றியது.
ஆனால் நமது தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்கள், கி.பி. 2-ம் நூற்றாண்டுக்கும் முற்பட்டவையாகும்.
அதேபோன்று, தமிழர்தம் நாகரிகந்தான் உலக நாகரிகங்களுள் சிறந்தது என்பது ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது.
இன்னும் சொல்லப்போனால் இந்தியத் தேசத்தின் கதாநாயகனாக விளங்கும் சிவாஜிக்குக்கூட அத்தகு தேசிய உணர்ச்சி ஏற்பட கருநாடக சாம்ராஜ்யங்கள்தாம் காரணம் ஆகும். ‘மகாராட்டிர தேசியம்’ பற்றி எழுதப்புகுந்த ஒரு பேராசிரியர் முதல் மூன்று பகுதிகளையும் கருநாடக சாம்ராஜ்யங்களை எழுதுவதில் செலவழித்தார். ஏனெனில் சிவாஜிக்கு தேசிய உணர்வு ஏற்பட கருநாடக சாம்ராஜ்யங்கள் தான் காரணம் என்று உறுதியாக அவர் நம்பினார்.
அது மட்டுமல்ல; இந்து மதம் நீடித்து நிலைக்கக் காரணம், கருநாடக சாம்ராஜ்யங்கள்தான்.
கருநாடக சாம்ராஜ்யங்கள் ஏற்படவும், அத்தகைய தேசிய உணர்வு வளரவும் காரணம் சோழர்கள் சாம்ராஜ்யமாகும்.
அதேபோன்று, சோழர் தம் தேசியம் பாண்டியர்களுடைய தேசியத்தையும், பாண்டியனுடைய தேசியம் சேரனுடைய தேசி யத்தையும் அடிப்படையாகக் கொண்டது.
ஆகவே, தேசிய உணர்வு நீடித்து நிலைக்கத் தமிழன் அன்று அமைத்த அரசியல் அமைப்புக் கட்டுக்கோப்புத்தான் காரண மாகும்.
அத்தகைய தமிழனை, ’இந்திய தேசியத்தைக் காட்டித் தற்போது அழிக்கப்பார்க்கிறார்கள்!
வளர்த்துவிட்டவனை - வாழக் கற்றுக்கொடுத்தவனை - பாராட்டுவதற்குப் பதில் பழிவாங்க நினைப்பது எவ்விதத் தேசிய உணர்வுக்கும் ஆக்கத்தை தேடித்தராது!
இன்னொரு அதிசயத்தையும் உங்களுக்குச் சொல்லுகின் றேன்; இன்றுள்ள இந்தியத் துணைகண்டம், தற்போது இந்தியப் பேரரசு என்றழைக்கப்படும் நிலப்பரப்பு முழுவதும் பிரிந்து சென்ற பாக்கிஸ்தான் பகுதி நீங்கலாக ஒருகாலத்தில் நமது தமிழ் மன்னன் இராசேந்திரனால் புகழ் மணக்க ஆளப்பட்டு வந்தது. ஆகவே, தற்போது நிலைநிறுத்த முடியாமல் போய்விட்ட இந்திய தேசியத்தை தன்னுடைய ஆளுகையால் அப்போதே உலகுக்கு உணர்த்தியவன் இராசேந்திரன்!
இவ்வண்ணம் புகழ் மணக்கும் வரலாறு பெற்ற தமிழர்கள்; அடிகளாரும், தமிழ்த் தென்றலாரும் காட்டிய நெறிதனில் சென்று தமிழ் மொழி காத்து வாழ ஆவன செய்தல் நமது தலையாய கடனாகும்.
திராவிடன் இந்தி எதிர்ப்பு சிறப்பு இதழ்
உலகத் தமிழ் இயக்கமும் திராவிடப் பேரியக்கமும்அ. ஓருலகக் கனவு கண்ட பேரினம்
தமிழ் இயக்கம் -
திராவிட இயக்கம் - அதாவது, தனித் தமிழ் இயக்கம் -
தேசியத் தமிழ் இயக்கம் -
உலகத் தமிழ் இயக்கம் -
இந்த நான்கு இயக்கங்களும், வேறு வேறு இயக்கங்கள் அன்று; இவை தொடர்புபட்ட ஒரே மாபேரியக்கத்தின் நான்கு தளங்கள் - நான்கு மாடிகள் என்று கூறத்தக்கவை ஆகும்.
இந்த நான்கு இயக்கங்கள் மட்டுமன்று - குடியாட்சி இயக்கம், சமதர்ம இயக்கம், பொதுவுடைமை இயக்கம் ஆகியவைகளும் - இந்த நான்கு தளங்களுடனும் இணைந்த மூவேறு தளங்களாய் இயங்குவதனால், இம்மாபேரியக்கம், உண்மையில் ஏழு பேரியக்கங்களை அங்கங்களாகக் கொண்ட ஓர் எழுநிலை மாடமே ஆகும்!
தமிழ் இயக்கம் - தமிழகத்தில் நாற்றாக நட்டுப் பயிரிடப்பட்ட ஓர் இயக்கப் பயிர்! ஆனால், அது முழுவதுமே தமிழகத்துக்குள்ளே அடங்கிக் கிடக்கும் ஒரு சிற்றியக்கம் அன்று! அது பயிராகப் பரவி வளருவதற்குரிய வயற்களம் அல்லது கழனி! தென்னகம் முழுவதையும் - கடல் கடந்த பல தமிழுறவு நாடுகளை யும் உள்ளடக்கிய பெரும் பரப்பே ஆகும்!
இதுமட்டுமன்று; இந்தப் பயிர் வளம், தமிழகமும் - தென்னகமும் கடந்து தொலைவில் பரவுவது மட்டுமன்று - அணிமை எல்லையிலேயே அது. நன்செய் வளமாகப் பரவி - இந்திய மாநிலம் முழுவதிலும் தேசிய வாழ்வாகப் பொங்கிப் பொதுளுவது ஆகும்; பொங்கிப் பொலிவுற்று வருவது ஆகும்.
இன்று நாம், ‘இந்தியத் தேசியம்’ - ‘பாரதத் தேசிய வாழ்வு’ என்று பெயரிட்டு அழைக்கும் பேருலகப் பண்பாடு, இந்தத் தமிழ்ப் பண்பாடுக் கழனியில் பயிராகி - ‘இந்தியா’ என்ற பெரும்பண்ணையில் அறுத்தடித்து - பாரதப் பெருங்களத்தின் வளமாகப் பொலிவு காண்பதே ஆகும்!
இது மட்டுமோ! உலகெங்கணும் பிற்பட்ட இனங்களை உயர்த்தி - இன வேறுபாடுகளைக் களையத் தகும் ஆற்றலுடைய ஒரே பண்பாடு, மொழி-இன-சமய நிற வேறுபாடுகள் கடந்த ஓருலகப் பண்பாட்டை ஆக்கிப்படைக்கவல்ல ஒரே பேரியக்கம், தமிழ்ப் பேரியக்கமே ஆகும்.
இந்தியாவின் வரலாறு - உலக வரலாறு - மனித இன நாகரிக வரலாறு ஆகிய இவை, விஞ்ஞான முறையாக ஆய்ந்துணர்ந்து எழுதப்படும் காலத்தில், ‘தமிழியக்கமே இந்தியத் தேசிய வாழ்வு’ என்பதும் - அதன் கடல்வழி விரிவே தென்கிழக்காசியர் உட்பட்ட பண்டை உலக நாகரிகம் என்பதும்-கால, இட, எல்லை தாண்டிய அதன் மலர்ச்சியே இன்றைய மனித இன நாகரிகம் என்பதும் - வெள்ளிடை மலையாக விளங்கத்தக்கதாகும்.
இந்த மெய்ம்மைகளை அறிவுலகம் ஆராய்ந்து ஆராய்ந்து - மெல்ல மெல்லக் கண்டு வருகிறது; முழுவதும் காணும் நாள் தொலைவில் இல்லை; ஆயினும், உலகம் அதைக் காணும்வரை, தமிழன் தூங்கிக் கொண்டிருக்கலாமா?
வழக்கு மன்றத்திலே - வழக்கு வெற்றியடையும் வரை, அவ் வழக்குக்குரிய செல்வத்தை அழியாது நாம் பாதுகாக்க வேண்டாமா? சித்திரம் விளங்கும் வரை சுவர் இருக்க வேண்டாமா?
தமிழர் எல்லாரும் இவற்றை அறியவேண்டும்; விரைவில் அறியவேண்டும்; இவ்வறிவு, விளக்கத்துக்குரிய பல்வேறு ஆராய்ச்சிகளை தமிழ் ஆராய்ச்சிகளை - உலக மொழி ஆராய்ச்சிகளைத் தமிழரும், தமிழகத் தலைவர்களும், தமிழக இந்திய அறிஞர்களும், நிறுவனங்களும், தமிழக - இந்திய அரசுகளும் ஊக்கி வளர்த்தல் வேண்டும்; ஏனெனில், அப்போதுதான், உலகம் இவ்வுண்மைகளைக் காணும் நாளில், தமிழனும் - தமிழக அறிஞர்களும் தலையைத் தொங்கவிடும் நிலையைத் தவிர்க்க முடியும்! அத்துடன், அப்போதுதான், உலகம் இதனைக் கண்டறியும் நாளையும், நாம் விரைவுபடுத்தியவர்கள் ஆவோம்!
இம்மெய்ம்மைகளை - இவற்றுக்குரிய ஆராய்ச்சிக் கூறுகளைக் கோடிட்டுக் காட்டுவதே இத்தொடர் கட்டுரையின் நோக்கம் ஆகும்.
தமிழகத்திலே தமிழ் பற்றித் தமிழ்ப்புலவர் மட்டுமே - தமிழாசிரியர், இருந்துவிடுவது தவறு - பெருந்தவறு; ஏனெனில், தமிழ் என்பது, ஒரு மொழி மட்டுமன்று - இலக்கியவளமுடைய ஒரு மொழி மட்டுமன்று - அதுவே, தமிழர் வாழ்வின் - பண்பாட்டின் உயிர்நாடியாகும்!
தமிழகத்திலுள்ளவர்கள் எவ்வகுப்பினராயினும் - எத்தொழிலினராயினும் - எச்சமயத்தினராயினும் - எக்கட்சியினராயினும் - எம்மொழி கற்றவராயினும் - எந்நாட்டு வாழ்வில் பங்கு பெற்று அதில் ஈடுபாடு கொண்டவராயினும் - இந்தத் தமிழ் இயக்கத்தையே தம் உயிர் மூச்சாகக்கொண்டு, அதை வளர்க்கக் கடமைப்பட்டவர்கள் ஆவர்!
இங்ஙனம் செய்யாவிட்டால், தமிழக வாழ்வு மட்டுமன்று - அதைச் சூழ்ந்துள்ள தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, குடகு முதலிய தமிழின மொழிகள் வாழ்வும் - இவற்றின் மலர்ச்சியையே சார்ந்து வாழ்வு பெற்று வாழ்கின்ற வங்காளம் - குசராத்தி - மராத்தி போன்ற ஏனைய இந்திய மொழிகளின் வாழ்வுகளும், தமிழகம் அளாவிய சிங்களம் - பர்மா - மலாய் - இந்தோனேசியம் முதலிய ஆசிய மொழி வாழ்வுகளும், அகில உலக வாழ்வும் தேய்வுற்று மறுகுவதற்கே - அடையவேண்டிய முழு வளர்ச்சியை அடையாமல் தடைவுறுவதற்கே இடமேற்பட்டுவிடும்!
இது, வெறும் கற்பனை மொழி - அழகுச் சொல்லணியன்று; உயர்வு நவிற்சியுரையன்று; வரலாறு காட்டும் உண்மையேயாகும்; ஏனெனில், தமிழ் மூவரசர், தமிழகமும் - இந்திய மாநிலமும் - கடலகமும் - கடல் கடந்த பல நாடுகளும் நாகரிகம் பரப்பி ஆண்ட காலங்களில்தான், ஆந்திரப் பேரரசரும் கடல்கடந்து வாணிகமும் ஆட்சியும் பரப்பிப் பெருவாழ்வு கண்டனர்!
இன்றைய கேரளத்தின் பண்டைப் பேரரசரான சேர வேந்தர், ’தம் கடலில் பிறர்கலம் செல்லாதவாறு காத்து அலைகடலாண்ட காலமும் இதுவேயாகும்!
அந்நாளில்தான் இந்தியா, உலகின் மணிமுடியாய் - உபநிடத ஞானமும், புத்த நெறியும், சமண நெறியும் அகில உலகமெங்கும் ஒளியாகப் பரப்பி - உலகின் அறிவு ஞாயிறாக விளங்கிற்று!
இதுமட்டுமோ? இந்நாட்களில்தான், ஆசியாவும் - ஆப்பிரிக்காவும், உலக நாகரிகத்தின் - உலக சமயங்களின் - உலகக்கலை இயற் பண் பாடுகளின் பிறப்பிடங்களாகவும், வளர்ப்பிடங்களாகவும் விளங்கின!
தமிழகத்தில் என்றைக்குத் தன்மொழியாட்சியும் -பண்பாட்சியும்
தளர்வுறப் பெறத் தொடங்கிற்றோ, அன்றையிலிருந்துதான்இந்தி
யாவும் தாழ்வுறத் தொடங்கிற்று!
அன்றையிலிருந்துதான், ஆசியாவும் - ஆப்பிரிக்காவும், தம் பெருமையும் - தம் ஆட்சியும் இழந்து, புத்தம் புதிதாகத் தோன்றிய -அயலக நாகரிகங்களுக்கு அடிமைப்பட்டு, அவற்றின் வேட்டைக்காடுகளாக மாறி வந்துள்ளன! மாறி, இன்னும் அவதியுற்றுவருகின்றன!
புதிய தமிழகம் - புதிய இந்தியா - புதிய ஆசியா, ஆப்பிரிக்க உலகம் அமைய, வகுப்பு வேறுபாடற்ற - இன வேறுபாடும், நிற வேறுபாடும் அற்ற - சுரண்டலும் தொழிலில்லாமையுமற்ற - ஒரு வளமான ஓருலகப் பெரு நாகரிகத்தை அவாவி, அதற்காகப் பாடுபட விரும்புபவர்கள் அனைவரும், ஐயாயிரம் அல்லது ஆறாயிரம் ஆண்டுகளாக அந்த அவாவை வளர்த்து அதையே ஒரு கனவுத் திட்டமாகப் பேணிவரும் தமிழிலக்கியத்தை - தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தை ஆராய்ந்து காணவும், அவ்வியக்கத்தின் கண்கண்ட கற்பனைத் தருவாக விளங்கும் திராவிட இயக்கத்தைக் கண்ணெனக் காத்து மலர்விக்கவும் முன்வருதல் வேண்டும்!
தமிழ் என்றும், தமிழ் வீரம் - தமிழ்க் காதல் - தமிழ்ப் பண்பு என்றும், தமிழ் இலக்கிய ஏடுகளெல்லாம் விரித்து விளக்கிப் பராவ என்று தயங்கியதில்லை; ஆனால், காப்பியங்கள் தொடங்கும்போது அவர்கள், தம் குறிக்கோளாகக் கொண்டது ‘உலகு’ என்பதே!
தமிழும் - தமிழ்ப் பண்பாடும், தமிழர் சிறப்புற வளர்க்க வேண்டிய ஒன்றாயினும், அது வளர்வது தமிழுக்காக மட்டுமன்று - மனித இனத்துக்காக - உலகுக்காக என்றே தமிழ் முன்னோர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திப் பறைசாற்றி வந்துள்ளனர்.
‘உலகு ஆதிபகவன் முதற்றே; ஆதிபகவன் முப்பால் முதற்றே; முப்பால் நெறி தமிழ் முதற்றே’ என்றுதான் உலக வேதமாம் தம் தமிழ் மறையைத் தொடங்குகிறார் - திருவள்ளுவர்.
‘உலகம் உவப்ப’ என்று தொடங்கினார் - ‘முருகு வேதம்’ எனப் புகழ்படத்தக்க தெய்வத் திருமுருகாற்றுப்படை வகுத்தளித்த தமிழ்ப் புலவர் திலகமான நக்கீரதேவர்!
‘உலகெலாம்’ என்றே, தம் பத்திப் பெருங்காவியம் தொடங்கினார் - சேக்கிழார்!
‘உலகம் யாவையும்’ என்று தொடங்கினார் தமிழகத்தின் இந்தியத் தேசியக் கவிஞரான கம்பநாடர்!
‘உலகம்’ என்று சொல்வதுடன் அமையாமல் முப்பால் முதல்வர், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றும், சங்கப் புலவோர், தமிழ் ஆகம முதல்வரான திருமூலர் ஆகியோர் ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்றும், சங்க சான்றோர், ‘யாதும் ஊரே - யாவரும் கேளிர்’ என்றும் ஓருலகத் தத்துவத்தையே விளக்கி உலகுக்கு வழங்கியுள்ளனர்!
கொல்லன் தெருவில் பிறந்து வளர்ந்தும், அதை மறந்து, கோணிதைப்பவர்களிடம் சென்று, ஊசிக்கு இரந்து திரிபவர்போல, ஓருலகப் பண்பாட்டை இவ்வாறு பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே திட்டமிட்டு உலகுக்கு அளித்த தமிழன் மரபில் வந்த மாந்தர் சிலர், ஒற்றுமை - ஒருமைப் பாட்டிற்கு எங்கெங்கோ சென்று, போலி வாதங்கள் பேசி, அலைந்து திரிகின்றனர்!
பிள்ளைக்கு உணவு ஊட்டவேண்டிய தாய், பிள்ளை யிடமும் - பிள்ளையின் பிள்ளையிடமுமா பண்டங்களைத் தட்டிப்பறித்து வாழ முனைய வேண்டும்?
எழுவாய், விழித்தெழுவாய் தமிழா! உன் அடிமைத்தளைகளை நீயே விலக்கி, இந்தியாவில் - ஆசிய - ஆப்பிரிக்க உலகில் - அகப்பேருலகில் இன்னும் இருந்துவரும் ஆன்மீக அடிமைத் தளைகளைத் தூக்கி எறிந்து, உண்மையான ஓருலகம் வளர்க்க எழுவாய்!
அதற்குரிய ஆயுதம் - தமிழியக்கம்! அதற்குரிய ஆற்றல்சால் மந்திரம் - மனித இனவேதமான திருக்குறள்!
இவை இரண்டும் உன்னருகிலேயே, உன்னிடமே இருக்கின்றன!
மனித உலகத்துக்கே பயன்பட வேண்டிய இந்த இரண்டு கருவூலங்களையும், உலகுக்குப் பயன்படாமல் - உனக்கும் பயன்படாமல் கட்டி வைத்துக்கொண்டு தூங்குவது, மடமையிலும் மன்னிக்க முடியாத மடமையாகுமன்றோ! அத்தூக்கம் தவிர்த்தெழுவாய்!
உன்கையிலுள்ள, தமிழியக்கம் என்னும் அந்த ஆயுதத்தைத் தீட்டி - உன் வசமிருக்கும் ‘திருக்குறள்’ என்னும் அந்த ஆற்றல் சான்ற மந்திரப்பண்ணை மீட்டி - அகில உலகுக்குப் பணியாற்றும் படி உன் தாயகத்தை, அதன் அறிவுத் துயிலினின்றும் எழுப்பும் திருப்பள்ளியெழுச்சி பாட முன் வருவாயாக!
(கழகக்குரல் - 11.8.1974)
ஆ. திராவிடப் பேரியக்கம் ஏன்?
திராவிடப் பேரியக்கம் ஏன்? தமிழ் இயக்கத்தோடு அதன் தொடர்பு யாது?
தமிழ் இயக்கத்தின் உயிர் மலர்ச்சி திராவிட இயக்கம்; நெடுங்காலமாகத் தளர்ந்து, நலிந்து வந்த தமிழ் இயக்கத்துக்கு - தமிழர் வாழ்வுக்கு அது. புதிய ஊக்கம் அளித்து வருகிறது ; அதற்கு மறுமலர்ச்சியும், புது மலர்ச்சியும் வழங்கி வந்துள்ளது - வழங்கி வருகிறது!
திராவிட இயக்கம் என்ற ஒன்று இல்லாவிட்டால், தமிழ் இயக்கம் ஓர் எழுநிலை மாட இயக்கமாய் - உலகத் தமிழ் இயக்கமாய் மலர்ச்சியுற்றிருக்க முடியாது!
திராவிட இயக்கம் என்ற ஓர் இயக்கம் வளர்ந்திரா விட்டால், இந்தியத் தேசிய வாழ்வில் தமிழியக்கம் தனக்குரிய நேரிய பங்கை - உயிர்ப்பங்கை ஈந்து, இந்தியத் தேசிய வாழ்வை ஒரு வண்ணத் தேசியமாக - பொங்கல் தேசியமாக மாற்றியமைக்கும் பெரும் பணியை ஆற்றமுடியாமற் போய்விடும்!
இது, ’பாரத’ப் பெருநாட்டுக்கே ஒரு பேரிழப்பாகும்!
திராவிட இயக்கம் திராவிடப் பேரியக்கமாகி, தமிழகத்தின் ஆற்றலை உலகுக்கும் - இந்தியாவுக்கும் உணர்த்தாவிட்டால், இன்றைய உலக மக்கள் கனவு காணும் குடியாட்சிப் பண்பாடு - சமதர்மம் - பொதுவுடைமை - வாழ்நல ஆட்சி இயக்கம் (Welfare State Movement) ஓருலக இயக்கம் முதலிய வானவில் வண்ணக் கனவுகளுக்கெல்லாம் உறுதி கொடுக்கும் வேரும், ஊக்கும் உரமும் வழங்கும் தன் ஆற்றலைத் தமிழியக்கம் வெளிப்படுத் தாமலே மங்கி மறுக வேண்டி வந்திருக்கும்!
திராவிட இயக்கம் தமிழகத்தில் தோன்றி, தமிழுலகெங் கணும் கன்னற் கதிரொளி வீசிப் பரவாதிருந்திருக்குமேயானால், தெய்வத் திருக்குறள், தமிழகத்தில்கூட இந்த இருபதாம் நூற்றாண்டில் புதுப் புகழெய்தி இருக்க முடியாது! மேலும், ‘அதுவே உலகப் பொதுமறை’ என்ற மெய்ம்மை விளங்காமலே போயிருக்கும்!
1946-ல் வான்புகழ்த் தந்தை பெரியார் அவர்கள் நடத்திய திருக்குறள் மாநாட்டுக்குமுன் எத்தனை திருக்குறள் ஆராய்ச்சி ஏடுகள் - எத்தனை திருவள்ளுவர் கழகங்கள் இருந்தன; அதன்பின் எத்தனை திருக்குறள் ஆராய்ச்சி ஏடுகள் - எத்தகை திருவள்ளுவர் கழகங்கள் எழுந்துள்ளன என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால், இது விளங்கும்.
இதுமட்டுமோ? திராவிட இயக்கம் எழுஞாயிறாகத் தோன்றியிராவிட்டால், சங்க இலக்கியமும், தொல்காப்பியமும், திருவாசகமும், தேவாரமும், திருநாலாயிரமும், சிலம்பு - மேகலை - சிந்தாமணி, சூளாமணி போன்ற காப்பியங்களும் உலக இலக்கிய வானில் ஒளிவீசத் தொடங்கியிருக்கமாட்டா!
அத்துடன், திராவிட இயக்கம் எழுச்சி தந்திராவிட்டால், இந்து சமயத்தின் பக்திக்கிளைக்குரிய தாய்க்காப்பியமாகிய பெரிய புராணமும், தமிழரின் இந்தியத் தேசியக் காப்பியங்களான கம்பராமாயணமும் - வில்லி பாரதமும் இந்தியாவின் வீர காப்பியங்களாகிய கலிங்கத்துப் பரணியும் - மூவருலாவும், தமிழ்த் தேசியக் குறுங்காப்பியங்களாகிய தொண்டை மண்டல சதக முதலியவைகளும், தமிழரின் மக்கட் பாடல் - வாழ்க்கைப் பாடல்களாகிய பள்ளு அல்லது உழவர் பாடல், குறவஞ்சி, ஊசல், தாலாட்டு, பந்தாட்டப் பாட்டு, பிள்ளைத் தமிழ் முதலியவையும் அறிவுலகுக்கு அறிமுகப்படுத்தப்படாமலே போயிருக்கும்!
‘தமிழியக்கம்’ என்ற எழுநிலை மாடத்தில் - திராவிட இயக்கம் - அதன் ஏழு தளங்களில் ஒரு தளமாக மட்டும் நிலவலில்லை; அதுவே, ‘மொழி இயக்கம்’ என்ற முதல் தளத்திலிருந்து, உலக மொழித் தளம் - இந்தியத் தேசியத் தளம் - குடியாட்சி சமதர்ம பொதுவுடைமைத் தளங்கள் - ஓருலகப் பண்பாட்டியக்கத் தளம் ஆகிய அதன் மேல்தளங்களுக்கெல்லாம் செல்லும் ஒரே ஏணிப் படிக்கட்டாகவும் அமைந்து, அம்முறையில் மேன்மேலும் எழுந்து மலர்ச்சியுற்று வருகிறது!
தமிழ் இயக்கம் உலகிலேயே மிக மிகப் பழமையான இயக்கம் ஆகும். தமிழ் எவ்வளவு பழமையானதோ, அவ்வளவு பழமை யானது, அது!
மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அது தானும் வளர்ந்து - தமிழ் இலக்கியத்தையும், கிரேக்க இலக்கியம் போன்ற பண்டைப் பேருலக வளர்த்து - இரண்டாயிரம் ஆண்டுக்காலமாக சமக்கிருத இலக்கியத்தையும், ஆயிரம் ஆண்டுக்காலமாக இந்தி யாவின் தாய்மொழி இலக்கியங்களையும் தூண்டி இயக்கி வளர்த்து வந்திருக்கிறது! ஆயினும், காலத் தளர்ச்சி காரணமாக, தமிழக வாழ்வில் தோன்றி வளர்ந்துள்ள சில அகப்பகை நோய்களின் காரணமாகவும் - அந்நோய்களை வளரச் செய்துள்ள சில புறப்பகையாட்சிகளின் காரணமாகவும், கி. பி 16ம் நூற்றாண்டிலிருந்து தமிழ், தன் உலகளாவிய - இந்திய மாநிலமளாவிய ஒளியிற் சுருங்கி - மொழி இயக்க அளவில்கூடத் தள்ளாடித் தடுமாறித் தடம் மாறி வந்துள்ளது!
இந்த நிலையை மாற்றி - பழம்பெருமைகளை மீட்டும் உயிர்ப்பிக்க வந்துள்ள அமுதப் பேரியக்கமே திராவிட இயக்கம்!
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து, தமிழன் - தமிழர் வாழ்வின் நோய் அகற்றும் அருமருந்தாய், மேலையுலகத்திலிருந்து வந்த புத்தொளி அறிஞர்களான நல்லாயர் கால்டுவெல் பெருமானார், போப்பையர் பிரான். உலகப் பேரறிஞர் ஆல்பெர்ட் சுவைட்சர். திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராக இருந்த மனோன்மணீய ஆசிரியர் சுந்தரம் பிள்ளை, திராவிடப் பேரறிஞர் பெருமான் டாக்டர் சி. ஏ. நடேசனார், தனித்தமிழ் இயக்கத்தின் முடிசூடா மன்னராகிய ஆசிரியர் மறைத்திரு மறைமலையடிகளார் முதலியோரின் அறிவுக் கலை ஆய்வுப் பணிகளின் பயனாகவும், டாக்டர் நடேசனாரின் திராவிட சங்க மரபில் வந்த நீதிக் கட்சி- தன்மான இயக்கம் - திராவிட கழகம் - திராவிட முன்னேற்றக் கழகம் ஆசிய சமுதாய - அரசியல் - ஆட்சி இயக்கங்களின் விளைவாகவும் வளர்ந்து, தமிழகத்தின் நிறைபேரியக்கமாய், தமிழகம் கடந்து தென்னகமும்- இந்தியாவும் - தமிழுலகும் ததும்பி மேலிடக் காத்திருக்கும் தெய்வீகத் தமிழ்ப் புத்தியக்கமே திராவிடப் பேரியக்கம்!
இத்திராவிட இயக்கத்தை மேலீடாகக் காண்பவர்களின் பார்வைக்கு இக்கால உலகிலுள்ள பல்வேறு இயக்கங்களைப் போல, ஒரு புதிய இயக்கமாகத் தோற்றினாலும், உண்மையில் இது, உலக நாகரிகத்தின் வேர் முதலாக விளங்கிய தமிழ் இயக்கத்தையே, தன் வேர் முதலாகக் கொண்டு அதை ஒரு புதிய தென்னக இயக்கமாக - புதிய இந்திய தேசியமாக - புதியதோர் ஆசிய - ஆப்பிரிக்க - அமெரிக்க - தென் கிழக்காசிய இயக்கமாக- புத்துலகை ஆக்க விருக்கும் ஓர் எழில்வானின் எழுஞாயிற்றியக்க மாக ஆக்கிவருவதாகும்.
தாயைத் தாயாகக் கருதாமல் பெண்ணாகக் கருதிவிடும் காமுகர்களைப்போல் - உலகுக்கே உரிய திருக்குறளைச் சாதி சமயச் சழக்கர்கள் கையிலுள்ள ஒரு நாட்டுக்கு மட்டுமே உரியதாகக் கருதிவிடும் சிறுமதியாளர்களைப்போல் - தமிழுலகின் புத்தெழுச்சி இயக்கமான இந்தத் திராவிட இயக்கத்தை, மற்றத் தமிழகக் கட்சிகளோடொத்த ஒரு நாட்டுக் கட்சியாக மட்டிலுமோ, மற்ற இந்தியாவின் இயக்கங்களைப் போல ஓர் இந்திய இயக்கமாக மட்டிலுமோ எந்தத் தமிழரும் கருதிவிடுதல் கூடாது!
திருக்குறள், தமிழில் இயற்றப்பட்டிருக்கும் ஒரே காரணத்தால், தமிழர் அதைப் பேணி உலகுக்கு அளிக்க கடமைப்பட்டிருப்பதுபோல, இந்தத் திராவிட இயக்கமும் தமிழகத்தில் வேரூன்றி - இதுகாறும் தமிழராலேயே பெரும்பாலும் வளர்க்கப்பட்டுள்ளது என்ற ஒரே காரணத்துக்காக, அதை எவரும் தமிழகத்துக்கு மட்டுமே உரியதாகக் கருதிவிட முடியாது!
ஏனெனில், இன்றே திராவிட இயக்கத்தின் விழுதுகள் கேரளத்திலும், ஆந்திரத்திலும், கருநாடகத்திலும், உத்தரப் பிரதேசத்திலும் பரவத் தொடங்கியுள்ள என்பதைத் தமிழர் அறிவர்!
தமிழர் முயன்றால், அது இந்தியா முழுவதும் - தென் கிழக்காசியா முழுவதும் - உலகம் முழுவதும் பரவக்கூடியதே ஆகும்!
தமிழின் - திராவிடத்தின் இந்த ஆற்றலை உணர வேண்டுமானால், ‘திராவிடம்’ என்ற சொல்லின் ஆழ்பொருளை ஆய்ந்துணர வேண்டும்.
திராவிடம் என்றால் என்ன? தமிழ், திராவிடம் என்ற சொற்களின் தொடர்பு யாது?
தமிழ்ப் புலவருலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய மரப்புகழ் வாணர் ஆசிரியர் மறைத்திரு மறைமலையடிகளாரிடம் ஒருவர், ‘தனித் தமிழ் என்றால் என்ன’ என்று விளக்கம் கோரினார்.
“தனித் தமிழா? அதுதான் தமிழ் - கழித்தல் - ஆரியம்; அதாவது, ஆரிய மாசு நீங்கிய தூய தமிழ்” என்று அடிகளார் அறிவுறுத்தினார்!
தமிழர் உள்ளங்களை மேடையாக்கி - அவற்றின்மீது புகழ்த் தவிசிட்டு வீற்றிருந்தாண்ட மாத்தமிழ் வேந்தனான வான்புகழ் அறிஞர் அண்ணா அவர்களிடம் ஒருவர், ‘திராவிடம் என்றால் என்ன’ என்று விளக்கம் கோரினார்.
“திராவிடமா? அதுதான் தமிழ் - கழித்தல் - ஆரியம்; அதாவது, ஆரிய மத மூட நம்பிக்கைகள் நீங்கிய தூய தமிழ்ப் பண்பாடு” என்று அவர் அறிவுரை விளக்கம் வழங்கினார்!
திராவிடம் - திராவிட இயக்கம் ஆகியவற்றிற்கு இவ்வாறு தமிழியக்கப் பெருந்தலைவராகிய அடிகளாரும், தமிழரியக்க - திராவிட இயக்க மலர்ச்சிக் குரிசிலாகிய அறிஞர் அண்ணாவும் தந்துள்ள விளக்கங்கள், தமிழ் - தமிழியக்கம் - திராவிடம் - திராவிட இயக்கம் ஆகியவற்றுக்குள்ள தொடர்புறவை நன்கு விளக்குகின்றன!
தமிழகத்தில் திராவிட இயக்கம் என்பது, தனித்தமிழ் இயக்கத் தின் விரிவளர்ச்சியேயாகும்; தமிழ் மொழியிலும், தமிழ்ப் பண்பாட்டிலும் இடைஇருட்காலங்களில் வந்து புகுந்து ஊறிப் பரவி விட்ட பஞ்சைப் பாசியாகிய ஆரிய அழுக்குகளைக் களைந்து, அவற்றைத் தூயனவாக வளர்க்கும் ஒரே இயக்கத்தின் இரண்டு படிகள் என அவை உணரத்தக்கவை ஆகும்.
திராவிட இயக்கம் தமிழகத்துக்கு வெளியே பரவும்போது, ‘தமிழ் - கழித்தல் - ஆரியம்’ என்ற இந்த விளக்கம், ‘தாய்மொழி - கழித்தல் - ஆரியம்’. தாய்த் தேசியப் பண்பாடு - கழித்தல் - பிற்போக்குச் சக்திகள் என்று மாற்றியமைக்கப்பட வேண்டும்; ஏனெனில், மொழி வரலாறும் - பண்பாட்டு இலக்கிய வரலாறும், தமிழ் - தமிழினம் அல்லது திராவிடம் என்ற சொல்லுக்குத் தரும் விளக்கங்கள், தமிழகமும் - தென்னகமும் கடந்தவை; இந்திய எல்லையையே கடந்தவை ஆகும்!
தென்னகத்தில் தமிழ் - மலையாளம் - கன்னடம் - தெலுங்கு- துளு- குடகம் முதலிய மொழிகள் மட்டுமன்றி, வடமேற்கு இந்தியாவில் பீலி போன்ற மொழிகளும், நடு இந்தியாவில் கோண்டு - கூயீ போன்ற மொழிகளும், கிழக்கு இந்தியாவில் இராசமகாலி போன்ற மொழிகளும், தமிழின மொழிகள் அல்லது திராவிட மொழிகளே என்பதை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நல்லாயர் கால்டுவெல் பெருமான் அறிவுலகுக்கு எடுத்துக் காட்டியிருந்தார்.
“இந்தியா எங்குமே இவையன்றி இன்னும் ஆய்ந்து காணப்படாத பல மொழிகள், இந்திராவிடப் பெருங்குடி இனத்தின் மொழிக் குழுவினுள் சேர்க்கப்பட வேண்டியவையாக உள்ளன” என்று அமெரிக்க நாட்டறிஞர் எமறோ, பிரிட்டன் நாட்டறிஞர் பரோ முதலிய நம் கால அறிஞர் கருதி வருகின்றனர்!
இந்திய மொழிகளின் ஒப்பீட்டு மொழி நூலறிஞர்கள், ‘இந்திய மொழிகள் இந்தியாவிலே கிழக்கே செல்லும் தோறும் - தெற்கே செல்லும் தோறும் திராவிடக் கலப்பு மிகுதியுடையவை யாய் உள்ளன’ என்றும், அத்துடனன்றி, ‘வட இந்தியாவிலேயே அக எல்லையிலிருந்து புற எல்லை நோக்கிச் செல்லும் தோறும், வடகோடி-கீழ் கோடி-மேல் கோடி எல்லைகளிலெல்லாம் திராவிடப் பண்பே மேலிட்டு உள்ளது’ என்றும் காட்டுகின்றனர்!
இதனால், பண்பாட்டு அடிப்படையில், காசுமீரம் - நேப்பாளம் - அசாம் - வங்களாம் - ஒரிசா முதலிய எல்லை களிலுள்ள மக்கட் பண்பாடு மிகப் பெரிதும் தென்னகப் பண்பாட்டை ஒத்திருப்பது காணலாம்!
இதுமட்டுமன்று; இந்திய அரசினரால் வெளியிடப் பட்டுள்ள இந்தியாவின் இனப் படம் மூலம், இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லாப் பகுதிகளிலுமே (வட மேற்கில், வட பஞ்சாபில் ஒரு சிறு பகுதி நீங்கலாக) திராவிட இனப் பரப்பாகவே காணப்படுகின்றன என்பது, இங்கே குறிப்பிடத் தக்கது ஆகும்.
திராவிடப் பேரறிஞராக மட்டுமன்றி, உலகின் தலைசிறந்த வரலாற்றுப் பேரறிஞராகவும் விளங்கி வந்த திருத்தந்தை ஈராசுப் பெருமகனார், ‘இந்தியா வெங்கணும் உள்ள மொழிகள் மட்டுமன்றி, மேலை ஐரோப்பாவில் ஸ்பெயின் நாட்டிலுள்ள பாஸ்க் மொழி - வட ஐரோப்பாவிலுள்ள பின்னிஷ்மொழி - நடு ஐரோப்பாவிலுள்ள - அங்கேரிய மொழி ஆகியவையும், இன்னும் நடுவுலகெங்கணும் வழக்கிழந்து போன பல பண்டை மொழிகளும், அசல் பெரும் மூலத் திராவிட (புரோட்டோ -இந்தோ-மெடிட்டரேனிய) இன மொழிகளின் குழுவில் சேரத்தக்கவை’ என்று ஆய்ந்துரைத்துள்ளார்.
இந்தியாவெங்கும் மட்டுமன்றி, ஐரோப்பா எங்குமே தமிழினமும் - தமிழின மொழிகளும் - பரவியிருந்தன என்பதை, இது, கோடிட்டுக் காட்டவல்லது!
“பண்டைக் கிரேக்க - இலத்தீன் மொழிகள் உட்பட இன் றைய ஐரோப்பிய மொழிகள் அனைத்திலுமே இந்த அடிப்படை மூலத் திராவிடப் பண்பாட்டின் செல்வாக்கினைக் காணலாம்” என, மொழி, பண்பாட்டியல் அறிஞர்கள் கருதி வருகின்றனர்.
சொற் பிறப்பாய்வியல் அறிஞராக நம்மிடையே வாழ்ந்து வரும் திரு. ஞானகிரி நாடார், ‘இந்த மேலை மொழிகள் யாவுமே சங்ககால இலக்கிய வேர்ச் சொற்களை இரவல் பெற்றே நூற்றுக்கு இருபத்தைந்துக்குக் குறையாத விழுக்காட்டில், தம் தற்காலச் சொல் வளங்களை ஆக்கிக்கொண்டுள்ளன’ என்று காட்டி வருகிறார்!
கீழ்த்திசையிலும் இதுபோல, பண்டை வேத மொழியும் - இடைக்கால சமஸ்கிருதமும் - இக்கால வட இந்திய மொழிகளும், சிங்களம், மலாய், இந்தோனேசியம், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய பரப்புகளிலுள்ள தென்கிழக்காசிய மொழிகளும் பேரளவில் அவ்வக் காலங்களில், தமிழ்ச் சொற்கள் - கருத்துக்கள் - பண்பாட்டுக் கூறுகள் - கலைக் கூறுகள் - இலக்கியப் படிவங்கள் ஆகியவற்றைப் பெற்றே தம் சொல்வளம், கலை, பண்பாடுகளை வளர்த்துள்ளன என்பதை அவ்வத் திசை மொழி வரலாற்று ஆய்வாளர்கள் காட்டி வருகின்றனர்!
தமிழின் இந்த அகல் இந்திய - அகல் உலகத் தொடர்புகளை காட்டித் திராவிட இயக்கமும் திராவிட இயக்க அறிஞர்களும் உலகளாவிய ஒரு தமிழ் விழிப்பு - தமிழ் மலர்ச்சியை ஊக்கி வருகின்றனர்!
தமிழகத் தலைவர்கள் - தமிழறிஞர்கள் - தமிழ்ப் பொதுமக்கள் - தமிழாசிரிய மாணவர்கள் - தமிழ் எழுத்தாளர்கள் - தமிழ்த் தொழிலாளர்கள் - இத்திசையில் தங்கள் கண்களைத் திருப்ப வேண்டும்; திருப்பி, அகல் இந்தியாவிலும், அகல் உலகிலும் வளரவிருக்கும் உலகத் தமிழ் மலர்ச்சியில் தமிழுக்கே உரிய பங்கு கொள்ளவேண்டும்!
அவ்வழி எழுக! விழித்துணர்ந்து கிளர்கத் தமிழகம்!
(கழகக்குரல் - 18.8.1974)
இ. தேசியங்கடந்த தேசியம் - முழுநிறை முத்திறத் தேசியம்
தமிழ் தவிர - உலகில் வேறு எந்த மொழிக்கும், ‘கன்னித் தாய்’ என்ற பெயர் மரபு கிடையாது!
தமிழ் தவிர - வேறு எந்தப் பழமை வாய்ந்த உலக மொழிக்கும் சங்க மரபு இருந்ததில்லை!
தமிழ் தவிர - வேறு எந்த உலக மொழிக்கும் ‘முத்தமிழ்’ என்ற மரபு வகுக்கப்பட்டிருக்கவில்லை!
தமிழின் சிறப்பு அடைமொழிகள், இந்த தனிப்பழஞ் சிறப்புக்களைக் குறித்தெழுந்த பழமை சான்ற வழக்குகள் ஆகும்!
அசோகன் காலத்துக்கு முன்னிருந்தே இன்று வரை இடையறாது வாழும் ஒரே இந்திய மொழி - ஒரே இந்திய இலக்கிய மொழி தமிழ் என்பதனையும் வரலாற்று விளக்கப்பட ஏடு காட்டுவதாகும்!
“முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருள்
பின்னைப் புதுமைக்கும் புதுமையாம் பெற்றியது!”
இவ்வாறு கடவுளை மட்டும்தான் உலகில் எல்லா நாட்ட வரும் வாழ்த்துவார்கள்.
ஆனால், பாரதப் பெருநாட்டவர் மட்டும், இதே சிறப்பினைக் கடவுளுக்கும் - தங்கள் பாரத அன்னைக்கும் ஒருங்கே வழங்கி, வாழ்த்திடக் காண்கிறோம்.
தமிழரோ - இன்னும் ஒரு படி மேற்சென்று, கடவுளையும் - தங்கள் தாய்த் திருநாட்டையும், தங்கள் கன்னித் தாய்மொழியாம் தமிழ் அன்னையையும் ஒருநிலையில் வைத்துப் பாடி வாழ்த்த முடியும் - வாழ்த்தி வந்துள்ளார்கள் - வாழ்த்தி வருகிறார்கள்!
ஆம்; வேதாந்த விழுச்செல்வரும் - நாடகப் பெருங்கவிஞரும் - திராவிடப் பேரியக்கத்தின் விடிவெள்ளியுமான மனோன்மணீயம் பெ. சுந்தரனாரின் தமிழ் மொழி வாழ்த்து, தமிழர் கடவுள் வாழ்த்தாக மட்டுமன்றி - தமிழரின் நாட்டு வாழ்த்தாகவும், தமிழரின் மொழி வாழ்த்தாகவும் அமைந்து - தமிழர்தம் முத்திறத் தேசீயப் பாடலாக விளங்குகிறது!
பல்லுயிரும் பல்லுலகும் படைத்தளித்துத் துடைக்கினும் ஓர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்,
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதிரத்(து) உதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போல் உலகவழக்கு அழித்தொழிந்து சிதையா உன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
சுந்தரனாரின் பின்வந்த சுந்தரத் தமிழ்க் கவிஞர் பாரதியார், கடவுளுடன் பாரத அன்னையை ஒரு நிலைப்படுத்தி.
“இவள் என்று பிறந்தனள் என்று உணராத
இயல்பினளாம், எங்கள் தாய்!”
என்று பாடினார். மாக்கவிஞர் பாரதியார், கடவுளையும் - தமிழன்னையையும் மனத்தில் கொண்டே பாரத அன்னையைப் பாடியதுபோல, முத்தமிழ்க் கவிஞர் சுந்தரனாரும், பரம் பொருளையும் - நாட்டன்னையையும் பாடி, அவ்விரண்டின் ஒளியுருவிலேயே மொழி அன்னையையும் வாழ்த்தினார் என்பது குறிப் பிடத்தக்கது.
இந்தத் தங்கத் தமிழ்க் கவிஞர்களின் கருத்துப் பின்னணியையே நாம், வங்கப் புகழ்க் கவிஞர் தாகூரின் தேசீயப் பாடலிலும் காண்கிறோம் -
ஜன கண மன அதி நாயக!
மக்கட்குழு உளம் ஆண்ட நாயகனே!
பாரத பாக்கிய விதாதா!
பாரத வாழ்வினுக்குரிய ஊழ்முதல்வனே!
கடவுளை இவ்வாறு விளித்தே, அவரை, நம் பாரத நாட்டின் பல மலைகள்-ஆறுகள்-பல இனங்கள் கொண்ட பல்வண்ணத் தேசீய வாழ்வுக்கு மெய் வண்ண உயிர் அளிக்குமாறு உலகக் கவிஞர் வேண்டுகிறார்!
தமிழக அரசும் - பாரதப் பல்வண்ணத் தேசீயக் கனவினை நனவாக்கத் துடிக்கும் தமிழ்ப் பெருமக்களுக்கும் பெருநிகழ்ச்சி களில் ஈடுபடும்போது, தங்கத் தமிழ்க் கவிஞன் பாடலுடன் அவற்றை மங்களமாகத் தொடங்கி - வங்கப் புகழ்க் கவிஞன் பாடலுடன் அவற்றை மங்களம் பாடி முடிக்கும் மரபு, இந்த முத்திறப் பல்வண்ணத் தேசீயத்தை எவ்வளவோ
அழகுறக் குறித்துக் காட்டுகிறதன்றோ!
தமிழருக்கு - தமிழழ் தேசீய வாழ்வின் வளத்துக்கு வந்தமைத் துள்ள ஓர் அரிய அமுத வாய்ப்பு, இம்மரபு; ஏனெனில், தமிழருக்கு வழிவழி மரபாக வந்து கிடைத்துள்ள முத்தமிழ் மும்மைத் தேசீயத்துக்குரிய - ஒரு மும்மணி வாழ்த்தாக இது அமைந்துள்ளது.
("புத்தம் சரணம் கச்சாமி -
சங்கம் சரணம் கச்சாமி -
தர்மம் சரணம் கச்சாமி")
புத்தரின் இந்த மும்மணி வாழ்த்தையே, தமிழரின் இந்த முத்திறத் தேசிய வாழ்த்துப்பாடல் மரபு நினைவூட்டுகின்றது என்னல் தகும்.
புத்தர்பிரான் - அவர் வழிவரும் சங்கம் - அதன் வழி விளங்கும் புத்தர்பிரான் தருமம் - என்ற இந்த ஒருமைப்பாட்டைப் போலவே, ‘மனித இன இலக்காகிய இறை - அதை நோக்கிச் செல்லும் நாட்டு வாழ்வு - அதனை இயங்கு நிழற்படமாக இயக்கிக்காட்டும் மொழி’ எனத் தமிழ்த் தேசியத்திலும் மும்மை ஒருமைப்பாடு அமைந்துள்ளது காணலாம்.
தமிழரின் தேசீய வாழ்வுக்குரிய இத்தனிச் சிறப்பைத் தமிழி யக்கத்தாரும் - திராவிட இயக்கத்தாரும் மட்டுமன்றி, உலகப் பெருமக்கள் அனைவருமே அறிந்துகொள்ள வேண்டியவர்கள் - அறிந்து கொள்ளத் தக்கவர்கள் ஆவர்; ஏனெனில், இது, தமிழர், உலகுக்கு அளித்துள்ள உலகப் பொதுமறையான திருக்குறளைப் போல - தமிழர் உலகுக்கு அளிக்கவிருக்கும் புதுத் தேசீயம் - ஏழு நிறைத் தேசீயம் - வருங்கால உலகத் தேசீயத்துக்குரிய கருவிதை ஆகும்.
தமிழ்த் தேசீயம், உலகத் தேசீயத்துக்கு - இந்தியத் தேசீயத்துக்கு வழிகாட்டுவது எவ்வாறு?
உலக மக்களுக்கு, வாழ்க்கையின் குறிக்கோள் கடவுள்; ஆனால், அவர்கள் தேசீய வாழ்க்கை - பொதுவாக - இந்தக் கடவுட் குறிக்கோளுடன் இணைவதில்லை; ஏனெனில், அவர்கள் தேசீயம் புதுத் தேசீயமே! 19ம் நூற்றாண்டிலிருந்து வளர்ந்து வந்து - இப்போது தளர்ந்து நலிந்து வரும் நோய்வாய்ப்பட்ட - குறைப்பட்ட தேசீயமே!
ஆனால், பாரத மக்கள் வகையில்? மெய்யான பாரதப் பண்பாட்டின் வழிவந்து, காந்திய மரபு வழுவாத பாரத மக்கள் வரையில் - கடவுள் குறிக்கோள், அவர்கள் வாழ்க்கையின் குறிக்கோள் மட்டுமன்றி அவர்களின் தேசீய வாழ்க்கையின் குறிக்கோளும் ஆகிவிடுகிறது!
கடவுட் கருத்துடன் ஒத்த பழைமை, பாரத மக்களின் தேசீய வாழ்வுக்கு அமைந்துள்ளதன் விளக்கம்!
தமிழரோ, கடவுள் குறிக்கோளையும் - நாட்டுக் குறிக்கோளையும்- மொழி வாழ்வுக் குறிக்கோளையும் தம் ஒரே முழுநிறை வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டவர்கள்!
கடவுளைப் போலவே நாட்டினப் பண்பும்; இவ்விரண்டை யும் போலவே மொழி - கலை - இலக்கிய அறிவியற் பண்புகளும் ஒப்புடையனவாக அவர்கள் கொண்டுள்ளது இதனாலேயே ஆகும்.
கடவுள் - தமிழரின் ஓருலகக் குறிக்கோளின் சின்னம்; இது, அவர்கள் ஆன்மீக இலக்கு; அதாவது இன வாழ்வின் தொலை இலக்கு!
நாடு - அவர்கள் உலகியல் வாழ்வின் இலக்கு; அதாவது, இயற்கையை வென்றாளும் மனித முயற்சியின் உடனடி முன்னேற்றம் குறித்த சமுதாய இலக்கு!
இந்த இரண்டு குறிக்கோள்களையும், ஒரே முழுக் குறிக் கோளாக்கும் சின்னமே மொழி - தமிழ் மொழி!
ஆன்மீகமும் உலகியலும் வெவ்வேறாகக் காணும் இயல்புடைய உலகிலே அந்த ஆன்மீகமும் - உலகியலும் ஒருங்கிணைந்து, முழு வாழ்விலக்குக் கண்ட மொழியே தாய்மொழி!
இவ்வாறு தமிழரின் கடவுட் கருத்தும், முழு நிறை கடவுட் கருத்து; இயற்கையும் - நாட்டு வாழ்வும் - மொழி வாழ்வும் ஒருங்கே அளாவிய கடவுட் கருத்து ஆகும்; அவர்கள் தேசீய வாழ்விலும் - மொழி வாழ்விலும், இதே முத்திறம் படர்ந்துள்ளது!
இறையாற்றலும் - மக்களாற்றலும் - மொழியாற்றலும் ஒருங்கு கூடியதே, தமிழர் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னிருந்தே கனாக்கண்டு வரும் தேசீய வாழ்வு!
இந்த மூன்றையும் மொழியுருவில் குறித்துக் காட்டுவதே முத்தமிழ்- முப்பால் வாழ்வு; கவிஞர் சுந்தரனார் குறித்துணர்த்திப் பாடிய கன்னித் தமிழ்த்தாய் வாழ்த்தின் உள்ளுறைப் பண்பும் இதுவே!
வள்ளுவர்செய் திருக்குறளை வழுவற நன்குணர்ந்தோர்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக்கு ஒருநீதி!
பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ -
எத்துணையும் பொருட்கிசைவில் இலக்கணமில் கற்பனையே!
தமிழ்த் தேசீயப் பண்பாட்டின் வழிவந்த கவிஞர் சுந்தரனார், இந்தியாவின் தேசீய வாழ்வை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அரித்து வரும் நோய்ப் பண்புகளைச் சுட்டிக்காட்டி, ‘தமிழ்த் தேசீயம் எவ்வாறு இந்தியத் தேசீயத்தை மேம்படுத்தவல்லது’ என்பதைக்கூட அவர், தம் தமிழ்க் கடவுள் வாழ்த்தாகிய தமிழ்த் தேசீய வாழ்த்துப் பாடலில் சுட்டிக் காட்டியுள்ளார்.
“சாதி நீதியற்ற - சாதி வேறுபாடு, வர்க்க வேறுபாடு, சமய - இன - நிற வேறுபாடுகளற்ற சமநீதிச் சமுதாயமே தமிழர் சமுதாயம்; அதுவே, வருங்கால பாரத சமுதாயமாகவும் - உலக சமுதாய மாகவும் அமைய வேண்டும்” என்ற வள்ளுவக் குறிக்கோளை, அவர் பாட்டு நமக்கு நினைவூட்டுகிறது!
இது மட்டுமோ - அத்தகைய காந்திய சமுதாயம் அமைய வேண்டுமானால், நம் இலக்கியமும் ஒரு காந்திய இலக்கியமாக விளங்கவேண்டும்.
அதுமட்டுமோ? அறிவியல் - அதாவது விஞ்ஞானம் - வளரத்தக்க ஒரு பகுத்தறிவுச் சமுதாயம் நம்மிடையே அமைய வேண்டுமானால், விஞ்ஞானப் பண்பு வாய்ந்த இலக்கியம் நம்மிடையே வளர வேண்டும்!
"இந்த இருவகை இலக்கியங்களுக்கும் முன் மாதிரிகளாக - வழிகாட்டிகளாக - பத்துப்பாட்டுப் போன்ற தமிழ்ச் சங்க இலக்கியங்கள் அமைந்துள்ளன’ என்பதையும் கவிஞர் சுந்தரனார் நமக்குச் சுட்டி உணர்த்தியுள்ளார்.
மா, பலா, கதலி என்ற முப்பழங்களுமே இனிமையுடையவை யாயினும், மூன்றும் கலந்தபின் மூவினிமையாகி - இனிமையிலும் முழு நிறை இனிமையாக அமையுமன்றோ!
பாலும் தெளிதேனும், பாகும் பருப்பும் தனித்தனி நுட்பநய - வேறு பாடுடைய இனிமையுள்ளனவாயினும், அவை நான்கும் கலந்த கூட்டினிமை மேலும் சிறப்புடையதன்றோ!
இவைபோலவே, தமிழர் தொன்றுதொட்டுப் பேணி வளர்த்துவரும் இந்த முத்தமிழ் - முப்பால் பண்பு, அவர்கள் தேசீயத்துக்குத் தேசம் கடந்த- மொழி கடந்த - உலகளாவிய வளம் மட்டுமன்றிக் காலங்கடந்த ஒரு தெய்விக வள வாய்ப்பும் அளிக்கவல்லதாகும்.
குடும்ப வளம் சமுதாய வளமாகி - அதன்பின் நாட்டு வளமாவது போல, நாட்டு வளமும் - மொழி வளமும் படிப்படியாக மலர்ச்சியுற்ற, உலக வளமாக அமைதல் வேண்டும்.
இத்தகு மலர்ச்சியைக் குறிக்கொள்ளும் தமிழ்த் தேசியம், முத்திறத் தேசியம் மட்டுமன்றி - மையப் பொருட்டினின்று சிறிய, பெரிய இதழ் வட்டங்களாகப் படிப்படியாக விரிந்து செல்லும் ஆயிர இதழ்த் தாமரைபோல - குடும்பத்திலிருந்து பெருங் குடும்பமாகிய நாடு - ‘நாட்டிலிருந்து மாபெரும் குடும்பமாகிய உலகு’ என விரிமலர்ச்சியுற்றுச் செல்லும் ஒரு பொங்குதாமரை ஆகும்!
இதுமட்டுமோ? அது, எல்லையில் விரிந்து செல்வது மட்டுமன்றி - வானோக்கி உயர்ந்து செல்லும் குறிக்கோள் வளமும் உடையதாக, மேன்மேலும் உலகளாவப் புதுமணம் பரப்பிப் புதுவாழ்வு வளமூட்டுவதாகவும் அமைந்துள்ளது!
போரில்லா வெற்றி -
குருதி சிந்தாப் புரட்சி -
தெவிட்டாத இனிமை -
சாவாத மூவா வாழ்வு -
என்றும் வளர்ந்துகொண்டே செல்லும் இளமை வளம்-
‘கன்னித் தாய்மொழி’ என்ற தமிழரின் இலக்கு - தமிழ்த் தெய்வமாம் முருகன் குறித்துக் காட்டும். என்றும் குன்றாத இளமை நலம் என்ற தமிழ் இலக்கு - ஆகிய தமிழ் மரபுகள் சுட்டும் தமிழ்க் குறிக்கோட் பண்பின் கூறுகள் இவை!
ஆதவனொளி நோக்கி விரிந்து - பொய்கையைக் கடந்து, பூங்கா வெங்கணும் - போக்குவரவு பாதையெங்கணும் மணங்கமழ மலரும் பொங்குதாமரை மலர்போல, தமிழர் குறிக்கொண்ட தேசீய வாழ்வு, தமிழக வளம் மட்டுமன்றிச் சூழ்வளமும் நாடி - அவற்றின் இடைஇருட்கால உலகின் மாசுகளால் ஏற்பட்ட நலிவுகள் துடைத்து - அவற்றின் வளத்தை, என்றும் வளரும் - வளர்ந்து கொண்டே இருக்கவல்ல இட எல்லை - கால எல்லை கடந்த வளமாக்கவல்ல பேருலகப் பண்பாடாய் அமைவது ஆகும்!
இத்தகைய முழுநிறை - முத்தமிழ் - முப்பால் - முத்திறத் தேசீயத்தைத் தமிழகத்தில் மலர்வித்து - அதன் மூலம் புதியதோர் இந்தியாவை ஆக்கிப் படைத்து - அதன் ஆற்றலால் கீழ்த்திசையை உயர்த்தி - உலகுக்கு ஒரு புத்தம் புதிய வளம் வழங்க முனையும் இயக்கமே தமிழியக்கத்தின் புதுத் தளிர்க்கொழுந்தாகிய திராவிடப் பேரியக்கம்!
தமிழர் - தமிழ் மொழியைச் ‘செந்தமிழ்’ என்றும், ‘முத்தமிழ்’ என்றும், ‘கன்னித் தமிழ்’ என்றும், ‘கன்னித் தாய்த் தமிழ்’ என்றும் போற்றியது, வெறும் சொல்லழகு வழக்கன்று - பொருள் பொதிந்த ‘அர்த்தமுள்ள’ வழக்கேயாகும் என்பதைத் தமிழ் மரபு வழுவாத தமிழர் உணரல் வேண்டும்.
தமிழ் தவிர - உலகில் வேறு எந்த மொழிக்கும் ‘கன்னித் தாய்’ என்ற பெயர் மரபு கிடையாது!
தமிழ் தவிர - வேறு எந்தப் பழமை வாய்ந்த உலக மொழிக்கும் சங்க மரபு இருந்ததில்லை!
தமிழ் தவிர - வேறு எந்த உலக மொழிக்கும், ‘முத்தமிழ்’ என்ற ஒரு மரபு வகுக்கப்பட்டிருக்கவில்லை!
தமிழின் சிறப்பு அடைமொழிகள், இந்தத் தனிப்பழஞ் சிறப்புக்களைக் குறித்தெழுந்த பழமை சான்ற வழக்குகள் ஆகும்.
பள்ளி - கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தும் உலகப் பட (World map) ஏட்டில் இருவகைப் படங்கள் உண்டு; கடல் - மலை - ஆறும், மேடு பள்ளங்களும் காட்டும் இயற்கைப் படங்கள் ஒரு வகை; இவை காலத்தால் அவ்வளவாக மாறுவதில்லை; நம் பாட்டன்மார் காலத்திலும் - தந்தைமார் காலத்திலும் - நம் காலத்திலும், இவை, கிட்டத்தட்ட ஒரு தன்மையினவாகவே இருக்கும் இயல்புடையன!
ஆனால், நாட்டெல்லை - மொழியெல்லை காட்டும் மற்றொரு வகைப்படங்கள் உண்டு; இவை, நம் பாட்டன்மார் இனமறிய முடியாதபடி நம் தந்தையார் காலத்திலும் - நம் தந்தைமார் இனமறிய முடியாதபடி நம் காலத்திலும் மாறிவிடுகின்றன என்பதை யாவரும் அறிவர்!
இதுபோல, நம் இனமறிய முடியாதபடி இவை நம் பிள்ளைகள் காலத்தில் மாறிவிடத் தக்கவை என்பதும், எதிர்பார்க்கக்கூடிய செய்தியே ஆகும்.
உண்மையில் ஆசிரியர்கள், தாம் படித்த காலத்தில் இல்லாத நாடுகள்- மொழிகள், மாணவர் படிக்கும் காலத்தில் ஏற்பட்டு விடுவதால், ஆசிரியர் எப்போதும் மாணவராக இருந்து - தாம் கற்பிப்பதை அன்றன்று புதிதாகக் கற்க வேண்டும் நிலையினையுடைய துறைகளில் இதுவும் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.
வங்காள தேசம் - 1973ல் பிறந்த நாடு! பாகிஸ்தான் - முன் இல்லாதது. 1947ல் பிறந்த புத்தம் புதிய நாடு! யுகோஸ்லாவியா, வியட்னாம், இந்தோனேசியா முதலியவை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னும், செக்கோஸ்லாவிய முதல் உலகப்போருக்குப் பின்னும் எழுந்த நாடுகள் ஆகும்!
உலக வரலாற்றாய்வு - நாகரிக வரலாற்றாய்வு - மொழி வரலாற்றாய்வு ஆகியவற்றுக்குரிய உலகப் பட ஏடுகள் - இந்திய மாநிலப் பட ஏடுகள் அமைக்கப்பட்டால், அந்த ஏடுகள் தமிழ்த் தேசியத்துக்கு - திராவிட இயக்கத்துக்கு ஊக்கம் தரும் அரிய காட்சி விளக்கங்களாக அமைவது உறுதி; ஏனெனில், இன்றிருக்கும் நாடுகள் - நாட்டெல்லைகள் - நாட்டுப் பெயர்கள்கூட, ஒரு சில நூற்றாண்டுகளுக்குமுன் அல்லது ஓர் ஆயிரம் ஆண்டுகட்குமுன் இருந்ததில்லை என்பதையும், ‘உலக நாகரிகம் நடுநிலக் கடலையும் இந்துமாக்கடலையும் அடுத்துள்ள நிலங்களிலேயே தொடங்கி வளர்ந்தது’ என்பதையும் அது காட்டும்!
உலக நாகரிக வரலாற்றில், உலகின் உயிர்வரை (Life Line of the Human Historyஎன்று கூறப்படும் பகுதி, இந்நடுநிலக் கடல் - இந்துமாக் கடல் வழி செல்லும் கடல்தீரப் பகுதியேயாகும்.
இந்தியா - சிறப்பாகத் தென்னகமும், தமிழகமும் - இந்த உயிர் வரையில் மையமாக அமைந்துள்ளவை மட்டுமல்ல - இவையே நாகரிக உலகின் தென்றல் என்று கூறத்தகும் முன்மூல திராவிட இன நாகரிகம் (Proto, Indo - Mediterranean Culture) பரவிய பகுதிகள் ஆகும்’ என்ற திருத்தத்தை ஈராஸ் பாதிரியார் விளக்கிக் காட்டியுள்ளார்.
இன்றுள்ள உலக மொழிகளிலும் - இந்திய மொழிகளிலும், ஆயிரம்- ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட பழமையுடைய மொழிகள் - சீன மொழியும், தமிழ் மொழியும் மட்டுமே ஆகும்.
அசோகன் காலத்துக்கு முன்னிருந்தே இன்று வரை இடையறாது வாழும் ஒரே இந்திய மொழி - ஒரே இந்திய இலக்கிய மொழி, தமிழ் என்பதனையும், வரலாற்று விளக்கப்பட ஏடு காட்டுவதாகும்!
தமிழுக்கு அடுத்தபடி பழமையான இந்திய மொழிகள் - இந்திய மொழி இலக்கியங்கள் - கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று தமிழின மொழிகள் மட்டுமேயாகும்; இன்று நமக்குக் கிட்டிய அளவில், தமிழுக்கு, கி.மு. 5ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இலக்கிய வாழ்வு உண்டானால், அதற்கு அடுத்தபடியாகக் கன்னட மொழிக்கு கி.பி. 9ம் நூற்றாண்டிலிருந்தும், தெலுங்கு மொழிக்கு கி. பி. 12ம் நூற்றாண்டிலிருந்தும், மலையாள மொழிக்கு கி. பி. 16ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தும் இலக்கிய வளம் ஏற்பட்டுள்ளது.
மற்ற இந்திய மொழிகளின் இலக்கிய வாழ்வுகள், கி.பி. 16ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவையேயாகும்.
இந்தியாவில் தொன்றுதொட்டு இலக்கண அமைப்பினை மேற்கொண்ட மொழிகள் - தமிழும், சமக்கிருதமும், பிற தமிழின மொழிகளுமே ஆகும். தமிழிலும், கன்னடத்திலும், மலையாளத்திலும், தெலுங்கிலும் மட்டுமே இலக்கண நூல்கள் மொழி வழங்கும் நில எல்லைகள் வகுத்தன.
உலகிலேயே மொழிக்கு எல்லை கூறும் மரபு வகுத்தவர்கள் தென்னவர்கள் மட்டுமே!
ஐரோப்பாவில், தற்காலத் தேசீய இனங்களுக்கும் - மொழி இலக்கிய வாழ்வுகளுக்கும், பண்டை ரோம - கிரேக்க மொழி இலக்கியங்களே மலர்ச்சித் தூண்டுதலும் அளித்ததுபோல, இந்தியாவிலும் தற்கால இந்திய மொழிகள் அனைத்துக்கும் இலக்கிய வளம் அளிக்க மலர்ச்சித் தூண்டுதலாய் அமைந்த வாழ்வு, தமிழக வாழ்வே ஆகும்.
ஏனெனில், கி. பி. 3ம் நூற்றாண்டிலிருந்து கி. பி. 9ம் நூற் றாண்டு வரை, தமிழகத்தில் புதிய சமய மலர்ச்சி - கலை மலர்ச்சி ஊட்டிய நாயன்மார்கள், ஆழ்வார்கள் வழிவந்து, கி. பி. 12ம் நூற்றாண்டில் இராமானுசர் தோற்றுவித்து, இந்தியாவெங்கும் பரப்பிய வைணவப் பேரியக்கமே மராத்தி, குசராத்தி, வங்காளி, அசாமி, ஒரிசா இந்தி முதலிய எல்லா இந்திய மொழிகளிலும் இலக்கிய வாழ்வு பிறக்கத் தூண்டுதலைத் தந்தது என்பதை இந்திய வரலாறு காட்டுகிறது!
தமிழ்த் தேசீய மரபு முத்திற - முழுநிறைத் தேசீயம் மட்டுமன்றி உலகத் தேசீயங்களுக்குக்கெல்லாம் மூலமான முதல் தேசீயமாகவும், உலகத் தேசீயங்களையெல்லாம் இதுவரை பேணி வளர்த்ததுடன், இனியும் புதியன - புதியனவாக அத்தேசியங் களை வளர்க்கவல்ல உலகத் தேசிய வாழ்வுகளின் கருவிதை வளமாகவும் விளங்கி வந்துள்ளது - வருகிறது!
இந்தியத் தேசீயத்தின் உயிர் நிலையாக விளங்கி, புதிய வருங்கால இந்தியாவின் வளத்துக்குரிய கருவிதையாக விளங்குவதும் இத்தமிழ்த் தேசீயமேயாகும்.
(கழகுக்குரல் - 1.9.1974)
ஈ. உலகத் தமிழ் இயக்கம் ஏன்?
“தமிழுக்கு ஓர் உலகளாவிய இயக்கமா?”
“உலகில் இதுவரை, எந்த தனி மொழிக்கும், ‘உலக இயக்கம்’ என்ற ஒன்று இருந்ததில்லையே”.
“இன்று உலகளாவிய - உலக முன்னணி மொழிகளாய் இயங்கும் ஆங்கிலத்துக்கோ - பிரெஞ்சு மொழிக்கோ - செர்மன் மொழிக்கோ - உலகப் பெரு மொழிகளான உருசிய மொழிக்கோ - சீன மொழிக்கோ - உலகின் பண்டைப் பேரிலக்கிய மொழிகளான கிரேக்க மொழிக்கோ, இலத்தீன மொழிக்கோ, சமஸ்கிருத மொழிக்கோ - உலகளாவிய மாநாடுகள், மாநாட்டியக்கங்கள் இருந்ததில்லையே!”
“தமிழுக்கு மட்டும் இப்படி ஓர் உலகளாவிய இயக்கம் - உலகளாவிய ஆராய்ச்சி மாநாட்டு மரபு ஏற்படுவானேன்?”
சென்ற எட்டு ஆண்டுகளாக, மலேசியாவில் - சென்னையில் - பாரிசில் - இலங்கையில் நடைபெற்று, உலகின் பல நாடுகளிலிருந்தும் வந்து குழுமிய ஆராய்ச்சி அறிஞர்களின் மாநாடுகளிலே - சிறப்பாக மேலையுலகின் கலை நாகரிகத் தலைநகரான பாரிசு மாநகரில் முழங்கிய ஆய்வாராய்வுப் பேரவையிலே - உலகப் பெருமக்கள் வாய்விட்டு எழுப்பிய வினாக்கள் இவை!
உலக அரங்கில் மட்டுமன்று - தில்லிப் பெருநகரின் உயர் அரங்கங்களில்கூட, இந்தக் கேள்வி, பலர் உள்ளங்களில் அலைபாயாமல் இல்லை!
உலகத் தமிழ் ஆராய்ச்சி அரங்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளரான அறிஞர் ஏ. சுப்பையா அவர்கள், பன்னாடு களிலும் - கல்லூரிக்கழக அரங்கங்களிலும் ஆற்றிய அறிமுகவுரை களில் - உலகத் தமிழ் மாநாடுகளின் திறப்புரைகளில் - இதற்குரிய சில விளக்கங்களைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்; அவற்றுட் சில வருமாறு -
முதலாவதாக -
தமிழ்நாட்டில் மட்டுமன்றி - மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற பல உலக நாடுகளிலும் தமிழ் மொழி முக்கியமான ஓர் அங்கமாய் - ஆட்சிக்குரிய படிநிலை பெற்றும், பெறும் நிலைக்குரிய தகுதியுடையதாகவும் இருந்து வருகிறது; அத்துடன், தென் ஆப்பிரிக்கா, மோரிசுத் தீவு, தென் பசிபிக் பகுதியிலுள்ள பிஜித் தீவு, தென் அமெரிக்கப் பகுதியிலுள்ள திரினிதாது, கியூபாத் தீவு முதலிய உலகளாவிய பல்வேறு இடங்களிலும், தமிழ்மொழி - தமிழ்ப் பண்பாடு ஆகியவை, மக்கள் வாழ்க்கையில் தொடர்ந்து இடம் பெற்றே வருகின்றன!
இரண்டாவதாக -
உலகின் கடலோடிப் பேரினங்களிலே தமிழினம், மூவாயிர - நாலாயிர ஆண்டுகளுக்கு முன்னிருந்தே ஒரு முதன்மை வாய்ந்த இடம் பெற்றதாய் இருந்து வந்துள்ளது.
மூன்றாவதாக -
தமிழ் மொழி, ‘உலகின் உயர் தனிச் செம்மொழிகள்’ என்ற பெருமைக்குரிய கிரேக்கம், இலத்தீனம், சமஸ்கிருதம் ஆகிய பண்டைப் பெருமொழிகளுடன் போட்டியிடத்தக்க நிலையில், பண்டைப் பேரிலக்கியம் உடையதாகவும், அதே சமயம், தற்கால நாகரிக உலகப் பெருமொழிகளான ஆங்கிலம் - பிரெஞ்சு - செர்மன் போன்ற மொழிகளுடன் ஒரு தற்காலப் பெருமொழியாக இன்றும் உயிர்வளம் குன்றாது வளர்ந்து வருவதாகவும் உள்ளது!
நான்காவதாக -
நாகரிக உலகுக்கு இன்றும், இனியும், இனிமை - இன்னலம் ஊட்ட வல்ல பல உயர் கருத்துக்களை - பண்பாட்டுக் கூறுகளைத் தமிழ் மொழி, மனித நாகரிகத் தொடக்கக் காலத்திலிருந்தே இலக்கியப் பரப்பிலும் - வாழ்விலும் வரலாற்றிலும் - மிகு பேரளவில் கொண்டதாக இயங்குகிறது; இவற்றுள், நாடு - மொழி எல்லை கடந்த ஓருலகக் கருத்தார்வம் - மூலமுதற் பொருளாகிய ஒரு தனிக் கடவுட் கருத்து - பக்தி இயக்கப் பண்பாடு - ‘ஒருவன், ஒருத்தி’ உறவையே வலியுறுத்தும் காதல் திருமணக் குறிக்கோள் - உயர் ஒழுக்கப் பண்பாடு - தூய ஆன்மீக ஒழுக்கம் ஆகியவை குறிப்பிடத்தக்க ஒரு சில ஆகும்.
இந்நான்கு கருத்துக்களும், உலகத் தமிழியக்கத்தின் ஆட்சியாளர் சார்பில் உலகப் பொது மக்களுக்குத் தரப்பட்டுள்ள அறிமுகவுரைக் குறிப்புக்கள் மட்டுமேயாகும்.
பெருஞ்செல்வர்கள் பேச்சில், நாலாயிரம் - ஐயாயிரம் என்பதையோ, நாலிலக்கம் - ஐந்திலக்கம் என்பதையோ, தமக்குள் குழூஉக் குறிகளாக அடக்கி, நான்கு - ஐந்து என்று குறிப்பிடுவது போல, இவையும் தமிழ் பற்றிய உலகளாவிய பண்பாட்டுக் கடல்களை - கடல்கள் என்னாமல் அடக்கி - அலைகள் எனச் சுட்டிக்காட்டிய முனைமுகக் குறிப்புகளே ஆகும்!
உலகத் தமிழ் இயக்கத்தின் தோற்றுவாயினை உணர விரும்புபவர்கள், தமிழியக்கத்தையும் - தமிழியக்கத்தின் மறுமலர்ச்சிக் கொழுந்தாகிய திராவிடப் பேரியக்கத்தையுந்தான் கூர்ந்து ஆய்ந்து, அதனைக் கண்ணாரக் கண்டெய்த முடியும்!
இது மட்டுமன்று -
உலகத் தமிழ் இயக்கம், உலக மக்கள் வாழ்வுடன் கலந்து புதிய உலக எழுச்சி தோற்றுவித்து வளம்பெற வளர வேண்டுமானால், உலகின் பன்னாட்டு அறிஞர்களும், தனித்தமிழ் இயக்கக் கண்கொண்டு - திராவிட இயக்கக் கண்ணாடி மாட்டிக்கொண்டு - தமிழ்மொழி வாழ்வு, தமிழின வாழ்வு, இலக்கியம், வரலாறு, கலை, இயல், பண்பாடு ஆகியவற்றை அகல் உலக வாழ்வுடன் ஒப்புறழ்வு செய்தே மெய்ம்மை உணர வேண்டியவர்கள் ஆவர்!
திராவிட இயக்க அறிஞர் இல்லாமலே நடத்தப்படும் உலகத் தமிழ் மாநாடுகள், மாப்பிள்ளை இல்லாமலே மாப்பிள்ளையின் உடுப்பை மணவறையில் வைத்து நடத்தப்படும் மணவினையின் தன்மையுடையவை ஆகிவிடக்கூடும்!
தமிழர், திராவிட இயக்கத்தை ஒருகட்சியாக நினைத்து விடாமல், எல்லாக் கட்சிகளும் - சமயங்களும் - கொள்கைகளும் ஊடுருவி நிற்கும் ஒரு தமிழ் அறிவுப் பண்பு நெறியின் நோக்காகக் கொண்டாலன்றி, அந்நோக்குடன் உலகத் தமிழ் இயக்கத்துக்குப் புதுக் குருதி - புதுக் கண்ணோட்டம் - புதிய நடைமுறையார்வம் - புதிய பண்பு வழங்க முடியாது; அவ்வியக்கத்துக்குரிய அருஞ் சிறப்புடன் அதை வளர்த்திடவும் இயலாது!
இதனைச் சில ஆண்டுகட்குமுன் நடந்த ஒரு நிகழ்ச்சி சுட்டிக் காட்டுவது ஆகும்.
பிரிட்டன் நாட்டின் பேரறிஞர் ஏ. எல். பாஷம் என்பவர், இந்தியாவின் புதிய உயர் தேசிய வாழ்வில் ஆர்வமீதூர்ந்த அக்கறை கொண்டவர்; இதனை அவர், தாம் இயற்றியுள்ள ‘இந்தியா ஓர் உலக அதிசயம்’ (The wonder that was Ind.) என்ற அரிய பெரிய ஆய்வேட்டில் காட்டியுள்ளார்.
செர்மானியப் பேரறிஞர் ஆல்பெர்ட் சுவைட்சரைப் போலவே இவரும், இந்தியாவின் பல்வண்ணத் தேசியத்தில், மணிமாலையின் ஊடுசெல்லும் ஒரே பொற்சரடு போன்ற மெய்வண்ணத் தேசியப் பண்பாக விளங்கும் மொழி - இலக்கியம், ‘தமிழ் மொழியும் தமிழ் இலக்கியமும் மட்டுமே’ என்பதை விளக்கிக் காட்டியுள்ளார்.
இத்தகைய அறிவுலகப் பெரியார், இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து - சென்னைப் பல்கலைக் கழகத்தின் மொழியியற் குழுவில் - தமிழ்ப் பண்பாடுபற்றி ஒரு சொற்பொழிவாற்றினார்; அதில், தமிழின் பல தனித்தன்மைகளைக் கூறியபின், ‘இந்தத் தனித்தன்மைகள், மொழியிலும்- இலக்கியத்திலும் உள்ளன என்பதும் உண்மையே; ஆனால், இதனைத் தெற்கு-வடக்கு என்று எதிரெதிராக இருமுனைப்படுத்தும் மரபு (Polarisatin) அணிமைக் காலத்திய செய்தியேயாகும்; பண்டை வரலாற்றில் இதற்கு இடம் கிடையாது’ என்று கூறியதுடன் அதில் கருத்து வேற்றுமை இருந்தால் தெரிவிக்கும்படி பல்கலைக்கழக அறிஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
திராவிட இயக்கத்தின் ஆணிவேரான தனித்தமிழ் இயக்கத்தில் ஈடுபாடுடைய வரலாற்று அறிஞர் ஒருவர் முன்வந்து, ‘தமிழினம், கடலோடி இனம்’ என்பதை நினைவூட்டினார்; ஆனால், அறிவுலகப் பெரியாரோ,
“இது, கடல் வாணிகத் தொடர்பு சார்ந்தது; தமிழினம் இந்தியாவின் கரையோரப் பகுதிகளில் வாழும் இனம் என்பது ஒன்றே, இத்தனித் தன்மைக்குக் காரணம் ஆகும்; இதில், வடக்கு - தெற்கு என்ற எதிரெதிர் முனை வேறுபாடு ஏது?”
என்று எதிர் கடாவினார்.
தனித்தமிழ் இயக்க அறிஞர் மீண்டும் விளக்கம் உரைத்தார்:-
"இது, கடல் வாணிகத் தொடர்பு மட்டுமன்று; அரசியல் தொடர்பும் இதில் உண்டு! ஏனெனில், சிவாஜியின் மராத்தியப் பேரரசு ஒன்று நீங்கலாக, அசோகன் முதல் அவுரங்கசீக் வரையிலு முள்ள இந்தியாவின் எல்லா வடபுலப் பேரரசுகளும் நிலப் பேரரசுகளாக மட்டுமே நிலவின; ஆனால், சேர சோழ பாண்டியர் - பல்லவர் - ஆந்திரர் ஆகிய தென்னகப் பேரரசுகள் யாவுமே பெருங் கடற்படைகளையுடைய பேரரசுகளாக-கடல் கடந்து பன்னாடுகளும் வென்றாண்ட கடற் பேரரசுகளாக விளங்கின!
“இது மட்டுமோ? பூவுலகெங்கணுமே ஓரினத்தவராகக் கருதப்படுபவரிடையே, செர்மனி கடலாண்ட இனமாகாமல் - பிரிட்டனும் ஆலந்தும் கடலாண்ட இனங்களாகவும்; சீனர் கடலாண்ட இனமாகாமல் - சப்பானும் தென்கிழக்காசியாவும் கடலாண்ட இனங்களாகவும்; உரோமர் கடலாண்ட இனமாகாமல் - கிரேக்கர் கடலாண்ட இனமாகவும்; எகிப்தியர், யூதர் கடலாண்ட இனமாகாமல் - கிரிட் தீவினர், பினிஷீயர், கார்த்த ஜீனியர் கடலாண்ட இனங்களாகவும், இத்தாலியர் கடலாண்ட இனமா காமல் - வெனிசியர் கடலாண்ட இனமாகவும் இருந்து வந்துள்ளனர். இவை தமிழினம் போன்ற கடலாண்ட ஓர் உலக இனத்தின் அகல் உலகச் செல்வாக்கைக் காட்டுகின்றனவல்லவோ?”
தனித்தமிழியக்க அறிஞரின் இந்த வரலாற்று விளக்கம் கேட்டபின், அறிவுலகப் பெரியார், தம் அமைதி மூலமே, தம் கருத்திசைவைக் குறித்துக் காட்டியமைந்தார்.
உலகத் தமிழ் இயக்கத்தாரின் அறிமுகவுரையிலுள்ள, முதலிரு கூற்றுகளின் வரலாற்று விளக்கப் பின்னணியை, இவ்வுண்மை காட்டுகிறது.
தமிழர், இன்று உலகளாவப் பரவியுள்ளதற்கு, ‘அவர்கள் உழைப்பாற்றல் ஒன்றே காரணமானது’ என்று கருதுபவர் உண்டு; இது, முழு உண்மையன்று; ‘செட்டி கெட்டாலும் பட்டு உடுப்பான்’ என்ற பழமொழியை நினைவூட்டும் முறையிலே, தமிழினத்தவர் பெரிதும் உழைப்பாளராக இன்று நாடிச் செல்லும் தேசங்கள் உண்மையில் முன்னம் அவர்கள் முன்னோர்கள் ஆட்சியும் - கலையும் - வாணிகமும் - தொழிலும் ஒருங்கே பரப்பிவந்த அவர்களின் உடன்பிறந்த இனத்தவர் நாடுகளே ஆகும்.
தென்கிழக்காசியாவும், ஆப்பிரிக்காவும், அமெரிக்காவும் - ஐரோப்பாவும்கூட - உண்மையில் தமிழருக்கு முற்றிலும் அயல் நாடுகள் அல்ல; ஆயிர - பதினாயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்னிருந்தே, தமிழினத்தவர் பரவிச்சென்று, குடியமைத்து வாழ்ந்த உலகப் பகுதிகளே இவை! அமெரிக்க தொல்பொருளாய்வு அறிஞரும், தென்கிழக்காசிய வரலாற்று - கலை இலக்கிய - சமயப் பண்பாட்டு விளக்க அறிஞரும், மேலை ஐரோப்பிய அறிஞரும் சிறுகச் சிறுக ஆய்ந்து காட்டிவரும் மெய்ம்மைகளே இவை! - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினர் முழுதும் ஆராய்ந்து, விரிவிளக்கம் காண்வேண்டிய துறை இது!
தென்கிழக்காசியாவை, ‘கிழக்கிந்தியா’ (கிழக்கிந்தியத் தீவுகள் இந்து - சீனா) என்றும், அமெரிக்கப் பழங்குடியினரையும் - அவர்கள் தாயகத்தையும், ‘செவ்விந்தியர் - மேற்கிந்தியத் தீவுகள்’ என்றும் ஐரோப்பியர் அழைத்ததற்குக் காரணம், அங்கெல்லாம் இந்நாள்வரை பரவலாகக் காணப்படும் இந்திய நாகரிகச் சாயலே ஆகும்!
அறிஞர்கள், இந்த இந்தியச் சாயலைக் கூர்ந்து ஆராய்ந்து நோக்கி, ‘இது இந்தியச் சாயல் மட்டுமன்று - தொல்பழங்கால இந்தியச் சாயல் - அதாவது, தமிழின இந்தியச் சாயல்’ என்று மெய்ப்பித்துக் காட்டி வருகின்றனர்!
சிங்கள மொழியில், பாரதம் மொழி பெயர்த்தவர்கள், அதைத் தமிழ்ப் பாரதத்திலிருந்து மொழிபெயர்த்ததாகவே கூறுகின்றனர்.
சங்க காலத்தில், பெருந்தேவனார் என்ற சங்கப் புலவர், பாரதத்தை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக இயற்றியிருந்தார் என்பதைத் தமிழ்ப் புலவர் யாவரும் அறிவர்.
சங்க காலத்திலும் அதற்கு முற்பட்டும்கூட, பாரதமும் - இராமாயணமும், தமிழில் ‘தோல்’ என்னம் பண்டைக்கால மக்கட்பால் வகையாக நிலவின என்று அறிகிறோம்.
தென்கிழக்காசியாவெங்கும் இவையே, பாரத இராமாயணங்களாகப் பரவி இருந்தன என்று கருத இடமுண்டு. இது எவ்வாறாயினும் ஆகுக -
சிங்களம் இந்தோனேசியம், மலாய் முதலிய தென்கிழக்காசிய மொழிகள் அனைத்திலும் முதன்முதல் அமைத்த இலக்கியம், புறநானூறு போன்ற பாடல்கள், புறநானூற்றின் மொழி பெயர்ப்புகள் போன்றேதான் இயன்றன’ என்பதை, அம்மொழி இலக்கிய வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.
தென்கிழக்காசியாவெங்குமுள்ள மக்கள் பழக்கவழக்கங்கள்- நாட்டிய, நாடகக் கலைகள்-பண்பாடுகள் பெரிதும் கேரளத்தையும், வங்கத்தையும், காசுமீர-நேபாள-அசாமியப் பரப்பையும் நினைவூட்டுவனவாகவே உள்ளன என்பது, கூர்ந்துணர்ந்து காண்டற்குரியதாகும்.
பண்டைச் சேரரைப் போலவே சீனரும், தங்களை ‘வானவர்’ என்று கூறிக்கொண்டனர் என்பதும், பெண்ணுரிமைத் தாயம் இவ்வெல்லா நாடுகளிலும், தென் பசிபிக் இனங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க செய்திகள் ஆகும்.
தென்பாண்டி நாடு கல்வெட்டுகளில், 12ம் நூற்றாண்டு வரையிலுமே தமிழ்நாடு - மறவர் நாடு - பெண்கள் நாடு என்று அழைக்கப்பட்டது. கி.மு. நான்காம் நூற்றாண்டிலேயே, கிரேக்க அறிஞர் மெகாஸ்தனிஸ், இதனை, ‘அல்லி நாடு’ என்று குறித்துள்ளார்.
தென் கிழக்காசியாவில் இந்தோனேசியப் பகுதியில் - சிறப்பாகப் பாலித் தீவில் நாம் இன்றும் தொல் பழங்கால இந்தியாவின் - அதாவது, தமிழின இந்தியாவின் சமய மரபுகளை மட்டுமன்றி, உபநிடத கால - சங்ககாலப் பண்பாட்டையே காண்கிறோம்.
தென் அமெரிக்காவிலும், நடு அமெரிக்காவிலும் இது போலவே ஐரோப்பியரின்-சிறப்பாக ஸ்பானியரின் அட்டூழியங் களுக்கும்,கொள்ளை- சூறையாட்டுகளுக்கும் ஆளாகி அழிவுற்ற பெருவிய ‘இங்கா’ நாகரிகம் (கி. பி. 14-15ம் நூற்றாண்டுகள்), வரலாற்றிலே திருவள்ளுவரின் அரசியல் இலக்கணத்துக்குரிய ஒரு கண்கண்ட இலக்கியமாக - உலகின் ஒரே சமதர்மப் பேரரசு என்றும், தற்கால உலக நாகரிகத்துக்கே பலவகையிலும் பயன்பட்டு வரும் ஒரு முன்னோடி வாழ்வு என்றும் வரலாற்றறிஞர்களால் சிறப்பிக்கப்படுவதாய் அமைந்துள்ளது.
இந்த ‘இங்கா’ நாகரிக - தமிழ் நாகரிக ஒப்புமை ஆய்வும், வருங்கால உலகத் தமிழ் இயக்கத்தார் தனிக்கவனத்துக்குரிய ஒன்று ஆகும்.
‘இங்கா’ நாகரிகத்துக்கு நெடுநாட்களுக்கு முன், ‘அமெரிக்காவின் அதிசய நாகரிகம்’ என்று கூறப்படும் ‘மய நாகரிகம்’ இன்று புதை பொருள் படிவமாகவே நிலவுகிறது! இது, கி.பி. 4ம் நூற்றாண்டிலிருந்து 12ம் நூற்றாண்டுவரை நிலவியிருக்கக்கூடும் என்று அமெரிக்க வரலாற்றறிஞர்கள் கருதுகிறார்கள்!
அமெரிக்காவின் மய நாகரிகம், அகல் உலக மனித நாகரி கத்திலிருந்து முற்றிலும் ஒதுங்கித் தனிப்பட்டதாகவே வளர்ந்தி ருந்தாலும்- சில அடிப்படை வளர்ச்சிக் கூறுகளில் அது தமிழின - இந்திய நாகரிகத்திலிருந்து வேறுபட்டே வளர்ந்திருந்தாலும் - கட்டடக் கலை, மலையுருவங்கொண்ட கோயிற் கோபுரக்கலை, வான நூற்பயிற்சி ஆகிய வகைகளில், அது, அவ்வக்காலத்தில் - அதே சம காலத்திற்குரிய தென்னக - தமிழக வளர்ச்சிப் படிகளுடன் ஒத்திணைந்த வளர்ச்சிப் படிகளை உடையதாய் அமைந்திருந்தது என்று அறிகிறோம்.
இரட்டையராகப் பிறந்த இரு குழந்தைகள் - வேறு வேறு சூழ்
நிலைகளில், எப்படி வேற்றுடையிடையே மூல ஒற்றுமை உடையவர்களாய் - சரிசம இணை வளர்ச்சி உடையவர்களாய்க் காணப்படுவார்களோ, அப்படியே, பல்லவ - சோழ கால அமெரிக்கச் செவ்விந்தியரும், அதே காலத் தென்னவரும் வளர்ச்சிப் படிகளில் ஒத்திசைந்து காணப்படுகின்றனர்.
உலகளாவிய தமிழ் நாகரிக ஒப்பீட்டு வகையில் கடைசியாகக் குறிப்பிடத்தக்கது தமிழின - ஆப்பிரிக்க தொடர்பே ஆகும்.
இந்தப் பண்புகளையும், உழவு - நீர்ப்பாசனம் ஆகிய பண்புகளையும், நெசவு முதலிய கைத்தொழில்களையும் தமிழர் பல்லாயிர ஆண்டுகட்கு முன்னரே, தென் ஆப்பிரிக்காவில் பரப்பியிருந்தனர் என்பதைச் செர்மானிய அறிஞரும், தமிழறிஞரும் நமக்கு எடுத்துரைத்து வருகின்றனர். அண்மையில் சென்னை வந்திருந்த மொழியியல் பேரறிஞரான செனகல் நாட்டுத் தலைவர் செங்கோ, தம் ஆய்வாராய்வுகளில் இத்தமிழின பழைமை பற்றி - வலியுறுத்தி யுள்ளார்; ஆப்பிரிக்கத் தொடர்பை அடுத்து, 1976-இல் நடைபெறவிருக்கும் உலகத் தமிழாய்வு மாநாட்டை, இவர், தம் நாட்டிலேயே நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்பதும் ஈண்டுக் குறிப்பிடத் தக்கதாகும்.
(கழகக்குரல் - 5.9.1974)
பீடுடன் பின்னோக்கிப் பார்… ஏறுநடையிட்டு முன்னோக்கிச் செல்
இன்றையத் தமிழகத்தில், தமிழிலேயே - தம்மைத் ‘தமிழர்’ என்று கூறிக்கொள்வோரின் ஏடுகளிலேயே - தமிழரின் நேற்றைய - இன்றைய வெற்றிகளை சாதனைகளைக் கேலிச் சித்திரங் களாக்கி, கலியுகப் புரளிகளுக்கு ஆளாகத் தொடங்கி விட்டனவே!
தமிழ் இளைஞனே! வெற்றிக் களத்தில் குதித்தாடி மகிழ்ந்த வெற்றி வீரர்கள், தோல்வியுற்ற பகைவர்களின் இரவு நேரத் திடீர்த் தாக்குதல்களுக்கு - சதிகளுக்கு ஆளாகி, வெற்றியைத் தோல்வியாக்கிக் கொண்டுவிட்ட வரலாறுகள் உண்டு என்பதை நீ மறந்துவிடாதே!
தோல்விகளெல்லாம் தோல்விகள் அல்ல; ஊக்கமுடைய வனுக்கு - அவை, வெற்றியின் படிகள்!
வெற்றிகளெல்லாமே எப்போதும் வெற்றிகளாய் இருப்பதில்லை; வெற்றியில் மகிழ்ந்து - தன்னை மறக்கும் ஊக்கமிலிகளுக்கு, வெற்றிகளே தோல்வியின் படிகள் ஆகிவிடுவதுண்டு!
ஆகவே, வேற்றுமை விளைவிப்பவர் பக்கம் தன் திருப்பாதே! பிளவகற்று! ஒற்றுமைப்படு!
வேறுபட்டால்கூட, பிற இனங்கள் - பிற இயக்கங்கள் வாழ வழி ஏற்படலாம்; ஏனெனில், அவை, ஆதிக்க இனங்கள்; சுரண்டலையே தம் உள்ளார்ந்த அக நோக்கமாகக் கொண்டு பசப்பும் இனங்கள்; அவற்றின் வேறுபாடுகளே, நண்டுத் தெறுக்காலின் இடுக்குகள் போல - தம்மை நம்பி ஒட்டி வாழ்பவர்களை இடுக்கி போல் வளைத்து அழித்துவிட முடியும்!
உன் இனம், ஆக்க இனம்; எல்லா இனமும் வாழ வழி வகுத்துத் தானும் வாழ விரும்பும் இனம்; உனக்கு இந்த வேற்றுமைச் சூழ்ச்சி பொருந்தாது!
தமிழினம் வேறுபட்டால் வாழ முடியாது; ஏனெனில், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, அரும்பெருஞ் சாதனைகள் செய்தும் - உலகாண்டும் - வேற்றுமைப்பட்டதனாலேயே வீழ்ந்துகிடக்கும் இனம், உன் தமிழினம்!
தமிழினத்தின் ஆயிரமாயிர ஆண்டுத் துயிலொழிக்க வந்த இயக்கம் தான் திராவிட இயக்கம்! அதன் வாழ்விலும், துயருக்கு - பிளவுக்கு இடமளித்து விடாதே!
பீடுடன் பின்னோக்கிப் பார் - ஆனால், ஏறுநடையிட்டு முன்னோன்னிச் செல்!
வெற்றியில் மகிழாதே - தோல்வியில் துவளாதே! - இறுதி வெற்றியாகிய - ஆனால், உன் இன வாழ்வின் தொடக்கமாகிய இன விடுதலை நோக்கி - இன உரிமை நோக்கி - இடையறாது முன்னேறு. ஏனெனில், அந்த இறுதிவெற்றியே உன் புதிய நல்வாழ்வின் - உன் அண்ணன் தொலைவாற்றல்மிக்க அறிவுக் கண்பார்வை கனாக்கண்டு அவாவிய ஆக்கப் பெருவாழ்வின் தொடக்கம் ஆகும்!
நீ உண்மைத் தமிழனாக வாழப்போகும் நாளின் விடியல்தான் அந்த இறுதி வெற்றி; அதுவரை, உன் தோல்விகளும் சரி - வெற்றிகளும் சரி - இரண்டுமே, இருளூடாக ஒளி நோக்கித் தள்ளாடிச் செல்லும் ஒருவனது இடையிடைத் தளர்ச்சிகளும் - கிளர்ச்சிகளுமேயாகும்!
ஆகவே, வெற்றியிலும் சரி - தோல்வியிலும் சரி - உன் இன இலக்கு என்றே நோக்கி ஏறு முன்னேறு! வீறுடன் ஏறு, முன்னேறு!
கொண்ட வெற்றியை விடாது பற்றிக் கொண்டு ஏறு - முன் னேறு!
தோல்வி வந்தால்கூட, அதையே ஒரு பிடிப்பினையாக - ஊக்குவிக்கும் கருவியாகக் கொண்டு, இடைவிடாது ஏறு - முன்னேறு!
சிங்க மரபில் வந்த சீரார்ந்த செந்தமிழ்க் குருளையே! உன் நோக்கு சிங்கநோக்காக இருக்கட்டும்!
நீ உன் மரபின் பெருமையினை - உன் தந்தையின் பெரும் புகழை - உன் அண்ணன் கண்ட அறவழியை - உன் தானைத் தலைவன் நடத்தி வந்துள்ள - நடத்திவரும் அறப்போரை - ஆற்றியுள்ள ஆற்றிவரும் சாதனைகளைத் திரும்பிப் பார்! பெருமையுடன் நெஞ்சம் விம்மப் பின்நோக்கிப் பார்! ஆனால், அங்ஙனம் திரும்பிப் பார்ப்பதனுடன் அமைந்து நின்றுவிடாதே!
நீ, சிங்கமரபில் வந்த சிங்கம் - உன் நோக்கும், சிங்க நோக்காகவே இருக்கவேண்டும் என்பதை மறந்துவிடாதே!
“கற்றது கைம் மண்ணளவு
கல்லாதது உலகளவு”
உன் செந்தமிழன்னை இவ்வாறு பாடியது - இடித்துக் காட்டிப் பாடியுள்ளது பொதுவான அறிவுத் துறைக்கு மட்டுமன்று - உன் சாதனைத் துறைக்கும் சேர்த்துத்தான்!
உன் சாதனைகள் எவ்வளவு பெரிதானாலும், அச்சாத னைகளெல்லாம் ஒரு கைம்மண் அளவாகும்படி - உன்னுடைய இனிவரும் சாதனைகள் உலகளாவப் பெருகட்டும் - பெருகிப் பொங்கி வழியட்டும்!
ஏனெனில், நீயும் - உன் சாதனைகளும், உனக்கு உரியவையல்ல - மக்களுக்கே உரியவை! ‘அவை போதும்’ என்ற மனமமைந்து நிற்க உனக்கு உரிமை கிடையாது! நீ, உன் சாதனைகளை மேன்மேலும் வளர்த்தால்கூடப் போதாது; ஏனெனில், நீ மட்டுமன்று - உன் மரபும், மக்களுக்கே சொந்தம்!
நீ, அம்மரபையும் வளர்த்துப் பெருக்க வேண்டியவன்; மரபு வளர்க்காது நீ வாளா இருந்துவிடவும் உனக்கு உரிமை கிடையாது!
ஏனெனில், பிள்ளை பெறாதவன் மட்டுமல்ல - மலடு! தன்னைக் கடந்து - தன்னைக் காட்டிலும் பெரிதாகத் தன் மரபை வளர்க்காதவனும் மலடுதான்!
இவ்வாறு கூறுபவர் திருவள்ளுவர்!
“தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது”
உலகத்துக்கு ஒரு பொது மாமறை வகுத்து வழங்கிய வள்ளுவன், உன் மூதாதை என்பது உன் நினைவில் இருக்கட்டும்!
உன் தந்தை புகழ் பெரிதுதான்! ஆனால், உன் அண்ணன் புகழ், அப்பெரும் புகழுடன் போட்டியிட்டு - எவரையும் எளிதில் பாராட்டிவிடாத அப்பெரும் புகழாளனின் ஆர்வப் பாராட்டையே பெற்றுவிடவில்லையா?
‘புற்று நோய்’ என்னும் பகை அரக்கனின் பொறாமை, அந்த அண்ணன் புகழை என்ன செய்ய முடிந்தது? எதையும் தாங்கும் இதயங் கொண்ட அந்த அறிவுலக மாமன்னன், அந்த அரக்கன் பிடியில் இருந்து கொண்டே - தந்தை மனமுவக்கும் வண்ணம் - எத்தனை எத்தனைத் திட்டங்கள் தீட்டி நிறைவேற்றினான்!
நீ நிறைவேற்றிக் கொள்ளும்படி இன்னும் எத்தனை எத்த னைத் திட்டங்கள் தீட்டி - திட்டக் கனவுகள் நாட்டி - நீ அவற்றை நிறைவேற்றத் துடியாய்த் துடிப்பது கண்டு, துயிலிடையிலும், தன் செவ்விதழ்கள் காட்டி, முறுவலிக்கிறான் - பார்!
கதிரவனின் ஒளி வீசும்போது, பிறிதொளி ஒளிர முடியுமா - முடியாதே! ஆயினும், உன் அண்ணன் புகழொளிக்குள்ளேயும் ஒரு புகழ்ச் சுடர் மணியாய் விளங்கிய உன் தானைத் தலைவன் - அண்ணன் தன் புகழில் தானே துயில்கொள்ளச் சென்ற காலையில், கதிரவனொளி வாங்கி- அதன் வெம்மையெலாம் தானே தாங்கி - உலகுக்குத் தன்ணொளியாக, அச்செவ்வொளியைப் பாலொழுக்கி வழங்கும் தண்மதியமே போல - அவன் புகழேட்டுக்குப் புதுப்புதுப் பேருரைகள் வகுக்கவில்லையா?
உன் தந்தை மரபு, உன் மரபு தானே!
உன் அண்ணன் குருதி, உன் குருதிதானே!
உன்தானைத் தலைவன் உள்ளத்தில் அலைபாய்ந்து - நாடி நரம்புகள் எங்கும் துடிதுடித்தோடும் உயிர்ப்பு உன் நாடி நரம்புகளின் - உன் உழைப்பாற்றலின் பொங்கு மாவளம் தானே!
ஆகவே, நீ புகழ் பாடிய போதும்! புகழ் ஆக்கு - புதுப் புகழ் படைத்து ஆக்கு!
இதுமட்டுமோ - இது போதாது!’ கதிரவனொளி உருவில், கரந்துலவும் கரும் பொட்டுக்கள் உண்டு’ என்று கூறுவர் இயல் நூலோர்! அது போல, உன் புகழொளியில் கரந்துலவும் இகழ்க் கூறுகளை - இகழ்க் கூறுகளில் நிழலை - சாயலைக் கூடத் தேடி ஆய்ந்து விலக்கிவிட விரைவாயாக!
ஏனெனில், புகழ் உன் குருதியானால், இகழ் அதில் வளரும் நோய் நுண்மமாக இருக்கக்கூடும்!
உன் வரலாற்றைத் திரும்பிப் பார்! அதன் படிப்பினைகளில் கருத்து உனக்கு!
திராவிட இனம் தாழ்ந்ததேன்? - உலகம் ஆண்ட இனம், இன்று உலகில் தனக்கு உரிய இடம் இன்றித் தத்தளிப்பதேன்?
உன்னிலும் பிந்திவந்த இனங்கள் - நேற்றுப் பிறந்த இனங்கள் முன்னேறி, நீ அவற்றை எட்டிப்பிடிக்க முடியாமல் அலமருவதேன்?
“திராவிடனிடம் ஒற்றுமை கிடையாது; அவன் ஒரு நெல்லிக்காய் மூட்டை” - இவ்வாறு கூறியுள்ளனர், தன்மான இயக்கக் காலத்திய உன் முன்னோராகிய அறிவு மரபினர்!
உன் தந்தை இதைப் பொய்யாக்கினார்!
உன் அண்ணன் இதைப் பொடிப் பொடியாக்கினான்!
உன் தானைத் தலைவன் இதை மறக்கடித்துள்ளான்!
அவர்கள் மரபில் வந்த நீ, அதற்கு மீண்டும் இடம் கொடாதே!
“திராவிடம் பழம் பெருமை பேசிக் காலம் கழிப்பான்! புதுப் பெருமைகள் அவனைச் சூழ்ந்து கவிந்து வந்து அவனை வென்று விடும்” - உன் பழங்கால எதிரிகள் பேசிய பேச்சு இது!
உன் திராவிட இயக்க மரபு இவ்வசையைத் தூக்கி எறிந்து விட்டது!
இதுமட்டுமோ? - சங்கப் பாடல்களில் ஒரு வரியாவது, ‘பழம் பெருமை பேசித் தனக்கு ஆறுதல் கூறிக்கொண்டது’ என்று எவராவது கூற முடியுமா?
பழம் பெருமை பேசி மழுப்புவது என்பது உன் மரபுப் பழியன்று - உன் தூய தனி மரபுக்குரிய பழியன்று - உன் மரபிடையே புல்லுருவியாய் நுழைந்து, தம் மரபை ஒட்டவிட்ட போலிகள், உன் இனமீது வளர்த்துவிடும்- வளர்ந்து வரும் பழி இது!
போலி நீக்க - புலியே, நீ எழு! சாவி போக்கி - நெல் மணியே - நீ பொங்கியெழுந்து பொலிவுறு!
உன் மெய்யான பழம் பெருமைகள் நினைக்க - பழம் பெருமைகள் விளக்கம் - பழம் பெருமைகள் வளர்க்க - நீ தயங்க வேண்டாம்!
ஆனால், எது உன் மெய்யான இனப் பழமை? எது உன் இனத்தின் மெய்ப்பெருமை என்பதையும், என் உன்மீது பகைப் புலங்கள் ஏவிவிடும் - நீ தூங்கிவிழும் நேரம் பார்த்து உன்மீது சுமத்தி விடும் போலிப் பழைமை, அயலார் பெருமையாகிய போலிப் பெருமை என்பதை பகுத்துணர்வாயாக - வேறுபடுத்தி உணர்வாயாக!
பகுத்து உணர்ந்து - நீ உணர்வதுடன் நின்றுவிடாமல், உன் தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் - அண்ணன் தம்பியர்க்கும் - அக்காள் தங்கையர்க்கும் - உற்றார் உறவினர்களுக்கும் - நண்பர் களுக்கும், உன் சூழலுக்கும் - அகல் உலகச் சூழலுக்கும் விளங்கும் படி எடுத்து உணர்த்துவாயாக!
நீ மறந்துவரும் - பிறர் மறக்கடிப்புக்கும், இருட்டடிப்புக்கும், நிழலடிப்புக்கும் ஆளாகி மறந்து கொணடு வரும் சில சாதனைகளை - இதோ - ஊன்றி நோக்குவாய்!
இந்தியாவில் முதன்முதல் ஆட்சிப்பீடம் ஏறி ஆண்ட இயக்கம் - கட்சி, உன் முந்தைய மரபுக் கட்சியாகிய நீதிக் கட்சியே!
சாதிக் கல்வி ஒழிந்து - எல்லாருக்கும் சமநீதிக் கல்வி அளித்து - சீரழிந்து வந்த கோயில்கள் அறநிலைய ஆட்சிக்குக் கொண்டு வந்து - ஜமீன்தாரி ஒழிப்புக்கும், இனாம்தாரி ஒழிப்புக்கும் அன்றே திட்டமிட்டு நடவடிக்கை தொடங்கி, தாழ்த்தப்பட்ட மக்கள் - பிற்பட்ட மக்கட்குத் தனி ஆதரவும், பாதுகாப்பும் அளித்து - இந்தியாவெங்குமே நல்லாட்சிக்கு முன்மாதிரியாயிருந்து வித்திட்ட கட்சி அது என்பதை நீ மறந்துவிடாதே - பிறரையும் மறக்கவிடாதே!
சென்னைப் பல்கலைக்கழகப் புலமைத் தேர்வில், தனித் தமிழ்ப் புலவர் தேர்வுக்குப் போராடி வெற்றிபெற்ற இயக்கம் எது? அதன்மூலம், இன்னும் இந்தியாவில் மற்ற எல்லா மொழிகளும் தாழ்ந்து நிற்க - உன் தமிழ்மொழி ஒன்று மட்டுமே ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மேட்டுக்குடியினர் மொழிகளுடன் ஒப்பாக நல்லிடம் பெற உழைத்த இயக்கம் எது?
இந்தியை யார் யாரெல்லாமோ ஆதரித்து நின்ற காலத்தில் - இந்தி எதிர்ப்பு இயக்கத்திலிருந்து யார் யாரெல்லாமோ ஒதுங்கி நின்ற நேரத்தில் - யார் யாரெல்லாமோ உழாமலும், நீர் பாய்ச்சா மலும், களையெடுக்காமலும், அறுவடைக்கு மட்டும் முந்திக் கொள்ளும் மதிபடைத்த மேதைகளாக இருந்து ஏளனம் செய்த காலத்தில் - மலை எதிர்க்க முனையும் சிற்றுளிகள் போலக் கிளர்ந்தெழுந்தவர்களின் இயக்கம் எது?
தமிழிலே எழுத்தே இல்லாத ஒரு சொல்லை - ‘சீறீ’ என்பதை - தமிழ் என்று சாதித்து - வாதித்துத் தமிழர் மீது - தமிழர் வாழ்வின் மீது யார் யாரோ புகுத்த முற்பட்ட - புகுத்திய காலத்தில், ‘திரு’ என்ற பழந்தமிழ்ச் சொல்லையே வற்புறுத்தி வழங்கும்படி போராடி வெற்றி கண்ட இயக்கம் - மரபு எது?
‘திரு’ என்பதைத் ‘திருதிரு’ என்றும், ‘திரு - டன்’ ‘திரு - டி’ என்றும் கேலி கிண்டல் செய்யத் தூண்டுதல் தந்த இயக்கப் போலி - இனப்போலி எது?
‘வானொலி’ என்ற அழகிய சொல்லை உருவாக்கித்தந்த இயக்கம் எது?
‘ஆகாசவாணி’ தான் வேண்டும் - என்று வற்புறுத்தும் - வற்புறுத்த முடியாதபோது மறைவிலாது முணுமுணுக்கும் இயக்கம் எது - இனம் எது?
‘மதறாஸ் நாடு - சென்னை நாடு’ என்பவைதான் பழம் பெயர்கள்; இலக்கியமறிந்த - வரலாறறிந்த பெயர்கள்; ‘தமிழ்நாடு’ என்ற புதுப்பெயர் எதற்கு? என்று தமிழியக்கியம் கரைத்துக் குடித்தவர்கள்போல - தமிழக வரலாறு அறிந்தவர்கள்போலக் கூறியவர்கள் இயக்கம் எது?
காந்தியடிகள் காலத் தேசியவாதிகள் வழங்கிய - தேசியக் கவிஞர் பாரதியார் வாயாரா வழங்கிப் பாடிய - ‘தமிழ்நாடு’ என்ற பெயரை ஒரே நொடியில் ஆட்சியிலும், சட்டத்திலும் ஏற்றுவித்த தென்னாட்டுக் காந்தியின் பிறப்புரிமை இயக்கமாகிய உண்மைத் தேசிய இயக்கம் எது?
இந்தப் பெருமைகள், உன் பெருமைகள் மட்டுமல்ல - உன் உரிமைகள்! உன் மரபுரிமைகள் - மரபு விளக்கங்கள்!
இவற்றை மறக்கடிக்க - உன்னுடன் ஒட்டி உறவாடுகின்ற வர்கள் - தமிழரே போன்ற - தமிழரே போல நடிக்கும் தமிழ்ப் போலிகள் முயல்வர் - முயலக்கூடும்; முயல்வது இயல்பு; ஆனால் நீ இவற்றை மறந்துவிட வேண்டாம் - தமிழகமும் மறக்கும்படி விட்டுவிட வேண்டாம்!
அதே நேரத்தில், ‘இந்த மாபெரு வெற்றிகள் - அரும்பெருஞ் சாதனைகளைக்கூட, உன்மாற்றாரின் ஆதிக்கக் கோட்டையின் மதிற்சுவரில் ஒரு கீறல் ஏற்படுத்தும் அளவான வெற்றிதான் கண்டுள்ளன- ஆதிக்கக் கோட்டை இன்னும் ஆதிக்கக் கோட்டையாகத்தான் இருக்கிறது’ என்பதை நீ மறந்துவிடாதே - உன் தம்பி தங்கையர், உன் உடன்பிறப்புக்கள் மறந்து விடும்படி விட்டு விடாதே!
உன் மரபின் புகழ்-உன் தந்தையும், அண்ணனும் கண்ட வெற்றிகள்- உன் தானைத் தலைவன் சாதனைகள்-இத்துணையும், இத்துணையும், உனக்குத் தெம்பூட்டத்தக்கவையே-உன் ஆற்றலில், இறுதி வெற்றியில் உனக்கு நம்பிக்கை தரத்தக்கவையே-இதில் உனக்கு ஐயம் வேண்டாம்!
ஆனால், ’நான் தூங்கிக் கொண்டே வெற்றியடைந்து விடுவேன் என்று நீ இருந்து விடுவாயானால், அந்தப் பெருவெற்றிகள் - பெருஞ் சாதனைகள் எல்லாமே உன் வாழ்வு காணாமலே, உன் வரலாறாகிவிடும்!
இது மட்டுமோ! உன் வரலாறுகூட, வருங்காலத்தில், இரணியன் வரலாறு - மாவலி வரலாறு அடைந்த நிலையைத்தான் அடைய வேண்டியதாகிவிடும்.
உன் அண்ணன் - இரணியன் நாடகமும், இராவணன் நாடகமும், சிவாஜி நாடகமும் வகுத்தமைத்து நடத்திக் காட்டினானே - அது எதற்காக என்பதை நீ எண்ண வேண்டும். அவற்றின் படிப்பினைகளை மறந்துவிடக் கூடாது! ஒரு போதும் - ஒரு சிறிதும் மறந்து விடக்கூடாது!
கேரளத்தில் ஆண்ட மன்னர்கள் - திருவாங்கூர் அரசர், கொச்சி அரசர், கோழிக்கோட்டுச் சாமூதிரிப்பாடுகள் - யாவருமே தம்மை, ‘மாவலிச் சக்கரவர்த்தியின் மரபினர்’ என்று பெருமை பேசிக்கொள்ளத் தயங்கியதில்லை!
கேரள மக்களும், மாவலியின் சாதி வேறுபாடற்ற - ஏழை, செல்வர் வேறுபாடற்ற - சமதர்ம ஆட்சியின் பெருமை பாராட்டிப் பாடி, அவர் பெயரால் ஓண விழாக் கொண்டாடி வந்துள்ளனர் - வருகின்றனர்; ஆனால், அவர்கள் வணங்குவது, மாவலிச் சக்கரவர்த்தியையன்று; அவர் ஆட்சியைக் கவிழ்த்து - அவர் குடும்பம் குலைந்து - அவரைக் கொன்றழித்த வாமனைத்தான் வணங்கி வழிபடுகின்றனர்!
இது, கேரளத்தின் புதிர் மட்டுமன்று; இதுவே உன் இனப் புதிர் என்பதை நீ ஆய்ந்தோய்ந்து - ஓர்ந்து காண்பாயாக!
இதுமட்டுமோ? இராமாயணத்தில் இராமனை எதிர்த்தவர் களையாவது, ‘அரக்கர்’ என்று கூறி அமைந்தார்கள்; ஆனால், இராமனுக்கு உதவிசெய்து உயிரையும் கொடுத்த அனுமன் போன்றவர்களுக்குக் கிடைத்த பட்டம், இதனினும் இழிவுடையது - அவர்கள், குரங்குகளாகச் சித்திரிக்கப்பட்டனர்; ஆனால் இன்றும் கன்னடநாட்டவர், அம்மரபில் பெருமைப் பட்டுக் கொண்டு, தம் நகரங்களில் ஒன்றைக் ‘குரங்கனூர்’ (ஊசயபேயnடிசந) என்று பாராட்டு கின்றனர்.
நம் அறிவுலகப் பெரியார் ஒருவர், அனுமனை, ‘திராவிட வீரன்’ என்று பாராட்டி - உன் இனத்துக்கு இந்த விசித்திரப் பெருமையை உரிமையாக்க முற்பட்டார் என்பதை நீ அறிந்திருக்கக் கூடும்!
தமிழகத்திலேயே பார் - நரகாசூரன் இறந்தொழிந்ததைக் கொண்டாட - அந்த நரகாசூரனே வரத்தின்படி தீபாவளி விழா ஏற்பட்டதாகத் தமிழரிடம், ‘தமிழரே போல்வார்’ கதை அளப்பது உண்டன்றோ?
(கழகக்குரல் - 15.9.1974)
உ. சிலப்பதிகாரத் தமிழகம்: உலக நாடக இலக்கியத்தின் தலையூற்று!
மனிதன் வளர்த்துக் கொண்ட - வளர்த்து வரும் பண்புகளில், மாபெரும் பண்பு, மொழி; குடும்பத்தையும் - சமுதாயத்தையும் ஆக்கி, தலைமுறை தலைமுறை கடந்து மனித இனத்தை வளர்த்து வரும் பண்பு அது! அதுவே வாழ்க்கையின் தாய் - கலைகளின் தாய் - இயல் நூல்களின் தாய்!
இத்தகைய தாய்ப் பண்பாகிய மொழியையே கருவியாகக் கொண்டு வளர்பவை முத்தமிழ்!
தமிழன் இவற்றைக் ‘கலைகள்’ என்று வழங்காமல், ‘மூன்று தமிழ்’ - அதாவது, ‘முத்தமிழ்’ என்று வழங்கிய அருமைப்பாடு நினைந்து நினைந்து மகிழ்ந்து - வியந்து பாராட்டுதற்குரியதாகும்.
மொழியை, ‘மூவா இளமைப் கன்னித்தாய்’ என்று - தமிழன் தவிர வேறு எந்த மொழியினரும் கொண்டதில்லை!
அதுபோல, மொழியை, ‘மும்மை மொழித்தாய் - முத்தமிழ்க் கன்னித்தாய்’ என்றும் தமிழன் தவிர வேறு எந்த மொழியினரும் கொண்டதில்லை!
தமிழனின் மொழி கடந்த-நாடு கடந்த-உலகளாவிய தேசியத்துடனும், தமிழனின் நாடு-மொழி-இனம் கடந்த-கால இடம் கடந்த- சமயம் கடந்த- கடவுள் தத்துவத்துடனும், இந்த இரு கருத்துக்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு!
உலகில், கலை கண்டு வளர்த்தவன் மனிதன்!
அழகுக் கலையாகிய கவின் கலை கண்டு வளர்த்தவன் நாகரிக மனிதன்!
கவின் கலைகளிலும் முதன்மை வாய்ந்த அரும்பெருங்கவின் கலைகளாக முத்தமிழ் கண்டு வளர்த்தவன் தமிழன்!!!
கலை - மனித இனத்தின் பொதுச் செல்வம்!
நாகரிகம் வளருந்தோறும் கலைகள் தொகையில் மட்டுமன்றித் தன்மையிலும் வளரத் தொடங்கின!
நாகரிக வளர்ச்சியிடையே, கலைகளில் - பொது நிலையான கலை, சிறப்பு நிலையான கலை அல்லது கவின் கலை என்ற பாகுபாடு ஏற்பட்டது.
தமிழின் நாகரிகம், இந்த இரு பிரிவுகளுக்கும் மேம்பட்ட மொழி சார்ந்த கவின் கலையான முத்தமிழ் என்ற தனிப்பெரும் பாகுபாட்டினைப் பல்லாயிர ஆண்டுகட்கு முன்னரே கண்டது - கண்டு வளர்த்து வந்தது.
கலை என்பது, மனித இன வாழ்க்கைக்கான கருவிப் பண்பு;
வாழ்க்கை வளங்களை - வாய்ப்பு நலங்களை மேம்படுத்தும் பண்பு!
உழவு, நெசவு, தேனீ வளர்ப்பு, பட்டுப்பூச்சி வளர்ப்பு ஆகியவை இத்தகு கலைகள்.
‘கவின் கலை’ என்பது வாழ்க்கைக் கருவியாகமட்டும் அமையாமல், வாழ்பவனாகிய மனிதனையே - மனித உள்ளத்தையே மேம்படுத்தும் பண்பாகவும் இயல்கின்றது; அது அழகுணர்வு மூலம் உடனடி இன்பமும் தந்து - அத்துடன் நின்றுவிடாமல், இயற்கையை வென்று ஆட்கொண்டு - இயற்கை கடந்த பொன்மயமானதொரு புதிய குறிக்கோள் வாழ்வை - இயற்கை கடந்த ஒளிமயமானதொரு குறிக்கோள் உலகைப் படைத்தாக்கும் அவாவையும், ஆற்றலையும், மனித உள்ளத்தில் தூண்டி வளர்த்துவிடுவது ஆகும்!
ஓவியம், சிற்பம், ஆடல்பாடல் முதலியவை இத்தகு கவின் கலைகள் ஆகும்.
தமிழினம் தனக்கென வகுத்துக்கொண்ட ‘முத்தமிழ்’ என்ற வகுப்பு- இயல், இசை, நாடகம் ஆகியவை; இவை மூன்றுமே, கவின் கலைகளும் கடந்த சிறப்புடைய இனக் கலைகள்; ஏனெனில், இம்மூன்றும் மட்டுமே மொழியுடன் பிறந்து வளர்ந்து - அம்மொழியையே வளர்த்து - அம்மொழி வளர்ச்சியுடன் தாமும் வளர்ந்து - மனித இனத்தையும் மேம்படுத்துபவை ஆகும்.
முத்தமிழில் முதல் தமிழ், ‘மற்ற இரண்டையும் தன்னகத்தே அடக்கிய தமிழ்’ என்ற சிறப்பு, நாடகத் தமிழுக்கு உரியதாகும்.
இதனாலேயே தமிழன், கடவுளை அன்னை வடிவாக - கன்னி அன்னை வடிவாகக் கன்னியாகுமரியிலும்; முத்தமிழ் அன்னை வடிவாக - முத்தமிழையும் மூன்று மார்பகங்களாகக் கொண்ட மீனாட்சியம்மை வடிவாக முத்தமிழ்ச் சங்கத் தலைமையிடமாம் மதுரையிலும்; நாடகத் தமிழ்த் தெய்வ வடிவமாகச் சிதம்பரம் என்னும் தில்லை மூதூரிலும் கொண்டான்!
கன்னி அன்னையாக - ஆடலரசியாக விளங்கிய தமிழன்னை, வழிபாடு கடைச் சங்க காலம் வரையில்கூட ஆடல் நங்கையாராலேயே நடத்தப்பட்டது என்பதும், அந்த வழிபாட்டின் ஒரு பகுதியாகவே முத்தமிழ்ப் புலவோரின் சங்கம், மதுரை மூதூரில் பண்டு நிறுவப்பட்டிருந்தது என்பதும், தமிழக வரலாறும், தமிழிலக்கியமும் காட்டும் செய்திகள் ஆகும்!
உலகம் முழுவதுமே இந்த அன்னை வழிபாடு, பண்டு பரவியிருந்தது என்பதும், தமிழகத்தின் இசை வேளாளர் போன்ற ஒரு கலை நங்கையர் வகுப்பே உலகெங்கணும் - எகிப்திலும், லிடியாவிலும், கிரீசிலும், சப்பானிலும் இறை வழிபாடு ஆற்றி வந்தனர் என்பதும் உலக வரலாறு தெளிவுறுத்தும் செய்திகள் ஆகும்.
பண்டை இந்தியா முழுவதும் மட்டுமன்று - பண்டை உலகெங்கணுமே ஆடற் கன்னித் தாயரசியான முத்தமிழன்னை வழிபாடுதான் பரவியிருந்தது என்பதும், முதல் முதல் கடவுள் வழிபாட்டுக்கான மந்திரங்களும் உலகெங்கணும் தமிழ் மந்திரங்களாகவே நிலவியிருந்தன என்பதும், உலகளாவிய வரலாற்றாய்வாளர் ஆராய்ச்சிக் கண் திறந்து காணவேண்டிய மெய்ம்மைகள் ஆகும்.
ஆடல் நங்கையர் வகுப்பினர்களே பண்டைத் தமிழகத்திலும் உலகம் முழுவதிலும் புரோகிதராக - தமிழந்தணர் அல்லது பார்ப்பாராக இருந்ததுடன், அவர்களே தமிழகத்தின் - உலகின் முதல் அரசராகவும் நிலவியிருந்தனர்!
அன்னையின் சேயாக - அழகுத் தெய்வமாக விளங்கிய முருகவேள் வழிபாட்டினர் என்ற முறையில், அவர்கள், ‘வேளாளர்’ என்று அழைக்கப் பட்டதுபோலவே, ‘இன ஆட்சியாளர்’ என்ற முறையில் அவர்கள் ‘வேளிர்’ என்றும் அழைக்கப்பட்டனர்!
தமிழ்த் தேசியத் தெய்வத்தை வழிபட்ட அவர்கள் ஆண்ட நாடும், தமிழ்நாடு - வேணாடு (வேள்நாடு) - பெண்கள் நாடு அல்லது கன்னி நாடு என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது!
‘கன்னி’ அல்லது ‘குமரி’ என்ற பெயருடைய மலையும், ஆறும், மீனும் உண்டு.
‘கன்னி’ அல்லது ‘குமரி’ என்ற சொல், இவ்வாறு, தமிழர் தேசியத் தெய்வம் - தேசிய மலை - தேசிய ஆறு - தேசியச் சின்னமாகிய கன்னி மீன் - கன்னித் தமிழ் மொழி - கன்னி நாடு ஆகிய அனைத்தின் பெயர்களாகவும் இன்றளவும் விளங்குவது காணலாம்.
அந்தக் கன்னியும், ‘மூவா இளமைக் கன்னி’ என்றும், ‘ஆடும் நாடகக் கன்னி’ என்றும், கருத்தில் மறவாது கொள்ளவேண்டிய செய்திகள் ஆகும்!
நாடகம் இவ்வாறு தமிழர் தெய்வமாக - தமிழர் நாடாக - தமிழர் மொழியாக - தமிழர் தேசியக் கலையாக விளங்குவது மட்டுமன்றி, தமிழர் உலகளாவ வளர்த்த ஓருலகத் தேசியக் கலையாகவும் திகழ்கின்றது!
முத்தமிழ்க் காப்பியம் என்றும், நாடகக் காப்பியம் என்றும் புகழப் பெற்றுவரும் சிலப்பதிகாரத்துக்கும் - தமிழியக்கத்தின் மலர்ச்சியாகிய திராவிடப் பேரியத்கத்துக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.
ஆம்! சிலப்பதிகாரம், தமிழரின் முத்தமிழ்த் தேசியக் காப்பியம் மட்டுமன்று; அது, தமிழரின் முத்தமிழ் நாடக அன்னையாகிய கடவுளை வழிபடுவதற்காகவே இயற்றப்பட்ட தமிழரின் முத்தமிழ் வேதமும் ஆகும்!
இன்று நாம் அதைப் படிக்கிறோம் - பண்டைத் தமிழர், அதைத் தமிழ் நாடகமாகவே பாடியாடி - நாடகமாக நடித்தனர் என்பதை நாம் கவனித்தல் வேண்டும்!
ஏனெனில், சேரன் செங்குட்டுவன் முன்னே - தமிழ் அந்தணர்களாகிய பறையூர்ச் சாக்கையரால், முத்தமிழன்னையின் புதுவடிவாக எழுந்த கற்புக் கடவுளாம் கண்ணகிக்கு எடுத்த வழிபாட்டுக்குரிய ‘சாக்கையர் கூத்து’ என்ற நாடகமாகவே இது இயற்றப்பட்டது என்பதை, இளங்கோ அடிகளே வஞ்சிக் காண்டத்தில் கூறியுள்ளார்.
இதுமட்டுமன்று; சிலப்பதிகாரம் - தமிழர் கண்டெடுத்த புதையலானால், சிலப்பதிகாரம் மூலமாக நாம் காணும் தமிழகம், உலக நாடக வரலாற்றாசிரியர்களுக்கு ஒரு பெறற்கரும் கலையுலகப் புரட்சிப் புதையலாகவே அமைந்துள்ளது; ஏனெனில், சிலப்பதிகாரத் தமிழகமே உலக நாடகக் கலையின் - உலக நாடக இலக்கியத்தின் தலையூற்றாக - பிறப்பக மையமாக விளங்குவது ஆகும்!
‘தமிழர் இயல்’ என்பதை மூன்று கூறாக்கி, நாடகமோ - இசையோ சாராத இலக்கியம் ஒரு கூறாக - அதற்குரிய இலக்கணம் இரண்டாவது கூறாக - நாம் இன்று ‘விஞ்ஞானம்’ என்று கூறும் நூல் அல்லது அறிவேடு மூன்றாவது கூறாகக் கொண்டனர்.
இசையையும், இதுபோல ஓசையளவாகிய இசை அதாவது மொழி சாரா இசைக் கலை (சுத்த சங்கீதம்), இசை இலக்கியம் (சங்கீத சாகித்தியம்), இசை இலக்கணம் (சங்கீத சாத்திரம்) என்ற முக்கூறுகளாகக் கண்டனர்.
இவற்றோடொப்ப, நாடகத்தையும், கதையும் மொழியும் சாராத தூய ஆடற்கலை (சுத்த திருத்தம்), கதையும் மொழியும் சார்ந்த கூத்து அதாவது நாடக இலக்கியம் (நாடக சாகித்தியம்), நாடக இலக்கணம் (நாடக சாத்திரம்) என்ற மூன்று கூறுகளாக விரித்தனர்!
சிலப்பதிகாரமும் அதற்குரிய அரும் பதவுரையாசிரியர் உரையும் - அடியார்க்கு நல்லார் உரையும் நமக்குக் கிடைத்திரா விட்டால், நமக்கு முத்தமிழ் பற்றிய இந்தச் செய்திகள் தெரிய வருவதற்கு இல்லாமலே போயிருக்கும்!
இதுமட்டுமன்று; தமிழகத்தில நெடுங்காலமாக மறக்கப் பட்டு - மிகப் பெரிய அளவிலே மறைக்கப்பட்டுப் போயுள்ள இந்தச் சிலப்பதிகார மரபு, அருகிலுள்ள கேரள நாட்டிலும் - சமஸ்கிருதத்திலும் - கிரேக்க நாட்டிலும் அடைந்துள்ள வளர்ச்சிகளும், பிற உலகப் பகுதிகளிலுள்ள வளர்ச்சி நிலைகளும் அறிஞர்களால் ஒப்புறழ்வு செய்யப்பட்டுக் காணப்படாத வரையில், சிலப்பதிகார காட்டும் இந்த முத்தமிழ்க்காலத் தமிழ் நாடகப் பண்பின் உலகளாவிய முக்கியத்துவம் நமக்கு விளக்கமுற வழி ஏற்பட்டிருக்காது!
உலகத் தமிழ் இயக்க அறிஞர்களும், திராவிடப் பேரியக்க அறிஞர்களும் இந்த ஒப்பீட்டு மூலம், உலக நாடகக் கலை இலக் கிய வரலாற்றுக்கும் - சிலப்பதிகாரத் தமிழ் நாடகக் கலை இயக்கி யத்துக்கும் உள்ள தொடர்பை அணிமை வருங்காலத்தில் ஆய்ந்து புலப்படுத்த வேண்டியவர்கள் ஆவர்!
உலகின் நாடகக் கலை வரலாற்றையும் - நாடக இலக்கிய வரலாற்றையும் நாம் மொத்தமாக நோக்கினால், நாம் அதில் இரண்டு அல்லது மூன்று மரபுகள் அல்லது கால் வழிகளைக் காணலாம்; இந்த மூன்றையும் உலகின் ஒரே மூலக் கொடி வழியாக இணைப்பது சிலப்பதிகார மரபே ஆகும்!
முதலாவது உலக நாடக மரபை, நாம், ‘இருமை மரபு’ என்று கூறலாம்.
ஏனென்றால், இந்த மரபில் - நாடகம் ஒரு முழுக் கலையாகவே கருதப்படாமல், இரண்டு கலைகளாக - ‘துன்பியல் அல்லது வீறு நாடகம்’ என்றும், ‘இன்பியல் அல்லது களி நாடகம்’ என்றும் இரு வேறு கலைகளாக வளர்ச்சியடைந்தன!
இது, கிரேக்க நாட்டில் கி. மு. 6-ம் நூற்றாண்டிலிருந்து
கி. மு. 3-ம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தில் உச்சநிலை அடைந்தது!
இதே மரபு, கி. பி. முதல் மூன்று நூற்றாண்டுகளில் ரோமர்களிடையே இலத்தீன் மொழியிலும், கி. பி. 14-ம் நூற்றாண்டிலிருந்து இத்தாலி, பிரெஞ்சு முதலிய ஐரோப்பிய மொழிகளிலும் பின்பற்றப்பட்டு வளர்ச்சியடைந்தது!
கிரேக்க நாட்டில் மட்டுமே இது மக்கள் மரபாய் நிலவி, மற்ற இடங்களிலெல்லாம் புலவர் மரபாக மட்டுமே பின்பற்றப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது உலக நாடக மரபை நாம், ‘முழுமை மரபு’ என்று அல்லது ‘மக்கள் மரபு’ என்று கூறலாம்; ஏனெனில், இதில், ‘துன்பியல் - இன்பியல்’ என்ற வேறுபாடு கருதப்படாமல், நாடகக் கலை ஒரு முழுமைக் கலையாகவே வளர்ச்சியுற்றது!
ஐரோப்பாவெங்கும், விழாக்கால மக்கட் காட்சிகளிலிருந்து பிறந்துவளர்ந்த இந்த மரபு, இங்கிலாந்தில் சேக்சுபிரியர் காலத்தில் (கி. பி. 16-ஆம் நூற்றாண்டில்) உச்சநிலை அடைந்தது!
இந்தியாவிலேயே இது கி. பி. 4-ம் நூற்றாண்டிலிருந்து 9-ம் நூற்றாண்டு வரையும் - அது கடந்தும் அரசவை நாடகங் களாகவே உச்சநிலைப் புகழ் வளர்ச்சியடைந்தது!
அத்துடன், சப்பானிலும் 12-ம் நூற்றாண்டிலிருந்து தொடங்கி கிட்டத்தட்ட இதே வகையான நாடக மரபு 18-ம் நூற்றாண்டில் உச்சநிலைப் புகழ் வளர்ச்சி எய்தியிருந்தது!
மூன்றாவது உலக நாடக மரபினை நாம், ‘தென் கிழக்காசிய மரபு’ அல்லது ‘தொல்பழங்கால மரபு’ என்று கூறலாம்.
இதில், தமிழர் நாடகத் தமிழின் தொடக்கநிலைக் கூறுகளை - இசையையும் நாட்டியத்தையும், அவிநயத்தையும், இசை நாடகம், ஊமைக் கூத்து, பொம்மையாட்டம் ஆகியவற்றின் கூறுகளையும், முகமூடியாட்டக் கூத்தினையும் மிகுதியாகக் காண்கிறோம்!
இந்தியாவில் காசுமீரம், திபெத், நேபாளம், அசாம், வங்காளம், கேரளம் ஆகிய பகுதிகளிலும் - இலங்கை, பர்மா, சீனம், சப்பான் உள்ளிட்ட தென்கிழக்காசியப் பகுதி எங்கணும் - நாம் பொதுவாகக் கோயிலமைப்பு, நடையுடை பழக்கங்கள், வாழ்க்கைப் பண்பு ஆகியவற்றில் காணும் ஒற்றுமை இந்த நாட்டிய - நாடக மரபுகளிலும் தெளிவாகக் காணலாம்.
தவிர, நாம் இம் மரபின் தொடக்கநிலைக் கூறுகளை அமெரிக்கச் செவ்விந்தியர் ஆடல் பாடல் மரபுகளிலும், இதன் உயர் கலை மலர்ச்சிகளை கி. பி. 14-ம் நூற்றாண்டுக்குரிய இத்தாலிய இசை நாடக - முகமூடி நாடக- ஊமைக் கூத்து - பொம்மைக் கூத்து மரபுகளிலும் காண்கிறோம்!
காலத்தாலும், இடத் தொலைவாலும் தொடர்பு படாதவை போலத் தோன்றும் இந்த உலக நாடகக் கலை இலக்கிய மரபுக் கால்வழிகள் மூன்றையும் ஒரே மூலக் கொடி வழியாக இணைத்துக் காட்டுவது, சிலப்பதிகாரக் கால முத்தமிழ் நாடக மரபே ஆகும்.
ஏனெனில், மூன்று கால்வழிகளிலும் காணப்படும் தனித்தனி மரபுக் கூறுகள்யாவும் சிலப்பதிகாரத் தமிழக மரபில் ஒருங்கிணைந்து காணப்படுகின்றன!
இவற்றுட் சில இங்கே கோடிட்டுக் காட்டப்படுகின்றன:-
முதலாவதாக - கிரேக்கர்களின் ‘துன்பியல் அல்லது வீறு நாடகம்’ ‘இன்பியல் அல்லது களி நாடகம்’ என்ற இருமை மரபு தமிழர் நாடக மரபிலும் நிலவிற்று என்பதை நாம் சிலப்பதிகார உரையாசிரியர் கூறியுள்ள செய்திகளாலும், அவர்கள் காட்டியுள்ள - இன்று நமக்குக் கிட்டாது இறந்துபட்ட பழைய நாடகத் தமிழ் இலக்கணங்களின் நூற்பாக்கள் அல்லது சூத்திரங்களாலும் அறியலாம்.
கிரேக்கர்களிடையே வீறு நாடகங்கள், சிவபெருமான் போன்ற - ‘தியோனிசஸ்’ என்ற கிரேக்க தெய்வத்தின் பெயரால் - உயர்ந்தோரிடையே கோவிலுக்குள்ளே நடத்தப்பட்டன!
தனி நாடகங்களோ - திருமால் போன்ற ‘அப்போலோ’ என்ற கிரேக்கத் தெய்வத்தின் பெயரால் - ஊர் மக்களிடையே பொது இடங்களிலே நடத்தப்பட்டன!
“தமிழில் கூத்து, ‘சாந்திக் கூத்து’ - ‘விநோதக்கூத்து’ என்றும், ‘வேத்தியல்’, ‘பொதுவியல்’ என்று பிரிக்கப்பட்டு இயன்றன” என்று சிலப்பதிகார உரைகள் கூறுகின்றன!
‘சாந்திக்கூத்து’, ‘வேத்தியல்’ என்ற பெயர்கள் வீறு நாடகப் பண்பைத் தெளிவாகக் காட்டுகின்றன!
‘சாந்தி’ என்பது - அமைதி அல்லது வீறு!
‘வேத்தியல்’ என்பது - அது, வேந்தன் அவைபோன்ற இடங் களில் நடத்தப்படுவது என்பதைக் காட்டும்.
இதுபோல, ‘வினோதக்கூத்து’, ‘பொதுவியல்’ என்ற பெயர் கள், களி நாடகப் பண்பைத் தெளிவாகக் காட்டுபவை ஆகும்!
‘விநோதம்’ என்பது, பொது மக்கள் விரும்பும் புதுமைச் சுவை - களியாட்டம்!
‘பொது’ என்ற சொல், ‘அது, பொது இடத்தில் நடத்தப் படுவது’ என்பதை உணர்த்தும்!
மலையாள நாட்டில், இந்த இருவகைக் கூத்துக்களே இன்று வரை, ‘சாக்கியார் கூத்து’, ‘ஓட்டந் துள்ளல்’ என்ற பெயர்களுடன் திருவனந்தபுரம் போன்ற இடங்களில் விழாக் காலங்களில் நடை பெறுகின்றன!
முன்னது - உயர்குடிப் பார்ப்பனரால் கோயில்களுக் குள்ளும் பின்னது - மக்கட் புரோகிதர்களால் (நம்பியார்களால்) பொது இடத்திலும் நடப்பவை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
‘சாக்கியார் கூத்து’ என்பதன் தமிழ் வடிவம், ‘சாக்கையர் கூத்து’ என்பதே!
சிலப்பதிகாரம் ஒரு சாக்கையர் கூத்தே ஆகும்.
அத்துடன், இன்று திருவனந்தபுரத்தில் அதை ஆடிக்காட்டும் பறவூர்ச் சாக்கையர் குடியினரே சிலப்பதிகார காலத்திலும் அதைச் சேரன் செங்குட்டுவன்முன் ஆடியதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது!
இரண்டாவதாக - கிரேக்க நாடகங்களில் பேரளவாகக் காணப்படும் பின்னணி இசைப் பாடல்கள், ஓர் இசைக் குழுவினால் (Chorus) பாடப்பட்டவை!
இதுபோன்ற பின்னணிப் பாடல்களை நாம், மலையாள நாட்டின் கதைகளில் காண்கிறோம்!
சிலப்பதிகாரத்தில் வரும் வரிப் பாடல்கள் இத்தகையவையே என்பதை எவரும் எளிதில் காணலாம்!
உண்மையில், சிலப்பதிகார வரிப் பாடல்கள், தமிழ்ப் புலவர்களின் கவனத்தை ஈர்ப்பதைக் காட்டிலும், இன்று உலக அறிஞர்களின் - உலகின் மக்கட் கலைப் பாடலார்வலர்களின் கவனத்தையே மிகுதியாக ஈர்த்து வருகின்றன!
மூன்றாவதாக - தமிழர், ‘தோல்’ (இதிகாசம்) என்ற தங்கள் பழங்கால மக்கள் மரபுக் காவியங்களையும், நாடகங்களையும், உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகவே இயற்றி வந்தனர் என்று அறிகிறோம்.
சிலப்பதிகாரம், அவ்வாறான ஓர் உரையிடையிட்ட பாட்டு டைச் செய்யுளே ஆகும்.
மலையாளத்திலும், சமஸ்கிருதத்திலும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளுக்குச் ‘சம்பூ’ என்பது பெயர்; சமஸ்கிருத நாடகங்கள் முழுவதும் இவ்வாறே இயற்றப்பட்டுள்ளன!
நான்காவதாக - உலகம் முழுவதுமே நாடக மேடைகள், முதலில் - தெருக்கூத்து மேடைகள் போல நாற்புறமும் திறந்தே இருந்தன!
மக்கள் நாற்புறமுமிருந்து பார்ப்பதற்கு வாய்ப்பாகவே பாரிய உருவம் தரும் முக மூடிகளும், உடற் சட்டங்களும், பெரும்படி யான அவிநயங்களும் இடம்பெற்றன!
கிரேக்க நாடகங்களிலும் - தென் கிழக்காசியாவெங்கணும் முக மூடிகள் பேரிடம் பெற்றதற்குக் காரணம், இதுவே!
கதகளி, சாக்கையர் கூத்து முதலிய மலையாள நாடகங் களிலும் நாம், இதே பண்பைக் காண்கிறோம்! இப்பண்பு, சிலப்பதி காரத் தமிழக மரபுடன் உலகை இணைப்பதாகும்!
நாடக மேடை ஒரு புறமாக ஒதுங்கிய பின்னரும், காட்சி மாற்றம் - களமாற்றம் குறிக்கும் சித்திர வண்ணத் திரைகள் நெடு நாள் ஏற்படவில்லை; இதனால், ஞாயிறு தோற்றம் - நிலாத் தோற்றம் ஆகியவற்றை, சேக்சுப்பியர் போன்ற கவிஞர்கள், வருணனைகளை மிகுதியாகக் கையாண்டே காட்ட வேண்டி இருந்தது.
இதுமட்டுமன்று; ஒரு காட்சி முடிந்தது என்பதைக் காட்ட, சேக்சுப்பியர் போன்ற கவிஞர்கள், மணியடித்துக் காட்டுவது போல் காட்சி இறுதியில் ஓர் இரட்டை எதுகையிட்டுக் காட்டினர்!
இதே பண்பினை நாம், சிலம்பு, மேகலைகளிலே ஒவ்வொரு காட்சி அல்லது காதையும் முடியும் இடங்களில் ‘என்’ என்ற தனி முடிப்பில் காண்கிறோம்!
கடைசியாக - ‘முத்தமிழிலே, நாடகத் தமிழே முதல் தமிழ்; அந்த நாடகத் தமிழும் முதலில் ஆடலாக - பின் ஆடல் பாடலாக - இறுதியிலேயே அவிநயக் கூத்தாக அல்லது நடன நாடகமாகவும், வளர்ந்தது’ என்பதைத் தமிழில், ‘நாடகம் - இயல்’ என்ற சொற்களே காட்டுகின்றன!
ஏனெனில், நாடகமும் - இசையும் ஏற்பட்ட பின்னரே, ‘நாடகமும் - இசையும் அல்லாத இலக்கியம்’ என்ற குறிப்புக் கொண்ட இயல்’ என்ற சொல் ஏற்படமுடியும்!
அதுபோலவே, ஆடல் - ஆட்டம் - ஆட்டன்; குதித்தல் - கூத்து - கூத்தன்; நடத்தல், நடம், நட்டம், நட்டுவன், நடிப்பு, நாடகம் - ஆகிய சொற்கள், நாடகத் தமிழ், மனித நாகரிக வளர்ச்சியில் கொண்ட வளர்ச்சியையும் - வளர்ச்சிப் படிகளையும் குறித்துக் காட்டுகின்றன!
தமிழர், சொல் அமைதியிலேயே காட்டியுள்ள இந்தப் பண்புகள், இக்கால உலக நாகரிக வரலாற்றறிஞர்கள் இவை பற்றிக் கூறும் கருத்துக்களுடன் முற்றிலும் ஒத்து விளங்குகின்றன!
நாடகத்தின் இந்த மலர்ச்சிப் படிகளில் சிலப்பதிகாரம் நமக்கு, ‘அவிநயக் கூத்து’ அல்லது ‘நாட்டிய நாடகம்’ என்ற படியைக் குறித்துக் காட்டுவது ஆகும்.
நாட்டுப்புற மக்களிடையே இலைமறை காயாய் இயன்று வந்த வில்லுப் பாட்டு, கரகம் போன்றவற்றைக் கலைவாணர் என். எஸ். கிருட்டிணன் காலமறியாச் செய்தது போல் - கேரளத்தின் பழமைகளிடையே மங்கிக் கிடந்த கதகளியை மலையாள நாட்டின் மாக்கவிஞன் வள்ளத்தோள் நாராயண மேனவன் உலகறியச் செய்தது போல் - தமிழகத்தின் பரத நாட்டிய அறிஞரும், கேரளத்தின் கதகளி - சாக்கையர் கூத்துக் கலைவலாரும் இணைந்து நின்று - சிலப்பதிகாரம் முழுவதையும் வரிக்கு வரி முத்திரைப் பிடித்து, மீண்டும் ஒரு மரபு வழாத பண்டைச் சாக்கையர் கூத்தாக அமைத்து - உலகின்முன் புதிதாக அரங்கேற்றுவரேயானால், சிலப்பதிகாரத்துக்கும் - தமிழகத்துக்கும் - கேரளத்துக்கும் மட்டு மன்றி, இந்தியப் பழமைக்கும் மனித இனப்பழமைக்குமே உலகின் ஒரு புதிய ஆராய்ச்சித் திருப்பம் - ஆராய்ச்சிப் புரட்சி உண்டு பண்ணியவர்கள் ஆவர்!
தமிழியக்கமும் - திராவிடப் பேரியக்கமும் பின்னின்று தூண்டி இயக்கி - உலகத் தமிழியக்கம், அணிமை வருங்காலத்தில் ஆற்றவேண்டிய உலகப் பணிகளில் இது ஒன்று ஆகும்.
(கழகக்குரல் - 13.10.1974)
ஊ. தமிழ் : ஒரு திருமண மொழி
- ஒரு தெய்வ மொழி!
திராவிட இயக்கம்: ஒரு திருமண இயக்கம்
- ஒரு தெய்வ இயக்கம்!
இந்திய நாட்டாண்மைக் கழக (காங்கிரசு)க் கட்சி, ‘ஒரு நாட்டியக்கம்- விடுதலை இயக்கம் - தேசிய இயக்கம்’ என்று கூறத்தக்க இயக்கம் ஆகும்.
திராவிட இயக்கம், அது போன்றே, அதனினும் சிறந்த ஒரு நாட்டியக்கம் - ஒரு விடுதலை இயக்கம் - ஒரு தேசிய இயக்கம் ஆகும்; ஏனெனில், அது, நாட்டு மக்களின் அரசியல் விடுதலையை மட்டுமே குறிக்கொண்ட இயக்கம் அன்று; அவர்கள் சமுதாய விடுதலை - பொருளாதார விடுதலை - தங்குதடையற்ற கலை, இலக்கிய, பண்பாட்டு வளர்ச்சி உரிமை - சமய வழிபாட்டு உரிமை ஆகியவற்றையும் சரிசம அளவிலேயே குறிக்கொண்ட இயக்கம் ஆகும்!
திராவிட இயக்கம், தொடக்க நிலையில், தமிழகத்தின் முழு விடுதலையை - திராவிட அதாவது தென்னகத்தின் கூட்டு விடுதலையைக் குறிக்கொண்டதாகத் தோற்றினாலும், உண்மையில் - சிறப்பாக அதன் இன்றைய நிலையில் - அது, இந்தியாவிலுள்ள நாற்பது கோடி மக்களிடையே உயர்குடி காரணமாகவோ - செல்வநிலை காரணமாகவோ- கல்வி திறமை காரணமாகவோ - கலை இலக்கிய வேடம் புனைந்த பிற்போக்கு ஆற்றல்களின் ஆதிக்கத்தை முன்னிட்டு அதன் பெயராலே மக்கள் உரிமையைத் தம் உரிமையாக்கிக் கொண்டு ஆதிக்கம் வகிக்கும் ஒரு சிலரின் காலடிக் கீழ் துவண்டு, தம் நிலை - தம் உரிமை அறியாது கிடக்கும் வாயில்லாப் பிள்ளைகளான மிக மிகப் பெரும்பான்மையான பொது மக்களின் விடுதலை நோக்கியே பரவிவரும் இயக்கம் ஆகும்!
எழுஞாயிறு (உதயசூரியன்) கீழ்க்கோடி வானில் எழுந்தாலும், முழு வானளாவிக் கிழக்கு மேற்காகச் சுற்றிச் சென்றும் - பருவந்தோறும் தெற்கு வடக்காகச் சுற்றிவந்தும் உலகளாவ ஒளி வீசி வளந்திகழ்விப்பது போல, திராவிடப் பேரியக்கமும் தமிழகத்தில் எழுந்தாலும், தென்னக மளாவித் ததும்பிப் பொங்கி வழிந்து, இந்திய மாநிலம் முழுவதும் ஒரு புத்தம் புதிதான- உலகு இதுவரை காணாத - ஒரு புதுப் புரட்சிகரமான தேசியமாக மலர்ந்து வருவதே ஆகும்!
இது மட்டுமன்று! உலகளாவ இன்று வளர்ந்துவரும் சமதரும பொதுவுடைமை இயக்கங்கள் போலவே, திராவிட இயக்கமும், சாதி - சமய- இன வேறுபாடற்ற - உயர்வு தாழ்வற்ற - வர்க்கபேதமில்லாத ஒரு புதிய மனித சமுதாயத்தை உருவாக்குவதனையே குறிக்கோளாகக் கொண்ட இயக்கம் ஆகும்!
இந்தியாவில் - உலகத்தில் நாம், பல்வேறுபட்ட இயக்கங்களைக் காண்கிறோம் - கண்டு வருகிறோம்! அவற்றுள் பலவும், நாட்டியக்கங்களாக ஒரு நாட்டு எல்லைக்குள் கட்டுப்பட்டவையாக அமைபவை; வேறு பல இயக்கங்கள், நாடு கடந்து பல நாடுகளிலும் உலகளாவப் பரவி வருவதைப் பார்க்கிறோம்!
இந்த இரண்டு வகைகளிலுமே, சமுதாய இயக்கங்களாக - சமுதாய, பொருளாதார இயக்கங்களாக - மொழி, கலை, இலக்கியப் பண்பாட்டு இயக்கங்களாக - மக்கள் இயக்கங்களாக - மக்கள் நிலை இயக்கங்களாக- அன்பு, அருள் இயக்கங்களாக - அதாவது, சமய இயக்கங்களாக - ஓருலக இயக்கங்களாக விளங்குபவை, மிக மிகச் சிலவே!
தமிழ் இயக்கமும், அதுபோலவே தமிழியக்க மறுமலர்ச்சியாகிய திராவிட இயக்கமும், முதலில் கூறப்பட்ட ‘நாட்டியக்கம் - உலக இயக்கம்’ என்னும் இருவகை இயக்கப் பண்புகளும் அளாவி, மூன்றாவது கூறப்பட்ட சிறப்புப் பண்புகள் யாவுமே வந்து தொகுதி, பொன்மலர் - மணமும் உயிர்ப்புமுடைய பொன்மலர் - வாடாது என்னும் புதுமை நலமும், மணமும் மாறாத உயிர் வளப்பமுடைய பொன்மலர் - என்று கூறத்தக்க தனிப் பெருஞ் சிறப்பு உடைய தாகும்.
சாதி வேறுபாட்டை எதிர்க்கும் இயக்கங்கள் மூடப்பழக்க வழக்கங்களை எதிர்க்கத் தயங்குவதும் - மூடப் பழக்க வழக்கங்களை எதிர்க்கும் இயக்கங்கள் சாதி வேறுபாட்டை எதிர்க்கத் தயங்குவதும் - இவ்விரு சார்பான இயக்கங்களுமே பொருளாதார வேறுபாட்டை எதிர்க்காமல் அல்லது எதிர்ப்பதாகப் பாசாங்கு செய்து வருவதும் - இதுபோலவே, இம்மூவகையினர்களும் நிற வேறுபாட்டை - இன ஆதிக்கத்தை அல்லது மொழி ஆதிக்கத்தை எதிர்க்காமல் மௌனம் சாதிப்பது அல்லது ஆதரிப்பதும், உலகெங்கணும் பொதுவாக - இந்தியாவில் சிறப்பாகக் காணத்தக்க செய்திகள் ஆகும்.
திராவிட இயக்கம் இவற்றினின்று வேறுபட்ட - தனிப்பட்ட தன்மையுடைய இயக்கம் ஆகும்.
இதுமட்டுமோ? திராவிட இயக்கம், முழுநிறை இடது சரியான - முழுநிறை முற்போக்கான - முழுநிறை புரட்சி இயக்கம் மட்டுமன்று; அதுவே ஓர் ஒப்புயர்வற்ற குருதியில்லாப் புரட்சி செய்யும் இயக்கமும் ஆகும்!
திராவிட இயக்கத்துக்கு - உலகின் மற்ற சமதரும, பொதுவுடைமை இயக்கங்களுக்கு இல்லாத ஒரு தனித் தன்மை உண்டு.
பொதுவாக உலகின் சமதரும - பொதுவுடைமை இயக்கங்க ளெல்லாம், அரைகுறை இடதுசாரி இயக்கங்களாக மட்டுமே இயங்குகின்றன; ஏனெனில், அவை, பொருளாதாரத்தில் மட்டுமே இடதுசாரிக் கொள்கையை அதாவது முற்போக்குக் கொள்கையை வலியுறுத்துகின்றன; மற்றப் பலப்பல அல்லது சில சில துறைகளில் அவை, பிற்போக்குக் கருத்துக்களைப் பின்னணியில் உள்ளீடாக மறைத்து வைத்துக் கொண்டோ - பிற்போக்குப் பண்புகளைத் தம்மை அறியாமலே ஏற்று அவற்றுடன் கலந்து இணைந்து கொண்டோ - அவற்றை மறைமுகமாக ஊக்கி வளர்த்துக் கொண்டோ போவதைக் காணலாம்.
ஆனால், திராவிட இயக்கம், இடதுசாரி இயக்கங் களிலெல்லாம் மிக முனைப்பான திசைகளிலும் - எல்லாக் கூறுகளிலுமே இடதுசாரியாக இயங்குகின்ற முழுநிறை இடதுசாரி இயக்கம் ஆகும்.
ஏனெனில், அது பொருளாதாரத்தில் மட்டுமன்றி - சமூகம், சமயம், மொழி, கலை, இலக்கியம், அறிவியல், பண்பாடு ஆகிய எல்லா வாழ்வுத் துறைகளிலுமே இடதுசாரியாக அமைந்து - பிற்போக்கு ஆற்றல்கள் அத்தனையையுமே தகர்த்தெறிந்து - முற்போக்கு அணிகள் எல்லாவற்றையுமே உருவாக்கியும், ஊக்கியும், இணைத்தும் வளர்த்தும் வரும் ஒரு மாபேரியக்கம் ஆகும்!
மனித இனப் பாசம்
Humanism
இது, அரசியல் இயக்கங்களில் - தேசிய இயக்கங்களில் - சமய இயக்கங்களில்கூட எளிதில் காணக் கிடைக்காத ஒரு பண்பு ஆகும்!
திராவிட இயக்கம் - தேசிய இயக்கம் மட்டுமன்று; முற்போக்கு இயக்கம் மட்டுமன்று; பகுத்தறிவு இயக்கம் மட்டுமன்று; அது ஒரு மனித இனப் பாச இயக்கம் ஆகும்.
அது, எல்லாவகை ஆதிக்கங்களையும் எதிர்ப்பதும் ஆகும்! மூட நம்பிக்கைகள் - மொழி, இன, வேறுபாடுகள் - மொழி, இன, சாதி ஆதிக்கங்கள் - ஆதிக்க, அடிமை மனப்பான்மைகள் - ஆகியயாவும், உண்மையில், சாம்பல் பூத்த தோற்றமுடைய இம்சைத் தீயின் தணல்களேயாகும். இவற்றை எதிர்க்கும் உலகின் ஒரே முழுநிறை அகிம்சை இயக்கம் திராவிடப் பேரியக்கமே!
“அகிம்சை முறையினாலேயே, அறிவைத் தீட்டுவதனாலேயே - ஆதிக்கவாதிகள், அடிமை மனப்பான்மை கொண்டோர் ஆகிய இரு சாராரின் அறிவையும் தூண்டி - அறிவு கொளுத்தி அறிவுறுத்து வதனாலேயே, ஆதிக்க அடிமை நிலைகளை - ஆண்டான் அடிமை முறைகளை - உயர்வு தாழ்வு மரபுகளைப் போக்க முடியும் - போக்க வேண்டும்” என்று கூறும் இயக்கம், திராவிட இயக்கம் ஒன்றே!
“பண்புக் கேடுகளை எதிர்த்துத் தாக்கு; ஆனால் ஆளைத் தாக்காதே! ஆளைப் புண்படுத்தித் திட்டாதே!” என்று அறிவுப் போதனை மட்டுமன்றி, அன்பில் ஊறிய அறிவுப் பாசப் போதனை செய்யும் இயக்கம் திராவிட இயக்கம்!
ஆரியத்தைச்சாடு -
ஆரியரை அன்று!
முதலாளித்துவத்தைத்தாக்கு -
முதலாளியை அன்று!
பகைவனை நேசி!
நீ போராடு! ஆனால், உன் போராட்ட நோக்கம் பகைவனை அழிப்பதாக இருக்கக் கூடாது! பகைவனை மனமாற்றுவதாக - நண்பனாக்குவதாக இருக்க வேண்டும்!
இவையே, அண்ணாயியத்தின் பண்புக் கூறுகள் ஆகும்.
இவை மட்டுமோ? திராவிட இயக்கமே உண்மையான பகுத்தறி வியக்கம் ஆகும்.
அது, பழமையைச் சாடும் இயக்கம்தான்; ஆனால், ‘பழமையில் தீமையை மட்டும் அகற்றி, நன்மையைப் பேண வேண்டும்’ என்று கூறும் பகுத்தறிவு அதற்கு உண்டு!
அது, புதுமையை ஊக்கும் இயக்கம்தான்; ஆனால், ‘புதுமை’ என்ற பெயரால் அது தீமைகளை வரவேற்க - கண்டதெல்லாம் அணைத்துக் கொள்ள முனைவதன்று! அது, அறிஞர் அறிவின் - கனவுத் திட்டங்களை ஆய்ந்தாராய்ந்து, அப்பகுத்தறிவின் அடிப்படையிலேயே புதுமைப் பயிர் வளம் ஆக்க விரும்புவது ஆகும்!
பழமையின் மலர்ச்சி -
புதுமை!
புதுமையின் வேர்தான் -
பழமை!
பகுத்தறிவின் மலர்ச்சியான மெய்யறிவில் பூத்த திராவிட இயக்கம், திராவிட முன்னேற்றக் கழக இயக்கம்! இம்மெய்ம் மைகள் கண்டு பேணும் இயக்கம் ஆகும்.
திராவிட இயக்கத்தின் தனித் தன்மைக்குரிய ஒரு கூறான தமிழ்த் திருமண இயக்கம், இம்மெய்ம்மைகளை எண்பித்துக் காட்டுவது ஆகும்.
அது, தமிழரின் அண்மைக் கால - இடையிருட்கால - அடிமைக் காலப் போலிப் பழமையினை நீக்கி, தொல்காப்பியர் கால - திருவள்ளுவர் கால - சங்க கால மெய்ப் பழமையின் முற்போக்குக் கூறுகளையே மறுமலர்ச்சியாகக் கொண்டு வருகிறது!
அதே சமயம், அது, அறிவுலகின் புதிய சீர்திருத்த நோக்கங்களையும்- முறைகளையும், அப்பழமை நலங்களுடன் இணைந்த புதுமை நலங்களாக வளர்த்து இணைக்கிறது!
உண்மையில், திராவிட இயக்கம் என்பது, ‘மனித இனம்’ என்னும் மாபெரும் மண மேடையிலே, தீமைகள் அகற்றப்பட்ட பழமை அதாவது அழகுப் பழமை என்ற மணப் பெண்ணுக்கும் - அறிவின் மீது, அன்பு - அருள் அதாவது மனித இனப் பாசம் என்னும் சிற்றுளியால் செதுக்கப்பட்ட புதுமை அதாவது அறி வார்ந்த ஆற்றற் புதுமை என்ற மணமகனுக்கும் இடையே நிகழ்த்தப் பெறும் ஒரு மாபெருந் திருமண இயக்கமே ஆகும்!
பழமை - கலை!
புதுமை - அறிவு!
ஆனால்,
தகாப் பழமை கலையன்று -
கொலை!
தகாப் புதுமை அறிவன்று -
அழிவு!
மேலும்,
பழமை - பெண்!
புதுமை - ஆண்!
ஆனால்,
தகாப் பழமை பெண் அன்று - பேய்!
தகாப் புதுமை - ஆண் அன்று;
ஆடரவம், நச்சுப் பாம்பு!
இந்த அழகு - அறிவுத் தத்துவத்தை, ஆண்மை - பெண்மைத் தத்துவத்தைக் கண்டவர் தமிழர் - தமிழரின் அறிவு மூதாதையான திருவள்ளுவர்!
“ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோர் எனக்கேட்ட தாய்!”
தமிழில், பெண்மையின் சிறப்பு கற்புடைமை - தாய்மை! இதில் தந்தைக்குப் பங்கு உண்டு; ஆனால், எத்தகைய தனிச் சிறப்பும் கிடையாது!
ஏனெனில், தமிழில் ஆணின் சிறப்பு - ஆண்மை அல்லது ஆள்வினையுடைமை; அதாவது மகன்மை; இதில், மகன்மைக்குப் பங்கு உண்டு; ஆனால், எத்தகைய தனிச் சிறப்பும் கிடையாது!
“வினையே ஆடவர்க்கு உயிரே!
மனையுறை - மகளிர்க்கு ஆடவர் உயிரே!”
சங்க இலக்கியம் சுட்டிக்காட்டும் இந்த ஆண்மை -
பெண்மைச் சிறப்பு வேறுபாடுகளைத் திருவள்ளுவரும் சுட்டிக் காட்டுவது காணலாம்; ஏனெனில், இது வள்ளுவத் தத்துவம் மட்டுமன்று - தமிழர் பண்பு அல்லது தமிழினப் பண்பும் ஆகும்!
“பெண்ணுக்கு ஆண் உயிர்; ஆணுக்குப் பெண் உயிர்” என்று கூறினால், இது, அழகு உரையாகத்தான் இருக்கும்; பல ஆழ்திற மற்ற முற்போக்காளர்களுக்கு ஏற்புடையதாகக்கூட அமையக் கூடும்; ஆனால் இது, தூய தமிழ்ப் பண்பன்று; ஆழ்ந்த வள்ளுவத் தத்துவமன்று; ஏனெனில், இதில் சமுதாயம் - சமுதாயத் தலைமுறை கடந்த சமுதாய மரபு அதாவது இனம் ஆகியவை இடம் பெற வில்லை!
பெண்ணுக்கு ஆண் உயிர், ஆணுக்குச் சமுதாய இனச் சேவையாகிய முயற்சி உயிர்!
ஆணைப் பேணுவதன் மூலம், பெண் இச்சமுதாய இனவளத்தையே ஆக்குகிறாள்!
திருவள்ளுவர், தந்தையையும் - மகளையும் விலக்கி, தாயையும் - மகளையும் மட்டுமே சமுதாய இனத் தொண்டின் மரபுக் கொடி வழிகளாகக் குறித்தது இதனாலேயே ஆகும்!
பழமையின் சிறப்பெல்லாம் அழகாக - அன்பாகத் திரண்ட பண்பின் சின்னம், கலை; பெண்மை வடிவில் தாய்மையும் அதுவே! இதுபோல, புதுமை வளம் பெறுதற்கான அறிவு ஆற்றல் - முயற்சித் திறம் எல்லாம், திரண்ட பண்பின் சின்னம் நூல்; அதாவது அறிவியலும் தொழிலும்; அதுவே, ஆள்வினை அல்லது முயற்சி; ஆண்மை வடிவில் மகன்மையும் அதுவே!
பெண் - இனப் பழமை பேணுகிறாள்!
ஆண் - சமுதாயப் புதுமை, இனப் புது வளம் ஆக்குகிறான்!
இதனால்,
தாய்மையே நிறை பெண்மை!
ஆனால்,
நிறை ஆண்மை - மகன்மையே!
நம் கால அறிவுலக மேதை பெர்னாடு ஷா, புதிது கண்ட தமிழரின் வள்ளுவப் பழமைத் தத்துவம் இது!
‘தாய்மை’ என்ற சொல்லுக்கு மூலமாம் பண்பு அல்லது முழு முதல் என்ற பொருள் எல்லா மொழிகளிலுமே உண்டு; ஆனால், ‘மகன்மை’ என்ற சொல்லுக்குத் தமிழில் மட்டுமே ‘புதல்வன் நிலை’ என்ற பொருளும், ‘உரிமை’ என்ற பொருளும், ‘பெருமை’ என்ற பொருளும் ஒருங்கே அமைந்துள்ளது காணத் தக்கது ஆகும்.
தமிழன் திருமணத்தை இத்தகைய அறிவாழமுள்ள - பொருள் திட்பம் செறிந்த ஆண்மை - பெண்மைத் தத்துவத்தின் அடிப்படையில் தான் அமைந்தான் என்பதை நோக்குக, நோக்குக!
திராவிட இயக்கமே ஒரு திருமண இயக்கம்! தமிழ் மொழியே ஒரு திருமண மொழி! ‘பழமை நலம்’ என்ற நங்கையுடன் ‘புதுமை வளம்’ என்ற நம்பியை இணைத்து வைக்கும் ஒரு மண வாழ்வே திராவிட இயக்கம்! இதையும் நோக்குமின், நோக்குமின்!
இவை மட்டுமோ? காதலை வெறும் இன்பமாக - போரை வெறும் அழிவாக - கடவுளை வாழ்க்கை வெறுத்த துறவிகளுக்குரிய ஒரு வறட்டுப் பண்பாகக் கண்டனர் - மற்றவர்கள் - ஏனைய இனத்தவர்கள்!
ஆனால் தமிழனோ, காதலை ஒரு போராக - போரை ஒரு காதலாக- இரண்டையும் வாழ்முதலாகிய - வாழ்க்கையின் முதல்வனாகிய கடவுள் நோக்கிய பண்புகளாகக் கொண்டான்!
காதலை ‘அகத்துறை’ என்று கொண்டனர் தமிழர்; ஆனால் அதே சமயம், அதை அவர்கள், இரு திசைப் பண்பாக - சமத்துவப் பண்பாகக் கண்டனர்!
ஒரு திசைக் காதலை அவர்கள், ‘கைக்கிளை’ என்றும், சமத்துவமில்லாக் காதலை, ‘பெருந்திணை’ என்றும், தகாக்காதல் அல்லது பொருந்தாக் காதல்களாக ஒதுக்கினர்!
இருதிசைச் சமத்துவப் பண்புடைய காதலையே, தொல்காப்பியர், ‘அகத்தின் அகம் - அகன் ஐந்திணை அல்லது அன்பின் ஐந்திணை’ என்று சிறப்பித்தார்!
காதலில் ஊடல் என்பது பெண்ணுரிமை; பெண்களுக்கு மட்டுமே உரிய சிறப்புரிமை!
தமிழ்க் காதல், இவ்வாறு ஊடலும் கூடலும் விரவிய ஓர் அன்புப் போர்ப் பண்பாக - வெற்றி பெற்றவர் இன்பம் வழங்க - தோல்வியுற்றவரே அதைப் பெறுவதாக அமையும் ஓர் இன்பப் போராட்டப் பண்பாக அமைவது ஆகும்!
தமிழ்க் காதலின் இதே இருதிசைச் சமத்துவப் பண்பு, தமிழ்ப் போருக்கும் - அதாவது, தமிழர் கண்ட புறத்துறையாகிய அறப்போர் முறைக்கும் உரியதாகும்!
தமிழர் அகத் துறையின் ஏழு திணைகளுக்கு இணையாகவே புறத்துறையிலும் ஏழு திணைகள் வகுத்திருந்தனர்; இங்கும், தொல்காப்பியர் இருதிசைச் சமத்துவப் பண்பை வலியுறுத் தியதன் மூலம், ‘தமிழ்ப் போர்’ என்பது, ஒரு சரிசமத்துவ அன்பு வீர விளையாட்டுப் போட்டிப் பண்பே என்பதை நாட்டினார்!
ஏனெனில், அகத் துறையைப் போலவே புறத் துறையிலும் ஒரு திசைப்பட்ட போரும் சமத்துவமற்ற போரும் புறத்திணைகளாக ஒதுக்கப்பட்டு - இரு திசை ஒப்பான் வீரப் போட்டிப் போர் முறைகள் மட்டுமே புறத்தின் அகத்திணைகளாக - புறத்திலும் நடுவண் ஐந்திணைகளாகச் சிறப்பிக்கப்பட்டன!
தொல்காப்பியரின் அகப் புறப்பாகுபாடு, காதலையும் - போரையும் மட்டுமே உள்ளடக்கியதன்று! கல்வியும், தொழிலும், கலையும், கடவுள் வழிபாடு அல்லது சமயமும், இவைபோன்ற எல்லா வாழ்க்கைத் துறைகளுமே, அவரது அகப் புறப் பாகுபாட்டில் இடம் பெறுவனவே!
வாழ்க்கையையே உரிப்பொருள் என்றும், தெய்வமும் இசைக் கருவிகளும் உணவும் உள்ளிட்ட வாழ்க்கைக் கருவிகள் எல்லாவற்றையும் ‘கருப் பொருள்’ என்றும்; வாழ்க்கை நாடகத்துக்குரிய நிலைக்கள அரங்கங்களாகிய ‘நிலம், காலம்’ ஆகிய இரண்டையுமே ‘முதற் பொருள்’ என்றும் அவர் வகுத்த பொருட் பாகுபாடே இதனைத் தெளிவுறக் காட்டுவதாகும்.
காதலில், காதலன் - காதல் உறவின்; போரில், பொருநர் உறவில் எப்படியோ - அப்படியே, கல்வியில், ஆசான் - மாணவன் உறவில்; தொழிலில், வழங்குவோன் - கொள்வோன் தொடர்பில், கலையில் படைப்போன - துய்ப்போன் இணைவில்; சமய வாழ்வில், வழிகாட்டு வோனாகிய கடவுள் - வழிபடுவோனாகிய மனிதன் உறவில், இரு திசைச் சரிநலமொத்த சமத்துவப் பண்பையே தொல்காப்பியர் ஆண் -பெண் இன்பத்துக்குரிய இடமும், கடவுள் குறிக்கோட் பண்பாக - இலக்கியப் பண்பாக - அவர் வாய் மொழியிலேயே கூறுவதானால் - புலன் நெறி வழக்கமாகக் கொண்டார்!
தமிழ்க் காதற் பண்பின் ஆண் - பெண் சரிநலச் சமத்துவ இணைவு போன்றதே தமிழர் சமயப் பண்பில் உயிர் - இறை ஒப்பிணைவு அதாவது, மனிதன் - கடவுள் சரிநலச் சமத்துவ இணைவுப் பண்பு!
இத்தமிழ்ப் பண்பே இன்று உலகெங்கும் ‘நாயகி - நாயக பாவம்’ என்ற பக்தி தத்துவமாகப் பாராட்டப்படுகிறது.
இந்தப் பக்தி தத்துவம் உலகளாவியதானாலும், இதன் விதைப் பண்பை நாம் தமிழ் மொழியிலும், இதன் வேர்ப்பண்பைத் தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கண ஏடுகளிலும், இதன் படர் கொடி வளத்தைத் தமிழ்ப் பக்தி இலக்கியம் - இசுலாமிய மறை ஞான (சூபி) இலக்கியம் மேலைக் கிறித்தவ உலகின் மறைஞான (Mystic) இலக்கியம் ஆகியவற்றிலுமே காண்டல் தகும்!
‘சமயம்’ என்ற தமிழ்ச் சொல் - சமைதல் (பருவமடைதல்), சமைத்தல் (உணவு ஆக்குதல்) என்ற சொற்களுடன் தொடர்பு டையதாய், கடவுள் வழிபாட்டு நிலையில்; மனித இனநாகரிகம் அடைந்துள்ள மலர்ச்சிப்படி அல்லது பக்குவ நிலையைக் குறிப்பது ஆகும்.
காதல் அன்பைச் சிற்றின்பம் - கடவுளன்பைப் பேரின்பம் - என்று கூறும் வழக்கு; இன்பத்துக்குரிய நிலையும் ஒருங்கே வீடு என வழங்கும் வழக்கு; தலைவன் - தலைவி அல்லது இறைவன் - இறைவி என வீட்டரசன்- வீட்டரசியரையும், நாட்டரசன் - நாட்டரசியோடும், முழு முதல் இறைவனாகிய கடவுளோடும் இணைத்து ஒரே சொற்களால் கட்டும் வழக்கு ஆகியவை, தமிழ் மொழியிலேயே - தமிழ்ச் சொற்களிலேயே அமைந்த பக்தி தத்துவ, நாயகி - நாயக பாவப் பண்பாட்டின் விதைப் பண்புகள் ஆகும்.
வெறியாட்டு - பலி அல்லது யாகம் - தெய்வங்களிடம் பேரம் செய்து நலங்கள் வேண்டும் வணிகப் பண்பு - வேண்டுகோள் பண்பு (பிரார்த்தனை) - வெறுப்பு - வேதாந்தம் (நிலையாமை அல்லது காஞ்சித் திணை) ஆகியவற்றையெல்லாம் புறப் புறத்திணை ஆக்கி, இறை - உயிர் அன்பிணைவையே அன்பின் ஐந்திணையுள் அடக்கிக் காட்டிய தொல்காப்பிய இலக்கணமே உலகளாவிய தத்துவ, நாயகி - நாயக பாவப் பண்பின் வேர்த்திறம் ஆகும்; அதுவே பரிபாடல் - திருவாசக - திருக்கோவையார் - தேவார நாலாயிரப் பிரபந்தங்கள் ஆகிய தமிழ்ப் பக்தி ஏடுகள்; மறைஞானியராகிய உமர்கய்யாம், ஜாமி ஆகிய பாரசிகக் கவிஞர்களின் இறையுணர்வேடுகள்; தாவீது, சாலமோன் ஆகிய அரச பக்தர்களின் பக்திப் பாசுரங்கள் - ஆகியவற்றின் மறைஞான தத்துவங்களைச் சரிவர உணர்வதற்குரிய மறை திறவும் ஆகும்.
“தமிழ் - திருமண மொழி மட்டுமன்று; தெய்விக மொழியும் ஆகும்” என்பதனை இவ்விளக்கம் காட்டுகிறது!
தமிழில் - தமிழியக்கத்தில் மலர்ந்த திராவிட இயக்கமும் திருமண இயக்கம் மட்டுமன்று - ஒரு தெய்விக இயக்கமும் ஆகும்.
“கடவுளே நாயன்மார்களாக - ஆழ்வார்களாக வந்து தமிழ கத்தில் வாழ்ந்து, தமிழகத்துக்கும் - உலகுக்கும் பெரு வாழ்வு அளித்தார்கள்” என்று இன்று சைவர்களும், வைணவர்களும் கூறுகின்றனர்! ஆம்! ‘தமிழ்த் தெய்வமே தந்தை பெரியாராகவும், அறிஞர் அண்ணாவாகவும் கலைஞர் கருணாநிதியாகவும் தமிழகத்தில் வந்து வாழ்ந்து, தமிழகமும் - தமிழ்ப் பண்பும் - தமிழ்ப் புகழும் உலகளாவ வாழ்வித்தனர்’ என்று வருங்காலத் தமிழக வரலாறுகள் - காவியங்கள் பாடினால், அது வியப்புக்குரியது ஆகாது!
ஆம்! பழைய தமிழ்ப் புராணங்கள் ஆரிய - அதாவது, இடை இருட்கால மடமைச் சேறு பூசப்பட்டதுபோல, இனிவரும் தமிழக வரலாறுகளும், இலக்கியங்களும், போலிச் சமயப் பூசலுக்கு ஆளாகாமல், தமிழர் கலைப் படைப்புக்களாகவே திகழ வேண்டும் - திகழும்படி தமிழ்க் கடவுளாகிய முத்தமிழன்னை அருள் பாலிக்குமாக!
(கழகக்குரல் - 27.10.1974)
எ. பாரதப் பெருநிலம் :முப்பேரியக்கம் கண்ட மூவா முழு முதல் நிலம்!
பாரத நாடு -
பழம் பெரும் நாடு!
பாரினில் இதற்கிலை
எங்குமோர் ஈடு!
தேசியக் கவிஞர் - தமிழ்த்தேசியக் கவிஞர் பாடிய இந்தப் பாட்டு, இப்போது உண்மையிலேயே பழம் பாட்டாகப் போய் விட்டது!
பாட்டின் பொருள் உணர்ந்து பாடினால்தானே, பழம் பாட்டு பதங்கெட்ட பழம் பாட்டாய் - பழங் கஞ்சியாய்ப் போய் விடாமல், புத்தூக்கம் தந்துகொண்டிருக்கும் பெரும்பாட்டாய் -பழம்பெரும் பாட்டாய் - தேசிய வளமூக்கும் தேசியப் பாட்டாய் இயலமுடியும்!
இப்பாட்டின் பின்னணியிலுள்ள பழம் பெருமைக்குரிய பொருள், பாரா நாட்டின் பழம் பெரும் வரலாற்றில் கரந்து - கலந்துள்ள முப்பேரியக்க வரலாறே ஆகும்!
இவ்வரலாறு கண்டுணராத பாரத மக்களுக்கு, பாரதப் பெருமை, வெறும் வீம்புப் பெருமையாக மட்டுமே அமைய முடியும்!
முப்பேரியக்கம் கண்ட பாரதத்தின் இப்பெரும் வரலாற்றைத் தம் அறிவுத் தாய் நிலமாகக் கொண்ட தமிழர் - திராவிட இயக்கத்தார், அதனைப் பாரதமெங்கும் - பாரதத்தின் புதுப் பருவ வளம் காண உண்மையிலேயே துடிக்கும் ஆர்வமுடைய பாரத மக்களெல் லாரும் உணரும்படி பரப்பிடல் வேண்டும்! இது அவர்கள் நீங்காக் கடன் ஆகும்!
வாழ்வில் என்றோ ஒரு நாள் - ஒரு பொழுது உணர்ச்சி வசப்பட்டு, ஒரு பாட்டுப் பாடி விட்டவனும் பாவலன்தான்!
காவியம் - காவியங்கள் பல பாடிப் புகழ் ஈட்டியவனும் பாவலன் தான்!
வாழ்வே காவியமாக - காவியங்கள் பலவற்றை ஊக்கும் காவியமாக வாழும் பாவலவனும் ஒரு பாவலன்தான்!
‘இயக்கம்’ என்ற பெயரையும் நாம் இவ்வாறு முப்படிகளின் வேறுபாடு மறந்து ஒரு நிலையுற உணர்ந்து வருகிறோம்.
பாரதப் பேரியக்கங்களைப் பாரத மக்களே காணாமல் மறந்துவிட நேர்ந்ததற்குரிய சூழ்நிலைக் காரணம் இதுவே!
உலகின் பல இயக்கங்கள், நாள் - மாத - ஆண்டுக்கணக்கில் நிலவும் இயக்கங்களாகவும், ஊர் - வட்டம் - மாவட்டம் எனப் பரவி மறதியுட்பட்டுவிடும் இயல்புடையனவாகவும் இயன்றுள்ளன!
உலகில் இவ்வாறன்றி, நூற்றாண்டு கடந்து நூற்றாண்டாக - நாடு கடந்து நாடாக - உலகெலாம் பரவி, நின்று நிலவிப் புது வாழ்வும் - புது வளமும் ஊக்கிவரும் பேரியக்கங்களும் உண்டு.
இவை, வரலாறு கண்ட இயக்கங்கள்!
பிரெஞ்சுப் புரட்சி - அமெரிக்க விடுதலைப் புரட்சி - இரஷ்ய நாட்டின் சோவியத் புரட்சி - இவற்றுக்கெல்லாம் மூலமாய் இயன்றிருந்த ஐரோப்பியச் சீர்த்திருத்தப் புரட்சி (Reformation) அதனை உள்நின்று ஊக்கிய உயிர்த் துடிப்புப் புரட்சியாகிய ஐரோப்பிய மறுமலர்ச்சி இயக்கம் (Renaissanec) ஆகியவை இத்தகைய வரலாறு கண்ட உலகப் புரட்சி இயக்கங்கள் ஆகும்!
இந்த இரண்டாவது வகை இயக்கங்களும் கடுகெனச் சிறுத்துவிடும் அளவு பாரித்தகன்று, பாரளாவ - காலமளாவ வளர்ந்து வளங்கொண்ட பொங்குமாவள இயக்கங்களே பாரதப் பெரு நாடு கண்ட மும்மைப் பெரும் பேரியக்கங்கள்!
இம்மும்மைப் பெரும் பேரியக்கங்கள் ஒவ்வொன்றுமே ஆண்டுக் கணக்கில் அல்ல - நூற்றாண்டுக் கணக்கில் அல்ல - ஆயிரம் மூவாயிரக் கணக்கான ஆண்டுகள் நிலவிய இயக்கங்கள் ஆகும்.
அவை, ஒரு நாடல்ல - ஒரு மொழியல்ல - ஒரு சமயமல்ல; நாடு கடந்து நாடாக-மொழி கடந்து மொழியாக-சமயம் கடந்து சமயமாக-மனித இனப்பரப்பே பரப்பாக - மனித இன வரலாறே தன் வாழ்வின் வரலாறாக - பாரத வாழ்வே அலையாக - பாரத வாழ்வே அலை தவழ் களமாகக் கொண்டு இயங்கியவை - இயங்குபவை - இன்னும் இயங்க இருப்பவை ஆகும்!
புயலின் கருவில் வளர்ந்த தென்றல்கள் என்றோ அல்லது தென்றலின் கருவில் வளர்ந்த புயல்கள் என்றோ தான் நாம் இவற்றை வர்ணித்தல் வேண்டும்; ஏனெனில், இவை, புயலாக எழுந்தடித்து வீசிய இயக்கங்கள்; ஆனால் அவை கண்டுள்ள பயன், புயலின் அழிவல்ல - புயலின் ஆற்றலே கொண்ட தென்றலின் ஆக்க வளங்களே ஆகும்.
உலக வரலாற்று ஆய்வாளர்கள் - கால முறைப்படி - வரலாற்றின் ஊழிகளை நான்காக வகுத்துக் கண்டுள்ளனர்.
முதலாவது காலம் - வரலாற்றுக்கு முற்பட்ட காலம்; இது கி.மு. 1500-க்கு முற்பட்ட ஊழி என்னலாம்; எழுத்து மூல ஆதாரங்களில்லாமல், பழம் பொருளாய்வு - புதை பொருளாய்வு மூலமே வரலாறு கட்டமைக்கப்படும் காலம் இது!
எகிப்தியர் - சுமேரியர் - ஏலமியர் - சிந்துவெளி இனம் போன்ற மாண்ட நாகரிகங்களின் காலம் இது!
இரண்டாவது காலம் - பண்டைக் காலம்; இது எழுத்தாதாரமுடைய மாண்ட நாகரிகங்களின் ஊழியாகும். கிரேக்கரும் - உரோமரும் உலகாண்ட காலம் இது! கி. மு. 1500 தொடங்கி - கி. பி. 500 வரை என்று இதனை வகுக்கலாம்.
மூன்றாவது காலம் இடையிருட்காலம்; விஞ்ஞானங்களும், இலக்கியமும், கலைகளும் மங்கி மறுகி, மதமூட நம்பிக்கைகள் உலகெங்கும் பரவிய காலம் ஆகும்; கி.பி. 500 தொடங்கி 1500 வரை இந்நிலை நிலவியதென்று வரலாற்று ஆசிரியர்கள் கருது கின்றனர்.
இந்தியாவிலே திராவிடப் பேரியக்கத்தின் விளைவாக ஒரு புதிய இந்தியா எழும்வரை, நாம் இன்னும் இடையிருட் காலத்தைக் கடந்து விட்டதாகக் கூறமுடியாது!
நான்காவது காலமே கி. பி. 1500க்கு இப்பாற்பட்ட தற்காலம் அல்லது நம் காலம் ஆகும்.
நாம் மேலே குறிப்பிட்ட இரண்டாவது வகை உலக இயக்கங்கள் - புரட்சிப் பேரியக்கங்கள் - மலர்ச்சிப் பேரியக்கங்கள், உலகெலாம் பரவி வந்த- பரவி வருகிற ஊழி இதுவே!
இதுமட்டுமன்று; பாரதத்தின் முப்பேரியக்கங்களின் முழு ஒளியும் திராவிடப் பேரியக்கமும் மூலம் பாரதத்தில் பரவத் தொடங்கியுள்ள காலமும் இதுவே என்னலாம்!
ஆனை எவ்வளவு பெரிது என்பது, ஆனைக்குத் தெரியாது; அதன் கண் சிறிது; ஆனையின் பேரளவைக் கண்டு கூறுபவன் மனிதனே!
ஆம்; வரலாற்றை ஆக்கிய உலகம் கீழை உலகம்! ஆனால் வரலாற்றை ஆராய்ந்து எழுதிப் படைத்துவரும் உலகம் மேலை உலகம்!
மனித இன வரலாற்றின் நீள அகல - ஆழ உயர - நுட்ப திட்பங்கள் முழுவதையும் இன்னும் வரலாற்றாய்வாளர்கள் முழு துறழக் காணவில்லை; ‘காண இருக்கின்றனர்’ என்ற நிலையின் காரணம் இதுவே!
வரலாற்றாய்வாளர்களின் ஆய்வொளி என்னும் தூண்டொளி விளக்கம் (Beaconlight)), இன்னும் வகுத்துக் காணாத இட எல்லைகள் - கால எல்லைகள் உள்ளன!
அமெரிக்காவின் மய நாகரிகம், பெருவிய நாகரிகம் - தென் ஆபிரிக்க நாகரிகம் - தென் கடலக நாகரிகம் - ஆகிய நாகரிகங்கள், இன்னும் வரலாறு காலம் வகுத்துக் காணாத மாண்ட நாகரிகங்கள் ஆகும்.
இதுமட்டுமன்று; சீன நாகரிகம், உண்மையான இந்திய நாகரிகம்; அதாவது தமிழ் - தென்கிழக்காசிய, நாகரிகம் ஆகியவையும், வரலாற்றாய்வாளர்களின் கால வகுப்புக்கு - கால ஊழிகளின் எல்லைக்கு அப்பாற்பட்டு நிற்கும் வாழ்விழக்காத - ‘சாவா மூவா’ என்னும் இளமை மாறாக் கட்டிளமை நாகரிகங்கள் ஆகும்.
சாவா மூவா இள வள நாகரிகங்களாகிய இவையே, பிறவா இறவா நாகரிகங்கள் - கிட்டத்தட்ட கடவுளின் நிலை போல - என்றும் நின்று நிலவும் நித்திய நாகரிகங்கள் ஆகும்.
மேலை வரலாறு நாகரிக வரலாற்றெல்லை ஆறாயிரம் ஆண்டு எல்லைதான்!
ஆனால், நாம் மேலே குறிப்பிட்ட நித்திய நாகரிகங்களின் நித்திய வாழ்வுப் பேரெல்லையிலே - இந்த ஆறாயிரம் ஆண்டு களும், அவ்வாழ்வின் எல்லையிலாக் கட்டிளமைக் காலத்தில் கழிந்து வரும் ஒருசில கணங்களாகவே வருங்கால வரலாற்றாய்வாளர்களால் கணிக்கப்பட வேண்டியவை ஆகும்.
ஆம்; பாரதப் பெருநாட்டின் முப்பேரியக்கங்களும் நிலவிய கால அளவு, இதுவரை வரலாற்றாசிரியர்கள் கண்டுள்ள ஆறாயிரம் ஆண்டெல்லைக்கும் மேற்படக் கவிந்து சென்றுள்ள கால அளவு ஆகும்.
ஏனெனில், அந்த இயக்கங்களில் ஒவ்வொன்றுமே ஆயிரம் - மூவாயிரக்கணக்கான ஆண்டுகள் பரவி நிலவியவை; அது மட்டுமன்று; அவற்றின் கனல் ஓய்ந்த பின்னும் தணல் ஓயாமல், அவற்றின் மறுமலர்ச்சியாகிய திராவிடப் பேரியக்கமும் மூலம் இன்னும் கணப்பு வடிவாகப் பாரத மாநிலத்திலும் - அது தாண்டி உலகிலும் காலம் கடந்து - இட எல்லை கடந்து பரவி வருபவை ஆகும்.
அம்முப்பேரியக்கங்களாகவன:
முதலாவது - தொல் பழங்காலப் பகுத்தறிவுப் பேரியக்கம்; இது கி. மு. 1500க்கு நெடுநாள் முன்பே தொடங்கி - கி. பி. 1400 வரை நிலவிற்று!
இரண்டாவது - பக்திப் பேரியக்கம்; இது, கி. பி. 3ம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே தொடங்கி, கி. பி. 1900 வரை நீடித்திருந்து வந்துள்ளது!
மூன்றாவது - தேசியப் பேரியக்கம்; இது கி. பி. 12ம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே தொடங்கி, இன்றும் இயங்கி வருகிறது!
பாரத மாநிலத்தின் முப்பேரியக்கங்களில் முதலாவதான தொல் பழங்காலப் பகுத்தறிவுப் பேரியக்கம், நாகரிக உலகிலேயே - பாரதப் பெருநாட்டின் மக்கள் வாழ்விலேயே முதன்முதல் இயக்கமும், மிகப் பழமை வாய்ந்த இயக்கமும் ஆகும்.
ஆனால் அதேசமயம், தமிழகத்திலே - புதிய தமிழகத்தின் தந்தையாகிய பெரியார் ஈ. வெ. ரா. அவர்களின் திராவிடப் பேரியக்கத்துடன், அது பலவகை ஒருமைப்பாடுகள் உடையதாய் - அவ்வியக்கத்தின் ஒரு தொல்பழங்கால முன்னோடியாய் அமைந்திருந்தது என்னலாம்.
தொல்பழங்காலப் பகுத்தறிவியக்கத்தின் முழு வரலாறோ - அதன் பழம்பெரும் தலைவர்கள் வரலாறோ - அதன் தொடக்கநிலை வளர்ச்சி வரலாறோ - நமக்கு இன்னும் தெளிவான உருவில் வந்து எட்டவில்லை; ஆயினும், இவை பற்றிய சில நிழற்கோடுகள் மூலம் வருங்காலத் திராவிட இயக்க அறிஞர்கள், அதை ஆய்ந்து - உருப்படுத்திக் காட்டமுடியும் என்று கட்டாயமாகக் கூறலாம்.
இது எப்படியாயினும், அப்பேரியக்கத்தின் கருத்துப் படிவப் பதிவுகளாக நமக்குத் தமிழில் சங்க இலக்கியமும், பழைய சமக்கிருதத்தில் (அதாவது கீர்வாண மொழியில்) உபநிடதங்களும், இவற்றின் பிற்கால மலர்ச்சிகளாக - இடைக்காலச் சமக்கிருதத்தில் பகுத்தறிவுத் தத்துவ முறைகளாக - சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிசம், பூர்வமீமாஞ்சை, உத்தர மீமாஞ்சை என்ற ஆறு காட்சிகள் (தரிசனங்கள்), தமிழகத்தில் அவற்றின் மூல வடிவான வைணவ - சைவ ஆகமங்கள் அதாவது, சித்தாந்த நூல்கள், ஆகியவையும் கிட்டியுள்ளன!
தமிழகத்தில் நம்காலப் பகுத்தறிவு இயக்கத்துக்கு முதல்வர்களாகத் தந்தை பெரியார் - டாக்டர் அறிஞர் அண்ணா - டாக்டர் கலைஞர் கருணாநிதி ஆகியோர் விளங்கி வந்துள்ளது போலவே, இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னிருந்தே, ‘நாத்திக முதல்வர்’ என்று தனிப்பெரும் புகழுடன் சிறப்பிக்கப்பட்டுள்ள பகவான் ‘பிருகற்பதி’ என்னும் முற்காலப் பெரியாரும் பிறரும், அவர்கள் வழிவந்த பகவான் புத்தரும், பகவான் மகா வீரரும் இம்மாபேரியக்கத்தின் வழிவந்த தலைவர்களாய் அமைந்திருந்தனர்!
பண்டைப் பாரசீக நாட்டில் பார்சி மதம் தோற்றுவித்த ஜரதுட்டிரரும், பண்டைச் சீனாவில் தேசிய மதம் தோற்றுவித்த கன்பூசியசும் கூட, ‘இப்பேரியக்கத்தின் தொலை எதிரொளிகளோ’ என்று கருத இடமுண்டு!
சங்க இலக்கியங்களையும் - உபநிடதங்களையும் ஒருங்கே வைத்துக் கொண்டு ஆய்ந்து நோக்குபவர்களுக்கு, அவை, கிட்டத் தட்ட ஒரே தாளின் இரு பக்கங்கள் போல - ஒரே பகுத்தறிவார்ந்த நாகரிகப் பண்பாட்டின் தெளிந்த முழு உலகியற் படிவம் - கலங்கிய அரைகுறை ஆன்மிகப் படிவமாகக் காணப்பெறத் தக்கவை ஆகும்.
இரண்டு பக்கங்களுக்கும் உரிய மூல முதலொளியை, உலக ஆராய்ச்சியாளர் திருக்குறளிலும் - தொல்காப்பியப் பொருளதி காரத்திலுமே காணத்தகும்.
பண்டைத் தமிழர் அதாவது இடையிருட்கால இருள் நிழலாடப் பெறாத தூய தொல்பழங்கால இந்தியர் நாகரிகம் என்பது, தொல்காப்பியத்திலும் - திருக்குறளிலும் காணப்படும் நாகரிகமே!
சங்க இலக்கியங்களில் அது சிறிதளவு படிந்தும் - உபநிடதங் களில் இது இன்னும் மண்டியிட்டுக் கலங்கியும் - ஆறு தரிசனங்கள், மக்கள் வாழ்விலிருந்து முற்றிலும் ஒதுக்கப்பட்டு வறட்டு அறிவுப் படிவங்களாகியும் வந்துள்ளது என்று காண்டல் ஆகும்.
திராவிப் பேரியக்கம், தற்காலக் கண்ணோட்டப்படி, புத்தியக்கம் - முற்போக்கியக்கம் ஆயினும், வரலாற்றுக் கண்கொண்டு நோக்குபவருக்குப் பழந்தமிழகத்தின் - தொல்பழங்கால இந்தியாவின் எளியார்ந்த மறுமலர்ச்சி இயக்கமும் ஆகும்; அது, புத்தியக்கம்; ஆனால், தொல்பழமை வேர் கொண்ட புத்தியக்கம் ஆகும்!
பாரத மாநிலத்தின் முப்பேரியக்கங்களில் இரண்டாவதான பக்திப் பேரியக்கம் - உண்மையில், இப்பகுத்தறிவுப் பேரியக்கத்திலிருந்து கிளைத்து - அதன் தமிழகக் கிளையாகச் சங்ககாலத்தை அடுத்துத் தோன்றிய ஓர் ஆன்மிக - அதாவது, சமய இயக்கம் ஆகும். பழைய பகுத்தறிவுப் பேரியக்கத்தின் பல கூறுகளை நாம் இதிலும் காணலாம்.
ஆனால், பகுத்தறிவுப் பேரியக்கம், உபநிடத காலங்களிலிருந்தே படிப்படியாக மக்கள் வாழ்விலிருந்து பிரிந்து புரோகிதர் மூட நம்பிக்கை கூளமாகவோ, அல்லது அறிஞர் ஏட்டுச் சுரைக்காயாகவோ மாறியது போலன்றி, இந்தப் பக்திப் பேரியக்கம், மக்கள் வாழ்வுத் தொடர்பு விடாமல், சிறப்பாகத் தனிமனிதர் வாழ்க்கை உணர்வுதன் அளாவிய ஆன்மிக இயக்கமாக வளரத் தொடங்கிற்று!
திராவிடப் பேரியக்கம், நம் நாட்களிலேயே - வான்புகழ் அறிஞர் அண்ணா குறிப்பிட்டபடி - ‘திராவிடர் கழகம்’ என்றும், ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்றம் இரட்டைக் குழல் துப்பாக்கியாக - சமுதாய இயக்கப் பகுதி, அரசியல் இயக்கப்பகுதி என இணைந்த இருமைப் பேரியக்கமாக இயங்கி வந்துள்ளதுபோலவே, பக்திப் பேரியக்கமும், தமிழகத்தில் கி. பி. 3-ஆம் நூற்றாண்டிலிருந்து கி. பி. 9-ஆம் நூற்றாண்டு வரை நாயன்மார்கள் தலைமையில் சைவப் பக்தி இயக்கமாகவும், ஆழ்வார்கள் தலைமையில் வைணவப் பக்தி இயக்கமாகவும் தழைத்தது!
பகுத்தறிவுப் பேரியக்கத்தின் விளைவாகத் தமிழன் பண்டைக் காலப் பேரிலக்கியங்கள் அமைந்ததுபோலவே, பக்திப் பேரியக்கத்தின் விளைவாகத் தமிழின் இடைக்காலப் பேரிலக்கியங்கள், சைவர்களின் திருவாசக தேவாரங்கள் - வைணவர்களின் திருநாலாயிரங்கள் - கம்பராமாயணம் ஆகியவை அமைந்தன!
பகுத்தறிவுப் பேரியக்கம், தமிழையும் பழஞ் சமக்கிருதத் தையும் (கீர்வாண மொழியையும்) வளர்த்தது; ஆனால் பக்திப் பேரியக்கமோ, தமிழையும் - இந்தியாவின் மற்ற எல்லாத் தாய் மொழிகளையும் வளர்த்தது; மலையாள, தெலுங்கு, மொழிகளில் - மராத்தி, குசராத்தி, வங்காளி மொழிகளில் - இந்தி, அசாமி, ஒரிசா மொழிகளில் - பக்திப் பேரியக்கத்தின் வைணவக் கிளையே இந்தியாவின் தேசியக் கிளையாகப் பரவி, இந்தியத் தாய்மொழிகளுக்கெல்லாம் இலக்கிய வாழ்வென்னும் பால் அருந்துவித்து வாழ்வளித்த தாயாக இலங்கிற்று!
தமிழக ஆழ்வார்களின் வழிவந்த தமிழக சமயாசாரியார் இராமானுசர்; கன்னட, தெலுங்கு நாடுகளில், மராத்திய - குசராத்திய - வங்காள - அசாமிய - ஒரிய - இந்தி - பஞ்சாபி - சிந்து மாநிலங்களில் எங்கணுமே வைணவ பக்தர்கள் இராமானுசர் வழிவந்து - அவ்வத் தாய்மொழிகளின் முதல்முதல் இலக்கிய வாழ்வை ஆக்கிப் படைத்தனர்!
பக்தி இயக்கத்தில் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த துளசிதாசர், 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமகிருட்டிண பரம அம்சர், வள்ளலார் இராமலிங்க அடிகளார் ஆகியோரே நம் காலத்தை அடுத்து வாழ்ந்திருந்த அதன் கடைசி ஒளிப்பிழம்புகள் ஆவர்!
பகுத்தறிவுப் பேரியக்கமே இந்திய நாகரிகத்தின் அடிப் படையாக - அதன் எலும்புக்கட்டுமானமாக அமைந்தாலும், பக்திப் பேரியக்கமே அதன் மக்கள் வாழ்வுப் பண்பாடாக அமைந்து - தமிழ் இலக்கியத்தையும், மற்ற நம் கால இந்தியத் தாய்மொழி இலக்கியங்களையும் வளர்த்து - இந்திய நாகரிகத்தின் சதை குருதித் தளங்களாக விளங்கியுள்ளது என்னல் தகும்.
பாரத மாநிலத்தின் முப்பேரியக்கங்களில் மூன்றாவதான தேசியப் பேரியக்கம், மற்ற இரு பேரியக்கங்களைப் போலவே இந்தியாவின் தென்கோடியில் பிறந்து, இந்தியா முழுவதையும் ’ஒரே பாரத’மாகக் கட்டமைக்க உதவி வந்திருக்கும் இயக்கம் ஆகியுள்ளது.
பாரத மாநிலம் முழுவதும் பரவியுள்ள இனம், உலக அறிஞரால் இன்று, ‘திராவிட இனம்’ என்று வழங்கப்பட்ட தமிழ்ப் பேரினமே; நாகரிக உலகின் அடிப்படை இனமும் இதே தமிழ்ப் பேரினம்தான். இதனால், இந்தியாவை ஒரே மாநிலமாகக் காண விரும்பியவர்களும் - உலகை ஓருலகமாகக் காண அவாவியவர்களும் தமிழராகவே அமைந்தது இயல்பே ஆகும்.
இவ்விரு கருத்துக்களின் தடங்களையும் நாம், சங்க இலக்கி யத்திலும், சங்க காலத் தமிழக வரலாற்றிலும் காணலாம்.
இமய வரம்பன் சேரலாதன் - கரிகால் சோழன் - ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆகிய மூவரசரும், அவர்கள் மரபினரும், வில் - புலி - கயல் என்ற முத்தமிழ்க் கொடிகளையும் இமய உச்சியில் கொண்டு பொறித்தனர்!
அத்துடன் நில்லாது, நிலந்தருதிருவிற் பாண்டியனும், கரிகால் சோழனும், அவர்கள் வழிவந்த இடைக்கால - பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும், இலங்கையையும் - கடல்கடந்த நாடுகளான கடாரம் முதலிய தென்கிழக்காசிய மண்டலங் களையும் வென்றாள முயன்றனர் - வென்றாண்டனர்!
கி. மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து சீனாவின் ஹான் மரபுப் பேரரசர், திபெத்து, பர்மா உள்ளடங்கலாகக் கிழக்காசியா முழுவதும் வென்று பெரும் பேரரசாட்சி நிறுவினர். கரிகாலன் சோழன் ஒருவனே இந்நிலை கண்டு வெகுண்டு, இமயமும் தாண்டி, அதன் வடபாலுள்ள மேருமலை அல்லது கயிலை மலையைப் புதிய இந்தியத் தேசியத்தின் எல்லையாக்கி, அதன் பின்புறம் அதாவது வடபுறமாகிய சீனப் புறத்திலேயே முத்தமிழ்க் கொடி பொறித்தான்.
தென்னாடாண்ட சிவபெருமானைத் தமிழர், கயிலைக்கு இறைவனாகக் கண்டது - கரிகாலனின் இந்தத் திபெத்து வெற்றியின் பயனாகவே இருந்திருக்கக்கூடும்.
இந்தியா முழுவதையும் ஒரு குடைக்கீழ்க் கொண்டு, ஒரு மொழி (அதாவது தமிழ் மொழி) வைத்தாள வேண்டுமென்று கருதியவர்களும், ‘உலகின் பழங்காலப் பிற வல்லரசுகளை எதிர்த்து இந்தியாவையே உலகின் முதன்மை வல்லரசாக்க வேண்டும்’ என்று முயன்றவர்களும் தமிழர்களே - என்பதைச் சங்க இலக்கியம் காட்டுகிறது!
இந்தியாவில் தில்லி மாநகர் வரையுள்ள வடமேற்குப் பகுதியை வென்று ஆண்ட குசாணப் பேரரசன் கனிட்கனையும் - அவன் தோழன் விசயாலயனையும் ஆந்திரப் பேரரசர் தோழமையுடன் முறியடித்த பெருமை தமிழக இந்தியப் பேரரசன் சேரன் செங்குட்டுவனுக்கே உரியது!
ஆரிய அரசர் கனக விசயர் என்று சிலப்பதிகாரம் எடுத்துரைப்பது, ‘இந்தியாமீது ஆதிக்கம் செலுத்திய இந்த அந்திய அரசர்களையே’ என்பதை, இந்திய வரலாற்று ஆசிரியர்கள் மறைத்து உள்ளனர்!
இதுபோலவே, இந்தியாவில் தில்லி மாநகர் வரையுள்ள வடமேற்குப் பகுதி முழுவதையும் பதினெட்டுத் தடவை படை யெடுத்துச் சூறையாடிய அந்நிய வல்லரசன் கஜினி மாமூதை, ‘மகிபாலன்’ என்ற வங்கப் பேரரசன் தோழமையுடன் சென்று முறியடித்தோட்டிய பெருமை, தமிழக இந்தியப் பேரரசனான சோழன் இராசேந்திரனுக்கே - கங்கையும் கடாரமும் கொண்ட சோழப் பெருவேந்தனுக்கே உரியது என்பதையும் இந்திய வரலாற்று ஆசிரியர்கள் மறைத்து வந்துள்ளனர்!
இந்தியா இன்று உலகின் ஒரு முன்னணி வல்லரசாக வேண்டுமானால், அது ஒரு கடலரசாக வேண்டும்! வலிமை வாய்ந்த - ஊழி பெயரினும் தாம் பெயராத ஒரு தீண் திறமிக்க பணிக்குழாம் (All India Civil Service) வகுத்தமைக்க வேண்டும்.
தொழில் வாணிக வளம் மூலம், இந்தியாவை ஒரு செல்வ நாடாக்க வேண்டும்! புறந்திருந்து வந்த ஆதிக்க மூலமாகவன்றி, அகத்திருந்து மக்கள் உள்ளப் பண்பாட்டின் மூலமே, இந்திய மக்களிடையே ஓர் அடிப்படை ஒருமைப்பாட்டை உண்டுபண்ண வேண்டும்!
தமிழகத்திலிருந்து பரவி - வரலாற்றுக் காலத்தில் இந்தியா வெங்கும் வளரத் தொடங்கிய பாரதத்தின் தேசியப் பேரியக்கம், இந்தியாவுக்கு இந்த நான்கு பண்புகளையும் வகுத்து வழங்கப்பாடு பட்டுள்ளது காணலாம்.
‘சேரன் கடலில் பிறகலம் செல்லாதவாறு போல’ என்ற ஓர் இயல்மொழி வாசகத்தையே சங்கப்பாடல்கள், பழமொழி போல எடுத்தாளுகின்றன!
பெரும் பாண்டியரும் - பெரும் சோழரும் மட்டுமன்றி, இடைக் காலத்திலும் - அணிமைக் காலத்திலும்கூட, சின்னஞ் சிறு குடி மன்னரான தென்காசிப் பாண்டியரும் - சாமுதிரி மன்னரும் - பம்பாய் முதல் கோழிக்கோடுவரை வாழ்ந்த குறுமன்னரும் தனி வீரரும் - இவர்கள் மரபில் வந்த சிவாஜியும் பெருங்கடற்படை கொண்டு கடலாண்டனர் என்பதை, வருங்கால உண்மையான இந்தியத் தேசிய வரலாறே எடுத்துக் காட்டவல்லது - காட்டத் தொடங்கி வருகிறது!
உலகளாவிய வாணிக வளம் கொண்ட இந்தியாவின் முதற்பேரரசு, கி.பி. 12-ம் நூற்றாண்டு வரை ஆண்ட சோழப் பேரரசே ஆகும்.
ஒரு திண்ணிய - திறமை வாய்ந்த பெரும் பணிக்குழாம் (Civil Service) அமைத்ததனாலேயே, இரண்டு நூற்றாண்டுகள், சோழர் இப்பேரரசைக் கட்டிக் காத்தனர்!
இதே பெரும் பணிக் குழாத்தைத் தம் ஆட்சிக்குள் சேர்த்துக் கொண்டதனாலேயே, கருநாடகப் பேரரசரான விஜயநகர மன்னர் தம் பேரரசையும் - அவர்கள் வீழ்ச்சிக்குப் பின் அதே பணிக் குழாத்தைத் தம் ஆட்சிக்குள் சேர்த்துக் கொண்ட தனாலேயே சிவாஜியும், அவர் பின் வந்த மராத்திய வல்லரசுகளும், அவற்றின் வீழ்ச்சிக்குப் பின் அதே பணிக் குழாத்தைத் தம் ஆட்சிக்குள் புதிது ஆக்கிப் படைத்துக் கொண்டத னாலேயே இந்தியாவைக் கட்டியாள முற்பட்ட ஆங்கிலேயரும், தம் பேராட்சிகளையும் நீடித்துக் கட்டமைத்துக் கொண்டவர் ஆவர்!
புற விடுதலை பெற்றும் அக விடுதலை பெறாத இன்றைய இந்தியாவின் நிலையில், இவற்றையெல்லாம் ஆய்ந்து கண்டு
மாணவர்க்கும் - மக்கட்கும் - இனி ஆளவரும் புதிய தேசிய பணிக் குழாத்தினருக்கும் அறிவிக்க வேண்டிய பொறுப்பு, தேசிய இந்தி யாவின் வரலாற்று ஆசிரியருக்கே உரியது ஆகும்.
(கழகக்குரல் - 10.11.1974)
ஏ. வரலாறு காணாத காலம் முதற்கொண்டுகடலாண்ட பேரினம் - தமிழனமே!
கடலோடும் பெரியார்!
அலைகடல் தாவும் அண்ணா!
மூடநம்பிக்கைகளாகிய திமிங்கிலங்கள் - சாதி வருணாசிர மங்களாகிய நச்சுப் பாம்புகள் நடமாடும் ’தமிழர் வாழ்வுங் என்னும் கடலில், ஆக்கத் திசை நாடி - அறிவு நெறி கண்டு, மாதவக் கலங்களாக - நலமாண்டு வளமாண்ட கலங்களாக இயக்கியவர்கள்தான் அவர்கள்! ஆனால், அவர்களின் நினைவுச் சின்னங்கள், தமிழ்க் கடலிலேயே அவ்வாறு வரலாற்றுத் தடங்களாக மிதக்க விடப்பட்டுள்ளன!
தமிழர் வாழ்வில் - பகுத்தறிவுலகின் வாழ்வில் புத்தொளி தோற்றுவித்த பெரியார் பெயராலேயே தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது!
அவர் புகழ் ஒளியினாலேயே தமிழகத்தின் தமிழரசு ஒளி பரப்புகிறது! ஆம் - அவர் புகழ்ப் பெயருடனேயே இனி தமிழகமும் - இந்தியாவும், புதுப்புகழ் நிறுவிப் புதுவளம் பெறும்!
அவர் பெயராலேயே தமிழக அரசு, கடல் வாழ்வில் ஒரு புதிய கொடி உயர்த்தி - புதிய நாவாய் ஓடவிட முனைந்துள்ளது!
தமிழர் உளமாண்டு - தமிழக ஆட்சியில் புது மலர்ச்சியூட்டி - தமிழ்க் கடலாண்டு - கடலலை இடையே தமிழ்ப் புகழ்க் கனவு கண்டுவரும் தமிழ்த் தெய்வமாகிய அறிஞர் அண்ணாவின் பெயராலும், தமிழ்க் கடலாட்சி, புதிய வளமும் பொலிவும் பெற இருக்கிறது!
அறிஞர் அண்ணா பெயராலும் தமிழக அரசு, கடல்மீது ஒரு புதிய நாவாயினை ஓடவிட முன்வந்துள்ளது!
இந்தியா ஒரு வல்லரசாக வேண்டும் - ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் கடலாண்ட பேரினத்தின் புகழ் மரபு மங்காத வண்ணம் இன்றைய உலகிலும் பாரதம் ஒரு கடற் பேரரசாக விளங்க வேண்டும் - என்ற தமிழன்னையின் கனவு ஆர்வத்தையே - அவ்வன்னையின் சேயான தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாவின் கரம் நனவார்வச் செயலாக்க முற்பட்டுள்ளது!
“தமிழக அரசின் எண்ணற்ற வண்ணச் சாதனை களிடையிலும், எண்ணிட்டுக் கணித்திட முடியாத வரலாற்று வண்ணச் சாதனை, வரலாற்றுப் பழைமை நிலத்தில் வேரோடி - வரலாற்றுப் புதுமை வானில் மேலோங்கி வளந்திகழ வளர இருக்கும் உயிர் வண்ணச் சாதனை இது” என்பதைத் தமிழுள்ளம் என்றும் மறக்க முடியாது!
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மரபுக்கு - கப்பலோட்டிக் கடலாண்ட தமிழினத்தின் புத்திளந் தலைவன் வழங்கிய புதுமலர்ச்சிக் காட்சியே இது!
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு பெரிது - பெரிது - மாபெரிது!
அந்தப் போராட்டத்தைப் பாரதம் மறந்துவிடாமல், அதன் புகழை மக்களுள்ளத்தில் என்றென்றும் பசுமையாக நிலைநாட்டத் தமிழக அரசு எடுத்துக் கொண்டுள்ள தேசிய ஆர்வ முயற்சியும் இது போலவே பெரிது - பெரிது - மாபெரிது!
பாஞ்சாலங்குறிச்சிச் கோட்டை! வெள்ளையராட்சியில், தடங்கெட - மண்ணோடு மண்ணாக்கப்பட்டுவிட்ட அந்தக் கோட்டை, இன்று தமிழக ஆட்சியில், மீண்டும் கொடி கட்டிப் பறக்கிறது!
பிரிட்டனின் பெருமை - அதன் கடலாட்சி!
“அலைகடலாண்டது பிரித்தானியா -
பிரித்தானியர் என்றும்
அடிமைகள் ஆனதில்லை”
இவ்வாறு தேசியப்பண் பாடிக்கொண்டே, இந்தியாவை - கீழ்த் திசையை அடிமையாக்கத் தயங்கவில்லை - பிரித்தானியரும், பிற மேலை ஆதிக்க அரசுகளும்!
இந்தியாவின் விடுதலையை மட்டுமல்ல - இந்தியாவின் தன்மானத்தையும் குறிக்கொண்ட விடுதலை மாவீரர்தாம் - கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார்!
இந்தியத் தேசியத்தில் அவர் பங்கு, கதிரவனின் பங்கு - அரிமாவின் பங்கு ஆகும்!
அவர் கப்பலோட்டிய தமிழர் மட்டுமல்லர்; அடிமை இந்தியாவில் - விடுதலைப் போராட்டக் கால இந்தியாவில், முதல் முதல் கப்பலோட்டிய இந்தியர் - பிரிட்டனின் ஏகாதிபத்தியக் கடலாட்சியை எதிர்க்க முனைந்த முதல் இந்தியரும், ஒரே இந்தியரும் அவரே!
‘கப்பலோட்டிய இந்தியர்’ என்று கூறாமல், செக்கிழுத்த சிதம்பரனாரை நாம், ‘கப்பலோட்டிய தமிழர்’ என்று மட்டும் கூறுவதன் காரணம், விடுதலைப் போராட்டத்தின் பெயரால் ஆதாய அறுவடை செய்ய முனைந்துள்ள மற்ற இயக்கத்தார் அவரை நிலையாக மறக்கடித்து - இருட்டடிப்புச் செய்துவிட்டனர் என்பதே ஆகும்!
‘இந்திய விடுதலை இயங்க வரலாறு’ என்ற பெயரால், ஆயிரம் மூவாயிரம் பக்கங்கள் கொண்டதொரு மாபாரத ஏடே இயற்றியவர் - பட்டாபி சீதாராமையா! அந்த மூவாயிரம் பக்கங்களிலும், கப்பலோட்டிய இந்திய மாவீரரான வ. உ. சிதம்பரனார் பற்றி - வேறு எந்த விடுதலை இயக்கத் தலைவரும் அடைந்திராத அளவில் நீண்ட மாபெரும் தண்டனை பெற்று - செக்கிழுத்துச் சிறைப்பட்டுக் கடுந்தவமாற்றிய அம்மாபெருந் தலைவர் பற்றி ஓரிரு வரிகள் - ஓரிரு சொற்கள் கூடக் கிடையாது!
இதுமட்டுமோ - இந்திய நாட்டாண்மைக் கழகம் (காங்கிரசு) ஆண்டு தோறும் நடத்திய மாநாடுகளில், யார் யாரெல்லாமோ தலைமை வகித்தது உண்டு; மீண்டும் மீண்டும் தலைமை வகித்தது உண்டு.
புதிய இந்தியாவின் தந்தையான காந்தியடிகள், ஒரு தடவை மட்டுந்தான் தலைவர் - புதிய இந்தியாவின் தந்தையின் தந்தையரான திலகர் பெருமான், பாஞ்சாலச் சிங்கம் லஜபதிராய் போன்ற மாவீரத் தியாகிகளோ, புதிய இந்தியாவின் மூதாதையான வ. உ. சிதம்பரனாரோ தலைவராக்கப்பட்டதே இல்லை!
செக்கிழுத்த - கப்பலோட்டிய சிதம்பரனாரின் பெயர், ஆண்டாண்டு தோறும் நடைபெற்ற பேரவைத் தீர்மானங்களிலே முழுக்க முழுக்க இருட்டடிக்கப்பட்டது; தெரிந்தும் தெரியாமலோ - அயர்வு மறதியாகவோ - அன்று வேண்டுமென்றே இருட்டடிக்கப்பட்டது!
ஏனெனில், கப்பலோட்டிய அப்பெரியாருக்குரிய புகழே - கப்பலோட்டிய இந்தியன் என்ற புகழே - குசராத்தில் எவரோ ஒருவருக்குத் தரப்பட்டு, தீர்மானங்களில் அவரே புகழ்ந்து பாராட்டப்பட்டார்!
அந்தப் பாராட்டும், பாரதம் மறந்துவிட்ட பாராட்டுத் தான்! ‘கப்பலோட்டிய இந்தியர்’ என்று அறிமுகப்படுத்தப்பட்ட அந்தக் கப்பலோட்டிய செல்வரை, இன்று எவரும் அறியமாட்டார்; ஆனால் அந்தப் பாராட்டு, கப்பலோட்டிய வ. உ.சிதம்பரனார் நினைவையே வரலாற்றிலிருந்து - இந்திய மக்கள் உள்ளத்திலிருந்து மறைப்பதற்கான - மறக்கடிப்பதற்கான - இருட்டடிப்பதற்கான ஒரு முயற்சியாக மட்டுமே மேற்கொள்ளப்பட்டது!
தென்னை மரத்தில் விளைந்த இளநீர் மண் மூடப்பட்டுத் தேரடிக் கொடி மரத்தின் வேரில் விளைந்ததாகக் கண்டெடுத்துப் பாராட்டப்பட்டது!
இந்தியா மறந்துவிட்ட - இந்தியரிடையே மறக்கடிக்கப்பட்ட - தமிழகமும் மறக்கவிருந்த - மறக்கடிக்கப் பெறவிருந்த செக்கிழுத்த செல்வரின் - கப்பலோட்டிய மாவீரரின் புகழைத் தமிழரிடையே அம்மறக்கடிப்பிலிருந்து - இருட்டடிப்பிலிருந்து மீட்டு, தமிழர் உள்ளத்திலும் வாழ்விலும் அதைப் புதுப்பித்த பெருமை தமிழரியக்கம் - தன்மான இயக்கம்- திராவிடர் கழகம் - திராவிட முன்னேற்றக் கழகம் - ஆகிய திராவிடப் பேரியக்கத் தொடர் மரபினுக்கே உரியதாகும்!
“வ.உ. சிதம்பரனார் பெயரால் இந்தியாவில் கப்பல் ஒன்று திகழவேண்டும்” என்று திராவிட இயக்கம் போராடி வெற்றி கண்டது; ஆனால், அம்மரபினை இன்று திராவிட இயக்கத்தின் மரபில் வந்த தமிழக அரசே ஏற்று - அதைத் தமிழக அரசின் புகழாகவே ஆக்கியுள்ளது!
வ. உ. சிதம்பரனாரின் மாதவத்தின் சின்னமான செக்கினையே தமிழர் கண்முன் தமிழக அரசு, தேசியச் சின்னமாக வைத்துள்ளது என்பதை நாம் மறந்துவிடமாட்டோம் - மறந்துவிடக் கூடாது!
தமிழக அரசின் நாவாய்ப் பணி, ஒரு கட்சிப் பணியன்று - ஓர் அரசின் பணிகூட அன்று - அது, விடுதலைப் பேரியக்கத்தின் உள்ளார்ந்த ஓர் உயிரலையிலிருந்து, புதிய இந்தியாவின் தந்தையின் தந்தை - மூதாதையாகிய வ. உ. சிதம்பரனாரின் கப்பல் இயக்கத்திலிந்து தளிர்த்த ஒரு மாபெருந் தேசிய மரபின் புதுமலர்க் கொழுந்தே ஆகும்!
இதுமட்டுமன்று; இந்த மாத்தமிழன் இயக்கத்துக்கும் - மாத்தமிழரசின் கடற்பணிப் பண்புக்கும் மூலப் பண்டாரமான தேசிய மரபு, உலக வரலாற்றில்- இந்திய வரலாற்றில் - தமிழிந்தி யாவின் தொல்பெரும் பழமையில் ஆழ்ந்த நெடுநீள - அகல வேரோட விட்ட ஒரு மாபெரும் மரபு ஆகும்.
அசோகன், கனிஷ்கன், சந்திரகுப்த விக்கிரமாதித்தன், அர்ஷ வர்த்தனன், அலாவுதீன் கில்ஜி, அக்பர், அவுரங்கசீப் ஆகிய இந்தியாவின் பேரரசர்கள் யாவரும் நிலப் பேரரசர்களே - கடற் பேரரசர்கள் அல்லர்!
அவர்களிடம் ஆற்றல் சான்ற கடற்படை இருந்ததில்லை; கடல் கடந்து அவர்கள் - ஆட்சியோ - வாணிகமோ - தொழில், கலை, பண்பாட்டு வளங்களோ சென்று உலகில் பரவியதும் இல்லை.
ஏனெனில், அவர்கள் வளர்த்த தேசியம் - புறத்தேசியம்; புறமிருந்து இந்தியாவின் புற எல்லையில் வளர்ந்த தூல தேசியம் மட்டுமே!
ஆனால் இந்தியாவின் வரலாற்றில், இன்னும் தெரியவிடப்படாத அகத் தேசியம் - உண்மை இந்தியத் தேசியமாகிய தென்னகத் தேசியம் ஒன்று உண்டு; அதன் சார்பில் வளர்ந்த சேர சோழ - பாண்டிய பல்லவ - ஆந்திர மராட்டியப் பேரரசர்கள் மட்டுமன்றி, தென்காசிப் பாண்டியர், கோழிக்கோட்டுச் சாமூதிரிப்பாடு முதலிய சிற்றரசர்கள் கூட - சிறு சிறு தலைவர்கள்கூட - ஆற்றல் சான்ற கடற்போர்ப் படையும், கடல் வாணிகப் படையும் உடையவராய் - இலங்கை, மலேயா, தாய்லந்து, லாவோஸ், வியட்னாம், இந்தோனேசியா முதலிய கடல் கடந்த நாடுகளிலெல்லாம் ஆட்சியும் கொடியும் - வாணிகமும் தொழிலும் - கலையும் நாகரிகமும் - இலக்கியமும் பண்பாடும் பரப்பி, இந்திய தேசியத்தையே ஆசிய தேசியம் - உலக தேசியம் ஆக்கப்பாடுபட்டனர்!
அயலாட்சிகளின் சின்னமாகவே இன்னும் விளங்கிவரும் பள்ளி, கல்லூரிகளில் - பல்கலைக் கழகங்களில் பயிலப்படும் இந்திய வரலாறுகளிலோ, சமக்கிருத இலக்கியத்திலோ நாம், நிலப் போர்களை மட்டும்தான் காண்கிறோம்; ஆனால் சங்க இலக்கியத்திலே - தமிழ் இலக்கியங்களிலே - தென்னக வரலாற்றிலே - எண்ணற்ற கடற் போர்களையும், கடலக வெற்றிகளையும், கடல் கடந்த ஆட்சிகளையும் பற்றிப் பயிலும் வாய்ப்பு வளம் நிரம்பக் காணலாம்!
கடலில் பாலமிட்டு - இலங்கையில் சென்று போரிட்ட இராமனைப் பற்றித்தான் நாம், இராமாயண இதிகாசத்தில் படிக்கிறோம்.
நாவாய்களில் ஏறிக் கடற்படைகளுடன் பாண்டியரும் சோழரும் - ஆந்திரரும் பல்லவருமாக ஈழமும் கடாரமும் சென்று வென்று, நிலையாட்சியே செய்த எண்ணற்ற மெய்யான இராமர்களைப் பற்றித் தென்னக வரலாறு பேசுகின்றது!
கடலகத் தீவினுள் சென்று கடம்பனாகிய சூரனை வென்ற முருகனைப் பற்றிக் கற்பனையாகத்தான் ‘கந்த புராணம்’ பேசுகிறது; ஆனால், உண்மையிலேயே கடம்பர்களை வென்று - கடம்பர்களின் வல்லரசனான நன்னனைக் கடல் கடந்து சென்று - வெள்ளைத் தீவிலுள்ள அவனது கடல் அரணைத் தகர்த்து மெய்யான முருகனாகிய சேரன் செங்குட்டுவனைப் பற்றி நமக்குப் பத்துப்பாட்டு எடுத்துரைக்கிறது!
இச்செயலுக்காகவே அவன், ‘கடல் பிறக்கோட்டிய சேரன் செங்குட்டுவன்’ என்று பாடல்களில் சிறப்பிக்கப்படுகிறான்!
புறத் தேசியம் - அகத் தேசியம் என்ற இந்த வேறுபாட்டு நுட்பங்களை நாம் இந்திய வரலாற்றிலே மட்டுமன்று - அகல் உலக வரலாற்றரங்கிலும் காணலாம்!
உலகப் போர்கள் இரண்டிலும் உலகையே கிடுகிடுக்க வைத்த செர்மன் வல்லரசு நிலப்படையிலும் - வான் படையிலும் - புத்துலக இயந்திர நுட்பங்களிலும் நிகரற்றதாகத்தான் விளங்கிற்று!
ஆனால், கடற்படையாற்றலில் மிகக் குறைந்த வலிமையுடைய நில வல்லரசாக இருந்தனாலேயே அது இறுதியில் மண் கவ்வ நேர்ந்தது!
இதே கதி, 19-ம் நூற்றாண்டிலிருந்த மாவீரன் நெப்போலியனின் பிரெஞ்சுப் பேரரசுக்கும் 1-ம் நூற்றாண்டிலிருந்த ஸ்பானியப் பேரரசுக்கும் கி. பி. முதல் நான்கு நூற்றாண்டுகளிலும் வாழ்ந்து மேலுலகம் முழுவதும் ஆண்ட உரோமப் பேரரசுக்கும் கி.மு. 4- நூற்றாண்டுக்குரிய அலெக்சாண்டரின் பேரரசுக்கும்கூட இருந்தது.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரிகச் சிறப்புடைய எகிப்திய நாகரிகத்திற்கும் - அதே தொல்பழம் பெருமையுடைய சீன நாகரிகத்துக்கும் கூட, இதே குறை, முற்றிலும் இல்லாமல் இல்லை என்பதை ஆய்வாளர் அறிவர்!
உலகின் புறத்தேசிய வாழ்வு இது; ஆனால், தமிழினத் தோடு இசைந்த கடல் வாழ்வுத் தேசியங்களை - அகத் தேசியங் களை நாம், உலகெங்கும் - உலக வரலாறு எங்குமே காணலாம்!
இவை, தூல தேசியங்கள் அல்ல; தமிழினம் - தமிழிந்தியா போன்ற சூக்கும தேசியங்கள் ஆகும்.
பிரிட்டனின் பேரரசு ‘கடற்பேரரசு’ என்பதை, அவர்கள் தேசியப் பாடலே காட்டும்.
ஒல்லாந்து நாடு (Holland or the Dutch) சிறு நாடான போதிலும், ஒரு கடல் வாணிக அரசாகவே விளங்கிற்று.
போர்ச்சுகல் நாடு கடலரசாக மட்டுமன்றி, தற்கால ஐரோப்பாவின் முதல் கடற் பேரரசாக - உலகளாவிய கடற்பேரரசாகவே விளங்கி வந்துள்ளது!
பண்டைக்கால நெப்போலியனாக உரோமப் பேரரசை நெடுங்காலம் வாட்டி வதைத்த மாவீரன் ஆனிபலின் கார்த்தசீனியப் பேரரசு-கி. மு. 9-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டே நடுநிலக் கடலாண்ட பினிசியக் குடியரசு - பண்டைக் கிரேக்க நாட்டின் அதேனியப் பேரரசு - கி.மு. 2000ம் ஆண்டுக்கு முற்பட்டே கடலாண்ட கிரேட் தீவினரின் கடலரசு - கீழ் திசையில் இத்தொல் பழங் கடலோடி இனங்களுடனும், தமிழ்ப் பேரினத்துடனும் தொடர்பு கொண்டிருந்த மலேசிய - இந்தோனேசியக் கடலோடி இனப்பேரரசுகள் - ஆகியவை, உலகின் இடையறாக் கடல் வாழ்வு மரபின் - அகத் தேசியத்தின் கருவூலங்கள் ஆகும்!
இந்தியாவிலும், உலகிலும் உள்ள இதே வகை வேறுபாடு, புறத்தேசியம் அல்லது போலித் தேசியம் - அகத் தேசியம் அல்லது மெய்யான தேசியம் என்ற வேறுபாடு, இலங்கையிலும் உண்டு!
அங்கும், அயலாட்சிக் காலச் சின்னமாகவே இன்னும் விளங்கும் பள்ளி - கல்லூரி - பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தப்படும் வரலாறு, புறத் தேசியம் மட்டுமே கண்டுள்ளது - அகத் தேசியம் காணவில்லை!
சேர சோழ பாண்டியர் - தமிழ் மூவரசர்; தமிழகத்தின் வரலாறு, பெரிதும், இவர்கள் உடன் பிறப்புப் பூசல்களாகவே இருந்து வந்துள்ளது என்பதைப் பலரும் அறிவர்; ஆனால், இம் மூவரசருடன் நாலாம் - ஐந்தாம் அரசாகவே, ஈழத்தரசுகள் - கடார, தென்கிழக்காசிய அரசுகள் ஒருபுறமும், பல்லவ - ஆந்திர - சாளுக்கிய - கலிங்க கங்கை நாட்டு அரசுகள் இன்னொரு புறமும் எப்போதும் தாயாதிச் சண்டைகளில் ஈடுபட்டு, இணங்கியும் பிணங்கியும் - முறுகியும் வாழ்ந்து வந்தன என்பதை, அகல் உலக சிறப்பியல் வரலாறு காட்டும்!
இவ்வரசுகள் அனைத்தும் கடலக அரசுகளே.
இலங்கை - இந்தக் கடலக நாகரிகங்களின் மையமான விளையாட்டு அரங்கம் ஆகும்; அது உண்மையில், தமிழகத்தின் ஒரு கடல்கடந்த அணுக்கப் பதிப்பே ஆகும்!
ஆனால் இலங்கை நாட்டு வரலாற்று ஆசிரியர்கள், ஏனோ இதனைக் காணக்கண் பெற்றிருக்கவில்லை!
“இலங்கையர் - வரலாற்று ஆசிரியரின் மொழியிலேயே கூறுவதானால் - சிங்களவர், அடுக்களைப் பூனைகளாகவே என்றும் வாழ்ந்தவர் - வாழ்பவர்! கடலோடும் பண்பு - உலகாளும் பண்பு, அவர்கட்கு என்றுமே இருந்ததில்லை”
இவ்வாறு வரலாறு எழுதியவர்கள் அயலார் அல்லர் - இலங்கையரே- இலங்கைச் சிங்கள ஆசிரியர் டி ‘சில்வர் அவர்களே ஆவர்’!
விடுதலை பெற்ற இலங்கையில் கூட அயலாட்சிப் போதித்த இருட்டடிப்பு வரலாறே இன்றும் வரலாறாக உள்ளது என்பதை இது காட்டுகிறது!
பாண்டியருடன் உறவு கொண்ட விசயன், கலிங்கத் திலிருந்து கடல்வழி வந்தவன் என்பதையும், அவன் மட்டுமன்றி அவன் உறவினர் அனைவருமே தமிழகப் பாண்டி நாட்டுப் பெண்களைக் கடலேறி வந்து மணந்தவர் என்று பெருமையுடன் கூறிக் கொண்டவர் என்பதையும், தமிழக மூவரசரிடையே ஒருவருடன் சேர்ந்தும் - மற்றொருவரை எதிர்த்தும் இலங்கை மன்னர் அடிக்கடி தமிழகத்தில் கப்பற் படையுடன் வந்து போரிட்டனர் - ஆண்டனர் என்பதையும், சிங்களப் பேராசிரியர் ஏனோ மறந்தனர் - மறக்கடிக்கின்றனர்!
(கழகக்குரல் - 24.11.74)
ஐ. காசினிக்கெல்லாம் கண்ணொளி தந்த கருணாலயம் - எம் தமிழ்!
கண்ணொளி - மக்கள் வாழ்வொளி!
கண்ணிழந்த பேர்க்குக் கண்ணொளி! கண்ணாற்றல் குறைந்த பேர்க்கு இலவசமாகக் கண்ணாடிகள்!
வீடிழந்த பேர்களுக்கு வீடுகள் - வீடமைப்புத் திட்டங்கள்!
ஊனமுற்றோர்க்கு உறுதுணைக் கலங்கள் - உறுதுணைப் பயிற்சிகள்!
கைவண்டி இழுத்தவர்களுக்குக் கால்விசை வண்டிகள்!
தாழ்வுற்றவர்களுக்கு நல்வாழ்வு வாய்ப்புக்கள் பிற்பட்டவர் களுக்கு முற்போக்கு வழங்குவதற்கான துணையுதவிகள்!
இவை மட்டுமோ?
ஊனக் கண் மட்டும் உடையவர்கட்கு ஞானக் கண் திறக்க வழிகோலும் கல்வி நீரோடைகள்!
வாழ்வோர்க்குப் புது வாழ்வுப் பொங்கல் வளம் தூண்டும் கலை விழாக்கள்! புத்தாக்கம் நாடிப் புத்தூக்கமூட்டும் கலைக் கோட்டங்கள் - காலத்தில் நின்றிலங்கவல்ல சிறப்பு வாய்ந்த வரலாற்றுச் சின்னங்கள்!
பசுமைப் புரட்சியுடன் வாணிகப் புரட்சியும், காட்டுவள தோட்டவளப் புரட்சியுடன் தொழில் வளப் புரட்சியும் கண்டு, பாரதம் போற்றுகிறது - பாரதம் புகழ்கிறது!
இவை, தமிழகத்தில் - தமிழியக்க மரபில் வந்த தமிழாட்சியின் பெருமைகள் மட்டுமல்ல! தமிழகத்தின் தண்ணொளியாம் நம் கருணாவின்… வியனுலகின் விண்ணொளியாம் எம் வான்புகழ் அறிஞர் அண்ணாவின் பெருமைகள் மட்டும்கூட அல்ல!
தமிழமைச்சர் பெருமக்களின் தனிப்பெரும் தகுதிகள் மட்டும் கூட அல்ல!
தமிழினத்தின் வழிவழி வந்த பழம் பெருமைகளின் இரவுத் துயிலூழி கடந்த எழுஞாயிற்றுப் புது மலர்ச்சிகளே இவை!
தமிழகத்துக்குக் கண்ணொளி தந்தவர் - தருபவர், தமிழக முதல்வர்- கலையுலகக் கவிஞர் கருணா!
ஆம்; பாரதத்துக்கு - உலகத்துக்கு - மனித இன நாகரிகத்துக்குக் கண்ணொளி அளித்த இனம், தமிழினம்!
வெறும் கண்ணொளி மட்டுமா - இல்லை; அக்கண்ணொளியுடனே அறிவுக் கண்ணொளி!
கல்வியின் - கலையின் - நாகரிகத்தின் இன்னொளி!
வாழ்வாங்கு வாழும் தெய்வீகப் பெருவாழ்வின் பொன்னொளி!
வள்ளுவன் முதலாக வளரினம் தேசிய மலர்ச்சிக் கவிஞர் களான பாரதி - பாரதிதாசன் வரை இடையறாது தொடர்ந்து, வருங்காலத் தமிழ்ப் பாரத தேசியம் நோக்கி - வருங்கால உலகப் பொங்குமாவளம் நோக்கித் தமிழினம் கண்டு வந்துள்ள கல்விக் கனவுகளை - கல்விக் கண்ணொளிக் கனவுகளை நாம் திரட்டுப் பாலாக்கிக் காண்டல் வேண்டும் - உண்டல் வேண்டும்! பாலுண வாக்கிக் காட்டல் வேண்டும் - ஊட்டல் வேண்டும்!
“வள்ளுவன் தன்னை
உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட
தமிழ்நாடு!”
தமிழகத்தின் - பாரதத்தின் தேசியக் கவிஞர், பாரதி; ஆனால் அவர், தமிழ்ச் சமுதாய விடுதலை இயக்கத்தை - பாரத நாட்டு விடுதலை இயக்கத்தை மட்டும் பாடவில்லை; பெல்ஜியத்தின் தன்மானப் போரை - சோவியத் உருசியாவின் யுகப் புரட்சியைப் பாடிய உலகக் கவிஞர் - உலகமாத்தேசியக் கவிஞர் அவர்!
வள்ளுவனைத் தமிழகம் தந்த பரிசாகத்தான் மாக்கவிஞர் பாரதியார் பாடினார்; ஆனால், தமிழருக்குத் தமிழகம் தந்த பரிசாக அன்று; உலகத்துக்கே - மனித இனத்துக்கே தமிழினம் தந்த பரிசாக அவர், வள்ளுவனைப் பாடிப் பராவினார்!
பாரதி - வருங்காலத் தமிழகத்தின் விடிவெள்ளி! வருங்கால பாரதத்தின் - வருங்கால உலக வாழ்வின் விடியல் ஒளி!
வள்ளுவனை மட்டுமோ? தொல்காப்பியரையும் மாணிக்க
வாசகரையும் - இளங்கோவடிகளையும் சாத்தனாரையும் - நக்கீரரையும் கொங்குவேளிரையும் திருத்தக்கதேவரையும் கம்பரையும் - ஒளவையாரையும் சூடிக்கொடுத்த நாச்சியாரையும் - பாரதியாரையும் பாரதிதாசனையும் ஏன், தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையுமே - தமிழினம் உலக்குத் தந்த பரிசுகளாகத்தான் வருங்கால அறிவு உலகம்… பண்பாட்டுலகம், பாராட்ட முடியும் - பாராட்டும்!
தமிழர் - சிறப்பாக இன்னும் தமிழகத்தின் ஓரத்திலே பதுங்கி ஒதுங்கி நின்று குளிர் காய்ந்துவரும் தமிழ்க் கடலின் கடற்கழித் தேக்கங்கள் போல் பலர் உலகத்துக்குத் தமிழகம் தந்த பரிசுகளைக் கூர்ந்து கவனித்தல் வேண்டும்!
கவனித்து, பாரதத்தின் - மனித இனத்தின் புது வளத்தினை - புது வாழ்வினை அவாவும் பண்பாளர்கள் அனைவருக்கும் இந்த மெய்ம்மைகளை எடுத்தியம்பல் வேண்டும் - எடுத்து விளக்குதல் வேண்டும்:
தமிழ், ஒரு மொழி மட்டுமன்று - மொழி கடந்த மொழி!
ஒரு பண்பாடு - ஒரு நெறி மட்டுமன்று - பண்பாடு கடந்த பண்பாடு; நெறி கடந்த நெறி!
அது ஒரு சமயம்; ஆனால் சமயம் மட்டுமன்று - சமயம் கடந்த சமயம், தெய்வீகச் சமயம்!
அது ஒரு கருத்துக் குவியல் - ஒரு புதுமைப் பண்ணை! மண்ணுலகத்தை விண்ணுலகமாக்கவல்லதொரு காவியக் கருவூலம்!
வையகத்து உறக்கத்தின் வாயிற் கதவங்களை ஒவ்வொன்றாகத் திறந்து, அவற்றினுடாக நம்மை நுழையவிடவல்ல திறவு கோற்கொத்து அது!
தமிழே பாரத தேசத்துக்கு - நாகரிக உலகத்துக்கு ஒரு கல்வி! எடுக்க எடுக்கக் குறையாத அமுதசுரபி போன்றதொரு வற்றாத கல்விப் பேரூற்று!
தமிழின் சொற்கள் மந்திரங்கள்! அவை புறப்பொருள் மட்டுமன்று - ஆழ்ந்த அகப்பொருளும் உடையவை!
தமிழின் இலக்கிய ஏடுகள் - காவியங்கள், வெறும் இலக்கிய
ஏடுகள் - காவியங்கள் அல்ல; அவை, எழுத்துருவம் மேற்கொண்டுள்ள மனத இனத்தின் வேதங்கள்!
அவை, நித்தியமான - சத்தியமான - என்றும் எழில் நலம், இளமை வளம் மாறாமல் வளர்ந்து வரும் வண்மை வளமுடைய மெய்ம்மறைகள் - மெய்ம்மறை விளக்கங்கள் ஆகும்!
தமிழில் எழுத்தும் சொல்லும், இலக்கியமும் இலக்கணமும், மொழியும் மொழி வளமும் யாவுமே - இகமும் பரமும், அகமும் புறமும், அலகிலா வளம் பெறப் பேணி வளர்த்து வரும் - வளர்த்து வரவிருக்கும் ஒரு முழுநிறை வாழ்க்கைப் பண்பாட்டின் ஓவா மூவா ஒளிமணிப் பெட்டகம் என்னல் தகும்!
மனித இன வாழ்வில் தெய்விகக் கனவுகள் கண்டு - அக்கனவுகளை நனவாக்குவதற்கு வழி வகுத்துரைப்பதன் மூலம்
தமிழினப் பண்பே உபநிதடங்கள் விழைந்த ஆன்மீக வளத்தை;
பார்சியரின் வேத முதல்வரான பகவான் சரதுட்டிரர் - சீனப் பெருநாட்டின் தந்தையரான கன்பூசியஸ் - லயோட்சி ஆகியோர் வகுத்தளித்த நிறைவாழ்வு நிலையை;
புத்தர் பிரானும், மகாவீரரும் குறிக்கொண்ட பேரின்ப அமைதியை;
இயேசு பெருமானும், நபிகள் நாயகமும் தீட்டிக் காட்டிய தெய்வீக அரசை;
இவ்வுலகிலேயே மனித இனத்தின் வருங்காலச் செல்வமாக்கும் வல்லமை பெற்றதாகும்.
மனித இனத்தின் கண்ணுக்குக் கண்ணாகக் கண்ணொளி அளிப்பது கல்வி; மனித இன நாகரிகத்தின் கல்வியில் - கலை இயல் வளர்ச்சியில் தமிழினத்துக்கு - தமிழ் இந்தியாவுக்கு உள்ள பங்கு, பெரிது- பெரிது -மாபெரிது!
அதை வகுத்துக் காண்டல் வேண்டும்!
“கற்றதனா லாய பயன் என்கொல், வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்?”
கல்வியின் முடிந்த முடிபான பயன், கடவுளை வழிபடுவது ஆகும்!
உலகில் தமிழ் தவிர வேறு எந்த மொழியிலும் எந்தக் கல்வித்துறை அறிஞரும் கூறாத கருத்து இது!
இதுமட்டுமோ? தமிழ் தவிர வேறு எந்த மொழியிலும், எந்தச் சமயவாணரோ - பக்தரோ, இதைக் கேட்டு மகிழலாமேயன்றி, இதைக் கூறியதில்லை கூறத் துணியவும் மாட்டார் என்பதில் ஐயமில்லை.
ஏனெனில், நில நூலும் - கணக்கும் - இயந்திர நூலும் - வரலாறும்- எப்படிக் கடவுளுடன் தொடர்பு கொள்ளக்கூடும்? ஆனால், திருவள்ளுவர் எவ்வாறு இப்படிக் கூற முடிந்தது?
திருவள்ளுவருக்கு - திருவள்ளுவர் மரபு வழிவந்த உண்மையான தமிழ்ப் பத்தருக்கு - கடவுள், மனித வாழ்வின் - மனித இன சமுதாய வாழ்வின் இலக்கு, அறிவிலக்கு - அன்பிலக்கு - சமுதாயத் தொண்டிலக்கு- பண்பிலக்கு - இன இன்ப இலக்கு!
“வாலறிவன், தூய அறிவுருவனவன்” என்ற அடை மொழியும் - கடவுள் வாழ்த்து குறட்பாக்களில் வழங்கப் பெறும் அடைமொழிகள் இதனைத் தெளிவுப்படுத்துகின்றன!
கல்வியின் இலக்கு கடவுள்; ஏனெனில், அதுவே வாழ்வின் இலக்கு!
கல்வித்துறை அறிஞர் மட்டுமன்றி, கடவுட் கருத்தை ஏற்றுக் கொள்ளாத நாத்திகர் கூடத் திருவள்ளுவரின் இந்தக் கல்வி இலக்கை ஒப்புக்கொள்ள முடியும் என்பது தேற்றம்!
கல்வி பற்றி இக்கருத்தைத் திருவள்ளுவர், கல்வி பற்றிய அதிகாரத்தில் கூறவில்லை. இறை வாழ்த்து அதிகாரத்தில் - அதுவும் இரண்டாவது குறட்பாவிலேயே கூறினார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
இக்குறட்பா, கல்வியின் குறிக்கோளை மட்டுமே கூறியது என்பதை அதன் அதிகார வைப்பு காட்டுகிறது.
கல்வியின் குறிக்கோள் - வள்ளுவர் வலியுறுத்தல்
கல்வியின் குறிக்கோள், தனி மனிதன் நலமன்று - மனித இன சமுதாய முழுமையின் நலம் என்பதையும், அந்த இனச் சமுதாய வாழ்வு முழுவதும் ஒரு குறிக்கோள் உடையதாதலால், ஒரே முழுநிலை ஒருமைப்பாடு உடையதென்பதையும், திருவள்ளுவர் வற்புறுத்தியுள்ளார்.
கல்வி பற்றித் திருவள்ளுவர், ஓர் அதிகாரமன்று - கல்வி, கேள்வி கல்லாமை, அறிவுடைமை என நான்கு அதிகாரங்கள் வகுத்துள்ளார்.
இந்த அதிகாரங்கள், அறத்துப்பாலில் கூறப்படவில்லை; பொருட்பாலில் - அதிலும், அரசியலிலேயே கூறப்படுகிறது என்பது காணலாம்.
திருவள்ளுவர், நாட்டின் - அரசின் தேசியக் கடமையாகவே கல்வி நாட்டில் - உலகில் ஒரு சிலருக்கோ, ஒரு வகுப்பாருக்கோ, உயர்ந்தோருக்கோ உரியதென்று திருவள்ளுவர் கருதவில்லை!
‘வாழும் உயிர்க்கெல்லாம்’ அது உரியது - எனக்கூறி, அதனை மனித இனப் பொதுவுடைமை ஆக்கினார்!
கண்ணுடையர் என்பவர் கற்றோர்; முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்!
கல்வி என்பது - மனித இனம் முழுமைக்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும் உரியது என்று இன்று கருதுபவர்கூட, அதை, கையெழுத்திடும் அளவான அறிவு என்றோ, எழுத்து வாசனை அளவான கல்வி என்றோதான் எண்ணுகின்றனர்; திருவள்ளுவர் கருத்து இதுவன்று:-
“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரொடு ஏனை யவர்”
தமிழில் ‘நூல்’ என்பது புத்தகமன்று; இந்தப் பொருள் அதற்கு ஒரு நூறு ஆண்டுக் காலத்துக்கு இப்பால் - நம் காலத்தில், தமிழ் மரபு அறியாதவர்களால் ஏற்பட்டதேயாகும்.
நூல் என்பது, மனித இன சமுதாயத்துக்கு ஒளியூட்டும் அளவான உரிய அறிவு நூல் ஆகும்.
திருவள்ளுவர், ‘மனித இனத்தவர் அனைவருக்கும் - நாட்டு மக்கள் அனைவருக்குமே கூடியமட்டும் முழுநிறை கல்வியே - முழுநிலை விஞ்ஞானக் கல்வியே வேண்டும்’ என்பதை வற்புறுத்தி யுள்ளார்.
திருவள்ளுவரின் இக்குறிக்கோள்கள் ‘திருவள்ளுவருக்கு மட்டும் தான் உரியது’ என்று யாரும் கூறிவிட முடியாது.
தமிழ் இலக்கியம் முழுவதிலும் இதனைக் காணலாம்.
தமிழகப் பக்தர்கள்கூட, திருவள்ளுவர் கடவுட் கருத்தை - கல்விக் கருத்தை ஏற்றே பாடியுள்ளனர்!
‘கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி’ என்ற திருஞான சம்பந்தரின் பாடல், கடவுள் அறிவுருவினர் என்பதையும், ‘கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே’ என்ற வள்ளலார் பாடல் ‘அவர், அன்புருவினர்’ என்பதையும் ஒருங்கே வலியுறுத்துகின்றன! இக்கருத்துக்கள் - ஏட்டுக் கருத்துக்கள், ‘இலக்கியலான கொள்கைகள் மட்டுமே’ என்று யாராவது கருதுவார்களானால், ‘அது தவறு’ என்பதை வரலாற்றாய்வு காட்டும்.
வெள்ளை அயலார் ஆட்சியில் தான், நாடெங்கும் பள்ளிகள் - கல்லூரிகள் - பல்கலைக் கழகங்கள் ஏற்பட்டன என்றும், அதற்குமுன் தமிழகத்திலே - இந்தியாவிலே - திண்ணைப் பள்ளிகள் அதாவது தொடக்கப் பள்ளிகள்தான் இருந்தன என்றும் பலர் இன்னும் கருதுவதுண்டு; இது முற்றிலும் தவறு.
மேலையுலகின் பல்கலைக்கழகங்கள் - ஸ்பெயின் நாட்டை இஸ்லாமியர் ஆண்டபோது அவர்களால் ஏற்பட்ட இஸ்லாமியப் பல்கலைக்கழகங்களின் மரபில் வந்தவையே ஆகும்!
கி. பி. 3-ம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே, குசராத்தில் - வல்லபி பல்கலைக் கழகமும், பீகாரில் - நாலந்தா, விக்ரமசிலாப் பல்கலைக் கழகங்களும், பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் தேசியப் பல்கலைக் கழகங்களாக மட்டுமின்றி ஆசியாவின் - உலகப் பன்னாடுகளின் பல்கலைக் கழகங்களாகவே புகழ்பெற நடைபெற்று வந்தன; சீன - சப்பானிய- இந்தோனிய மாணவ, மாணவியர் அவற்றில் பயின்றனர்.
இந்தியாவின் பண்டைப் பல்கலைக்கழகங்கள் எல்லாவற்றிலும் அவற்றைத் தோற்றுவித்த முதல்வர்கள் - புகழ்பெற்ற துணைவேந்தர்கள் - பேராசிரியர்கள் ஆகியவர்கள் பெரும்பாலும் காஞ்சிப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்களாக இருந்தனர் என்று அறிகிறோம்.
பண்டை இந்தியாவின் தலைசிறந்த கவிஞர்களான பாராவி - தண்டி போன்றவர்களும், தலைசிறந்த விஞ்ஞானிகளான திங்நாகர் - நாகார்ச்சுனர் போன்றவர்களும், தலைசிறந்த தத்துவ மேதைகளான சங்கரர்- இராமானுசர் போன்றவர்களும் புத்த சமண சமயங்களின் உலகப் பேரறிஞர்கள் - திபெத்திலே, சப்பானிய சமய முதல்வர்களும் காஞ்சி அரசர் பேரவையி லிருந்தோ, காஞ்சி பல்கலைக் கழகத்திலிருந்தோ, காஞ்சியில் இருந்த பட்டிமன்றங்களில் பயின்றேதான் உலகப் புகழ் பெற்றனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க செய்திகள் ஆகும்.
அறிஞர் அண்ணாவைத் தந்த காஞ்சியில் மட்டுமன்றி, கலைஞர் கருணாவை ஈன்றெடுத்த திருவாரூரிலும், மதுரையிலும், வஞ்சியிலும், பிற பல பேரூர் - சிற்றூர்களிலும், பல்கலைக் கழகங்கள் - பட்டிமன்றங்கள் கல்லூரிகள் இருந்தன என்று கருத இடமுண்டு.
தமிழகத்தில், சங்க காலத்தில், கல்வி - கல்லூரிப் பல்கலைக் கழகக் கல்வி, விஞ்ஞானக் கல்வி ஆகியவற்றிற்கு - இருந்த ஒப்புயர்வற்ற சீரிய நிலையைச் சங்க இலக்கியமே காட்டும்.
இயற்கை ஆய்வில் - வான நூல், மருத்துவ நூலறிவில் - தமிழ்ச் சங்க இலக்கியத்துடன் இன்று கூட உலகத்தின் வேறு எந்த நாட்டு இலக்கியமும் ஈடு செலுத்த முடியாத ஒன்றாகவே அமைந்துள்ளது.
சங்க இலக்கியப் பாடல்களை இயற்றியவர்களின் பெரும்பாலானவர், ஓரிரு நூற்றாண்டுக்காலத்திற்குள் வாழ்ந்தவரேயாவர்; அந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்தவருள்ளும், இத்தொகை நூல்களில் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் ஒரு சிலராகவே இருக்க முடியும்.
இந்நிலையிலும், தமிழகத்தில் உச்சநிலைப் புலமையுடை யவர்களாக- கம்பரும், சேக்கிழாரும் அடியொற்றிப் பின்பற்றத்தக்க பெருமையுடையவராக ஐந்நூற்றுக்கு மேற்பட்ட சங்கப் புலவர்கள் இருந்தனர்.
அவர்களில் - மருத்துவர், சோதிடர், புரோகிதர், பல சரக்குக் கடையாளர், பள்ளி - கல்லூரி ஆசிரியர்கள் எல்லாரும் இருந்தனர்.
தமிழகத்திலும், கேரளத்திலும், கருநாடகத்திலும், ஆந்திராவிலும், இலங்கையிலுமாகக் கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலிருந்தும், நகரங்கள்- நகரத்தெருக்கள் - ஊர்களிலிருந்தும் புலவர்கள் சங்கத்தில் இடம் பெற்றிருந்தனர்.
குறவர் - வேடர் - மல்லர் - காட்டு மக்கள் அதாவது பேயர், நட்டுவர் முதலிய எல்லா மக்களுமே சங்கப் புலவர்களாய் அமர்ந்திருந்தனர்.
பெண் புலவர்களும் மிகப் பலர், நமக்கு வந்தெட்டியுள்ள முப்பதுக்கு மேற்பட்ட பெண்பாற் சங்கப் புலவர்களிலேயே, குறவரும் - வேடரும் - பேயரும் - அரச குடியினரும் ஆடல் நங்கையரும் உள்ளனர்!
உலகின் எந்த நாட்டின் எந்தக் காலத்திலும் - இன்றுகூட - சங்க - இலக்கியம் நிழலிட்டுக் காட்டும் இட வேறுபாடு - வகுப்பு வேறுபாடு - தொழில் வேறுபாடு - ஆண், பெண் வேறுபாடற்ற கல்விப் பிரதிநிதித்துவத்தை நாம் காண முடியாது!
மனித உலகின் கல்வியில், தமிழினத்துக்கு உரிய பங்குபற்றிய ஆய்வில், கல்வியின் இன்றியமையாக் கூறுகளான எண்ணும் எழுத்தும் இடம்பெறுபவை ஆகும்.
“எண்என்ப, ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப, வாழும் உயிர்க்கு”
எண் என்பது, இலக்கத்தை - கணக்கையும், எழுத்து என்பது எழுதல் - வாசித்தல் - திறமையையும் குறிப்பதுண்டு; ‘என்ப, ஏனை’ என்ற அடைமொழிகள் மூலம் - திருவள்ளுவர், அறிவு நூல்களுக் கெல்லாம் மூலமான எண்ணையும் அறிவுநூல்களையும், கலைகளுக்கெல்லாம் மூலமான எழுத்தையும், கலைகளையும் கல்வி எனச் சுட்டியுரைத்தார்.
பரிமேலழகர் உரையும், இக்கருத்தையே வலியுறுத்துகின்றது.
இன்று உலகில் ஏழாயிரத்துக்கு மேற்பட்ட மொழிகள் உள்ளன; எழுத்தும் இலக்கியமும் உள்ள மொழிகள்; இவற்றுள் ஒரு நூறு மட்டுமேயாகும்.
இந்த நூறிலும்கூட, தனக்கென எழுத்துடைய மொழிகள் தமிழும், தமிழின் மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் முதலியன மட்டுமே!
ஆங்கிலம் முதலிய மேனாட்டு மொழிகள் யாவும் - அவற்றுக்கு மூலமாகிய இலத்தீன, கிரேக்க மொழிகள்கூட - ஏதோ பண்டைப் பேருலகின் மாண்ட மொழிகளின் எழுத்துக்களைத் தமக்குப் பொதுவாக்கி, தத்தம் தேவைக்கேற்பக் கூட்டியும் - குறைத்தும் கொண்டன! தமக்கென ஒலி எழுத்துக் களை என்றும் வகுத்துக் கொள்ளவே இல்லை!
இவற்றின் நெடுங்கணக்கு வரிசை கூட, உயிர் என்றோ - மெய் என்றோ - குறில் நெடில் என்றோ - எத்தகைய ஒழுங்குமின்றி, தலைமுறை தலைமுறையாகக் குருட்டுத்தனமாகப் பின்பற்றிவரப் பெறுபவையேயாகும்.
அரபு, துருக்கி இஸ்லாமிய மொழிகளின் நிலையும் இதுவே!
சீன, சப்பானிய மொழிகள், பட எழுத்துக்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஏற்படுத்திக் கொண்டாலும், தமக்கென ஒலி எழுத்துக்களை ஆக்கிக் கொள்ளவில்லை. தமிழிலிருந்து-சமக்கிருதத்திலிருந்து - அணிமைக் காலத்தில் மேலையுலகிலிருந்தே அவர்கள், ஒலி எழுத்துப் பெற்றுள்ளனர்.
இந்திய மொழிகளெல்லாம் - சமக்கிருதம் உட்பட - இந்தியாவின் ஏதோ பண்டைக்கால மாண்ட மொழி ஒன்றின் எழுத்து முறையை இன்றளவும் பொதுவாகக் கொண்டுள்ளன.
இந்த எழுத்து முறையும், உயிர் - மெய் - குறில் - நெடில் - வன்மை- மென்மை, இடைமை - என்ற வரிசை முற்றிலும், ஒலி முறையிலும், வடிவங்களிலும், முற்றிலும் தமிழ் நெடுங் கணக்கையே பின்பற்றியுள்ளது!
இவ்வெல்லா எழுத்துக்களுமே, சிங்கள - பர்மா - பண்டைய ஈரானி முதலியவை உட்பட ஒலிமுறை - உருவ நுட்ப நுணுக்கக் கூறுகளில் கூடத் தமிழை ஒத்தியல்வது நோக்க, இவற்றுக்கு மூலமான மாண்ட மொழிகூடத் தமிழிலிருந்தே எழுத்துக்களை எடுத்துக் கொண்டிருத்தல் கூடும் என்னலாம். மோகஞ்சதரோ காலம் முதல், தமக்கெனப் படஎழுத்தும், உரு எழுத்தும்,
அசை எழுத்தும், அறிவுக்கு மிகப் பேரளவில் ஒத்த ஒலி எழுத்தும் வகுத்துக் கொண்டவர்கள், தமிழரும் - தமிழினத்தவராகிய திராவிடருமே ஆவர்!
கண்ணெழுத்து (Shorthand) குறி எழுத்து (Secret Code) ஆகியவை கூடத் தமிழரிடையே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வழக்கிலிருந்ததாக அறிகிறோம்.
எண், எழுத்து ஆகிய இரு கண்களில், உலகுக்கு எழுத்து அளித்தவர் தமிழரே என்பது தெளிவு!
இன்று நாம் பயன்படுத்தும் எண் முறை, ‘பதின்மான முறை’ என்று அறிஞரால் வழங்கப்படுகிறது; இது, பத்து - நூறு - ஆயிரம் - எனப் பத்துப் பத்தாக ஏறிச் செல்லும் தான ஏற்றத்தைக் கொண்டது!
நம் பள்ளி கல்லூரிகளில் - உலக இலக்க முறையை நாம், ‘ஆங்கில எண்’ என்று கூறி வந்ததுண்டு; ஆனால், மேலை நாட்டினர் இதனை, ‘அரபு இலக்கம்’ என்றே அணிமைவரை வழங்கினர்.
ஸ்பெயினில் இசுலாமியர் ஆட்சி செலுத்தியபோது, பல்கலைக் கழக முறையையும், விஞ்ஞானங்களையும், ஐரோப்பியர் அவர்களிடமிருந்து பெற்றதுபோல் - இந்த இலக்க முறையையும் நானூறு ஐந்நூறு ஆண்டுகட்கு முன் பெற்றனர்!
அராபியர் இந்த எண்மான முறையை, இந்தியாவிட மிருந்தே கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் பெற்றனர்.
இதனால் இன்று, ‘உலக எண், இந்திய எண்’ என்றே வழங்கப் பெறத் தொடங்கியுள்ளது!
உலக, எண்ணை எழுதி வாசிக்கும்போது, இன்று உலகிலுள்ள மொழிகளில், அரபு - தமிழ் அல்லது திராவிடம் என்ற இரு மொழிகள் தவிர, மற்ற எல்லா மொழிகளிலும் வாசிக்கும் வரிசை எழுதும் வரிசைக்கு நேர்மாறாகவே உள்ளது!
ஆங்கிலத்தில் இன்று நாம் தமிழைப் பின்பற்றி ‘இருபத்தைந்து’ (Twenty - Five) என்று கூறுகிறோம். 1-ம் நூற்றாண்டுக்கு முன் ஆங்கிலேயர், ‘ஐந்துடன் இருபது’ (Five and
twenty) என்றுதான் கூறினர்; ‘பதினெட்டு’ என்பதை இன்றும், ‘எட்டுடன் பத்து’ (Eighteen) என்று கூறுவது காணலாம்.
எல்லா ஐரோப்பிய மொழிகளின் நிலையும் இதுதான்!
எல்லா வட இந்திய மொழிகள், சமக்கிருதம் ஆகியவற்றின் நிலையும் இதுவே!
சமக்கிருத வாணரும், இந்தி வாணரும், ‘பதினெட்டு’ என்பதை ‘எட்டு பத்து’ (அஷ்டாதசம், அட்டாரஹ்) என்றும், ‘இருபத்தைந்து’ என்பதை, ‘ஐந்திருபது’ (பஞ்சவிம்சதி, பசாஸ்) என்றும், ‘நூற்றெட்டு’ என்பதை, ‘எட்டுடன் நூறு’ (அஷ்டோத்தர சதம்) என்றும் கூறுவது காணலாம். எல்லா நாகரிக உலக மொழிகளும் இப்போதுதான் மெல்ல மெல்லத் தமிழைப் பின்பற்றி, எண்களின் பெயரை மாற்றத் தொடங்கியுள்ளன!
இந்தி மொழியில் தமிழைப் பின்பற்றிய எண்முறை ஒலிப்பு காந்தியடிகளாலேயே புதிது கண்டு ஆக்கப்பட்டது.
எண் - எழுத்து ஆகிய கண்களில், எண்ணின் பதின்மான முறையும், உலகுக்குத் தமிழகம் தந்த பரிசே என்பதை இது காட்டுகிறது!
‘அரை - கால்’ என்ற கீழ்வாய் (Fraction) எண்கள் மட்டும்தான் இன்று, இந்தி - சமக்கிருதம் உட்பட எல்லா உலக மொழிகளிலும் உள்ளன.
ஆனால் உலகிலேயே தமிழ் - குசராத்தி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டும்தான் அரை, கால் - அரைக்கால் என மிக நுணுக்கமாக வீசம் (1/16), கால் வீசம் (1/64) வரையிலும், அதற்கப்பாலும் கீழ்வாய் இலக்கங்கட்குப் பெயரும் - குறியிலக்கமும் உண்டு.
தமிழர், கீழ்வாய் மானத்தில் (1/320) அதில் முந்நூற்றிருபதில் ஒரு பங்கான கீழ்முத்திரை - அதில் இருபத்தொன்றில் ஒரு கூறான இம்மி - அதனிலும் நுட்பமான கூறுகள் என இலக்கப் பெயர்களும், இலக்கமும் கொண்டுள்ளனர். தமிழரே உலகுக்கு எண்மானம் வழங்கினர் என்பதை இக்கீழ் வாய்மானமும் வலியுறுத்திக் காட்டுகிறது!
(8.12.1974)
ஒ. தமிழ்த் தென்றற் பண்பு ஊடாடி வரும் இந்திய மரபு
பாரதிதாசன் கவிதை ஒரு பொங்கு நீரூற்று.
தமிழக முதல்வர் கவிஞர் டாக்டர் கருணாவின் கவிதை மற்றுமொரு பொங்கு நீரூற்று! பொங்கு நீரூற்றுகள் (Artesian Wells) அடிநில ஆழத்திலிருந்து செறிவுடனும் விசையுடனும் மேனோக்கிப் பீறிட்டு எழுகின்றன; தொலைதூர மலைமேடுகளி லிருந்து அவை, அடிநீல வழி ஊறித் தேங்குவதே இச்செறிவுக்கும் விசைக்கும் மூலகாரணம் ஆகும்.
பாரதிதாசன் கவிதையினுக்குரிய மூல விசையாற்றல், ஏழு நூற்றாண்டுகளுக்கு சோழப் பேரரசர் வாழ்வில் தேங்கிய தமிழக மாக்கவிஞன் கம்பனின் கவிதைப் பெருவெள்ளமே ஆகும்!
இது, புரட்சிக் கவிஞர் பாரதிதாசனே அறியாமல் - அவர் உள்ளத்தினூடாக எழுந்த விசை ஆகும்; ஆனால் இதைச் செவியுற்றபோது அவர், ஏற்றமைவுற்றார்! ஒற்றுமைவுற்று, அப்பண்பைப் பின்வந்த தம் கவிதைகளில் அவர் தயங்காது மனமார வளர்த்தார்; திறனாய்வாளர் இதனைக் கண்டுணர முடியும்!
தமிழர் உள்ளத்தில் மட்டுமன்றி அவர்கள் வாழ்விலும், இலக்கியத்திலும் ஒருங்கே ஆட்சி செய்யும் தமிழக முதல்வர் டாக்டர் கவிஞர் கருணாவின் கவிதையாற்றலின் மூலவிசை - வியத்தகு முறையில் - ஈரேழு நூற்றாண்டுகளுக்கு முற்பட்டு எழுஞாயிறாகச் சமக்கிருத இலக்கியவானில் ஒளி வீசிய கவி காளமேகமான காளிதாசனின் கவிதைப் பெருக்கே ஆகும்!
கம்பன் கவிதை - ஒரு தென்திசைப் பேரருவி!
காளிதாசன் கவிதை - ஒரு வடதிசைப் பேரருவி!
இரண்டுக்கும் உரிய தலை நீரூற்று, தமிழ்ச் சங்க காலத்துக்குரிய தமிழ்த் தென்றற் பண்பின் வானுயர் மரபே ஆகும்!
பாலை நீரூற்றுப் போலத் தெளிந்த துள்ளு நடை - உணர்ச்சிகளை அடங்கிய அடிநில வேகத்தில் தத்தியோடவிடும் விழுமிய போக்கு - இயல்பான ஆனால் புத்தம் புதியனவான உவமைகளின் நய விநய நுணுக்க அழகு - இவை, சங்க இலக்கியமாகிய வானில் - பெய்த மழை நீரோட்டமாக- காளிதாசன் என்னும் தலை நீரோடையில் ஓடித் தேங்கி, ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இந்தியர் வாழ்வில் - தமிழர் வாழ்வில் அடியோடி வந்து, கருணை என்னும் கவிதையுள்ளப் புழை வழி நம்மிடையே பீறிட்டெழுகிறது என்னல் தகும்!
தென்றலைப் பாடாத தமிழ்க் கவிஞர் - தமிழ்க் காவியம் இல்லை; ஆனால், தமிழகத்துக்கு வெளியே - வேறு எந்தக் கவிஞனும் பாடாத அளவில் - தமிழ்ப் பண்பு நிரம்பித் ததும்பும் உள்ளத்துடன் - தமிழ் மரபு பொங்கிப் பொதுளும் முறையில் தென்றலைப் பாடிய சமக்கிருத மொழியின் முழுமுதற் கவிஞன் காளிதாசனே!
அசோகனுக்கு முன்னிருந்தே - புத்தர்பிரான் காலத்திலிருந்தே கி.மு. 6-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2-ம் நூற்றாண்டு வரையுள்ள காலமே தமிழ்க் கடைச்சங்க காலம்! இக்காலத்திலே, தமிழகம் மட்டுமன்றி, தென்னக மெங்குமிருந்து - கேரளத்திலிருந்து - கர்நாடகத்திலிருந்து - ஆந்திரத்திலிருந்து - ஈழம் அல்லது இலங்கையிலிருந்துகூட - நூற்றுக்கணக்கான தமிழ்ப் புலவர்கள் மதுரையில் வந்து சங்கம்கூடி - தமிழ்ப்பண்பு வளர்த்து - தமிழில் பாடி - உலகிலேயே ஒப்புயர்வற்றதோர் உலகப் பேரிலக்கியத்தை ஆக்கினார்கள்! கவி காளிதாசன், குப்தப் பேரரசர்களின் அவையிலே, கி. பி. 4-ஆம் அல்லது 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவன்தான்! ஆனால், சங்கத் தமிழ் மரபு இந்தியாவில் மறந்துவிடப்படாத - அதன் பேரொளி முழு அளவில் இந்தியாவெங்கும் ஒளிவீசத் தவறாத காலத்தவன் அவன்; இதனாலேயே அவன், தமிழ்த் தென்றல் மரபைத் தானும் முனைப்பாகத் தீட்டி, சமக்கிருத இலக்கியத்திலே- சமக்கிருத மொழியிலேயே, இந்தியாவின் தாய்மொழிகளிலே - தாய்மொழிகளின் இலக்கியத்திலேயே - அதன் பைந்தடங்கள் இன்றுவரை நிலவும்படி பொறித்துவிட முடிந்தது!
நகரிலும் நாட்டிலும் - வாழ்விலும் உணவிலும் - வீட்டிலும் ஏட்டிலும் - தமிழர் வகுத்துள்ள திட்டப்பண்பு வியப்பிற்குரியது!
காற்றில்கூட நாம், இந்த வகுப்பு முறையைக் காணலாம்!
தெற்கிருந்து வீசும் காற்று - தென்றல்!
வடக்கிருந்து வீசும் காற்று - வாடை!
கிழக்கிலிருந்து வீசும் காற்று - கொண்டல்!
மேற்கிருந்து வீசும் காற்று - கோடை!
நான்கு திசைகளிலிருந்து வரும் காற்றுக்குத் தமிழர், இவ்வாறு நான்கு தனித்தனிப் பெயர்கள் வழங்கினர் - தனித்தனிப் பண்புகளும் கண்டு வகுத்தனர்!
மென்மை - மென்குளிர் - வெதுவெதுப்பு - சிலுசிலுப்பு ஆகிய பண்புகளை உடையது தென்றல்! இனிமையும் - காதலும் - இளமையும் - அதுதரும் வாழ்க்கைப் பண்புகள்!
பண்பில் ஓரளவு தென்றலை ஒத்தது - கொண்டல்! மட்டான குளிர்- மட்டான வெப்பு - மட்டான மழை - ஆகிய பண்புகளை உடையது அது! கட்டிளமையும் மணவாழ்வும், அதுதரும் வாழ்க்கைப் பண்புகள்!
கடுமை - கடுங்குளிர் - வறட்சி ஆகியவை, வாடையின் இயல்புகள்; அது, இனிமையுடையதன்று; ஆயினும் அது, வாட்டி வலிமை தருவது!
முதுமை - முதுமையின் விளைவாய் வரும் முதுக்குறைவு; அதாவது, பட்டறிவு - சாவு!
சாவின் பயனாய் வரும் நிலையாமை - உணர்வு ஆகியவை, அதுதரும் வாழ்க்கைப் பண்புகள்!
பண்பில் ஓரளவு வாடையை ஒத்தது, கோடை; கடுவெப்பு, கடுமழை அதன் இயல்புகள்; முதுமை - நோய் - சாவு ஆகிய புறப்பண்புகளை எதிர்த்து நிற்கவல்ல அகத்தெழு பண்பாகிய உள்ளுயிர்ப்பாற்றலே அது தரும் வாழ்க்கைப் பண்பு, பொதுவாக உலகெங்கணும் - சிறப்பாக இந்தியா, தென்கிழக்காசியா முழுவதும் பரவியுள்ளது!
இது வெறும் காற்றுப் பண்பு - திசைப் பண்பு அன்று! ஓர் உயிர்ப்பண்பு மரபே, தமிழ்த் தேசிய மரபே ஆகும்! ஏனெனில், காற்றின் திசைகள் உலகில் நாட்டுக்கு நாடு - இடத்துக்கு இடம் மாறுபட்டாலும், இப்பண்பு மரபு சிறுசிறு மாறுதல்களுடன் - ஆகும்; தமிழர் இதனையே, ‘நோன்பு - தவம்’ என்றனர்!
தமிழர் வகுத்த இந்தத் தென்றல் - வாடை, கொண்டல் - கோடைப் பாகுபாடு, எங்கும் அடிப்படை அமைதி மாறாமல் ஒருபடித்தாகவே பரவியுள்ளது!
எடுத்துக்காட்டாக, உலகக் கோளத்தின் வட கோடியிலும் - தென்கோடியிலும், நிலப்பரப்புகளும் - கடல்நீர்ப் பரப்புகளும், வானும், எல்லாம் ஒரே பனிப் பாலையாகவே இயங்குகின்றன!
இரு கோடிகளிலுமே எல்லாக் காற்றுகளும் அவை எத்திசையிலிருந்து வீசினாலும் - பண்பில், வாடைக் காற்றுகளே - பனிச் சூறாவளிகளே!
தவிர, உலகின் வட பாதி மண்டலத்தின் தான், தென்றல் தெற்கிருந்து- வாடை வடக்கிருந்து வீசும்! தென்பாதி மண்டலத்திலே - ஆஸ்திரேலியாவிலே தென்றல், வடக்கிருந்து தான் வீசும்! வாடைதான் தெற்கிருந்து வீசும்!
மேலும், தமிழகத்துக்கும் - கிழக்கிந்தியாவுக்கும் - சீனத்துக்கும்தான், கொண்டல் கிழக்கிருந்து - கோடை மேற்கிருந்து வீசும்!
கேரளத்துக்கும் - மேற்கிந்தியாவுக்கும் - பர்மாவுக்கும் -கிரீசுக்கும்- மேலை ஐரோப்பாவுக்கும் - கொண்டல், மேற்கிருந்துதான் வீசும்! கோடைதான் கிழக்கிருந்து வீசும்!
உலகிலே, திசையுடன் பண்பு பிறழ்வதை இன்னொரு வகையிலும் காணலாம்.
தமிழகத்துக்குக் கிழக்கே - கடற்கரை, தாழ்வான நிலம்! இதனாலேயே தமிழர், அத்திசையை, ‘கீழ்த்திசை - கிழக்கு’ என்றனர்.
மேற்கே - மலைத்தொடர் - மேடான நிலம் இருக்கிறது; இதனாலேயே அவர்கள், அத்திசையை, ‘மேல்திசை - மேற்கு’ என்றனர்!
கேரளத்தில் இந்நிலை நேர்மாறானது; ஆயினும் மலையாள மொழியிலும், கீழ்த்திசை, ‘கிழக்கு’ எனவே வழங்கப்பெறுகிறது!
தென்னகம் முழுவதும் எல்லா மொழிகளிலும், தமிழ் மொழிப் பண்பே பரவிக் கிடப்பதுபோல், உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் தமிழ் மரபுப் பண்பே ‘நாகரிகம்’ என்ற போர்வைக்குள் பரவிக் கிடப்பது காணலாம்!
வாடையின் நடுங்கும் குளிரிலும், காயமுற்ற படை வீரர்களுக்குத் தானே நேரில் சென்று தொண்டு செய்யும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் விழுமிய அன்பு வீரம் பாடுகிறார் - பத்துப் பாட்டில், ‘நெடுதல் வாடை’ என்னும் வீரகாவியத்தின் ஆசிரியரான நக்கீரர் பெருமான்!
கோடையின் வெப்பில் காதலி தொட்ட இடமெல்லாம் காதலனுக்குச் சிலிப்ப்பூட்டுவதைப் பாடுகிறார் - நம்காலத் தமிழ்த் தேசியக் கவிஞரான பாரதிதாசனார்! செர்மன் மொழிக் கவிஞர்களும், ஆங்கில மொழிக் கவிஞர்களும், வாடை அல்லது வட காற்றை (North - Wind) இதே பாணியில்தான் வருணிக்கின்றனர்!
உலக மாக்கவிஞன் சேக்சுப்பியரின் ‘மன்னன் லியர்’ (King Lear) நாடகத்தில், அம்மன்னன், கடுமையில் வாய்மை காட்டும் வாடைக் காற்றையே, ‘துயரிடையே ஆறுதல் தரும் காற்றாக’ வரவேற்பது காணலாம்!
ஆங்கில மொழியின் புரட்சிப் பெருங்கவிஞனான ஷெல்லி, ‘மேல் காற்றே வா வா’ (Ode to West Wind) என்ற தன் இறவாக் கவிதையில் - நக்கீரர் பெருமானின் நெடுநல் வாடையையே நினைவூட்டும் முறையில் - சாவினின்று வாழ்வூக்கும் அம்மேல் காற்றின் மலர்ச்சிப் பண்பு பற்றிப் பாடுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.
“மேல் காற்றே!
பனிக்கோடை வந்ததெனில்
அதன் பின்னூடே
பசுந்தென்றல் வருமன்றோ,
பாரில் இங்கே?”
தமிழரின் ஆறு பருவங்களையும் பாடும் ‘இருது சம்மாரம்’ என்னும் தன் சிறு காப்பியத்திலே, மாக்கவிஞன் காளிதாசன், கோடையில் காட்டெருமையும் - அரிமாவும் படும்பாட்டிலேயே வீறுடைமை நாட்டியுள்ளான்!
கிரேக்கர், தென்றலை ‘குதி இளங்காற்று’ (zephyros) என்றே பாடினர்! அவர்கள் நாட்டுச் சூழலில், அப்பண்புடைய காற்று, தெற்கிருந்து வீசுவதன்று - மேற்கிருந்து வீசுவது என்பது குறிப்பிடத் தக்கது!
ஆனால், உலகெங்கணும் பரவிய தென்றல், வாடைப் பண்புகளை விட, இந்தியாவெங்கணும் - ஆசியாவெங்கணும் பரவியுள்ள தென்றல் பண்பே, இடம் விட்டு இடம் பரவிப் புதுமரபு தழைக்கவைக்கும் படலரா மரப்பண்பாய் அமைந்துள்ளது!
தமிழருக்கு - தமிழ் மரபு வழிநின்ற காளிதாசனுக்கு - அவன் வழிவழி நின்று இன்றளவும், அம்மரபு பேணும் இந்தியத் தாய்மொழி இலக்கிய மரபுக்கு - தென்றல் எங்கோ தெற்கிருந்து வரும் காற்று அன்று; அது, தமிழகத்தில் - தமிழரால், ‘பொதிகை - பொதியை - பொதியம் - பொதியல்’ என்றும், மலையாளிகளால், ‘அகத்தியக் கூடம்’ என்றும், இந்தியாவெங்கணும் தமிழராலும் - சமக்கிருதவாணராலும் - மலையம் அல்லது மலயம் என்று அழைக்கப்படும் தமிழர் திருமலையிலிருந்து பிறப்பதாகும்!
‘தண்பொருநை’ அல்லது ‘தாமிரவருணியாறு’ பிறப்பதும், குற்றாலம்- பாவநாசம் ஆகிய வாழ்நலத் தீர்த்தங்களைத் தன் சூழ்வாரங்களில் உடையதும், பொதியை அல்லது மலயம் என்ற இத்தமிழ்த் திருமலையே ஆகும்.
தமிழ் இந்திய மரபிலே இப்பொதிய மலைக்குத் தமிழுடனும் - தென்றலுடனும், இளவேனில் அல்லது வசந்த காலத்துடனும், தென்றலுக்கும் - காதலுக்கும் இறைவனாகக் கொள்ளப்படும் மன்மதனுடனும் நெருங்கிய தொடர்பு உண்டு!
இத்தொடர்புகளைச் சமக்கிருத மொழியே - சமக்கிருத இலக்கிய மரபே - மிகப் பழங்காலச் சமக்கிருத மாக்கவிஞனான காளிதாசனின் சொல்லாட்சிகளே நமக்கு விளக்கிக் காட்டுவனவாயுள்ளன!
மலையம் அல்லது மலயம் - இது, தமிழரின் திருமலையாகிய தமிழகப் பொதிய மலையின் சமக்கிருதப் பெயர்!
மலையவாதம், ‘மலயத்திலிருந்து பிறந்து வீசும் காற்று’ என்பதே சமக்கிருத வழக்காற்றில் தென்றலுக்குரிய பெயர்!
மலயானிலம் - மலயமாருதம் - மலயபவனன் - மலயம் எனவும், சமக்கிருத மொழியிலும், வங்காளி - இந்தி - மராத்தி - குசராத்தி முதலிய பல்வேறு இந்தியத்தாய் மொழிகளிலும் இத் தென்றற் காற்று இன்றளவும் பாடல்களில் - நாடகங்களில் - திரைப்படப் பாடல்களில் வழங்கப் பெறுகிறது!
‘மலயராசன்’ என்பது, தென்றலுக்கும், காதலுக்கும் இறைவனாகிய மன்மதன் அல்லது வசந்தனுக்குரிய சமக்கிருதப் பெயர். தென்றலே அவனுக்குரிய ஊர்தி அல்லது வாகனம் என்பது தமிழகத்தின், இந்தியாவின் கவிதை மரபு ஆகும்.
மலயசம் (மலய மலையில் அதாவது பொதிய மலையில் பிறப்பது) என்பதே சந்தனத்திற்குரிய சமக்கிருதப் பெயர் ஆகும். வங்காள இலக்கிய மலர்ச்சிக்கும், இந்திய விடுதலை இயக்கத்திற்கும் ஓர் எழுஞாயிறாக விளங்கிய பங்கிம் சந்திரரின் பாரத மாதா வார்த்தாகிய வந்தேமாதர கீதத்தில், அவர், பாரத அன்னையைச் சந்தனத்தின் குளிர் நறுமணமுடையாள் (மலையச் சீதளாம்) என்று இச்சொல்லை ஆண்ட வண்ணமே குறிப்பிட்டுள்ளது காணலாம்.
இந்தத் தென்றல் மரபுகள், சமக்கிருத மொழி மரபுகளான பின்புதான், உலக மாக்கவிஞன் காளிதாசன், அதைத் தன் மரபாகக் கையாண்டானோ அல்லது அம்மாக்கவிஞன் கையாண்டதனால் தான் அவை சமக்கிருத மொழியில் - தமிழ் மரபின் சின்னங்களாக இடம் பெற்றனவோ - இதை நம்மால் இன்னும் அறுதியிட்டு முடிவாகக் கூற முடியவில்லை.
ஆனால், காளிதாசனே சமக்கிருத மொழியில், கிட்டத்தட்ட முதற்கவிஞன் அல்லது முதற் கவிஞர் குழுவில் ஒருவன் என்பது நோக்க, இம்மரபைப் பெருவழக்காகப் பரப்பியவன், அம்மாக் கவிஞனே என்பதில் ஐயம் ஏற்படமுடியாது!
ஆங்கிலேயரால் - ஆங்கிலப் பெருங்கவிஞராக மட்டும் கருதப்பட்டு வந்த சேக்சுப்பியரை, உலக மாக்கவிஞனாக இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தியவர், செர்மன் இலக்கிய உலகில் பேரறிவுப் பெருங் கவிஞனாக விளங்கிய ‘கெதே’ என்ற உலக மாக்கவிஞரேயாவர்.
அதுபோலவே, சமக்கிருத வாணரால் சமக்கிருதப் பெருங் கவிஞனாக மட்டுமே கருதப்பட்டு வந்த காளிதாசனை, உலக மாக்கவிஞனாக உலகுக்கு அறிமுகப்படுத்தியவரும் அதே செர்மன் மாக்கவிஞன் கெதேதாம்!
ஆனால், காளிதாசனின் முழுப் பெருமையை விளக்கியவர் - ‘தமிழ்ச் சங்க இலக்கிய மரபு வழாத - தமிழ்ப் பண்பு மரபில் வந்த உலக மாக்கவிஞன்’ என்று காளிதாசனைத் தமிழுலகுக்குப் புதிது அறிமுகப்படுத்தியவர் - நம் காலப் புதிய தமிழகத்தின் தந்தையாரான ஆசிரியர் திருவார் திரு. மறைமலையடிகளாரே ஆவர்!
‘விருத்தத்திற்கு உயர் கம்பன்’ என்ற தமிழ்ப் பழஞ்சொல்லை ஒத்து, ‘உவமைக்குக் காளிதாசன்’ (உபமா காளிதாசஸ்ய) என்ற சமக்கிருதப் பழமொழி ஒன்று உண்டு.
செயற்கை வழி செல்லாது - சங்க இலக்கியத்தை ஒத்து இயற்கையாக நடமிடும் இந்த உவமைப் பண்பிலேயே கவிஞர் டாக்டர் கருணா, காளிதாசனின் மரபை நினைவூட்டுபவர் - அவர் கவிதை மரபில் வந்த பொங்கு நீரூற்று ஆகிறார்!
“பத்துப்பாட் டாதிமனம்
பற்றினார், பற்றுவரோ,
எத்துணையும் பொருட்கிசையா
இலக்கணமில் கற்பனையே?”
‘மனோன்மணியம்’ ஆசிரியர் சுந்தரனார், பிற்காலத் தமிழ்க் கவிதையிலிருந்து வேறுபடுத்தி, பத்துப்பாட்டு போன்ற சங்க இலக்கியங்களில் அமைந்த ஐந்திணை இலக்கண வரம்புக்கு உட்பட்ட இயற்கை வாய்மைப் பண்பை (Realism)த் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் சிறப்பித்துள்ளார்!
‘சங்க காலத் தமிழும் - பிற்காலத் தமிழும்’ என்ற தம் திறம்பட்ட ஆய்வேட்டில், டாக்டர் உ.வே. சாமிநாதய்யரும், ‘முற்கால - பிற்காலத் தமிழ்ப்புலவோர்’ என்ற தம் ஆய்வேட்டில் ஆசிரியர் மறைமலையடிகளாரும், சங்க இலக்கியத்தின் இதே வாய்மைப் பண்பு - செயற்கையான வெற்று உயர்வு நவிற்சி அணிகளாய் அமையாமல் - தன்மை நவிற்சி வாய்ந்த மெய்யடியாகவே அமைந்த அவன் உவமை நயங்களை விளக்கியுள்ளார்கள். தமிழிலக்கிய வரலாற்றில் கண்ட இதே முற்கால - பிற்கால நயவேறுபாடுகள், சமக்கிருத இலக்கியத்துக்கும் பொருந்தும்.
கடைச்சங்ககால இறுதியை ஒட்டியே வாழ்ந்த சமக்கிருத முற்காலக் கவிஞனான காளிதாசன், கவிதைப் பண்பில் சங்க இலக்கிய மரபினைத் தழுவி நின்றது போலவே, தமிழ்த் தென்றல் பண்பு வகையிலும், தமிழ் மரபு வழி நின்றமைந்தான் என்பது குறிப்பிட்ட செய்தி ஆகும்.
சமக்கிருத மொழியின் கவிக்காளமேகமாம் காளிதாசன் - காதலைப் பாடிய கவிஞர் கோமான்!
அவன், காதற் கடவுளாகிய மன்மதனை, ‘மலயராசன்’ என்றும் - மன்மதனின் ஊர்தியாகிய தென்றலை, ‘மலயவாதம்’ என்றும் - தென்றல் மணத்துடன் கலந்த மணமாகக் காதலர் மார்பில் தவழும் சந்தனத்தை ‘மலயசம்’ என்றும், தான் பாடுமிடமெங்கும் பராவி, சமக்கிருத மொழியின் கவிதை இலக்கியத்தையே தமிழ் மரபின் புகழ் பாடும் ஒரு கவிதை மரபாக்கி, அதையே அகல் இந்தியாவின் உயிர் மரபாக வளரவிட்டுச் சென்றுள்ளான்!
இதுமட்டுமோ? மதுரை - திருநெல்வேலி - கொற்கை முதலிய ஊர்ப் பெயர்களும், பாண்டி - பாஞ்சாலம் முதலிய நாட்டுப் பெயர்களும், தென்னகத்திலும் - இந்தியாவிலும் - இலங்கையிலும் - ஆப்பிரிக்காவிலும்- தென்கிழக்காசியாவிலும் காணப்படுவது உண்டு.
தமிழர் நாகரிகத்தின் அகல் உலக விரிவகற்சியின் பயனாக ஏற்பட்ட பண்புகளே இவை!
‘மலயம்’ என்ற மலைப் பெயரும், இதுபோலவே, ஆப்பிரிக்காவிலும் - தென்கிழக்காசியாவிலும், இந்தியாவிலேயே வட மேற்கு - வடகிழக்குப் பாரிகளிலும் காணப்படுகிறது.
இதனால், தமிழர் பழமைக்குரிய பல வரலாற்றுக் குறிப்புகளை ஆராய்ச்சியாளர் சிலர், பிற இடங்களில் சென்று தேட நேர்ந்ததுண்டு - நேர்வதுண்டு.
ஆனால் கவிஞன் காளிதாசன், இதற்கு இடம் வைக்கவில்லை!
ஆசிரியர் மறைமலையடிகள் விளக்கிக் காட்டுகிறபடி - காளிதாசன் நில நூலும், இயல் நூலும் வழாது, சங்க இலக்கியப் புலவர்களைப் போலவே, கூறுவதைத் தெளிவுபட - வாய்மை தவறாது - திட்ப நுட்பமாக எடுத்துரைக்கும் இயல்புடையவன்!
இதனால், மலயமலை விந்தியத்துக்குத் தெற்கே - கிட்கிந்தை (மைசூர்) நாட்டுக்கும் - இலங்கைக்கும் நடுவே உள்ளது என்பதையும், சந்தன மரங்களும் - அகில் மரங்களும் - யானைகளும் நிரம்பியது என்பதையும், காளிதாசன், ஐயத்துக்கு இடமில்லாது விளக்கிச் சென்றுள்ளான்.
இன்றும் பொதிகை மலைக்குத் தெற்கிலுள்ள மகேந்திரகிரி மலையிலும், வடபாலுள்ள ஆனைமலை - நீலகிரி ஆகியவற்றிலும், யானைகளும் - சந்தன மரங்களும் மிகுதி என்பதை நில நூல் வல்லார் அறிவர்!
தமிழர் தென்றற் பண்பின் விசயம், கவிஞன் காளிதாச னுடனோ - சமக்கிருதத்துடனோ - இந்தியத் தாய்மொழி களுடனோ நின்றுவிட வில்லை! தென்கிழக்காசியா முழுவதும் - அதாவது, இந்தியா கடந்து இலங்கை - பர்மா - தாய்லாந்து - கம்போடியா - லாவோஸ் - வியட்னாம்- மலேசியா ஆகிய தலைநிலப் பகுதி களிலும், சிங்கப்பூர் - சுமாத்ரா மதுரைத் தீவு - பாலித் தீவு - செலிபிஸ் - மொலுக்காஸ் - பிலிப்பைன்ஸ் ஆகிய பன்னூற்றுக் கணக்கான தீவுக் கூட்டங்களிலும், நாம், தமிழ்த்தென்றல் மரபை இன்றும் முனைப்பாகக் காண்கிறோம்!
தொல்காப்பியக் காலப் பேரரசனாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் காலம் முதல் - கி. பி. 12-ஆம் நூற்றாண்டில் சோழப் பெரும் பேரரசாண்ட முதலாம் குலோத்துங்கன் காலம் வரை - மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பாண்டியரும் - பல்லவரும் - சோழரும் கடல் கடந்து சென்று, தென் கிழக்காசியா ஆண்ட அரசர் - பேரரசர்களை வென்று ஆண்டுள்ளனர்!
சோழப் பேரரசன் முதலாம் இராசேந்திரன் கல்வெட்டுக்கள், மேற்கே அந்தமான் தீவுகள் முதல் கிழக்கே பிலிப்பைன் தீவுகள் வரை - வடக்கே கம்போடியா முதல் தெற்கே சாவாத் தீவு வரை - காணப்படுகின்றன!
முதலாம் இராசேந்திரன் கட்டி எழுப்பிய கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில், கம்போடியப் பேரரசனே அந்நாட்டுக் கல் ஒன்று கொணர்ந்து- அதை அடிவாரக் கல்லாக்கி கால்கோள் செய்துள்ளான்!
தொல்காப்பியம் அரங்கேற்றிய நிலந்தரு திருவிற் பாண்டியன் முதல் கடல் கோளால் இழந்துவிட்ட குமரிக் கண்டத்துக்கு ஈடாகத் தென் கிழக்காசியப் பகுதி வென்று - ‘கடலரசன்’ என்ற முறையில் - கடலலையில் கால் தவழவிட்டு முடிசூட்டு விழாவாற்றினான்! இதனாலேயே அவன், ‘வடிம்பலம்பநின்ற பாண்டியன்’ என்ற விருதுப் பெயர் மேற்கொண்டான்!
தென்கிழக்காசியா கொண்ட நிலந்தரு திருவிற் பாண்டியன் மரபினர் சோழன் இராசராசன் காலம் வரை, ‘பாண்டியன்’ என்ற குடிப்பெயருடனும்- ‘சீர்விசயம்’ என்ற நாட்டுப் பெயருடனும் - ‘சீர்மாறன்’ என்ற அரசுப் பெயருடனும் பேரரசாண்டனர்!
இப்பேரரசையும் - ‘சைலேந்திரர்’ என்ற பேரரசையும் வென்றே முதலாம் இராசேந்திரன், கீழை உலகின் கடற் பேரரசனாயினான்!
வியட்னாம் பகுதியில், ‘சாம்’ பேரரசர் கி. பி. 2-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரையிலும் - கம்போடியா நாட்டில் கி. பி. 6-ஆம் நூற்றாண்டிலிருந்து கி. பி. 12-ஆம் நூற்றாண்டு வரையிலும் - தென்கிழக்காசியா முழுவதிலும் நிலப் பேரரசாட்சியும், கடற் பேரரசாட்சியும் நடத்தினர்!
தென்கிழக்காசியாவை முழுவதும் ஆண்ட இப்பேரரசன் யாவுமே, தங்கள் தமிழ் - சமக்கிருதக் கல்வெட்டுகளில், தம்மை, ‘மலையரசர்கள்’ என்றே குறிக்கின்றனர்!
கம்போடியாவில் ஆண்ட ‘புநாம்’ அல்லது ‘கிமேர்’ என்ற பேரரசுப் பெயரும், தெற்கில் ஆண்ட சைலேந்திரர் என்ற பேரரசுப் பெயரும் ‘மலை அரசர்’ என்ற பொருளே உடையன!
‘மலையரசன்’ என்பது - சிவபெருமான் பெயர்! இப் பேரரசர்கள், தம்மையே சிவபிரான் ஆகக் குறித்துக் கொண்டனர்; தமக்கென அவர்கள் கட்டிய சிவபிரான் கோயில்களும், இதனாலேயே தமிழகத்தின் பழங்கோயில்களைப் போல - கருவறை மேலேயே - மலையை நினைவூட்டும் விமானக் கோபுரங்களை உடையவையாய் இருந்தன.
பாண்டியன் மரபினரான சீர்விசயப் பேரரசர், தம்மை ‘பாண்டியர்’ என்றும், ‘சீர்மாறன்’ என்றும் கூறிக்கொண்டனர்.
‘மாறன்’ என்பது ‘மாறன்’ என்ற பாண்டியர் குடிப்பெயரின் சமக்கிருத வடிவமே என்பதை இது காட்டுகிறது.
‘மாறன்’ என்பது, தமிழிலும் - சமக்கிருதத்திலும், ‘மன்மதன்’ பெயராக வழங்கப் பெறுகிறது.
மணம் - காதல் - திருமணம் ஆகிய பொருள்களை உடைய ‘மரு’ என்ற சொல்லிலிருந்தே ‘மாரன்’ என்ற ‘மன்மதன்’ பெயர் வந்துள்ளது எனக் கொள்ளலாம்.
காதற் கடவுளாகவும் - தென்றற் கடவுளாகவும் - இளவேனில் அல்லது வசந்தத்தின் கடவுளாகவும் (வசந்தன்) அமைந்த மன்மதனுக்கு, இது முற்றிலும் பொருத்தமான பெயரே ஆகும்.
மன்மதன் பெயராகிய ‘மாறன்’ என்ற பெயரும், பாண்டியன் மரபு குறித்த ‘மாறன்’ என்ற பெயரும் உண்மையில் ஒரே பெயர்தான் என்பதைத் தென்கிழக்காசிய மரபு காட்டுகிறது; ஏனெனில் மன்மதனைப் போலவே பாண்டியனும் மலய மலைக்கு அதாவது பொதிய மலைக்கு அரசனாவான்!
இது மட்டுமன்று; ‘மலையரசர்’ என்ற பெயரைத் தென் கிழக்காசிய அரசர் குடியினர், ‘சிவபிரான்’ பெயராகவே தமக்குச் சூட்டிக் கொண்டவராவர். இவர்கள் தம்மை, இக்காரணத் தாலேயே பிறப்பால் பிராமணர் - அதே சமயம் தொடர்பால் தமிழகத்தின் அரசர் குடியினர் என்றும் கூறிக் கொண்டனர்!
நமக்கு இன்று கிட்டியுள்ள பொதுவான புராணங்களின் படி, சிவபெருமான் மலையரசன் பார்வதியை மணந்தவன் மட்டுமே! சிவபிரானுக்கோ - பார்வதிக்கோ கூட, ‘மலையரசன் - மலையரசி’ என்ற பெயர் பொருந்தவில்லை.
அத்துடன், இந்தியாவின் பொதுமரபுப்படி - அரசர், திருமாலின் கூறாவரேயன்றி, சிவபிரான் கூறாகக் கூறப்படுவ தில்லை.
ஆனால், தமிழர் தேசியப் புராணமாகிய திருவிளையாடற் புராணத்தின்படி, பாண்டியன் மலயத்துவசன் மகளாகிய தடாதகைப் பிராட்டியாரும் - தடாதகைப் பிராட்டியாரை மணந்து சிவபிரானும் - அவனுக்குப் பின் முருகப் பெருமானாகக் கருதப்படும் அவர்கள் மகனும் - மூவருமே பாண்டிய நாட்டு அரசர்களாகி ஆண்டவர் என்று தெரியப்படுகிறது.
இவ்வாறாக, ‘மலையரசன்’ என்ற பெயர் பரமசிவனுக்கும், பாண்டியனுக்கும் பொருந்தும் பெயர்!
இதுபோலவே, ‘மலைய அரசன்’ என்ற பெயரும் மன்மதனுக்கும் - பாண்டியனுக்கும் ஒருங்கே பொருந்தும் பெயர்! ‘மலையம்’ என்ற சொல், தமிழில் ‘திருமலை’ என்ற குறிப்பே உடையதனால், இரண்டும் ஒன்றே!
ஆகவே, பாண்டியனும் - மன்மதனும் - சிவபெருமானும் ஒரே பெயருடன் ஒப்புமையுடைய ஒரே தென்றல் மரபினர் ஆவர்!
இவை மட்டுமா? ‘நால் வேதங்கள்’ என்ற வழக்கு சமக்கிருதத்தில் மிகுதி கிடையாது! வழக்கு ஏற்பட்டபோது, அது, பிந்திய வழக்காகவே கருதப்படுகிறது; வட இந்தியாவில் இதனை, இன்றளவும் ஏற்றுக் கொள்வதில்லை. மூவேதங்களையே ஏற்கின்றனர்.
ஆனால் தமிழில், புறநானூற்றிலே - புறநானூற்றினுள்ளும் மிகப் பழமையான தொல்காப்பியக் காலப் பாண்டியனைக் குறிப்பிடும் பாடலிலேயே - ‘நால் வேதம்’ என்ற வழக்கு காணப்படுகிறது.
வடபால் மரபுப்படி - ‘நால் வேதங்கள்’ என்ற வழக்குக் காணப்படும் இடத்தில்கூட அவற்றை நான்முகன் (பிரமதேவன்) அருளியதாகத்தான் பேசப்படுகிறது.
ஆனால், தமிழ் சைவ நூல்கள், பொதுவாக மாணிக்க வாசகரும் - திருஞானசம்பந்தரும், சிறப்பாக - சிவபிரானே நால் வேதங்களையும் சனகர்- சனக்குமாரர் - சனாதனர் - சனந்தனர் - என்ற நான்கு முனிகளுக்கும் அருளியதாகவும், அவரே ஆகமங்களை மகேந்திர மலையில் அருளியதாகவும் கூறுகின்றன.
வேதம் அருளிய சிவபிரானுக்கு, ஒரு தனி உருவமும் - பெயரும் கற்பிக்கப்பட்டுள்ளன; அவர் தென்முகக் கடவுள் (தட்சிணாமூர்த்தி) உருவுடன் - அழகிய இளைஞனின் வடிவுடன் - கோயில்களிலே இடம் பெறுகிறார். அக்கோயிற்பகுதி ‘வசந்த மண்டபம்’ என்று பெயர் பெற்றுள்ளது; வசந்த விழா அல்லது காமன் பண்டிகை அல்லது வேனில் விழா இங்கேயே நடத்தப் பெறுகிறது!
‘தமிழர் நால் வேதம்’ என்று கொண்டது, அறம் - பொருள் - இன்பம்- வீடு அல்லது பேரின்பம் ஆகிய நான்கும் கூறும் திருக்குறள் போன்ற ஓர் ஆதி நூலே என்றும், இன்ப நூலாக விளங்கிய அவ்வேதம் அல்லது வேதங்களை அருளிய சிவபிரானே இன்ப வாணர் அதாவது வசந்தன் அல்லது மன்மதனாகக் கருதப்பட்டார் என்றும் கருதுவதற்கு இடமுண்டு.
‘சிவன்’ என்ற பெயருக்கும் - ‘கல்யாணம்’ என்ற சொல்லுக்கும் சமக்கிருதத்தில் ‘நன்மை - நலம்’ என்பதே பொருள்; முதலது - ‘செம்மை’ என்ற பண்படியாகவும், பின்னது - கலி (மகிழ்ச்சி; நடனம்; கலிப்பா), யாணர் (புதுமை) ஆகிய சொற்களடியாகவும் பிறந்த சொற்களே ஆகும்.
(கழகக்குரல் - 5.1.1975)
ஓ. ஆரிய மாயை என்பது யாது? திராவிட இயக்கமும் வரலாறும் தரும் விளக்கங்கள்
ஆம்! தந்தை பெரியாரின் பகுத்தறிவு இயக்கப் புயலின் சுழலில் பிறந்து வளர்ந்த வளமார் தமிழ்த் தென்றல்தான், புதிய தமிழகத்தின் பொங்குமாவளமாகிய வான்புகழ் அறிஞர் அண்ணா!
புயலின் ஆற்றலுடன் தென்றலில் மலர்ந்த ரோஜா தான் கவிதையங்காவலர் - தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணா!
புயலின் ஆற்றல் - தென்றலின் குளிர்மை ரோஜா - மலர் பரப்பும் நறுமணம் - ஆகிய இவற்றின் ஒருமித்த இனிய கலவைப் பண்பே தற்காலத் தமிழர் வாழ்வின் கண்கண்ட தவத்தின் திருவுரு!
புயலின் கருவில் தென்றல் தோன்றுமா?
ஆம்! அத்தகு ஆற்றல் சான்ற தென்றல்தான், அலைகடல் துயிலும் அறிவுலக ஏந்தலாம் - நம் அண்ணா! புயலான தந்தை பெரியாரின் தென்றற் சேய்தான் - அவ் அறிவுலக ஏந்தல்!
ஞாயிற்றின் ஆற்றலில் நிறை நிலாவின் தன்மை உருவாக முடியுமா?
ஆம்! அத்தகு கலைநிறை முழு மாமதியம்தான் - தமிழுலகின் கண் கண்ட கவிதைக் காவியத் தலைவன் - தமிழகத்தின் நம் காலத் திருமாவளவனாம் நம் பெரு மாமுதல்வர்! அறிஞர் அண்ணாவின் மலர்ச்சேய்- மலர்ச்சிக் கனி - அவர்!
இது என்ன மாயை!
ஆம்! மாயமான மாயைதான்! ஏன்?
கிரேக்க உலகில், சாக்ரட்டீஸ் - பகுத்தறிவுச் சிங்கம்!
பிளேட்டோ - அவர், பகுத்தறிவுப் புயலின் தென்றற் சேய்!
அரிஸ்டாட்டில் - அவர் ஆற்றல் மகவு; தற்கால மேலை உலக நாகரிகத்தன் - விஞ்ஞான உலகின் விடிவெள்ளி! உதய தாரகை! எழுஞாயிறு!
பழங்கால உலகின் அறியாமை மாயையைக் கிழித்தெறிந்து - மேலை விஞ்ஞான உலகின் ஒளிவளர வழிவகுத்தது - கிரேக்க எழுஞாயிற்றுப் பாரம்பரியம்!
அதனை ஒப்ப, தற்கால இந்தியாவில் - தமிழகத்தில், ஆரிய மாயை என்னும் இருள் திரை நீக்கிப் புது வாழ்வொளி பரப்ப எழுந்துள்ள புதிய மரபுதான் - எம் தவக் கவிஞரேறான கருணாவின் புதிய எழுஞாயிற்றுப் பாரம்பரியம்! ஆரிய மாயை!
“இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம், ஆரிய மாயையே” என்று அபேதுபாய் என்ற பிரெஞ்சுப் பேரறிஞர், விரி விளக்கமான ஆராய்ச்சிகள் வரைந்து குவித்திருந்தார்!
அறிஞர் அண்ணா அவற்றை வகுத்துத் தொகுத்து, ‘ஆரிய மாயை’ என்ற பெயருடன் ஒரு கலை ஆய்வேட்டை ஆக்கி வழங்கினார்.
‘ஆரிய மாயை’ ஏட்டை எழுதியதற்காக அறிஞர் அண்ணாவையும், அவரை மட்டுமன்றி - அவரை அறிவுச் சேயாக ஈன்ற பகுத்தறிவுத் தந்தை பெரியாரையும், அந்நாளைய ஆட்சியினர் சிறையில் தள்ளினர்!
மக்கள் மன்றத்தில் உலவ முடியாமல் அவர்களை இருட்டறையில் அடைத்தனர்!
இதுமட்டுமோ?
அறிஞர் அண்ணா இயற்றிய ‘ஆரிய மாயை’ என்ற வரலாற்று ஆய்வேடும், பகுத்தறிவுப் பெரும் புலவர் குழந்தை இயற்றிய பலாச்சுளைக் காவியமான ‘இராவண காவியம்’ என்ற கலையேடும் அன்றைய ஆட்சியினரால் தடை செய்யப்பட்டு, மக்கள் அறிவுக் கண்களிலிருந்தும் - கலைக் கண்களிலிருந்தும் மறைக்கப்பட்டு விட்டன!
ஆம்!
ஆயினும், திராவிட இயக்கம் இத்தடைகளால் குன்றிவிட வில்லை! குன்றின் மேலிட்ட விளக்கம்போல் - அண்ணாமலைத் தீபம்போல் - ஒளிவீசித் திகழ்கின்றது!
“ஊனக் கண்களை மறைத்து விட முயன்ற இத்தடைகளே மக்கள் ஞானக் கண்களைத் திறந்துவிட்டன” என்பது, நம் காலத் தமிழகத்தின் வரலாறு!
திராவிட இயக்கத்தை - தமிழ்ப் பண்பாட்டை - பாரதப் பண்பை அறியாதவர் இன்னும் சில தொலை உயர் வட்டாரங்களின் மூலை முடுக்குகளில் உண்டென்றால், அதற்குக் காரணம், அவர்கள் இன்னும், ‘பாரத நாட்டின் - தமிழகத்தின் வரலாற்றை - ஆரிய மாயையால் பாரதம் வீழ்ந்த வகையை - தமிழகம் தாழ்ந்த வகையைச் சரிவர அறிந்து கொள்ளவில்லை அல்லது அறிய முனையவில்லை’ என்பதே ஆகும்.
ஆரிய மாயை என்றால் என்ன?
ஆரிய மாயையினை என்றும் எதிர்த்து நிற்கும் தமிழ்ப் பண்பு - அதனை எதிர்த்தழிக்கத் திட்டமிட்டுப் பாடுபட்டவரும் திராவிட இயக்கம், மதத்தை எதிர்க்கும் ஒரு மத எதிர்ப்பா? ஓர் இனத்தை எதிர்க்கும் இன எதிர்ப்பா? ஒரு சாதியை எதிர்க்கும் சாதி எதிர்ப்பா? எந்த ஒரு நாட்டையேனும் எதிர்க்கும் நாட்டு எதிர்ப்பா?
அல்ல, அல்ல - அல்லவே அல்ல! ஒருக்காலும் அல்ல! முக்காலும் அல்ல!
திராவிட இயக்கமும் சரி - தமிழ்ப் பண்பும் சரி - மத வேறுபாடு கடந்த ஒரு மனித இன மதம்; இன வேறுபாடுகள் எவையுமற்ற ஒரு மனித இனக் குறிக்கோட் பண்பு; சாதி வேறு பாடோ, வகுப்பு வேறுபாடோ கருதாத- அவற்றைத் தடம் தெரியாமல் அழித்தொழிக்கத் திட்டமிட்டுள்ள பண்பு இயக்கம் ஆகும்!
திராவிட இயக்கம் எதிர்ப்பது, மதத்தை அன்று - மதச் சுரண்டலை! இனத்தை அன்று - இனச் சுரண்டலை! ஒரு சாதியை அன்று - அறிவற்ற, பண்பற்ற நச்சரவச் சாதிச் சுரண்டல் முழுமையையே!
சுரண்டலின் எல்லா வகைகளையும் - வடிவங்களையும் - முறைகளையும் வேருடன் கெல்லி எறிந்து, அத்துடன் அமையாமல், சுரண்டலுக்கு எதிர்ப்பண்பான பொங்கற் பண்பை - அதாவது, ‘அறிவார்ந்த- அன்பார்ந்த ஒத்துழைப்பு வளம்’ என்னும் பண்பைத் திட்டமிட்டு ஏட்டிலும் நாட்டிலும் - மக்கள் வாழ்விலும் நாட்டு வாழ்விலும் - உலகிலும் பரப்ப முழு மூச்சுடன் முனைந்து முயன்று வரும் இயக்கமே திராவிடப் பெரும் பேரியக்கம்!
மெய்யறிவுப் பெட்டகமாம் திருக்குறள் ஒருமையில், மெய்யுருவின் போர்வையிலேயே உலகில் பொய்ம்மை பரப்பும் ஆரியமாயையினை நடு நடுங்க வைக்கும் பகுத்தறிவு வாளை ஒரு கையில் கொண்டு, தண்பொருநைக் கரையிலிருந்து - காவிரித் தடத்திலிருந்து எழும் ஒரு புதிய இசுலாம், திராவிட இயக்கம்!
பெரியார், பிராமணர்களை எதிர்த்ததுண்டு; ஆனால் பிராமணர்களில் ஒரு தெய்வமாய் - உபநிடத ஞானமுனியாய் நம்மிடையே வாழ்ந்த சக்கரவர்த்தி இராசகோபாலாசாரியரின் உடன் பிறவாச் சோதரராய் - இணைபிரியா அன்பராய் - நகத்திற் பிரியாச் சதையாய் - அவர் விளங்கியது எவ்வாறு?
பெரியார் கடவுளை எதிர்த்தார்!
அறிஞர் அண்ணாவின் - கலைஞர் கருணாவின் அறிவியக்கம், கடவுளை எதிர்க்கவில்லை! ஆனால், அவரை ஆதரிக்கிறதே - ஏன்?
இவ்வாறு குரலெழுப்புபவர் உண்டு!
‘கடவுள் இல்லை’ என்று கூறிய புத்தர் பெருமானையே கண்கண்ட கடவுளின் அன்புருவாக - அறிவுருவாகக் கொண்டு உலகம் போற்றவில்லையா?
பாகவத புராணமே அவரைத் திருமாலின் பத்து அவதாரங்களுடன் பதினொன்றாவது அவதாரமாகப் போற்றவில்லையா?
தந்தை பெரியாரையும் - அறிஞர் அண்ணாவையும் - கலைஞர் கருணாவையும், பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவபிரான் - பாற்கடல் பள்ளிகொண்ட பண்ணவனும் திருமால் - கண்கண்ட கடவுளாம் முருகன் - ஆகிய தெய்வ மரபின் புத்துருவாக வருங்காலம் கொண்டாடாமல் இருக்க முடியுமா?
பெரியார் வடக்குத் திசை ஆதிக்கத்தை எதிர்த்தார்!
ஆனால், இந்தியாவின் தந்தையான காந்தியடிகள் மீதுள்ள பக்தியில் - காந்தியடிகளின் வழியில் தொண்டாற்றியவர்களின் பட்டியலில் அவர், முதல் வரிசையின் முன்னணி முதல்வராக இருக்கவில்லையா?
‘மதுவரக்கனை ஒழியுங்கள்’ என்று காந்தியடிகள் கூறிய போது, தமக்குச் சொந்தமான தென்னை - பனை - கமுகு மரங்கள் அத்தனையையும் வெட்டிச் சாய்த்துவிட்ட காந்தியப் பெருமகன் அல்லரோ, அவர்!
தாமும் தம் மனைவியும், தம் அரண்மனைச் சுகபோகங்களைத் துறந்து தோளில் கதர் மூட்டையுடன் தெருத்தெருவாகக் கதர் விற்பனை செய்தவர்கள் வேறு யார்?
ஆரிய மாயையை எதிர்க்கும் திராவிடப் பேரியக்கம் ஒரு மத எதிர்ப்பியக்கம் - ஒரு சாதி எதிர்ப்பியக்கம் என்று தெரிந்தோ தெரியாமலோ- நாக்கில் நரம்பின்றிக் கூறுபவர்கள், இவற்றைக் கண் திறந்து பார்க்க வேண்டும்.
திராவிட இயக்கம் பேசும் மாநில சுயாட்சிக் கோட்பாடு, ‘தேசத்தின் பிரிவினை நோக்கிச் செல்வது’ என்று கூறும் போலி ஒருமைப்பாட்டு வாய் வேதாந்திகள், தம்மைக் கவிந்துள்ள ஆரிய மாயையின் தன்மை உணர்ந்து- அதைக் கிழித்து வெளிவந்து, தமிழக வாழ்வை - இந்தியத் தேசியத்தை ஒரு முழு நலம் வாய்ந்த ஆக்கத் தேசியமாக - பல்வண்ண நவமணித் தேசியமாக- உலக தேசியங்களிடையே ஓர் ஆற்றல் வாய்ந்த அன்பறிவுப் பொங்கு மாவளத் தேசியமாக வளர்க்க முன்வருதல் வேண்டும்!
பகுத்தறிவு இயக்கம் - திராவிட இயக்கம் - இவை இரண்டும் ஒன்றல்ல, வேறு அல்ல!
ஒன்று நிலம் - மற்றது பயிர் வளம்!
பகுத்தறிவு இயக்கம் திராவிட இயக்கத்தின் ஒரு பகுதி - எதிர்மறைப் பகுதி - அறிவுப் பகுதி மட்டுமே; அதற்கு ஆக்கப் பகுதி - அன்புப் பகுதி - கலைப் பகுதியும் உண்டு; அதுதான், பொங்கு மாவளப் பகுதி - தமிழ்ப் பண்புப் பகுதி.
இந்த இரண்டும் ஒருங்கே கொண்டதே அண்ணாயிசம் - உண்மையான அண்ணா வழி!
மண்டிக்கிடந்த புதர்க்காட்டை - முட்காட்டை வெட்டி, அதில் பதுங்கிக் கிடந்த நச்சரவங்களை ஒழிக்கப் பாடுபடும் திராவிட இயக்கப் பகுதியே கழகமும், இதனையே மிகுதியாக - முனைப்பாக வலியுறுத்தின!
ஆனால், இது மட்டுமே முழுத் திராவிட இயக்கம் ஆய்விட மாட்டாது; இது, திராவிட இயக்கத்தின் தொடக்கப் பணி மட்டுமே!
பெரியார் வெட்டித் திருத்திய காட்டில், மொழியையும் - கலையையும், சமய வாழ்வையும், நாட்டு வாழ்வையும் வளப்படுத்தி, அதைத் தேசிய வாழ்வாக மலர்விக்கும் இயக்க நிறைவுப் பணியை - ஆக்கப் பணியைத் தான் திராவிட முன்னேற்றக் கழகம் செய்கிறது!
கொத்தித் திருத்துவது - உழுது விதைப்பது - களையெடுப்பது - பகுத்தறிவு இயக்கப்பகுதி - திராவிடக் கழகம்!
நீர் பாய்ச்சுவது - பேணிப் பயிர்செய்து தருவது உணவுப்பொருள் - அதை மக்கள் துய்த்து நல்வாழ்வுபெறச் செய்வது - தேசிய இயக்கப்பகுதி- திராவிட முன்னேற்றக் கழகம்!
அறிஞர் அண்ணா வழி வந்த கலைஞர் கருணாவின் தலைமையில் அமைந்த திராவிட இயக்கத் தேசியப் பகுதியில், பகுத்தறிவின் எல்லைக் காவலராக நடமாடும் பல்கலைக் கழகம் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் அமைய - தமிழ்க் காவலராகப் பேராசிரியர் அன்பழகன் திகழ - ஏனைய தலைவர்கள் நிதிக் காவலராக - உழைப்பு அணிக் காவலராக - கொள்கைப் பயிர் வளர்ப்போராக - மக்கள் நலம் காப்போராக விளங்கித் திராவிடப் பகுத்தறிவு இயக்கத்தை ஒரு முழுநல ஆக்கத் தேசியமாக்கி, நாட்டை நாம் ஓங்குவிக்கும் பணியில் முனைந்துள்ளனர்!
தேசியம், குடியாட்சி, சமதருமம், பொதுவுடைமை, வாழ்நல - அன்பு நல ஆட்சி (Welfare State) ஆகிய எல்லா இயக்கப் பண்புகளின் ஒருங்குநிறை திரட்டுப்பாலே தமிழ்ப் பண்பு - திராவிட இயக்கத்தின் முழுநிறைத் தேசியப் பண்பு!
இந்த எல்லாப் பண்புகளையும் அரித்துச் சுரண்டிக் கெடுக்கும் நச்சுத் திறங்களின் மொத்தத் திரட்டையே ‘ஆரியம்’ என்றும், ‘ஆரிய மாயை’ என்றும், திராவிட இயக்க அறிஞர்கள் அழைக்கின்றனர்!
தேசியத்துக்குப் புற எதிரிகள், அயலாட்சியாளர் - அயல் மொழியாளர்!
தேசியத்துக்கு சக எதிரிகள், உயர் வகுப்பினர் - அயலாட்சியை ஆதரித்து உயர்வு பெற்றவர்கள்!
குடியாட்சியின் எதிரிகள், உண்மையில், அகத் தேசிய ஆட்சியின் எதிரிகளே; ஆனால், சாதி மத மொழி ஆதிக்க உருவிலும் - தனி உரிமை ஆதிக்க உருவிலும் நின்று, அரசியல் சுதந்தரத் தை ஒரு மாயச் சுதந்தரமாக- சுதந்தர மாயையாக மாற்றியமைத்து, மக்களை மயக்கி ஏமாற்றுகிறார்கள்!
திராவிட இயக்க அறிஞர், அகத் தேசிய எதிரிகளின் ஆதிக்கத்தை, ‘மாயை’ என்று குறிப்பிடுவதன் காரணம் இதுவே! சமதருமம் - பொதுவுடைமை ஆகியவற்றின் எதிரிகளும், அகத் தேசிய எதிரிகளே!
இவர்களை, சமதரும - பொதுவுடைமை இயக்க அறிஞர்கள், ‘முதலாளி வர்க்கம்’ என்று அழைக்கின்றனர்!
இவர்கள், அரசியல் சமத்துவத்தையே தங்கள் சுரண்டலுக்குப் பயன்படுத்தி - பொருளாதார ஏற்றத் தாழ்வை மலை போல வளர்த்து - அதில் தாம் முழுப் பயனம் பெற்று - மக்கள் வறுமையைப் பெருக்கி - அதையே தம் முதலீடு ஆக்கிவிடுகின்றனர்!
புறத் தேசியங்களின் கண்களிலே இந்த முதலாளி வர்க்கம், சட்டத்தின் உதவி கொண்டே - தேசிய உரிமைகள், குடியாட்சி உரிமைகள் ஆகியவற்றின் துணை கொண்டே - மண்ணைத் தூவி விடுகின்றன!
பல இடங்களில், தேசி ஆட்சி என்பதும் - குடியாட்சி என்பதும் இந்தச் சுயநல முதலாளித்துவக் கும்பலின் மாய சூத்திரக் கயிற்றின் ஆட்சியாகவே அமைந்து விடுகின்றன!
திராவிட இயக்க அறிஞர், இவற்றையும் ‘மாயை’ எனக் கூறி - மக்கள் அறிவுக் கண்ணைத் திறக்க விரும்புவதன் காரணம் இதுவே!
தேசியம், குடியாட்சி, சமதருமம், பொதுவுடைமை என்ற இவ்வெல்லாப் பண்புகளும், உண்மையில் எதிர்மறைத் தேசியப் பண்புகளே ஆகும்; ஏனெனில், இவை, புலிக்கும் - ஆட்டுக்கும், திறமையுடையவனுக்கும் - திறமையற்றவனுக்கும், ஒரே சரிசம உரிமையும், பாதுகாப்பும் அளிக்கின்றன!
இந்நிலை, உண்மையில் புலிக்கும் உதவும் மாய ஆட்சிதான் அன்றோ?
இந்நிலை கண்ட திராவிட இயக்க அறிஞரும் - திராவிட இயக்க அறிஞரை ஒத்த உலக அறிஞரும் வளர்த்த புதிய பண்புகளே வாழ்நல ஆட்சிப் பண்பு (Welfare State)) - ஓர் உலக ஆட்சிப் பண்பு (One World State).
இந்த இயக்கம் ஆட்சிக்கு வந்தால், தனி மனிதர் முயற்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பதற்குப் பதில், மனமார உதவி உயர்த்த முன்வருவர்! அத்துடன், நாடு கடந்து, மனித இன நலமே பேணுவர்!
திராவிட இயக்கம், இந்த அகத் தேசியத்தினும் உயரியது; ஏனெனில், அது, தனி மனிதன் அறிவையும் திறமையையும் வளர்ப்பதுடன், அவனை முயற்சியில் ஊக்குவிப்பதுடன் அமைவதில்லை; அவன் முயற்சிக்குப் பின்னணியாக - மேற்பட்டதாகச் சமுதாய, நாட்டு, உலக நலத்திட்டங்களை வகுத்து - அவர்கள் விரும்பும் வளங்களை மட்டுமன்றி அவர்களே எதிர் நோக்காத - கனவுகூடக் காணாத வளங்களை வலிய வழங்கிவிட முனைவதாகும்!
“நாடு என்ப
நாடா
வளத்தன!”
திருவள்ளுவர் மூன்று சீர்களுக்குள்ளேயே வாழ்வு நல அரசு
(Welfare State) குறிக்கொண்ட திராவிட இயக்கத்தின் இலக்கினை வரைந்து காட்டியுள்ளார்.
“மக்கள் கனவில்கூட நாடாத - எண்ணிப் பார்க்காத வளத்தை, அலாவுதீன் விளக்குப்போல அவர்களுக்கு அளிக்க வல்ல அரசினையுடைய நாடுதான் உண்மையான நாடு” என்பது, இந்த மூச்சீரின் பொருளாகும்!
திருவள்ளுவர் கருத்து, இம்முச்சீர்களுக்குள்ளேயே ஒரு நுட்பக் குறிப்புக் காட்டுகிறது!
அவர், ‘நாடா வளத்தது’ என்று கூறாமல், ‘நாடா வளத்தன’ என்று பன்மையில் கூறுகிறார்.
“உயர்ந்த மக்கள் நல அரசுடைய நாடு, தான் அத்தகு வளம் கண்டால் போதாது; சூழ் நாடுகளும் வளம் உடையனவாக அந்த நாடு கொண்டிருக்க வேண்டும்” என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
மூன்று சீர்களில் நல்ல அரசு - திராவிட இயக்க அரசு எப்படி அமைய வேண்டும் என்று கூறிய திருவள்ளுவர், அதே குறட்பாவிலேயே அடுத்த நான்கு சீர்களில், ‘ஆரிய மாயை’ அரசு எப்படி இருக்கும் என்றும் காட்டிவிடுகிறார்:-
“நாடு அல்ல
நாட
வளந்தரும்
நாடு”
“மக்கள் விரும்பிக் கேட்டபின் கேட்ட அவ்வளத்தைத் தர முயலும் முரசினை உடைய நாடு, அத்தகைய சிறந்த நாடு அல்ல” என்று அவர் கருத்துரைக்கிறார்.
திருவள்ளுவரின் பொன்னுலக மொழிகளை ஓடும் கலங்களிலும் (Buses) பொறித்து மகிழும் தமிழக அரசு கண்ட திராவிட இயக்கத்தின் தலைவர்கள், ஆரிய மாயைக்கு - அதனை விலக்கி ஒளி காணும் திராவிட சோதிக்குத் தரும் விளக்கங்கள் - மக்கள் உள்ளமெனும் கொடிகளில் பொறிக்கத்தக்கவை ஆகும்!
அயல் நாட்டு ஆதிக்கத்தை எதிர் - அயல் நாட்டை அன்று!
முடியுமான அளவும், அயல் நாடுகளும் வளம்பெறப் பாடுபடுவதே நல்ல நாட்டின் இலக்கணம் ஆகும்!
முதலாளி வர்க்க ஆதிக்கத்தை எதிர் - முதலாளிகளை யன்று!
முடியுமான அளவும் முதலாளிகளையும் திருத்தி மனிதராக்கி - அவர்கள் நலங்களையும் வளர்க்கப் பாடுபடு!
பிராமணீயத்தை - உயர் சாதியத்தை எதிர் - பிராமணரை - உயர் சாதியினரை அன்று!
முடியுமான அளவும் தம்மைத்தாமே, ‘உயர்ந்தோர்’ என்று தம்பட்டம் அடித்துக் கொண்டுள்ளவர்களிடம், சமுதாயப் போதம் - மனித இனப் பாசம் வளர்த்து - அவர்களை நன்மனிதர்களாக்கி - அவர்களின் அறிவும், பண்பும், நலமும் வளர்க்கவே பாடுபடு!
ஆதிக்கவாதிகள் ஆதிக்கவாதிகளாகப் பிறப்பதில்லை! அடிமைகளும் அடிமைகளாகப் பிறப்பதில்லை!
சுழித்தோடும் வெள்ளத்தில் - தம் செயலற்று முன்னும் சுழன்று மிதப்பவர்கள்போல், ‘ஆதிக்க - அடிமைநிலை இயல்பானது’ என்ற மாயா தத்துவத்தில் அவ்விரு சாராரும் தம் மெய்நலமும் மெய்யறிவும் காணாது உழல்பவரே ஆவர்!
‘உயர் சாதியினர்’ என்பவர், இன்னும் உயரிய சாதியினருக்கு அடிமைப்பட்டே தம்மினும் தாழ்ந்த சாதியினரின் தலைமீது தாண்டவமாட ஒருப்படுகின்றனர்!
இதுபோல, தாழ்ந்த சாதியினர் எனப்படுபவரும், தம்மினும் தாழ்ந்தவர் தலைமீது மிதித்துத் துவைத்துக் கொண்டேதான் உயர்ந்தோருக்கு அடிமையாகின்றனர்!
இந்நிலை, மாயை அல்லவா?
அறிஞருள் அறிஞர், திராவிட இயக்க அறிஞர்களே! அவர்கள், இந்த மாயா தத்துவம் உணர்ந்தவர்கள்! உணர்ந்தே செயலாற்று பவர்கள்!
தலைவர்களில் தலைவர்கள் திராவிட இயக்கத் தலைவர்களே! இந்த மாயா தத்துவத்தைக் கிழித்தெறிய ஒரு பகுத்தறிவுப் படையும், அதனிடமாக ஒரு ஞான தத்துவம் வளர்க்க ஒரு மெய்யறிவுப் படையும் ஒருங்கே கொண்டிருக்கும் ஆற்றலுடையவர்கள் அவர்கள்!
(கழகக்குரல் - 16.2.1975)
ஒள. குடியாட்சியின் - உண்மையான மக்கட் குடியாட்சியின் மறைதிறவு, உள்ளுயிர்ப் பண்பு யாது?
குருநானக், குரு கோவிந்த சிங் போன்ற பாஞ்சாலச் சிங்கங்களின் மரபில் வந்த பாஞ்சால நாட்டின் சிங்கங்கள் - பாரத நாட்டின் சிங்கங்கள் பல!
“வட இந்தியத் தலைவர்களுக்குள்ளே முதன் முதலாகத் திராவிட முன்னேற்றக் கழக மாநாடுகளில் ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டவர்கள் பாஞ்சாலத் தலைவர்களே” என்பது இங்கே குறிப்பிடத்தக்கது ஆகும்.
பாஞ்சாலம் மட்டுமன்றி, பாரதமே இப்பொழுது தமிழகத்தை வழிகாட்டியாகக் கொண்டுவருகிறது!
வங்க சிங்கம் முசிபுர் ரகுமான்!
காசுமீர சிங்கம் சேக் அப்துல்லா!
விதேகம் கண்டுவரும் அருட்சிங்கம் செயப்பிரகாச நாராயணர்!
தங்கத் தமிழகத்தின் சிங்கக் குருளையாக - தென்னகக் காந்தியாம் வான்புகழ் அண்ணாவின் அகிம்சை நெறி, ‘வள்ளுவ அன்பு - அருள் நெறி’ என்னும் கூட்டுக்குள்ளிருந்து அறப்போர் வழி பயின்ற சேயிளங் குருளையாக - டாக்டர் கலைஞர் கருணா திகழ்கிறார்!
‘உரிமைக்குத் திருமலை - உறவுக்கு இமயம்’ என்று குரலெழுப்பி நின்று அறப்போராடும் கலைஞரின் உடனுரிமையின் உறவோர்களாக - நடமாடும் பல்கலைக் கழகமாய் நிலவும் நாவலர் நெடுஞ்செழியன்; இனிய தமிழின் எழிலார் திருவுருவமாய் - மக்களிடையே ஒரு கலை தவழ் கல்லூரியென - தமிழ் நிலா வெறிக்கும் கல்வி நிலையமாக உலவும் பேராசிரியப் பெருந்தகை அன்பழகன்; உரிமை எல்லைக்கும் - உறவின் தொலைவுக்கும் ஒருங்கே கொடியெடுத்து வீறிட்டு முழங்கிய - முழங்கி வரும் வயமான் குரிசிலாகிய சிலம்புச் செல்வம் சிவஞானம்: ‘நாம் தமிழர்’ என்ற வரலாற்று முழக்கமிட்டு- அதைக் கால ஏட்டில் பொறிக்கப் பங்கையாற்றும் பாரிஸ்டர் பெருமகன் ஆதித்தனர்; அறிஞர் அண்ணாவின் முன்னோடும் பிள்ளையாய் இயன்ற கலைஞர் பெம்மானுக்கும் ஒரு முன்னோடும் பிள்ளையாய் மிளிரும்படி மாவளங் காணும் மாதவன் முதலாக எத்தனை எத்தனையோ தானைத் தலைவர்கள் - அறிவுச் செம்மல்கள், தமிழகத்தின் சிங்கக் குருளை உயர்த்தியுள்ள தங்கக் கொடியைச் சூழ்ந்துநின்று ‘உரிமை பிழையாமல் - உறவு நெகிழாமல்’ வளர்கின்ற பாரதத்தின் வாழ்வு வளம் பெறுவதற்காக அறம் வழுவா மறப்போர் ஆற்றிவருகின்றனர்!
ஆம்! கதிரொளி - நிலாவொளி - விண்மீன்களின் சுடர் ஒளிகள் இங்கே!
கதிரொளி சென்று எட்டாத் தொலைவிலும், ‘வடமுனை வளரொளி’; ‘நள்ளிரவிலும் நட்டம்’ பயிலும் அன்றோ?
அதோ - வடபால் வடமுனை வளரொளி, செ.பி.!
‘விதேகம் ஆண்ட உபநிடத முனிராசன் சனகனின் புத்துருவோ’ என, அரசியல் வாழ்வு துறந்தும் மக்கள் வாழ்வுப் பணி மறவாத உள்ளத் துறவுடைவோராகிய செயப்பிரகாச ராயணரின் அற வேள்விப் போர், வடபாலும், இத்தகைய தென்னகப் போரின் எதிரொலியாக எழுந்துள்ளது!
“அரசியல் முறையிலே குடியாட்சி வெற்றி கண்டால் போதாது, அது மக்கள் வாழ்விலும் வெற்றி காண வேண்டும்!” என்ற தத்துவத்தை செயப்பிரகாசரின் தனிப் பேரியக்கம் காட்டுகிறது!
மாநில சுயாட்சி கோருவது, தமிழ் மாநிலம் மட்டுமல்ல - பாரத மாநிலங்கள் எல்லாமே!
பாரதமே, சுயாட்சியை - மக்கள் உரிமைத் தன்னாட்சி வளத்தைக் கோரத் தொடங்கிவிட்டது!
‘குடியாட்சி’ என்பது, உண்மையிலேயே குடிகளின் குடி யாட்சியாகும் நாள், இனி, மிகு தொலைவில் நின்றுவிட முடியாது!
“உண்மைக் குடியாட்சி குடி மக்களின் குடியாட்சி என்பது யாது” என மக்கள் கனவு காண - அல்ல, அல்ல -கனவு தெளிந்து நனவிலேயே பெற அவாவி விட்டனர் - எண்ணி விட்டனர் - உறுதி கொண்டுவிட்டனர்!
தேசியம் - சமதருமம் - பொதுவுடைமை - என்ற புதுப்புதுப் பெயர்களின் வர்ண சாலங்களால் - புதுப்புது மாயைகளால் திரையிட்டு மறைக்கப்பட்ட உண்மைக் குடியாட்சித் தத்துவ -உண்மைத் தேசியத் தத்துவ ஒளியை மக்கள் காணத் தொடங்கி விட்டனர்!
மக்கள் தலைவர்கள் அதைக்காட்ட எழுந்து விட்டனர்!
‘மாயத் திரைகள் கிழிந்து - உண்மைக் குடியாட்சி - மக்கள் நல ஆட்சியின் மெய்ப்படிவக் கொடி - இதோ - மக்கள் உளம்’ என்னும் வானில் சுடர்வீசத் தொடங்கிவிட்டது!
போலிக் குடியாட்சி - போலித் தேசியம் - போலி ஒருமைப்பாட்டு மாயத் திரைகளைக் கிழித்தெறிந்து, உண்மைக் குடியாட்சி - உண்மைத் தேசியம் - உண்மை ஒருமைப்பாட்டின் மறைதிற வினை - உள்ளுயிர்ப் பண்புகளை மக்களுக்கு எடுத்து விளக்கப் பிறந்தது, மாத்தமிழினம் - மாத்தமிழினத்தின் வள்ளுவப் பண்பு தோய்ந்த இலக்கியச் செல்வம்!
இவ்விளக்கத்தைச் செயற்படுத்த எழுந்தது - திராவிடப் பேரியக்கம்!
இதன்மூலம் தமிழகத்தை வளப்படுத்த - ’பாரதத்தை ஒரு முகமாக மேம்படுத்தி வலுப்படுத்த விரைந்து செயல்படுவது, திராவிட இயக்கத்தின் அரும்பெறற் கொழுந்தாக விளங்கும் - தமிழக அரசு!
இந்தியாவுக்கு மட்டுமன்று - உலகுக்கே வழிகாட்டியவர் காந்தியடிகள்!
தமிழகம் காண - இந்தியா காண - உலகு காண - அவ்வழி நின்று, அதற்கு ஓர் ஒளி இலக்காக - கலங்கரை விளக்கமாக அமைந்தவர், வான்புகழ் அண்ணா!
குடியாட்சியின், தேசியத்தின் முதல் இலக்கணத்தை - அடிப்படைப் பண்பைக் கோடிட்டுக் காட்டினார் - காந்தியடிகள்!
குடியாட்சி - மேலிருந்து கீழ் வருவதன்று! கீழிருந்து மேற்செல்வது!
தேசியத்தின் தன்மையும் இதுவே! அது, டில்லியிலிருந்து அரசகங்களின் (States) தலைநகர்களுக்கு வருவதன்று - அரசகங்களின் தலைநகர்களிலிருந்தே மேட்டுத் தலைநகராகிய டில்லிக்குச் செல்வது!
திராவிட இயக்கம் - திராவிட இயக்கத் தலைவர்களான அறிஞர் அண்ணாவும், டாக்டர் கலைஞரும், இன்னும் ஒருபடி மேற்சென்று, இந்த வாய்மையைத் திண்ணிய அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர் - அதைச் செயற்படுத்தியும் உள்ளனர்!
குடியாட்சியின் உரிமைகள்-தேசிய வளங்கள், மாநிலத்திலிருந்து மையம் நோக்கி மேற்செல்ல வேண்டுபவை மட்டுமல்ல-அவை தல சுய ஆட்சிகளிலிருந்து-மாவட்டங்களி லிருந்து மாநிலங்களுக்கும், மாநிலங்களிலிருந்து மையத்துக்கும் படிப்படியாகவே மேல்நோக்கிச் செல்ல வேண்டுவன ஆகும்.
மாநகராட்சிகள் தங்களுக்கு இன்னும் விரிவான அதிகாரங்கள் வேண்டுமென்று அண்மையில் மாநாடு கூட்டி வற்புறுத்திய போது, அதற்குத் தம் கருத்துரை கூறிய தமிழக முதல்வர் கலைஞர் கருணாவின் குரல், ஆள்பவன் குரலாய் அமையவில்லை; ஆளப்படுபவரின் தேவைகளை முன்னறிந்து மேம்படுத்த விரும்பும் ஒரு தந்தையின், அண்ணனின் குரலாக- காந்தியண்ணலின், அறிஞர் அண்ணாவாகிய தமிழண்ணலின் குரலாகவே அமைந்திருந்தது!
“என்ன உரிமைகள் வேண்டும் என்பதை விளக்குங்கள்; ‘வல்லுநர்களைக் கொண்டு’ ஆய்ந்து - நாட்டுக்கு வளந்தருவதற்கு உகந்த உரிமைகள் எவைஎவையோ, அவற்றையெல்லாம் வழங்கக் காத்திருக்கிறேன்; மைய ஆட்சியிடமிருந்து நாங்கள் இதற்காகவே - இதே முறையில் கோரும் மாநில சுய ஆட்சி உரிமைக்குரல் வெற்றி பெறும் நாள் விரைவில் வரும்; அப்போது உங்களுக்கு இன்னும் விரிவான உரிமைகள் வழங்கப்படுமென்று மனமார நம்புகிறேன்”.
ஆள்பவர் திசையிலிருந்து - தமிழக முதல்வரின் வாய்மொழி வடிவில் வெளிவந்துள்ள இதுபோன்ற ஒரு குரல், எங்காவது - எப்போதாவது எழுந்திருக்கக் கூடுமா?
‘எழுந்திருக்கக் கூடும்’ என்று வரலாற்றாசிரியர் வரலாற்றிலிருந்து எடுத்துக் காட்டுவது, அருமையிலும் அருமையேயாகும் என்று துணிந்து கூறலாம்!
காந்தியடிகள் ஆள்பவராய் இருந்திருந்தால் - தென்னகக் காந்தியின் ஆட்சி இன்னும் சற்று நீடித்திருந்தால் - நாம் ஒருவேளை இதேபோன்ற குரலை, மனித இன வரலாற்றிலேயே கட்டாயமாகக் கேட்டிருத்தல் கூடும்!
இதுமட்டுமோ? தமிழக முதல்வர் டாக்டர் கருணாவின் வாய்மொழி வடிவத்தில் எழுந்துள்ள காந்திய - தென்னகக் காந்தியக் குரலில் நாம், அக் குரலுக்குரிய வள்ளுவ அருட்பாசத்தை மட்டுமல்ல - அக்குரலுக்கே உரிய வள்ளுவ அறிவு ஆழத்தையும் - பண்பு ஆழத்தையும் காண்கிறோம்!
“நாட்டுக்கு வளத் தருவதற்கு உகந்த உரிமைகள் எவை எவையோ - அவற்றையெல்லாம் வழங்கக் காத்திருக்கிறேன்” என்ற முதல்வரின் வாய்மொழியில் கண்ட வாசகப் பகுதி, ஓர் அரசியல் தேவவாக்கியம் - “மாநில சுயாட்சி” என்னும் குடியாட்சி வேதத்துக்கே ஒரு சீரிய வேதாந்த விழுப்பொருள் உரை விளக்கமான மகாவாக்கியம் ஆகும்!
ஏனெனில், குடியாட்சியின் மறைதிறவான மக்கள் தத்துவம் - காந்தியத் தத்துவம் இதனுள்ளே அடங்கியுள்ளது! இந்தியா பெற்ற விடுதலை - இந்தியா பெற்ற தேசிய உரிமைகள் - மைய இந்தியாவுடன் நின்று விடாமல், மாநிலங்களாகிய அரசகங் களுக்கும் (States) இறங்கி வரவேண்டும்.
இதுமட்டுமன்று! அவை, மாநில அரசகங்களுடன் நின்று விடாமல் மாவட்டங்களுக்கும், மாநகரங்களுக்கும், நகரங்களுக்கும் இறங்கி வரவேண்டும்.
இத்துடன்கூட அவை நின்றுவிட்டால், அப்போதுகூட குடியாட்சியும் தேசியமும், வெற்றுக் குடியாட்சி - போலித் தேசியமாகவே நின்றுவிடும்!
மக்கள் வாழ்வுவரை - சின்னஞ் சிறு குக்கிராமத்தின் மக்கள் வாழ்வு வரை - பிற்பட்ட மக்கள், ஒதுக்குறத்தப்பட்ட மக்கள், ஆதிவாசிகள் வாழ்வு வரையிலும் சென்று, அவை, அவர்கள் வாழ்வை வளப்படுத்தப் பயன் படவேண்டும்! அப்போதுதான் படவேண்டும்! அப்போதுதான் அவை, குடியாட்சி உரிமைகள் - உண்மையான தேசிய உரிமைகள் ஆகும்!
உரிமைகள் - உரிமைகள் பெறுவோருக்காக அன்று; மக்கள் வாழ்வு வளத்தை ஆக்குவதற்காகவே ஆகும்!
காந்தியடிகள், கிராம சுயராஜ்யத்தை வலியுறுத்தியது இதற்கே ஆகும்.
கிராம முன்னேற்றத்தையும் - அரிசன முன்னேற்றத்தையும் - சேரிகள் முன்னேற்றத்தையுமே காந்தியடிகள் - தேசிய வாழ்வின் மூன்று உரைகற்களாகத் தேர்ந்தெடுத்ததன் காரணம் இதுவே!
இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலும் - முகப்பு அத்தியாயங்களிலும், இந்தக் காந்தியத் தத்துவங்களுக்குப் போதிய அழுத்தமும், விளக்கமும் தரப்பட்டே உள்ளது! ஆயினும், அத் திட்டத்தை வகுத்தவர்கள், அதன் பிற்பகுதியில் அத்தத்துவத்தை மறந்ததுடன், படிப்படியாக அந்தத் தத்துவத்தையே தலை கீழாக்கிச் செயலற்றதாக்கும் போக்கில் நுணுக்க விரிவான - சிக்கல் வாய்ந்ததோர் ஆட்சி அமைப்பை - சட்ட அமைப்பை வகுத்துள்ளனர் என்பதை உண்மைத் தேசிய அறிஞர் காணலாம்!
‘அரசகங்களின் கூட்டுறவு’ (Union of States) என்ற முறையிலேயே அரசமைப்பாளர்கள், தம் அரசமைப்புத் திட்டம் தொடங்கினர்! இன்னும் இந்தியா, அப்பெயராலேயே இயங்குகிறது! ஆனால், நடைமுறையில் இது, பெயரளவுடனேயே நின்று விட்டது!
உண்மையில் இந்தியா இன்று அரசகங்களை ஆளும் - ஆட்டிப் படைக்கும் ஓர் ஆதிக்க அமைப்பாகவே நடைபெற்று வருகிறது!
இந்தியா, அரசகங்களின் ஒரு கூட்டமைப்பாகவே திட்டமிடப்படாமல், தொடக்கக்கால பிரிட்டிஷ் ஆட்சிக்குரிய இந்தியாவைப் போலவோ, பிரிட்டன் - பிரான்சு ஆகிய நாட்டு அமைப்புகளைப் போலவோ ஒற்றை நேரடி ஆட்சி அமைப்பாகவே (Unitary State) அமைக்கப்பட்டிருந்தால்கூட, இந்திய மக்களின் நிலை இன்றளவு உரிமைக்கேடு உடையதாக இராது என்றே கூறல் தகும்; ஏனெனில், அப்போது ஒரே அரசிடம் பொறுப்பும் - உரிமையும் ஒருங்கே சேர்ந்திருக்கும்! ஆனால், இன்றைய இரண்டகமான அமைப்பில் இந்நிலை இல்லை!
மேலீடாகப் பார்த்தால், பொறுப்பும் பிளவுபட்டு - உரிமையும் பிளவுபட்டு இருப்பதாகவே தோன்றுகிறது; ஆனால் கூர்ந்து நோக்கினால், ‘பொறுப்புப் பிளவுபடவில்லை - பேரளவில் அது அரசகங்களுக்கே விடப்பட்டுள்ளது; அதே சமயம், உரிமையும் பிளவுபடவில்லை - பேரளவில் அது, மைய ஆட்சியிலேயே குவிந்துள்ளது’ என்பது தெரியவரும்!
இன்றைய இந்திய அமைப்பில், பொறுப்பு ஓரிடம் - உரிமை மற்றோரிடம் குவிந்திருக்கிறது!
இது குடியாட்சியாகுமா - தேசியமயமாகுமா - பொறுப்பாட்சிகூட ஆகுமா?
இதுமட்டுமன்று; மைய ஆட்சியில் கூட அதிகாரங்கள், பாராளு மன்றத்தின் தன்னாட்சியில் இல்லை! பாராளு மன்றத்தின் உரிமைகள், எந்த நாட்டரசிலும் வரையறைப்படாத அளவுக்கு இந்திய அரசமைப்பில் வரையறை செய்யப்பட்டு, அளந்து அளிக்கப்பட்டு (Rationed) உள்ளது.
அரசமைப்புத் திட்டம் அமைத்தவர்கள், வரையறையற்ற அதிகாரத்தைத் தங்களிடமே வைத்துக் கொண்டார்கள் என்று தோன்றுகிறது!
மக்கள் பேரால்தான் அரசமைப்புத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது; ஆனால், இந்திய மக்களுக்கும் - மக்கள் தேர்ந்து அனுப்பும் பேராட்களுக்கும் அது உரிமை வரையறுத்து, அவர்கள் உரிமைகளையே ஓர் எல்லைக்கு உட்படுத்தியுள்ளது!
எல்லாக் குடியாட்சி நாடுகளிலும், வரையற்ற உரிமை (Sovereign Rights) மக்களிடமே இருத்தல் இயல்பு! ஆனால், அரசமைப்பினை ஆக்கும்- திருத்தும் உரிமை, மக்களுக்கோ-மக்கள் தேர்ந்தெடுக்கும் நாடாளு மன்றத்துக்கோ வழங்கப்படாத நிலையில், இந்தியாவிலே மக்களின் குடியுரிமைகள் வரை யறைக்குள் இட்டு அடைக்கப்படுகின்றன என எண்ணல் வேண்டும்.
இந்தியாவின் அரசமைப்பு, இந்தியாவை ஒரு வளரும் - வளர்த்து வரும் உயிர்த் தேசியமாகக் கொள்ளும் முறையில், ஒரு வளரும் அரசமைப்பாக உருவாக்கம் பெறவில்லை; ஓர் ஆட்சி அரங்கம் (Department) போல, மரச்சட்டமாகவே அமைக்கப்பட்டுள்ளது!
இந்நிலை, இந்தியாவின் சட்டத்துறையினருக்கு அல்ல - சட்டவியல் சிந்தனையாளருக்கு (Jurists) - அரசியல் சிந்தனையாளருக்கு (Statesman) ஓர் அறைகூவல் ஆகும்!
முதல்வர் கலைஞரின் வாய் மொழியின் மற்றொரு வாசகப் பகுதியும், இங்கே, அரசியல் அறிஞர்களின் கவனத்துக்குரியது ஆகும்.
‘வல்லுநர்களைக் கொண்டு ஆய்ந்து’ என்பதே அவ்வாசகப் பகுதி ஆகும்.
காந்தியத் தேசியம் - தென்னகக் காந்தியக் குடியாட்சி, வள்ளுவ அருட்பாசம் உடையதாக மட்டும் இருந்தால் போதாது; வள்ளுவ அறிவாழமும் கொண்டதாக இருந்தாக வேண்டும் என்பதை, ‘வல்லுநர்களைக் கொண்டு’ என்ற இந்த வாசகப் பகுதி - அடிக்கோடிட்டுக் காட்டுகிறது!
"மக்கள் இயல்பாக உரிமையுடன் (சுதந்தரத்துடன்) பிறக்கிறார்கள்; ஆனால், அவர்கள் எங்குமே உரிமையுடன் வாழ்வது அருமை - வாழவிடப்படுவது இல்லை’ என்று அறிஞர்கள் கூறுவது உண்டு.
மக்கள் தங்கள் தேவைகளை - அவாக்களை அறியும் அளவுக்கு உரிமைகளை அறிவதில்லை! அவற்றை அறிந்தாலும், உரிமைகள் அவர்களை வளமாக ஆக்க எளிதில் பயன்பட முடியாது!
இதற்கான திட்டங்கள் இடுவதே அரசின் - குறிப்பாகக் குடியாட்சி அரசின் கடமை! அரசுகள் ஏற்பட்டிருப்பதே இதற்காகத்தான்!
அரசுக்காக மக்கள் வாழவில்லை!
மக்கள் வாழ்வுக்காகவே - வாழ்வு வளத்திற்காகவே அரசுகள் அமைந்துள்ளன!
அரசுகள், மக்கள் தேவைகளை அறிவதற்காக - அவாக்களை உணர்வதற்கு மட்டுமே தேர்தல் - சட்டமன்றங்கள் - ஆட்சி இயந்திரங்கள் பயன்பட இயலும்! வாழ்வை வளமாக்க இவை போதமாட்டா!
உரிமைகளை வளங்களாக்குவது எப்படி?
இந்தப் பணி, அறிஞர்களைச் சாருகிறது!
ஒவ்வோர் அரசும் - சிறப்பாக ஒவ்வொரு நாகரிகக் குடியாட்சி அரசும், ‘மக்கள் தேசிய உரிமையை எப்படி மக்கள் தேசிய வளமாக்குவது’ என்பதை அறிந்து கூற - அறிந்து செயற்படுத்த - அதன் வெற்றி தோல்விகளில் பொறுப்பு வகிக்க - அறிவாற்றல் கொண்ட ஓர் அறிஞர் குழுவையே நம்பி இயங்குதல் வேண்டும் - நம்பி இயங்குவர்!
அறிஞர் என்பவர் - பிறப்பால் அறிஞர் அல்ல! படிப்பால்கூட அறிஞர் அல்லர்! அவர்கள் செயலின் பயன் வெற்றியால் மட்டுமே அறிஞர் ஆவார்!
‘நல்ல மரம்’ என்பது, அது தரும் நல்ல பழத்தால் மட்டுமே அறியப்படுவது ஆகும் - என்பது பழமொழி!
அறிஞரை இவ்வாறு சோதித்து அறிந்து - அச்சோதனையின் வெற்றியால் நல்ல அறிஞர் குழுவினைப் படைத்தாண்டு வளம் காணும் அரசே நல்ல குடியாட்சி அரசு!
இந்தியாவின் முதல் முதல்வரான பண்டித நேரு இதனை உணர்ந்ததனாலேயே, தேசியத் திட்ட அமைப்பினைச் சுதந்தர இந்தியாவின் முதல் தேவை ஆக்கினார்!
அறிஞரை, அரசு, பயனால் சோதிப்பதுபோலவே - மக்கள், அரசுகளை அவர்கள் ஆட்சிக் காலத்தில் தமக்குக்கிட்டிய வளம் ஒன்றின் மூலமாகவே சோதித்தல் வேண்டும் - சோதிப்பர்!
முதல்வர் கலைஞரின் வாய்மொழி, ‘குடியாட்சி அரசின் இந்த நுண்மாண் பொறுப்பினை அவர் நன்கு உணர்ந்தவர்’ என்பதைக் காட்டுகிறது! இது மட்டுமன்று!
திராவிட இயக்க அறிவு மேதைகளின் மரபில் வந்த முதல்வர், உரிமைகளையே சோதனைக்கு உள்ளாக்கி விடுகிறார்!
உரிமைகள் யாரிடம் இருக்க வேண்டும் என்பதை முதல்வர் டாக்டர் கலைஞர், முக்கியமானதாகக் கருதவில்லை! யாரிடம் இருந்தால் அந்த உரிமைகள் உயிருடைய உரிமைகளாக - மக்கள் வாழ்வுக்கு வளம் பொங்குவிக்கும் உரிமைகளாக இருக்குமோ, அவர்களிடமே அந்த உரிமைகள் தரப்பட வேண்டும் என்பது, வள்ளுவத் தத்துவம் - ‘கருணீகத் தத்துவம்’ என்பதை, அவர் வாய்மொழி வாசகம் காட்டுகிறது!
உரிமைகளுக்குச் சொந்தக்காரர் மக்கள்!
ஆனால், அதை வளமாக மாற்றுவது நிலை அரசு - அதாவது அரசமைப்பு!
அது யாரிடம் இருந்தால் மக்கள் வாழ்வு வளத்துக்கு மிகுதி கருவியாய் அமையுமோ - அவர்களிடமே அதை ஒப்படைத்தல், நிலை அரசு அதாவது அரசமைப்பின் கடன் ஆகும்.
திராவிட இயக்கம் பயந்துள்ள தமிழக அரசு, ஒரு ’சிறுதலைப் பெரும் பாரதப் பொறுப்பை ஏற்றுள்ளது ஆகும்.
தமிழக மக்கள் மட்டுமே அதைத் தேர்ந்து அனுப்பியுள்ளனர்!
ஆனால் அவர்கள், இந்தியாவுக்கே நல்ல தேசிய வழி காட்டி களாய் அமைய வேண்டியவர்கள் ஆகியுள்ளனர்!
இந்தியா ஒரு வல்லரசாக வேண்டுமானால், தமிழக அரசு வழி - திராவிட இயக்க மேதைகள் வழி - இந்தியத் தேசியம், புது வளம் காண்டல் விரும்பத்தக்கது ஆகும்!
(கழகக்குரல் - 8.3.1975)
ஃ. வருங்கால ஓருலகின் வித்து - தமிழ்! வருங்கால ஓர் உலகின் வேளாண்மை -திராவிடப் பேரியக்கம்!
தமிழ் - ஒரு மொழியன்று; புற்றீசல்கள்போல் உலகில் தோன்றித் தோன்றி மறையும் உலக மொழிகளிடையே, அது, என்றும் நின்றும் நிலவும் மொழி!
மற்ற மொழிகளையும், தன்னைப் போலவே என்றும் நின்று
நிலவவல்ல மொழிகளாக ஆக்கிவிடும் ஆற்றல் படைத்த மொழி!
தமிழ் - ஒரு சமயம்! சமயம் கடந்த வள்ளுவச் சமயத்தை அது கண்டெடுத்து - எல்லாச் சமயங்களையும் அச்சமயப் பண்பின் ஆற்றலால் மேம்படுத்தும் திறம் வாய்ந்த மனித இனச் சமயம் அது!
திராவிட இயக்கத்தின் தன்மையும் இதுவே!
திராவிட இயக்கம், தமிழகத்தின்-இந்தியாவின்-உலகின் எண்ணற்ற கட்சிகளில் ஒரு கட்சியன்று; அது, கட்சி கடந்தது - நாடு கடந்தது!
தமிழ்ப் பண்பை - வள்ளுவப் பண்பைத் தன் பண்பாகக் கொள்வதுடன் அது அமையவில்லை; கட்சி கடந்து எல்லாக் கட்சிகளிலும் - நாடு கடந்து எல்லா நாடுகளிலும் - தமிழ்ப் பண்பை அவ்வம் மொழியாளர்களின் மொழி வளர்க்கும் மொழிப் பண்பாக - எல்லாக் கட்சிகளிலம், நாடுகளிலும் தமிழ்ப் பண்பை அவ்வக் கட்சி - அவ்வந் நாடு வளர்க்கும் நாட்டுப் பண்பாக
ஆக்கி- உலகை வளப்படுத்தி - ஓருலகாக்கும் இயக்கமாகவே அது தமிழியக்கத்தில் - தமிழர் வாழ்வில் மெல்லக் கருவுற்றுத் தளிர்த்து வளர்ந்து வந்துள்ளது - வளர்ந்து வருகிறது!
உலகின் பகுத்தறிவு வீரர்களிடையே தலைசிறந்து விளங்கும் தந்தை பெரியாரை முதல்வராகவும் - உலகின் புரட்சிக் கவிஞர் வரிசையிலே ஒப்புயர்வற்ற புரட்சிக் கவிஞரான பாவேந்தர் பாரதிதாசனையே தன் கவிதைத் தலைவராகவும் - வால்டேர், ரூசோ போன்ற உலகப் புரட்சி அறிஞரிடையே அவர்கள் அனைவரின் மொத்த குழு முதலுருவாகத்
திகழும் வான்புகழ் அறிஞர் அண்ணாவையே தன் அறிஞராக -
தலைவராக - ஆட்சி முதல்வராகவும் - கலைஞனாகப் பிறந்து கவிஞனாக மலர்ந்து, செயற்கரிய செய்யும் பெரியார் வரிசையில் தம் இளமையிலேயே முதிர்வுற்ற கலை கண்ட கற்பனைச் செல்வராக தமிழவேள் டாக்டர் மு.கருணாநிதியையே தன் மறுமலர்ச்சிக் கொண்டலாக - தலைவராக ஆட்சித் தலைவராகவும் கொண்ட இயக்கம் திராவிடப் பேரியக்கம்!
தமிழில், ஒரு தொல்காப்பியர் - ஒரு திருவள்ளுவர் - ஓர் இளங்கோ!
ஆம்! இதனை ஒத்தே திராவிட இயக்கத்திலும் ஒரு பெரியார் - ஓர் அறிஞர் அண்ணா - ஒரு கலைஞர் கருணாநிதி!
தமிழில் ஒரு கம்பர் - ஒரு புகழேந்தி!
திராவிட இயக்கத்திலும் ஒரு நாவலர் - ஒரு பேராசிரியர் - அப்புலவோரின் இடம் நிரவுகின்றனர்!
தமிழ் மொழி, ஊழிகள் கடந்து என்றும் நின்று நிலவுவது - நிலவவல்லது!
ஆம்! இதனை ஒத்தே திராவிட இயக்கமும் - ஆட்சியும், மற்ற
இயக்க ஊழிகள் - ஆட்சி ஊழிகள் கடந்து உலகளாவப் பரந்து - மனித இன நாகரிகம் நீடிக்கும் அளவும் நீடித்து - என்றும் நிலவவல்லது ஆகும்!
தமிழின் சிறப்பை - முழுப் பெருமையைத் தமிழக மக்கள் உள்ளவாறு உணராமல், திராவிட இயக்கத்தின் சிறப்பை - முழுப் பெருமையை அவர்கள் உள்ளவாறு உணர முடியாது!
உலகில் இன்று ஏழாயிரத்துக்கு மேற்பட்ட மொழிகள் நிலவுவதாக மொழி அறிஞர் கூறுகின்றனர்!
“உலகில் மனித இனம் தோன்றிக் கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகியுள்ளன” என்பது, மண்ணூலார் தெரிந்துரைக்கும் செய்தி!
ஆனால், இன்று உலகில் நிலவும் ஏழாயிரத்துக்கு மேற்பட்ட மொழிகளில் பலவும், ஆண்டுக்கணக்கில்தான் வாழ்ந்து வருபவை! பல - ஒன்றிரண்டு நூற்றாண்டுகள் வாழ்வு கண்டவை!
உலகின் எந்த மொழியும் - சீனம், சப்பான், தமிழ் நீங்கலாக - ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டு மொழி வாழ்வோ, ஆறு நூற்றாண்டுக்கு மேற்பட்ட இலக்கிய வாழ்வோ கண்டதில்லை என்பதை, மொழி வரலாறு காட்டும்!
சமக்கிருதம், கிரேக்கம், இலத்தீன் போன்ற இறந்தபட்ட உயர் தனிச் செம்மொழிகளின் மொழி இலக்கிய வாழ்வுகள் கூட, இந்தப் பொது விதிக்கு விலக்கு அன்று!
தமிழ்மொழி, மனித இன நாகரிக வாழ்வுடன் வாழ்வாக - மனித இன நாகரிகத்தின் ஒரு வரலாறாக-நம்மிடையே நிலவும் ஒரே உலக மொழி ஆகும்!
உலகின் மற்றெல்லா உயர்தனிச் செம்மொழிகளும் மாண்டு மறைந்துவிட்டன!
தமிழ் ஒன்றே - வாழும் ஒரே உயர் தனிச் செம்மொழியாய் மனித உலகில் நின்று நிலவுகிறது!
மாண்டபினீஷியருடன், ஏபிரேயருடன்-கிரேட் தீவு நாகரிகத்துடன்- எகிப்தியர், சுமேரியர், ஏலமியருடன் உறவு கொண்டு வாழ்ந்த மொழி தமிழ்!
அவர்கள் தோழனாக வாழ்ந்த தமிழ் ஒன்றே - சந்ததியற்றுப்போன அவ்வினங்களின் பெயர் சொல்லுவதற்குரிய சந்ததியாகவும் நிலவுகிறது - நிலவும்!
உலக நாகரிகங்கள் அத்தனையிலும் நாம், தமிழ் நாகரிகத்தின் சுவடுகளை - தொடர்புத் தடங்களைக் காணலாம்!
உலக மதங்கள் அத்தனையிலும், இதுபோலத் தமிழர் சமயச் சிந்தனையின் உயிர்வரைக் கோடுகளைக் காணலாம்!
இதுபோலவே, உலக மொழிகள் அத்தனையிலும் நாம், தமிழின் சொற் படிவங்களை - சொற் பண்புக் கோடுகளை - கருத்துத் தடங்களைக் காண முடியும்!
“உலகைப் படைத்த முழு முதல், உலகுடன் உலகின் உள்ளுயிராக இயங்கி - அவ் உலகு சென்றொடுங்கும் இடமாகவும் அசைந்துள்ளது” என்பர் இறை நூலார்!
உலக மொழிகளின் ஒலி இயல்பு - சொல் இயல்பு - இலக்கண அமைப்பு ஆகியவற்றை ஆராய்ந்த மொழி இயல் வல்லுநர்கள், எல்லா மொழிகளும், அவ்வியல்புகளில் தமிழ் இயல்புடையவையாகவே பிறந்துள்ளன - தமிழ் இயல்பு நோக்கியே மலர்வுற்றுச் செல்கின்றன - என்பதைக் கண்டு வியப்பெய்துகின்றனர்!
தமிழின் அடிப்படைப் பொதுமைச் சிறப்பே இவைகள்! அதன் தனிச் சிறப்புக்களோ இன்னும் பலப்பல! தமிழிலக்கிய வரலாற்றுப் பேராற்றின் ஊழிகள் இதனைக் காட்டும்!
தமிழ் இலக்கிய பேராறு - பாய்ந்து பரவிவரும் பேரூழிகளை நாம், மக்கள் ஊழி அல்லது உலக ஊழி - செந்தமிழ் ஊழி அல்லது திராவிட ஊழி - இந்தியத் தேசிய ஊழி - தமிழ்த் தேசிய ஊழி - தற்கால ஊழி என, ஐந்து பெருங்கூறுகளாக வகுத்துக் காணலாம்!
இவ்வூழிக்குரிய எந்த இலக்கியமும் நமக்கு வந்தெட்டவில்லை யானாலும், இவ்வூழியை அடுத்து வந்த தொல்காப்பியம் மூலம் நாம், ‘இவ்வூழிக் காலத்தில் இலக்கிய இலக்கணங்கள் பரவலாக இருந்தன’ என்று உணருகிறோம்! தொல்காப்பியம் மூலமே அவைபற்றிய பல பண்புகளையும் நாம் காண்கிறோம்!
உலகில், நாடு - மொழி - சமயம் ஆகிய வேறுபாடுகள் தோன்றாத கால ஊழியாதலின், இவ்வூழியை நாம், ‘உலக ஊழி’ என்கிறோம்!
அத்துடன், படித்த வகுப்பார் ஏற்பட்டு, தனி மனிதர் ஏடு இயற்றும் காலமாக இது அமையாததனாலேயே நாம் இதனை, ‘மக்கள் ஊழி’ என்கிறோம்!
மக்கள், எழுதப்பட்ட இலக்கியம் அதாவது இயலைவிட - அன்று, நாடகம் - இசை - கதைப் பாடல் - விலங்கு புள் கதைகள் ஆகியவற்றையே பெரிதும் விரும்பினர்; இதனால் நாம், இக் காலத்தை, ‘முத்தமிழ் ஊழி’ என்கிறோம்!
சிலப்பதிகாரத்தில், பின்னணிப் பாடல்களாக நமக்குத் தரப்படும் குரவை - வரி முதலியவைகளும், இன்று மக்களிடையே வழங்கும் சிந்து - காவடிச் சிந்து - சந்தப் பாடல்கள் ஆகியவையும், தொல்காப்பியத்துக்கு முந்திய ஊழியில் பரவலாக வழங்கிய மக்கள் இலக்கிய மரபில் வந்தவையே ஆகும்!
இதிகாசம் போன்ற வரலாறும், கற்பனையும் கலந்த பழங்கதைப் பாடல்திரட்டுகள், மக்கள் ஊழிக் காலத்தில் ‘தோல்’ என்ற பெயராலும், பிற்காலம் புராணம் போன்ற - அப் புராணங்களுக்கு முன்னோடியாக இயன்ற பாடல்கள் ‘தொன்மை’ என்ற பெயராலும் உரையிடை இட்டபாட்டுடைச் செய்யுள்களாக உருவாக்கப்பட்டன!
பாட்டிக் கதைகளும், விலங்குக் கதைகளும் இக்கால கட்டத்தில் மிகப் பெருக்கமாய் இருந்தன!
தனி மனிதர்கள் ஆக்கிய புதுமைப் பாடல்கள் - புதுமைக் கதைகள், இக் காலத்திலேயே ‘விருந்து’ என்ற பெயராலும், வசை ஏடுகள் ‘அங்கதம்’ என்ற பெயராலும் நிலவின!
சங்க காலத் தொடக்கத்திலேயே, தகடூர் யாத்திரை - பாரதம் - இராமாயணம் ஆகிய உரையிடை இட்டபாட்டுடைச் செய்யுள்கள் நிலவின என்று அறிகிறோம்!
தமிழில் இவை நமக்கு வந்து எட்டாமல் போனாலும், சமக் கிருதத்தில் பஞ்ச தந்திரமாகவும், பாரத - இராமாயணங் களாகவும், பெருங் கதையாகவும் பரவி இயன்றன!
உலகெங்கும் வழங்கும் ஈசப் கதைகள் - மக்கட் கதைகள் - மக்கட் பாடல்கள் - இம் மரபின் உலகளாவிய விரிவே ஆகும்!
சமக்கிருதத்தில் தண்டி ஆசிரியரால் இயற்றப்பட்ட தசகு மார சரிதம் இத்தாலிய மொழியில் 14-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தெக்காமெரான் ஆகியவற்றின் மரபு, இப் பழங்காலத் தமிழின் - மக்கள் மரபின் விரி மலர்ச்சிகளே ஆகும்!
இவ் வூழியின் தனிப் பெருஞ் சிறப்பு - அது உரைநடையும், நாடகமும் இசையும், சமுதாய இலக்கியமும் செறிந்து விளங்கியதே ஆகும்!
இன்றைய உலகம் முழுவதிலும் இம் மரபின் சின்னங்கள் நாம் காண்டல் கூடும்; ஏனெனில் எழுத்தும் ஏடும் உலகில் ஏற்படாத தொல்பழங்கால இலக்கியமே இவை!
தமிழ் இலக்கியப்பேராற்றில் இரண்டாவது பேரூழியே தொல்காப்பியம்- திருக்குறள் - சங்க இலக்கியம் ஆகியவை கண்ட தமிழன் பொற்காலம் ஆகும்!
இக்காலத்தில், எழுத்தறிவு பெருகிப் பரந்து - படித்த வகுப்பு ஒன்று ஏற்பட்டு - தொழில்கள், வாணிகம், சமயம் ஆகியவை வளர்ந்து - இயல், இலக்கியம் ஓங்கி வளர்ந்தது!
நாடகமும் இசையும், மக்கள் இலக்கியமும் அழியவில்லையாயினும் இயல் இலக்கிய ஒளியின் பின்னணியில் அவை படிப்படியாக மங்கி மறுகின!
இயலுக்கு அதாவது எழுதப்பட்ட இலக்கியத்துக்கு உரிய திருந்திய தமிழ் ஏற்பட்டு - அதுவே செந்தமிழாக இலங்கிற்று!
இக்காலத்தை இதனாலேயே நாம், ‘செந்தமிழ் ஊழி’ என்று கூறுகிறோம்.
இக்கால இலக்கியத்தை நாம், ‘திராவிட ஊழி இலக்கியம்’ என்றும் கூறலாம்!
ஏனென்றால், இது, முதலிய ஊழி இலக்கியம்போல உலகம் முழுவதிலும் பரவாவிட்டாலும், மனித இன நாகரிக உலகு முழுவதும் இயங்கிற்று! கடல்வழி மேற்கில் - வட ஆப்பிரிக்கா, தென் ஐரோப்பா, மேலை ஆசியா ஆகிய பரப்புகளிலும், கிழக்கில் - தென் கிழக்காசியா முழுவதும், உலகின் மறுகோளத்தில் நடு அமெரிக்காவிலும் மூல திராவிடம் (Proto Dravidian) நாகரிகமாக இவ்வூழி இலக்கியம் பரவிற்று!
அத்துடன் அது, தமிழரால் சிறப்பாகப் பழந்தமிழ் இலக்கியம் என்று சொல்லப்பட்டாலும் உண்மையிலும் பண்பட்ட திராவிட மொழிகளான மலையாளம், துளு, கன்னடம், தெலுங்கு ஆகியவற்றுக்கும் பொதுவான உரிமை உடையதாகும். இவ்வூழியில் - இவ்வெல்லாப் பரப்பிலும் உள்ள புலவர்கள், இவ்வெல்லாப் பரப்பிலும் உள்ள புரவலர்களையும் இவ்விலக்கியவழி பாடியுள்ளனர்!
பள்ளி - கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் பெருகி - தமிழ்ச் சங்கங்கள் நாடெங்கும் பரவி - அவற்றின் மைய அமைப்பாகப் பாண்டியர் தலைநகரில் சங்கங்கள் ஏற்பட்ட காலம் இதுவே!
கலை இயல்கள் வளர்ச்சியுற்றதனால், தமிழ் இலக்கிய இலக்கணங்களில், அகப்புறத்துறைகள் - ஐந்திணை ஆராய்ச்சிகள் ஆகியவை இக்காலத்தில் பெருகின!
தனிமனிதர் தனிமனிதரைப்பாடும் இலக்கிய வகை, ‘புறம்’ என்றும், தனி மனிதர் மனிதப் பண்பைப் பொதுமையில் வைத்துப் பாடும் இலக்கிய வகை ‘அகம்’ என்றும் வகுக்கப் பட்டன!
தமிழகத்தில் வேளிர்களை அடக்கி மேலோங்கித் தமிழரசர் மூவரும் வளர்ந்ததும், அவ்வக்காலத்தில் இந்த அரசர்கள் தமிழகம் முழுவதும் ஆண்டதுடன் அமையாமல், கீழ்த் திசையிலும் - மேல் திசையிலும் ஆட்சி பரப்பியும், வாணிகத் தொழில் வளம் பரப்பியும், கலை இயல் பரப்பியும் வரத் தொடங்கிய காலமும் இதுவே!
இன்று தமிழகம் தலை நிமிர்ந்து நின்று பெருமைப் படுவதற்குக் காரணமான தொல்காப்பியம் - திருக்குறள் - சங்க இலக்கியம் ஆகியவை; இக்காலப் படைப்புகளே!
அத்துடன், மக்களே முந்திய மக்களுழியின் பண்பு இக்காலத்திலும் முழுதும் மறையாமல் இருந்து வந்ததனாலே - இக்கால இலக்கியங்கள், கிரேக்க இலக்கியங்கள் போல எக்காலத்திலும் நின்று நிலவவல்ல உலக இலக்கிய மேல்வரிச் சட்டங்களாக இயங்குகின்றன!
தமிழர் உறவால் கிரேக்க இலக்கியமும், வட திசை வேத உபநிடத இலக்கியங்களும், சமக்கிருத இலக்கியமும், சீன - ஜப்பான் இலக்கியங்களும் புது வளமும் - புது வளர்ச்சியும் பெற்றுத் தமிழுடன் போட்டியிடத் தொடங்கியது. இக்காலத்திலிருந்தே ஆகும்!
திராவிட நாகரிகத்தை உருவாக்கி - அதன்மூலம் உலக நாகரிகத்தை வளர்த்த பேரியக்கம் இவ்வூழிக்கே உரியதாகும்!
தமிழ் இலக்கியப் பேராற்றின் மூன்றாவது ஊழி, சிலம்பு - மேகலை- சிந்தாமணி போன்ற காவியங்கள் - தேவார திருவாசகம், திருநாலாயிரம் போன்ற சமயப்பத்தி ஏடுகள் - கம்ப இராமாயணம் - ஆகியவை, ஒளிவீசிய கால ஊழி ஆகும்!
இந்திய நாகரிகத்தையும், இந்தியத் தேசியத்தையும் உருவாக்கிய இலக்கிய ஊழி இதுவேயாதலால், நாம் இதனை ‘இந்தியத் தேசிய ஊழி’ என்கிறோம்!
இந்த ஊழி, உண்மையில் செந்தமிழ் ஊழிக்கு முற்பட்ட தொல்காப்பியருக்கு முந்திய ஊழியின் மறுமலர்ச்சியே ஆகும்!
செந்தமிழ் ஊழியில் கிட்டதட்டப் படுத்துவிட்ட தமிழ் இசை மரபைப் புதுப்பிப்பதே தம் நோக்கம் எனச் சம்பந்தர், தம் தேவாரம் முழுவதும் பறைசாற்றுவதை நாம் இங்கே கவனிக்க வேண்டும்.
இரண்டாம் ஊழியில், தமிழகத்தில் மட்டுமன்றி உலகெங்கணுமே சமயங்கள் அரசியல் சார்பும் - புரோகித ஆட்சிச் சார்பும் - பரப்புதல் நோக்கமும் இல்லாத மக்கட் சமயங்கள் அல்லது இயற்சமயங்கள் அல்லது சமுதாயச் சமயங்களாகவே இருந்தன!
உலகில் முதன்முதலாக அரசியல் ஆட்சிச் சமயங்களும், புரோகித ஆட்சிச் சமயங்களும் தோன்றியது - இக்காலத்தில்தான்!
இத்தகைய புதுச்சமய அமைப்பினை முதன்முதலில் புத்த - சமண சமயங்களும், அதன்பின், சைவ - வைணவச் சமயங்களும் ஏற்றுப் புதுவடிவெடுத்தன!
பிற்கால இந்து மத - கிறித்துவ, இசுலாமிய சமய அமைப்புகளுக்கு இவையே முன்னோடிகள் ஆயின!
சங்க காலத்தில் பெரிதும் அழிவுற்றுப் போய்விட்ட முத்தமிழ் மரபே இக்காலத்தில், கோவை - உலா - பிள்ளைத் தமிழ் ஆகிய சிற்றிலக்கிய வடிவங்களாகவும், மக்களால் பாடப்படத்தக்க பல்லிசை விருத்தப் பாடல்களாகவும் பல்கிப் பெருகத் தொடங்கின!
தமிழரசராகிய பல்லவரும் - பாண்டியரும் - சோழரும் உலகளாவப் பேரரசாட்சியும், வாணிக - தொழில் - கலையாட்சியும் பரப்பிய காலமும் - இந்திய நாகரிகத்தைச் சிறப்பாக ஆகிய நாகரிகத்தைப் பொதுவாக உருவாக்கி வளர்த்த காலமும் இதுவே ஆகும்!
தமிழகத்தில் காஞ்சிப் பல்கலைக் கழகம், தமிழை மட்டுமன்றிச் சமக்கிருதத்தையும், சைவ - வைணவங்களை மட்டுமன்றிப் புத்த - சமண மதங்களையும் வளர்த்து உலகளாவப் பரப்பிய காலமும் இதுவே!
கிறித்துவ சமயமும் - இசுலாமிய சமயமும் உலகில் பிறந்த காலமும், அரசியல் சமயங்களாக - சமுதாய நிறுவன (திருக்கோயில் - திருக்கூட்ட) அமைப்புகளாக அவை உலகில் பரவிய காலமும், இவற்றின் தாக்குதலுக்கு ஏற்ப இந்து சமயமும் தன்னைப் புதிதாகக் கட்டமைத்துக் கொள்ள முயன்ற காலமும் இதுவே!
இந்து மதத்துக்கு ஒரு சமுதாயப் பின்னணியாக சுமிருதிகளும், அறிவுப் பின்னணியாக உபநிடத அடிப்படையில் அறிவுத்துறைகளும் (தரிசனங்களும்), வேதாந்த மரபுகளும் இக்காலத்தில் தமிழகத்திலும், கேரளத்திலும், கன்னட - தெலுங்கு நாடுகளிலும் தோன்றி, வேதாந்த இயக்கங்களாக - பக்தி இயக்கங்களாக இந்தியாவெங்கும் பரவின!
இந்தியாவின் தேசிய மொழியாகவும், இந்து சமயத்தின் வேத மொழி தெய்வீக மொழியாகவும் தமிழ் தன்னிகரற்றுத் தனி முடியாட்சி செலுத்திய காலமும் இதுவே!
கோயில்களில் இக்கால இறுதியில் (கி.பி.9-12-நூற்றாண்டுகளில்) தமிழ் வேதமாகிய தேவார - திருவாசக திருநாலாயிரங்கள் இந்தியா வெங்கும் பாடப்பெறத் தொடங்கின!
தமிழ் மந்திரங்களும் எங்கும் ஓதப்பட்டன!
முசல்மான் ஆட்சிக் காலத்திலேயே, தமிழ் மந்திரங்களின் இடத்தைப் புதிய சமக்கிருத மந்திரங்கள் பிடித்துக் கொள்ளத் தொடங்கின!
வைதிகத் திருமணங்கள் - புதிதாகச் சமக்கிருத மந்திரங்களுடன் சட்டமைக்கப்பட்டதும், முசல்மான் ஆட்சிக் காலத்திலேயே ஆகும்!
தமிழ் இலக்கியத்தின் நான்காவது பேரூழி கம்பருக்குப் பிற்பட்ட ஊழியாகும்!
இந்த ஊழியில்தான், உலகுடன் உலகாக - திராவிடத்துடன் திராவிடமாக - இந்தியாவுடன் இந்தியாவாக - இதுகாறும் நிலவிவந்த தமிழகம், தனக்கெனத் தனி மரபுகள் ஏற்படுத்தத் தொடங்கிற்று!
இதனாலேயே, இவ்வூழியை நாம், ‘தமிழ் தேசிய ஊழி’ என்று கூறுகிறோம்.
தொல்காப்பியம் - திருக்குறள் - சங்க இலக்கியம் போன்ற இரண்டாம் ஊழித் தமிழ்ப் பேரிலக்கியங்களுக்குத் தமிழர் உரை வகுத்துப் புதுப்பிக்கத் தொடங்கிய காலம், இத்தமிழ்த் தேசியக் காலமே!
சங்ககாலத் தமிழர் பெருமை உடையவர்களாக வாழ்ந்தனர். ஆனால் அவர்கள், தம் பெருமையை உணர்ந்தவர்கள் அல்லர்!
இரண்டாம் ஊழியில், தமிழர் அப்பெருமையை இழந்தனர்; ஆனால் அவர்கள், புதுப்பெருமை ஆக்குவதில் ஈடுபட்டிருந்ததனால் பழம்பெருமை இழந்ததுடன், அவ்விழப்பையே மறந்தும் விட்டனர்!
ஆனால், நான்காம் ஊழியாகிய தமிழ்த் தேசிய ஊழியில், தமிழர் புதுப்பெருமையில் மிதந்தாலும், தம் பழம்பெருமையைப் புதுப்பிக்கவும் விரும்பினர்!
தொல்பழம் ஏடுகளின் உரை, இதன் சின்னமாக எழுந்ததேயாகும்!
அத்துடன், தமிழகம் மூன்றாம் ஊழியில் இந்தியா முழுவதும் பரப்பிய இந்து சமயத்துக்கு, இந்நான்காம் ஊழியில் பின்னும் விளக்கம் தந்து - தமிழகத்தின் சமயத்துக்கென ஓர் அறிவுப் பின்னணியை, சைவ சித்தாந்த சாத்திரங்கள் மூலமாக அளித்தனர்!
முதல் ஊழியின் முத்தமிழ் மரபிலிருந்து மூன்றாம் ஊழியில்,
கோவை - உலா - பிள்ளைத் தமிழ் போன்றவை மறுமலர்ச்சி பெறத் தொடங்கினாலும், இந்நான்காம் ஊழியிலேயே அவை, தமிழகத்துக்குத் தனித்தன்மையை பெருக்கும் வகையில், மேலும் எல்லையற்றுப் பரவின!
16-ஆம் நூற்றாண்டு, இத்தமிழ்த் தேசிய ஊழியின் மையமாகவும் - உச்ச தளமாகவும் அமைந்தது!
கொங்குமண்டல சதகம் - தொண்டைமண்டல சதகம் முதலிய சதகங்கள், அவ்வவ்மண்டலத்தில் பிறந்த - வாழ்ந்த - வந்து மாண்ட புலவர்கள், இலக்கிய ஏடுகளைக் குறித்த அவ்வம் மண்டலங்களின் தேசிய இலட்சிய வரலாறாகத் திகழ்கின்றன!
18-ஆம் நூற்றாண்டில் எழுந்த தூது - மடல் - விலாசம் முதலிய படைப்புகள், பழைய முத்தமிழ் மரபுக்குப் புத்துயிர் ஊட்ட முனைந்தன!
தமிழகச் சமய வாழ்வுக்கு, மூன்றாம் - நான்காம் ஊழியில் அமைந்த தேசிய வாய்ப்பு, உலகில் வேறு எந்த நாட்டிலும் - எந்தக்காலத்திலும் மனித இனத்துக்கு வாய்த்ததில்லை என்னலாம்!
நாயன்மார்களில் நால்வரும், ஆழ்வார்களும் தமிழகப் பட்டி தொட்டிகளிலெல்லாம் நடந்து, கோயில்களை இலக்கியத்துடனும் மக்கள் வாழ்வுடனும் பிணைத்தார்கள்!
சமயத் தலைவர்களே இலக்கிய மன்னர்களாக - கவிஞர்களாக அமைந்து - சில சமயங்களில் மன்னர்களாகவும் இருந்து - சமயம், மொழி, சமுதாயம், அரசியல் ஆகிய இவற்றை இணைத்த முழுத் தேசிய வாழ்வைத் தமிழகம் மட்டுமே - அதுவும் மூன்றாம், நான்காம் ஊழிகளில் மட்டுமே கண்ட காட்சியாகும்!
தமிழ் இலக்கியத்தில் 19-ஆம் நூற்றாண்டு, தல புராணங்களின் நூற்றாண்டாகத் திகழ்ந்தது!
ஊர்தோறும் கோயில்களும் - அங்கே தமிழ் மந்திரங்களும் - தோத்திரப் பாடல்களும் அமைந்த பெருமை, இந்நான்காம் ஊழியில் தமிழகத்துக்குக் கிடைத்த ஒரு தேசியப் பெருமை ஆகும்.
தமக்கெனத் தல புராணங்கள் - உலாக்கள் - கலம்பகங்கள் - சதகங்கள் - பள்ளு, குறவஞ்சி வகுத்து, தமிழிலக்கிய ஒளியின் நடு
மையமாக விளங்காத ஊர்கள் தமிழகத்தில் காணப்படல் அரிது என்னலாம்.
தமிழக இலக்கியப் பேராற்றின் ஐந்தாம் ஊழி 19-20-ஆம் நூற்றாண்டுகளுக்குரிய தற்கால ஊழி ஆகும்!
முதல் இரண்டு ஊழிகளில் தனிமரமாக நின்ற தமிழகம்,
மூன்றாம் - நான்காம் ஊழிகளில் பிற மொழிகளை வளர்த்து - அவற்றுடன் போட்டியிட்டு - நான்காம் ஊழியிலே அவற்றிடையே தன் தனித் தன்மையைப் பெருக்கிக் கொண்டது!
ஐந்தாம் ஊழி, புதுமை ஊழி - பகுத்தறிவு ஊழி - மறுமலர்ச்சி ஊழி!
புதுக்கவிதை, அகலக்கதை, சிறுகதை, கட்டுரை முதலிய உலகளாவிய வடிவங்களில் தமிழ், புத்துருவெடுத்தது!
(கழகக்குரல் - 6.4.1975)